Published:Updated:

கி.ரா.நினைவலைகள்: "சபையால் புறக்கணிக்கப்பட்டவன் நான். எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லை!"

கி.ராஜநாராயணன்

உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த கி.ரா, நேற்று காலமாகிவிட்டார். அவரது உடல் இன்று மதியம் புதுவையிலிருந்து அவரது சொந்த ஊரான இடைசெவலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

கி.ரா.நினைவலைகள்: "சபையால் புறக்கணிக்கப்பட்டவன் நான். எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லை!"

உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த கி.ரா, நேற்று காலமாகிவிட்டார். அவரது உடல் இன்று மதியம் புதுவையிலிருந்து அவரது சொந்த ஊரான இடைசெவலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

Published:Updated:
கி.ராஜநாராயணன்
"எனக்கு ஒரே ஒரு ஆசை... எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்... நல்ல உழைப்பாளி... ஆரோக்கியமான உடம்பு... வயது தொண்ணூறை நெருங்குது... ஒருநாள் இரவு கட்டில்ல அசந்து தூங்கிக்கிட்டிருந்தாரு. வழக்கமா காலையில நாலு மணிக்கெல்லாம் எழுந்து நடக்க ஆரம்பிச்சிருவாரு... ஆனா அன்னிக்கு இன்னும் எழுந்திருக்கலே. சரி, வேலை அலுப்பா இருக்கும்ன்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க. நல்லா விடிஞ்சிருச்சு, அப்பவும் எழுந்திருக்கலே. விடிஞ்சு பாத்தா கட்டையா விரைச்சுட்டார். கைகளை எல்லாம் கஷ்டப்பட்டுத்தான் பிரிக்க வேண்டியிருந்துச்சு. எல்லாரும் சொன்னாங்க... 'எப்பேர்ப்பட்ட சாவு... நமக்கும் இப்படியாகணும்... இப்படியாகணும்'ன்னு நினைக்கிறாங்க. நானும் நினைச்சுக்கிட்டிருக்கேன்... நமக்கும் அப்படியொன்னு வரணும்..."

மூன்றாண்டுகளுக்கு முன்பு ஜனவரி மாதப் நற்பகலொன்றில் கி.ரா-வைச் சந்தித்தப்போது வழக்கம்போல கண்களை சிமிட்டிக்கொண்டே அவர் சொன்ன வார்த்தைகள் இவை. அந்தச் சந்திப்பில் கி.ரா மரணம் பற்றியே நிறைய பேசினார். கரிசல் மண்ணில் நடத்தப்படும் மரண சடங்குகள், ஒப்பாரி பற்றியெல்லாம் சொன்னார். கி.ரா எங்கு தொடங்கினாலும் மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் கொண்டு முடிப்பார். அவற்றில் அவருக்கு அவ்வளவு லயிப்பு.

கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தாண்டு ஜனவரியில் மீண்டும் கி.ராவை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. உடன், இளவேனிலும், புகைப்படக் கலைஞர் குருஸ்தனமும் இருந்தார்கள். உள்ளறையில், மெல்லிய குளிர் கசிந்த ஓர் அறையில் படுத்திருந்தார் கி.ரா. நாகஸ்வர இசை, ரெக்காார்டரில் ஓடிக்கொண்டிருந்தது. படுக்கையை மேலேற்றி கொஞ்சம் வசதியாக அமர்ந்துகொண்டு, "அண்டரெண்ட பட்சி படிச்சீயளா?" என்றார். "அது எல்லாருக்கும் வாசிக்க வேண்டிய புத்தகம்... அதனாலதான் அதை அச்சுக்குக்கொண்டு போகாம கையெழுத்தாவே விட்டேன்... கமலஹாசன் கூட அதைப் படிச்சுட்டுப் பேசியிருக்காராமே" என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தச் சந்திப்பில் கி.ரா, மக்கள் சந்தித்த பேரிடர்கள் பற்றி விரிவாகப் பேசினார். கணவதி அம்மா மறைந்தபிறகு, மனதளவில் பெரிதாக முடங்கிப்போனார் கி.ரா. மகன்கள், இளவேனில், படைப்பாளிகளென அவர் இல்லம் தினம் பத்து மனிதர்களால் நிரம்பியிருந்தாலும் அவரென்னவோ வெறுமையாகத்தான் இருந்தார்.

"கி.ராவிடம் இன்னும் சொல்லப்படாத கதைகள் இருக்கா?" என்று கேட்டேன்.

முகம் பார்த்து பளீரென சிரித்து சொன்னார்... “இருக்குமுல்லா... இருக்கத்தானே செய்யும். எல்லாத்தையும் சொல்லி முடிக்க முடியாதே. சொல்லமுடியாதபடி எவ்வளவு விஷயங்கள் இருக்கு. எந்தக் காலத்துக்குச் சொல்லி முடிய! மனசுக்குள்ள இன்னும் நெறைய கதைகள் கிடக்கே..."

முதியோர்களை குறிவைத்து வதைத்த கொரோனா முதல் அலைக் காலத்தை இசைகொண்டுதான் கடந்தார் கி.ரா. “இசை தெரிஞ்சவனுக்குத் தனிமை கிடையாது. சங்கீதம் துணைக்கிருக்கும்" என்றார். தாது வருடப் பஞ்சத்தோடு கொரோனா பேரிடர் காலத்தை ஒப்பிட்ட கி.ரா, அக்காலத்தில் மக்கள் பட்ட அவஸ்தைகளையெல்லாம் சோகம் ததும்ப பகிர்ந்தார். "அதோடல்லாம் ஒப்பிடும்போது கொரோனால்லாம் ஒண்ணுமே இல்லை" என்றார்.

கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன்

அந்த சின்ன அறைக்குள் படுத்துக்கொண்டு தன் கடந்த காலங்களையெல்லாம் பரிசீலித்துக்கொண்டேயிருந்தார் கி.ரா. தன் அரசியல் நிலைப்பாடுகள், தான் வாழ்ந்த வாழ்க்கை, எழுதிய எழுத்து பற்றியெல்லாம் சுய விமர்சனம் செய்துகொண்டேயிருந்தார். வாழ்க்கையில் அவருக்கு பரிபூரணம் இருந்தது. அரசியல் பற்றி பெரும் சலிப்பு இருந்தது. இடதுசாரி இயக்கங்களின் போக்கு குறித்து விமர்சனம் இருந்தது. அதை வெளிப்படுத்தவும் அவர் தயங்கவில்லை. அதுதானே ஓர் உண்மையான இடதுசாரியின் தகுதி!

"மனுஷனோட வாழ்க்கையை யார் மதிப்பீடு பண்ண முடியும். அப்படி மதிப்பீடு பண்ணிட்டா சொல்லவே விஷயமிருக்காதே... மனுஷ வாழ்க்கை மட்டுமில்ல... எதையுமே மதிப்பீடு பண்ணமுடியாது. ஒரு விஷயத்தை மதிப்பீடு பண்ணி முடிச்சு வச்சிருப்போம். எவனாவது ஒருத்தன் வந்து அது தப்புன்னு சொல்லுவான். இன்னொருத்தன் வந்து அவன் சொன்னதையும் மறுப்பான். எது நிஜம் எது பொய்யுன்னு எளிதா கண்டுபிடிக்க முடியாது... வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதுதான்..."

வாழ்க்கையைப்பற்றி இதுதான் அவர் மதிப்பீடு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கி.ராவின் அருகில் அமர்ந்து கதை கேட்பது அவ்வளவு சுகம். அனுபவித்து, சிலாகித்து, சிரித்து அந்தக் காட்சிகளை அவர் விவரிக்கும்போது சொக்கிப்போவோம். வெற்றிலை மாற்றுவது பற்றி சொன்னார். "நல்ல கொழுந்து வெத்திலை... சரி விகிதத்துல பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடணும். நல்லா செக்கச் சிவப்பா மாறும்போது ஒரு சுகந்தமான வாசனை வரும். அந்த நேரத்துல ஆணோ, பெண்ணோ தாய்ப்பறவை குஞ்சுக்கு ஊட்டுறமாதிரி மென்னுக்கிட்டிருக்கிற வெத்திலையை நுனி நாக்கால ஊட்டிக்குவாக... அதெல்லாம் தனி சுகம்யா..."

கி.ராவின் கண்கள் சொருக, முகத்தில் அத்தனை ஒளி!

நிறைய எழுதிக் குவித்துவிட்டார் கி.ரா. இறுதியாக வெளிவந்த 'மிச்சக்கதைகள்', அவர் எழுதி, கழித்து வைத்திருந்தவை. ஆனால், இன்னும் நிறைய கதைகள் அவரிடமிருந்தன. தன்னைச் சந்திக்க வரும் மனிதர்களிடம் அந்தக் கதைகளை சொல்லிக்கொண்டேயிருந்தார். 'லாயல் மில்' நடராஜனின் அப்பா நடத்திய 'ஒரு சொல் ஜவுளிக்கடை' பற்றிய கதையை கி.ராவின் குரலிலேயே கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன்

"நம்முடைய ஆட்கள் ஒரு துண்டு வாங்குறதுக்கு நாலு பேரைக்கூட்டிக்கிட்டு வருவாங்க... ஆளுக்கொரு விலையாச் சொல்லி பேரம் பேசுவாங்க. இனிமே அப்படியெல்லாம் செய்யக்கூடாது. நாங்க சொல்ற விலைதான். பேரமே பேசக்கூடாது. அதனாலேயே அந்தக்கடைக்கு ஒரு சொல் ஜவுளிக்கடைன்னு பேரு வந்திருச்சு" என்றார் கி.ரா.

நடராஜனின் அம்மா பெயரும் மனைவி பெயரும் 'சன்னவுட்டி' என்றான ரகசியத்தையும் சிரிக்கச் சிரிக்கப் பகிர்ந்துகொண்டார். நடராஜனின் அப்பா அய்யாசாமிப் பிள்ளை, தன் மனைவியை 'சின்னக்குட்டி', 'சின்னக்குட்டி' என்று அழைக்க, அது ஒரு கட்டத்தில் 'சன்னவுட்டி' என்றாகி எல்லாரும் அழைக்கும் பெயரானது. நடராஜனும் தன் மனைவியை 'சின்னக்குட்டி' என்று அழைக்க அந்தப் பெண்மணிக்கும் 'சன்னவுட்டி' பெயராகிவிட்டது. இரவு வேலை முடித்து வீட்டுக்கு வரும் இருவரும் கதவைத் தட்டி 'சன்னவுட்டி', 'சன்னவுட்டி' என்று அழைக்கும்போது பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் குழப்பமாகப் பார்ப்பார்களாம். இதுபற்றி நடராஜனுக்கும் கி.ராவுக்கும் நடந்த உரையாடலை கி.ரா சொல்லக்கேட்டு அமர்ந்திருந்த அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

"வழக்கமா கதையில நான் கொஞ்சம் உப்பு சேப்பேன்... அதைக்கேட்டு எழுதும்போது நீங்க கொஞ்சம் உப்பு சேப்பீங்க... அந்த உப்புதான் மனுஷ வாழ்க்கை" என்றார் கி.ரா. "ஆயிரம் கதை சொல்றவன்கிட்ட ஏதாவது கதைசொல்லுன்னு கேட்டா என்ன கதை சொல்லன்னுதான் கேப்பான். ஆயிரம் கதை அவனுக்குத் தெரியும்லா... ஏதாவது ஒரு கதையைச் சொல்லலாம்லா... ஆனா அவனால சொல்ல முடியாது. அவனோட வாழ்க்கையே கதையா இருக்கும்போது எந்தக் கதையைச் சொல்வான்..." என்று கேட்டு கூர்ந்து முகம் பார்த்தார்.

கி.ராவுக்கு நிறைய ஆதங்கங்கள் இருந்தன. தன்னை சபையால் புறக்கணிக்கப்பட்டவனாகவே இறுதிவரை கருதியிருந்தார். கேரள மக்கள் தகழியைக் கொண்டாடுவது போல, பஷீரைக் கொண்டாடுவது போல தமிழ்ச்சமூகம் கி.ராவை கொண்டாடவில்லை என்பது உண்மை. தமிழுக்கு மகா கொடைகளைத் தந்த மாபெரும் படைப்பாளி சக மனிதனைப்போல தன் வயோதிகத்தை பாண்டிச்சேரி அரசு அலுவலர் குடியிருப்பில் கழித்துவிட்டுப் போயிருக்கிறார்.
கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன்

"மனுஷனுக்கு வயோதிகம் ஆக ஆக வெளியில இருக்கிற ஆட்கள்கிட்ட மதிப்பு கூடிக்கிட்டே போகும்... உள்ளே இருக்கிற ஆள்களுக்குப் பிடிக்காமப் போயிடும்" என்று கி.ரா சொன்னபோது இதயம் நடுங்கித்தான் போனது. வயோதிகம் எல்லோருக்கும் ஒரேமாதிரியான அனுபவத்தைத்தான் தருகிறது.

விருதுகள் மீதும் கி.ராவுக்கு நம்பிக்கை போய்விட்டது.

"ஒரு விருதை உண்டாக்குபவர்களே அதை யாருக்குக் கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணிடுறாங்க. அதையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. டால்ஸ்டாய் என்ன விருது வாங்கினார்? ஆனா இமயம் மாதிரி நிக்குறார். எனக்கு விருது பற்றிய கவலையெல்லாம் இல்லை. யாரையும், சிபாரிசு பண்ணுங்கன்னும் சொல்லமாட்டேன். 'அய்யோ கி.ராவுக்குக் கொடுக்காம போனோமே'ன்னு பின்னால வருத்தப்பட்டுக்கட்டும். ஆரம்பத்திலிருந்தே சபையால் புறக்கணிக்கப்பட்டவன் நான். எந்த எதிர்பார்ப்புமில்லை." என்றார் கி.ரா.

காலம் போன கடைசியில் தமிழக அரசு உ.வே.சா விருது தந்து தன் கடமையைக் கழித்திருக்கிறது.

உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த கி.ரா, நேற்று காலமாகிவிட்டார். அவரது உடல் இன்று மதியம் புதுவையிலிருந்து அவரது சொந்த ஊரான இடைசெவலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

சமீபத்தில் சந்தித்தபோது, கி.ராவிடம் கேட்டேன்... “இடைசெவலுக்கு அண்மையில போனீங்களா?"

முகம் இறுகிப்போனது கி.ராவுக்கு.

கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன்

“நேத்து ஒருத்தர் வந்தார். ‘இடைசெவல் போனேன். என்னா செழிப்பு, அடேயப்பா...’ன்னு சிலாகிச்சார். நான் சொன்னேன்... அது இடைசெவலோட ஒரு முகம். மழைக்காலத்து முகம். மஞ்சள் குளிச்சுட்டு ஈரத்தோட வந்து நிக்கிற குமரி மாதிரி இருக்கும். பாத்துக்கிட்டே இருக்கலாம். கோடையில நேரெதிர். வெக்கைக் காத்தடிக்கும். மனுஷனுக்கு மனுஷன் புன்னகையோட பாக்கமாட்டான். கொடுமையா இருக்கும். கொஞ்சநாளைக்கு முன்னால பையன்களுக்கு சொத்து பிரிச்சுக்கொடுக்க அங்கே போனேன். ‘இனிமே எக்காரணம் கொண்டும் இடைசெவல் வரமாட்டேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். எனக்குப் பிரியமான பெண்கள் அங்கே இல்லை. பிரியமான நண்பர்களும் இல்லை. எல்லாரும் போய்ச் சேந்துட்டாங்க. வீடுக எல்லாம் காலியாருக்கு. நான் எங்கே போறது..." - கண்கள் கலங்கின.

கி.ரா இப்போது அங்கேதான் போகப்போகிறார். அவருக்குப் பிரியமான மண்ணில் அவருக்குப் பிரியமான நண்பர்கள், பெண்களின் ஜீவன் கலந்த அந்த வெளியில் கலக்கப்போகிறார்!

படங்கள்: புதுவை இளவேனில்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism