Published:Updated:

செம்பா: ``கொற்கையில் செம்பாவும், குயாவின் இரும்பு இரகசியங்களும்” | பகுதி 17

செம்பா
News
செம்பா

வெறிகொண்ட புலியின் குருதி படிந்த நகங்கள் போலத்தெரிந்த பூக்கள் மீண்டும் மனத்துள் வெஞ்சினத்தைப்பரப்ப, முயன்று மனதைத் திருப்பினாள் செம்பா.

``கொற்கை முன் துறை”

சேர்ந்து நடந்து கொண்டிருந்தவளின் மனவெளியில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறதென அறிய முடியாதவளாய் இன்னும் விடுபடாத தனது கையை அவ்வப்போது பார்த்தபடி பேசாமல் நடந்தாள் எழினி.

தன்னைக் காப்பாற்றியவளுக்கும் தன் வயதோ அன்றித் தன்னைவிடவும் குறைந்த வயதோ இருக்கக்கூடுமென்று கணித்திருந்தாள். வாள் பிடித்த வேகம் இலாவகம் எல்லாம் கொண்டு பார்த்தால் அவள் ஒரு வீரனின் மகளாகத் தான் இருப்பாளென்று தோன்றியது. முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

ஒரு வேளை இளவரசியோ?

``உனக்கும் அவனைப் போல என் முகத்தில் ஏதாவது விசேஷமாகத் தெரிகிறதா என்ன?”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நடையை நிறுத்தாமல், திரும்பாமல் செம்பவளம் தோரணையாய்க் கேட்க வேகவேகமாகத் தலையசைத்தாள் எழினி. அங்காடித்தெரு தாண்டிக் கடற்கரைச்சாலை வந்தனர்.

``உன் வீடு எங்கே என்று சொல். உடன் வந்து விட்டு விடுகிறேன்” சன்னமாய் வியர்வை வடியும் இளமுகத்தில் தெரிந்த அதீத பொறுப்பும் கடமையுணர்ச்சியும் எழினிக்கு வியப்பளித்தன.

``இல்லை, இந்தத்தெருவில் தான் கடைக்கோடி வீடு. நானே போய்க்கொள்வேன். ஆமாம்! நீ..நீங்கள் எங்கே போக வேண்டும்?”

``நீ என்றே சொல்லலாம். நான்…” சற்றுத்தயங்கியவள், ``ஒரு முக்கியமான வேலையாக வந்திருக்கிறேன். ஆனால்… அதற்கு நிறைய திட்டமிட வேண்டும். சற்றுத்தங்க வேண்டியுமிருக்கலாம். இங்கே எங்காவது சத்திரம் இருக்குமா?” சிந்தனைகளேக் கேள்விகளாய் விரிய, கேட்டவளை விழி விரித்துப்பார்த்தாள் எழினி.

``சத்திரங்கள் உண்டு ஏராளம். ஆனால் ஒரு பெண் அதிலும் மணமாகாத இளம்பெண் தனியாகச் சத்திரத்தில் எப்படித் தங்குவாய்?..வந்து மணமாகவில்லை தானே?”

``நான் சத்திரத்தில் தங்குவதற்கும் எனக்கு மணமாவதற்கும் என்ன தொடர்பு?”

``துணையின்றி தங்குவது பாதுகாப்பல்லவே, அதனால் தான் அப்படிச்சொல்கி..” செம்பாவின் குறும்புப் பார்வையில் இடைநிறுத்திச்சிரித்தாள். ``சரி தான் அது உனக்குத் தேவையில்லை தான் ஒப்புக்கொள்கிறேன்.” எழினி மாற்றிச்சொல்லவும் சிரித்தாள் செம்பவளம். உடன் சேர்ந்து சிரித்தக் கண்களும் கொற்கை முத்துகளைச்சாடிப் பளீரிட்ட பற்களும் மகிழ்ச்சியில் பொலிந்த அழகு முகமும் சற்றேப் பேச்சை நிறுத்தின எழினிக்கு.

எத்தனை அழகான பெண்ணிவள்!

``உன் பெயரென்ன?” முத்துக்கள் ஒளிர்ந்தன.

“எழினி”

``அடடே! பொருத்தமான பெயர்.”

``உன் பெயர்?”

``செம்பா..செம்பவளம்.”

செம்பா
செம்பா

``போதாத பெயர். எந்தப் பெயர் வைத்தாலும் போதாது என்றே நினைக்கிறேன். அவ்வளவு அழகாக இருக்கிறாய்.” கலகலவெனச் சிரித்தாள் செம்பவளம். அவள் சிரிக்கச்சிரிக்க அழகு கூடிக்கொண்டே போவது போலிருந்தது.

``நன்றாகப்பேசுகிறாய். நீ இந்த ஊருக்குப் புதிதா?”

``அப்படிச்சொல்லிவிட முடியாது. வந்து ஒரு திங்களாகிவிட்டது.”

``ஆனாலும் பெரு நகரங்களுக்குத்தேவையான எச்சரிக்கை உணர்வு இன்னும் கைகூடவில்லை அப்படித்தானே?” செம்பாவின் கேள்விக்குப் பதிலின்றி நின்றாள் எழினி.

``அந்தத் தடியர்களைப் பார்த்தபின்னும் கடைக்குள் அவ்வளவு தள்ளி நிற்கிறாய். அவர்கள் அப்படியேத் தூக்கிக்கொண்டு போயிருந்தாலும் ஒருவருக்கும் தெரியாது.”

``உண்மை தான் பொருட்களை வேடிக்கைப்பார்த்துக் கொஞ்சம் கவனம் தவறிவிட்டேன் தான். ஆனால் என்ன தான் பலதேசத்து மாந்தர் வந்து போகும் துறையென்றாலும் கொற்கையின் காவல் ஒன்றும் அத்தனை மோசம் கிடையாது. அப்படியெல்லாம் யாரும் யாரையும் ஏமாற்றிக் கவர்ந்து சென்று விடவும் முடியாது. அந்த நம்பிக்கை உள்ளுக்குள் இருந்தது.”

``ஓகோ! அந்த நம்பிக்கை தான் உன்னைக் காப்பாற்றியது போல?”

``இ..இல்லை.”

``அப்பேற்பட்ட நம்பிக்கையை உங்களுக்குத் தந்தது எது? அல்லது யார்? இந்தப் பரந்து விரிந்த பாண்டிய நாட்டின் மன்னன் அந்தச் செழியனா?”

செழியன் என்ற சொல்லை உச்சரிக்கையில் அவளது முகத்தில் தெரிந்த அப்பட்டமான வெறுப்பைக்கண்டு பயந்துபோனாள் எழினி.

``உரக்கப்பேசாதே செம்பா. பாண்டியநாட்டில் மன்னன் மீது ஏராளமான பக்தி உண்டு. யார் தவறாகப்பேசினாலும் நாவறுத்துவிடும் அளவும் பொது மக்களுக்கு உச்சபட்ச வெறியே உண்டு தெரியுமா?” தனக்கும் அது வியப்பளிக்கிறதென்ற தொனியில் அவள் பேசியது செம்பவளத்துக்குப் பிடித்திருந்தது. எழினி தொடர்ந்தாள்.

``என்னைச் சொல்கிறாயே, தெரியாத நிலையில் குறுவாளை அவன் முன் நீட்டிவிட்டாயே, அதன் பின்விளைவுகளை எல்லாம் சிந்தித்துப்பார்த்துத் தான் அப்படிச் செய்தாயா?”

``இக்கட்டான வேளைகளில் செயல் முன்னும் சிந்தனை பின்னும் இருக்கலாம் தவறில்லை என்பது என் எண்ணம். அந்த நேரத்தில் உன்னைக் காப்பதொன்று தான் குறியாக இருந்தது. என்னால் அது முடியுமென்றும் தோன்றியது. அதனால் தான் துணிந்தேன்.”

``அது சரி பிறகு காவலதிகாரிகள் வந்து கேட்கும்போதாவது அவர்களைப் பற்றிய உண்மையைச் சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை? என்னையும் சொல்லவிடவில்லை. இதே போல அவர்கள் வேறு யாரிடமாவது நடந்து கொண்டால்?”

``நீ தான் சொல்கிறாயே, கொற்கையில் அப்படி யாரும் யாரையும் கவர்ந்து போய்விட முடியாதென்று. பிறகெதற்கிந்த பேச்சு?” எங்கோ பார்த்தபடி பதிலளித்தாள் செம்பா.

``ஆக, நீ வந்திருக்கும் காரியம் என்னவோ விவகாரமாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது எனக்கு. அப்படித்தானா?”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``அப்படித்தானென்றால் என்ன செய்வாய்?” சற்றுப்பொறுத்துப் பதில் சொன்ன செம்பவளத்தைப்பார்த்து எழினி வெறுமனே தோள்குலுக்கி அடுத்த கேள்விக்குத் தாவிவிட்டாள்.

``அப்படி அதி முக்கியமான காரியத்தோடு நீ வருவது எங்கிருந்தென்று சொல்வாயா?”

``நான் தெற்கே ஒரு சிறு பரதவக்குடியிலிருந்து வருகிறேன். இன்று காலையில் தான் கொற்கைக்குள் நுழைந்தேன்.” முகத்திலொரு ஆயாசம் தோன்றியது.

``பசியாறி விட்டாயா?” சட்டெனத்திரும்பி எழினியைப் பார்த்தவள் மெல்ல தலையசைத்தாள்.

``வா” இப்போது எழினி கையைப்பிடித்து இழுத்துச்செல்ல செம்பா பேசாமல் பின் தொடர்ந்தாள். பூசணிக்கொடி படர்ந்த படலைத்தள்ளித் திறந்துகொண்டு தனது வீட்டின் உள்ளே போனவள் தாழ்வாரத்தில் கிடந்த சிறு கயிற்றுக்கட்டிலை எடுத்துப்போட்டு அமரச்செய்தாள்.

“சற்று உட்கார்ந்திரு. உனக்கு உணவு எடுத்து வருகிறேன்” என்றபடி உள்ளே சென்றாள். சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் செம்பவளம். முகப்பெங்கும் பல விதமான கனி மரங்களும் செடிகளும் அழகூட்டிய சிறுவீடு. ஒருபுறத்தில் வேலிப்படலைத்தாண்டிக்கொண்டு பூச்சொரிந்து கொண்டிருந்தன முள்முருக்கு மரங்கள். வெறிகொண்ட புலியின் குருதி படிந்த நகங்கள் போலத்தெரிந்த பூக்கள் மீண்டும் மனத்துள் வெஞ்சினத்தைப்பரப்ப, முயன்று மனதைத் திருப்பினாள் செம்பா. அது எளிதாகவே இருந்தது. சரியாகச் சொல்வதென்றால் காலையில் இருந்த மனநிலை இப்போது இல்லை தான். இந்தத் திடீர்ச் சம்பவம் சினத்தைச்சற்று மடைமாற்றி அவளது வேகத்தைக் குறைத்திருந்தது போலும்.

அதுவும் நல்லது தான்.

வந்த போதிருந்த கண்மண் தெரியாத வெறியும் வெஞ்சினமும் வடிந்து இப்போது தெளிவான சிந்தனைக்கு வழி ஏற்பட்டிருந்தது.

சித்தம் கலங்கியவள் போல அப்படியே போயிருந்தால் காரியம் சாதிப்பது எப்படி? உயிர் கூட மிஞ்சியிருக்குமோ என்னவோ? என்ன செய்கிறோமென்ற நிதானமே இல்லாமல் சில சமயங்களில் செயல்பட்டு விடுகிறோமோ என்று அப்போது தான் அவளுக்குத் தனித்துப் புலப்பட்டது.

உயிர் போகும் நிலையிலும் நிதானமிழக்காத தாயின் நினைவு வந்தது. இனி அவளும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு செயலிலும் கவனம் வேண்டும். அடுத்து ஒரு தவறு அவளால் நேர்ந்து விடக் கூடாது. பொறுமையாக அது எவ்வளவு காலமென்றாலும் எடுத்துக்கொண்டு நிதானமாகக் காரியத்தை முடிக்க வேண்டும். நினைத்ததை முடிக்கும்போது மனதில் இருக்கும் கேள்விகளுக்கெல்லாம் விடையறிய வேண்டும். தீர்மானமாக நினைத்துக்கொண்டாள்.

மனம் மீண்டும் எழினி நோக்கித் திரும்பியது. பாவம் ஏமாளிப்பெண். இப்படிப்பெண்கள் ஏமாந்திருக்கும் வரை ஆண்கள் ஏமாற்றிக்கொண்டே தான் இருப்பார்கள்.

செம்பா
செம்பா

மிகச்சரியாக அந்நேரம் அவள் எதிரில் வந்து நின்றிருந்தாள் எழினி. முகத்தில் நட்பூறிய புன்னகை. கலயத்தில் கஞ்சியும் தொட்டுக்கொள்ள நெத்திலி வறுவலும் கொண்டு வந்திருந்தாள்.

``இதோ! முழுவதும் சாப்பிட்டுவிடு.”கையில் கொடுத்துவிட்டு ``இதை உன் வீடுபோல எண்ணிக்கொள். உன் காரியம் முடியும்வரை நீ இங்கேயே தங்கலாம்.”என்றாள்.

``உன் தாய் தந்தையரிடம் கேட்க வேண்டாமா?”

``சிற்றன்னையும் சிற்றப்பாவும் தான். தங்க குணம். அன்னை தந்தைக்கு மேல் அன்பு. என் பேச்சுக்கு எதிராக எதுவுமே செய்யமாட்டார்கள். அதனால் அந்தக்கவலையெல்லாம் உனக்கு வேண்டாம். ஆனால் நீ வந்திருக்கும் அலுவல்பற்றி மட்டும் அவர்களிடம் ஏதும் சொல்லிவிடக் கூடாது. ஏதாவது கதை யோசிப்போம். அதைப் பிறகு பார்க்கலாம் நீ நிம்மதியாகக் கஞ்சியைக் குடி இப்போது” வாஞ்சையோடு சொல்லிவிட்டு அருகில் அமர்ந்தவள் மீது இனம் புரியாத பாசம் வந்து ஒட்டிக்கொண்டது.

அவள் காட்டிய அந்தக் கரிசனத்தில் வேறொரு முகம் அவளுக்கு நினைவு வந்ததும், ஒரு காரணமாய் இருக்கக்கூடும். ஆனால் கரிசனம் காடும் அந்த முகத்துக்குரியவனோ அப்போது அவளை வெறிகொண்டு தேடிக்கொண்டிருந்தான்.

********

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன் மாளிகையையொட்டிய பொய்கையில் ஆம்பல்கள் மலர்ந்து சிரித்தன. அந்தபுரத்துப்பகுதியிலிருந்து கிளம்பி வந்த யாழிசையின் ஒலியளவுக்கு மேலேறி ரீங்காரப்பண் வாசித்துக்கொண்டிருந்தன சிறு பூச்சிகள்.

முன்னே வைக்கப்பட்டிருந்த கிண்ணங்களில் சோஜோ தொடப்படாமலிருக்க ஆழ்ந்த சிந்தனையில் இருந்த மன்னன் நம்ஹேவைப்பார்த்து மெல்ல ஒலியெழுப்பினான் இளவரசன் யூரி.

``அப்பா! நானும் சில காலமாகவே பார்த்துக்கொண்டிருக்கிறேன், நீங்கள் அடிக்கடி இப்படித் தனிச்சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறீர்கள். என்ன தான் காரணமென்று சொல்ல மாட்டீர்களா?”

``மன்னர்களுக்கு வேறு என்ன சிந்தனை இருக்க முடியும்? எல்லாம் நாட்டைப் பற்றித் தான்.”

``நமது சாரோவுக்கு என்ன வந்தது இப்போது? இந்த நிலத்திலேயே சிறந்த நாடல்லவா நமது சாரோ?”

``வடக்கே கோகுர்யோவையும் இதோ மேற்கே பரந்து விரிந்த மாஹானின் போஜி தேசத்தையும் மறந்துவிட்டாயா?”

``பரப்பளவை வைத்துப்பேசாதீர்களப்பா. எப்போதும் சாரோவைப்போலச் சிறந்த நாடு வேறு இல்லை தான்.” தீர்க்கமாகச்சொல்லிவிட்டு புன்னகைத்த மகனைப்பார்த்து மனக்கிலேசம் கொண்டார் மன்னர். அவனது இளமுகத்தின் குழந்தைமையை நிலவொளி தெளிவாகக்காட்டியது. இன்னும் சில காலத்தில் அரச பொறுப்பை ஏற்கவேண்டியவன் இப்படிக் குழந்தையாகவே இருக்கிறானே என்ற கவலையே அவரை உருக்கிக்கொண்டிருந்தது.

ஏற்கனவே சூழ்ந்து கொண்டிருக்கும் அபாயம் வேறு.

``குயாவையும் மறந்துவிட்டாயா?” யூரியின் முகத்தில் இப்போது மெல்லிய சிந்தனைக்கோடுகள். சட்டெனச் சுரோவின் சிரித்த கண்கள் நினைவில் வந்து தொலைத்தன.

``ஆம், அது நமக்கு வைரி தான். ஆனால் நம்மளவு படைபலம் இல்லையே. குயா, நம்மால் நசுக்கமுடிந்த சிறு பூச்சி அவ்வளவே.”

``யாரையும் அவ்வளவு எளிதாக எடை போடக் கூடாது யூரி.எதிரியின் பலத்தைக் கொண்டு மட்டும் வெற்றியைக் கணக்கெடுக்கக் கூடாது. அத்தோடு நம் பலவீனத்தையும் சேர்த்துச்சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.”

``என்னப்பா பிதற்றலிது? நம்மிடம் என்ன பலவீனம் இருக்கிறது?”

``இரும்பு” ஒற்றைச்சொல்லில் யூரியின் வாய் மூடிக்கொண்டது. கண்கள் கனன்றன. லெலாங் துறைமுகத்தில் அங்காடித்தெருவில் நடந்த அவமானமும் நினைவுக்கு வந்தது. எப்போதும் உயர்த்திப்பேசப்படும் குயாவின் இரும்பு.

``அரசே ஹோகோங் வந்திருக்கிறார்.” சேவகன் அறிவித்தான்.

``வரச்சொல்” என்ற ஆணையைத்தொடர்ந்து மண்டபத்திலேறி வந்தவர் பணிந்து மண்டியிட்டு அமர்ந்தார்.

``சொல்லுங்கள் ஹோகோங்” கேள்விக்குப் பதிலில்லாமல் வெற்றுப்பார்வையைத் தந்தார் ஹோகோங். பெருமூச்செறிந்தார் நம்ஹே.

``என்னப்பா விஷயம்?”

``குயா வளர்ந்து வருகிறது யூரி. அச்சந்தரும் வேகத்தில் வளர்ந்து வருகிறது. லெலாங் சந்தையிலும் இன்னும் அயல்தேசத்தினரின் சந்தையிலும் குயாவின் செல்வாக்கு ஓங்கி வருவதாக, அவர்களின் செல்வம் கூடுவதாகச் செய்தி கிடைத்தது. படை பலம் பெருக்கப்படுவதாகவும்…அதை உறுதி செய்யத்தான் கேட்டிருந்தேன் ஹோஹோங்கிடம்.”

செம்பா: ``கொற்கையில் செம்பாவும், குயாவின் இரும்பு இரகசியங்களும்” | பகுதி 17

``என்ன பெரிய செல்வாக்கு? சிறு குடி? நீங்கள் என்ன சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது நாம் படை நடத்திச்சென்றால் கூட அவர்களை வென்று விடமுடியுமென்றே நினைக்கிறேன் நான்.”

``ஹ்ம்ம். குயா ஒன்றும் தனிக்குடியல்ல. அது கூட்டமைப்பின் பாதுகாப்பில் இருக்கிறது. ஒன்பது குடியினரும் ஒன்றிணைந்தால் நமக்குச் சவால் தான். வெல்வது கடினம்.”

``முற்றிலும் அப்படிச்சொல்லிவிட முடியாது அரசே. அவர்களைப் பலவீனப்படுத்தவும் ஒரு உபாயம் இருக்கிறது.” புதிய நம்பிக்கையோடு ஹோகோங்கை நிமிர்ந்து பார்த்தார் மன்னர்.

``குயாவின் இரும்புருக்கு ஆற்றலைக் கைப்பற்றினால் அவர்களது ஒளி குன்றும்.”

``திருட்டா?” மன்னர் அமைதியாக இருக்க அதிர்ந்து கேட்டான் இளவரசன்.

``எதிரியின் பலத்தையே அவனது பலவீனமாக்குவது போர் தந்திரங்களுள் ஒன்று தான்.” தொங்குமீசை அசைந்தாட மென்குரலில் பேசினார் ஹோகோங்.

``மேலே சொல்லுங்கள்.”

``ஒருவனைக் கண்டுபிடித்திருக்கிறேன் மன்னா. அவனை எப்படியாவது சாரோவுக்குச் சார்பாக்கிவிட்டால் விரைவில் குயாவின் இரும்பு இரகசியங்களை நாம் அடைந்து விடலாம்.”

மன்னர் நம்ஹே இன்னும் சிந்தனையிலிருக்க ஆர்வமிகுதியில் கேட்டான் யூரி.

``யார் அவன் ஹோகோங்? அவன் பெயர் என்ன?”

``சில காலமாய் நான் கவனித்துக்கொண்டிருக்கும் ஒருவன் அவன். அவன் பெயர் சியோக் தல்ஹே. குயாவின் இரும்பாலையில் பயிற்சிக்கொல்லனாய் இருக்கிறான்.”

அப்போது தான் மண்டபத்தின் கீழ்வாசலில் வேகமாய் வந்து நின்றிருந்த அஹியோவின் செவிகளில் மிகச்சரியாக அந்தப்பெயர் ஒலித்தது. அந்தப்பெயரைக் கேட்ட மூவரின் கண்களும் வெவ்வேறு காரணங்களால் ஒளிர்ந்தன.

(தொடரும்..!)