Published:Updated:

ரத்தமும் சதையும் கதைகளுமாய் வாழ்ந்தவர்!

- கட்டுரை, படங்கள்: புதுவை இளவேனில்

பிரீமியம் ஸ்டோரி

பாண்டிச்சேரி பல்கலைக்கழக அலுவலர் குடியிருப்பில் கியூ 13 வீடு, இப்போது வெறுமை சூழ்ந்து கிடக்கிறது. ‘அப்பா’ என்று அழைத்தால் ஒரு குழந்தையைப் போல முகம் தூக்கிப் பார்த்துச் சிரிக்கும் கி.ரா, இப்போது இல்லை. உள்ளே அழைத்து கால்மாட்டில் இருத்தி கரிசல் கதைகள் பேசவும், கையசைத்து வழியனுப்பி வைக்கவும் இனி யாருமில்லை

ரத்தமும் சதையும் கதைகளுமாய் வாழ்ந்தவர்!

.கி.ரா எனக்குத் தந்தைபோல நான் கருதினேன்... ஆனால், இறுதி நாள்களில் என் மகனைப்போல அவரைக் கண்டேன். மருந்து சாப்பிட மாட்டேன் என்று வீம்பு பிடிப்பது, முகம் திருப்பிக்கொள்வது, உன்னுடனே வந்துவிடுகிறேன் என்று அடம் பிடிப்பது என அவர் ஒரு குழந்தையின் இயல்பில்தான் இருந்தார்.

ரத்தமும் சதையும் கதைகளுமாய் வாழ்ந்தவர்!

தினமும் அவரைப் போய்ப் பார்க்கிறேன் என்பதால், பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புகைப்படம் எடுக்க வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்த்தேன். என் வீடு, ஸ்டூடியோ, கி.ரா வீடு... இப்படித்தான் கழிந்தன எனது பொழுதுகள். தினமும் மாலை 7 மணிக்கு அவர் வீட்டுக்குப் போய்விடுவேன். ஐந்து நிமிடம் தாமதமானாலும் முகம் சிறுத்துப்போவார். சென்றதும் கையெடுத்துக் கும்பிட்டு வரவேற்பார். கூட, ஒரு மலர்ந்த சிரிப்பு. நான் அங்கேயே தங்கவேண்டும் என்று விரும்பினால் தூங்கமாட்டார். பேசிக்கொண்டேயிருப்பார். நான் வீட்டுக்குக் கிளம்பலாம் என்று அவர் நினைத்தால், தூங்குவதுபோல கண்களை மூடிக்கொள்வார். நான் அவர் மேல் கையை வைத்து ‘அப்பா’ என்பேன், விழிக்கமாட்டார்... நான் சென்றபிறகு விழிப்பார்.

மே 17-ம் தேதி, வழக்கம்போல மாலை 7 மணிக்கு வீட்டுக்குச் சென்றேன். உள்ளே நுழைந்ததும் லேசாகச் சிரித்தார்... “நான் தூங்கினபிறகு நீ போயிடுப்பா” என்றார். ஏதோ வித்தியாசமாகப் பட்டன அந்த வார்த்தைகள். “அப்பா... நீங்க எனக்காக சும்மா தூங்குவீங்கள்ல, அதுமாதிரி தூங்காதீங்க... நல்லாத் தூங்குங்க... அதுக்குப்பிறகு போறேன்” என்று சொன்னேன். “சாப்பிட்டீங்களா” என்று கேட்டேன். “இல்லை” என்று தலையசைத்தார். “பால் குடிக்கிறீர்களா?” என்று கேட்டேன். “கொஞ்சம் கொடு” என்றார். வழக்கமாக சாப்பிடும் மருந்து கொடுத்தேன். எப்போதும் அவரின் கால்மாட்டில் அமரவேண்டும் நான். கால்களை மெதுவாகப் பிடித்துவிடுவேன். “இன்னும் கொஞ்சம் அழுத்தமா” என்பார். அன்று எதுவும் சொல்லவில்லை. ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஒன்பதரை மணி... லேசாக மூச்சிரைக்கத் தொடங்கியது. பதற்றமானேன்... ஏதோ நடக்கப்போகிறது என்று சொன்னது என் உள்ளுணர்வு. உள்ளேயிருந்த பிரபி அண்ணனை அழைத்தேன். மருத்துவருக்குப் போன் செய்தார். “இங்கே கோவிட் நோயாளிகள் இருக்கிறார்கள்... அழைத்து வராதீர்கள்” என்றார் மருத்துவர். என்னை அருகே அழைத்தார் அப்பா... “நான் பிழைக்க மாட்டேன்” என்றார். மூச்சுத்திணறல் அதிகமானது. பெரியண்ணனும் வந்துவிட்டார். இரவு பதினோரு மணிக்கு உயிர் பிரிந்தது. மூன்று பேரும் உறைந்து நின்றோம்.

27 ஆண்டுக் காலத் தொடர்பு... இறுதிவரை, கி.ராவுக்கு என் வீடு எங்கேயிருக்கிறது என்று தெரியாது. என் முகவரி தெரியாது... என் அப்பா, அம்மா பற்றித் தெரியாது. எனக்கு எத்தனை அண்ணன்கள் இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் என்னை மகனாக சுவீகரித்துக்கொண்டார். எல்லா நேரமும் என்னுடனே இருக்கவேண்டும் என்று விரும்பினார்.

கி.ரா-வுடன் புதுவை இளவேனில்
கி.ரா-வுடன் புதுவை இளவேனில்

“நான் உன்னோடு வந்து தங்கிக்கொள்கிறேன்” என்று பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார் கி.ரா. காலமாவதற்கு மூன்று தினங்களுக்கு முன்புகூட, “24 மணி நேரமும் உன்கூட இருக்கணும். என்னை எப்போ அழைச்சுக்கிட்டுப் போகப்போறே?” என்று கேட்டார். எனக்கும் அவ்வளவு ஆவல் இருந்தது. அவருக்கென்று என் வீட்டுக் கீழ்தளத்தில் ஏ.சி வசதியோடு ஓர் அறை கட்டி வைத்திருக்கிறேன். ஆனால் எந்தச் சூழலிலும் அவரை அழைத்துச்செல்ல நான் முனைந்ததேயில்லை. என் வீட்டில் அவருக்கான அறை இருப்பதை அவரிடம் நான் சொன்னதுமில்லை.

ஒருநாள், கொஞ்சம் உடைகள், சில கடிதங்கள், சில புத்தகங்களை ஒரு பையில் எடுத்து வைத்துக்கொண்டு ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார். “இனிமேல் எக்காரணம் கொண்டும் நான் அந்த வீட்டுக்குப் போகமாட்டேன். ஸ்டூடியோவிலேயே இடம் ஒதுக்கிக்கொடு... இங்கேயே தங்கிவிடுகிறேன்” என்றார். அண்ணன்களும் வந்துவிட்டார்கள். அன்றைய நாள் முழுவதும் அப்பாவை காரில் வைத்துக்கொண்டு பாண்டிச்சேரி முழுக்க சுற்றினேன். நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டேயிருந்தார். இரவு அவரை சமாதானப்படுத்தி வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தேன். பெரியண்ணனும் பிரபி அண்ணனும் கொண்டிருந்த நம்பிக்கைக்குச் சிறு பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். பிரபி அண்ணனும் பெரியண்ணனும் என்னைத் தம்பியாக ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டதால்தான் என்னால் கி.ரா-வோடு இருக்க முடிந்தது.

அப்போது எனக்குப் பதினாறு வயதிருக்கும். ‘ஓவியனாக வேண்டும்; போட்டோகிராபராக வேண்டும்’ என்றெல்லாம் கனவுகள் இருந்தன. ஆனால், ஏதுமற்றவனாக இருந்தேன். இதழ்கள், புத்தகங்களில் இருக்கும் ஓவியங்களையெல்லாம் தேடித்தேடிப் பார்ப்பேன். அப்படியொரு நாள், ஆதிமூலத்தின் ஓவியத்தைத் தேடி, ஜூனியர் விகடனில் கி.ரா எழுதிய ‘கரிசக்காட்டு கடுதாசி’ தொடரைக் கண்டடைந்தேன். அந்த வாசிப்பில்தான் கி.ரா என் மனதுக்குள் வந்தார்.

