Published:Updated:

`என் வீடு, என் கணவன், என் குழந்தை’ - மீண்டும் மேடையேறிய கோமல் சுவாமிநாதனின் கிளாசிக் நாடகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘என் வீடு, என் கணவன், என் குழந்தை’
‘என் வீடு, என் கணவன், என் குழந்தை’

‘கிளாசிக்’ நாடகம் ஒன்றை மீண்டும் இன்றைக்கு மேடையேற்றுவதில் உள்ள சவால்களை இந்தக் குழுவினர் மிக எளிதாகக் கடந்திருக்கின்றனர்; ஆனால், இதற்குப் பின்னால் உள்ள உழைப்பு அபாரமானது.

தமிழ்க் கலை, இலக்கிய உலகில் கோமல் சுவாமிநாதன் ஒரு தனித்துவமான நிகழ்வு. பத்திரிகையாளர், மேடை நாடகப் படைப்பாளி, சினிமா கதையாரிசிரியர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட கோமல், இத்துறைகளுக்கு முக்கியமான பங்களிப்புகளை வழங்கியிருக்கிறார்.

1935-ல் காரைக்குடியில் பிறந்த சுவாமிநாதன், மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். 1950-களின் தொடக்க ஆண்டுகளில் காங்கிரஸ் பொதுக்கூட்ட மேடைகளில் பேசத் தொடங்கிய சுவாமிநாதன், தன்னுடைய பேச்சாற்றலால் ‘கோடையிடிக் கோமல்’ என்ற பட்டம் பெற்றார்.

கோமல் சுவாமிநாதன்
கோமல் சுவாமிநாதன்
அந்தக் காலகட்டத்தில் சென்னை மேடை நாடகங்களின் மையமாக விளங்கியது. கோமல் சுவாமிநாதனுக்கும் மேடை நாடகங்களில் மேல் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. அவர் பல நாடகங்களுக்குச் சென்று நாடக நுணுக்கங்களைப் பயின்றார். கேரள பீப்பிள் ஆர்ட் சென்டர் நடத்திய நாடகங்கள், நாடகத்துறை சார்ந்த புதிய திறப்புகளை கோமலுக்கு வழங்கின. இதன் மூலம் யதார்த்த நாடகங்களை எப்படி எழுதுவது என்பதை கோமல் கற்றுக் கொண்டார். தனது நாடகங்களையும் அவ்வாறே எழுத வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் கல்வி நிலையத்தில் கோமல் சேர்ந்தார். நாடகத்துக்கு வசனம் எழுதுவது பற்றிய நுணுக்கங்களைச் சகஸ்ரநாமம், பி.எஸ். ராமையா, என்.வி. ராஜாமணி, கலாசாகரம் ராஜகோபால் ஆகியோரிடமிருந்து கற்றுக் கொண்ட கோமல், நாடகப் பயிற்சியை முடித்துவிட்டு சேவா ஸ்டேஜ் குழுவிலேயே பணியாற்றத் தொடங்கினார். சேவா ஸ்டேஜுக்காகப் ‘புதிய பாதை', ‘மின்னல் கோலம்', ‘தில்லை நாயகம்’ ஆகிய நாடகங்களைக் கோமல் எழுதினார்.

நாடகம்
நாடகம்

சேவா ஸ்டேஜின் முதன்மை மாணவராகத் தேறிய கோமல், அதன் ஆசிரியர் சகஸ்ரநாமத்தின் ஊக்கத்தால், 1971-ம் ஆண்டு ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ் என்ற பெயரில் சொந்த நாடகக் குழுவைத் தொடங்கினார்; சேவா ஸ்டேஜிலிருந்து நிறைய நடிகர்கள் கோமலின் நாடகக் குழுவில் இடம்பெற்றனர். ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸின் முதல் நாடகம் ‘சன்னிதித் தெரு’ அந்த ஆண்டு ஜனவரி 23 அன்று முதன்முதலாக மேடையேறியது.

ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ்
ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ்
ஊருக்காக ஆடும் கலைஞன்..! - ரெட்டியாரூர் நாடக சபா நினைவுகள்  #MyVikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நகைச்சுவை மற்றும் குடும்ப நாடகங்களைக் கோமல் எழுதினார். ‘நவாப் நாற்காலி’, ‘ஜீஸஸ் வருவார்’, ‘பெருமாளே சாட்சி’, ‘கோடு இல்லாக் கோலங்கள்’, ‘மந்திரி குமாரி’, ‘பட்டணம் பறிபோகிறது', ‘வாழ்வின் வாசல்', ‘யுத்த காண்டம்’ எனப் பல நாடகங்களை எழுதி மேடையேற்றினார் கோமல்.

கோமலின் நாடகங்கள் தொடர்ந்து வேற்றுமொழிகளுக்குச் சென்றன; திரைப்படங்களாகவும் உருப்பெற்று, மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. அவற்றில், ‘தண்ணீர்... தண்ணீர்...’ நாடகம் முக்கியமான ஒன்று. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இதன் திரைவடிவம், 1981-ல் தேசிய விருது பெற்றது.

அத்திப்பட்டி, அந்த `ரஜினி' போட்டோ, `செவந்தி' சரிதா... கே.பாலசந்தரின் `தண்ணீர் தண்ணீர்’ சீக்ரெட்ஸ்!
‘தண்ணீர்... தண்ணீர்...' திரைப்படம்
‘தண்ணீர்... தண்ணீர்...' திரைப்படம்
இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘நள்ளிரவில் பெற்றோம்’, ‘ஒரு இந்தியக் கனவு’, ‘கிராம ராஜ்ஜியம்’ போன்ற முக்கியமான நாடகங்களை எழுதி, அரங்கேற்றினார் கோமல்; கோமல் எழுதிய 33 நாடகங்களில், 27 நாடகங்கள் ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் குழுவினரால் மேடையில் நிகழ்த்தப்பட்டன.
“நாடகத்தின் அடிப்படை சாராம்சம் பாதிக்கப்படாமல் உள்ளடகத்திலும் உத்தியிலும் பல பரிசோதனைகளைச் செய்து புதிய பரிமாணம் படைத்தவர்,” என்று கோமலின் நாடகங்களை எழுத்தாளர் ‘சிட்டி' பெ.கோ. சுந்தர்ராஜன் மதிப்பிடுகிறார்.

இந்தப் பின்னணியில் தான், நடிகை மனோரமாவுக்காக நாடகம் ஒன்றை எழுதினார் கோமல். ‘என் வீடு, என் கணவன், என் குழந்தை’ என்ற அந்த நாடகம், அக்காலகட்டத்தின் தமிழ் பிராமணக் குடும்பம் ஒன்றைப் பின்னணியாகக் கொண்டு, அன்னபூரணி என்ற கதாப்பாத்திரத்தை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. அன்னபூரணியாக மனோரமா பாத்திரமேற்க, கம்பர் ஜெயராமன் அவருக்குக் கணவராக நடிக்க 1984-ல் முதன்முறையாக இந்த நாடகம் மேடையேறியது.

மனோரமா நடித்த ‘என் வீடு, என் கணவன், என் குழந்தை’
மனோரமா நடித்த ‘என் வீடு, என் கணவன், என் குழந்தை’

சமூகச் சீர்திருத்தக் கருத்துகள், மனோரமாவின் அசாத்தியமான நடிப்பு என இந்தியா முழுவதும் 300 முறைக்கு மேல் மேடையேற்றப்பட்டு கோமலின் நாடகங்களில் தனித்துவமான இடத்தைப் பிடித்தது ‘என் வீடு, என் கணவன், என் குழந்தை’. மேடை நாடகமாகவே மிகப் பெரிய புகழ்பெற்றுவிட்ட இது, தொலைக்காட்சி ஒளிபரப்புக்காகப் பிரத்யேகமாகப் படம்பிடிக்கப்பட்டு, 1985-ம் ஆண்டு தீபாவளியின்போது தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பப்பட்டு பார்வையாளர்களின் நினைவில் ஆழமாகத் தங்கியுள்ளது.

‘கிளாசிக்’ அந்தஸ்தைப் பெற்றுவிட்ட இந்த நாடகம், 37 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் மேடையேறியிருக்கிறது. கோமல் சுவாமிநாதனின் ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் நாடக் குழு தொடங்கப்பட்ட 50-ம் ஆண்டு இது. இதைக் கொண்டாடும் வகையில், அவருடைய மகள் தாரிணி கோமல், முக்கிய முன்னெடுப்பு ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். தன் தந்தையின் நினைவாக, அவர் பெயரால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாரிணி தொடங்கி நடத்திவரும் கோமல் தியேட்டர் மூலம், கோமலின் முக்கியமான நாடகங்களை அதன் உண்மையான வடிவிலேயே இயக்கி, மேடையேற்றும் செயல்பாட்டில் அவர் ஈடுபட்டுள்ளார்.

தாரிணி கோமல்
தாரிணி கோமல்

அந்த வகையில், கோமலின் மிக முக்கியமான நாடகமான ‘என் வீடு, என் கணவன், என் குழந்தை’ இப்போது மீண்டும் மேடையேறி பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த தலைமுறையினருக்குத் தங்கள் நினைவுகளை நோக்கியப் பயணமாகவும், இளம் தலைமுறையினருக்கு அவர்கள் அறிந்திராத உலகம் பற்றிய ஒரு வெளிச்சமாகவும் இந்த நாடகம் இப்போது மேடையேறியிருக்கிறது.

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவின் உதவியோடு அக்டோபர் 1 அன்று நாரத கான சபா, அக்டோபர் 2 பிரம்ம கான சபா மற்றும் பார்த்தசாரதி சுவாமி சபா, அக்டோபர் 3 மீண்டும் நாரத கான சபாவில் மேடையேறிய, ‘என் வீடு, என் கணவன், என் குழந்தை’ நாடகம் அக்டோபர் 17 அன்று தியாகராய நகர் வாணி மகாலில் மேடையேறியது. கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி 50 சதவிகித இருக்கைகளே அரங்கில் அனுமதிக்கப்பட்டிருந்தன; ஆனால், ஏறக்குறைய அந்த 50 சதவிகித இருக்கைகளும் நிரம்பியிருந்தது பார்வையாளர்களிடம் இன்றும் அந்த நாடகத்துக்கு உள்ள ஈடுபாட்டை உணர்த்தியது.

நாடகக் குழுவினர்
நாடகக் குழுவினர்

‘கிளாசிக்’ நாடகம் ஒன்றை மீண்டும் இன்றைக்கு மேடையேற்றுவதில் உள்ள சவால்களை இந்தக் குழுவினர் மிக எளிதாகக் கடந்திருக்கின்றனர்; ஆனால், இதற்குப் பின்னால் உள்ள உழைப்பு அபாரமானது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட ஒத்திகை, இணைய வழியிலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட நேரடி ஒத்திகைகள் முழுவீச்சில் நடத்தப்பட்டு இப்போது மேடையேற்றப்பட்டிருக்கிறது.

மனோரமா ஏற்று நடித்திருந்த நாடகத்தின் முதன்மைப் பாத்திரமான, சவால் மிக்க அன்னபூரணி பாத்திரத்தை இன்றைக்கு லாவண்யா வேணுகோபால் ஏற்று மிகக் கச்சிதமாகவும், அபாரமாகவும் நடித்துள்ளார்; கம்பர் ஜெயராமன் ஏற்று நடித்திருந்த அன்னபூரணியின் கணவர் மஹாலிங்கய்யர் பாத்திரத்தில் அருமையான நடிப்பைச் சாந்தாராம் வழங்கியுள்ளார்.

லாவண்யா வேணுகோபால்
லாவண்யா வேணுகோபால்

1980-களில் மயிலாப்பூரில் வாழும் ஒரு நடுத்தர வர்க்க பிராமணக் குடும்பத்தில் நிகழும் சம்பங்களை மையமாகக் கொண்ட இந்த நாடகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், பார்வையாளர்களை அதே காலகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் வகையிலான துல்லியத்தோடும், அர்ப்பணிப்போடும் பங்களித்திருக்கிறார்கள்.

தன் தந்தையின் நாடகங்களில் தனிச்சிறப்பு மிக்க ஒன்றைக் கையிலெடுத்து மீண்டும் அதை அதே துல்லியத்துடன் மேடையேற்றுவது என்னும் அசாத்தியமான செயல்பாட்டில் நாடகத்தின் இயக்குநராக தாரிணி கோமல் வெற்றிபெற்றிருக்கிறார்.

கோமலின் நாடகத்தைப் பார்த்திருந்த மூத்த பார்வையாளர்கள், நாடகத்தின் போக்கில் வசனங்களை உச்சரிப்பதும், இளம் பார்வையாளர்கள் செல்போனில் தங்கள் கவனத்தைச் சிதறவிடாமல் நாடகத்தில் மூழ்கியிருந்ததும் சுவாரஸ்யத்தன்மையோடு கூடிய நாடகத்தின் ஆழத்தைப் பறைசாற்றியது.

சாந்தாராம் - லாவண்யா
சாந்தாராம் - லாவண்யா

தமிழ் நாடக உலகில் ஸ்டேஜ் பிரெண்ட்ஸ் மூலம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல், தமிழ் இலக்கிய உலகிலும் ‘சுபமங்களா’ மூலம் கோமல் சுவாமிநாதன் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. 1990-களில் ஏராளமான இளைஞர்கள் ‘சுபமங்களா’வின் மூலமாகவே நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் பெற்றனர். அத்தகைய தாக்கம் மிக்க ‘சுபமங்களா’வின் இதழ்கள் அனைத்தையும் இலவசமாகப் படிக்கும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவற்றை இணையத்தில் வெளியிட்டார் தாரிணி கோமல். இப்போது அவருடைய நாடகங்களை மீண்டும் மேடையேற்றிவருகிறார்.

சுபமங்களா
சுபமங்களா
கோமல் சுவாமிநாதன் காலமாகி இப்போது 25 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துவிட்டாலும், அவருடைய கலைக்கான அவருடைய பங்களிப்புகளின் வழி இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு