Published:Updated:

செம்பா: `ஆய்குலத்துக் குருதி... அப்படித்தான் இருக்குமோ என்னவோ?!’ | பகுதி 18

செம்பா

`என்னைப் பெற்றவள், என்னைச் சீராட்டி வளர்க்க முடியாமல் அந்த ஆற்றாமையோடு இறந்துபோனவள், அவளது இறப்புக்குக் காரணமாவனவனைப் பழிதீர்ப்பது... அகிலமாளும் சக்கரவர்த்தியானாலும் சரி, அந்த முயற்சியை மட்டும் கைவிடுவதாக இல்லை.’

செம்பா: `ஆய்குலத்துக் குருதி... அப்படித்தான் இருக்குமோ என்னவோ?!’ | பகுதி 18

`என்னைப் பெற்றவள், என்னைச் சீராட்டி வளர்க்க முடியாமல் அந்த ஆற்றாமையோடு இறந்துபோனவள், அவளது இறப்புக்குக் காரணமாவனவனைப் பழிதீர்ப்பது... அகிலமாளும் சக்கரவர்த்தியானாலும் சரி, அந்த முயற்சியை மட்டும் கைவிடுவதாக இல்லை.’

Published:Updated:
செம்பா
குயா, கொரியா

ஒளிர்ந்த பந்தங்களின் துணையோடு அன்றைய நாளின் இறுதிக்கட்ட விற்பனை மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது சந்தையில். கூட்டமைப்பு வணிகர்களின் முகங்களில் மகிழ்ச்சி தெளிவாகத் தெரிந்தது. குயாவின் துறைமுகத்தில் கூடுகின்ற கூட்டத்தின் அளவும் கலகலப்பும் மிகுதியாகிக்கொண்டே போவதால் வந்த மகிழ்வு அது. அம்மகிழ்வு கைகளைப் பின்னுக்குக் கட்டியபடி மென்னடையில் காவல் மேற்பார்வை செய்துகொண்டிருந்த சுரோவின் கண்களிலும் பிரதிபலித்தது.

சுரோ இரும்பாலைப் பொறுப்பைத் துறந்து, குயாவின் காவற்பணி மேற்பார்வைக்கு வந்து பல மாதங்கள் கழிந்திருந்தன. இந்த இடைவெளியில் பார்வைக்கும் பழக்கத்துக்கும் சுரோவிடம் பல மாற்றங்கள். மெருகு கூடியிருந்தது. மாறாத புன்னகையோடும், கனிந்த பார்வையோடும் உயரமும் ஆகிருதியுமாக அவன் குதிரையேறி வலம்வருவது கண்கொள்ளாக் காட்சிதான். அதுவே சந்தைக்குப் பெரிய பாதுகாப்புப்போலிருந்தது.

இரும்பாலைச் சம்பவம் நடந்ததும் ஒரு வகையில் நல்லதாகிப் போனதென யூசுன்னே நினைக்குமளவுக்கு சுரோவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. அவனது முடிவுகளின் மீதும் நம்பிக்கை கூடியிருந்தது மக்களுக்கு. இஜினாசியிடமிருந்து வரும் இடைஞ்சல்களையெல்லாம் இப்போது இடக்கரத்தால் தட்டிவிட்டுக்கொண்டு நடக்க முடிந்தது சுரோவால்.

``இளையவரே, சூடாக இருக்கிறது சிருதொக் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா?”

அன்போடு இடைமறித்து ஆவிபறந்த கொழுக்கட்டைகளை நீட்டிய சிறுவணிகரிடம் அவன் மறுத்துச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தெருக்கோடியிலிருந்து வந்தது அவ்வோசை.

``என்ன பதற்றம்... யாருக்கு என்ன?” வேகமாக ஓடிச் சென்று கேட்டான்.

