Published:Updated:

அப்பாவின் குரல்! - நெகிழ்ச்சி பகிர்வு #MyVikatan

இப்ப கையில போன் இருந்தும் யார்கிட்டயும் பேச நேரமில்ல. உலகம் சுருங்கிடுச்சி.

Representational Image
Representational Image

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அவன் பேருந்திலிருந்து இறங்கியபோது விடியவேயில்லை. அவன் கிராமத்துக்கு வருவதே பெருநகரத்துக்குப் போனபின் அந்நியமாகிப் போனது. ஏதோ தொடர்பு எல்லைக்கு அப்பால் போனதுபோல் இருந்தது. ஆணிவேர் அறுபட்டுப் போனதாய் உணர்ந்தான். அவர்கள் வாழ்ந்த வீட்டை இடிக்க இன்று ஆட்களை வரச் சொல்லியிருந்தான்.

Representational Image
Representational Image

அருகில்தான் அவன் வீடு. அது பாழடைந்து ஒரு மாமாங்கம் ஆகிறது. மனுசன் பொறப்பவிட அந்த மண்ணு பட்ட அவதி கொஞ்ச நஞ்சமில்ல. மனுசனாவது செத்தா நிம்மதியா மண்ணுக்குள்ள போயிடலாம். ஆனா, இந்த மண்ணு அங்ஙனயே தான இருக்க முடியும். அதுவும் நல்ல மனசுள்ளவங்க, நல்லவங்க கையில மாட்னா பரவாயில்ல. இந்தக் கெட்ட எண்ணம் புடிச்சவங்க கையில மாட்டினா இந்த மனுச பொறப்பு மாதிரியே அந்த மண்ணும் அவஸ்தப்பட்டுதான் ஆகணும்போல.

ஊர்ல சொந்தம்னு சொல்லிக்க நெறைய பேர் இருந்தாலும் இந்த நேரத்துக்கு யார் வீட்டுக்கும் போக முடியாது. கூட பழகுன நண்பர்கள் உள்ளூர்லயே இருந்துட்டாலும் நல்லது கெட்டதுக்கு தகவல் கெடச்சி வந்து போறதோட சரி. அதுவும் வரும்போதே கையோட சுடு தண்ணிய கையில கொண்டு வந்திடறது. காலம் அப்பிடி கெடக்கு. பயணம் பாதி நேரத்த தின்னுடுது.

Representational Image
Representational Image

எப்டியோ அந்தப் புளிய மரத்து பஸ் ஸ்டாப்புலயே உக்காந்திருக்கணும்னு ஆகிப் போச்சு அவனுக்கு. அந்தப் புளிய மரத்துக்கு கீழ எவ்ளோ கத பேசியிருப்போம். அதுவும் அந்தப் பேச்ச இந்த மரமும் கேட்டிருக்குமுல்ல. ச்சே, அது ஒரு காலம். பேச ஆரம்பிச்சா நேரம் போறதே தெரியாது. பேச்சுன்னா அப்டி ஒரு பேச்சு.

இப்ப கையில போன் இருந்தும் யார்கிட்டயும் பேச நேரமில்ல. உலகம் சுருங்கிடுச்சி. மனசெல்லாம் தூரமா போயிடுச்சி. நெறய பேரு பொழப்புக்காக வெளிநாட்டுக்கே போய்ட்டாங்க. போன் பண்ணாலே கடங்கேக்கத்தான் கூப்டாறாங்களோன்னு இருக்கு. இல்லேன்னா கடன் வாங்கிக்கோன்னுதான் கூப்டுறாங்க. அன்பா அனுசரணையா ஒருநாள்ல யாராச்சும் பேசிப்புட்டா அவங்க மேல நமக்கே சந்தேகம் வந்துடுது. மனசு உக்காந்த மேனிக்கு சலிச்சிக்கிச்சு.

Representational Image
Representational Image

அவன் பொறந்தப்பதான் அவனோட அப்பா அந்த வீட்ட கட்ட ஆரம்பிச்சாரு. அதனாலயோ என்னவோ அந்த வீட்டையும் அவனையும் ரொம்பப் பிடிக்கும் அவருக்கு. அவனுக்குப் பெறகு தங்கை தம்பின்னு ரெண்டு பேரு பொறந்தும் என்னமோ இவன்னா அவருக்கு அவ்ளோ கொள்ளப் பிரியம். அப்பா அப்ப கூட்டுறவு பண்டகசாலையில செயலாளரா இருந்தாரு. அதுவுமில்லாம கொஞ்ச நெலத்த போகியத்துக்கு புடிச்சி வெவசாயம் வேற பண்ணிக்கிட்டிருந்தாரு. கமலை இறைக்கறதுலேர்ந்து சேட ஓட்டி நாத்து நடறது வரை எல்லாத்துக்கும் வேலையாள் வச்சிருந்தாரு அப்பா. எப்பவாச்சும் ஏரி தண்ணி காவாயில வந்தா அப்பா மண்வெட்டி புடிச்சி பாத்தி கட்டி மடமாத்தி விடறத அவனே பாத்திருக்கான்.

அம்மா, கழனியில வேல செய்றவங்களுக்கு கஞ்சி காச்சி கொண்டு வந்தாங்கன்னா மதியம் திரும்பப் போக சரியா இருக்கும். அப்போ, அவன் சின்னவனா இருக்குறப்ப வரிசையில உக்காந்து அவனும் ரெண்டு கைய குவிச்சி ஊத்துன கஞ்சிய கீழ ஒழுகவிட்டு குடிச்சிருக்கான். வேலையாளுங்க ரெண்டு கைய குவிச்சி ஒரு விரலிடுக்குல பச்ச மொளகாய புடிச்சி கஞ்சிக்கி தொட்டுக்க கடிக்கிறத பாக்கவே அழகா இருக்கும். இவனுக்கு மட்டும் பக்கத்து கழனி வரப்புல வளந்திருக்கிற தேக்க மரத்து எலய பறிச்சிக்கிட்டு வந்து சிலசமயம் கஞ்சி ஊத்தி கொடுப்பாங்க.

Representational Image
Representational Image

அந்தக் கழனி கெணத்துலதான் அவன் நீச்சல் கத்துக்கிட்டான். அதனால அவனுக்கும் அந்த கழனினா ரொம்பப் பிரியம். அவன் கொஞ்சம் வளர்றதுக்குள்ள பக்கத்து கழனி தேக்க மரத்த வெட்டிக்கிட்டு போய்ட்டாங்க. தங்கச்சி பொறந்ததுக்கப்புறம் அம்மா கழனி பக்கம் வர்றதேயில்ல. சாப்பாடு கொண்டு போக வீட்டுக்கே ஆள் வர ஆரம்பிச்சிடுச்சி. அப்பா கட்டுன புது வீட்ல தான் தங்கச்சியும் தம்பியும் பொறந்தாங்க.

அப்பா அந்தக் காலத்தில் அந்த வீட்டை கட்டியதை ஊரே பெருமையாகப் பேசியது. பெரிய வீட்டுக்குப் பிறகு அப்பாதான் தளம் அமைத்து அந்த வீட்டைக் கட்டினாராம். வசதியில்லாதவர்கள் மண்சுவர் வைத்து வெழல் அமைத்த கூரை வீட்டை கட்டுவார்கள். உள்சுவருக்கு தென்னங்கீத்தை இரண்டடுக்காக வைத்து மறைப்பை ஏற்படுத்துவார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் நாட்டு ஓடுகளை வைத்துதான் கூரை அமைப்பார்கள். அவர்களின் சுவரென்னவோ மண் சுவர்தான். கூரைதான் அவர்களின் பகட்டை வெளிப்படுத்தும்.

Representational Image
Representational Image

பணம் படைத்தவர்களும் பணக்காரர்கள் மட்டுமே தளம் வைத்து வீடு கட்டுவார்கள். அவர்கள் மண்ணுக்குப் பதில் சுண்ணாம்பு பயன்படுத்துவார்கள். அப்பாவுக்கு அந்த ஆண்டு அமோக விளைச்சல் போலிருக்கிறது. அதுவுமில்லாம அப்பா பண்டகசாலை செயலாளரா வேற இருந்ததுனால வீட்ட நல்லா கட்டணும்னு முடிவு பண்ணிட்டார்.

அந்த வீட்டோட கூரையோட தளம் (ரூப்) பாத்தீங்கன்னா தேக்கு மரத்த வச்சி செங்கல்ல பரப்பி சுண்ணாம்பு கலவைய கலந்து கொழச்சி நெருக்கமா அடுக்கி அழகா தளம் போட்டிருந்தார். வெயில் காலத்துல சூடே எறங்காது. அவ்ளோ குளிர்ச்சியா இருக்கும். அத மெட்ராஸ் டெரஸ் ரூப்னு சொல்வாங்க. எப்பவோ ஒருத்தர் அதபத்தி அப்பாகிட்ட கேட்டுக்கிட்டிருந்தார். சுத்து சுவரெல்லாம் சுண்ணாம்பு வச்சி பூசியிருந்தாங்க. பொங்கலுக்கு பொங்கல் வருஷாவருஷம் வீட்டுக்கு வெள்ளையடிச்சிடுவாரு.

Representational Image
Representational Image

புது டிரஸ் போட்ட மேனிக்கு வீடும் பளபளன்னு ஆயிடும். அவங்க‌ சந்தோஷத்துக்கு அளவேயில்ல. ஆனா, அப்பாவ ஊர் ஏசுச்சி. இந்த கிறுக்கன் வீட்ட கட்டினதுக்கு நெலத்த வாங்கியிருந்தா நெலமாவது மிஞ்சியிருக்கும். இந்த வீட்ல இருந்து என்ன வரும்னு திட்டிக்கிட்டே இருந்தாங்க. அப்பா, அத எதயும் காதுல போட்டுக்கவேயில்ல.

ஒருநா, அப்பா கோவமா இருந்தார். அம்மாதான் சமாதானப்படுத்திக்கிட்டிருந்தாங்க. அப்போ அவனுக்கும் கொஞ்சம் வெவரம் புரிய ஆரம்பிச்சிருந்துச்சி. ஆமாம், அப்பாவுக்கு அந்தப் பண்டகசாலை பணம் களவாண்டதுல பங்கிருக்குன்னு குத்தம் சொல்லிட்டாங்க. அப்பாவுக்கு அது எதுவுமே தெரியாது போல. அப்பா செஞ்ச பெரிய தப்பு நீட்டுன எடத்துல கையொப்பம் போட்டதுதான். களவாடாமயா இவ்ளோ பெரிய வீட்ட கட்டியிருப்பான்னு தப்பா பேசிச்சு.

Representational Image
Representational Image

அப்பாவுக்கு அந்த அவமானத்த தாங்கமுடியல. உழச்ச உழைப்ப இப்டி அசிங்கப்படுத்திட்டாங்களேன்னு ஆதங்கம். அதுவும் கூட இருந்தவங்களே தப்பு பண்ணிட்டு பழிய இவர் மேல போட்டுட்டாங்கன்னு பெரிய வருத்தம். அந்தப் பணம் அவருக்கு ஒரு வருஷ உழைப்பு. அதுக்குள்ள போகியத்துக்கு நெலத்த கொடுத்ததும் முடிஞ்சி போயி திரும்பவும் அவங்க கழனிய தரமாட்டோம்னு சொல்லிட்டாங்க. அவரும் எவ்ளோ கெஞ்சி பாத்தாரு. ரெண்டு வருஷமா படாத பாடுபட்டு கழனிய முப்போகம் வெளையற மாதிரி தயார் பண்ணியிருக்கேன். இப்ப போயி தரமாட்டேன்னு சொன்னா எப்படின்னு பேசி பாத்தாரு. அவங்க ஒரே முடிவா தரமுடியாதுன்னுட்டாங்க. அப்பா மொத்த நம்பிக்கையும் வுட்டுட்டாரு.

கொஞ்ச காலத்துக்கு அப்பாவால அந்தப் பிரச்னையிலேர்ந்து மீளவே முடியல. தப்பு எங்க நடந்ததுன்னு அவரால கண்டுபுடிக்க முடியல. கவர்மெண்ட் ஆபீஸருங்க திரும்பத் திரும்ப தலைவர், செயலாளர், பொருளாளர் மத்த உறுப்பினர்கள்னு விசாரணை பண்ணிக்கிட்டே இருந்தாங்க. அதோட அப்பாவும் அந்த பண்டகசாலை குழுவிலேர்ந்து வெளிய வந்துட்டார்.

Representational Image
Representational Image

அதுக்கான தொகை என்னவோ அத கட்டறேன்னு சொல்லிட்டு வந்துட்டாரு. அந்த போகியத்துக்கு குடுத்த பணத்துலேர்ந்து வந்த பணத்துல கட்டிட்டு வெளிய வந்துட்டாரு. இருந்தாலும் அவரால நிம்மதியா இருக்க முடியல. நிரந்தரமான வருமானம்னு எதுவும் இல்ல. அப்ப, பட்டணத்துலேர்ந்து அப்பாவ தேடி ஒருத்தர் வந்தார். செங்கல் கெடைக்குமான்னு கேட்டு வந்தவர் அப்பாவையே செங்கல் சூளை போட சொல்லி ஊக்கப்படுத்தினார். அப்பாவும் அதுக்கான ஆளுங்கள புடிச்சி செங்கல் சூளை போட்டார். கொஞ்சம் தலைநிமிர்றோம்னு தெரிஞ்ச அப்பாவுக்கு திரும்பவும் ஒரு அடி. அது வேற ஒரு ரூபத்துல வந்து நின்னுச்சி.

செங்கல் வாங்குன மனுசன் ஏதோ பிரச்னையால ஊர விட்டு போயிட்டார். பட்டணத்துல எங்க தேடியும் அவர கண்டுபிடிக்க முடியல. அப்பாவுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அம்மா அழ அழ ஆசையா கட்டுன வீட்ட அடமானம் வச்சார். அன்னைக்கு ராத்திரிலாம் அப்பா தூங்கவேயில்ல. ஆனாலும் எல்லாரையும் கொறையில்லாம பாத்துக்கிட்டார். மரவியாபாரம் நல்லா போகுதுன்னு சவுக்கும் தேக்கும் வாங்கி விக்க ஆரம்பிச்சார். அதுல, ஒரு பெரிய தேக்கு தோப்பு வெலைக்கு வர அதையும் கடன் வாங்கி வாங்குனாரு. ஆனா, வாங்குன தேக்குல பாதி மரம் உள்ளுக்குள்ள பட்டு போயிருந்துச்சி.

Representational Image
Representational Image

மொத மொறையா அம்மாவும் அப்பாவும் அந்த வீட்டுல சண்ட போட்டாங்க. போய் கை வக்கிறதெல்லாம் இப்டி பாழாப் போனா என்ன பண்றதுன்னு அம்மா அழ ஆரம்பிச்சாங்க. அனுபவம் மாதிரி பெரிய வாத்தியார் எதுவும் இல்ல இல்லையா. அப்பா, எங்க சறுக்கினோம்னு யோசிக்க ஆரம்பிச்சார். கொஞ்சம் காத்திருக்கவும் செஞ்சார். காலம் ஒரு நா கனிஞ்சது.

அப்பா உழைச்சா மாதிரி அந்தக் கழனியில அதுக்குப் பிறகு வந்தவங்க யாரும் ஒழுங்கா உழைக்கலை. அந்த கழனிக்காரங்களே கேப்பார் பேச்ச கேட்டு உங்களுக்கு தரமாட்டோம்னு சொல்லிட்டோம். நீங்களே உழச்சி காபந்து பண்ணுங்கன்னு கொடுத்திட்டு பட்டணம் போய்ட்டாங்க.

Representational Image
Representational Image

அப்பா, எங்கிட்ட இப்ப குடுக்க காசில்லன்னப்ப, இப்டியே விட்டா மண்ணு வீணாப் போய்டும். அப்றம் யாருக்கும் உபயோகமில்லாம போய்டும். உங்க நெலம தெரியும். உங்களால எப்ப முடியுமோ அப்ப குடுங்க. இல்லன்னா, நல்ல வெளைச்சல் பூமியான்னா ஆக்கிக்குடுங்க அது போதும். உங்க பணம் வந்துதான் எங்களுக்குச் செலவு ஆகணும்னு இல்லன்னு போய்ட்டாங்க. அந்த வகையில அப்பாவுக்கு பரமதிருப்தி. கடவுள் எல்லா கதவையும் அடைக்கலன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டார்.

இதுக்கு நடுவுல அந்தப் பண்டகசாலையில உறுப்பினரா இருந்தவங்க அப்பா எந்த தப்பும் பண்ணல, எல்லாம் தலைவரா இருந்தவர் செஞ்ச வேலைன்னும் அவர் சொல்லிதான் நாங்கள்ளாம் அப்டி நடந்துக்கிட்டோம்னு அப்பாகிட்ட வருத்தம் தெரிவிச்சாங்க. எல்லாம் முடிஞ்சதுக்குப் பின்னாடி வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுதுன்னு அப்பா அத எதயும் பெருசா எடுத்துக்கல. பசங்களும் ஒருவழியா நல்லா படிக்க ஆரம்பிச்சாங்க.

Representational Image
Representational Image

அப்பாவால அந்தக் கழனிய அவ்ளோ லேசுல சரி பண்ணமுடியல. அதுக்கே ஒரு வருஷம் ஆயிடுச்சி. அதுக்குள்ள கடன் அதிகமாக வீட்ட காலி பண்ணச் சொல்லி கடங்குடுத்தவங்க ஒரே அழுத்தத்த கொடுத்திக்கிட்டிருந்தாங்க. அப்பாவால நெலமய சமாளிக்க முடியல. ஒருநா காலையிலயே கடங்காரங்க வீட்ட காலிபண்ணச் சொல்லி சத்தம் போட்டுக்கிட்டிருந்தாங்க. அப்ப, அப்பாவுக்கு தெரிஞ்ச நல்ல மனுஷன் கொஞ்சம் பணம் கொடுத்து ஆறு மாசம் கெடு கேட்டார். அப்பா, அப்டியே இடிஞ்சி போய் அழுதார். ஒருபக்கம் ஊர் ஏசுச்சி. அதே ஊர் இப்ப உதவியும் செய்துன்னு நெனச்சி சந்தோஷப்பட்டார். அதுலேர்ந்து அப்பா வெறித்தனமா உழைச்சார்.

இப்ப நல்லா விடிஞ்சிருந்துச்சி. அவன் அந்த நீச்சல் கத்துக்கிட்ட கெணத்து மேட்ல நின்னுக்கிட்டிருந்தான். இப்ப அந்தக் கழனிய வேற யாரோ வாங்கிட்டிருந்தாங்க. கொஞ்ச நேரம் கழனியவே பாத்துக்கிட்டிருந்தான். இல்லாத அப்பா அங்க சத்தம் போட்டு ஆளுங்கள வெரட்டிக்கிட்டிருக்காப்ல அவனுக்கு தோணுச்சி. நல்லா கெணத்துல குளிச்சி முடிச்சிட்டு கொஞ்ச நேரம் அப்டியே கழனி மேட்லயே உக்காந்து அம்மாவையும் அப்பாவையும் நெனச்சி பாத்துட்டு எந்திரிச்சி நடக்க ஆரம்பிச்சான்.

Representational Image
Representational Image

எல்லாரும் ஊரவிட்டு படிப்புக்காக பட்டணம் போய் அப்டியே வாழ்க்க தெச மாறி எங்கயோ போய்ட்டோம்னு நெனச்சி பாக்கவே அவனுக்கு வியப்பா இருந்துச்சி. வீட்ட யாரும் சரியா பராமரிக்காம அப்டியே வீணா போய்டுச்சி. தம்பியும் தங்கச்சியும் வீட்ட வித்துடுண்ணேன்னு பலமுறை சொல்லியும் கேக்காம இடிச்சிட்டு கட்டுவோம்னு ஒரு எண்ணம் அவனுக்குள்ள வந்துடுச்சி. அதான் இன்னைக்கு நாளும் கெழமையுமா ஆளுங்கள வர சொல்லியிருக்கான்.

அவன் போனபோது ஆளுங்க வந்திட்டிருந்தாங்க. வீட்ட இடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு பூஜ போட்டுடலாம்னு மேஸ்திரி சொல்ல பூஜ சாமான் வாங்க ஆளனுப்ப சொன்னான். வாழ்ந்த வீட்ட ஒரு முறை சுத்தி வரலாம்னு வந்தா அந்த உத்திரத்துக்கு கீழ ஒரு குருவி கூடு கட்டிருந்துச்சி. காலையிலதான் குஞ்சி பொறிச்சிருக்கும்போல. இவன பாத்தவுடனே கத்த ஆரம்பிச்சிடுச்சி. மனசு ஏதோ பண்ண கொஞ்ச நேரம் அப்டியே அதையே பாத்துக்கிட்டிருந்தான். இப்டி தானே இந்த வீட்ல உசுரா தம்பியும் தங்கச்சியும் பொறந்திருப்பாங்க. அப்டிதானே இந்த குருவியும். வாழாத வீடுன்னு நாமளா எப்டி முடிவு பண்றோம். அப்ப இவ்ளோ நாள் இந்தக் குருவிதான இந்த வீட்டுக்குள்ள குடியிருந்திருக்கு. மனசு வீட்ட இடிக்க போறியாடான்னு கேள்வி கேக்க அப்பா எதிர்ல நின்னு ஏக்கமா பாக்குறா மாதிரி இருந்துச்சி.

Representational Image
Representational Image

ஐயா பூஜ சாமான் வந்துடுச்சி மேஸ்திரி சொல்ல, கண்கள் கலங்க ``வேண்டாம் மேஸ்திரி, வீட்ட இப்ப இடிக்க வேணாம். வீட்ல குருவி ஒன்னு குஞ்சு பொறிச்சிருக்கு. அது பெருசாயி பறக்கட்டும் அப்புறம் பாக்கலாம்னு" சொல்லும்போதே அந்த மேஸ்திரிக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சி.

``அத வேணா பாதுகாப்பா ஒரு எடத்துல," சொல்ல வாயெடுக்கும்போதே இடைமறித்து இந்த எடத்த சுத்தம் பண்ணி வாங்கி வந்த பூஜ சாமான வச்சி பூஜ மட்டும் போடுங்க. அது போதும். இந்தாங்க உங்க கூலி. இடிக்கறப்ப உங்கள கட்டாயம் கூப்புடறேன். போதுமா. இப்ப வேணாம். விட்ருங்க. சுத்தம் செய்து பூஜை போட்டு அவர்கள் போய்விட்டார்கள்.

Representational Image
Representational Image

கட்டாந்தரையில் கால் நீட்டி அசதியோடு கொஞ்சம் படுத்தவன் அப்படியே உறங்கிப்போனான். அப்பாவின் குரல் சுவரெங்கும் எதிரொலித்தது. அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது அந்தக் குருவி கத்தியதுபோல் இருந்தது. அப்பா அவனை மடிமீது கிடத்தி அவன் தலைகோதி தடவிக்கொண்டிருந்தார். அவன் நீண்ட நாளைக்குப் பிறகு நிம்மதியாக உறங்கிப்போனான். அந்தக் குருவி அவன் உறங்குவதையே கண்கொட்டாமல் சத்தம் எழுப்பாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

-ம. செ.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/