Published:Updated:

பன்முகப் படைப்பாளி பரணீதரன்!

பரணீதரன்
பிரீமியம் ஸ்டோரி
News
பரணீதரன்

கார்ட்டூனிஸ்டாக இருந்ததாலோ என்னவோ அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் ஸ்ரீதர்.

சென்ற வெள்ளிக்கிழமையன்று தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்ட பரணீதரன், ஆனந்த விகடனில் சுமார் முப்பது ஆண்டுகள் பணியாற்றி அதன் இணை ஆசிரியராக ஓய்வுபெற்றவர்.

“நான் எழுதுவதெல்லாம் அச்சில் ஏறிவிடும் என்ற நினைப்பில் இல்லாமல், எழுதியதெல்லாம் அச்சுக்குச் சென்றுவிடுமே என்ற ஒரு வித பயத்தில்தான் செயல்பட்டு வந்தேன்...” என்று தன்னுடைய நூல் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் பரணீதரன். அந்த அளவு கடமையுணர்ச்சி யுடனும், பொறுப்புடனும் செயல்பட்டவர் அவர்.

காஞ்சி மகா பெரியவரிடம் அளவு கடந்த பக்தியும் அணுக்கமும் விகடன் நிறுவனர் எஸ்.எஸ்.வாசனிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘பெரியவா...’ என்று பேச்செடுத்தால் அந்த மகானிடம் தனக்கு ஏற்பட்ட அபூர்வ அனுபவங்களை, கண்கள் கலங்க, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விவரிப்பார். காஞ்சிப் பெரியவரின் அனுமதியுடனும், ஆசியுடனும்தான் விகடனில் தன்னுடைய ஆன்மிகக் கட்டுரைகளை எழுதிவந்தார். தனது உடல்நிலை பாதிக்கப்பட்டாலும், கூட்டுக் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டாலும், பரணீதரன் தஞ்சமடைந்தது பரமாச்சாரியாரிடம்தான். நடமாடும் தெய்வமாகப் போற்றப்பட்ட அந்தத் துறவியின் அன்பும் அருளும்தான் அவர் வாழ்க்கையை வழிநடத்திச் சென்றது என்பது நிதர்சனமான உண்மை.

பன்முகப் படைப்பாளி பரணீதரன்!

‘Boss...’ என்று ஆரம்பித்தாலே பத்திரிகைத்துறையில் தனக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த விகடன் நிறுவனரிடம் தான் பாடம் கற்றது பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார். தான் வரைந்த கார்ட்டூன்களையும், எழுதிய தலையங்கக் கட்டுரைகளையும் Boss செப்பனிட்டுக் கொடுத்த சம்பவங்களை விவரிக்கும் போது அந்த மாணவனின் குரல் தழுதழுக்கும். நிறுவனரின் மறைவுக்குப் பிறகு அவரின் மகன், ஆசிரியர்

எஸ்.பாலசுப்ரமணியனிடமும் பரஸ்பர அன்பும், மதிப்பும் கொண்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுதேசமித்திரன் நாளிதழில், வீட்டில் செல்லமாக அழைத்த ‘சீலி’ என்ற பெயரில் ஜோக்குகள் எழுதிவந்தவர், ஒரு கட்டத்தில் ரிசர்வ் வங்கியிலிருந்து பணி நியமனக் கடிதம் வந்தும் அதைத் தவிர்த்துவிட்டு விகடனுடன் இணைந்து ஐக்கியமானவர். பன்முகம் கொண்டவராக அவரது விகடன் பயணம் தொடர்ந்தது. நகைச்சுவைத் துணுக்குகள் மற்றும் கார்ட்டூன்களுக்கு ஸ்ரீதராக, ஆன்மிகக் கட்டுரைகளுக்கு பரணீதரனாக, குடும்ப நாடகங்களுக்கு மெரீனாவாகச் சிறகு விரித்தார் அவர்.

விகடனில் வெளியான தனிக்குடித்தனம், ஊர்வம்பு, கால்கட்டு போன்ற நாடகங்கள் மேடையேறியபோது அநேகமாக அனைத்துத் தரப்பும் அவற்றை ரசிக்கவே செய்தது! அவரது கஸ்தூரிபா காந்தியின் வாழ்க்கைக் கதை இன்னொரு மைல்கல்.

பரணீதரனாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மூலை முடுக்கு கிராமங்களுக்கெல்லாம் பயணித்து, அங்கிருந்த கோயில்களுக்கெல்லாம் சென்று அவற்றின் தல வரலாறுகளைச் சுவைபட எழுதியது அவரின் சாதனை. இன்றளவும் காசி யாத்திரை செல்பவர்களுக்கு பரணீதரனின் பயணக் கட்டுரைகளே வழிகாட்டி. அதேமாதிரி, சீர்டி சாயிபாபா, பகவான் ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் என்று மகான்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகள் வாசகர்கள் பலரை மெய்சிலிர்க்க வைத்தன.

பன்முகப் படைப்பாளி பரணீதரன்!

கார்ட்டூனிஸ்டாக இருந்ததாலோ என்னவோ அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் ஸ்ரீதர். காமராஜரிடம் நிரம்ப மதிப்பு கொண்டிருந்தார். அவருடனேயே பயணிப்பார். கூட்டங்களுக்குச் செல்வார். கட்சியில் உறுப்பினர் அட்டை மட்டும்தான் வாங்கிக் கொள்ளவில்லை. ஸ்ரீதரின் அரசியல் கார்ட்டூன்கள் ஒரு சில பெரும் சர்ச்சைக்கு உள்ளானதும் உண்டு. பெரியார், ராஜாஜி, அண்ணாதுரை உள்ளிட்டவர்களை இவர் கேரிகேச்சர்களாக வரையும்போது அவை தத்ரூபமாக இருக்கும்!

பரணீதரனின் தந்தை தமிழறிஞர் ‘கலாநிலையம்’ டி.என்.சேஷாசலம். உடன் பிறந்தவர்கள் 12 பேர். குடும்பச் சூழல் காரணமாக இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

சிறுவயதில் விஷமக்கார கண்ணனாக இருந்திருக்கிறார். அக்கம் பக்கத்து வீடுகளில் சமையலறைக்குள் புகுந்து கிடைத்ததை எடுத்து வாயில் போட்டுக்கொள்வார். பம்பரம் விடுவார். கோலி விளையாடுவார். போகப் போக, காத்தாடி விடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. விகடனில் பணியிலிருந்த சமயத்தில், வார விடுமுறை நாள்களில் கண்ணாடிகளைத் துண்டுகளாக்கி அரைத்து, நூலுக்கு ‘மாஞ்சா’ போட்டு, மொட்டை மாடிக்குச் சென்று பட்டம் விடுவதை நான் பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன். ‘அவரா இவர்?’ என்று வியப்பேன்.

கடைசி சில வருடங்களில் முதுமைக்குள் புகுந்ததும் பரணீதரனின் பர்சனாலிட்டியே மாறியது. மற்றவர்களிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். கட்டிலோடு கட்டிலாகப் படுத்திருந்தார். தன்னைச் சந்திக்க வருபவர்களை அடையாளம் தெரிந்த மாதிரியே காண்பித்துக்கொள்ள மாட்டார். எதிரில் போட்டோவில் மகா பெரியவா ஆசி வழங்கிக்கொண்டிருக்க, அவரை மட்டுமே துணையாகக் கொண்டு ஒரு ஞானிபோல் வாழ்ந்து 94 வயதில் மறைந்தார்!