கூடியிருந்தவர்கள் தூரத்தே வெறிக்க, அங்கே புரவியின் மீது ஒரு பெண்ணை இழுத்து ஏற்றிக்கொண்டு ஒருவன் செல்வது தென்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்த கணம் சுரோவின் சீழ்க்கை ஒலிக்குப் பழகிய அவனது புரவி ஓடிவந்து அவனருகே நின்றது. தாவியேறியவன், காற்றைக்கடியும் வேகத்தில் அந்தப் புரவியை விரட்டத் தொடங்கினான். மனதில் கணக்குகள் முளைத்தன. வீரனின் உடையைப் பார்த்து எந்தப் பகுதியைச்சேர்ந்தவனென்று அடையாளம் சொல்ல முடியவில்லை. அந்தப் பெண்ணையும் சரியாகக் காண முடியவில்லை. வணிகர் மகளோ அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட விவகாரமோ... என்னென்னவோ நினைத்தபடி அவன் பின்தொடர, காடு மேடென்று போக்குக் காட்டிவிட்டு அந்தப் புரவி வீரன் அடர்ந்த வனப்பகுதியொன்றைக் குறிவைத்துச் செல்வது புரிந்து வேகத்தை அதிகப்படுத்தி, குறுக்காக ஓடிச் சுற்றிக்கொண்டு அவனை அடைந்தான் சுரோ.

சுரோ தன்னை மறித்து நிற்பதைக் கண்டு சற்றும் அசராமல் புன்னகைத்த அந்த வீரனின் நிதானம், சுரோவுக்கு சூழ்நிலையின் வேறுபாட்டை உணர்த்தியது.

சுற்றிப் பார்த்தான். காடு பொத்திவைத்திருந்த சிறு சமவெளி.

அடடா! அழகாக வலையில் வந்து சிக்கியிருக்கிறேன்போலிருக்கிறதே என்று எண்ணிக்கொண்டே அந்தப் பெண்ணைப் பார்க்க, பாதி முகம் மறைத்த நிலையில் இருந்த அந்தப் பெண் வெகு நிதானமாக புரவியிலிருந்து இறங்கி நின்றாள்.

அவள் கண்களில் தெரிந்த வெறி சுரோவை வியப்பில் ஆழ்த்தியது.

ஒரு பெண்ணுக்குத் தன் மீது இத்தனை கோபமா என்று அவனுக்குள் சிந்தனை ஒடியது.

இன்னும் பல வீரர்கள் ஆயுதங்களோடு அவனைச் சூழ்ந்துகொள்ளத் தொடங்கினர். வெற்றியே அடைந்துவிட்ட பாவனையின் எதிரில் நின்ற அந்தப் புரவி வீரன் பார்க்க சுரோவின் முகத்திலோ எந்தச் சலனமுமில்லை. அவன்மீது வைத்த பார்வையை எடுக்காமலேயே அந்தப் பெண் மென்னடையில் சென்று அங்கிருந்த பாறையொன்றின் மீது அமர்ந்துகொண்டாள். அதாவது அவளது வீரர்களிடம் சுரோ தோற்றுப்போவதை, அந்தக் கேளிக்கையை மகாராணி ரசிக்கப்போகிறார்களாம்.

செம்பா
செம்பா

`என்னென்ன விந்தைகளடா வாழ்வில்...’ என்று எண்ணிச் சிரிப்புத்தான் வந்தது சுரோவுக்கு.

``சரி, என்ன இப்படி எல்லோரும் மெல்ல நடந்துகொண்டிருக்கிறீர்கள்... வந்த வேலையைத் தொடங்கவேண்டியதுதானே அல்லது சோஜோ பார்த்த பிறகுதான் வாளெடுப்பீர்களோ?” விளையாட்டாகச் சொன்னபடி, தன் புரவியிலிருந்து குதித்தவன் கையில் இயல்பாகச் சுழன்றது குயாவின் ஆகச்சிறந்த இரும்பில் செய்யப்பட்ட நெடுவாள்.

*****

கொற்கை முன் துறை,

பசியடங்கித் தெளிந்திருந்த செம்பவளத்தின் மனதில் சங்கனின் கலங்கிய முகம் தோன்றியது. பொதுவாக அவனுக்குப் பாசத்தைக் காட்டவே தெரியாது. ஆனாலும் அவனையறியாமல் அவன் முகத்தில் சிலசமயம் புலப்பட்டுவிடும் அந்தக் கரிசனத்தை விளையாட்டாக உதாசீனப்படுத்தியதெல்லாம் நினைவுக்கு வந்து அவள் மனதை அரித்தன.

பாவம்தான் அண்ணன்! இப்போது எப்படித் தவித்துக்கொண்டிருக்கிறானோ?

அவன் தவிப்பதென்பது முன்பானால் எண்ணி எண்ணி உற்சாகம்கொள்ளும் ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் ஒரே நாளில் மனது மாறிவிட்டது விந்தையாக இருந்தது.

இனி எப்போதாகிலும் அவனைக் காணக்கூடுமோ?

எல்லாம் அவள் நினைத்தபடி நடந்தால் அல்லது நடக்காவிட்டாலும்கூட பெரும்பாலும் அவள் பழையபடி ஊர் திரும்புவது கடினம்தானே! சங்கனையும் தாத்தனையும் அதிகம் பேசாவிட்டாலும், அன்பைக் கொட்டி வளர்த்த தந்தை... வளர்ப்புத் தந்தை கோடனையும் எண்ணி மனம் கசிந்தாள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`எல்லோரும் அவரவருக்குச் சரியென்று தோன்றியதைச் செய்திருக்கிறார்கள். அப்படித்தானே நானும்? இப்போது எனக்குச் சரியென்று தோன்றுவதெல்லாம் ஒன்றுதான். அது என்னைப் பெற்றவள், என்னைச் சீராட்டி வளர்க்க முடியாமல் அந்த ஆற்றாமையோடு இறந்துபோனவள், அவளது இறப்புக்குக் காரணமாவனவனைப் பழிதீர்ப்பது... அகிலமாளும் சக்கரவர்த்தியானாலும் சரி, அந்த முயற்சியை மட்டும் கைவிடுவதாக இல்லை.’

மீண்டெழுந்த உறுதியில் தலையைச் சிலுப்பிக்கொண்டு நிமிர்ந்தாள் செம்பவளம்.

அந்த வீம்பு அவளையே வியப்பிலாழ்த்தியது. ஆய்குலத்துக் குருதி அப்படித்தான் இருக்குமோ என்னவோ... அல்லது சேரநாட்டின் செருக்கோ!

கன்னத்தில் கைவைத்தபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்த எழினிக்கு செம்பா ஏதோ திட்டத்தில் உறுதியாகிவிட்டாள் என்கிற வரை புரிந்தது. எப்பாடுபட்டாலும் அந்தத் திட்டத்தில் அவளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்று அதே அளவு உறுதியோடு தனது ஆழ் மனது முடிவெடுத்துவிட்டதும் புரிந்தது.

``அடுத்து எங்கே?” எழினியின் கேள்விக்குத் தயக்கமின்றி வந்தது பதில்.

``பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் எங்கிருக்கிறானோ அங்கே.”

``மன்னர் வருவது உறுதியில்லை. ஆனால் அவருடைய அண்ணன் மகன் இளவரசர் இங்கேதான் இருக்கிறார். பாலகன்தான். அவரென்றால் மன்னருக்கு உயிர்.”

எழினி சொல்லச் சொல்லச் செம்பவளத்தின் கண்களில் ஒளி கூடிக்கொண்டே போனது.

``களிப்பளிக்கும்விதமாகப் பேசுகிறாய் நீ. நல்லது. நான் அந்த இளவரசன் இருக்கும் இடத்துக்குச் செல்கிறேன்.”

``நாளை இளவரசருக்குப் பூந்தொடை விழா.”

``அப்படியென்றால்?”

``பூந்தொடைத் திருவிழா தெரியாதா உனக்கு? வீரர்களுக்கு முதன்முறை போர்ப்பயிற்சி அளிக்கும் முன்பு பூக்களால் அலங்கரித்து, பலவித கேளிக்கைகளால் மகிழ்வித்து, அவர்களை உற்சாகமூட்டுவார்கள். அதுதான் பூந்தொடை விழா.”

``போருக்குப் பயிற்சியளிக்கும் முன்னரே வெற்றிவிழாவா? விளங்கிவிடும்…”

``அதென்ன அப்படிச் சொல்லிவிட்டாய்... போருக்குத் தயாராவதென்றால் சாதாரணமான காரியமா?”

``ஆமாமாம்!”

``நெடுஞ்செழிய மகாராஜாவுக்கு வேறு பூந்தொடை விழா எடுக்கவே இல்லையாம் தெரியுமா? அவரது பயிற்சியே போர்க்களத்தில்தான் என்று சொல்வார்கள். அதனால்தானோ என்னவோ தம்பியின் விழாவுக்கு ஏகப்பட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன. நாளை இவ்வேளையில் விழா தொடங்கிவிடும். அது முடிந்த பிறகு இளவரசரோடு அரச குடும்பமே நகர்வலம் வரும். வலம் முடிந்து பெருந்துறை முன்றலில் சேர்ந்த பிறகு பின்னிரவு வரை கூத்தும் கேளிக்கைகளும் நடக்கும்.”

செம்பா
செம்பா

``நீ சொல்வதைப் பார்த்தால் நாளை முழுவதும் அரசரைக் காண்பதற்கான வாய்ப்பிருக்கிறது.”

``ம்ம்...”

``அப்படியென்றால் சரி. கொஞ்சம் நேரமெடுத்துக்கொண்டு முதலில் சரியாகத் திட்டம் வரைவோம்.”

மாலையில் சிற்றன்னை வேணியும் அவள் கணவனும் வீடு வந்தபோது பெண்களிருவரும் கட்டிலில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்ததைக் கண்டனர். உண்மையில் எழினி சொல்லச் சொல்ல கொற்கையின் வரைபடத்தை மனதிலேற்றிக்கொண்டிருந்தாள் செம்பவளம்.

``சித்தி...”

``யாரம்மா இது?”

``பாவம் யாருமற்றவள் சித்தி. ஊரிலிருந்து பிழைக்க பட்டினத்துக்குத் தனியாக வந்துவிட்டாள். அங்காடித்தெருவில் நின்று தவித்துக்கொண்டிருந்தாள். நான்தான் அழைத்து வந்தேன். கொஞ்ச நாள் நம்மோடு இருக்கட்டுமா சித்தி?”

``அதனாலென்னம்மா, பாவம். இருக்கட்டும். நீ எந்த ஊரம்மா?” செம்பாவைப் பார்த்து மிருதுவாகக் கேட்டாள்.

``தெற்கே ஒரு சிறு பரதவக்குடியம்மா.”

``பெற்றோர் எப்படித் தவறினார்கள்?”

``ஐயோ சித்தி! இப்போதுதான் அழுது முடித்திருக்கிறாள். மீண்டும் தொடங்க வேண்டுமா?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``வேண்டாம் மகளே வேண்டாம்! நீ நிம்மதியாக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இங்கே இரு. இருவரும் பசியாறிவிட்டீர்களா?” என்றபடி வேறு பேச்சின்றி அடுத்தகட்ட வேலையில் இறங்கிவிட்டாள். சிற்றப்பனும் ஒரு சிறு புன்னகைக்கு மேல் ஏதும் கேட்கவில்லை.

நள்ளிரவு தாண்டியிருந்தது. உறங்காமல் சிறு சாளரம் வழியாக வானத்தை ஆராய்ந்துகொண்டிருந்தாள் செம்பவளம்.

``ஏதோ ஆபத்து என்று தெரிந்தும்கூட உன் திட்டமென்ன என்று இதுவரை நான் உன்னிடம் கேட்கவேயில்லை. ஆனால் உன் கதை, அதைக்கூட எனக்குச் சொல்ல மாட்டாயா?” அவள் உறங்காமல் இருப்பது கண்டு மெதுவாகக் கேட்டுப் பார்த்தாள் எழினி.

சற்றுத் தயங்கிவிட்டு ஒரு மெல்லிய பெருமூச்சோடு தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள் செம்பா.

அவள் சொல்லி முடிக்கும்போது பொழுது புலர்ந்து அடிவானில் செம்மஞ்சள் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தது. எழினியின் கண்களிலும் அதன் பிரதிபலிப்பு. சன்னமாக அவள் உடல் அதிர்வதை உணர்ந்து எழுந்து பார்த்த செம்பா திடுக்கிட்டாள். எழினி மெல்ல விசித்து அழுதுகொண்டிருந்தாள்.

``அடடா! என்ன எழினி இது ? இப்படி அழுவாய் என்று தெரிந்திருந்தால் நான் சொல்லியிருக்கவே மாட்டேனே!”

``எப்படி அழாமல் இருப்பது... கேட்கும் எனக்கே உள்ளம் பதறுகிறது. உன்னால் எப்படி அழாமல் இருக்க முடிகிறது?”

``ஒவ்வொருவர் துயரத்தைக் காட்டும் வழி ஒவ்வொரு மாதிரி. எனக்கு அழுகை உடனடியாக ஆத்திரமாக மாறிவிடுகிறது.” இருவரும் சற்றுப் பேசாமல் இருந்தனர்.

``அப்படியென்றால் நீ... நீங்கள் நான் நினைத்ததுபோல இளவரசிதான்.”

“``மரியாதை தந்து மாடத்திலேற்றிவிடாதே. நீ எனக்குத்தோழி.”

``செம்பா ஒன்று சொன்னால் தவறாக நினைக்க மாட்டாயே?”

``சொல்.”

``நடந்தவற்றுக்கெல்லாம் செழிய மகாராஜாதான் காரணமாயிருப்பாரென்று அத்தனை தீர்மானமாகச்சொல்ல முடியுமா?”

``இல்லைதான்” தயக்கத்தோடு தொடங்கித் தொடர்ந்தாள்,

``ஆனால் பாண்டியப்படை இதில் ஈடுபட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. அதனால் அதன் தலைவனாக என் ஐயத்தைத் தெளிவிக்கும் கடமை அந்தச் செழியனுக்கு இருக்கிறதே!”

``சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் உனக்குத் தேவை ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளுமளவுக்குக் கால அவகாசம்... அப்படித்தானே... எனில், அபாயமான எந்தத் திட்டத்தையும் போடத் தேவையில்லைதானே?” எச்சரிக்கையாகக் கேட்டாள் எழினி. செம்பவளமும் ஐயம் தீர்ப்பது வரை தானே அவளிடம் சொல்லியிருந்தாள், வஞ்சம் தீர்ப்பது பற்றி வாய் திறக்கவில்லையே... அதனால் அப்போதைக்கு ஆமோதிப்பாகத் தலையாட்டி வைத்தாள்.

``அப்படியென்றால் நீ அரச குடும்பத்தோடு சிறிது காலமேனும் தங்கும்படியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.”

``ஆமாம்.”

``அதை எப்படிச் செய்வது?”

``ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.”

``திட்டத்தை விளக்குவாயா? என்னால் ஏதாவது செய்ய முடிந்தால் செய்கிறேன்.”

``உண்மையாகத்தான் சொல்கிறாயா?”

``என் மேல் ஆணை.”

``அப்படியென்றால் இதைக் கேள்.” தனது மனதில் புதிதாக உருவாகியிருந்த திட்டத்தை விளக்கலானாள் செம்பவளம்.

*****

சங்கனும் திரைநாடனும் சோர்ந்துபோயிருந்தனர். ஒரு நாளில் இருவரைத் தொலைப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத சுமையாக இருந்தது இருவருக்கும்.

கோடனை உயிரற்ற உடலாகப் பார்த்த நொடியில்தான் சூழ்நிலையின் அபாயம் முழுமையாக அவர்கள் மனதை எட்டியது. விசாரித்துக்கொண்டிருந்த காவற்படையினரின் கேள்விகளைச் சந்தித்து, கையிலிருந்த சிறு பணத்துக்காகத்தான் அவர் கொல்லப்பட்டிருப்பாரென்ற அவர்களின் கணிப்புக்குத் தலையசைத்து, இறுதி மரியாதைகள் முடித்து நள்ளிரவில் சரியாக செம்பா, எழினிக்குக் கதை சொல்லத் தொடங்கிய நேரத்தில்தான் கடலைப் பார்த்த அந்தச் சத்திரத்தில் இருவரும் வந்து ஓய்ந்து சாய்ந்தனர். நேரம் பரிபோன தவிப்பும், செம்பவளம் குறித்த அச்சமுமாக உறக்கம் தொலைத்த விழிகள் நான்கும் வானை வெறித்து விடியலுக்காகக் காத்திருந்தன.

திரைநாடன் மிகவும் சோர்ந்திருந்தார். இத்தனை ஆண்டுகளாக அணுக முடியாமல் தயங்கிய வயதின் மூப்பும் களைப்பும் இப்போது தீர்க்கமாக அவர் மீதிறங்கியிருந்தன. கோடனைப் பறிகொடுத்தது அவரது நம்பிக்கைகளின் மீதான பேரிடியாக இருந்தது. சங்கனோ சோகம், பயம், ஆத்திரமெனக் கட்டுப்படுத்த முடியாமல் திமிறி விம்மிய மனதை வெகு சிரமப்பட்டு கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தான்.

பாவம்! அப்பாவி மனிதர் கோடன். யாரோ ஒப்படைத்த பொறுப்புக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பயத்தில் கழித்து இப்போது உயிரையும் விட்டிருக்கிறார். என்ன வாழ்க்கை இது?

தாத்தனைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை அவனால். அவனுக்கு விவரம் தெரிந்த நாள் முதலாக தாத்தனை இத்தனை தளர்வாய்க் கண்டதில்லை அவன்.

எல்லாம் இந்தப் பிசாசு செம்பாவால் வந்தது. சினம் பெருக்கெடுத்த அதேவேளையில் பயமும் சூழ்ந்துகொண்டது. வயது வந்த பெண், தனியாக எங்கே எப்படி இருக்கிறாளோ?

``கோடனின் இறப்புக்குக் காரணம் புரிகிறதா சங்கா?”

``புரியாமல் என்ன தாத்தா? செம்பாவைச் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டுமே என்று பதறுகிறது. கோடனுக்கு ஏற்பட்ட கதி, அந்த ஆபத்து உங்களுக்கும் எனக்கும் அதைவிடப் பன்மடங்கு அந்தப் பிசாசுக்கும் இருக்கிறது என்பது தெரிகிறது தாத்தா. ஆனால் அவள் இருக்குமிடம் தெரியாமல் இப்போது நாம் செய்வதற்கு ஒன்றுமில்லையே!”

செம்பா
செம்பா

``எப்படியும் கண்டுபிடித்துவிடலாம்தானே சங்கா?” சிறுபிள்ளைபோல கேட்கும் தாத்தனுக்குப் பதில் சொல்லச் சிரமப்பட்டான் சங்கன்.

``பூந்தொடைத் திருவிழா என்று சொன்னார்களே தாத்தா. கண்டிப்பாக அவள் வருவாள். மன்னரைப் பார்ப்பதுதானே அவள் நோக்கமாக இருக்கும்.”

``பார்ப்பதோடு நிறுத்திக்கொள்வாளா சங்கா?”

``அதற்குள் அவளைப் பிடித்துவிடலாம் தாத்தா. எப்படியும் திடலில் வைத்து அவளைக் கண்டுபிடித்துவிடலாம்.”

``ஆமாம். கண்டுபிடித்துவிடலாம்.” உடன் சொல்லி தனக்குத்தானே துணிவூட்டிக்கொள்ள முயன்றார் திரைநாடன். பின் சற்று நேரம் அமைதியாகக் கழிந்தது.

``பாவம் குழந்தை என்ன செய்கிறாளோ!” திடீரென தாத்தனின் குரல் தழுதழுத்தது. சங்கனுக்கு நெஞ்சை அடைத்தது.

``அவளைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா தாத்தா? அதெல்லாம் இந்நேரம் ஆள் பிடித்து இடம் சரிசெய்து சொகுசாக உறங்கிக்கொண்டிருப்பாள்.” அந்தச் சமாளிப்புக்குப் பின்னான அமைதியில் இருவரும் கண்ணீரை இருளுக்குள் கரைத்துக்கொண்டிருந்தனர்.

பொழுது புலர்ந்தது.

பலவிதமான முன்னேற்பாடுகளோடும் கணக்கீடுகளோடும் விழாவுக்குத் தயாராகிக்கொண்டிருந்த அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றிவிடும் முனைப்போடு, எழுந்து பூரித்த பொன்வானின் பின்னணியில் அன்றைய திருவிழாவுக்காகத் தன்னை அலங்கரித்துக்கொள்ளத் தொடங்கியது கொற்கைப் பெருந்துறை.

(தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism