Published:Updated:

"உனக்கு சொத்தைப் பிரிச்சி கொடுக்க முடியாதுடி!" - அநீதி ஆந்தாலஜி கதைகள் - 7

அநீதி ஆந்தாலஜி கதைகள்
அநீதி ஆந்தாலஜி கதைகள்

இந்தக் கதைகள் சிலருக்குப் பிடிக்கலாம்... சிலருக்குக் கசக்கலாம்... சிலருக்குக் கோபத்தை உண்டாக்கலாம். இவை அநீதி ஆந்தாலஜி கதைகள். அதனால் கொந்தளிப்புகள் வேண்டாம்... Just sit Back and Read... Be Cool!

அனுஜா!

விமானம் என்பதால் வாய் விட்டு அழமுடியவில்லை. உள்ளுக்குள் கேவல் இருந்து கொண்டேயிருந்தது. அந்தக் கேவலின் காரணத்தால் கண்களில் தண்ணீர் வழிந்துகொண்டிருந்தது அனுஜாவுக்கு. அம்மா அழுவதைப் பார்த்து அசுமித்ராவும் தேம்பிக்கொண்டு இருந்தாள். அம்மாவின் கண்களை அவ்வப்போது குட்டி அசுமித்ரா துடைத்துக்கொண்டும் இருந்தாள். பரிதி அனுஜாவை சமாதானப்படுத்தாமல் அழுது முடிக்கட்டும் என்று அமர்ந்திருந்தான்.

அனுஜாவின் தந்தை அரசுத்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தவர். நிரந்தர ஓய்வு பெற்றதை அடுத்து அனுஜா விமானம் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறாள்.

அனுஜா பரிதியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டவள். அனுஜா குடும்பத்தில் சாதி வித்தியாசம் பெரிதாகப் பார்க்கமாட்டார்கள் எனினும், அனுஜாவின் காதல் திருமணம் குடும்பத்தில் சின்ன சலசலப்பை உண்டு பண்ணியது. பரிதியின் குடும்பம் பொருளாதார ரீதியாக அனுஜாவின் குடும்பத்தைவிட கீழே இருந்தது தான் காரணம். அனுஜாவின் அம்மாவின் முகச்சுளிப்பை எதிர்க்க இயலாமல் அப்பாவும் அண்ணனும் அதே போல முகச் சுளிப்பை வெளிப்படுத்தினார்கள். திருமணத்தில் கலந்து கொண்டாலும் விலகியே இருந்தார்கள். பரிதியின் குடும்பத்திடம் இந்தக் குடும்பம் நெருங்கவேயில்லை. இதற்கே பரிதியின் குடும்பம் சாதி ரீதியாக அனுஜாவின் குடும்பத்தை விட சமூகம் வரையறுத்த படிகளில் மேலே இருந்தது.

அனுஜாவுக்கு அம்மாவை விட அப்பாவை ரொம்பப் பிடிக்கும். ஆனால், பொருளாதார ரீதியிலான நுட்பமான ஒதுக்குதலை அல்லது அவமானப்படுத்துதலை அம்மாவிடம் இருந்து அனுஜாவுக்கே தெரியாமல் எடுத்துக்கொண்டிருந்தாள். அம்மா ஆரம்பத்தில் பரிதியின் சில பழக்க வழக்கங்களைக் குத்திக் காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனுஜா. அதன் பிறகு தானும் அதையே பரிதியின் விஷயத்தில் செய்து வந்தாள். காதலின்பால் பரிதிக்கு இதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. பெரிய சண்டை ஏதும் இல்லையெனினும் திருமணத்திற்குப் பிறகு அனுஜாவை தாய் வீட்டில் இருந்து விலக்கி வைத்தது போலத்தான் இருந்தது. அதனால் பாவப்பட்ட பரிதி அனைத்தையும் பொறுத்துக்கொண்டிருந்தான்.

அனுஜாவின் அப்பா நேர்மைக்கு பெயர் போனவர் என்ற பெயர் குடும்பத்தில் நிலவி வந்தது. அவரும் அதை உளமாற நம்பினார். குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே நேர்மையை போதித்து வந்தார். ஆனால் அவர் வருமானத்திற்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத மிகமிக உயர்தர வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆடம்பரமான பங்களா, வெளிநாட்டு கார், கிளப் மெம்பர்ஷிப் என எலைட் வாழ்வை குடும்பத்திற்கும் கொடுத்தார். அவர் நேரடியாக யாரிடமும் லஞ்சம் கேட்க மாட்டார், வாங்கவும் மாட்டார். அவருக்குத் தான் லஞ்சம் பெற்றதாக நினைவு கூட இருந்திருக்காது. தமிழக அரசின் கனிவான சட்டங்களும் சிஸ்டமும் லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரிகளுக்கும் சம்பளத்தை விட அதிக பணம் தானாகவே சென்று சேருவதை உறுதிப்படுத்தி இருந்ததால் அனுஜாவின் அப்பா நேர்மைக்கும் பங்கம் வராமல், உல்லாச உயர்தர வாழ்வை மிடுக்காக வாழ்ந்து வந்தார்.

விமான நிலையத்துக்கு கார் ஏதும் அனுப்பவில்லை அனுஜாவின் அம்மா. இதெல்லாம் நுட்பமான சீண்டல்கள். அனுஜாவின் அம்மாவுக்கு வாடகைக் காரில் செல்வதே கௌரவக் குறைச்சல். அவருக்கு எப்போதும் தனி கார் வரும். அப்பாவுக்கும் வரும். அண்ணனுக்கும் அனுஜாவுக்கும் வரும். பரிதியிடம் கைகோத்ததற்குப்பிறகு விடுபட்ட பல விஷயங்களில் இந்த காரும் ஒன்று.

வாடகைக் காரில் சென்று இறங்கினார்கள்.

பங்களாவுக்கு வெளியே ஷாமியானா போடப்பட்டு இருந்தது. உயர்ரக கார்கள் வரிசை கட்டி நின்றிருந்தன. சிலர் மொபைலை ஸ்பீக்கரில் போட்டு பேசிக்கொண்டு இருந்தனர். உள்ளே நுழைந்தால், புல்வெளியில் சில சேர்கள் போடப்பட்டு இருந்தது. அதில் திப்பித் திப்பியாக சிலர் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு தேநீர் சூடாக கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். வீட்டின் மெயின் ஹாலில் அப்பா கண்ணாடிப் பெட்டியில் கிடத்தி வைக்கப்பட்டு இருந்தார். கண்ணாடிப் பெட்டிக்கு வெளியே பல மாலைகள் குவியலாகக் கிடந்தது.பெட்டிக்கு சொல்லிக்கொள்ளும் அளவு தூரத்தில் ஒரு நாற்காலியில் அனுஜாவின் அம்மா சோகமாக அமர்ந்து இருந்தார். அந்த சோகமாக அமர்ந்து இருத்தலில் ஒரு நேர்த்தி இருந்தது.

அநீதி ஆந்தாலஜி கதைகள்
அநீதி ஆந்தாலஜி கதைகள்

அனுஜா அழுது கொண்டே ஓடி அப்பாவின் பெட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டு அப்பாவைப் பார்த்து தேம்ப ஆரம்பித்தாள். அந்தப் பெட்டியைத் தாண்டி அப்பாவின் உடல் மீது விழுந்து கட்டிக்கொண்டு அழ வேண்டும் போல இருந்தது. அப்பாவின் ஸ்பரிஸம் இல்லாத இந்த அழுகை ஒரு சோக முழுமையைத் தரவில்லை. அனுஜாவைத் தேற்றவும் யாருமில்லை. வேறு யாரிடமோ பேசிக்கொண்டிருந்த அனுஜாவின் அண்ணன் சுதர்ஷன், அனுஜா வந்ததைக் கேள்விப்பட்டு அனுஜா அருகே வந்து அவளது தோளை இறுக்கிக்கொண்டான். பின்பு நகர்ந்து விட்டான். அம்மாவின் அருகே ஓடி வந்த அசுமித்ராவை பரிதி தூக்கிக்கொண்டு புல்வெளிக்குத் திரும்பி விட்டான்.

அப்பா கடைசிப் பயணத்தை ஆரம்பித்த போது, இரண்டே நிமிடங்களில் வீடே வெறிச்சோடிப் போனது. வீட்டில் அம்மா, அனுஜா, அசுமித்ரா, அம்மாவின் ஒரு அண்ணன் மற்றும் இரண்டு வேலைக்காரிகள் மட்டும் மிச்சம் இருந்தனர். பாடை ஒரு வேனில் கிளம்ப ஆரம்பித்ததுதான் தாமதம், நின்றுகொண்டிருந்த அனைத்து கார்களும் மனிதர்களை ஏற்றிக்கொண்டு சீறிப்பாய்ந்து மறைந்தன. அனுஜாவிற்கு அழுது முடிக்கக் கூட நேரமில்லை.

வீடு பெரிய வீடு என்பதால் ஒரு தளமே அனுஜாவுக்கு கிடைத்தது. திருமணத்திற்குப்பிறகு, இப்போதுதான் நீண்ட நாட்கள் அம்மா வீட்டில் தங்குகிறாள். பரிதி தட்டாம் பூச்சி போல இந்த வீட்டில் அனுஜாவிற்காகக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தான். பத்தாம் நாள் காரியமும் முடிந்து அனுஜா கிளம்புவதற்கு ஒரிரு நாட்களுக்கு முன், ஒரு வக்கீல் வந்தார்.

அனுஜா, அம்மா, சுதர்ஷன் அமர்ந்திருக்க, பரிதி தர்மசங்கடத்தைத் தவிர்க்க குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

அனுஜா அம்மா உறைந்த முகத்துடன் இறுக்கமாக அமர்ந்து இருந்தாள். சுதர்ஷன் ஜாலியாக இருந்தான்.

வக்கீல் ஆரம்பித்தார்.

“அவரோட இன்ஷூரன்ஸ் அமௌன்ட் ரெண்டு பசங்களுக்கும் சரி சமமா போகும். மத்தபடி உயில் ஏதும் எழுதி வக்கலை. ஸோ, நீங்களே பாத்து பேசி முடிச்சிக்கிறதுதான்!”

சுதர்ஷன் மட்டும் தலையை அசைத்தான்.

“நீங்க பேசி டிசைட் பண்ணிட்டு சொல்லுங்க. லீகலா நான் எல்லாத்தையும் செட்டில் பண்ணித்தரேன். பெரிய காம்ப்ளிகேஷன்ஸ் ஏதும் இல்லை!”

அவர் ஒரு டீ குடித்து விட்டு கிளம்பி விட்டார்.

சுதர்ஷன் சொன்னான்... “அனு பேங்க் பேலன்ஸ், ஃபிக்ஸ்ட் டெப்பாஸிட் இருக்கு.ஷேர்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் இருக்கு. அம்மாட்ட பேசிட்டேன். அம்மாவுக்கு எதுவும் வேணாம்னு சொல்லிட்டாங்க. ஸோ, இதை அப்படியே நாம ரெண்டு பேரும் ஈக்வலா பிரிச்சிக்கலாம். எனி டவுட்ஸ்?”

“இல்லண்ணே... அது ஓகே, இந்த வீடு, அப்புறம் அப்பா பேர்ல ஈசிஆர்ல இருக்குற ப்ராப்பர்ட்டி…?”

அம்மா குறுக்கிட்டாள்.

“இந்த வீட்ல நான் இருக்கேன். நான் இன்னும் சாகலை. ஈசிஆர் பிராப்பர்ட்டி சுதர்ஷனுக்குதான்னு அப்பா சொல்லிட்டே இருப்பார்!”

“அம்மா, உன் சொத்து எதும் எனக்கு வேணாம். ஆனா அப்பா சொத்துல எனக்கு ஈக்குவல் ரைட்ஸ் இருக்கு. அவரு அப்டில்லாம் சுதர்ஷனுக்குன்னு சொல்ற ஆள் இல்ல!“

“சரி , என் பேச்சை நம்ப மாட்ட. அப்பா ஆசையையும் மதிக்க மாட்ட!“ சுதர்ஷனை நோக்கி, “அதுல பாதி இவளுக்கு குடுத்துடுடா!”

“சரிம்மா, அதோட ரேட் என்னன்னு பாத்துட்டு செட்டில் பண்ணிடறேம்மா!“

“அதெல்லாம் வேணாம். அந்த ப்ராப்பர்ட்டில பாதியை என் பேர்ல எழுதிடுங்க!“

“இப்டில்லாம் லீகலா பேசினா, எனக்குதான் அந்த பிராப்பர்ட்டில ஃபர்ஸ்ட் ரைட் இருக்கு!'' அம்மா அமைதியாகக் கூறினாள். “இஷ்யூ ஆக்க வேணாம்னு அமைதியா இருக்கேன். அவன் ஒரு ரேட் ஃபிக்ஸ் பண்ணி குடுப்பான். வாங்கிட்டு போயிடு. அதோட எனக்கு இனிமே இதுல எந்த ரைட்ஸும் இல்லன்னு எழுதிக் குடுத்துட்டு போகணும்!“

“அப்பா சொத்தை ஏன் இப்டி புடுங்கிக்க நீங்க அடிச்சிக்கிறீங்க? நானும் அவர் புள்ளதான? இந்த வீட்லயும் எனக்கு பங்கு இருக்குல்ல?”

“ஏன் நீ சம்பாதிச்சி சொத்து சேக்க மாட்டியாடி? உன் புருஷன் நல்லா சம்பாதிப்பான், புத்திசாலின்னு சொல்லிதான கட்டிகிட்ட. அவன் வீட்ல சொத்து குடுக்க மாட்டாங்களா, இங்கயே ஏன் எல்லாத்தையும் சுரண்ட பாக்கற?''

“அம்மா, மைண்ட் யூர் வேர்ட்ஸ்!”

“அந்த ஈசிஆர் ப்ராப்பர்ட்டி , 3 க்ரோர்ஸ் போகலாம்... ஒன்றரை கோடி கேஷ் குடுக்கச் சொல்றேன். மத்த எல்லாத்தையும் 50 சதவிகிதம் குடுக்கச் சொல்லிட்டேன்... நோ பார்ஷியாலிட்டி. கோ ஆப்பரேட் அண்ட் கெட் யூர் ஷேர்ஸ். டோண்ட் ஆர்கியூ லைக் எ கன்ட்ரி கேர்ள்!”

எரிச்சலில் அனைத்தையும் ஒத்துகொண்டாள். வக்கீல் வரவழைத்து செட்டில்மென்ட் பேசி கைழுத்துப் போட்டாள். பரிதியுடன் கிளம்பிச் சென்றாள். தான் துள்ளி விளையாடிய அந்த வீட்டை ஒருமுறை நின்று திரும்பிப் பார்த்துக்கொண்டாள். கால்கள் வெலவெலவென ஆயின.

இவர்கள் கார் புறப்பட்டுச் சென்றவுடன்,

அம்மா, சுதர்ஷனிடம் டாக்குமென்ட்களை எடுத்துவரப் பணித்தாள். பணிவாகக் கொண்டு வந்து மேஜை மேல் வைத்தான் சுதர்ஷன்.

டீ எஸ்டேட், தென்னந்தொப்பு என டாக்குமென்ட்களில் ஏக்கர் கணக்கில் இருந்தது. ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள்.

“சுதர்ஷன்... இது எல்லாம் என் பேருக்கு வந்துடும். அனு மாதிரி இல்லாம நான் பாத்து வெக்கற பொண்ணை கட்டிகிட்டு சாமர்த்தியமா குடும்பம் பண்ணனும்... ஓக்கேவா? டாடிக்கும் அதான் பிடிக்கும்!“

“ஷ்யூர் மா “

விமானத்தில் பறந்து கொண்டிருந்த அனுஜா ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு இருந்தாள். மேகங்களில் சின்ன ஆண் மகவு போல நெளிவது தெரிந்தது. அப்பா வீட்டில் இருக்கும் போது பாதுகாப்பில்லாத உடலுறவு கொண்டது நினைவுக்கு வந்தது. கரு தரித்திருக்குமோ? மீண்டும் மேகங்களைப் பார்த்தாள். தன்னுடைய ஆண் குழந்தை நெளிவது போலவே இருந்தது. அசுமித்ரா மடியில் படுத்து இருந்தாள்.

அசுமித்ரா தலையைத் தடவிக்கொண்டே , “நல்லா சம்பாதிக்கப் போறேண்டி குட்டி. எல்லா சொத்தும் உனக்குத்தான்!“ என்று அசுமித்ராவிடம் மென்மையாக முணுமுணுத்தாள்.

மீண்டும் ஜன்னலில் பார்த்தாள். அந்த மேக ஆண் மகவு இவளை நோக்கி சிரித்துக்கொண்டே நகர்ந்து வந்தது.

அதைப் பார்த்து “உனக்கு பைசா கெடையாதுடா மை டியர் சன். எல்லாம் என் பொண்ணுக்குத்தான்“ என்றாள்.

அந்தக் மேகக் குழந்தை பொக்கை வாயைக் காட்டி சிரித்துக்கொண்டே மேகத்தில் கரைந்து மறைந்தது!

---------------------------------

மங்கை!

மங்கை வீட்டுக்கு வருவதாகச் சொன்னவுடனேயே, விசாலாட்சிக்கு படபடப்பு ஏற ஆரம்பித்து விட்டது. "நீ சொன்னா கட்டிக்கறேம்மா'' என்றுதான் கல்யாணமே செய்துகொண்டாள். முதல் குழந்தை பிறந்ததுமே மங்கையின் போக்கில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. என்னதான் தாய் என்றாலும் அந்தச் சிறு மாற்றத்தை கவனிக்கத் தவறினாள் விசாலாட்சி. அது கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்து, இப்போதெல்லாம் மங்கை வீட்டுக்கு வருவதாகச் சொல்லும்போதெல்லாம் விசாலாட்சிக்கு திகில் உணர்வுதான் பரவ ஆரம்பிக்கிறது.

இரண்டு அண்ணன்கள் இருந்தாலும் வீட்டில் மங்கைதான் செல்லம். அப்பா அம்மாவுக்கு மட்டுமல்லாமல் அண்ணங்களுக்கும் மங்கைதான் செல்லக் குட்டி. திருமணமான புதிதில் எப்போது மங்கை வருவாள் என ஏங்கிக்கொண்டிருந்த குடும்பம், இப்போது மங்கை வருகிறாள் என்றாலே அலற ஆரம்பித்தது. ஒவ்வொரு முறை வரும்போதும் ஏதேனும் சண்டை வளர்த்து, கசப்புணர்வை அதிகமாக்கிச் சென்றுகொண்டிருப்பதாக விசாலாட்சிக்கு வருத்தம்.

வீட்டை சுத்தம் செய்து, மங்கைக்குக் கட்டித் தயிர் பிடித்தம் என்பதால் அளவுக்கு அதிகமாக உறை ஊற்றி வைத்திருந்தாள் விசாலாட்சி. இரண்டு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வருவாள் என்பதால், அவளுக்கான அறையைத் தயார் செய்து, குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொண்டிருக்கும் போதே, “அம்மா... அம்மா'' என்று வெளியே குரல் கேட்டது.

வெப்பமான பந்து ஒன்று விசாலாட்சி வயிற்றில் உருவாகி சுழல ஆரம்பித்தது.

“பெரியவனே… மங்க வந்திடிச்சி பாரு'' குரல் கொடுத்தாள் விசாலாட்சி.

சேகர் துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு வெளியே ஓடினான்.

மங்கை ஒரு குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு, இன்னொரு குழந்தையை காரில் இருந்து இறக்குவதற்கு முயன்று கொண்டிருந்தாள்.

சேகரைப் பார்த்து, “பாலண்ணே வரலையா?”

“உள்ளதான் இருக்கான்... தோ வந்துடுவான்ம்மா!''

“ரெட்டைப் பொட்டைப் புள்ளைய ஒண்டியா தூக்கிட்டு வரேன். ஒத்தாசைக்கு வாசல் வரைக்கும் வரமாட்டீங்களா?”

அதற்குள் விசாலாட்சி ஓடிவந்து தோளில் கிடந்த சின்னக்குட்டியை வாங்கிக்கொண்டாள்.

சேகர் காரில் இருந்து பொருட்களை இறக்கினான்.

“ஏன் அண்ணிலாம் படி தாண்ட மாட்டாங்களாமா? வூட்டுக்குள்ளயே முட்டை அடை காக்கறாங்களாண்ணே!”

“ஏன் மங்க வந்ததுமே… வேலையா இருப்பாங்க. நீ வர இல்ல, உன் வேலையைத்தான் பாத்துட்டு இருப்பாங்க!''

“என் வேலையா? நான் வந்து செவனேன்னு கொஞ்ச நாளு இருந்துட்டு போறேன். வேலை வக்கிறேன்னு சீன் போடுறாங்களா!''

பாலு குளியலறையில் இருந்திருப்பான் போல. அவசரமாக வெளியே வந்து, பெரிய குட்டியை தூக்கிக் கொண்டான்.

“அப்பா எங்கம்மா?”

“நீ வரன்னு மார்க்கெட் போயிருக்காரு. கறி எடுத்துட்டு வரலாம்னு!”

“நான் இல்லன்னா நீங்க கறியே சாப்புடறது இல்லையா?"

“ஏன் மங்க? குழந்தைகளுக்கு தின்பண்டம் அது இதுன்னு வாங்கிட்டு வருவாரு. இப்ப வந்துடுவாரு”

“அண்ணன் புள்ளைங்கள்ளாம் வேப்பிலை பிச்சித் திங்கிதுங்களா? என் புள்ளைங்கதான் தின்பண்டம் தின்னுமா?”

வீட்டுக்குள் நுழைந்ததும் அண்ணன்களின் குழந்தைகள் ஓடி வந்து மங்கையின் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டன.

அந்தக் குழந்தைகளின் கன்னத்தைக் கிள்ளினாள் மங்கை.

“அத்தை வந்துருக்கேன். ஏதாவது பேசுதுங்களா பாரு“

அந்தக் குழந்தைகள் மங்கையின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு ஓடி விட்டன.

மங்கைக்கு காபி வந்தது. பெரிய அண்ணிதான் லேசாக பயம் கலந்த தர்ம சங்கட சிரிப்போடு கொடுத்தாள். சென்ற முறை மங்கை வந்தபோது, போட்ட சண்டையில் பெரிய அண்ணிக்குத்தான் சேதாரம் அதிகம். “தங்கச்சி என்ன திட்டினாலும் நீ வாயைத் திறக்கக்கூடாது என்பது சேகரின் கட்டளை” அதாவது மங்கைக்கு எதிரில். அதற்குப் பதிலாக படுக்கையறையில் தனியாக இருக்கும் போது, சேகரையும், மங்கையையும் ஏன் அந்தக் குடும்பத்தையே எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளலாம். அதற்கு மனப்பூர்வமாக அனுமதி கொடுத்திருந்தான் சேகர்.

மங்கை காபி குடித்துக்கொண்டிருக்கும் போது அப்பா வீட்டுக்குள் நுழைந்தார்.

“வாம்மா!'' பூப் பொட்டலத்தை மங்கையிடம் கொடுத்தார்.

“அப்பா, இங்க ஒக்காருங்க... பேசணும்!'' என்றாள் மங்கை.

பைகளையெல்லாம் வைத்து விட்டு அமர்ந்தார்.

தோட்டத்தை எட்டிப் பார்த்து குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு,

“சொல்லும்மா“

“அப்பா, நான் ரெட்டைப் பொட்டப்புள்ள பெத்து இருக்கேன்..." இதை அநேகமாக ஆயிரமாவது முறையாகச் சொல்லுகிறாள். முதல் குழந்தை பிறந்ததில் இருந்தே அவள் இப்படிச் சொல்லி வருவதாக அந்தக் குடும்பத்தினர் மனப்பதிவில் இருக்கிறது.

“ரெண்டும் தங்கம், ஒரு கொறை இல்லாம நல்லா இருக்கும்!" மேலே பார்த்து கைகூப்பினார் அப்பா. மேலே சீலிங் ஃபேன் சுற்றிக் கொண்டு இருந்தது.

“அப்பா, நான் நிறைய தடவை கேட்டுட்டேன். பிடி குடுக்குற மாதிரி பதில் ஏதும் நீங்க சொல்லலை. இப்ப எனக்கு அவசரத் தேவை!''

அநீதி ஆந்தாலஜி கதைகள்
அநீதி ஆந்தாலஜி கதைகள்

“ம்ம்” தலையை ஆட்டி அடுத்து மங்கை சொல்வதற்காக காத்திருந்தார்.

“அவரு பிசினஸ் ஒரே மாதிரி போயிட்டு இருக்கு. வயித்துக்கும் வாயிக்கும்தான் சரியா இருக்கு. அதை வளர்த்து எடுக்கணும்னா, நெறய பணம் போடணும்!”

“பிஸினஸ்னா கொஞ்சம் கொஞ்சமாதான் வளர்க்கணும். என்னைப் பாத்து வளந்தவதானே நீ!''

“அதெல்லாம் அந்தக் காலம்பா. இப்பல்லாம் அவனவன் ரெண்டு வருஷத்துல கோடீஸ்வரன் ஆயிடறான். எனக்கு வேற ரெண்டு பொட்டைப் புள்ள இருக்கு. அதனால இப்ப விட்டா மாட்டிக்குவோம்!“

“அவசரப்பட்டா…”

“நான் அவசரப் படலை. ஆத்திரப் படலை. சொத்துல என் பங்கை பிரிச்சி குடுத்துடுங்க. நான் பாத்து முதலீடு பண்ணி வளர்த்துக்கறேன்!”

“ஏண்டி இப்ப சொத்தைப் பிரிக்க என்ன அவசரம் ?” விசாலாட்சி குரல் கொடுத்தாள்.

“அதானே, இன்னும் நீ குரல் குடுக்கலையேன்னு பாத்தேன். அப்பா சம்பாதிச்ச சொத்து. நான் அவர்கிட்ட பேசி வாங்கிக்கறேன். நீ கெடுத்து விடாம இருந்தா போதும்!''

“ஏம்மா, என்ன பேசற நீ? அவ உறுதுணையா இருந்ததாலதானே நான் சொத்து சேக்க முடிஞ்சிது. இது எங்க ரெண்டு பேர் சொத்தும்தான்!''

“எப்டி வேணா இருக்கட்டும்பா. என் பங்கை குடுத்துடுங்க. நான் இப்டியே இருக்க முடியாது!“

“உன் பங்குன்னு எல்லாம் ஒண்ணு கிடையாது மங்க. அப்பா பாத்து குடுக்கறதுதான்.''

விசாலாட்சி அடக்க மாட்டாமல் மீண்டும் உள்ளே நுழைந்தாள். “வந்ததும் வராததுமா“ என்று முனகிக் கொண்டாள்.

“பாத்து குடுக்கறதுக்கு என்ன பிச்சையா போடுறீங்க? என் உரிமையை நான் கேக்கறேன். எல்லா சொத்தையும் அண்ணன்களுக்கு குடுத்துடணும், அதான உனக்கு!'' அம்மாவிடம் எரிந்து விழுந்தாள் மங்கை.

நின்று கொண்டிருந்த அண்ணன் பாலு அமர்ந்தான். பாலுவுக்கு பின்னால் அவன் மனைவி அமைதியாக நின்றுகொண்டிருந்தாள். குடும்பச் சண்டையில் அண்ணிகள் நுழைவதில்லை. அதைப்போல ஒரு கச்சிதமான ஏற்பாட்டை சேகரும், பாலுவும் செய்திருந்தார்கள். அது மங்கைக்கு இன்னும் எரிச்சல் ஊட்டியது. “நாடகமாடி நல்ல பேர் எடுத்துக்குறாங்க!'' என்று அம்மாவிடம் உறுமியிருந்தாள்.

“தோ பாரு மங்கை எப்பவும் நீ வீட்டுக்கு வந்து இதைமாதிரி சண்டை புடிக்கிற. உன் உரிமைன்னு எல்லாம் ஏதும் இல்லை. இது பாட்டன் சொத்து இல்லை. அப்பா உழைச்சி சம்பாதிச்சது. அவர் விருப்பப்படி யாருக்கு வேணா குடுக்கலாம். தெருவுல போறவனுக்கு கூட குடுக்கலாம். அவரை நாம கம்பல் பண்ண முடியாது. அவருக்கு எப்ப தோணுதோ அப்ப செய்வாரு” என்றான் பாலு.

“அய்யோ… நல்ல புள்ளை எவ்ளோ பதமா பேசுது பாரு. நீங்க அவரு கூடவே இருந்து நாடகமாடி மனசைக் கரைச்சி எல்லாத்தையும் வாங்கிக்குவீங்க. நான் தூரத்துல இருந்துட்டு, கெட்ட பேரு வாங்கிட்டு முக்காடு போட்டுட்டு போகணும்!''

“ஏண்டி, அப்பா உனக்கு என்ன குறை வச்சாரு? நல்லா படிக்க வச்சாரு. 100 பவுன் நகை போட்டு கல்யாணம் கட்டி வச்சாரு. புள்ளைங்க பொறந்தப்ப, ஆளுக்கு பத்து பவுன் நகை போட்டாரு!”

“ஓ இதெல்லாம் அக்கவுன்ட் நோட்ல எழுதி வச்சிருக்கீங்களா?“

“எல்லாம் சும்மா இருங்க. தோ பாரும்மா, இப்ப சொத்தெல்லாம் பிரிக்க முடியாது. உனக்கு ஏதாச்சும் பிரச்னைன்னா சொல்லு, என்ன செலவானாலும் தீத்து வக்கிறேன். அதை விட்டுட்டு...”

அப்பாவை இடைமறித்த மங்கை...

“இப்ப எனக்கு குடுக்குறதுல என்னப்பா பிரச்னை? பிரச்னைன்னாதான் குடுப்பீங்களா? ஏன் இப்டி இழுத்துட்டு போறீங் ? திடீர்னு நாளைக்கே ஒங்களுக்கு ஒண்ணு ஆயிடிச்சின்னா, இவங்கள்ளாம் எனக்கு குடுப்பாங்கன்னு நினைக்கிறீங்களா?”

“மங்க, பைத்தியக்காரத்தனமா பேசாத” சேகர் நிஜமாகவே கோபத்தில் வெடித்தான்.

“வெஷம்னு சொன்னா செத்துட மாட்டாங்க. நம்ம வீடு, தோப்பு, நெலம், நகை, பணம் எல்லாத்தையும் கணக்கு போட்டு மூணா பிரிச்சி, என் பங்கை மாத்தி விட்டுடுங்க!“

“அப்பாவுக்கு ஒண்ணுன்னா, நாங்கதான் கவனிக்கணும். அவரை கடைசி காலத்துல நாங்கதான் வச்சி பாத்துக்கணும்” பாலு பதமாகச் சொன்னான்.

“அப்ப ஆவர செலவை மூணா ஷேர் பண்ணிக்கலாம். அது என்ன கோடியிலயா ஆவப்போவுது!''

“மங்க... இதே ஒனக்கு பொழைப்பாப் போச்சு. அவர் சம்பாதிச்சதை இப்பவே உங்களுக்கு எழுதி வச்சிட்டு, அவர் என்ன கோயில் வாசல்ல ஒக்காந்து பிச்சை எடுக்கறதா?'' - விசாலாட்சி கடிந்து கொண்டாள்.

“ஏன் பெத்த புள்ளைங்க மேல நம்பிக்கை இல்லையா... அப்டியா அடிச்சி வெரட்டி உடுவோம்... இவங்க வேணா பண்ணுவாங்க. என் வீட்டுக்கு வாங்க, நான் பாத்துக்கறேன்.“

“ராஜா மாதிரி அவர் சம்பாதிச்சி வாழ்ந்துட்டு இருக்கார். அதைத் தூக்கிக் குடுத்துட்டு உன் வீட்ல வந்து பிச்சைக்காரன் மாதிரி வாழ்ந்துட்டு இருக்கணுமாடி!“

“அம்மா, நான் அப்பாகிட்ட பேசிட்டு இருக்கேன். நீ தேவயில்லாம பேசாத!''

“நானும் அவரும் ஒண்ணுதான். இப்ப சொத்தைப் பிரிக்க முடியாதுடி. இப்ப இல்ல, நீ எத்தனை வாட்டி கேட்டாலும் இதான். அவர் இருக்குற வரைக்கும் அவர் பேர்லதான் இருக்கும். உனக்கு பிரிச்சி குடுக்க முடியாது. இனிமே இதைப்பத்தி பேசாத!''

“ஏம்மா, நீ என்னை அப்பாவுக்குத்தான் பெத்தியா?''

அப்பாவுக்கு ஆத்திரம் அதிகம் ஆனது. திடீரென்று எழுந்து மங்கையை பளாரென்று அறைய கையை ஓங்கிப் பின் முடிவை மாற்றிக்கொண்டு, திறந்திருந்த கதவில் அடித்தார்.

விசாலாட்சி நகர்ந்து வந்து மங்கையின் முடியைப் பற்றி உலுக்கி, “சனியனே, சனியனே நீ என் வயித்துலயே பொறக்கலை” என்று திட்டிக்கொண்டே முதுகில் போட்டு அடித்து பின் தரையில் விழுந்தாள்.

அண்ணிகள், தண்ணீர் எடுக்க ஓடினார்கள்.

மங்கை உண்மையில் 'இந்த அப்பா'வுக்குப் பிறக்கவில்லை. ஆனால், அதிக சொத்துக்களை மங்கை பெயருக்குத்தான் உயில் எழுதி வைத்திருக்கிறார் 'இந்த அப்பா'!

-------------------------------

''NIFRA நிறுவனத்தின் தலைவர் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்தார்”

செய்தி நிறுவனங்களின் தலைப்புச் செய்தி இதுதான். இதை ஒட்டி சேனல்களில் பல்வேறு விவாதங்கள். கிரெடிட், டெபிட் வார்த்தைகள் மட்டும் தெரிந்த பொருளாராதார நிபுணர்கள் கூட கார சாரமாக விவாதித்துக்கொண்டு இருந்தார்கள்.

கோவை வரை தனி விமானத்தில் வந்த நிஃப்ரா நிறுவனத்தின் தலைவர் நிஜாரா போஷ், கோவையில் இருந்து ஊட்டியில் இருக்கும் தன் எஸ்டேட் பங்களாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல முயன்றிருக்கிறார். மோசமான வானிலை காரணமாக பைலட் கோவை விமான நிலையத்துக்கே ஹெலிகாப்டரை கொண்டு வந்துவிட்டார்.

காரில் செல்லலாம் என உதவியாளர் கிசுகிசுத்ததை காதில் வாங்கி மூளையில் ஏற்றிக்கொள்ளாமல் பதற்றமாக வானத்தையே பார்த்தபடி இருந்திருக்கிறார். ஒரு கேப்பசீனோ குடித்து விட்டு, ஸ்மோக்கிங் லவுஞ்சில் போய் தம் அடித்துக்கொண்டு இருந்தபோது மேகங்கள் நகர்ந்து பொள்ளாச்சி பக்கம் போனதைப் பார்த்த விமான நிலைய ஆசாமிகள், வானிலை நன்றாக உள்ளது என மீண்டும் அனுமதி கொடுத்ததையடுத்து, நிஜாரா மீண்டும் ஹெலிகாப்டர் ஏறினார்.

ஸ்மடக்.... ஸ்மடக்... ஸ்மடக் என காற்றாடி சுற்றி மேலெழும்பிய ஹெலிகாப்டர் கோவை நகரத்தை கோழிக்குஞ்சுகள் ஆக்கி காரமடை மேல் உயரமெடுத்து இடது திரும்பி மலைகளின் அரசியின் மடிதனில் நுழைந்தது. நிஜாரா கீழே பார்த்தார். வெறும் பச்சை. மேகக்கூட்டங்கள் ஹெலிகாப்டரை அறைய ஆரம்பித்தன. இந்த பச்சைக் கூட்டங்களுக்குள்ளே விழுந்து ஒளிந்து வாழ்ந்தால் நிம்மதியாக இருக்கும் என்று நிஜாரா யோசிக்க ஆரம்பித்த வேளையில், காட்டுப்பன்னி ஒன்று ஸ்மடக் ஸ்மடக் சத்தத்தால் கலவரப்பட்டு தலையை மட்டும் தூக்கிப் பார்த்த வேளையில் ஹெலிகாப்டர் ஒரு பக்க தோகையிழந்த மயில் துடிதுடித்து கீழே விழுவது போல கீழே வந்து கொண்டிருந்தது. காட்டுப்பன்னி ஓட ஆரம்பித்தது.

சில லட்சங்கள் செலவில் நிஜாராவின் அரைகுறை உடல் பாகங்களை பொறுக்கி எடுத்து நல்ல காஸ்ட்லியான மூட்டையில் கட்டிக் கொடுத்தனர்.

பிரதமர் அஞ்சலிக் குறிப்பை ட்விட்டரில் எழுதினார். மத்திய அமைச்சர்கள், முதல் மந்திரி முதல் பல தொழிலதிபர்கள் வந்து அந்த சிறு மூட்டைக்கு மரியாதை செலுத்தி மூட்டை மேல் மலர் வளையம் வைத்தனர். அமிதாப்ஜீயும் வந்து சோகமாக முகத்தை சேனலுக்குக் காட்டிப்போனார்.

நிஃப்ரா குழுமம் வட இந்தியாவைச் சேர்ந்தது. நிஜாராவுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். இதில் ஒரு மருமகள் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். நிஜாரா குழுமத்தின் சொத்து மதிப்பு 22,000 கோடி எனவும், இல்லையில்லை அது 76,000 கோடி வரை இருக்கும் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தார்கள். வெளிநாட்டில் இருந்த கடைசி மகன் ஹம்பீஷ் இந்தியா திரும்பி இருந்தான்.

ஆடிட்டர்கள் மற்றும் வக்கீல்கள் உடனிருக்க நிறுவனத்தின் உயர்மட்டக் குழு கூடியது. மூன்று மகன்களும் இருந்தார்கள். கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்று செய்தி வெளியே கசிந்தது. ஷேர் மார்கெட்டில் ஷேர்கள் நிஜாராவின் ஹெலிகாப்டர் போலவே சரிய ஆரம்பித்தன.

அநீதி ஆந்தாலஜி கதைகள்
அநீதி ஆந்தாலஜி கதைகள்

நிஜாராவின் மூத்த மகன் ரிஷிகோஷ் பேட்டி அளித்தான். ''அப்பாவின் ஃபண்டமென்டல்ஸ் ஸ்ட்ராங்கா இருக்கு. இப்போது நிலவும் சின்னச் சின்ன நிச்சயமற்றத் தன்மைகள் விரைவில் விலகும். நிறுவனம் உயரே பறக்கும் நாட்கள் இதோ அருகிலேயே உள்ளது!''

இரண்டாம் மகன் சர்வரிஷ், ''அப்பா என்னைத்தான் தலைமைப் பொறுப்பு ஏற்கும்படி சொல்லி இருக்கிறார். அதற்கான ஆவணங்களும் தெளிவாக இருக்கின்றன!'' என்றான்.

சிக்கல் தீரும்படி இல்லை.

மேல்மட்ட பஞ்சாயத்துகள் ஆரம்பம் ஆகின.

அந்த பெரிய வீட்டுக்குள் சாமியார் நுழைந்தார். பஜனை செய்து, தியானம் செய்து, உபன்யாசம் செய்து, மேஜிக் சிலது செய்து காட்டினார். பலன் ஏதும் இல்லை.

பிரிவு உறுதியானது. நிறுவனத்தைப் பிரித்துக்கொள்வது என்று முடிவானது.

நிஜாரா படத்தின் முன்பு ஓர் இரவு முழுவதும் அமர்ந்து தியானத்தில் இருந்தார் நிஜாராவின் மனைவி ஹம்ஸத்ரா. அவர் அருகிலேயே வேறு வழியில்லாமல் இரண்டு மருமகள்களும் அமர்ந்திருந்தனர். மகள்கள் நள்ளிரவிலேயே தங்கள் தளங்களுக்குச் சென்றுவிட்டனர்.

மறுநாள் அதிகாலை ஹம்ஸத்ரா மூன்று மகன்களையும் அழைத்தார். தம் குடும்பத்தைப்பற்றியும், பரம்பரையைப் பற்றியும், நிஜாராவைப் பற்றியும் அழுத்தமான வார்த்தைகளால் எடுத்து உரைத்தார். மகன்கள் கேட்டுக்கொண்டனர்.

''பிரிவு உறுதி என்றாலும், நிறுவனம் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும். இந்தியாவின் முதன்மை நிறுவனமாக ஆக்க வேண்டும். இதுவே அப்பாவின் கனவு!'' என்றார்.

மூன்று மகன்களும் கேட்டுக்கொண்டனர்.

''யார் யார் எந்த நிறுவனத்தை எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள்?'' என்றார்.

மூவரும் தங்கள் விருப்பத்தைச் சொல்ல, மெல்ல சச்சரவு ஆரம்பித்தது.

“நான் சொல்வதை மூவரும் ஏற்றுக்கொண்டால், சொல்கிறேன். மறு பேச்சு பேசக்கூடாது'' என்றார்.

மூவரும் அமைதி ஆகினர்.

தன் திட்டத்தை சொன்னார். வேறு வழியின்றி மூவரும் ஏற்றுக்கொண்டனர்.

தூரத்தில் நின்றுகொண்டிருந்த மகளைத் திரும்பிப் பார்த்தார். மூத்த மகள் அருகில் வந்தாள்.

''பாயாசம் எடுத்துட்டு வா!'' என்றார்.

மூத்த மகள் திரும்பி அடி எடுத்து வைக்க, மூத்த மருமகள் பாயாசம் போட அடுப்படிக்கு ஓடினாள். அங்கே இருந்த சமையல்காரரிடம் இரண்டு மருமகள்களும் கடுமையாக இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்து பாயாசத்தை தயார் செய்தார்கள்.

அம்மா மூன்று மகன்களிடமும் பேசிக்கொண்டிருக்க, பின்னணியில், இரண்டு மகள்களும், இரண்டு மருமகள்களும் தட்டில் வைத்து பாயாச கோப்பைகளை லாகவமாக, சிரித்த முகத்துடன் எடுத்து வந்து கொண்டு இருந்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு