Published:Updated:

மரபும் நவீனமும் இணையும் எழுத்து... புதுக்கவிதை பிதாமகர் ந. பிச்சமூர்த்தியின் பிறந்தநாள் பகிர்வு!

ந. பிச்சமூர்த்தி
ந. பிச்சமூர்த்தி

ந. பிச்சமூர்த்தி மரபை மட்டும் கொண்டாடும் படைப்பாளியல்ல அவர் நவீன மொழியின் புதுமையையும் பொருளின் இனிமையையும் தன்னகத்தே கொண்டவர்.

ஒருமுறை ரமண மகரிஷியைச் சுற்றி பக்தர்கள் பலர் கூடியிருந்தனர். அவர்களில் இளைஞராக இருந்த ஒருவர், ``என்னைப் போல் திருமண வாழ்வில் சிக்கியவர்களுக்கு விடுதலை பெறும்வழி என்ன?” என்று கேட்டார். அதைக் கேட்ட ரமண மகரிஷி சிரித்துக்கொண்டே, ``பழம் பழுத்தால் தானே விழுந்துவிடும்” என்று பதில் சொன்னார். அந்தக் கேள்வியைக் கேட்ட இளைஞர் ந. பிச்சமூர்த்தி. தமிழ்ப் புதுக்கவிதைகளின் பிதாமகர் என்று போற்றப்படுபவர். பெரும்பாலானவர்கள் ந. பிச்சமூர்த்தியின் தத்துவத் தேடலை விளக்க இந்த நிகழ்வை உதாரணமாகச் சொல்வதுண்டு. அது ஓரளவில் உண்மையும் கூட. தாகூர் போன்ற தாடி வைத்த அவரின் தோற்றம், மரபின் மீது கொண்டிருந்த அசாத்திய நம்பிக்கை ஆகியன அந்தக் கருத்துக்குக் கொஞ்சம் வலுவும் சேர்த்தன. ஆனால், ந. பிச்சமூர்த்தி மரபை மட்டும் கொண்டாடும் படைப்பாளியல்ல அவர் நவீன மொழியின் புதுமையையும் பொருளின் இனிமையையும் தன்னகத்தே கொண்டவர்.

பிச்சமூர்த்தி
பிச்சமூர்த்தி

பாரதிக்குப்பின் தமிழ்க் கவிதை உலகம் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. பல்வேறு கவியாளுமைகளும் தமிழ்க்கவிதை உலகை அணி செய்தனர். அவர்களில் முக்கியமானவர் ந. பிச்சமூர்த்தி. பாரதியின் வசன கவிதையையும் வால்ட் விட்மனின் கவிதைகளையும் தன் முன்னோடியாகக் கொண்டு புதுக்கவிதை என்னும் புதிய வகைமையைத் தொடங்கி வைத்தார்.

ந. பிச்சமூர்த்தி, 15.8.1900-ம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் நடேச தீட்சிதர். நடேச தீட்சிதரின் தந்தையும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரும் சமகாலத்தவர்கள்.

ந. பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் இளங்கலை தத்துவமும், பின் சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டப்படிப்பும் படித்தார். ஆனாலும் அவர் மனம் அந்தத் துறையில் செல்லவில்லை. வழக்கறிஞர் பயிற்சியை விட்டுவிட்டு சில காலம் அறநிலையத்துறையிலும் பணியாற்றினார். கலைச் சார்பு கொண்ட அவர் மனம் இலக்கியங்கள் படிப்பதிலும் படைப்புகளைச் செய்வதிலும் ஈடுபட விரும்பியது. 1930-ம் ஆண்டு தன் முதல் படைப்போடு இலக்கிய உலகில் அடியெடுத்துவைத்தார்.

புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன்

மணிக்கொடி எழுத்தாளர்களில் ந. பிச்சமூர்த்தியின் இடம் குறிப்பிடத்தக்கது. கவிதை, சிறுகதை, நாடகம் என அவர் பல்வேறு இலக்கிய வகைமைகளிலும் தன் ஆளுமையை நிறுவியவர். இவரது கவிதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாலோ என்னவோ இவரின் பிற படைப்பு வகைமைகள் பெரிதும் கொண்டாடப்படவில்லை. குறிப்பாகச் சிறுகதைகளில் ந. பிச்சமூர்த்தியின் தாக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கது. புதுமைப்பித்தன் எழுதிய காலகட்டத்தில் இயங்கியவர் என்பதால் இவரின் கதைகளோடு அவரின் கதைகளை ஒப்பிடத் தோன்றுவதும் தவிர்க்க முடியாதது. இருவரும் ஒரே தலைப்பிலான பல கதைகளையும் எழுதியிருக்க, இரண்டும் சில ஒற்றுமைகளோடும் கருத்தியல் அடிப்படையில் சில விலகல்களோடும் தமிழ் சிறுகதை உலகிற்கு வளம் சேர்த்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாழ்க்கை சார்ந்த இயல்பான பார்வையே ந.பி யின் கவிதைகள். இயற்கையை அதன் அழகை, அதன் ஒழுங்கைப் பாடிவந்தாலும், சமகால வாழ்க்கையையும் அவர் பாடத் தவறவில்லை. இவரின் கிளிக்கூண்டு, காட்டுவாத்து, வழித்துணை, பெட்டிக்கடை நாராயணன் ஆகிய கவிதைகள் மிகவும் புகழ்பெற்றவை.

வாழ்க்கை மீதான விமர்சனங்கள், புலம்பலகள் ஏதுமின்றி அவற்றை நம்பிக்கையோடும் அதே நேரம் யதார்த்தத்தோடும் அணுகியவர் ந. பி. அதற்கு ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளே சாட்சி. கலை கலைக்காகவே என்று சொல்லும் ந. பி யின் இலக்கியக் கொள்கை என்றபோதும் அவர் படைப்புகளின் அடிநாதமாக விளங்குவது மானுடம் சார்ந்த மகத்தான நம்பிக்கை

ந. பிச்சமூத்தியின் நான்கு பெண்கள்
ந. பிச்சமூத்தியின் நான்கு பெண்கள்

`ஜீவா விழியை உயர்த்து / சூழ்வின் இருள் என்ன செய்யும்? / அமுதத்தை நம்பு ஒளியை நாடு’ என்னும் அவரின் கவிதை வரிகளை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதுபோன்ற காத்திரமான பல கவிதைவரிகளுக்குச் சொந்தக்காரர் ந. பிச்சமூர்த்தி.

ந. பிச்சமூர்த்திக்கு நான்கு மகள்கள். தற்போது அவர்களில் இருவர் காலமாகிவிட்ட நிலையில் மற்ற இருவர் சென்னையில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவரான மீனாட்சி பாலசுப்பிரமணியனிடம் பேசினோம்.

``எங்கள் அப்பா வாழ்ந்த காலத்தில் அவர் ஏதோ கதைகள், கவிதைகள் எழுதுகிறார் என்றுதான் புரிந்துவைத்திருந்தோமே தவிர அவர் ஒரு காலத்தின் மகத்தான கலைஞன் என்பதைப் போகப் போகத்தான் புரிந்துகொண்டோம். அப்பாவைக் காண வீட்டிற்கு தமிழ் நவீன இலக்கியவாதிகள் பெரும்பாலும் அனைவரும் வந்துபோயிருக்கிறார்கள். அவர் படைப்புகளைப் படிக்கும்போது ஏற்படும் பிரமிப்பு மிகவும் அற்புதமானது. இன்றைய இளம் தலைமுறையினரிடமும் அவர் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்னும் எங்கள் ஆசை தற்போது நனவாகிக்கொண்டுவருகிறது. தற்போது அவரின் கவிதைகள் பள்ளிக்கல்வியிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் புதுக்கவிதையில் கால்பதிக்க விரும்புகிறவர்கள் எப்படி பாரதியை வாசிக்காமல் முன்னகர முடியாதோ அதேபோல ந. பிச்சமூர்த்தியை வாசிக்காமலும் கடந்துவிட முடியாது. தமிழ்க் கவிதை உள்ளவரை நினைவுகூரப்பட வேண்டியவர் அவர் என்பதில் எங்களுக்குப் பெருமையே. ” என்றார் மீனாட்சி பால சுப்பிரமணியன்.

ந. பிச்சமூர்த்தி குறித்து இலக்கிய விமர்சகர் கல்யாணராமனிடம் கேட்டோம்.

``தொட்ட வார்த்தையில் தங்கத்தைத் தேக்கித் தொடாத தந்தியில் ஒலியை எழுப்பிச் சிறியோர்கள் வார்த்தையைப் போற்றிய நூதனக் கவி ந.பிச்சமூர்த்தி. தம் அறச்சீற்றத்தாலும் எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் எழுத்தாளர்களுக்கு த. ஜெயகாந்தன் அங்கீகாரம் பெற்றுத் தந்ததைப் போலவே தம் தோற்றத்தாலும் கவிதையாலும் மௌனத்தாலும் தமிழ்க் கவிஞர்களுக்கு ஒரு பெருமிதமான அடையாளம் தேடித்தந்தவர் ந.பிச்சமூர்த்தி. பாரதியின் மீசை மட்டுமா? ந.பிச்சமூர்த்தியின் தாடியும் தமிழுக்கு அபூர்வமானதுதான். பாரம்பரியத்தையும் நவீனத்தையும் அதனதனளவில் உட்செரித்துக்கொண்டு புதிய விடியலுக்குத் திசைகாட்டியவர் என்பதாலேயே, ந.பிச்சமூர்த்தி பெரும் முக்கியத்துவம் பெறுகிறார். மண்ணில் விழுதுவிட்டுப் பார்ப்பவர் கண்களை நிறைத்து விண்ணை அளாவி நிற்க விரியும் மேன்மையின் ஆலமரம் அவர்.

கல்யாணராமன்
கல்யாணராமன்

வானத்திலும் தெரியும் மண்ணின் ஒளிவெள்ளத்தையும், மனிதனின் மனநிழல்களையும் சொற்களில் ஒருசேரப் பிடிக்கத் துடித்தவர். பல்லாயிரமாண்டுக் கூட்டுச் சமூக நனவிலியின் நங்கூரத் தொன்மம் ந.பிச்சமூர்த்தி. ந.பி.யை நினைவுகூர்வது என்பது, நல்லுணர்வுகளின் எண்ணப் பிரவாகமாக நீந்தும் பரப்பு இழுவிசையையும் சவ்வூடுபரவலையும் அயல்மகரந்தச்சேர்க்கையையும் வாரித்தழுவி மெய்சிலிர்க்கும் பேரனுபவமாகும். ஒளிக்கனி தாங்கும் கொம்பையும் உணர்ச்சிகளின் கிணற்றையும் பிணைத்தெழுதி, `சூழ்வின் இருள் என்ன செய்யும்?' எனக் கேட்டார். `ஒன்றுபட்டால் ஓய்வு உண்டாகும்' என்றும், `பிரிவினையின் இன்பம் இணையற்றது' என்றும், `கேட்பது அல்ல காதல்; தருவதுதான்' என்றும், `உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி' என்றும் அறிவுறுத்தினார். பிருமத்தின் இடத்தில் இயற்கையை வைத்த பச்சை வேதாந்தப் பிக்ஷுவின் புதுப்பரிதி; காவிரிப்படுகை முக்குளித்தான் பறவை ந.பிச்சமூர்த்தி” என்றார் கல்யாணராமன்.

இன்று ந. பிச்சமூர்த்தியின் பிறந்த தினம். அவரின் படைப்புகளை வாசிக்கும் தருணமாக இதைக் கொண்டாடுவோம்

அடுத்த கட்டுரைக்கு