Published:Updated:

புளியமர நாற்காலி - சிறுகதை

புளியமர நாற்காலி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
புளியமர நாற்காலி - சிறுகதை

- விக்டர் பிரின்ஸ்

புளியமர நாற்காலி - சிறுகதை

- விக்டர் பிரின்ஸ்

Published:Updated:
புளியமர நாற்காலி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
புளியமர நாற்காலி - சிறுகதை
‘ஓடிபோன கொச்சு செறுக்கனுக்க மோன் வந்தானாம்’ குளத்துக்கரை குடியிருப்பில் அன்றைய தலைப்புச்செய்தி. பிள்ளைகுளம் மூன்று ஏக்கரில் விரிந்த குளம், அதனைச் சுற்றி இருபது குடிசைகள். குளத்துக்கர செற்றைகள் என்றே அறியப்பட்டது அவை. ஜமீன்தார் ராமன் மற்றும் மகன் சுதர்சனன் பெயரையே குளம் தாங்கிக் கிடந்தது. குளத்தையொட்டிய பத்தொன்பது ஏக்கரில் ராமன் ஜமீனின் வீடு இருந்தது.
புளியமர நாற்காலி - சிறுகதை

இருபத்தொரு வருடங்களுக்குப் பிறகு வந்திருப்பது முண்டன். குளத்துக்கரையின் ஆள் உயர ஓலைக்குடிசைகளில் அன்று மகிழ்ச்சி ஆரவாரம் களைகட்டியது. ஆனாலும் சில குடிசைகள் முண்டன் பற்றிய குசுகுசு செய்திகளைத் தாளம்தட்டிக் காதுகளில் கடித்தனர். ``பயலுக்க பத்ராச கண்டியாக்கும், ஒரு வேளம் மிண்டினானா? தொர ஆபீசர் கணக்கா இரிக்கியான்’’ ஒரு கிழவி வளைந்த மூக்குடன் கதைக்க ``பேன்டும் சூட்டும் இட்டா இப்பிடிதாம்பெண்ணே வேளம் வராது’’ இன்னொரு கிழவி தம்பட்டம் அடித்தாள்.

``எண்ணாலும் கொச்சுசெறுக்கனுக்கும் வள்ளிக்கும் இவன காணோக்கு ஒத்துதில்லையே’’ என ஏங்கவும் செய்தாள் வளைந்த மூக்கு கிழவி.

முண்டனின் அண்ணன் தன் இரு பெண்பிள்ளைகளுடன் வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தான். கிப்பி தலைமுடியுடன் பேன்ட் சட்டையில் வருகிற முண்டனைக் கண்டதும் குளக்கரையின் சிறுகூட்டம் மெய்சிலிர்த்து நின்றது. ஏதோ ஒரு குடிசையில் அபூர்வமாகக் கிடந்த மர இருக்கை ஒன்றை அதற்குள் முண்டனின் குடிசை முன்பாக வைத்தார்கள் வரவேற்பின் முதல்கட்டமாக. இருமகள்களை அழைத்துக்கொண்டு அருகில் வந்தான் அண்ணன்.

முண்டனின் கண்கள் வீட்டின் முன்னால் பரந்து கிடந்த ஜமீன்தாரின் நிலத்தையே உற்றுநோக்கியபடி இருந்தது. அதில் ஈசானிமூலையில் குடியிருப்புக்கு அருகில் நிற்கும் ஒற்றைப் புளியமரத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். கிளைபரப்பி விரிந்து நின்ற புளியமரம் தனது இளமையின் உச்சத்திலே திளைத்து களித்து நின்றது. குளத்துக்கர செற்றைகளின் அடுப்புகளில் மீன்குழம்புகளைச் சுவையேற்றியே காலத்தைக் கடத்திய புளியமரம் அது. கீழேகிடக்கும் புளிகள் ஜமீன்தாருக்கு வேண்டாம் என்றால், உருக்குலைந்த நிலையில் தரையிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்பது எழுதப்படாத சட்டம். சிதைந்த புளிகளைப் பொறுக்கப் பெரும்போட்டி நடக்கும்.

``முண்டா சீமைல இருந்தியா?’’ திரும்பிப் பார்த்த முண்டன் தன் சிறுவயது தோழன் அப்பி எனப் புரிந்து சிரித்தவாறு ``அப்பிதானே?’’

``மறக்கலியேடே நீ, அது மதி எனக்கு.’’

முண்டனை ஒருவிதக் கலக்கம் ஆட்கொண்டிருந்தது. அவன் மனது எங்கேயோ நிலைகொண்டிருந்தது. ஏதோ ஒரு கேள்வி அவன் உதடுவரை வந்து நின்றது. குழுமி நின்றவர்கள் அவனின் இறுக்கநிலையை கர்வம் என நினைத்துக் கலையத்தொடங்கினார்கள். தாய் தந்தை மற்றும் தங்கைகள் குறித்து அவன் விசாரிக்காமல் இருண்ட முகத்துடன் இருப்பதைக் காணப்பிடிக்காமல் முணுமுணுத்தபடி அவர்கள் அகன்றார்கள். அப்பி அவனருகில் வந்தான். ``முண்டா எங்க இருந்த இத்தின வருசம்?’’

நாற்பதுகளின் இறுதி, ஐம்பதுகளின் ஆரம்பம் அது. இந்தியாவின் சுதந்திரச்செய்திகூட அறியாமல் குடிசைகளில் பசித்தவயிற்றுடன் வறண்ட வாயுடன் குழந்தைகளும், உணவூட்ட அங்கலாய்க்கும் பெற்றோர்களும் தவிக்கும் காலகட்டம். பசிதாங்க முடியாமலும் வறுமையின் சுவை பிடிக்காமலும் வீட்டை விட்டுப் பிஞ்சுகள் பறந்து செல்வது அன்றாட நிகழ்வாயிருந்தது. பறக்கும் பிஞ்சுகளில் சில தேறும், பலர் கடைசிவரை மன ஓவியமாக மட்டுமே. சில வாரங்கள் கவலையைக் காணிக்கை ஆக்கிவிட்டு அந்தக் குடும்பங்கள் பீனிக்ஸ் பறவைபோல் எழாமல் மறுவேளை உணவைத் தேடும் பந்தயத்திற்குத் தயாராகும். அதேபோன்று 1950 டிசம்பர் மூன்றில் குளக்கரையை விட்டு வெளியேறிய பதினைந்து வயதுடைய முண்டனையும் வெகுவிரைவில் மறந்து வயிற்றுப்பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்தார்கள் அனைவரும், அவனின் தாய் வள்ளியைத் தவிர.

ஜமீன்தார் ராமனின் காலனி நாட்டில் அடிமையாக இருந்ததைவிட மதறாஸின் தெருக்களில் பசியுடன் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்தது அவனுக்கு மனநிறைவைத் தந்தது. இரவு உறங்குவதற்கு ரயில்நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள ஸ்காட்டுலேண்டு திருச்சபைக்குச் சொந்தமான ஆண்டூரூஸ் கர்க் ஆலயத்தின் முன்பகுதியைத் தேர்வுசெய்தான். பட்டினியில் மரித்தாலும் ஊர் செல்வதில்லை என்ற அவனின் முரட்டுப் பிடிவாதம் அவனைக் கவலை மறந்து தூங்கச்செய்தது. பெருமழை உணர்த்தாத உறக்கத்தை ஒரு கரம் ``ஹலோ டியர்’’ என்றபடி கலைத்தது. திடுக்கிட்டு விழித்த முண்டன் மழையையும் அருகில் சிரித்தபடி நின்ற வெள்ளைக்காரர் பிரவுணையும் கனவென்றே நினைத்துச் சிரித்தான். அணைத்து அழைத்துச் சென்றார் பிரவுண். குளிரில் நடுங்கியபடி சென்ற முண்டனை பிரவுணின் மனைவி ரேச்சலும் அவர்களின் வளர்ப்புமகன் மத்தாயும் வரவேற்றுத் தழுவிக் கொண்டனர். முண்டனை ஒத்த வயதான மத்தாய், கேரளாவின் வயநாட்டில் பிறந்த அநாதைச் சிறுவன்.

புளியமர நாற்காலி - சிறுகதை

சுதந்திரம் பெற்ற இந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்கள் மூட்டைமுடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வெளியேறும் இலையுதிர்காலம் அது. பிரவுணும் ஊட்டி எஸ்டேட் மற்றும் மாளிகையைக் குறைந்த விலைக்குக் கொடுத்துவிட்டு, சொந்த ஊரான ஸ்காட்லாண்டுக்குக் கிளம்பினார் தத்து புத்திரர்களுடன்.

பத்து வருடங்களாயிற்று ஸ்காட்லாண்டு வந்து, மத்தாய் ஒரு ஸ்காட்டீஸ் பெண்ணைக் காதல் திருமணம் செய்து அபர்டீன் நகருக்குச் சென்றுவிட்டான். வயதான பிரவுண் தம்பதியை கவனிக்கும் நோக்கில் முண்டன் அங்கேயே தங்கிவிட்டான். புதிதாகத் திருமணமான மத்தாயின் காதல் மனைவிக்கு கணவனின் நாட்டைப் பார்க்கவேண்டும் என ஆவல் பிறக்க, அவர்கள் இந்தியா புறப்படத் தயாரானார்கள். முண்டன் சிறிது பணத்தை மத்தாயிடம் கொடுத்து குளக்கரை சென்று தனது பெற்றோரிடம் கொடுக்கச் சொன்னான். வெறுப்பாலும் தீராக்கோபத்தாலும் சுயநலவாதி ஆகிப்போன முண்டனுக்கு, குளக்கரையின் நினைவலைகள் நிரந்தரத் தொந்தரவைக் கொடுத்தன. தன் இரு தங்கைகளுக்கும் தனியாக இரு பரிசுகளையும் கொடுத்தனுப்பி னான்.

மத்தாயின் செய்தி கேட்பதற் காக முண்டன் மட்டுமல்ல, பிரவுண் தம்பதிகளும் ஆவலாய் இருந்தார்கள். மத்தாயின் குளக்கரைச் செய்தி முண்டனையும் பிரவுண் தம்பதிகளையும் அதிர்ச்சியில் உறையச் செய்தது.

``நீ வந்திருக்கலாம்...வேண்டாம்... வேண்டாம்...வந்தாலும் ஒண்ணும் இல்ல. பூத்தகூட இடம் இல்லாம... கடைசில சால்வேசன் ஆர்மிகாரளுக்க இடத்தில பூத்தினம்’’ அழுதவாறே அண்ணன் முண்டனைத் தேற்றினான்.

``இந்த பூமி நம்மளபோலத்த ஆழுவளுக்கில்ல’’ ஜமீன்தாரின் நிலத்தைச் சுட்டிக்காட்டி ``இவன போலத்தவனுவளுக்குத்தான் தம்புரான் எல்லாம் கொடுக்கும்... நல்லா ஜீவிச்சு உறக்கத்திலே மரிச்சுப்போனான். தம்புரான் உண்டெங்கி இவன் புழுத்தில்ல மரிக்கணும். தம்புரானும் இல்ல மண்ணும் இல்ல’’ தலையிலடித்துப் புலம்பினான் அண்ணன்.

முண்டனின் முகம் சிவந்தது ``ராமன் செத்தானா?’’ ஏமாற்றத்துடன் விரக்தியுடன் கேட்டான் முண்டன். முண்டனின் கேள்வி அவன் அண்ணனைக் கொண்டாட வைத்தது ஏதோவகையில். பழிவாங்கமுடியாமல் தவிக்கும் ஒவ்வொருவனும் அந்தத் தருணத்தைப் புரிந்துகொள்வான். ``போன வருசந்தான்... போன வருசந்தான்... நீ எண்ணெங்கிலும் ஒருநாள் வருவ இந்தப் பட்டிய நிறுத்திக் கேள்விகேப்பன்னு நினைச்சுவேன். வேற என்ன செய்யக் கழியும் என்னக் கொண்டு.’’

முண்டன் கோபமடங்காமல் நின்றான். ``இவிய எல்லாம் மரிச்சதறிஞ்ச பெறவு நீ வாரத்ததேன்? நானும் இல்லங்கி நம்ம வம்சமே இருக்காதுன்னு பரதேசி மாதிரி கண்ட இடங்கள்ல சுற்றியோண்டு திரிஞ்சேன்’’ அண்ணனின் கேள்வி முண்டனைக் குற்ற உணர்ச்சி கொள்ளச் செய்தது. கேள்வி நியாயமானது. முண்டன் தலைகுனிந்து நின்றான். முண்டனின் நெஞ்சைக் கையால் ஆவேசமாகத் தள்ளினான் அண்ணன், முண்டன் தடுமாறிப் பின்னால் சென்றான். ``இப்ப என்னத்துக்கு இஞ்ச வந்த... எல்லாரும் மண்ணோடு மண்ணாய் வருசங்க ஆச்சு. ஒனக்க பணமும் பண்டமும் யாருக்கு வேணும்’’ வாயில் வந்தவற்றைக் கொட்டிக் கரைத்தபடி ஆவேசமாகக் குடிசைக்குள் நுழைந்தான். ``அறிஞ்சு பத்து வரியம் கழிஞ்சு வந்திருக்கான்’’ அண்ணனை இருமகள்களும் சாந்தப்படுத்த முயன்றார்கள் குடிசையினுள். குற்ற உணர்ச்சியில் வெந்துருகிக் கொண்டிருந்தான் முண்டன்.

பத்து வருடங்களுக்கு முன்பு குளக்கரைக்கு வந்து கொச்சுசெறுக்கன் குடும்பத்தைக் குறித்து விசாரித்தது அரசாங்க அதிகாரி இல்லை, முண்டன் அனுப்பின மத்தாய் என்பது குளக்கரைக் குடிசைகளில் அண்ணனின் ஆதங்கக் குரலாகவே ஒலித்தது. “ஏன் பத்து வருடம் கழித்து வரவேண்டும்?” அனைவரும் ஒருசேர முண்டனை அர்ச்சித்துத் தீர்த்தார்கள்.

நடு இரவைத் தாண்டியும் உறக்கம் வராத முண்டன் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்தவாறு ஜமீன்தாரின் நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். நடுநிசியில் அந்தப் புளியமரம் சிலிர்த்து அசைந்தது, பார்க்க விரும்பாத அவன் முகத்தைத் திருப்பினான். ஆனாலும் அவனின் மூளை ஒருமுறை பார்க்கத் தூண்டியது. புளியமரம் ராமன் தேகத்தை வடித்தாற்போல் குளக்கரையின் மீது கண்சிமிட்டியபடி நிற்பதைக் கண்டு அருவருப்படைந்தான். அசைந்தாடும் புளியமரம் பட்டுவேட்டி கட்டிய அரக்கன் ஆர்ப்பரித்து நெஞ்சை நிமிர்த்திக் காட்டுவது போலவும், அசைந்தாடும் இலைகள் அவன் மார்பில் நிரப்பிக்கிடந்த மயிர்கள் போலவும் மிரட்டியது அவனை. கட்டிலிலிருந்து எழும்பிய அவன் தனது முதுகைக் கைகளால் வருடிப் பார்த்தான், பார்வையைத் திருப்பியபடி எழும்பி குளத்தை நோக்கியபடி நடக்கத் தொடங்கினான். அப்பி எதிரில் வந்தான் ``முண்டனுக்கு இஞ்ச சவுகரியம் பற்றாது, மெத்தைல கெடந்தோண்டு செற்றைல கெடக்கோக்கு பாடுதென... செரி எனகிட்டெங்கிலும் சொல்லுயேன் நீ வரல?’’

கேரளா பிடித்துப்போன மத்தாயின் வெள்ளைக்கார மனைவி ஒவ்வொரு ஆண்டும் கேரளாவுக்குக் குடும்பமாகச் செல்வதை வழக்கமாக்கினாள். கடைசியாக 1970 டிசம்பரில் கேரளா வந்து திரும்பிய மத்தாய் சொன்ன சில செய்திகள் எடின்பரோவின் கோயின் ஸ்ட்ரீட்டில் வசித்த முண்டனின் உறக்கத்தையும் மனசாட்சியையும் சம்மட்டியைத் தலையருகில் வைத்து அடிப்பது போன்று அடித்துக் கெடுத்தது.

அறுபத்தேழுகளின் மத்தியில் மேற்குவங்கத்தின் நேபாள எல்லை கிராமமான நக்சலில் பற்றவைக்கப்பட்ட அடிமைத்தனத்துக்கெதிரான தீ, கேரளாவின் பச்சை வயல்வெளிகளில் பற்றியெரிந்தது. நக்சல் கிராமவாசிகளின் கோபச்சுடரைக் கேரள கிராமங்களிலும் ஏற்றத் தொடங்கினார்கள். நாடுகள் கடந்து மத்தாய் அந்தச் சுடரை முண்டனின் கைகளுக்கும் மாற்றினான். தன்னிடம் வேலைசெய்த கீழ்ச்சாதி வேலையாட்களை பலாத்காரம் செய்து கொலைசெய்த ஜமீன்தாரை நக்சல்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்துவந்து குற்ற ஏடு வாசித்துத் தலையைத் துண்டாக்கிய சம்பவம் முண்டனைப் பாடாய்ப் படுத்தியது. யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டதற்கு யாரோ ஒருவர் நியாயம்கேட்டு தன் வாழ்க்கையை இழக்கும்போது, தன் குடும்பம் நிர்மூலமாகக் காரணமானவன் நிம்மதியாக ஜமீன் வாழ்க்கை வாழ, தான் எடின்பரோவின் ஆர்தர் மலையின் குளிர் தாலாட்டில் படுத்துறங்குவது நியாயமா என வரிசையாகக் கேள்விகளைத் தன்னுள் அடுக்கினான். தன்னைப் பல வருடங்களாகப் பாடாய்ப்படுத்திய குளக்கரையின் கருங்கனவுகள் புது வண்ணம் பெற்றுத் தோகைகட்டி ஆடி முண்டனைத் திக்குமுக்காடச் செய்தது.

புளியமர நாற்காலி - சிறுகதை

``பேயம்மய ராமன் என்னவோ சேய்யோக்கு போனான்னு அதுகொண்டு வள்ளியக்கா பிள்ளியளயும் கொண்டு கெணற்றில சாடிச்சின்னும்… வேறயும் என்னக்கயெல்லாமோ சொல்லிச்சினும்... போலீஸ் வந்தினும் இஞ்ச. பிறவு ராமன் வீட்ல போய் சாய குடிச்சோண்டு போச்சினும்’’ உடைந்து பேசத் தொடங்கினான் அப்பி. மேற் கொண்டு அப்பி மரணச் செய்திகள் சொல்வதைக் கேட்க விரும்பாதவன் போன்று முண்டன் காணப்பட்டான்.

``செற்றைல கெடக்க நமக்கும் ரோட்லோடி நடக்கபட்டிக்கும் ஒரே நெலமதேன், செத்தா எங்ஙினேங்கிலும் எடுத்து வெட்டி பூத்துவினும்.’

பெருமூச்சு விட்டு நிறுத்திய அப்பி ``நீ வருவ, ராமன என்னங்கிலும் செய்வன்னு சொப்பனம் கண்டன் அந்தச் சமயத்தில... சொப்பனம் மட்டும் தம்புரான் நமக்கு தரலெங்கி என்ன ஜீவிதம் இருக்கு?’’

முண்டன் சற்றுக் கோபமடைந் தான், ``யாரு தம்புரான்? ராமனுக்கும் உனக்கும் ஒரே தம்புரான்னா நீ ஏன் செற்றைலயும் அவன் அரமனைலயும் கெடக்கணும்? உனக்க நெலவிளிய எந்த தம்புரான் கேப்பான்?’’ அப்பி அமைதியானான். அப்பியின் முகத்தை உற்றுப்பார்த்தபடி ``எனக்குத் தெரிஞ்சு நக்சல்கள்தான் தம்புரான்.’’ இருபது வருடங்களில் கடவுள் குறித்து முண்டன் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

``அதில நிக்க புளிமரத்த வாங்க பற்றுமா?’’

முண்டனின் திடீர்க் கேள்வி கேட்டுச் சிரித்தான் அப்பி. ``புளிமரத்த வாண்டி என்ன செய்யப்போற, ராமன் மோன் சுதர்சனுக்குத்தான் எல்லா வஸ்துவும்... அவன் இப்ப திரோந்திரத்தில எப்பளும்... அங்க சினிமாப் படம் எடுக்கானாம். அவனுக்க மொவா அங்க டாக்டருக்குப் படிச்சியாளாம். வஸ்துக்க காரியகாரன் தங்கப்பன். ஒரு சருகூட எடுக்க விடமாட்டான். ஒடயகாரன பொறுக்கலாம், ஒடயகாரனுக்க பட்டிய பொறுக்க பற்றாத்த கத.’’

``அந்தப் புளிமரம் வேணும், என்ன வெல கொடுத்தெங்கிலும்.’’

``தங்கப்பன் ஒரு சுள்ளி ஒடிச்சாகூட விடமாட்டான்’’ நிறுத்திய அப்பி சிரித்தவாறு ``வஸ்துவ சுதர்சனன் விக்க இட்டிருக்கான்னு இந்நாளு சாயாகடைல சொல்லி அறிஞ்சன்.பத்தோம்பது ஏக்கரையும் வாண்டினா புளிமரம் கிட்டும்.’’

``பத்தோம்பது ஏக்கரில்ல, சுதர்சனுக்க தல போனதான் புளிமரம் கிட்டுன்னாலும் நான் ரெடிதான்... வெலய கேளு.’’

தலைசுற்றிய அப்பி ``பத்தோம்பது ஏக்கரையுமா!’’ கண் சொக்கிப்போனான். சிலகணம் அமைதிக்குப் பிறகு சகஜமான அப்பி ``செற்றைலேந்து வாண்டோக்கு தங்கப்பன் விடமாட்டாரு.’’

``வாங்கதுக்கு வேற ஆள் வரும்.’’

முண்டனின் பதிலின் அர்த்தத்தை அப்பி புரிந்துகொண்டான். ``ஒண்ணு கேக்குதன், இந்த வில கொடுத்து புளிமரம் எதுக்கு... உனக்க அப்பன அதில கட்டிவச்சு அடிச்ச கொண்டா?’’ அப்பியின் கேள்வி முண்டனைப் பரிதவிக்க வைத்தது. எந்நாளும் மறக்க நினைக்கும் மலத்தைக் கிளறியதுபோல உணர்ந்தான்.

புளியமர நாற்காலி - சிறுகதை

புளிமரத்தில் கட்டிவைக்கப்பட்ட கொச்சு செறுக்கனின் அலறல் சத்தம் கேட்டு குளக்கரை விழித்தது. தந்தையின் குரலைக் கேட்டுப் பழகிய முண்டனும் அண்ணன் தங்கைகளும் குடிசைக்கு வெளியே வந்தார்கள். தங்கப்பன் ராமனின் இரு அடியாட்களும், கட்டி வைக்கப்பட்டிருந்த கொச்சு செறுக்கன்மீது பெரிய கடி எறும்புகளைக் கொட்டியபடி நின்றார்கள். ராமனின் நிலத்தில் இறங்க அச்சப்பட்டு குளக்கரைவாசிகள் எல்லையிலே பரிதவித்தபடி நின்றார்கள். வள்ளி அழுகின்ற தன் பிள்ளைகளை அரவணைத்தபடி செய்வதறியாது நின்றாள். தங்கப்பன் புளிய மரத்திலிருந்து சற்று முதிர்ச்சியான ஒரு கொம்பை வெட்டி அதன் இலைகளைக் கையால் நீக்கினான். அந்தக் கொம்பு சுமார் பத்துக் கிளைகளைப் பரப்பி ஆக்டோபஸ் மாதிரி அருவருப்பாகக் காணப்பட்டது. ஒவ்வொரு கிளைக்கொம்பும் மனித தசையைக் கிழிக்கும் பெரும் ஆவலில் தங்கப்பன் கைகளில் தறிகெட்டு ஆடியது. முண்டன், ``அம்மா போ... அம்மா போ... அம்மா...அப்பன மீறு கடிச்சிது’’ கெஞ்சினான். பேயம்மாவும் குட்டிப் பெண்ணும் ஓவென அழுதார்கள். குளக்கரைவாசிகள், ‘கொச்சுசெறுக்கன் இதனைத் தவிர்த்திருக்கலாம்’ என்கிற அடிமை அக்கறை மனநிலையில் வேதனைப்பட்டார்கள். கடி எறும்புகள் தங்களது மௌன இரையைக் குதற, கொச்சு செறுக்கன் பெருவிரலைத் தரையில் வைத்து உடலை வலியால் நிமிர்த்தி வில் போல் வளைத்துத் துடித்தான். ``அம்மா போ அம்மா’’ முண்டன் மறுபடியும் அதட்டினான்.

கண்களில் நீர்வடிய ``அம்ம கண்டத்தில எறங்கினா அப்பனுக்கு மயம அடி கொடுப்பினும்’’ வள்ளி ஓவென அழுதாள். பட்டுவேட்டியில் சட்டை அணியாமல் ராமன் நடந்துவந்தான், மார்பில் அடர்ந்த ரோமம் கொண்ட அவன் வெண்கரடி போலக் காணப்பட்டான். தங்கப்பன் கையில் தயாராக வைத்திருந்த புளிகொம்பை பவ்வியமாகக் கொடுக்க அதனை வாங்கிய ராமன் முழுபலத்தையும் செலுத்தி அவனை அடிக்கத் தொடங் கினான். அவனின் அலறல் குளக்கரைக்குப் புதிதல்ல. வள்ளி குழந்தைகளை இழுத்துக்கொண்டு குடிசைக்குள் சென்றாள்.

கொச்சுசெறுக்கனும் ராமனும் களைத்துப் போனார்கள். ``ஏமானே கொச்சுசெறுக்கன் பாவம், அடிச்சது மதி... இனி அடிச்சா மரிச்சுப் போவான்’’ ஒரு குளக்கரை குரல் சன்னமாக ஒலித்தது.

ராமன் சத்தமாக மீசை துடிக்கக் கத்தினான் ``இவிட கழியணம் எந்ந சிந்த உள்ள பட்டிகள் என்ற சொல்படி கேக்கணம். இல்லங்கி இ செற்றகள குளத்தி இட்டு குளத்தின மூடும். என்ற பறம்பிலு கைவச்ச இங்ஙன இரிக்கும்.’’

பாறசாலைக்கு வள்ளியை மணமுடிக்க மாட்டுவண்டியில் புறப்பட்ட கொச்சுசெறுக்கன் தலைதொங்கிக் களையிழந்து சுருங்கிப்போய் இருந்தான். கள்ளிச்செடிக்குச் சேலைபோர்த்தினாலும் வருடி சுகம் காணும் ராமனின் காலடியிலா பால்போன்ற வள்ளியைக் கொண்டு வரவேண்டும் என்று. பூனை குட்டிகளைத் தூக்கிக் கொண்டு இடம் மாறுவதுபோல் வள்ளியுடன் ஊர் ஊராகச் சுற்றி நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி முப்பதைக் கடந்து மூப்பின் வாயலில் நிற்கையில் குளக்கரை வந்தான்.

குளக்கரை திரும்பிய கொச்சுசெறுக்கனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வருடங்கள் பத்து கடந்தாலும் ராமன், வள்ளிமீதான தனது காமவீணையை ஸ்ருதி குறையாமல் வைத்திருந்தான். அடிமைசாசனத்தின் ஷரத்தை மீறி கொச்சுசெறுக்கனுக்கும் வள்ளிக்கும் சில சலுகைகள் கொடுத்தான், நிலத்தில் விரும்பியதை எடுத்துக் கொள்ளலாம் என்பதே அது. இருந்தாலும் மசிய மறுத்த வள்ளியால் கொச்சுசெறுக்கனை சித்ரவதை செய்யத் தொடங்கினான்.

தனக்காக கணவன் அவமானப்படுவதை நினைத்துத் துடித்தாள் வள்ளி. ராமன் மருந்தை மாற்றிக் கொடுக்கலாம் என முடிவு செய்தான். கொச்சுசெறுக்கன் மருந்து வேலை செய்யாது இனிமேல், தன்னைப் பார்த்து ஒரு முறை முறைத்த முண்டனை மருந்தாக்க முடிவெடுத்தான். தடித்த கரடுமுரடான தோலைக் கொண்ட புளியமரம் பிஞ்சு பாலகன் முண்டனைத் தனது கோரக் கரங்களால் கட்டி அணைத்துக் கொடுத்தது, ராமனின் கையில் இருக்கும் நகங்கள் பிறாந்தி பிய்க்க. முண்டனின் விசும்பலின் மூச்சுக்காற்று புளியமரத்தின் அருவருப்பான தோலில் பட்டு முண்டனையே திருப்பித் தாக்கியது. பிடித்து அணைத்து அடிக்கக் கொடுக்கும் அரக்கனாகவே புளியமரம் நின்றது. இம்முறை குளக்கரை சற்றே இறுக்கமாக அழுதுபுரண்டது. வள்ளி எல்லைகடந்து வந்து செல்லமகன் முண்டனுக்காகக் கதறினாள், ``ஏமானே... எனக்க பிள்ளய விடணும். ஐயோ என்னகொண்டு இத பாக்க பற்றாது. ஏமானே ஏமானே விடணும்’’ ராமனின் காலில் விழுந்து புரண்டு கதறினாள். தங்கப்பனும் அடியாட்களும் சிரித்து மகிழ்ந்தார்கள். புளியமரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த முண்டனின் முதுகில் ரத்தம் வடிவதை ரசித்தவாறு. முண்டன்மருந்தை தாமதமாக எடுத்துவிட்டேனே என ராமன் தன்னையே கடிந்துகொண்டான்.

இரவுகளில் வழக்கத்துக்கு மாறாக எழுந்து செல்லும் தாயை ஒரு நாள் பின்தொடர்ந்தான் முண்டன். பட்டு வேட்டியைக் கழுத்தில் சுற்றியபடி புளியமரத்தின் மீது மந்தகாசத்தின் அதிமயக்கத்தில் சாய்ந்து நிற்கும் ராமனின் முன்னால் தன் தாய் அலங்கோல நிலையில் மண்டியிட்டு நிற்கும் காட்சியைக் கண்டான். கண்கலங்கி வேதனையில் தரையில் அமர்ந்த அவனுக்குக் குமட்டியது. பூமிப்பந்தில் தனித்து விட்டதைப்போல் உணர்ந்தான். திரும்பி குடிசைக்குச் செல்ல அவன் குணம் தடுத்தது. பேயம்மாவையும் குட்டிப்பெண்ணையும் ஒருமுறை பார்த்துவிட்டுச் செல்லலாம் என இதயம் கனித்தது. மூளை அவனை ஓடு ஓடு என்று உசுப்பேத்தியது.

அப்பியின் கேள்விக்கு நீண்ட மௌனத்தை பதிலாகக் கொடுத்தான் முண்டன். அப்பி நிறுத்தவில்லை ``புளிமரத்த வாண்டி என்ன செய்யபோற? ஒரு புளிக்கு பத்தொம்பது ஏக்கரா...பணம் மயம இருக்குவெங்கி தொடுவெட்டில பத்துசென்று வாண்டி கட கட்டு’’ புலம்பிய அப்பிக்கு முண்டனின் மௌனம் பிடிபடவில்லை.

மத்தாய் வரவழைக்கப்பட்டு திருவனந்தபுரத்துக்குச் சென்று சுதர்சனிடம் பேசி, பத்தொன்பது ஏக்கரும் வாங்கப்பட்டது. தந்தை சமாதி இருக்கும் பகுதியைக் கேட்கக்கூட மறந்து சினிமா மோகத்தில் திளைத்திருந்தான் அவன்.

புளியமர நாற்காலி - சிறுகதை

புளியமரம் வெட்டப்பட்டது. முண்டன் ஒய்யாரமாக நின்று அதன் வீழ்ச்சியை ரசித்தான். முண்டனின் ஆசைக்கிணங்க தலைசிறந்த மர ஆசாரி விஸ்வனை அப்பி அழைத்து வந்திருந்தான். ``புளியமரத்தில் நாற்காலியா!’’ எனத் தயங்கிய விஸ்வனை முண்டனின் ஸ்டெர்லிங் பவுண்டு வழிக்குக் கொண்டுவந்தது.

குளக்கரைவாசிகளுக்காகக் கழிவறை கட்ட பணியாளர்கள் வந்திருந்தார்கள். பணியாளர்களிடம் ராமனின் வீட்டினருகில் கட்டச் செல்லுமாறு சொன்னான் முண்டன். அப்பி உட்பட அனைவரும் வியப்படைந்தார்கள். ``முண்டா... கக்கூஸ் நம்மளுக்க செற்றைல கெட்டுததுல்ல கொள்ளாம்’’ என்ற அண்ணனை நோக்கிய முண்டன் சிரித்தான்.

``இத்தற நாள் அங்கயும் இஞ்சயும் மனுசன் இல்லாத இடம் தேடி நம்ம போன தூரத்த விட இது குறைவு.’’

அப்பி புரிந்துகொண்டான் முண்டனின் சூட்சமத்தை. ராமனின் சமாதியின் அருகில் கழிவறைக்கான குழி தோண்ட முண்டன் சொன்னபோது பணியாளர்கள் முதலில் தயங்கினார்கள். சமாதியின் வலதுபுறம் கழிவறைக் கட்டட வேலையும் இடதுபுறம் கழிவு தேங்கும் குழி தோண்டும் வேலையும் மும்முரமாக நடைபெற்றன. சமாதியின் அருகில் வைக்கப்பட்டது புத்தம் புதிய புளியமர நாற்காலி, அது ராமன் கைகட்டி கால்களை ஒடுக்கிக் குத்தவைத்து இருப்பதைப் போன்று முண்டனுக்குக் காட்டியது. சிரித்தபடியே காலைத் தூக்கி மேல் வைத்து ஷூ லேஸை அவிழ்த்துக் கட்டினான். மெதுவாக அதில் அமர்ந்தான். புளியமரம் இறுமாப்பை வெளிக்காட்டாமல் பம்மியபடி முண்டனைச் சுமந்தது.

முண்டனின் ஆனந்தம் படர்ந்து அவனை முழுமையாக ஆக்கிரமிக்கும் தருணத்தில், ``தங்கப்பன் வாரான்’’ அப்பியின் குரல் கேட்டுக் கண்விழித்தான் முண்டன். தங்கப்பன் ஆவேசமாக வந்துகொண்டிருந்தான். தூரத்திலிருந்தே ``கொச்சுசெறுக்கனுக்க மோன் முண்டன்தானே நீ. இதுக்குதான் இஞ்சோடி கிடந்து கொறச்சு நாளா கறங்கின. கேட்க ஆளில்லன்னு என்ன வேணங்கிலும் செய்வியா? ஏமானுக்க சமாதி இருக்கது கண்டில்லியா நீ’’ கத்தியபடி வந்தான்.

புளியமர நாற்காலி - சிறுகதை

``கண்டத்துக்க ஒடையகாரன் நான்... நீ யாருவல... ராமன் மோனா?’’

முண்டன் சீற்றத்தைத் தங்கப்பன் எதிர்பார்க்கவில்லை. ``ஒரு மோனுக்கு இதெல்லாம் ஓர்ம இல்ல, சினிமா எடுத்தா மதி. செல்லமா வளத்தின மொவா வெளிநாட்டில கறுப்பன கெட்டி பிராந்தி குடிச்சோண்டு கிடக்கியா... அவளுக்கு இதெல்லாம் பாக்க நேரம் இல்ல. இதில இந்தத் தங்கப்பன் யாரு? இவன் சொல்லேது போல ராமன் பிள்ள எனக்க அப்பனா!’’ வாயில் வைத்துப் புலம்பியபடி கிளம்பத் திரும்பினான்.

சில அடிகள் கடந்த தங்கப்பன், முண்டனின் ``நில்லும் ஓய்’’ என்ற அதட்டலான குரல் கேட்டு நின்று முண்டனைத் திரும்பிப் பார்த்தான். புளிய மர நாற்காலியில் காலின் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த முண்டன் சத்தமாக,ச் சொன்னான்`கொச்சுசெறுக்கனுக்க மோன்தான்... பேரு வில்லியம் வாலஸ்.’’