யதேச்சையாக ஒருநாள் லாஸ்பேட்டை அஞ்சல் அலுவலகத்தில் கி.ராவைப் பார்க்க, என்னையறியாமல் அவரிடம் சென்று கைகுலுக்கினேன். “என்ன பண்றே’’ என்று கேட்டார். “சும்மா இருக்கிறேன்” என்றேன். “சும்மா எப்படியிருக்க முடியும்?” என்று கேட்டார்... பிறகுப் பேசிக்கொண்டே அவருடைய வீட்டுக்குப் போகிறேன். அமரவைத்துப் பேசுகிறார். அடுத்தடுத்த நாள்களும் ஏதோவொரு காரணத்துக்காக அவருடைய வீட்டுக்குச் செல்லத் தோன்றுகிறது. எனக்கும் அவருக்குமான பந்தமென்பது அப்படித்தான் வேரூன்றியது. ஆனால் அது எப்படித் தொடர்ந்தது என்பது இன்றுவரை எனக்கு ஆச்சர்யம்!

அவருக்கு வரும் கடிதங்களை எடுத்துச்சென்று கொடுப்பேன். கவிஞர் மீரா, அஃகு பரந்தாமன், தஞ்சை பிரகாஷ் எல்லோரும் கி.ரா-வைப் பார்க்க வருவார்கள். அவர்களை சைக்கிளில் ஏற்றிச்சென்று பஸ்ஸில் ஏற்றி ஊருக்கு அனுப்புவேன். ஒருமுறை “நீ எந்த வேலைக்கும் போகாம இப்படியிருக்கலாமா. என்ன வேலை தெரியும் உனக்கு?” என்று கேட்டார் கி.ரா. “நான் போட்டோகிராபர்” என்று சொல்லிவிட்டேன். உண்மையில் அப்போது எனக்கு கேமராவை எப்படி இயக்குவது என்றுகூடத் தெரியாது. “அப்போ அதில தீவிரமா கவனம் செலுத்து” என்றார். உடனடியாக ஒரு ஸ்டூடியோவில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன்.

ரத்தமும் சதையும் கதைகளுமாய் வாழ்ந்தவர்!

ஒருநாள் கேட்டார்... “ஸ்டூடியோவுல எவ்வளவு சம்பளம் தர்றாங்க?” “முந்நூறு ரூபாய்ப்பா’’ என்றேன். “இதைவச்சு எப்படிக் குடும்பம் நடத்துவே?” என்றவர் கன்னத்தில் கைவைத்து கொஞ்சநேரம் யோசித்தார். “ஸ்டூடியோ வேலை தவிர வேறென்ன தெரியும்” என்றார். “ஆட்டோ ஓட்டுவேன்” என்றேன். மறுநாள் என்னை அழைத்து, அறுபதாயிரம் ரூபாய் பணத்தைக் கையில் வைத்தார். “ஒரு ஆட்டோ வாங்கிக்கோ” என்றார். அந்த அறுபதாயிரம்தான் இன்றைய என் வாழ்க்கைக்கு ஆதாரம்.

ஒரு வாசகனாகத்தான் கி.ராவுக்கு நான் அறிமுகமானேன். அவர் என்னைப் பிள்ளையாக வரித்துக்கொண்டார். என் வாழ்க்கை அவரால் வடிவமைக்கப்பட்டது. இன்றிருக்கும் என் வாய்ப்புகளுக்கும் வசதிகளுக்கும் வேரும் விழுதும் கி.ராதான்.

நான் புகைப்படம் எடுக்கக் கற்றுக்கொண்டது கி.ராவிடம்தான். அவர்தான் மாடலாக இருந்தார். புகைப்படங்களின் பின்னிருக்கும் அரசியலையும் தத்துவத்தையும் அழகியலையும் எளிய மொழியில் எனக்குப் போதித்தார். அவரளவுக்கு நுண்கலை ஞானம் பொருந்திய மனிதர்கள் வேறு எவரையும் நான் கண்டதில்லை. 1930களில் ‘போட்டோப்படம் எடுக்கிறதோய்... போட்டோப்படம்’ என்று கத்தியபடி, கிராமத்துத் தெருக்களில் கேமராவைச் சுமந்துகொண்டு போய் போட்டோ எடுத்த கலைஞர்கள் பற்றியெல்லாம் கி.ரா சொல்வதைக் கேட்க அவ்வளவு அலாதியாக இருக்கும். “பறவையைப் போட்டோ எடுக்கிறவர், அது கொஞ்சம் தலையைக் கிழக்கே திருப்பினா நல்லாருக்குமேன்னு எதிர்பார்க்கக்கூடாது. அந்தப் பறவை எப்படியிருக்கோ, அந்த நிலையிலேயே உயிர்ப்பா இயல்பு மீறாம எடுக்கணும். அதனால்தான் அதுக்கு ஷூட்டிங்னு பேரு வச்சாங்க. துப்பாக்கியில ஷூட் பண்றவன் என்ன துரிதமா பண்ணுவானோ, அதே வேகத்தோட போட்டோவையும் ஷூட் பண்ணணும். அப்படிச் செய்றவர்தான் நல்ல போட்டோகிராபர்” என்பார்.

யோசித்துப் பார்க்கிறேன்... இந்த 28 ஆண்டுகளில் பெரும்பாலான நேரங்களில் என்னை ஒரு மனிதனாகவே பொருட்படுத்தியதேயில்லை கி.ரா. யாரிடமும் என்னை அறிமுகம் செய்ய மாட்டார். எங்கும் என் பெயரைப் பதிவும் செய்ததில்லை. வருவேன்... போவேன்... அவ்வளவுதான்... அவருக்கு 95-ம் ஆண்டுவிழா எடுத்தபிறகுதான் என்னை நிமிர்ந்து பார்த்தார். ‘நீ இவ்வளவு பெரிய பயலா’ என்பது போலிருந்தது, அதன்பிறகான அவர் செயல்பாடுகள். அதற்குப் பிறகு எதைச் செய்தாலும் என்னைக் கேட்டுச் செய்யத் தொடங்கினார். “நீ எதைச் செஞ்சாலும் சரியா இருக்கும்பா...” என்பார். இதுதான் கி.ரா எனக்குக் கொடுத்த சான்றிதழ்.

கி.ராவிடம் பேசும்போது, சற்று கவனமாகப் பேசவேண்டும். ஒருமுறை சொன்ன விஷயத்தை இன்னொரு முறை சொன்னால் இடைநிறுத்தி, “இதை நூறு முறை சொல்லிட்டே” என்பார். எப்போது பேசினாலும் புதிதாகப் பேசவேண்டும். ஆனால், அவர் முன்பு பேசிய விஷயத்தைத் திரும்பவும் சொல்வார். ஆனால் அது புத்தம் புதிதாக இருக்கும். இலக்கியம் பற்றிப் பிழை பேசினால்கூடப் பொறுத்துக்கொள்வார். இசையைப் பிழையாகப் பேசினால் கடுங்கோபம் வந்துவிடும். நேரடியாகக் காட்டாமல் வேறு வேறு விஷயங்களில் காட்டுவார். மேற்கொண்டு அந்த விஷயத்தைப் பேசவே மாட்டார். இத்தனை ஆண்டுக்காலத்தில் அவர் என்மீது அப்படிக் கோபம் கொண்டது ஒரே ஒருமுறை.

ஒருநாள் சிந்துப்பாடல்கள் பற்றி சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘காவடிச் சிந்து’ பற்றிப் பேசவந்தார். நான் முந்திக்கொண்டு, ‘அந்தப் புத்தகத்தை எழுதியது, அண்ணாமலை செட்டியார்’ என்று சொல்லிவிட்டேன். உண்மையில் எழுதியவர், அண்ணாமலை ரெட்டியார். கி.ராவின் முகம் கடுமையாக மாறிவிட்டது. என் முகத்தைப் பார்க்கவேயில்லை. கீழேயே பார்த்துக்கொண்டிருந்தார். அதுபற்றிய பேச்சையும் நிறுத்திவிட்டார். அதன்பிறகு பேச்சிலும் செயலிலும் பெரும் வெறுப்பு தெரிந்தது. “ஏன் இவ்வளவு அசிங்கமா சட்டை போட்டிருக்கே?” என்றார். “இந்த சொம்பை ஏன் இங்கேயே வச்சிருக்கே?” என்று திட்டினார். ஏதாவது சொல்ல வந்தால், “பேசாதே, நிறுத்து” என்றார். மறுநாள் வழக்கம்போல நான் உள்ளே நுழைந்தபோது, என் கைகளைப் பற்றிக்கொண்ட கி.ரா, “நீ வராமப் போயிடுவியோன்னு வருத்தமா இருந்துச்சு...” என்று வாரிக்கொண்டார். இதுதான் கி.ரா.

கி.ராவிடம் நான் கற்றுக்கொண்டது வாழ்க்கையை. உழைப்பவர்களை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். என் பார்வையில் எல்லாவற்றிலும் நம்பர்-1 அவர். செருப்பிலிருந்து வேட்டி வரை எல்லாவற்றிலும் தரமுயர்ந்ததை மட்டுமே எடுப்பார். ஒரு நளினம் அவரிடம் எப்போதும் இருக்கும். உடை அணிந்தால், அதில் ஒரு ராஜதன்மை இருக்கும். மயில்கலர் சட்டை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த நிறச் சட்டையைப் போட்டு நான் அவரை நிறைய படங்கள் எடுத்திருக்கிறேன். அந்தப்படங்கள் மீது அவருக்கு நிறைய லயிப்பு இருந்தது.

கி.ரா தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்தார். கொரோனா முதல் அலைக் காலத்தில் ‘அண்டரெண்டப்பட்சி’ எழுதினார். எழுத்தில் திருப்தியடையவே மாட்டார். ஒரு சிறுகதையைப் பத்து முறை எழுதுவார். அண்டரெண்டப் பட்சியின் மூலப்பிரதி 150 பக்கம். இறுதியில் 42 பக்கமாக வந்தது. அவர் கைப்பட எழுதி எழுதித் திருத்திய அந்த நாவலின் நான்கு மூலப்பிரதிகள் என்னிடம் இருக்கின்றன.

எவருமே எதிர்பார்க்காத ஒன்றையும் செய்தார் கி.ரா. ஒருநாள் இரவு என்னை அழைத்தார். பெரியண்ணனும் பிரபி அண்ணனும் கூட இருந்தார்கள். “என் சொத்துகளை யாருக்குப் பிரித்துக்கொடுக்கவேண்டுமோ கொடுத்துவிட்டேன். மதிப்பிடமுடியாத என் எழுத்துகளை இரண்டாகப் பிரிக்கப்போகிறேன். ஒரு பகுதி உனக்கு... இன்னொரு பகுதி என் இரு பிள்ளைகளுக்கு” என்றார். நான் மறுத்தேன். “அப்படி வேண்டாம்பா... மூன்றாய்ப் பிரியுங்கள்... பெரியண்ணனுக்கு ஒரு பகுதி... பிரபி அண்ணனுக்கு ஒரு பகுதி... இன்னொரு பகுதியில் கிடைக்கும் தொகையைக் கரிசல் கட்டளை என்ற அமைப்பை நிறுவி ஒரு விருதை உருவாக்குவோம். இதிலிருந்து கிடைக்கும் பணம் எதுவும் எனக்கு வேண்டாம்... நீங்கள் எனக்கு நல்லதொரு வாழ்க்கையைத் தந்திருக்கிறீர்கள்... அதுபோதும்” என்றேன். கி.ரா ஏற்றுக்கொண்டார். உலகத்தில் எந்த வாசகனுக்கும் கிடைக்காத பெரும்பேறு இது!

சமீபமாக அவர் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சுரப்பதைக் கண்டிருக்கிறேன். வார்த்தைகளை மறக்கத் தொடங்கினார். இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னால், என்னை அருகில் அழைத்து, “நீ மனுஷன்பா” என்றார். ஏன் அந்த வார்த்தையைச் சொன்னார் என்று புரியவில்லை. ஒரு அட்டையை எடுத்து என்னிடம் காட்டினார். பாபு என்று எழுதி என் மொபைல் எண்ணை எழுதி வைத்திருந்தார். “உன் பெயரையும் நம்பரையும் மறந்துடறேம்பா” என்றார். அப்போதும் கண்களில் ஒரு துளி கண்ணீர் சுரந்தது.

இப்போது ‘நான் 24 மணி நேரமும் உன்கூடவே இருக்கணும்...’, ‘நீ மனுஷன்பா...’, ‘நான் தூங்கினபிறகு நீ வீட்டுக்குப் போ...’ - இந்த வார்த்தைகளெல்லாம் என்னைச் சுற்றி சுற்றி வருகின்றன. எப்போதும் போல இயல்பாக இன்று இரவு 7 மணிக்கு அவர் வீட்டுக்குப் போய்விட்டேன். இன்னும் எடுக்கப்படாத இரண்டு நாள் செய்தித்தாள்கள் வாசலில் மடித்து வைத்துக் கிடந்தன. கதவில் பூட்டு தொங்குகிறது. அவர் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது மனம்.

அப்பாவின் உடலோடு இடைச்செவல் போயிருந்தேன்... கண்ணாடியோடு அவரை அடக்கம் செய்யச் சென்றார்கள். நான் அந்தக் கண்ணாடியை மட்டும் கழற்றி எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். இந்தக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டுதான் அப்பா இந்த உலகத்தைப் பார்த்தார். தலைமுறைக்கும் அதை நான் பாதுகாப்பேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு