Published:Updated:

கவிதைகள்

கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதைகள்

இனிஷியலுக்கு யோசிக்காமல் சட்டென உன் பெயர் சொல்லிவிட்டாய்!

சிறப்புப் பரிசு - தவா

உரிமை

சொல்வதற்கு முன் என்னிடமும்

கேட்டிருக்கலாம்...

களைப்பு, உடல்சோர்வு,

கூடிய எடை, நெஞ்செரிச்சல்,

ஊசலாடும் மனநிலை,

முகத்தில் வீக்கம், மசக்கை,

தூக்கம் தொலைத்தல்,

சுமந்த பாரம், தசைச்சுருக்கம்...

வயிற்றை அறுத்து உயிர் பிறப்பு

எனக்கு மறுபிறப்பு...

இப்போதும் அவ்வப்போது

சுருக்கென வலிக்கிற முதுகுத்தண்டு...

இனிஷியலுக்கு யோசிக்காமல் சட்டென உன் பெயர் சொல்லிவிட்டாய்!

- எஸ்.வித்யா, சென்னை-78

****

பரிசு ரூ.300

வீடு

பள்ளிக்கூட நிறுத்தத்திலிருந்து

பேருந்து கிளம்பியதும்

ஜன்னல் வழி பார்ப்பதை

தவிர்த்து தலைகுனிந்தாள்...

பல வருடங்களுக்கு முன்

தொழில் நஷ்டத்தால், அவள்

அப்பா விற்றுவிட்ட பூர்வீக வீட்டை,

வேகமாகக் கடந்தது பேருந்து!

- மஹஜூதா, சேலம்

*****

பரிசு ரூ.300

கோலங்கள்...

மார்கழிக் குளிரில் வாசலில் கோலம்

மறக்காமல் கைபேசியில் காட்சிப்பதிவு

சிறியதாக உள்ளதே

சிந்துவின் கருத்துக்கணிப்பு

பெரியதாய் இருந்திருக்கலாம்

பரிமளாவின் பரிதவிப்பு

வண்ணம் கூட்டியிருக்கலாம்

வனிதாவின் அங்கலாய்ப்பு

கடுங்குளிரில் போட்டதால் காய்ச்சல் வருமோ

கணவரின் படபடப்பு

எப்படி நேரம் கிடைக்கிறது

ஏஞ்சலாவின் வியப்பு

நம் கோலத்தைவிட நயமாக உள்ளதே

அண்டை வீட்டு அகிலாவின் ஆர்ப்பரிப்பு

யாருக்குமே பாராட்ட மனமில்லையோ

கோலம் போட்ட கோகிலாவின் எதிர்பார்ப்பு!

- மல்லிகா கோபால், புதுச்சேரி-9

கவிதைகள்
கவிதைகள்

பரிசு ரூ.300

ஒரு துளி!

கொட்டும் மழையில்

நனைந்தபடி காத்திருக்கிறேன்

கவிதை கொண்டுவரும்

அந்தத் துளிக்காக!

- ப.உமா மகேஸ்வரி, நெய்வேலி

****

பரிசு ரூ.300

கொரோனா குட்டி

முகக்கவசம் அணியாமல்

செல்பவர்களைப் பார்த்து

குரைத்துக்கொண்டேயிருக்கிறது...

கொரோனா காலத்தில் பிறந்த

நாய்க்குட்டி!

- மு.ரினோஜ்முபாரக், வாளாடி

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கவிதை படைப்பவரா நீங்கள்..?

உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி, `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: கவிதைகள், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com