Published:Updated:

ஒரு ஹெல்மெட்டின் பிறவிப் பயன்! #MyVikatan

வரும் முன் காப்பதின் முக்கியத்துவத்தை முழுவதும் அறியாத நமக்கு ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு இன்றுவரையிலும் கம்மிதான் !

Representational Image
Representational Image

தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை உணர்ந்தவர்களைவிட தலைக்கேசம் கலைந்துவிடும், தலைக்கேசம் உதிர்ந்துவிடும் என்பதான அற்ப காரணங்களுக்காக ஹெல்மெட் அணிவதை தவிர்க்க விரும்புபவர்கள் அதிகம். சாலை விதிகளைக் காற்றில் வீசிவிட்டு எதிரில் வருபவர்களைப் பற்றிய கவலை இல்லாமல் கண்மூடித்தனமாய் வாகனம் ஓட்டுபவர்களை கொண்ட நம் தேசத்தில்தான் தலைக்கவசத்தின் தேவை அத்தியாவசியம்.

``எட்டு போடச் சொன்னால் குட்டு போடுகிறீர்களே!" என்றெல்லாம் வாகனப் பரிசோதனை அதிகாரிகளிடம் குட்டு பட்டு இரண்டு சக்கர வாகன அனுமதி வாங்கி, ஒரு டிவிஎஸ் வாங்கினார் அப்பா! 30 கிலோ மீட்டார் வேகத்தை எந்த அவசரத்துக்காகவும் தாண்டாமல், சாலையின் இடதுபுற ஓரமாய் நூல் பிடித்தது போல அவர் வண்டி ஓட்டும் லாகவம் மிகவும் பிரசித்தம். எங்கள் ஊரின் பிரபல கேங்கான ``ராஜா ரெக்கார்டிங் சென்டர்" செட்டுக்கு நான் முதன்முதலாக அறிமுகமானபோது, என்னையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்த சூசை அண்ணன், ``டேய் ! புதுசா சைக்கிள் கத்துக்கிட்ட அரை டிராயர் கூட ஓவர்டேக் பண்ற வேகத்துல பைக் ஓட்டுவாரே... அவரோட பையன் தானே நீ?" எனச் சட்டெனக் கேட்டார். அதுவரையிலும் என் முப்பாட்டனின் மூலம் வரை விளக்கியும் நான் யார் வீட்டுப் பையன் என்பது புரியாத நண்பர்கள் அனைவரும்"அட அவனா நீயி" எனப் புரிந்துகொண்டார்கள்.

Representational Image
Representational Image

பின்னர் ஒரு முறை தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஒன்று கவனக்குறைவாய் என் அப்பாவின் வண்டிக்கு முன்னால் விழுந்துவிட, அதிர்ந்துபோன என் தந்தையை அதே சூசை அண்ணன்தான் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார்! ``அந்தக் குழந்தையோட அம்மாவே தப்பு அது மேலன்னு திட்டுறாங்க... வண்டியில விழுந்த அந்தக் குழந்தை எழுந்து சிரிச்சிக்கிட்டு ஓடுது! ஆனா ஒங்கப்பா கை கால் நடுங்கி தள்ளாட ஆரம்பிச்சிட்டார்டா!" ராஜா ரெக்கார்டிங் சென்டரின் அந்தி ஜமாவில், நண்பர்களில் ஒருவரை மற்றொருவர் `கழுவிக் கழுவி ஊற்றும்' சடங்கின் போதெல்லாம் என்னை வெறுப்பேற்ற என் தந்தையின் அந்த தைரிய புராணம் பாடப்படும். ராஜீவ் காந்தி அரசால் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்ட காலம்... சட்டத்தைக் கட்டாயமாய் மதிக்கும் என் தந்தை அடுத்த நாளே ஒரு ஹெல்மெட்டை வாங்கி விட்டார். ஆங்கிலப் படங்களில் மட்டுமே ஹெல்மெட் காணக் கிடைத்த அந்தக் காலத்தில், கூகுள் தேடலும் அமேசான் வசதியும் இல்லாத அப்போது, ஒரே நாளில் ஹெல்மெட் வாங்கியது எப்படி என் தந்தைக்குச் சாத்தியமானது என்பது இதுநாள் வரையிலும் எனக்கு ஆச்சர்யம்தான்.

முக மறைப்பு இல்லாத மாடல் அது. வெள்ளை நிறத்தில் கறுப்பு பார்டருடன் பளபளத்த அந்தப் புத்தம் புதிய ஹெல்மெட்டைப் பார்க்க தெருவே கூடியது! எங்கள் ஊரான காரைக்கால் புதுவை யூனியனைச் சேர்ந்தது. என் தந்தையின் கடை இருந்த நாகூர் தமிழ்நாட்டைச் சேர்ந்தது. இரண்டு ஊருக்குமான தூரம் ஏறக்குறைய பதினோரு கிலோ மீட்டர்கள். தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த சட்டம் பாண்டிச்சேரி யூனியனில் இல்லை. ஹெல்மெட் அதற்கான பிரத்யேகப் பையில் வண்டியின் ஹேண்டில் பாரில் தொங்கும். அத்துடன் ஒரு தலை சீவும் சீப்பும்!

Representational Image
Representational Image

நாகூருக்கு ஓரிரு கிலோமீட்டருக்கு முன்னால் தமிழ்நாட்டு எல்லை தொடங்கும் வாஞ்சூரில், பச்சை டியூப் லைட் எரியும் மதுக்கடைகள் நிரம்பிய யூனியன் எல்லையின் சாலையோரமாய் வண்டியை நிறுத்தி தமிழ்நாட்டு சுங்கச்சாவடியைப் பார்ப்பார் அப்பா. அங்கு காவலர்கள் தலை தென்பட்டால் தன் தலையில் கவசத்தை மாட்டிக்கொள்வார். எல்லை தாண்டி நாகூருக்குள் நுழைந்ததும் மீண்டும் தெருவோரமாய் வண்டியை நிறுத்தி, ஹெல்மெட்டைக் கழற்றி சிரத்தையாய்ப் பைக்குள் பத்திரப்படுத்தி மாட்டிவிட்டு, அந்தப் பையிலிருக்கும் சீப்பினால் தலையை வாரிக்கொள்வார் ! இந்த இரு நிகழ்வுகளும் ஒரு பிரத்யேகச் சடங்கின் சிரத்தையுடன் நடக்கும் !

இரவு வீடு திரும்பும் போதும் அப்படியே நடக்கும். நாள்கள் செல்லச் செல்ல சடங்கில் சிரத்தை குறைய தொடங்கி, தனக்கான பிரத்யேகப் பையை இழந்து, அந்த ஹெல்மெட்டே பையாக மாறியது. இரவில் கடை அடைத்துவிட்டு வீடு திரும்பும் அப்பாவின் வண்டியில் தொங்கும் `ஹெல்மெட் பையில்' மாம்பழம், சப்போட்டா என அந்தந்த காலத்துக்கு ஏற்ற பழங்களுடன் மிக்சர், காராப்பூந்தி பொட்டலங்களும் நிறைந்திருக்கும். கட்டாயத் தலைக்கவச சட்டம் ரத்து செய்யப்பட்டபோது கட்சி பேதமின்றி அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தபடி ஹெல்மெட்டை வீட்டின் கூடத்துச் சுவரில் மாட்டிவிட்டார். அன்றுமுதல் குடும்பத்தின் சிறு குழந்தைகள் வீட்டுக்குள் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டி விளையாடும் நேரங்களில் அவர்களின் தலையில் அமர்ந்த நேரம் போக, தின்பண்டங்கள் போட்டுவைக்கவும், சிறு விளையாட்டுப் பொருள்களைச் சேர்த்துவைக்கவுமே பயன்படுத்தப்பட்ட அந்த ஹெல்மெட்டுக்கு ஒரு புத்தம் புதிய பயன்பாட்டைக் கண்டுபிடித்தாள் பாட்டி.

Representational Image
Representational Image

வற்றல், வடாம் காயப்போடும் சமயங்களில் தேங்காய் உரிக்கும் கடப்பாறையின் மேல் அந்த ஹெல்மெட்டை மாட்டிவிடுவாள். வெள்ளை எனாமல் பூச்சு வெயிலில் டாலடிக்க, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் போல கடப்பாறையின் உச்சியில் ஆடும்"ஹெல்மெட் சோளக்கொல்லை பொம்மையை" கண்டு காகங்களும் குருவிகளும் வர அஞ்சின. அதுவும் கொஞ்ச காலம்தான்... ஆபத்திலிருந்து தலையைக் காக்கும் அந்தக் கவசத்தால் தங்கள் தலைகளுக்கு ஆபத்தில்லை என்பதை உணர்ந்துகொண்ட பறவைகளுக்கு பயம் விட்டுப்போனது. விடாகண்ட பாட்டியும் தன் வியூகத்தை மாற்றிக்கொண்டாள். கையில் ஹெல்மெட்டுடன் காவலுக்கு அமர்ந்திருப்பவள் பறவைகள் நெருங்குவதைக் கண்டால் அதை முற்றத்தில் வீசுவாள். சொடேர் என்ற சத்தத்துடன் தரையில் மோதி உருளும் ஹெல்மெட்டுக்கு பயந்து காகங்களும் குருவிகளும் சிதறிப் பறக்கும். இப்படியாக, தின்பண்டங்கள் போட்டு வைக்க, குழந்தைகள் விளையாட, சமயத்தில் பூனை மற்றும் காக்கைகளை விரட்ட எனத் தலை காக்கும் பிறவிப் பயன் தவிர மற்ற அனைத்துக்கும் உபயோகமாகி ஊக்குக் குத்துக்கள் வாங்கிய பம்பரத்தின் தலை போல எனாமல் உதிர்ந்து சொட்டையாகிப்போன அந்தத் தலைக்கவசம், அதன் விதியைப் போலவே பல தலைமுறைகளை தன்கீழ் பாதுகாத்த போதும் சீர்படுத்த யாரும் இல்லாமல் ஓடுகள் உதிர்ந்து, காரை பெயர்ந்து தளர்ந்து நிற்கும் எங்கள் பூர்வீக வீட்டின் ஏதோ ஓர் அறைச் சுவரில் அந்த வீட்டுக்குப் பாதுகாப்பாய் இன்றும் தொங்கிக்கொண்டிருக்கிறது !

-காரை அக்பர்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/