Published:Updated:

பொருத்தம் என்ன பொருத்தம்! - சிறுகதை #MyVikatan

விகடன் வாசகர்

கிராமத்திற்கு அருகில் உள்ள நகரத்தில் அவனுக்குப் பெண் பார்த்தார்கள்.

Represntational image
Represntational image ( ShutterStock )

ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் வசித்து வரும் அந்த இளைஞனை எல்லோருக்குமே தெரியும். கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தங்காமல் ஊர் ஊராய்ச் சுற்றுவதுதான் அவனது வேலை. காலில் சக்கரம் கட்டியிருப்பது போலச் சுழன்று கொண்டேயிருப்பான். என்றாவது ஒரு நாள் கிராமத்தாரின் கண்களில் படுவான். அதுவும் அந்த கிராமத்தில் யார் வீட்டிலாவது விசேஷம் என்றால்தான் தட்டுப்படுவான். ``இப்படி ஊர் ஊராய்ச் சுற்றுகிறானே! அவனுக்குக் கால் கட்டு போட்டால்தான் வீட்டில் தங்குவான்” என்று பெற்றோர் அவனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள்.

Representational image
Representational image

கிராமத்திற்கு அருகில் உள்ள நகரத்தில் அவனுக்குப் பெண் பார்த்தார்கள். பெண் பரமசாதுவாய் அவனுக்குத் தெரிந்ததால் சம்மதம் தெரிவித்தான். நிச்சய விழாவின் போதும் அமைதியாய் சாந்தமாய் காட்சியளித்தாள். பையனுக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. நமக்கு நல்ல மனைவி அமைந்துவிட்டாள்.. அதுவும்…. அவனுக்கு அதிகமாய்ப் பேசுபவரைக் கண்டால் பிடிக்காது ஒதுங்கி விடுவான். இந்தப் பெண் மிகவும் அமைதியாய் இருக்கிறாளே என்று மகிழ்ந்தான். திருமண நாளிற்கு முந்தைய நாள் வரவேற்பு விழா இன்னிசைக் கச்சேரியுடன் களைகட்டியது. மேடையில் மணமக்கள் அமர்ந்திருக்க. மணமகனை வாழ்த்த வந்தவர்கள் வாழ்த்தி விட்டு மேடையிலிருந்து இறங்கினார்கள்.

மணமகளின் சார்பாக அவளின் தோழிகள் உறவினர்கள் வர ஆரம்பித்தனர். முதலில் ஒரு தோழி மேடையில் ஏறி மணமகளின் காதோரம் ”மாப்பிள்ளை எப்படி?” என்று கிசுகிசுத்தாள். மணமகளோ வாய்திறந்து `மாப்பிள்ளை ஜோர்' என்று கூறி கண்ணடித்தாள். இப்படி ஒவ்வொருவராய் வர வர எல்லோரிடமும் வளவளவென்று பேசிக் கொண்டே இருந்தாள். இன்னிசைக் கச்சேரியும் முடிந்து அவர்கள் தங்கள் இசைக் கருவிகளை வண்டியில் ஏற்றத் தயாரானார்கள். அப்பொழுதும் அவள் பேச்சை நிறுத்தவில்லை. மாப்பிள்ளைக்கு கண்கள் தூக்கத்தால் செருகியது.

அதைப் பார்த்த உறவினர்களும் பெற்றோர்களும். ``கல்யாண பொண்ணே நாளைக்கு காலையில முகூர்த்தம் சீக்கிரம் எழுந்திருக்கணும்- `நாளைக்கு பேசிக்கிடலாம்' என்றனர். அப்போதும் நிறுத்தவில்லை. நிறுத்தாமல் கூட்ஸ் வண்டிக்கணக்காய் தடக் தடக் கென்று பேச்சு போய் கொண்டே இருந்ததாள். மாப்பிள்ளையின் தாய் மாமன் ஒருவர், ``அம்மாடி கல்யாண பொண்ணே! சீக்கிரமா முடிக்கலைன்னா… மாப்பிள்ளைகிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு” என்று கிசுகிசுத்தார். மணப் பெண்ணுக்கு முகத்தில் அதிர்ச்சி… ``என்ன கெட்ட பழக்கம்… சொல்லுங்க இப்பவே இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம்” என்றாள்.

Representational Image
Representational Image
Credits : Alamy

``நீ ஒண்ணும் நிறுத்த வேணாம். நீ பேசிகிட்டே இருந்தா அவனே கல்யாணத்தை நிறுத்திடுவான்.. ஏன்னா அவனுக்கு வளவளன்னு பேசறவங்களை கண்டாலே பிடிக்காது” அவன் கால்ல சக்கரம் இருக்குது இவ்வளவு நேரம் இருந்ததே பெரிய விஷயம் அவன் ஓடிடுவான்” அதனால நீ பேச்சை நிறுத்திட்டு காலைல ஒன் கழுத்துல மூணு முடிச்சு விழற வழியப் பாரு ” என்று அன்பாய்ச் சொன்னார்.``உடனே நிறுத்திடறேன்! என் பேச்சை” என்று சொல்லி விட்டு மணமகளின் தனியறைக்குச் சென்றாள். மறுநாள் அதிகாலை இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணக் காட்சியைப் படம் பிடிக்கும் வீடியோ கிராபர் எல்லா நிகழ்வுகளையும் காட்சிப்படுத்திக் கொண்டே வந்தவர்… மணமக்களின் விவரங்கள் அடங்கிய அழகிய பூ வேலைப்பாடுள்ள போர்டில் போகஸ் செய்து படம் பிடித்தார். அந்த போர்டில் ”மணமகன் – வாக்கி –மணமகள் – டாக்கி” என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. ``சரியான பொருத்தம்தான்'' என்று வீடியோகிராபர் முணுமுணுத்தார். .

-கே. அசோகன்

MyVikatan
MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/