Published:Updated:

செம்பா:`அந்த ஒற்றை அம்பு...’ கொற்கையே ஸ்தம்பித்து நின்றது | பகுதி 19

செம்பா

``இவனிடம் வீரம் பேசி, பெருமையடித்துப் பழிதீர்க்கும் பசியைக் கொஞ்சமாவது ஆற்றிவிட்டுப் பின் கொல்லலாமென நினைத்தாளே!”

செம்பா:`அந்த ஒற்றை அம்பு...’ கொற்கையே ஸ்தம்பித்து நின்றது | பகுதி 19

``இவனிடம் வீரம் பேசி, பெருமையடித்துப் பழிதீர்க்கும் பசியைக் கொஞ்சமாவது ஆற்றிவிட்டுப் பின் கொல்லலாமென நினைத்தாளே!”

Published:Updated:
செம்பா
குயா நகரின் புறம்பே, கொரியா

பெருந்துறைப் பொதுச்சாலையில் நீண்டு நெளிந்த விளக்குகளின் ஒளி உதவாத தூரத்தில் தனித்து மாட்டிக்கொண்டிருந்த சுரோ, அந்த பயம் கொஞ்சமும் இல்லாதவனாக தன்னைப் பார்த்துச் சிரிப்பது கண்டு புருவம் உயர்த்தினாள் அந்தப் பெண்.

`வெட்டிப்போட்டால் வந்து பார்க்க நாளையாகும். எந்தத் துணிவில் இப்படிச் சிரிக்கிறான் இவன்...’ என்று அவள் எண்ணிப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே, ``எல்லாம் என்மீதுள்ள துணிவில்தான்” என்று சுரோ சொல்லவும், அவள் திணறிப்போனாள். `முகத்தில் பாதி மூடியிருக்கிறேன், அப்படியும் நான் நினைப்பதைப் படிக்கிறானா’? அப்படியென்றால் அவள் கேள்விப்பட்டது எதுவும் தவறில்லை. எல்லாம் உண்மையே. ஆனால் அது எதுவும் அவளைத் தடுத்துவிடாது.

``நான் யாரென்று தெரிய வேண்டுமா?” அவளது குரலில் இழையோடிய ஏளனத்தில் சிறுபிள்ளையின் அசட்டுத் துணிவு தெளிவாகத் தெரிந்தது சுரோவுக்கு.

இளம்பெண். இஜினாசியைவிட நான்கைந்து வயதாவது சின்னவளாயிருக்கலாம். இப்படிக் கோபம் கொப்புளிக்கத் தன் முன்னே வந்து நிற்பதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். அந்தக் காரணத்தை அவன் கடைசியாக யாருக்களித்தான் என்ற துரித சிந்தனையில் எங்கோ ஓரத்தில் நினைவிலிருப்பதாகத் தோன்றிக்கொண்டிருந்த முகம் பளீரென்று நினைவுக்கு வந்துவிட்டது. அது அவன் புன்னகையில் வெளிப்பட்டது.

``வேண்டாமே! தெரிய வேண்டாமே!”

அப்படியொரு பதிலை எதிர்பார்க்காதவள் சிறிது குழம்பி நின்றாள்.

``உயிரோடு திரும்பிப் போக வேண்டுமென்ற ஆசையில்லையா?”

``என்னைக் கொன்றுவிடலாமென்று உண்மையிலேயே நம்பிக்கொண்டிருக்கிறாயா பெண்ணே? அப்படியே கொன்றுவிட்டுப்போய் நீ நிம்மதியாக இருந்துவிடுவாயா என்ன?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஏன் எனக்கென்ன ஆகும்?”

``கூட்டமைப்பின் விசாரணைக்குழுவைப் பற்றி அவ்வளவு சாதாரணமாகவா எடைபோடுகிறாய்?”

``அதெல்லாம் என்னைப் பற்றி ஒருவருக்கும், ஒன்றும் தெரியாது. நான் யாரென்று யாருக்கும் தெரியாதபடி தானே உன்னை இங்கே இட்டுவந்தேன்.”

``அப்படி நீ நம்பிக்கொண்டால் போதுமா?” அவனது பதில் கேட்டு அவள் கண்கள் சட்டெனப் பீதியில் உறைந்தன.

``சுங்யோ (தேவி) அவன் உங்களைக் கலவரப்படுத்தப் பார்க்கிறான். பயங்கொள்ளாதீர்கள். உத்தரவு தாருங்கள். அவன் தலையை வெட்டி நக்தோங் நதியில் உருட்டிவிடுகிறேன்.”

``கிழித்தாய்! பேசாமல் நான் சொல்வதை மட்டும் செய். வாய் பேசாதே.” அவள் உருட்டவும், வாள் மடங்கிப் பின்னே போனது. அவள் கையைக்கட்டிக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

கொல்வதற்கு முன் ஏதோ சொல்வதற்கு ஆசைப்படுகிறாள்போல. சுரோவுக்கு எல்லாமே வேடிக்கைபோலிருந்தது.

``இதோ பார். நான் எதற்காக உன்னைப் பிடித்திருக்கிறேன் தெரியுமா?”

``இப்படிக் கதையளக்கத்தானா? எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லையம்மா. கொல்வதென்றால் சீக்கிரம் வேலையைத் தொடங்குங்கள்.” சுரோ வாளை உறையினுள்ளே வைத்துவிட்டு தானும் கையைக்கட்டிக்கொண்டு நின்றான். அதாவது வாளுக்கு வேலையில்லையாம்.

அவளுக்குச் சுறுசுறுவெனக் கோபம் வந்துவிட்டது. யாருக்கும் தலை வணங்காத, நெஞ்சு நிமிர்த்திய வெண்வேங்கைபோலக் கம்பீரமாகத் திரிந்த மனிதரைச் சிறையில் அடைத்துவிட்டு எத்தனை திமிர் இருந்தால் இப்படி நின்று சிரிப்பான்.

இவனிடம் வீரம் பேசி, பெருமையடித்துப் பழிதீர்க்கும் பசியைக் கொஞ்சமாவது ஆற்றிவிட்டுப் பின் கொல்லலாமென நினைத்தாளே!

போதும்! இவனுக்கு இடம்கொடுத்தது போதும். பேசாமல் கொன்று போட்டுவிட்டுப் போனால கூடிய விரைவில் தான் நினைத்ததை முடித்துக்கொள்ளலாம்.

``அடேய்! இவன் குரல் கேட்க எனக்கு அலுப்பாயிருக்கிறது. சீக்கிரம் முடித்துவிடுங்கள்.” சொல்லிவிட்டுப் பாறையில் சாய்ந்தாள். ஐந்து அசாத்திய வீரர்களை அழைத்து வந்திருந்தாள். அவர்கள் ஐந்து விநாடியில் அவன் உயிரை எடுத்துவிடுவார்கள் என்பதுதான் அவள் எண்ணம்.

செம்பா:`அந்த ஒற்றை அம்பு...’ கொற்கையே ஸ்தம்பித்து நின்றது | பகுதி 19

ஆனால் ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்களாகியும் யாராலும் அவனை அயரக்கூடவைக்க முடியவில்லை. அவர்கள் தான் களைத்தும் அடிபட்டும் விழுந்துகொண்டிருந்தனர். கூட்டி வந்தவர்களின் மீது நம்பிக்கை குறைந்து தனது இடையிலிருந்த குறுவாளை அவள் எடுக்கத் துணிந்த நேரம் கடைசி வீரனையும் வீழ்த்திவிட்டு வாள்முனையை வஞ்சியவள் கழுத்தில் பதித்துவிட்டு, அதே இளம்புன்னகையைச்செலுத்தியபடி ``சிறையில் உன் தகப்பனார் ஹிம்சான் சுகம்தானா?” என்று கேட்டவனை வெஞ்சின விழிகள் விரித்து முறைத்துப் பார்த்தாள் அவள்.

********************************

கொற்கைப் பெருந்துறை கோலாகலமாகத் தயாராகிக்கொண்டிருந்தது.

பாண்டியன் நெடுஞ்செழியன், அவன் தம்பி ஆகியோரின் திருமேனிகளைத் தழுவும் ஆசையில் மாலைகளும் மலர்ச்சரங்களும் வீதிகளெங்கும் அழகுப்பெண்டிரின் கைகளில் காத்திருந்தன. தோரணங்களும், தூபங்களும், தூய்மை செய்யப்பட்ட பாதைகளும், ஆங்கே முளைத்திருந்த பலகாரக்கடைகளிலிருந்து எழுந்த பண்ட வாசனைகளும், புத்தாடையில் மினுங்கிய மக்களுமென அங்கே ஒரு தேவலோகமே உருவாகியிருந்தது.

``பார்த்துக்கொள். இன்னும் நான்கு நாள்களில் இந்தத் தெரு பழையபடி சகதிக்காடாகப் போகிறது.” எவனோ ஒருவன் பாக்கு மென்றபடி அங்கலாய்த்துக்கொண்டிருந்தான்.

``தினப்படி குதிரைகள் புழங்கினால் அப்படித்தான் இருக்கும். நாள்தோறும் திருவிழாவைக்க இதென்ன இந்திரலோகமா?”

``ஓகோ! கொற்கையைவிட அழகாக இருந்துவிடுமா அந்த இந்திரலோகம்?”

ஒன்றுமற்ற பேச்சுக்கும் ஓங்கிச் சிரித்து, கொண்டாடிக்கொண்டிருந்தவர்களைப் பரிதாபமாகப் பார்த்தபடி நகர்ந்து கொண்டிருந்தான் கண்ணன். அவன் கண்கள் யாரையோ தேடிக்கொண்டிருந்தன.

கண்ணனுக்குப் பின்னே டோரியனும் போவும் தமிழகத்தின் திருவிழாக் கூட்டத்தை முதன்முறையாகப் பார்ப்பதால் யாவற்றையும் பார்த்து அசந்து சிலாகித்தபடியே நடந்துகொண்டிருந்தனர். கண்ணன் எதற்காகவோ காத்திருக்கிறான், அந்தக் காத்திருப்பின் முடிவு இன்றாக இருக்கலாமென்ற அனுமானம் மட்டும் அவர்கள் இருவருக்கும் இருந்தது. குதிரைகள் தடைசெய்யப்பட்ட அன்றைய திருவிழாத் தெருவில், கொற்கைக்கரையில் அலைகளுக்கு ஒதுங்கிக் குவியும் முத்துச்சிப்பிகளைப்போல மக்கள் கூட்டம் குவிந்து நகர்ந்துகொண்டிருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தக் கூட்டத்தில் அவர்களைப்போலவே இன்னும் இருவர் மக்களின் முகங்களைக் கூர்ந்து கவனித்தபடி நகர்ந்துகொண்டிருந்தனர்.

``தாத்தா இவ்வளவு கூட்டம் இருக்குமென்று நான் நினைக்கவேயில்லை.” நேரம் போய்க்கொண்டிருக்கும் பதற்றத்தைக் குரலிலிருந்து மறைக்க முயன்றபடி பேசினான் சங்கன்.

``ம்ம்... இத்தனைக்கும் இது இளவரசரின் பூந்தொடை விழாதான். இதுவே முந்நீர்விழாவென்றால் இதுபோல பன்மடங்கு கூட்டமிருக்கும். நாலா திக்கிலிருந்தும் மக்கள் வந்திருப்பார்கள்.”

``ம்க்கூம்... இதற்கே நகர வழியின்றி மிதந்துகொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டத்தில் எப்படி அவளைக் கண்டுபிடிப்பது? பெண்களை உற்றுப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஏதாவது தவறாகப்பட்டு அது வேறு விபரீதமாகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது தாத்தா. அவள் இருந்தாலும் தொல்லை. இல்லையென்றாலும் தொல்லை. எனக்கென்று வந்து வாய்த்தாளே தங்கையென்று ஒருத்தி! கிராதகி!”

``சங்கா... அதோ அந்தப் பெண்ணைப் பார், கொண்டைபோட்டவள்.” ஒரு பெண்ணைக்காட்டினார் திரைநாடன். பின்னிருந்து பார்க்கச் செம்பவளத்தின் சாயல்.

``ம்ஹூம்.செம்பவளத்தின் கூந்தல் அத்தனை சிறிய கொண்டையில் முடிய வாய்ப்பில்லை.

அவளைப்போல அவள் முடியும் அடங்காது. பின்னலிட்டுத்தான் போடுவது அவள் பழக்கம்.” இருவரும் ஊசிக் கண்களோடு கூட்டத்தை அளந்தபடி பூந்தொடைத் திடல் நோக்கி நகர்ந்தனர்.

திடீரென உற்சாகக் குரல் ஓங்கி ஒலிக்கலாயிற்று.

``இளவரசர் வருகிறார்! இளவரசர் வருகிறார்!” செவி வழிச்செய்தி காற்று வேகத்தில் கடந்துவந்த சில நொடிகளில் கொம்பொலியும் முரசொலியும் தூரத்தில் கேட்கலாயிற்று. அது திடல் நோக்கி வேக வேகமாக வரலாயிற்று.

அழகிய வேலைப்பாடமைந்த சிறு பூந்தேரில் கொற்கை இளவரசனான இளவழகன் நாயகனாக வீற்றிருக்க வெகு வேகமாகத் திடலை அடைந்தது அந்தத் தேர். மக்கள் பூமாரிப் பொழியலாயினர். அத்தனையையும் அழகிய இளம் புன்னகையோடு ஏற்றுக்கொண்டிருந்தான் இளவரசன்.

தொடர்ந்து சில நாழிகைகள் ஏதேதோ சடங்குகள் நடந்தேறின. விரைவில் பாண்டிய மாமன்னர் நெடுஞ்செழியனும் வரக்கூடுமென்ற அலர் வேறு காற்றில் சந்தனமாக மணத்துக் கலந்தது. அதைக் கேட்டதும் சங்கனுக்கு பயம் பந்தாக உருண்டு வந்து தொண்டையை அடைத்தது.

இது நேரம்வரை அவர்களது பார்வையில் படாத இந்தச் செம்பவளம் எங்கே இருந்து என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறாளோ தெரியவில்லையே! முரசுகள் அதிர்வதுபோலச் சங்கனின் மனதும் அதிர்ந்துகொண்டிருந்தது. சங்கனும் திரைநாடனும் ஒரு பக்கமும், கண்ணனும் அவன் கூட்டாளிகளும் இன்னொரு பக்கமென அந்தத் திடலைச்சுற்றிய பெருங்கூட்டத்தில் அவளைத் தேடிய அத்தனை கண்களுக்கும் அகப்படாமல் ஒரு மண்டபத்துக் கூரையின் மேல் தாழ்ந்திறங்கிய மரக்கிளையின் மறைவில் அமர்ந்திருந்தாள் செம்பா. அருகே கைகளைச் சொறிந்தபடி எழினி.

``என்ன செம்பா இது? மனிதர்களைப்போலத் தரையில் நடக்காமல் மந்தியைப்போல மரத்திலேற்றி வைத்திருக்கிறாய். இதெல்லாம் எனக்குப் பழக்கமே இல்லை.”

``நீ மலைநாட்டினள்தானே? மரத்திலேறுவதெல்லாம் உனக்கு விளையாட்டுப் பயிற்சியாக இருக்குமென நினைத்தேனே!” கண்களில் கேலி மின்னக் கேட்டாள் செம்பா.

``சொல்ல மாட்டாயா நீ? நான் உன்னைப்போலச் சேட்டைக்காரியில்லையே... நான் உண்டு, என் குடில் உண்டு என்று இருந்தவள். அது சரி... இங்கே இப்படி அமர்ந்திருப்பதால் எப்படி நம் திட்டம் நிறைவேறும்? வேகமாக என்னால் இறங்கக்கூட முடியாதே!”

``ஒன்றும் அவசரமில்லை, முதலில் காட்சித் தெளிவு வேண்டும். இங்கேயிருந்து பார்த்தால் எல்லோரையும் நன்றாகப் பார்க்க முடிகிறது. ஆனால் என்னை யாராலும் பார்க்க முடியாது பார்!”

செம்பா
செம்பா

``இப்போது யார் உன்னைப் பார்க்கக் கூடாதென்கிறாய்... உன் தமையனாரா?”

``அவனும்தான்.”

``வேறு யார்?”

``அன்று அங்காடியில் பார்த்தோமே... சேர நாட்டு வணிகன்.”

``ஆமாம் அவனுக்கென்ன?”

``அங்கே பார்!”

செம்பா காட்டிய திக்கில் கண்ணனும் அவன் தோழர்களும் செம்பவளத்தின் சாயலில் இருந்த பெண்களாகப் பார்த்துப் பார்வையால் அலசுவது தென்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அவர்களின் வேலையே பெண்களைக் கண்களால் கழுவுவதுதானோ என்னவோ... உன்னைத்தான் தேடுகிறார்கள் என்று எப்படி நினைக்கிறாய்?”

``தீர்மானமில்லை. அனுமானம்தான்.” சொல்லிக்கொண்டே பார்வையால் கூட்டத்தை ஆராய்ந்தவள் கண்கள் ஓரிடத்தில் நிலைத்தன.

நிலைகொள்ளா தவிப்போடு சங்கனின் கண்கள் அலைவதை பார்க்க நெஞ்சு கனத்தது. ஓடிப்போய் `இங்கிருக்கிறேன் சங்கா...’ என்று கத்த வேண்டும் போலிருந்தது.

``எழினி, என் அண்ணனைப் பற்றிச் சொன்னேனே!”

``அவரைப் பற்றித்தானே இரவெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாய் அவருக்கென்ன?”

``அதோ அதுதான் சங்கன். உடனிருப்பது என் தாத்தன். அப்பாவைக் காணவில்லையே!” செம்பவளம் கைகாட்டிய உருவத்தைக் கண்ட எழினி நிதானமாக அந்த உருவத்தை எடை போடலானாள்.

பரவாயில்லை! செம்பவளம் சொன்னதெல்லாம் பொய்யல்லதான் என்று தோன்றியது. கண்களில் ஒருவித பரிதாபமான பாவத்தோடு சுற்றிக்கொண்டிருந்தான். மிகவும் தவிக்கிறான்போலிருக்கிறது.

``வெற்றி வேல் வீரவேல்…”

``வெற்றி வேல் வீரவேல்…”

திடீரெனத் தூரத்தில் கூக்குரல் எழும்பியது. தொலைவில் நெடுஞ்செழியனின் தேர் வரும் காட்சி கண்ணில்பட்ட நொடி செம்பவளத்தில் உள்ளக்கூட்டுக்குள் செந்தனல் பற்றிக்கொண்டது.

உடல் அதிர்ந்து அதிர்ந்து கண்கள் பொங்கின. மனக்கண்ணில் கரம் வெட்டப்பட்ட நிலையில் தாய் வந்து நின்றாள்.

முழவுகள் அதிர, அதைவிட உரக்க மக்கள் கூச்சலிட, பசும்பூண் நாயகனாகப் பாண்டியனைத் தாங்கிய அந்தத் தேர் மக்கள் வெள்ளத்தில் மிதந்து திடலருகே வந்தது. மன்னன் மேடையேறியும் மக்கள் கூச்சல் நிற்கவில்லை.

``நல் லூழி அடிப் படரப் பல் வெள்ளம் மீக் கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக...”

``வாழ்க வாழ்க!”

``நிலந் தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்...”

``வாழ்க வாழ்க!” மயிற்கூச்செறியும் உற்சாகக் கூவல்கள் விண்ணைப் பிளந்தன. செம்பவளத்தின் இதழ்க்கோடி ஏளனத்தில் வளைந்தது.

``அடேயப்பா! கோடியாண்டுகள்… அத்தனை பழைமையான வம்சமாமே பாண்டிய வம்சம்.”

``இல்லையா பின்னே?”

``நிலமளந்த நெடியோனைவிடச் சிறந்த நிலந்தரு திருவின் நெடியோன் வாரிசாம்…”

``ஆமாம்! கடவுளே பெற்றுக்கொள்ளத்தான் செய்தார். ஆனால் பாண்டிய மன்னனோ கொண்ட நாட்டைத் திருப்பித் தந்து பேருதவி செய்தாரல்லவா?”

``அது இந்த நெடுஞ்செழியனல்ல... இவரது முன்னோர் யாரோ!”

``முன்னோர் பெருமையேந்தும் உரிமை அவருக்கு உண்டுதானே?”

``ஓகோ! உரிமையை மட்டும் எடுத்துக்கொள்வீர்கள். கடமையை மறந்துவிடுவீர்களா? அவர் நிலத்தைத் திருப்பிக்கொடுத்தார். இவர் எதைக் கொடுத்தாராம்?”

செம்பா:`அந்த ஒற்றை அம்பு...’ கொற்கையே ஸ்தம்பித்து நின்றது | பகுதி 19

``செம்பா எனக்குத் தெரிந்த கதை, என் சித்தி சொன்ன கதையைத்தான் சொல்கிறேன். என் தலையை உருட்டாதேப்பா! அதோ மன்னரும் மேடையேறிவிட்டார். இப்போது போனால் சரியாக இருக்குமல்லவா?”

``இல்லை எழினி. திட்டத்தை மாற்றிவிட்டேன்.”

``என்ன சொல்கிறாய் நீ?”

``அதோ பார்! அது என்ன?”

``அது... அது என்னவென்று...”

``நான் சொல்கிறேன். இளவரசரின் விற்போர் பயிற்சியின் தொடக்கம் அது. அவருக்குப் பற்பல குறிகளை எம்பெய்து காட்டி பயிற்சியைத் தொடங்கிவைக்க ஒரு பெருந்தலை வரக்கூடும். அநேகமாக அது கொற்கையின் மன்னன் செங்கமாறானாய் இருக்கலாம். ஆனால் என் உள்ளுணர்வு அந்த நெடுஞ்செழியன்தான் அந்தப்பொறுப்பை ஏற்பான் என்று தோன்றுகிறது.”

``இதையெல்லாம் எப்போது எப்படித் தெரிந்துகொண்டாய் நீ?”

``அதை விடு. இப்போது திட்டமென்ன தெரியுமா?”

``எ... என்ன செய்யப்போகிறாய்?” ஏதோ விபரீதமாகப்போகிறது என்று புரிந்து நடுங்கும் குரலில் எழினி கேட்டுக்கொண்டிருக்கையிலேயே வீர கோஷம் விண்ணைப் பிளக்க குறிக்கம்பம் நோக்கித் தன் வில்லை வளைக்கத் தயாராகி நின்றார், அணிந்து கொண்டிருந்த பொன்னாபரணங்களும், முத்தாரங்களும் தோற்கும் புன்னகைக்கு உடையவரான பாண்டியன் நெடுஞ்செழியன்.

சட்டென அருகே வந்து எழினியை இறுக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் செம்பா.

``மன்னித்துக்கொள் எழினி. நீ கீழே இறங்கிவிடு. தீமைகளை நாடிப்போகும் என்னோடு உனக்கு இனி எந்தத் தொடர்பும் வேண்டா. என்னை மறந்து விடு. அதுதான் உனக்கு நல்லது.”

என்றவள், தன் வில்லாயுதத்தை எடுத்துக்கொண்டு மறைவிலிருந்து வெளிப்பட்டாள். மண்டபத்தின் கூரை மீதிருந்துகொண்டு வில்லை வளைத்தாள்.

நெடுஞ்செழியன் நின்ற இடத்திலிருந்து மூன்று பனை தூரத்திலிருந்த குறிக்கம்பம் ஒன்றில் ஐந்து கிளி உருவங்கள் தொங்கலாடிக்கொண்டிருந்தன. கிளிகளின் தலைகளைக் கொய்யலாமா என்று தம்பியிடம் விளையாட்டாகப் பேசியபடி அவர் வளைத்த வில்லின் நாண் முறுக்கேறிக்கொண்டிருக்கும்போதே கம்பத்திலாடிய கிளிகள்மீது பாய்ந்தது அம்பொன்று. அனைவரும் அசந்து நிமிரும் நேரத்துக்குள் அத்தனை கிளிகளின் உருவங்களையும் ஊன் துளைத்த தீக்கடைக்கோல்போல் துளைத்து நின்றது அந்த ஒற்றை அம்பு.

கொற்கையே ஸ்தம்பித்து நின்றது.

நிலமாளும் பாண்டியனின் அம்புக்கு எதிராக அம்பு தொடுக்க இங்கே யாருக்கேனும் துணிவிருக்கிறதா? அத்தனை கண்களும் அம்பு வந்த திசையை நோக்க…

அங்கே மண்டபத்துக் கூரையின் மீது செஞ்சூரியனின் பின்னொளியில் வில்லேந்திய கொற்றவையாக நின்றுகொண்டிருந்த செம்பவளம் தென்பட்டாள்.

``ஐயோ செம்பா” சங்கனும், திரைநாடனும், எழினியும் பதற, வாயடைத்த கூட்டத்தின் அங்கமாக கண்ணனும் அவன் கூட்டாளிகளும் நிற்க, பாண்டியன் முகத்தில் மட்டும் தீர்க்கமாகப் புன்னகையொன்று எழும்பியது.

``வந்துவிட்டாள்!” என்று மெல்ல முனகிய அவரது குரலில் என்ன உணர்ச்சி இருந்தது என்று புரியாமல் விழித்தான் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீண்டிராத இளவரசன்.

(தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism