Published:Updated:

செம்பா: `சிரிக்கின்ற வாயைக் கிழிக்கின்ற தருணம் கிடைக்காமலா போய்விடும்!’ | பகுதி 20

செம்பா

`மன்னனென்ற மமதையில்தானே இந்த வெடிச்சிரிப்பு சிரிக்கிறான். இருக்கட்டும், சிரிக்கின்ற வாயைக் கிழிக்கின்ற தருணம் கிடைக்காமலா போய்விடப்போகிறது? அது வரை பொறுமை வேண்டும்.”

செம்பா: `சிரிக்கின்ற வாயைக் கிழிக்கின்ற தருணம் கிடைக்காமலா போய்விடும்!’ | பகுதி 20

`மன்னனென்ற மமதையில்தானே இந்த வெடிச்சிரிப்பு சிரிக்கிறான். இருக்கட்டும், சிரிக்கின்ற வாயைக் கிழிக்கின்ற தருணம் கிடைக்காமலா போய்விடப்போகிறது? அது வரை பொறுமை வேண்டும்.”

Published:Updated:
செம்பா
மாளிகை, சாரோ, கொரியா.

இளவரசன் யூரி, எதிரே தேநீர்க் குடுவையிலிருந்து தப்பிக் கோப்பைக்குள் விழுந்து மிதந்த செவ்வந்திப்பூவிதழ்களைப் பார்த்தபடி அசையாமல் அமர்ந்திருந்தான். பெரும் பாரமொன்றை அவன்மீது இறக்கிவைத்துவிட்ட நிம்மதியில் அஹியோ தேநீர் மணத்தில் ஏதேதோ நினைவுகளைத் தேடித் தொடுக்க முயன்றுகொண்டிருந்தாள்.

நிமிர்ந்து பார்த்த யூரியின் கண்களில் தங்கையின் முகத்தில் தெரிந்த பூரிப்பு கோபத்தையும் கனிவையும் ஒருசேர ஏற்படுத்தின. தாயில்லாமல் வளர்ப்புத்தாய்களால் வளர்க்கப்பட்ட சின்னத் தங்கை.

வடக்கே கோகுர்யோ சாம்ராஜ்ஜியத்தின் சிறு மண்டலங்கள் ஏதாவதொன்றின் கிழட்டு அரசனுக்கு அணுக்கியாகவோ அல்லது மேற்கே மாஹான் அரச குடும்பத்து வாரிசுகளில் எவருக்காவது மனைவியருள் ஒருத்தியாகவோ போகவேண்டிய தலையெழுத்து கொண்டவள். இப்படி யாருமற்ற ஒருவனை விரும்புவதாக வந்து நிற்கிறாள். எந்தத் துணிவில் இதை வந்து தன்னிடம் சொல்கிறாள்?

எப்படியாவது இருவரையும் சேர்த்து வைப்பேன் என்கிற நம்பிக்கைதானே? அதுதானே கொஞ்சம்கூடப் பதற்றமற்ற கனவு நிலையைத் தந்திருக்கிறது அவளுக்கு, எண்ணிக்கொண்டே எதிரே பார்த்தான். இன்னும் கனவுலகில்தான் மிதந்துகொண்டிருந்தாள் தங்கை. இதெல்லாம் நடைமுறையில் சாத்தியப்படுமா என்ற சந்தேகம் சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த அளவுக்கு இந்த அண்ணன் மீது நம்பிக்கை. அந்த நம்பிக்கையை எப்படிக் கலைப்பது?

கலைக்கவும் வேண்டுமா? தங்கை அஹியோ தந்த பேரிடிச் செய்தியில் யூரிக்குச் சாதகமாக இருப்பது ஒன்று மட்டுமே.

அது அந்தப்பெயர். சியோக் தல்ஹே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாரோ தேசத்தின் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத பெயராகிவிடுமோ என்று திடீரென அவன் மனதில் முளைத்த கேள்வியைத் தள்ளிவைத்துவிட்டு அமைச்சர் ஹோகோங்குக்கு ஆளனுப்பினான் யூரி.

குயாவின் இரும்பு ரகசியத்தைக் கவர்ந்து வரச்சொல்லிக் கேட்கலாமென ஹோகோங் முன்மொழிந்த அந்த ஒருவன்தானே இந்த சியோக் தல்ஹே!

அப்படியொரு வேலைக்குத் தேர்ந்தெடுத்த ஒருவனைத் தன் மருமகனாக்க தந்தை சம்மதிப்பாரா? ம்ம்ஹூம்... அது அவ்வளவு எளிதல்ல. அதனால் இப்போதைக்கு அஹியோவின் விருப்பம் பற்றியெல்லாம் தந்தையிடம் ஏதும் பேசாமல் இருப்பதே நல்லது. முதலில் தல்ஹேவை எப்படியாவது சாரோவுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். அவன் இரும்பு ரகசியத்தோடு உள்ளே வந்தானென்றால் கூடுதல் நன்மை. தந்தையின் மனதில் தல்ஹே இடம்பிடித்துவிட்டால் அதன் பிறகு எல்லாம் எளிது. ஆனால் இது எதுவும் அவன் மட்டும் செய்யக்கூடிய காரியமல்ல.

ஹோகோங் வரட்டும். அன்று அவர் தல்ஹேவைத் தேர்ந்தெடுக்கக் காரணங்களென்று சொன்னவற்றைத் தாண்டி சொல்லாமல் விட்ட வேறேதோ காரணமும் இருப்பதாக யூரியின் மனதுக்குத் தோன்றிக்கொண்டேயிருந்தது. அதைக் கேட்கவேண்டிய தேவை வந்துவிட்டது. அதற்குத்தான் ஹோகோங்குக்கு அழைப்பு. எங்கிருந்தோ வந்த ஹோகோங் எப்படி சாரோவின் அரசியலில் இன்றியமையாத இடம்பிடித்தார் என்று எண்ணிப் பார்த்தான் யூரி. அவரின் நுண்ணறிவும் திட்ட மேலாண்மையும் எத்தனை சிக்கல்களிலிருந்து சாரோவைக் காப்பாற்றியிருக்கிறது என்றும் மனக்கண்ணில் ஓடியது. அவரின் ஆதரவும் வழிநடத்தலும் இருந்தால் இந்த விஷயத்தில் வெற்றி நிச்சயம். அதுவரை தந்தை அறியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தந்தைக்குத் தெரியாமல் ஒரு விஷயத்தைத் தானே செய்வது இதுவே முதன்முறை என்ற எண்ணம் திடீரென வந்து போனது.

அது ஒருவித அச்சத்தையும், அந்த அச்சத்தை மீறிய பரபரப்பையும் அளித்தது.

ஆனது ஆகட்டும்... அன்புத் தங்கைக்காக ஏதும் செய்யலாம் தவறில்லை என்று தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு அமைச்சருக்காகக் காத்திருந்தான் அந்த இளம் சகோதரன்.

***

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கொற்கைப் பெருந்துறை, பாண்டியநாடு.

குறிக்கம்பத்தில் தனித்தனியே தொங்கலாடிக்கொண்டிருந்த கிளிகளத்தனையும் ஒன்றாக அம்போடு சேர்ந்து ஊஞ்சலாடிக்கொண்டிருப்பதை இன்னும் நம்ப மாட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது கூடியிருந்த மக்கள் கூட்டம்.

ஆனால் பாண்டியன் நெடுஞ்செழியனின் கண்களை மட்டும் மண்டபத்தின் உச்சியில் கொற்றவை வடிவில் நின்ற கொடிமகளின் உருவம் நிறைத்திருந்தது.

செம்பா
செம்பா

எதிரிகளை நேருக்கு நேர் எதிர்கொள்வது மட்டுமா துணிவு?

உலகே ஏற்றுக்கொண்டாலும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை எதிர்த்து நிற்பதும் நெஞ்சுரத்தின் உச்சம்தானே?

ஒற்றை அம்பில் உன்னை நான் அடிபணியவில்லை என்று பெருநிலமாளும் வேந்தனிடம் சொல்லிக்காட்டிவிட்ட அந்தச் சிறுபெண்ணின் செயலில் இருப்பது துணிவா அன்றி வெறும் அசட்டுத்தனமா?

கூட்டத்தில் பெருங்கூச்சல்கள் எழுந்தன. சுதாரித்த வீரர் கூட்டத்திலிருந்து பலநூறு அம்புகள் மண்டபத்தின் உச்சி நோக்கித் திரும்பிய கணம் செழியனின் வலக்கை உயர்ந்தது.

``ம்ம்...”

மன்னனின் கையசைவையும், சிம்மக் கர்ஜனையையும் தொடர்ந்து ஊர் அடங்கியது. விற்களும் வேல்களும் மடங்கிப் பணிந்தன.

தூரத்தில் நின்ற உருவைச்சுட்டியபடி, ``இந்தக் கணம் முதல் அந்தப் பெண் இந்தப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் சொத்து. என் தனிச்சொத்து. எந்த வகையிலும் அவளுக்கு ஊறு விளைவிப்பவனுக்கு…” மன்னன் முடிக்காமல் நிறுத்திய சொற்றொடர் கூடியிருந்தோர் நெஞ்சங்களிலெல்லாம் குளிர் பரப்பியது.

என்ன சொல்லிவிட்டார் மன்னர்?!

பாண்டிய மன்னனின் தனிச்சொத்தா... அப்படியென்றால் அவருக்குக் காமக்கிழத்தியா... அந்தப்புரத்துக் மகளிர் கூட்டத்தில் ஒருத்தியா... இதுவா செம்பா எதிர்பார்த்த வாய்ப்பு... இது சரியா தவறா? எழினி உள்ளம் குழம்பினாள்.

கூட்டத்துள்ளும் பேச்சு பெருகத் தொடங்கியது.

``இப்படியொன்று நடக்கக்கூடுமோ?”

``என்ன துணிவு பார்த்தாயா அவளுக்கு?”

``துணிவென்ன துணிவு. தினவெடுத்த சிறுக்கி…”

``மன்னரின் தனிச்சொத்தாமே!”

``இந்தத் திமிர் அடங்க வேண்டாமா பின்னே?”

``இனி என்ன ஆகும் இந்தப் பெண்ணுக்கு?”

``என்ன ஆகும்? அந்தப்புரத்தில் ஆனந்த வாழ்க்கைதான்.”

``அடங்காத பெண்ணாகத்தான் தெரிகிறாள். எனக்குத் தெரிந்து எதிரி நாட்டைப்பொருதி அடிமைகளாகச் சிறைபிடித்து வருவார்களே... அதுபோல இவளும் கொண்டி மகளாகத்தான் போவாள்.”

``ஆமாமாம். ஆனால் மன்னரே ஒரு பெண்ணைப் பகிரங்கமாக கொண்டி மகளாக அழைத்துச்செல்வது இது நாள் வரை கேள்விப்படாத ஒன்றாக அல்லவா இருக்கிறது?”

``நம் மன்னர் செய்வதெல்லாமே புதுமைதானே?”

``எவ்வளவு கோபமிருந்தால் இப்படியோர் ஆணையை பிறப்பித்திருப்பார் மன்னர்? ஆனாலும் பாவம் அந்தப் பெண்... எத்தகைய தண்டனையை அனுபவிக்கக் காத்திருக்கிறாளோ!”

``என்ன இப்படிச் சொல்லிவிட்டாய்? தனது அம்புக்கு எதிராக அம்பெய்த கரங்களைக் கொய்யாமல்விட்டாரே என்று ஆத்திரமாக இருக்கிறது எனக்கு.”

செம்பா
செம்பா

``இன்னும் உனக்குப் புரியவில்லையா? இனி அந்தக் கரங்கள் ஒருபோதும் வில்லேந்தப்போவதில்லை. அந்தப்புரத்து மலர்களைக் கொய்ய மட்டுமே பயன்படப்போகின்றன. சரியான தண்டனை.”

``நாடாளும் மன்னரை எதிர்த்தால் இந்தக் கதிதானே கிடைக்கும்?”

மக்கள் பேச்சினூடே அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியாதவர்களாக, ஒற்றை நொடியில் நடந்துவிட்ட அந்தப் பெரும்பிழையை எப்படிச் சரிசெய்வதென்று புரியாதவர்களாக, சங்கனும் திரைநாடனும் வேரோடிப் போய் நின்றிருந்தனர்.

என்ன இந்தப் பெண் இப்படிச் செய்துவிட்டாள்? மெல்ல தன்னிலை உணர்ந்த சங்கன் கூட்டத்தை விலக்கியபடி வேகமாக ஓட முனைந்தான். திரைநாடன் அவனைப் பிடித்து நிறுத்தினார். `பொறு, இப்போது நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்ற அவரின் அவசர எச்சரிக்கை அவனைச் சுட்டது. இனியும் தாமதிக்க என்ன இருக்கிறது... விலங்கு பூட்டி அழைத்துச் சென்ற பின் அவள் முகம் காண்பதும் முடியுமா... என்ன நினைத்து இப்படியொரு வினையை இழுத்துக்கொண்டாள் இந்தப் பெண்?

ஊரே அவளைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தது. அவளை நோக்கிச் சொல்லம்புகள் பாய்ந்தன. மண்டபத்தின் உச்சியிலிருந்து இறங்கிய செம்பவளம் எதையும் சட்டை செய்யாதவளாக யாருக்கும் காத்திராதவளாக வேகமாகத் திடலை நாடிச் சென்றாள். அவள் நடக்கும் திசையில் பாதை உருவானது. வியந்த பார்வைகள் வெளிச்சமிட்ட அப்பாதையில் கம்பீர தோரணையில் நடந்தாள் செழியனை நோக்கி.

செழியனின் முன்னே சென்று நிமிர்ந்து நின்றாள். தூய வெறுப்பின் செம்மை பூசிய அவளது பார்வையைக் கண்ட செழியனின் முறுவல் விரிந்தது. பின் அது பெரும் நகைப்பாக மாறி, திடலை உலுக்கியது. சிறையெடுக்கும் முனைப்போடு அவளைச் சூழ்ந்த வீரர்களை ஒற்றை விரலால் தடுத்தான் செழியன்.

``சிறு கீறல்கூட விழக் கூடாது. பூப்போலக் கொண்டு போக வேண்டும். தெரிகிறதா? ”

வீரர்களுக்கு எச்சரிக்கை செய்தவன் செம்பவளத்திடம் திரும்பினான். என்ன தோன்றியதோ மீண்டும் நகைத்தான். அத்தனையோர் ஆனந்தம். பல நாள் காத்திருந்த பரிசைக் கண்டுவிட்ட ஆனந்தம். பார்க்கப் பார்க்கச் செம்பவளத்துக்குப் பற்றிக்கொண்டு வந்தது. `மன்னனென்ற மமதையில்தானே இந்த வெடிச்சிரிப்பு சிரிக்கிறான். இருக்கட்டும், சிரிக்கின்ற வாயைக் கிழிக்கின்ற தருணம் கிடைக்காமலா போய்விடப்போகிறது? அது வரை பொறுமை வேண்டும்.’ அவளது எண்ணங்களைப் படிக்க முயன்றவன்போல, படித்தவை அவனை இன்னும் வேடிக்கையில் கிளர்த்தியதுபோல சிரித்துக்கொண்டிருந்தான் மன்னன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெடுஞ்செழியனின் நகைப்புக்குப் பின்னிருக்கும் எண்ணம் யாதென்றறியாமல் பயந்து நின்றது கூட்டம்.

“வெகு விரைவில் நாம் மதுரையில் சந்திப்போம்.” மன்னனின் ஆணையைத் தொடர்ந்து ஒரு சிறு கூட்டம் அவளைப் பல்லக்கு நோக்கி அழைத்துச் சென்றது. எந்த மறுப்பும் சொல்லாமல், நிமிர்நடை மாறாமல் நடந்து போனவளை ஊரே வியந்து பார்த்தது.

``போவதோ சிறைக்கு, இதில் தோரணையைப் பாரேன்... பெரிய மகாராணிபோல.”

அடுத்த அரை நாழிகை நேரத்தில் திடல் வெறுமையாகியிருந்தது. நிகழவிருந்த மீதச் சடங்குகள் யாவும் நிறுத்தப்பட்டு அரச குடும்பத்தினர் மாளிகைக்குத் திரும்பிவிட்டனர். கூட்டமும் கலைந்துபோனது. திடலின் ஓர் ஓரத்தில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்த சங்கனை நோக்கி மெல்ல முன்னேறினாள் எழினி.

``இப்படியாகிவிட்டதே தாத்தா. என்ன செய்வது இப்போது?”

``பதறாதே சங்கா! நல்லதுதான் நடந்திருக்கிறது” தோள் தட்டி ஆறுதல் சொன்னார் திரைநாடன்.

``என்ன உளறுகிறீர்கள்?”

``இல்லை சங்கா சிந்தித்துப் பார். அவள் செல்வது மாளிகைக்குத்தான் சிறைக்கு அல்ல.”

``பெரிய வேறுபாடு இருக்கிறதா? எதிரியான சேர மன்னனைச் சிறைவைக்கவே தனியொரு மாளிகை எழுப்பிய மன்னர் அவர். அவரின் மாளிகைக்குப் போகிறாள் தாத்தா. இதில் நன்மை என்ன இருக்கிறது?”

``இருக்கிறது சங்கா.

நான் ஒருபக்கம் இவள் அம்பை மன்னர் கழுத்துக்குக் குறிவைத்துவிடுவாளோ என்று பயந்திருந்தேன்.

அப்படி மட்டும் அவள் செய்திருந்தால் அவளை மொத்தமாக மறந்துவிட்டு கடலிலே ஒரு முழுக்குப் போட்டுவிட்டு குடி திரும்ப வேண்டியிருந்திருக்கும். நல்லவேளை அந்த அளவுக்கு அவள் துணியவில்லை. அம்மட்டுமாவது அவளுக்கு அறிவு வேலை செய்திருக்கிறதே அதுவே நல்லதுதான்.”

``என்ன மண்ணாங்கட்டி வேலை செய்திருக்கிறது? குதிர்போல வளர்ந்துவிட்டாளே... கொஞ்சமாவது அறிவு வேண்டாமா? அந்தபுரப் பரத்தையாவதற்குத்தானா அவளை அரும்பாடுபட்டு வளர்த்தோம்?”

``அப்படியெல்லாம் நடக்காது. செம்பவளத்தைத் தெரிந்தும் நீ இப்படிச் சொல்லலாமா?”

``அதனால்தான் தாத்தா பயமாக இருக்கிறது. அவள் எப்படிச் சமாளிப்பாள்? இன்னும் அங்கே வேறு என்னென்ன சிக்கல்களை இழுத்துக்கொள்வாளோ! ”

செம்பா
செம்பா

``அதெல்லாம் சமாளிப்பாள். எனக்கென்னவோ செம்பவளம் உணர்ச்சி மிகுதியில் இதைச் செய்ததுபோலில்லை. ஏதோ திட்டமிட்டுத்தான் செய்திருப்பதாகத் தோன்றுகிறது.”

``சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே” சங்கனும் திரைநாடனும் திடீரென பேச்சில் புகுந்த பெண்ணை வெறித்தனர்.

``யாரம்மா நீ? நாங்கள் என்ன பேசுகிறோமென்று …”

“தெரியும் பெரியவரே.” எழினி முன்தினம் செம்பவளத்தைச் சந்தித்தது முதல் மண்டபத்திலிருந்து அவள் இறங்கியது வரை சுருக்கமாகச் சொல்லி முடித்தாள்.

``நீங்கள் சொன்னதுபோல அவள் திட்டத்தோடுதான் இந்த வேலையைச் செய்திருக்கிறாள்

முதலில் என்னிடம் வேறொரு திட்டம் சொன்னாள். ஆனால் திடீரென இப்படிச் செய்துவிட்டாள். எனக்கென்னவோ இதுதான் அவளது உண்மையான திட்டம் என்று தோன்றுகிறது. என்னை அச்சுறுத்த வேண்டாமென்று என்னிடம் ஏதேதோ சொல்லி வைத்திருக்க வேண்டும். அவள் எண்ணம் மன்னரின் அருகாமை. அதைத்தான் பெற்றுவிட்டாளே!”

``அருகாமை இருந்தால் போதுமா... பாதுகாப்பு வேண்டாமா? கோபத்தில் என்ன செய்கிறோமெனத் தெரியாமல் இவள் செய்யும் செயல்களால் இதுநாள் வரை நடந்த துயரங்கள் போதாதென மன்னர் மாளிகை வரை போய்விட்டாளே.”

``செம்பா சொன்னது சரிதான்.” பொருத்தமற்ற பதிலோடு எழினி புன்னகைக்கவும் திகைத்து விழித்தான் சங்கன்.

``என்ன… என்ன சொன்னாள்?”

``மதி நுட்பமிகுந்த எனதருமை அண்ணன் எனக்கென்று வந்துவிட்டால் மதிமயங்கிப் பிதற்றுவாரென்று சொன்னாள், அது சரியாகத்தான் இருக்கிறது.”

``பாசத்தில் பேசுவது பிதற்றலாகத்தான் தெரியும் உங்களுக்கு. பயம் எங்களுக்குத்தானே?”

``அதுதான் ஏன் என்று கேட்கிறேன். நேற்றுத்தான் அறிமுகமான எனக்கே செம்பவளத்தின் துணிவில் நம்பிக்கை அதிகமிருக்கிறது. வளர்த்த நீங்கள் இப்படிப் பேசலாமா?”

``நீ கொண்டிருப்பது நடைமுறை அறியாச் சிறுபெண்ணின் அசட்டு நம்பிக்கை. அவளது அவசரத்தால் ஏற்கெனவே ஓர் உயிர் போய்விட்டது தெரியுமா?”

``சங்கா... என்ன இது, இதையெல்லாம் எதற்குச் சொல்லிக்கொண்டிருக்கிறாய்?”

``மன்னியுங்கள் தாத்தா. என்னவோ எல்லாம் தெரிந்ததுபோலப் பேசவும் எனக்குக் கோபம் வந்துவிட்டது.”

``ஏனம்மா, உன் பெயர் எழினி என்றுதானே சொன்னாய். மாலையாகிறதே இல்லம் திரும்ப வேண்டாமா நீ?”

``செம்பாவைவிட்டு எப்படி?”

``என்ன உளறல் இது... அவள் உன்னைப் பின்னோடு வரச்சொன்னாளா... அதுதான் திட்டமா?”

``இல்லையில்லை. என்னை மறந்துவிடு என்று கட்டி, முத்தமிட்டு, விடைபெற்றுக்கொண்டுதான் போனாள். அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? அவள் என் தோழி. அவளுக்காக என்னால் முடிந்த உபகாரம் செய்யத்தான் செய்வேன்.”

``தாத்தா நான் சொல்லவில்லை? தன்னைப்போலவே ஒரு பைத்தியத்தைத் தேடிப் பிடித்துத்தான் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறாள் இரு நாட்களாக. விடுங்கள் இப்போது நாம் என்ன செய்வது?”

``இதில் சிந்திக்க என்ன இருக்கிறது... இனி நமக்கிருப்பது ஒரே ஒரு வழி மட்டும் தானே?” தயக்கமின்றி வந்த பதிலில் ஆண்கள் இருவரும் குழம்பினர். அவனது ஏச்சை அவள் கடுகளவும் மதிக்கவில்லையென்பது அவளது புன்னகையில் தெரிந்தது.

``என்னம்மா... என்ன சொல்கிறாய் நீ... என்ன வழி அது?”

``இதோ இந்த வழிதான்” அழகிய விரல் நீட்டிக் காட்டிச் சிரித்தாள் எழினி. அவள் கைநீட்டிய திசையில் தங்கநிறத் தன்பொருநையின் அருகே நீண்டு படர்ந்தோடியது ஒரு பெருவழி.

அதுதான் மதுரைக்குச் செல்லும் வழி.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism