Published:Updated:

"அடங்கி வாழ்வது அடிமைத்தனம்!"– தனித்துவமிக்க பாடகர் தலித் சுப்பையா கடந்து வந்த பாதை

தலித் சுப்பையா

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தனது பாடல்கள் மூலம் இசைச்சமர் புரிந்துவந்த புரட்சிப் பாடகர் தலித் சுப்பையா வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.

"அடங்கி வாழ்வது அடிமைத்தனம்!"– தனித்துவமிக்க பாடகர் தலித் சுப்பையா கடந்து வந்த பாதை

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தனது பாடல்கள் மூலம் இசைச்சமர் புரிந்துவந்த புரட்சிப் பாடகர் தலித் சுப்பையா வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.

Published:Updated:
தலித் சுப்பையா

”பணிந்து போகமாட்டோம் எவனுக்கும் பயந்து வாழமாட்டோம்..

தலித்து என்று சொல்வோம் – எவனுக்கும் தலைவணங்க மாட்டோம்..

அடங்கி வாழ்வது அடிமைத்தனம் அதை

அடித்து நொறுக்குவது தலித்து குணம்...”

தலித் கலை இலக்கிய அரசியல் மேடைகளிலும், இடதுசாரி மற்றும் பெரியாரிய மேடைகளிலும் கடந்த நாற்பது ஆண்டுகளாக அதிகார வர்க்கத்தை நோக்கி தலித் சுப்பையா வீசிய பாடல் வரிகள் இவை. அடிமைத்தனத்துக்கு எதிரான இவரது அனல் தெறிக்கும் பாடல் வரிகள் புரட்சியை வலிமையாக்கும் வீரியம் கொண்டவை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான, அதிகார வர்க்கத்திற்கு எதிரான போரை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை தனது பாடல் வரிகளிடம் கொடுத்துவிட்டு நிரந்தர ஓய்வுக்கு சென்றிருக்கிறார் தோழர் தலித் சுப்பையா.

பெரியார் சிந்தனையாளர் இயக்க மேடையில் சுப்பையா
பெரியார் சிந்தனையாளர் இயக்க மேடையில் சுப்பையா

அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய சித்தாந்த செயற்பாட்டாளராக வலம் வந்த சுப்பையா அதிகார வர்க்கத்தினரையும், ஆட்சி செய்பவர்களையும் எந்த நிலையிலும் விமர்சிக்கத் தயங்கியதில்லை. “மோடியைப் பற்றி பாட எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்க வேண்டிய அவசியமில்லை. நான் இந்த நாட்டின் குடிமகன். அவர் இந்த நாட்டை ஆளும் பிரதமர். அதுவே போதுமானது. மோடி என்பதெல்லாம் வெறும் முகமூடிதானே…” என்று நீலம் பண்பாட்டு மையம் சென்னையில் நடத்திய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை வெளிப்படையாகவே விமர்சித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த முனியாண்டிப்பட்டி கிராமத்தில் 1952-ல் பிறந்த சுப்பையாவின் இயற்பெயர் பிச்சை. அந்த கிராமத்தில் அப்போது உச்சம் தொட்டிருந்த சாதிய பாகுபாடுகள் மற்றும் அத்துமீறல்களின் கசப்பான அனுபவங்களை சிறுவயதிலேயே எதிர்கொண்டார் பிச்சை. தனது கிராமத்தில் நிலவிய சாதியப் பாகுபாடுகள் குறித்து பின்னாட்களில் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் “அப்போதெல்லாம் காலில் செருப்பணிய முடியாது; குதிகால் வரை வேட்டி உடுத்த முடியாது; முழங்காலுக்கு மேல் வேட்டியைச் சற்று உயர்த்திக் கட்டினால், "உந்தொடைய எங்க பெண்கள் பார்க்கணும்னு வேட்டியத் தூக்கிக் கட்டுறியா' என்று மாற்று சாதியினர் கோபப்படுவார்கள். பாட்டு பாடிக்கொண்டு நான் செல்லும்போது, "ஊருக்குள்ள பாட்டு என்னடா வேண்டியிருக்கு" என்று கேட்பார்கள்.

சுப்பையாவின் குடியிறுப்பு
சுப்பையாவின் குடியிறுப்பு

மாற்று சாதியினர் எதிரே வரும்போது, சேரி மக்கள் பாதையைவிட்டு தூர ஒதுங்கிச் செல்ல வேண்டும். உடம்பை வளைத்து மரியாதை செலுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் "என்னடா, என்னடி வெறப்பா போறே ? போ, போ, ஒரு நாளைக்குச் சிக்குவே அப்ப வெச்சுக்குறேன்' என்று மிரட்டுவார்கள். அந்தச் சேரிப்பய, பொம்பள என்னை உரசிக்கிட்டுப் போறான், போறா, என்று ஊருக்குள் திட்டமிட்டுப் பரப்புவார்கள். இக்கருத்தை ஊதிப் பெருக்கி ஒருநாள் பழி தீர்த்துக் கொள்வார்கள்” இவ்வாறு குறிப்பிடுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரும்பான்மை சாதி இந்துக்கள் வசிக்கும் குடியிறுப்புப் பகுதியில் பள்ளிக்கூடம் இருந்ததால் தலித் குழந்தைகளின் படிப்பு எட்டாக்கனியாக மாறிப்போனது. அந்தப் பள்ளிக்கு புதிதாக வந்த ஆசிரியர் இருதயம் என்பவர் தலித் குடியிருப்பு பகுதிக்குச் சென்று குழந்தைகளை அழைத்து வந்து கற்பித்தார். பிச்சை என்ற பெயர் யாசகம் என்ற பொருளைக் கொண்டதாகவும், தாழ்வான எண்ணம் வருமாறும் இருந்ததால் சுப்பையா என்று மாற்றி எழுதினார் அந்த ஆசிரியர். பிச்சை சுப்பையாவானது இப்படித்தான். மதுரை தியாகராயர் கல்லூரியில் இளங்கலையும், அமெரிக்கன் கல்லூரியில் முதுகலையையும் முடித்த கையுடன் பெங்களூருவில் சட்டப்படிப்பை முடித்தார்.

தலித் சுப்பையா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் திருமாவளவன்
தலித் சுப்பையா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் திருமாவளவன்

மதுரை தியாகராயர் கல்லூரியில் படித்தபோது அவருக்கு கிடைத்த இடதுசாரிய நண்பர்கள் மூலம் இலக்கியம், அரசியல், தமுஎகச என அவருடைய மார்க்ஸிய தளம் விரிவடைந்தது. அரசியல் பாடல்களை எழுத ஆரம்பித்தார். மதுரை தலித் ஆதார மையத்தின் கலை இரவு மேடைகளில் இடைவெளியின்றி ஒலித்தன சுப்பையாவின் பாடல்கள்.

தீண்டாமை, சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக எழுந்த தலித் எழுச்சியின் அடையாளமாக தலித் என்ற வார்த்தையை தன்னுடன் இணைத்து தலித் சுப்பையா என்று அறிவித்துக்கொண்டார். பின்னாட்களில் மார்க்சிய கருத்துகள் வேரூன்றியதையடுத்து தலித் என்ற வார்த்தை சாதிய அடையாளம்தான் என்பதை உணர்ந்து, தனது பெயரை லெனின் சுப்பையா என்று மாற்றி அறிவித்துக் கொண்டார், ஆனாலும் தலித் சுப்பையா என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. எண்பதுகளின் தொடக்கத்தில் புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் குடியேறிய சுப்பையா, தனது மூத்த மகன் ஸ்பார்டகஸ் பெயரில் பதிப்பகம் ஒன்றை தொடங்கினார்.

பாடல்கள் எழுதுவது, பாடுவது, பண்ணமைப்பது போன்ற தளங்களில் இயங்கி வந்தவர், யுத்தம் துவங்கட்டும், இசைப் போர், எளிய மாந்தர்களின் அரிய செய்தி, தீர்க்கப்படாத கணக்குகள், யோக்கியர்கள் வருகின்றனர், காலத்தை வென்ற களத்துப் பாடல்கள் உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட்டு தன்னை எழுத்தாளராகவும் நிறுத்திக் கொண்டார். சாமான்ய மக்களுக்கும் புரியும்படி எளிய நடையில் பாட்டெழுதும் இவர், இதுவரை 82 பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார். உடல்நலக் குறைவு காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்பையா நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் குரல் வழியே அவர் விட்டுச்சென்ற பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism