Published:Updated:

லோகா, நந்திதா, செங்கோதை, ராகவி.... குழந்தைகள் வந்தது எப்படி?! அநீதி ஆந்தாலஜி கதைகள் - 5

அநீதி ஆந்தாலஜி கதைகள்
அநீதி ஆந்தாலஜி கதைகள்

இந்தக் கதைகள் சிலருக்குப் பிடிக்கும்... சிலருக்குக் கசக்கும்... சிலருக்குக் கோபத்தை உண்டாக்கும். இவை அநீதி ஆந்தாலஜி கதைகள். அதனால் கொந்தளிப்புகள் வேண்டாம்... Just sit Back and Read... Be Cool!

1

சப்பாத்தியை சுடச்சுட தட்டில் போட்டான் மந்திரி. மொபைலை நோண்டிக்கொண்டிருந்த மனைவியிடம், “சூடா சாப்பிடுடி, அப்பதான் நல்லாருக்கும்" என்று சொல்லி விட்டு கிச்சனுக்குள் ஓடினான்.

லோகா, உடனே மொபைலை தூக்கிப்போட்டு விட்டு, உப்பியிருந்த சப்பாத்தியை ஆவி பறக்கப் பிய்த்தாள். பக்கத்தில் இருந்த சிக்கன் கிரேவியில் தொட்டு வாயில் போட்டுக்கொண்டு, “டிவைன்டா... மந்திரி" என்றாள்.

அடுத்த சப்பாத்தியை கல்லில் போட்டு ஒரு எவர்சில்வர் டம்ளரால் அதைக் குத்திக் குத்தி உப்ப வைத்துக்கொண்டிருந்தான் மந்திரி. பாதி சப்பாத்தி சாப்பிட்டு முடித்த லோகா கிச்சனுக்குள் வந்து அவனை பின்புறமாக அணைத்துக்கொண்டாள்.

“செமையா இருக்குடா, இப்டியே போட்டா நூறு சப்பாத்தி சாப்பிடுவேன்!"

“அவ்ளோ மாவு இல்ல, பெசைஞ்சிடவா?“

அவனின் பின்புறத்தில் குத்திய லோகா டைனிங் டேபிளுக்குச் சென்றாள். பின்னாலேயே வந்த மந்திரி மீண்டும் ஒரு உப்பிய சப்பாத்தியைப் போட்டு விட்டு, “இந்த வீக் எண்டுக்கு ஒரு சர்ப்ரைஸ் பிளான் இருக்கு“ என்றான்.

“என்ன... என்ன... இப்பவே சொல்லு” என்று சொல்வாள் என்று எதிர்பார்த்த மந்திரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. “நான் ஒண்ணு உங்கிட்ட சொல்லணும்“ என்றாள்.

“தோ வந்திடறேன்!'' என கிச்சனுக்குள் ஓடினான் மந்திரி.

தட்டை எடுத்துக்கொண்டு பின்னாலேயே போன லோகா, கிச்சனில் வைத்து, “நான் ஒரு சர்ப்ரைஸ் சொல்றேன். கோச்சிக்கக் கூடாது. உனக்கு புடிச்சா மட்டும்தான்“ என்றாள்.

“நீ என்ன சொன்னாலும் புடிக்கும் சொல்லுடி!'' என்றவன் சப்பாத்தி போட்டுக்கொண்டே அவசர கதியில் அவளுக்கு ஒரு எறும்பு முத்தம் கொடுத்து விட்டு சப்பாத்தியில் ஐக்கியம் ஆனான்.

“நெக்ஸ்ட் வீக் நாம கோவா போறோம். கூடவே...”

“கூடவே..?”

————————

லோகாவும் நந்திதாவும் கல்லூரித் தோழிகள். வேலை தேடும்போதும் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டவர்கள். திருமணத்திற்குப் பிறகும் தொடரும் அபூர்வ நட்புகளில் இவர்களுடையதும் ஒன்று. இருவரும் அனைத்தையும் வெளிப்படையாகப் பேசிக்கொள்வார்கள். ஒருவர் மீது ஒருவருக்கு அளவற்ற அன்பு உண்டு.

முதலில் லோகாவுக்குத் திருமணமாகியது. லோகா நான்கு மாதங்கள் கர்ப்பமாக இருந்தபோதுதான் நந்திதா திருமணம் செய்து கொண்டாள். லோகாவும் மந்திரியும் சேர்ந்து திட்டமிட்டு ஒருநாள் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என முடிவெடுத்து ஆணுறை இன்றி உறவு கொண்டார்கள்.

அன்று…

“எனக்கு உருவாயிடிச்சின்னு இப்பவே தோணுதுடா!''

“எப்படி சொல்ற?“

“ஒரு மாதிரி உள்ளுணர்வு. ஒரு பெரிய நிம்மதி… எப்படி சொல்றதுன்னு தெரியல!“

“எனக்கும் அப்படிதான் தோணுச்சு”

“உனக்கு எப்படி தோணிச்சு?”

“எதோ ஒழு முழுமை அடைஞ்ச மாதிரி... அப்புறம் அந்த உச்சத்துல எப்பவும் இருக்குறதைத் தாண்டி வேற ஃபீல் வந்துச்சு!”

“ம்ம்”

“அப்புறம் ஒரு ஜோசியர் சொல்லி இருக்காரு''

“என்னன்னு டா?”

“நான் எப்ப உறவு கொண்டாலும் அப்பவே குழந்தை உருவாயிடும்னு!''

“எதுல... ரேகை பாத்து சொன்னாராடா?”

இருவரும் சிரித்தபடிக்குக் கட்டிக்கொண்டனர்.

————

நந்திதா, லோகா சொன்னபடி உடனே குழந்தைக்குத் திட்டமிடாமல் பாதுகாப்போடு உறவு கொண்டாள். குழந்தை வேண்டும் என்று நந்திதாவுக்கும் கணவனுக்கும் தோன்றிய நாளில் அந்த பிளாஸ்டிக் பாதுகாப்பைத் துறந்தார்கள். அதைத் துறந்து இரண்டு வருடங்கள் ஆகியும், நந்திதாவுக்குக் குழந்தை உருவாகவில்லை. இன்னும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று இருந்தார்கள். லோகாவின் முதல் குழந்தைக்கு 3 வயதுக்கு மேலானதும், ரெண்டாவது முயற்சி செய்யலாமா என மந்திரி கேட்டு வந்தான். ரெண்டாவது தேவையான்னு முதல்ல யோசிப்போம் என லோகா சொல்லி வந்தாள்.

சில நாட்களுக்கு முன்…

“டாக்டரைப் பார்த்துட்டேன்டி லோகா!''

“இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணிப் பாக்கலாமே நந்து... எதுக்கு அவசரப்படுற!''

“ரெண்டு வருஷம் ட்ரை பண்ணியாச்சி. எவ்ரி டைம் ஒரே ஆங்சைட்டியா இருக்குடி. அதான் என்னன்னு செக் பண்ணிப் பாத்துடலாம்னு!''

“இன்ஃபெர்ட்டிலிட்டி க்ளினிக் பிசினஸ் இப்ப பணம் கொட்டும் பிசினஸ் நந்து. சிம்ப்பிளா சொல்யூஷன் குடுக்க மாட்டாங்க. பேக்கேஜ்னு சொல்லி லட்சக்கணக்குல பணம் கறப்பாங்க. பணம் கூட பிரச்னை இல்லை... மைண்ட் ரொம்ப டென்ஷன் ஏறிடும். வேணாம்.”

“அதுக்காக செக் பண்ணிக்கவே வேணாம்னு சொல்றியா?”

“சரி... செக் பண்ணிப் பாத்து, ரெண்டு பேர்ல யாருக்கோ பிரச்னை. குழந்தையே பொறக்காதுன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவ?”

''இப்பதான் யாருக்குப் பிரச்னைன்னு தெரிஞ்சிடுச்சே லோகா!''

''என்னடி சொல்ற?''

''எனக்கு எதுவும் பிரச்னையில்லையாம். அவரைக் கூட்டிட்டு வாங்க... செக் பண்ணிடலாம்னு டாக்டர் சொன்னாங்க!''

“என்ன பண்ணப்போற!''

''ஒரே குழப்பமா இருக்கு லோகா... அவனை டெஸ்ட் பண்ணி, உனக்குத்தான் பிரச்னையிருக்குன்னு டாக்டர் சொல்லிட்டா அவன் ரொம்ப அப்செட் ஆகிடுவான் லோகா. அவனை என்னால அப்படிப் பார்க்கமுடியாது. வாழ்க்கையே நரகமாகிடும்னு தோணுது... ஆனா, அக்செப்ட் பண்ணித்தானே ஆகணும்!''

''என்ன பண்ணப்போற?''

''என்ன பண்றது... டெஸ்ட் டியூப் பேபி, இல்லன்னா அடாப்ஷன்தான்!''

“ரெண்டுமே கொஞ்சம் காம்ப்ளிகேஷன்தான் நந்து. அப்புறம் அவருக்குக் குறைன்னு தெரிஞ்சி போச்சின்னா அது ஒரு மென்ட்டல் ஸ்ட்ரெஸ். இப்ப உன் லைஃப் நல்லா போயிட்டு இருக்கு இல்ல, அதைக் கெடுத்துக்க வேணாம்!''

“சரி என்னதான் பண்ணச்சொல்ற?”

“நாம ஹாஸ்டல்ல இருக்கும் போது பேசிகிட்டோமே ஞாபகம் இருக்கா?”

———

சில வருடங்களுக்கு முன்…

லோகா பிறந்தநாள் அன்று இரவு கொண்டாட்டங்கள் முடிந்து இருவரும் தனியாக அறையில் இருக்கையில்...

“லோகா... நாம மத்தவங்க மாதிரி பிரியவே கூடாது, ஒண்ணாவே இருக்கணும் ஓகேவா!''

“ஷ்யூர்டி, நாம ஏன் பிரியப் போறோம்? நாம் ரெண்டு பேரும் ஒண்ணு. நமக்கு நடுவுல யாரும் இருக்க முடியாது!”

“இல்ல லோகா, கல்யாணம் ஆயிடிச்சின்னா, ஹஸ்பெண்ட்தானே எல்லாம்னு ஆயிடும்?”

“அதெல்லாம் ஆகாது. உனக்கும் எனக்கும் அப்புறம்தான் ஹஸ்பெண்ட். அவனை ரொம்ப பர்சனலா வச்சிருந்தாதானே பொசசிவ்னெஸ் அது இதுன்னு வரும்? நாம நமக்குள்ள எல்லாத்தையும் மாத்தி மாத்தி யூஸ் பண்ணிக்கிறோம் இல்ல? அதை மாதிரி ஹஸ்பெண்டையும் மாத்திக்குவோம்.''

“செம ஐடியாடி... அவங்க ஒத்துப்பாங்களா?”

“அவனுங்களுக்கு என்ன? ஜாலியா ஒத்துப்பானுங்க. என்ன சொஞ்சம் சீன் போடுவானுங்க. பாத்துக்கலாம்!''

பேரிரைச்சலான சிரிப்புடன் இருவரும் கட்டிக்கொண்டனர்.

——————

அநீதி ஆந்தாலஜி கதைகள்
அநீதி ஆந்தாலஜி கதைகள்

“நிறைய பேசிக்கிட்டோமே, எதைச் சொல்ற?” நந்திதா யோசித்தாள்.

“ஹஸ்பெண்ட் எக்ஸ்சேஞ்ச்”

“ஏய்… அப்ப விளையாட்டா பேசிக்கிட்டோம்…”

“நான் சீரியஸாதான் சொன்னேன் அப்போ. இப்ப விளையாட்டுக்குச் சொல்லலை. உனக்கு ஒரு தேவை இருக்கு, அதனால் சொல்றேன்!”

“ஏய் என்னடி சொல்ற?”

“எக்ஸ்சேஞ்ச் எல்லாம் இல்ல. என் ஹஸ்பெண்டை ஒரு முறை மட்டும் உன் கூட உறவு வெச்சிக்க சொல்றேன். இது உன் ஹஸ்பெண்டுக்குத் தெரிய வேணாம். ஒரு தடவை ட்ரை பண்ணிப் பாப்போம். ஒரே தடவைதான். வொர்க் அவுட் ஆகலைன்னா விட்டுடுவோம். வொர்க் அவுட் ஆயிடிச்சின்னா எவ்ளோ நேரம் மிச்சம், பணம் மிச்சம், மன உளைச்சலும் இல்ல!“

''ஏய் என்னடி சொல்ற... ஒரு மாதிரி இருக்குடி!“

“இதை குழந்தை பொறக்குறதுக்கான ஒரு ப்ராசஸ்னு எடுத்துக்கோ. நோ லவ்... நோ எமோஷன்... நோ ரிலேஷன்ஷிப்... நத்திங். ஜஸ்ட் ஒரு ப்ராசஸ், அவ்ளோதான்... ஓகேவா?”

“உன் ஹஸ்பண்ட் ஒத்துப்பாரா?”

“தெரியல... பேசித்தான் பார்க்கணும்!''

“இல்ல, எல்லாத்தையும் நீ மேனேஜ் பண்ணிக்குவியா... ஃப்யூச்சர்லயும்?”

“கண்டிப்பா, எல்லாத்தையும் யோசிச்சிப் பாத்துதான் இதைச் சொல்றேன். நீயும் நானும் வேற வேறவா? எப்பவும் ஒண்ணுதாண்டி!“

நந்திதா லோகாவை அணைத்துக்கொண்டாள்.

—————————

இன்று…

“கூடவே நந்திதா வரா''

“அவ ஹஸ்பெண்ட்?”

“அவரு வேலையா வெளியூர்ல இருக்கார் அப்போ!''

“அவர் ஃப்ரீயா இருக்கும்போது ப்ளான் பண்ணலாமே... அவளுக்கு ஒரு மாதிரியா இருக்குமே லோ“

“அதெல்லாம் ஒண்ணுமில்ல... நீ சப்பாத்தி சாப்படறியாடா?”

“நான் லைட்டா பீர் அடிச்சிட்டு சாப்பிடுறேன்!“

ஒரு பியர் முடித்து அடுத்த பியர் ஆரம்பிக்கும்போது, மந்திரி அருகே நகர்ந்து சாய்ந்து கொண்டாள் லோகா.

“டேய், ஒண்ணு கேப்பேன், ஒழுங்கா சொல்லணும்... ஓகேவா?”

“உனக்கு நந்திதாவைப் புடிக்குமா?”

“உன் ஃப்ரெண்ட்... அதனால புடிக்கும். ஏன்?”

“பதில் மட்டும் சொல்லு, அவ அழகா?”

“ம்ம்... அழகுதான்!''

“செக்ஸியா?”

“ம்ம்... ஓகே!''

“நான் அழகா, அவ அழகா?”

“எனக்கு நீதான் அழகு!''

“இந்த டகால்டி எல்லாம் வேணாம். அவ அழகா, நான் அழகா?”

“அழகுன்றது ரிலேட்டிவ்டி. என்னை கேட்டா நீதான் அழகு. எனக்கு நீதான் அழகி!''

“சரி, அவளை எப்பவாச்சும் மனசுக்குள்ள நினைச்சி இருக்கியா!“

“அவளை ஏன் நான் நினைக்கணும்? நினைச்சதே இல்ல!''

“நான் அப்டி கேக்கலை… லவ்வா இல்ல. சும்மா, ஃபேன்டசியா செக்ஸியா நினைச்சிப் பாத்து இருக்கியா?”

“ம்ம்… இல்லடி... அதுக்கான தேவையே வரலையே!“

“சரி... நான் ஒண்ணு சொல்லுவேன் டென்ஷன் ஆகக்கூடாது... ஓகேவா!“

“ம்ம்… இரு ஒரு கிளாஸ் ஊத்திக்கிறேன்!“

“எப்படித்தான் வயிறு முழுக்க சாப்ட்டு குடிக்கிறியோ... ஒண்ணுமில்லடா, நந்திதாவுக்கு குழந்தை இல்ல. நாம கோவா போறப்ப, அவ கூட ஒரு தடவை மட்டும் உறவு வெச்சிக்கோ. நோ லவ், நோ ரொமான்ஸ், நோ ரிலேஷன்ஷிப், நோ சென்ட்டிமென்ட். ஜஸ்ட் ப்ராசஸ். அப்புறம் மறந்துடணும் அவ்ளோதான். ஓகேவா?”

மந்திரி இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவனது முகத்தில் தெரிந்தது. லோகா கேட்ட முறையில் இருந்தும் அவள் முகக்குறிப்பில் இருந்தும் அவள் விளையாடவில்லை, சீரியஸாகக் கேட்கிறாள் என்பதும் அவனுக்குப் புரிந்தது. இடைவெளி இல்லாமல் இன்னொரு கோப்பை பியர் அருந்தினான்.

“நந்திதாவுக்கு ஓகேவா?!“ எதோ கேட்க வேண்டுமே என்று கேட்டான்.

“ம்ம்… ஓகேதான்!“

“அவ ஹஸ்பண்டுக்கு?”

“அவருக்குத் தெரிய வேணாம்!“

“டாக்டரைப் போய்ப் பார்த்து...”

“அதெல்லாம் டிஸ்கஸ் பண்ணிட்டோம், வேணாம்... நிறைய காம்ப்ளிகேஷன்ஸ்!“

“என்னால முடியாது லோ!”

“ஏண்டா!“

“முடியாதுன்னா முடியாது... இதென்ன வெளாட்டா?”

“ப்ளீஸ்டா... எனக்காக, ஒரு தடவை!”

“இட் இஸ் எ டேஞ்சரஸ் கேம்டி“

“நாட் அட் ஆல். நாங்க ரெண்டு பேரும் அவ்ளோ க்ளோஸ். ஒரு பிரச்னையும் வராது!“

“ஏய்... பேசாம நான் வேணா ஸ்பேர்ம் டொனேட் பண்றேனே!“

“இப்பவும் அதான் டா பண்ணப்போற... டெஸ்ட் டியூப் அது இதுன்னு இல்லாம ஒரு சிம்ப்பிள் ப்ராசஸ்“

''நாளைக்குக் குழந்தை பிறந்தா அது என்னோட குழந்தைன்னு ஒரு ஃபீல் வராதா லோகா?''

நிறையப் பேசிக்கொண்டார்கள்...

——————————

கோவா...

தாஜ் ஐந்து நட்சத்திர ரெஸார்ட்டில் செக் இன் ஆனார்கள். அன்று இதைப்பற்றி ஏதும் பேசிக்கொள்ளவில்லை. அந்த 5 நட்சத்திர விடுதி இருந்த வளாகம் தனி ஊர் போல இருந்தது. மிக மிக அழகான பிரைவேட் பீச். லோகா அன்று மாலை கடற்கரையை ஒட்டி நடந்தபோது மந்திரியிடம் ஒட்டிக்கொள்ளவேயில்லை. நந்திதா எந்த அளவு தூரத்தில் இருந்தாளோ, அதே அளவு தூரத்தை லோகாவும் கடைபிடித்தாள்.

இரவு நல்ல உயர்தரமான ஒயின் மற்றும் கோவா ஸ்பெஷல் மீன் உணவை உண்டுவிட்டு கடற்கரையில் கொஞ்ச நேரம் செலவிட்டு வில்லாவுக்குள் வந்து பாட்டு பாடிக்கொண்டு இருந்தனர். வில்லாவில் இரண்டு படுக்கையறை. ஒரு பெரிய ஹால். இரண்டு படுக்கையறையும் கடற்கரை வியூ. அது அல்லாமல் ஒரு தனி நீச்சல் குளம் மற்றும் கார்டன்.

அன்றிரவு அதிகம் குடித்த மந்திரி, ஹாலில் இருக்கும் சோஃபாவில் தூங்கி விட, இரண்டு பெண்களும் இரண்டு படுக்கையறைக்குள் சென்றனர். அவர்கள் காலை எழுந்து வந்து தனித்தனியாகப் பார்த்து விட்டு, மீண்டும் அறைக்குள் செல்லும் வரையிலும் மந்திரி ஹாலிலேயே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்.

காலை கடற்கரை வாக், மதிய லன்ச், மாலையும் கடற்கரை எனக்கழிந்த அன்றைய பொழுது, முன்னிரவில் கிளப்பில் ஆரம்பித்தது. இசை நடனம் என உல்லாசமாகக் கழிந்து மந்திரி ஓரளவு நந்திதாவிடம் நெருக்கமாகி இருந்தான். அவளின் பர்ஃப்யூம் வாசனைக்கு இணங்கி இருந்தான். காதுக்குக் கீழிருந்த மச்சம் பரிச்சியம் ஆகி இருந்தது. விரல்களில் இருந்த மோதிரக் கணக்கு தெரிந்திருந்தது. அடிக்கடி நாவால் மேலுதட்டின் இடது பக்கத்தை வருடும் அவளின் மேனரிசம் பிடித்திருந்தது.

கிளப் நேரம் முடிந்து இரவுணவு அருந்தி, மெல்ல நடை போட்டு, தங்கள் வில்லாவுக்கு வந்தனர்.

உள்ளே நுழைந்ததும், லோகா தெளிவாகக் கூறினாள்.

“செம டயர்டா இருக்கு. படுத்தா உடனே தூங்கிடுவேன்!'' எனச்சொல்லி விட்டு ஓர்அறைக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்டாள்.

மந்திரி ஹாலில் அமர்ந்து டிவி போட்டான். நந்திதா தன் அறைக்குள் நுழைந்து கதவைத் திறந்தே வைத்து ரெஸ்ட் ரூம் சென்றாள்.

தன் அறைக் கதவைத் திறந்து வெளியே வந்த லோகா, “அதான் கதவைத் திறந்து வச்சிருக்கா இல்ல, போ!" மெல்லமாகச் சொல்லி சைகை காட்டினாள். பின் தன் கதவை அடைத்துக்கொண்டாள்.

மந்திரி டிவியை அணைக்காமல் நந்திதா அறைக்குள் சென்றான். நந்திதா ரெஸ்ட் ரூமில் இருந்து ஃப்ரெஷாகி விட்டு வெளியே வந்தாள். மார்பில் வெண் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்தாள். மந்திரியைப் பார்த்து புன்முறுவல் பூத்த படியே, தன் இரவு உடையை அணிந்து கொண்டாள். அறைக் கதவு திறந்தே இருந்தது.

இரவு உடை மெல்லிய வெள்ளை உடை. வெள்ளுடைக்கும் வெண் தோலுக்கும் எந்த கான்ட்ராஸ்ட்டும் இல்லாமல் இருந்தாலும் அது ஒரு நூதனமான கவர்ச்சியை வழங்கிக்கொண்டு இருந்தது.

மந்திரி படுக்கையில் அமர்ந்து இருந்தான். அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் நந்திதா.

“ஆக்சுவலா...” மந்திரி ஆரம்பித்தான்.

அவன் கைகளைப்பற்றி தன் கைகளில் வைத்துக்கொண்டாள் நந்திதா.

“ஐ ரெஸ்பெக்ட் யூ அண்ட் லோகா. நீங்க பண்றது ரொம்ப பெரிய விஷயம். அதுலயும் லோகா பண்றது ரொம்ப ரொம்ப பெரிய விஷயம். ஆனா இதுவரைக்கும் லோகா கிட்டயே சொல்லாத ஒரு விஷயத்தை உங்ககிட்ட சொல்லப்போறேன்..." என்றாள் நந்திதா!

——————————————

2

சன்னாசி. அவனுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்றே தெரியாது. ஆதார் கார்டில் சன்னீசி என்று டைப் செய்து கொடுத்தார்கள். சன்னாசிக்கு வங்கிக்கணக்கு ஏதுமில்லையெனினும், இது ஓர் அதிகாரபூர்வக் கதையாக ஒருகாலத்தில் ஆகுமென்ற சாத்தியக்கூறு இருப்பதால் இனி அவன் பெயரை சன்னீசி என்றே பயன்படுத்தலாம்.

சன்னீசி செய்யாத வேலையே இல்லை. சினிமா கொட்டகையில் ஆப்பரேட்டராக வேலைப் பார்த்திருக்கிறான். முறுக்கு சுத்துவான். செங்கல் சூளையில் வேலை பார்த்திருக்கிறான். பழைய பொருட்களை டவுனுக்குச் சென்று வாங்கி வந்து கிராமத்தில் விற்றிருக்கிறான். புல் செத்துவான். பாம்பு பிடிப்பான். மரத்தில் ஏறி இளநீர் பறிப்பான். வேலி கட்டுவான். கிணறு தோண்டுவான். ஒரு வீட்டில் கல்யாணம் நிச்சயமானால், அந்த வீட்டுக்காரனாகவே ஆகிவிடுவான் சன்னீசி.

அதுவரை சன்னீசிக்கு என்று ஒரு வீடு இல்லை. அப்பன் ஆத்தா வீடு என்றெல்லாம் இல்லை. மனம் போன போக்கில் தங்கி வந்தான். அதாவது எந்த வீட்டிலாவது தங்குவது என்றால் வீட்டுக்குள் நுழைந்து தங்குவது இல்லை. ஒரு வீட்டு குடிசையில் ஒதுங்கி அமர்வான். கையில் அரிசி அல்லது காய்கறி இருக்கும். சமயங்களில் மரவள்ளிக்கெழங்கு அல்லது சக்கரவள்ளிக் கெழங்கு கூட வாங்கிக்கொண்டு செல்வான். மள்ளாட்டை என்றால் ஐந்து படிக்கு மிகாமல் வாங்கிச் செல்வான். அதைக் கொடுப்பான். அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பான். அவர்கள் சமைக்கும் சாப்பாட்டைச் சாப்பிடுவான். அவர்கள் வீட்டின் திண்ணையில் படுத்துக்கொள்வான். சமயங்களில் சாணி தெளித்துக் கோலம் போடும் இடம்தான் திண்ணை என்றும் கொள்ள வேண்டியிருக்கும்.

சன்னீசிக்கும் வாழ்க்கை இருக்கிறது அல்லவா? சன்னீசியின் அத்தைதான் சன்னீசிக்கு சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து முடித்தாள். பெண்ணின் பெயர் செங்கோதை. கோயிலில் வைத்து சன்னீசிக்குத் திருமணம் நடந்தது. அன்றுதான் சன்னீசி முதன்முதலாய் வெள்ளை வேட்டி கட்டினான். ஆனால் அந்த வெள்ளை வேட்டி அவன் இதுவரை கட்டி வந்த லுங்கியை விட விலை மலிவானதுதான். செங்கோதை முகத்தில் மணப்பெண் களை சந்தனம் இட்டவுடனேயே சடுதியில் வந்து அமர்ந்தது. சாமந்திப்பூ மாலையை எவன் கட்டினான் என்று தெரியவில்லை. அதன் காம்பை ஒழுங்காக பிய்க்காமல் கட்டி இருப்பான் போலிருக்கிறது அல்லது காய்ந்த காம்பாக இருக்கலாம். அது அவள் தொப்புளை கீரிக்கொண்டே இருந்தது. ஆனாலும் அவள் மிக மகிழ்ச்சியாக இருந்தாள்.

திருமணத்தின்போது உறவினர்கள் சண்டை போட்டுகொண்டது ஏதும் சன்னீசிக்குப் புரியவில்லை. அவன் அதைக் கண்டு கொள்ளவும் இல்லை. சன்னீசிக்கு மிகப்பெரிய உறவினர்கள் கூட்டம் உண்டு. சன்னீசிக்கே குழம்பும் அளவுக்கு உறவினர்கள். மாமாவை சித்தப்பா என்பான். அத்தையை அக்கா என்பான். மாப்பிள்ளை முறை பொடியனை பேராண்டி என்பான்.

''என்ன தங்காச்சி?'' என ஒரு பெண்ணை அழைத்து அறை வாங்கி இருக்கிறான். அந்தப்பெண் தூக்கிமாட்டி செத்துப்போன எழவுக்கு சன்னீசிதான் எல்லா வேலையும் பார்த்தான். பிணத்தைத் தூக்கி பாடையில் வைக்கும் ஆளில் ஒருவனாக இருந்தான். அப்போது அந்த “தங்காச்சி” மீண்டும் அறைவது போலத் தோன்றியதால் சுடுகாட்டுக்குச் செல்லவில்லை.

இவ்வளவு உறவினர்கள் இருந்ததால், அவர்கள் சண்டை போட்டுக்கொண்டாலும், அவர்களே ஒரு சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு எல்லா ஏற்பாடுகளையும் பார்த்தார்கள்.

சாந்தி அக்கா வீட்டில் முதலிரவு ஏற்பாடானது. சாந்தி அக்கா வீடு கல் வீடு. அந்த வீட்டில் முதலிரவு என்பதால் சாந்தி அக்கா குடும்பத்தார் வளர்மதி அக்கா வீட்டில் படுத்துக்கொள்ள ஏற்பாடானது. கல் வீடு என்றாலும், தனிப் படுக்கையறை என்று ஏதும் கிடையாது. ஐந்து அடி உயரத்தில் ஒரு தொம்பை இருந்தது. அதன் மேல் பாய் போட்டு நான்கைந்து ஜமுக்காளங்களைப் போட்டு இரண்டு தலையணை வைத்திருந்தார்கள். தொம்பையில் பாதி அளவு நெல் இருந்தது. இதை ஏற்பாடு செய்தது சாந்தி அக்காவின் மகன். அவன் 11-ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு சைக்கிள் கடையில் வேலைப் பார்த்து வருகிறான். அதனாலோ என்னவோ ஜமுக்காளங்களுக்கு கீழே நான்கைந்து சைக்கிள் டயர்களைப் போட்டிருந்தான்.

சண்டை சச்சரவு என்று இருந்தாலும், எந்த கம்யூனிகேஷன் கேப்பும் இல்லாமல் செங்கோதை இரவு 7 மணிக்கெல்லாம் லோட்டாபாலுடன் தொம்பை மீது ஏறி விட்டாள்.

சன்னீசியைக் காணவில்லை.

அநீதி ஆந்தாலஜி கதைகள்
அநீதி ஆந்தாலஜி கதைகள்

முதலில் யாரும் பதற்றமாகவில்லை. தேடச் சென்றார்கள். செங்கோதை என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக லோட்டா பாலையும் குடித்துவிட்டு தூங்கிவிட்டாள்.

நேரம் இரவு 9 மணியை நெருங்க நெருங்க உறவுக்காரர்களுக்குள் கொஞ்சம் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஏனென்றால் அவர்களுக்குள் சின்ன விஷயத்திற்கெல்லாம் தற்கொலை என்பது சர்வ சாதாரணம். சன்னீசி திருமணம் பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டான் என்ற முடிவுக்கு வந்த அவர்கள், ஊரில் தற்கொலை செய்து செத்தவர்களின் வரலாற்றை நினைவுபடுத்தியபடி அந்த ஊரின் வரலாற்றுச் சுவடுகளுக்குச் சென்றார்கள். பெரிய வாத்து என்பவர் சாவு மேளக்காரர் வீட்டுக்கும், வல்லாசை என்பவர் பாடை நெய்பவர் வீட்டுக்கும் சென்றுவிட்டனர். எதுவாக இருந்தாலும் திட்டம் என்பதும், ஒரு தனிநபர் பொறுப்பு என்பதும் அவர்கள் ரத்தத்தில் ஊறிய விஷயம். எந்த வித டீம் லீடர் இல்லாமலும், குழு தகவல் தொடர்பு இல்லாமலும் அவர்களே அவர்களுக்கான வேலையைப் பிரித்துக்கொண்டு செயல்படுவது என்பது அவர்கள் டிஎன்ஏ-வில் இருந்தது.

சன்னீசி சாவகாசமாக ஒரு வறிக்கையை மென்று கொண்டு வந்ததை மாமா மெய்யனார்தான் பார்த்து, அவன் பொடரியில் ஒன்று போட்டு, எங்கடா போன என்று கேட்க, மொத ஆட்டம் பாத்துட்டு வரேன் என தான் சினிமாவுக்குப் போனக் கதையைச் சொன்னான்.

அதன்பிறகு நல்லாப் பிள்ளை டீக்கடையில் டீ பார்சல் வாங்கி லோட்டாவில் போட்டு சன்னீசையை தொம்பை மேல் ஏற்றி விட்டனர். தூங்கி இருந்த செங்கோதையை நகர்ந்து படுக்கச் சொல்லி, படுத்துக்கொண்ட சன்னீசி, விடியற்காலையில் வீரத்தைக் காட்டி முதலிரவை முடித்து வைத்தான். தொம்பையில் தூங்கிக்கொண்டு இருந்த எலிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தன. செங்கோதையை தொம்பையில் இருந்து இறக்கி விட்டுத்தான் ஆற்றுக்கு குளிக்கப்போனான் சுன்னீசி.

சன்னீசி குளித்து முடித்து வருவதற்குள் உறவினர் கூட்டம் அவனுக்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்திருந்தது. அந்த வீடு பன் ரொட்டித் தெருவில் அமைந்திருந்தது. அதாவது அவர்கள் கற்பனையில். அந்தத் தெருவுக்கு ஏன் பன் ரொட்டித் தெரு என்று பெயர் வந்தது என்று தெரியவில்லை. அது ஒரு தெருவே அல்ல, மேலும் அங்கே பேக்கரியோ அல்லது அதுபோல ஏதுமோ அங்கே இல்லை. இன்னும் கேட்டால் அங்கே தெருவே இல்லை. ஒரு ஒற்றையடிப்பாதை, அந்த ஒற்றையடிப்பாதைக்கு இரு பக்கமும் தூர தூரத்தில் நான்கைந்து குடிசைகள். கற்பனையில் இருந்த அந்த வீடு இரண்டே நாட்களில் நிஜமானது. சவுக்கு மரம், தென்னங்கீற்று உதவியுடன், அட்டாச்டு சமையலறையுடன் கூடிய படுக்கையறை கொண்ட வீடு தயாரானது. சன்னீசி தன் வழக்கமான தொழில் முறைகளுடன் செங்கோதையுடன் அங்கு மகிழ்ச்சியாக வாழ்வை ஆரம்பித்தான்.

ஆண்டுகள் ஓடின... குழந்தை மட்டும் செங்கோதையின் வயிற்றில் தங்கவில்லை. செங்கோதைக்கு அதற்குள் மூன்றரைப் பவுனில் நகைகள் வாங்கிப்போட்டிருந்தான் சன்னீசி. குழந்தைபேறுக்காக ஒரு சாமியாரைப் போய்ப் பார்த்தார்கள் சன்னீசியும் செங்கோதையும்.

வெத்திலைப்பாக்கு, புகையிலை மற்றும் பத்து ரூபாய் தட்சணை வைத்தார்கள். "மாவெளக்கு மாவு போட்டு அதை சாப்டு படுத்துக்கோங்க'' என்றார் அவர். அவர் சொல்லியபடிக்கு மாவெளக்கு மாவு கோயிலுக்குப் போட்டு அதைச் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கி விட்டார்கள்.

கல்யாணம் பண்ணி வைத்த அத்தைதான் அன்று சன்னீசியையும் செங்கோதையும் அழைத்துக்கொண்டு ஒரு உறவினர் வீட்டுக்குச் சென்றாள். அவர்கள் வீடு பன் ரொட்டித் தெருவில் இருந்து மூன்று தெரு தள்ளி இருந்தது. ஆனால் அது தெருதான். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூன்றாவது குழந்தை பொடியன் பாலு. இரண்டரை வயதில் முண்ட கட்டையாகச் சுற்றிக்கொண்டு இருந்தான். சிவப்பு வண்ண அரைநாண் கயிறு நைந்து போயிருந்தது.

அத்தைதான் ஆரம்பித்தாள்.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

பொடியன் பாலுவின் பாட்டி கடைசியாகச் சொன்னாள்... பேராண்டியைத் தூக்கிட்டுப்போங்க!

————————

3

ராகவியும், குமணனும் திருமணம் செய்து மூன்றாண்டுகள் ஓடிவிட்டன. திருமணம் செய்து கொள்ளும் முன்னரே இருவரும் இரண்டாண்டுகள் லிவ் இன்னில் இருந்தார்கள். அதனால், குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற ஆசை வந்தவுடன்தான் திருமணமே செய்து கொண்டார்கள். குழந்தைக்கு ஒரு சட்டப் பாதுகாப்பாக இருக்குமே என்பதுதான் அவர்கள் திருமணத்திற்கான காரணம்.

குழந்தை உருவாகாமலேயே மூன்றாண்டுகள் ஓடியதும், மருத்துவரிடம் பரிசோதிக்கலாம் என்ற தருணம் வந்தாலும் பரிசோதிக்காமல் இருந்ததற்குக் காரணம் இருந்தது. குமணன் ராகவியுடன் லிவ் இன்னில் இருப்பதற்கு முன்னமே இன்னொரு பெண்ணுடன் லிவ் இன்னில் இருந்து இருக்கிறான். அஜாக்கிரதையாக இருந்ததால் அவளுக்கு கரு உண்டாகிக் கலைக்கப்பட்டிருக்கிறது.

ராகவி ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவள். அவளுக்கும் ஒரு கரு உண்டாகி, கணவனைப் பிடிக்காமல் விவாகரத்து என்று முடிவானதால், கருவைக் கலைத்துவிட்டாள்.

இருவருக்குமே தெரியும், தங்களிடம் பிரச்னை இல்லை என்று. அவர்கள் தாம்பத்திய உறவிலும் சிக்கலேதும் இல்லை. ஆன்லைனில் தேடித் தேடி உறவு கொள்ளும் கால நேரத்தைக் கடைபிடித்தும் பார்த்தனர். மது, சிகரெட் பழக்கத்தை நிறுத்தி, வேலைக்கு ஓய்வு கொடுத்தும் பார்த்தனர். இருப்பினும் கரு உற்பத்தி ஆகாததால் தெரிந்த டாக்டரிடம் ஆலோசனைக்குச்சென்று, அவர் சில மருத்துவப் பரிசோதனைகளை எழுதிக்கொடுத்து, அனைத்தும் சரியாக இருப்பதாக வந்ததும், அன்று இரவு நல்ல நிம்மதியுடன் உறவு கொண்டனர். ஆனாலும், ராகவிக்கு பீரியட்ஸ் மூன்று நாட்கள் முன்னமே வந்தது.

மீண்டும் டாக்டரிடம் போனார்கள். முழுமையான பரிசோதனை நடந்தது. "உங்க லைஃப்ஸ்டைல் பழக்கங்களால உங்களுக்கு ஸ்பேர்ம் கவுன்ட் குறைஞ்ச மாதிரியிருக்கு குமணன்!" என்றார் டாக்டர்.

“ரொம்ப குழப்பிக்க வேண்டாம், வேற ஆப்ஷன் யோசிக்கலாம்!" என குமணன்தான் ராகவியிடம் ஆரம்பித்தான்.

அவன் ஆரம்பித்து அவர்கள் போட்ட அட்டவணை இது...

1) நாம் மருத்துவம் எடுத்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வது

2) டெஸ்ட் டியூப் பேபி

3) தத்து எடுத்துக்கொள்வது

இதில் ஒன்றை வேண்டாம் என இருவரும் நிராகரித்து விட்டனர்.

இரண்டாவதா அல்லது மூன்றாவது தேர்வா என்பதில்தான் இருவருக்கும் குழப்பம். இதில் குமணனுக்கு இன்னொரு குழப்பம். குழந்தைத் தேவையா என்று?

அநீதி ஆந்தாலஜி கதைகள்
அநீதி ஆந்தாலஜி கதைகள்

“பேபி, நமக்கு குழந்தை தேவையா? தானா பொறந்தா பொறக்கட்டும். இல்லன்னா என்ன?”

“இல்லடா, எனக்கு அந்த ஃபீல் தேவைப்படுது. எதுவோ மிஸ் பண்ற மாதிரி இருக்கு. எனக்கு குழந்தைக்குப் பால் குடுக்கணும் போல இருக்கு!''

“பால் குடுக்குற ஃபீல் போதுமா, இல்ல சுமக்குற ஃபீலும் தேவையா குட்டிமா?”

“ஏண்டா இப்டி கேக்கற?”

“இல்லடி, பால் குடுத்தா போதும்னா, குட்டிப் பாப்பாவை தத்தெடுத்துக்கலாம். உன் வயித்துல சுமந்து பெக்கணும்னா, ஸ்பேர்ம் டொனோஷன் போகலாம்!“

“எனக்கே பொறந்தா நல்லாதான் இருக்கும்!''

“அப்ப ஸ்பேர்ம் டொனேஷன்தான் போகணும். அதுல ஒரு சிக்கல் இருக்கே!”

“என்னடா”

“யாரோட ஸ்பேர்ம்னு தெரியாது. அவன் கொலைகாரன், இல்ல கொள்ளைக்காரனா கூட இருக்கலாம். அவனோட டிஎன்ஏதான வரும்.”

“ம்ம்… ஆனா தத்தெடுத்தாலும் அதே பிரச்னை இருக்குல்ல?”

“ம்ம்ம்”

“ஸ்பேர்ம் டொனேஷனுக்காவது ஃபார்மாலிட்டி கம்மி. பணம்தான் செலவாகும். ஆனா, தத்தெடுத்தா, ஃபார்மாலிட்டீஸ் அதிகம்!”

“இல்ல, ஸ்பேர்ம் டொனேஷன்ல போனா, யாரோட ஸ்பேர்மா இருந்தாலும், என்னோட கருன்றதால அதோட டாமினேஷன் கொஞ்சம் இருக்கும் இல்ல?”

“ஆமா, அதுவும் கரக்ட்தான்!''

“நாம நம்ம நாட்ல ஸ்பேர்ம் வாங்காம வெளிநாட்ல வாங்க முடியுமாடா?”

“தெரியலையேடி, ஏண்டி அப்டி கேக்கற ?”

“இல்ல, நம்ம நாட்லதான் ஆயிரத்தெட்டு மைண்ட் பிளாக். வெளிநாட்டு ஸ்பேர்ம்னா, கொஞ்சம் ஓப்பன் மைண்டா இருக்கும் இல்ல?”

“ஏய், நான் ஒப்பன் மைண்ட் இல்லியா?”

“இல்லடா, நீ ஒப்பன் மைண்ட்தான், ஆனா…”

“என்ன ஆனா, எனக்கு குழந்தை உருவாகலைன்னு சொல்றியா?”

“இல்லடா, உன்னை மாதிரியே எல்லாம் இருப்பாங்களா? அதுவும் இல்லாம ஸ்பேர்ம் டொனேட் பண்றவங்க எல்லாம் யார்னு தெரியலையே?”

“நாமளே யாரையாச்சும் கேப்பமா?”

“அப்டில்லாம் அலவ் பண்ண மாட்டாங்கடா. ஆனா நம்ம நாட்ல சச்சின் மாதிரி, சுந்தர் பிச்சை மாதிரி ஐகான்ஸ் எல்லாம் டொனேட் பண்ணாங்கன்னா நல்லா இருக்கும் இல்ல!“

“ஆமாண்டி, இதெல்லாம் கமல் மாதிரி ஆளுங்க செய்ய ஆரம்பிச்சி இருக்க வேண்டிய விஷயம். அவருதான் இதிலெல்லாம் அட்வான்ஸா செய்வாரு!”

“ஆனா அப்டி யாரும் செய்யறதில்லையே, இப்ப என்னடா பண்றது?”

“அதாண்டி, நீயே குழந்தை பெத்துக்கணும். ஆனா நல்ல குவாலிட்டி ஸ்பேர்மா இருக்கணும், இல்லியா?''

“ம்ம்”

“அதுக்கு பாசிபிளிட்டியே இல்ல. நாம நாய்க்குட்டியை வேணா அப்டி பாத்து வாங்கி வளர்க்கலாம்!”

“ஏய் என்னடா?

“ஐ அம் சாரி பேபி... நீ குவாலிட்டியான பேபி எதிர்பாக்குற இல்லியா? என்னால ஏதும் பண்ண முடியாதுடா!''

“என் மேல கோபமா?’'

“ச்சீ... இல்லடீ“

“சரி, இன்னும் கொஞ்ச நாள் நாம்ளே ட்ரை பண்ணுவமா?”

“ம்ம்”

“லவ் யூ டா!”

“லவ் யூ ராகி!''

அடுத்த கட்டுரைக்கு