Published:Updated:

31 வருட உழைப்பில் உருவான வரலாற்று புத்தகம்! - சென்னை புத்தகத் திருவிழா பரிந்துரைகள் #MyVikatan

வரலாற்று புத்தகம்
வரலாற்று புத்தகம்

சிந்து சமவெளி நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றே என்பதை நிறுவும் தன் ஆராய்ச்சி முடிவுகளை 17 கட்டுரைகள் மூலம் இந்த நூலில் பதித்திருக்கிறார் பாலகிருஷ்ணன்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய `ஒரு நாகரிகத்தின் பயணம் - சிந்து சமவெளியில் இருந்து வைகை வரை' (Journey of a civilization - Indus to Vaigai) என்ற நூல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

சிந்து சமவெளி
சிந்து சமவெளி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஹரப்பா - மொகஞ்சதாரோ நகரங்கள், அதுவரை இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு குறித்து இருந்த கருத்துகளை தவிடுபொடி ஆக்கியது. இந்த நகரங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு வேத காலமே இந்தியாவின் பண்டைய காலமாகக் கருதப்பட்டது. ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்கள், ஆரியர்கள் வருவதற்கு முன்பாகவே இந்தியத் துணைக்கண்டத்தில் மிக உன்னதமான, மிகப்பெரிய கலாசாரம் விளங்கி வந்ததை உறுதி செய்தன.

சிந்து சமவெளி நாகரிகம் கி.மு 3300-ம் ஆண்டு முதல் கி.மு 1900-ம் ஆண்டு வரை நீடித்தது. இது பண்டைய எகிப்து மற்றும் மெசபடோமிய நாகரிகங்களின் காலமாகும். சிந்து நாகரிகம் 12 லட்சத்து 50,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வாழ்ந்த நாகரிகம். ஹரப்பா, மொகஞ்சதாரோ, தோலோவீரா, கனேரிவாலா, ராக்கி ஹாரி ஆகிய ஐந்து நகரங்களையும் ஏறக்குறைய ஆயிரம் ஊர்களையும் கொண்ட மிகப்பெரிய நாகரிகம். மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் அந்தக் காலகட்டத்தில், உலகத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இவற்றின் மக்கள் தொகை 50,000 அல்லது 60,000 இருந்திருக்கலாம். சிந்து சமவெளி நாகரிகம் 50 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

இத்தகைய மிகப்பெரிய நாகரிகம் மொத்தமாக அழிந்து இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியானால் இந்த மக்கள் என்ன ஆனார்கள்? இவர்கள் எங்கு சென்றார்கள்? இந்திய நாட்டின் பூர்வகுடிகள் யார்? என்பன போன்ற கேள்விகள் சென்ற ஒரு நூற்றாண்டாக தொல்லியல் ஆய்வாளர்களையும், வரலாற்று ஆசிரியர்களையும் குடைந்துகொண்டிருந்தது.

இந்தக் கேள்விகளுக்கான மிக முக்கியமான விடையாக, ராக்கிகாரி நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மரபணுப் பரிசோதனை முடிவுகள் கிடைத்தன. இந்த மரபணுக்கள், திராவிட வம்சாவளி மக்களின் மரபணுக்களோடு மிகவும் ஒத்துப் போவதையும், ஆரிய வம்சாவளி மக்களின் மரபணுக்களோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருப்பதையும் ஆய்வுகள் உறுதி செய்தன.

 சிந்து சமவெளி நாகரிகம்
சிந்து சமவெளி நாகரிகம்

இது சிந்துசமவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்ற சிந்தனைக்கு அடித்தளமிட்டது. ஆனால், சிந்து சமவெளி நாகரிகத்தின் காலகட்டத்துக்கும், இதுவரை கிடைத்திருக்கிற வரலாற்று ஆய்வுகளின்படியான தமிழ்ச் சமூகக் காலகட்டத்துக்கும் 1300 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது. சிந்து வெளிக்கும், வைகை கரைக்கும் 1400 கிலோ மீட்டர் இடைவெளி இருக்கிறது.

இந்த கால, தூர இடைவெளிகளை இணைத்தால், எந்தவிதச் சந்தேகமும் இன்றி தமிழ் மக்கள், சிந்துவெளி நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் என்று அறுதியிட்டுக் கூறிவிட முடியும்.

இந்த இடைவெளிகளை இணைக்கும் முக்கியப் புள்ளிகளை தொகுக்கும் அரிய நூல்தான் Journey of a civilization Indus to Vaigai. பாலகிருஷ்ணனின் 30 ஆண்டுகள் கால உழைப்பின் வியர்வையை ஒவ்வொரு பக்கத்திலும் காணமுடிகிறது. ஏராளமான மேற்கோள்களைக் காட்டுகிறார். சிந்து சமவெளி மக்களின் எழுத்துகளின் பொருள் இன்னமும் கண்டறியப்படவில்லை. எனவே, அந்த மக்கள் பயணித்திருக்கக்கூடிய தடங்களையும், அந்த தடங்களில் அவர்கள் பதித்திருக்கும் கலாசார, பண்பாட்டு, மொழி எச்சங்களையும் சான்றுகளாகக் காட்டி, இந்த இரு கலாசாரங்களையும் ஒன்று என நிறுவுகிறார் பாலகிருஷ்ணன்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

சிந்து சமவெளி நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றே என்பதை நிறுவும் தன் ஆராய்ச்சி முடிவுகளை 17 கட்டுரைகள் மூலம் இந்த நூலில் பதித்திருக்கிறார் பாலகிருஷ்ணன். தமிழ் மொழியில் இளங்கலைப் படிப்பையும், முதுகலைப் படிப்பையும் படித்து, தமிழிலேயே இந்திய ஆட்சிப் பணித் துறை தேர்வையும் எழுதி வெற்றி கண்ட இந்தத் தமிழர், சங்க இலக்கியங்களில் காணப்படும் சான்றுகளைத் தொகுத்திருக்கிறார். `எலும்பு தின்னும் ஒட்டகத்தை' வைகைக் கரையில் வாழ்ந்த, பாலைவனங்களைக் காணாத தமிழன் விவரித்தது எப்படி என வினவுகிறார். `ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' எந்த ஆரியப் படையைக் கடந்தான் என நம்மை சிந்திக்க வைக்கிறார்.

கறுப்பு, சிவப்பு மட்பாண்டங்கள் செய்யும் முறை எப்படி கீழடியில் இருந்து சிந்து சமவெளி வரை ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதை விவரித்திருக்கிறார்.

கொற்கை - வஞ்சி - தொண்டி நகரங்களின் பெயர்கள் எப்படி சிந்து சமவெளிப் பகுதிகளில் இன்றும் விளங்குகிறது என்ற அரிய செய்தியையும், திராவிடச் சமூகம் பயணித்த பாதை நெடுகிலும் பழந்தமிழ்ப் பெயர்கள் மீண்டும், மீண்டும் வருவதையும் சான்றுகளாக எடுத்துரைக்கிறார்.

தமிழ்க் குடியின் பெரும் சமூகங்களான கொங்கு வேளாளர்கள் வாழ்வியலிலும், நகரத்தார் வாழ்வியலிலும் காணப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தின் எச்சங்களை நமக்குப் புரியவைக்கிறார். காங்கேயம் காளைக்கும், சிந்து வெளி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த லட்சினைகளில் காணப்படும் காளைக்கும் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டுகிறார். கொங்கு சமூகம் மகாராஷ்டிரம் வழியாக வந்திருக்க கூடும் என்பதற்கான ஆதாரங்களை அடுக்குகிறார். நகரத்தாரின் வாழ்விடமான பள்ளத்தூர் நகரத்துக்கும், சிந்து சமவெளி நகரங்களுக்கும் உள்ள அமைப்பு ஒற்றுமைகளை காட்டும்போது வியக்கிறோம்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

தாய் வழிபாடு, சிந்து சமவெளி சிலைகளில் காணப்படும் ஆபரணங்கள், குறிப்பாக காலில் அணியும் தண்டை ஆகியவற்றில் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும், தமிழர் நாகரிகத்துக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிடுகிறார்.

வன்னி மரத்திலிருந்து பிறந்தவர்கள் வன்னியர்கள் என்ற தொன்மம் விளங்குகிறது. சிந்து சமவெளி லட்சினைகளில் ஒன்று வன்னிமரத்தின் அடியில் பெண் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. இந்த நூலில் வன்னி மரத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்புகள் ஆணித்தரமாக காட்டப்படுகின்றன. வன்னிமரத்தை வாழ்வின் ஆதாரமாக தமிழர்களும், நம் தொப்புள் கொடி உறவுகளான சிந்து சமவெளி மக்களும் கருதி இருக்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும்விட ஜல்லிக்கட்டு நடத்திய சமூகம் சிந்து சமவெளி நாகரிகம் என்பது நம்மை சிலிர்க்க வைக்கிறது. நம்மைப் போலவே தாயம் விளையாடியவர்கள் அவர்கள் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது அல்லவா?

தமிழ் கூறும் நல்லுலகில், தொல்லியல் என்பது வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் அல்லது ஆர்வலர்களுக்கான விஷயம் என்பது மாறி, பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள், அரசியல்வாதிகள் ஆகிய அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் விஷயமாக மாறி இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் கீழடி அகழ்வாராய்ச்சிகள். தமிழ்ச் சமூகம் வேளாண் சார்ந்த பழங்குடிச் சமூகமே என்றும், இது முன்னேறிய சமூகமாக இருக்கவில்லை என்றும் இழித்தும், பழித்தும் கூறியவர்கள் முகத்தில் கரியைப் பூசி, தமிழ்ச் சமூகம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிக வளர்ச்சி அடைந்திருந்த சமூகம் என்பதை கீழடி நிரூபித்தது. அதைவிட முக்கியமாக சிந்து சமவெளி நாகரிகத்துக்கும், வைகை நாகரிகமான கால இடைவெளியை இன்னும் சுருக்கியது கீழடி.

கீழடி
கீழடி

ஆம்! நமக்கு மிகப் பெரிய வரலாறு உண்டு. நாம் மனிதநேயப் பண்பாட்டுப் பாரம்பர்யம் கொண்டவர்கள். சாதி, மத அடையாளங்கள் இல்லாமல் மகிழ்ச்சியோடு, சமத்துவ வாழ்க்கை வாழ்ந்தவர்கள். தாயை வழிபட்டவர்கள்.

ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய Journey of a civilization - Indus to Vaigai தொல்லியல் ஆய்வாளர்களுக்கும், வரலாற்று அறிஞர்களுக்குமான நூல் மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழன் வீட்டிலும், திருக்குறள் போன்று இருக்க வேண்டிய நூல். இந்த ஆய்வு நூல், ஆய்வு மாணவன் அல்லாத, ஆராய்ச்சியாளர் அல்லாத ஒருவனும் படிக்கும் வகையில் அற்புதமான, எளிய ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.

நீங்கள் ஆங்கிலம் எளிதாக படிக்க முடியாதவராக இருக்கலாம். ஆனால் வாங்கி வையுங்கள். உங்கள் மகனும், மகளும் படிக்கட்டும்.

புத்தகத் திருவிழாவுக்கு வரும் பள்ளித் தாளாளர்கள், கல்லூரி முதல்வர்கள், வரலாற்று ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இந்த நூலை வாங்க வேண்டும். இதன் விலை ரூபாய் 3,000. இந்த நூல் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்குச் செல்லும் என பாலகிருஷ்ணன் அறிவித்திருக்கிறார்.

-மருத்துவர் இரா. செந்தில்

(தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

பின் செல்ல