Published:Updated:

செம்பா: ``எங்கள் குலதெய்வ மகள்; அவளைக் காப்பாற்ற உங்களால் மட்டும்தான் முடியும்” | பகுதி 23

செம்பா

``சந்தர்ப்ப சூழ்நிலை... அவளை அடிமையாக்கி இங்கே இழுத்து வந்துவிட்டார்கள். அவளைப் பறிகொடுத்துவிட்டுப் பரிதாபமாக நிற்கிறோம். எங்கள் குலதெய்வ மகள். அவளைக் காப்பாற்ற உங்களால் மட்டும்தான் முடியும். எப்படியாவது காப்பாற்றிக் கொடுங்களைய்யா!”

செம்பா: ``எங்கள் குலதெய்வ மகள்; அவளைக் காப்பாற்ற உங்களால் மட்டும்தான் முடியும்” | பகுதி 23

``சந்தர்ப்ப சூழ்நிலை... அவளை அடிமையாக்கி இங்கே இழுத்து வந்துவிட்டார்கள். அவளைப் பறிகொடுத்துவிட்டுப் பரிதாபமாக நிற்கிறோம். எங்கள் குலதெய்வ மகள். அவளைக் காப்பாற்ற உங்களால் மட்டும்தான் முடியும். எப்படியாவது காப்பாற்றிக் கொடுங்களைய்யா!”

Published:Updated:
செம்பா
கூடல்நகர் காவிதித் தெரு

சிறு மலர் வனமொன்றினுள் மறைவாக வீற்றிருந்தது அந்த அழகிய மாளிகை. அதன் பின்கட்டுத் தோட்டத்து மாடத்தில் ஒளி மங்கிக்கொண்டிருந்த வானத்தைப் பார்த்தபடி சிந்தனையிலிருந்தார் அவர்.

அல்லும் பகலும் அங்காடிகளின் வணிகக் கூச்சல், சமயச் சான்றோர்களின் பன்மொழி மந்திர உச்சாடனங்கள் என்று மதுரைத் தெருக்களின் ஓசையானது யாரையும் அவ்வளவு எளிதில் தூங்க விடாது. அத்தகைய ஓசை கொஞ்சமாவது மட்டுப்பட்டுத் தெரிவதென்றால் அது மன்னர் மாளிகைக்கு அடுத்து அவரது இல்லத்தில்தான். கூடு திரும்பும் குயில்களின் குரல் மட்டுமே நிரம்பித் ததும்பிய அந்திவேளை அது. அந்த ரம்மிய சுகந்தத்தை ரசிக்க முடியா மனநிலையில் இருந்தார் அவர்.

அந்த அளவுக்குக் கொற்கையிலிருந்து வந்த செய்திகள் அவரது நிம்மதியைக் குலைத்திருந்தன. இந்த ஒரு விஷயத்தில் அவரால் எதையுமே சரியாகக் கணிக்க முடியவில்லைதான். அதனாலேயே இந்தக் குழப்பம், மனக்கிலேசம்.

மன்னர் இன்னும் சில காலத்தில் மதுரை வந்துவிடுவார். அப்போது என்ன நடக்கக்கூடுமெனத் தன் அனுபவ அறிவுகொண்டு பற்பலக் கோணங்களில் சிந்தித்துப் பார்த்து எதுவும் சாதகமாக இருக்க நியாயமில்லை என்று சோர்ந்து சாய்கையில் ஏவலாள் வந்து நின்றான்.

“என்ன?”

“உங்களைக் காணச் சிலர் வந்திருக்கின்றனர்.”

“இன்றைக்கு நான் யாரையும் சந்திப்பதறகில்லையென்று சொன்னேனே?”

“என்ன சொல்லியும் கேட்கவில்லை. பார்த்தேயாக வேண்டுமென்று நிற்கின்றனர். காலையிலிருந்து...”

“சரி வரச்சொல்.”

வந்து நின்ற மூவர் மீதும் மெல்லப் பார்வையை ஓட்டினார். வலி நிரம்பிய முகத்தோடு வயோதிகர், நம்பிக்கையின்மையும் அவசரமும் மிகுந்த பார்வையோடு இளவீரன், திருவிழாவுக்கு வந்தது போன்ற குதூகலத் தோற்றத்தில் இளம்பெண். என்ன வகைக் கூட்டு இது?

“சொல்லுங்கள் நான் உங்களுக்கு என்ன செய்யக்கூடும்?”

“என் பெயர்த்தியைக் காப்பாற்றித் தரவேணும்.” பெரியவரின் கண்கள் சட்டென நிறைந்து வழிந்தன. கலங்கிப் பழக்கமற்ற கண்களென்று தோன்றியது.

“எதிலிருந்து காப்பாற்ற வேண்டும்... என்ன நடந்தது உங்கள் பெயர்த்திக்கு?”

“சந்தர்ப்ப சூழ்நிலை... அவளை அடிமையாக்கி இங்கே இழுத்து வந்துவிட்டார்கள். அவளைப் பறிகொடுத்துவிட்டுப் பரிதாபமாக நிற்கிறோம்.

எங்கள் குலதெய்வ மகள். அவளைக் காப்பாற்ற உங்களால் மட்டும்தான் முடியும். எப்படியாவது காப்பாற்றிக் கொடுங்களைய்யா!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“என்ன? குடும்பப் பெண்ணை அடிமையாக்கி இழுத்து வந்தார்களா... என் செழியனாளும் இத்திருநாட்டில் இப்படியும் பழிபாவம் நடக்கிறதா... ம்ம்?” வெண்கம்பி மீசையைத் தடவிக்கொண்ட மருதனாரின் முகத்தில் ஜ்வாலையாக சினம் அலைந்தோடியது.

“இந்தக்க யமையைச் செய்தது யார்... யார் உங்கள் பெயர்த்தியை இழுத்து வந்தது?”

“உங்கள் செழியன், அதாவது பாண்டிய மன்னர் நெடுஞ்செழியன்தான்” அமர்த்தலான குரலில் சொன்ன சங்கனை நம்ப மாட்டாமல் பார்த்தவர் கண்களில் முதலில் கோபமும், பின் குழப்பமும், அதன் பின்னரே அவர்கள் யாரைத் தேடி வந்திருக்கிறார்கள் என்ற தெளிவினால் ஏற்பட்ட கலக்கமும் தோன்றியது.

செம்பா
செம்பா

தனிப்பட்ட முறையில் இந்தச் சிக்கலை எப்படியாவது சீர்செய்து மன்னனைப் பிடித்திருக்கும் தேவையற்ற வைராக்கியப் பேயை அகற்ற வேண்டுமென்பதுதானே அவரது எண்ணமும்! இந்நிலையில் இவர்கள் வந்து இங்கே நிற்பது நல்லதற்குத்தானா என்று அவருள் கேள்வி எழும்பியது. நேரடியாக உதவினால் மன்னருக்கு எதிராகச் செயல்படுவதாகிவிடும். ஆனால் என்ன செய்வது? மனிதனுக்கு உதவத்தானே விதிகள்.

உதவித்தான் ஆக வேண்டும். மனதில் உறுதியோடு அவர்களை அமரவைத்துப் பேசலானார் அரசனின் அன்புக்குரிய அமைச்சரும், புலவருமான மாங்குடி மருதனார்.

—---------

கியேரிம் கொரியா.

மண்ணாளப் பிறந்தவன், மன்னன் மகன்... யார் நானா?

காற்றின் சடசடப்பில் கொடிகளும் தெருச்சந்தி தெய்வக்கந்தின் மணிகளும் அசைந்தாடின. தனது குடில் வாயிலில் இடப்பட்டிருந்த பலகை மேசை முன் அமர்ந்தபடி குழம்பிய மனதைத் தெளிவிக்க முயன்றுகொண்டிருந்தான் தல்ஹே. அவன் மனதை அலைபாய வைத்த அந்தத் தொங்குமீசைக் கிழவனோ தல்ஹே தந்த நெத்திலி வறுவலிட்ட அரிசிக்கஞ்சியை ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தான்.

“நீங்கள் ஒருவேளை ஆள் மாற்றி…?” கேட்கும்போதே வளர்த்த அன்னை இதேபோல அடிக்கடி சொன்னதும் நினைவில் வந்து பேச்சை இடை நிறுத்தியது. தொங்குமீசை புன்னகைத்தது.

“உனக்கே அதில் ஐயமிருக்கிறது அப்படித்தானே? உன் ஆற்றலும் புகழும் நீ அறியமாட்டாய். போகிறது விடு. இனியும் இப்படி ஏழ்மையில் உழல்வானேன்? வா என்னோடு, புதிய வாழ்வைப் புலப்படுத்துகிறேன் நான்.”

“ஐயா, முதலில் தெளிவாகச் சொல்லுங்கள். நீங்கள் யார்... எங்கிருந்து வருகிறீர்கள்?”

“என் பெயர் ஹோகோங். தற்போது வருவது கிழக்கிலிருந்து. ஆனால் தோற்றுவாய் எனக்கும் உனக்கும் ஒன்றுதான்” இருவருக்கு மட்டுமான ரகசிய வேடிக்கைபோலச் சிரித்துக்கொண்டார்.

“என்னைத் தேடியதாக, என்னைத் தொடர்ந்ததாகச் சொன்னீர்கள். என்றால், என்னால் ஆகவேண்டிய காரியம் ஏதோ இருக்க வேண்டுமே உங்களுக்கு?”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“சுற்றி வளைக்காமல் நீ பேசுவது எனக்கு நிரம்பப் பிடிக்கிறது தல்ஹே. தேவையான பண்பு. உள்ளபடி நீ எனக்குத் தேவைதான். உன்னைச் சுற்றி நான் செய்த பெருங்கணக்கு இன்னும் பலகாலத்துக்கானது. உன் நலன் சார்ந்தது. ஆனால் இப்போதைக்கு எனக்கு நீ தேவைப்படுவது ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காகத்தான்.”

“அது என்ன?”

“குயாவின் இரும்பு ரகசியம்.” தல்ஹேவின் கண்களில் தோன்றிய அதிர்வைப் பதிவு செய்துகொண்டது தொங்குமீசை.

“அதை என்ன செய்ய வேண்டும்?”

“யாருமறியாமல் அதைப் பிரதி எடுத்துக்கொண்டு வர வேண்டும். அப்படி வருவாயானால் உனக்கு ஒளி பொருந்தியதொரு எதிர்காலம் காத்திருக்கிறது.”

“அதாவது நாடாளும் வாய்ப்பு?”

“அதுவும்தான்.” சொன்னபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் ஹோகோங். சற்று நேரம் ஏதும் பேசாமல் வானை வெறித்துக்கொண்டிருந்தான் தல்ஹே. பிறகு திரும்பி கஞ்சிக் கலயத்தை அப்புறப்படுத்த குனிந்தான்.

“பதில் சொல்லவில்லையே!”

“பார்த்தால் தெரியவில்லையா? என் பதில் - முடியாது. முடியவே முடியாது.”

“சிந்தித்துச்ப்சொல் தல்ஹே. மறைந்து மண்ணாய்ப் போன உன் தகுதியை மீட்டெத்துக்கொள்ள உனக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான வாய்ப்பு. இது போன்ற வாய்ப்பு இன்னொருமுறை கிடைக்காது.”

“என்ன மறைந்துபோன தகுதி? என் தகுதி எதுவோ அதை நானே நிர்ணயம் செய்கிறேன். செய்வேன். இனி இது பற்றிப் பேசுவதானால் இங்கே நீங்கள் வரவே வேண்டாம். இப்போது நடையைக்கட்டுங்கள்.” வேறு பேச்சின்றி மற்ற பணிகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தான் தல்ஹே.

ஹோகோங், தனது இந்த முயற்சி தோல்விதான் என்று ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது மற்றொரு கணக்குக்குச் சரியான விடையைத்தான் விட்டு வைத்திருக்கிறானென்ற களிப்பு மேலேறியது. ஏமாற்றத்தை மீறி எழும்பிய பெருமிதத்தோடு எழுந்து நடந்தார் ஹோகோங்.

—----------

புறச்சேரி,

மாமதுரைக் கோட்டைப் புறம்பு

மதங்கொண்ட மனிதனின் மனம்போல புறச்சேரியின் தெருக்கள் குறுகிக் கிடந்தன. மதுரைப் பெருந்தெருவை அழகூட்டிய பலதரக் கொடிகளும் வண்ணச்சாந்து ஓவியங்களும், வெண்பூச்சுகளுமற்ற வெற்றுச் சுவர்களில் நிரந்தர அழுக்குப் படிந்துகிடந்தன. ஏழ்மையின் வெம்மை வையையாய் வழிந்தோடிய தெருவின் வழியே வேடிக்கை பார்த்தபடி போய்க்கொண்டிருந்தனர் தலைச்சீரா அணிந்த இளைஞனும், கரிய முகமும் அழுத்தமான கொண்டையும் போட்ட பெண்ணொருத்தியும்.

வரிசையாய் வறியோர் குடில்கள்.

பனைத்தாள் கூரைகளை ஆதரவாய்ப் படர்ந்தோடின பூசணிப்படலைகள். அப்படியொரு குடிலின் எதிரே சிறு வட்டிலில் அன்னை அரிந்து போட்டுக்கொண்டிருந்த வேளைக் கீரையையே ஏக்கமாய்ப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது சிறு பிள்ளையொன்று.

“இதோ பிள்ளாய் இங்கே வா” அழைக்கவும் அன்னையைப் பார்த்தது. அவள் கண்காட்டவும் எழுந்து வந்தது.

“பார்! சுவையான அப்பம். ம்ம்... எடுத்துக்கொள்.” சுருட்டிய இலையின் மணத்தைச் சேர்த்துக்கொண்டு சுடச்சுட மணத்த அப்பங்களை ஆசையோடு பார்த்துவிட்டு மீண்டும் அன்னையைப் பார்த்தது. அவள் இவர்களைப் பார்த்தாள்.

செம்பா
செம்பா

அப்பம் தந்த பெண்ணின் முகத்துப் புன்னகையைப் புரிந்துகொண்டு அன்னை இசைவாய்த் தலையசைக்கவும், ஆசையாய் வாங்கித் தின்னத்தொடங்கியது குழந்தை. வெல்லம்கூடிய எச்சில் ஒழுக அது தின்னும் அழகை கண்கலங்கப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தாயானவள். இவர்கள் விலகி நடந்தார்கள்.

“பொன்பூண் பாண்டியனின் வளங்கொழிக்கும் மதுரையில்தானா இருக்கிறோம்?” அவன் கேட்க அவள் உணர்ச்சியற்ற புன்னகையொன்றைச் சிந்தினாள்.

“மாட மாளிகை, கூட கோபுரமென என்னவோ பெரிய பேச்சு மட்டும் பேசியாகிறது. வந்து பார்த்தால்தானே ஓட்டை உடைசல் தெரிகிறது.”

“ஓகோ! தம்பிக்குக் கோபம் வருவதேனோ... அது சரி உங்கள் குடியில் தனியாய்ப் புறச்சேரி இல்லையோ... எப்படி இருக்கும்... ஊரே சேரிபோல இருந்தால் தனியாகச் சேரி வேண்டுமா என்ன?” இடக்காக அவள் கேட்கவும் சுறுசுறுவென வந்துவிட்டது அவனுக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இதோ பாரம்மா ஊசிக்கொண்டைக்காரி! நீ ஒய்யாரப் பெருந்தேரில் ஊர்வலம் வருகிறவள்தான் இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக உன்னைத் தவிர அத்தனை பேரும் இல்லாதப்பட்டவர்கள் என்று இழிவாய்ப் பேசாதே. நாங்களென்ன ஆசையாகவா அழுக்குச்சேரியில் இருக்கிறோம்? உங்கள் பாண்டிய மன்னன் செய்யும் பரிபாலனையின் லட்சணம் அப்படி.” சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான்.

ஐயோ! என்ன சொல்லிவிட்டோம்!

அன்புக்குத் தழைபவள்தானென்றாலும் கோபம் வந்தால் கொடுங்கொற்றியாயிற்றே. வாயைக் கிழித்துவிடுவாளே.

என்ன சொல்லப்போகிறாளோ என்று ஓரக்கண்ணில் பார்த்தால் குறுஞ்சிரிப்புடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். அவனது பயந்த பார்வையைப் பிடித்துக்கொண்டதும் கடகடவென சிரித்தாள்.

சிரிப்பா அது? மனிதனைக் காவு வாங்கும் சிரிப்பு. சரியான கொல்லிப் பாவை.

“ஒரு வகையில் நீ சொல்வதும் சரிதான். ஆனால் இந்த ஏற்றத்தாழ்வு ஏன்... இதுவரை இல்லாதபடி இயவருக்கும்கூட சேரிகள் படைத்த பாண்டியனின் குற்றமா அல்லது தொழிலின் வருமானத்தையொட்டி அவர்களின் வாழ்க்கை நிலை அமைவது அவர்களின் குற்றமா?” உரக்க சிந்தித்துக்கொண்டு நடந்தாள் அவள்.

“தொழிலும் பிறப்பால் வருவதுதானே... அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்?

எத்தொழில் செய்தாலும் உண்ண உணவும், உடுக்க உடையும் கிடைக்காத நிலம் நந்நிலமா?”

“அதெப்படி... பிறப்பால் வரும் தொழிலை மாற்றக் கூடாதென யார் சொன்னது... எல்லாம் நம் தேவையைப் பொறுத்ததுதானே... ஆர்வத்தைப் பொறுத்ததுதானே? புலைத்தி மகன் வாணிபஞ் செய்ய விரும்பினால் செய்யட்டுமே, செய்து பொருளீட்டட்டுமே! ஆனால் நீ சொல்வதில் ஒன்று சரிதான். நல்ல தலைவனின் ஆட்சியில் எத்தொழில் செய்பவனும் பசியின்றி வாழ வேண்டும்.” தான் விளையாட்டாகச் சொன்னதன் காரணத்தால் அவள் கண்களில் புதியதொரு ஒளி நிரம்பியதை கவனிக்கவில்லை அவன்.

“அப்படியென்றால் பிறப்புச் சொல்லாத தொழிலைச் செய்வது சரி என்கிறீர்களா?”

“தவறு என்பாயா... நின்ற நீரின் அளவில்தான் ஆம்பல்களின் தலை நீளும். உன் முயற்சியும் ஆற்றலும் ஓடுகின்ற வேகத்துக்குத்தானே உன் உயர்வும் தாழ்வும் அமையும்... நம் முன்னோர் குடிகளில் தலைவன் எப்படி அமைந்தான்?

அறிவும் ஆற்றலும் கொடையும் நிறைந்தவன்தானே தலைவனான்?

அப்படியென்றால் ஒரு தொழிலின் பண்பை வளர்த்துக்கொண்டால் அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதானே விதி?”

“இது எல்லோருக்குமான பொதுவிதியா?” அவளையே பார்த்தபடி அவன் கேட்கவும் அதுவரை ஆர்வமாகப் பேசியவள் கண்கள் சோர்ந்து தாழ்ந்தன. உள்ளிருந்து பெருமூச்சொன்று வெளிப்போந்து கரைந்துபோனது.

“பொதுவிதியாகத்தான் இருக்க வேண்டும். பெண்களுக்குமான பொதுவிதியாகத்தான் இருக்க வேண்டும்.”

“பிறகு ஏன் இருப்பதில்லை?”

“எல்லாம் உங்களால்தான்.”

“எங்களாலா?”

“பெண்களின் பேராற்றலில் உங்களுக்கு பயம். அடக்கிவைப்பதே உங்களின் அறமென நினைக்கிறீர்கள்.”

“பெண்கள் ஏன் அடங்கிப்போகிறீர்களாம்?”

“அடங்கிப்போகிறோமென யார் சொன்னது? தேவையென்றால் வெடிக்கத்தான் செய்வோம். இப்போது வெறுமனே வேடிக்கை பார்க்கிறோம்.” எங்கோ பார்த்தபடி அவள் சொல்லவும் அவன் சட்டென நகைத்தான்.

“நல்ல கதையாக இருக்கிறது நீங்கள் சொல்வது. இதோ வீட்டுக்குப் போனதும் நானும் உங்கள் வீரத்தை வேடிக்கை பார்க்கத்தானே போகிறேன்! ஆனால் ஒன்று சொல்லுங்கள், ஒருவேளை ஒரு பெண்ணுக்கு நீங்கள் சொல்வதுபோல வேறு இலக்கு, அதாவது இந்த நிலம் எழுதிய விதிகளைத் தாண்டிய இலக்கு இருந்தால் என்ன செய்வது?” அவன் நிறுத்தி நிதானமாகக் கேட்கவும் நடந்துகொண்டிருந்தவள் நின்று திரும்பினாள்.

கண்களில் மீண்டும் புத்தொளி. இவனின் ஒவ்வொரு சொல்லும் செயலும் மனதில் புதிய சிந்தனைகளை உண்டாக்குகிறதென்று தோன்றியது அவளுக்கு. ஆனால் இல்லை அவை புதிய சிந்தனைகளல்ல. எல்லாப் பெண்ணுக்குள்ளும் பொதிந்து கிடக்கும் சிந்தனைகளைத் தோண்டியெடுக்கிறான். கிராதகன்.

செம்பா
செம்பா
“ஆணென்ன பெண்ணென்ன... உள்ளத்து நெருப்பு உனக்கென்ன சொல்கிறதோ அதைச் செய்யாத வாழ்க்கையை வாழ்ந்தென்ன பொருள்?

அவள்… அந்தப் பெண்ணுக்கு இருக்கும் ஆசை அது அடுத்தவரைத் துன்புறுத்தாதவரை அவள் தன் இலக்கு நோக்கிப் பயணிப்பதை யாரும் தடுக்க முடியாது. ஒன்று தெரிந்து கொள் தம்பி! ஒரு பெண் மனது வைத்துவிட்டால் அதை மண்ணாளும் மன்னவன் எதிர்த்தாலும் அவளால் செய்ய முடியும்.”

“ஆனால் பாழாய்ப்போன பெண்கள்தான் மனது வைப்பதேயில்லை அப்படித்தானே?”

“அப்படித்தான். தன்னம்பிக்கையோ துணிவோ இன்றி கொடுக்கப்பட்ட வாழ்க்கையை மட்டும் வாழ்ந்து முடிக்கிறவர்களாக சுருங்கிப்போய்விட்டார்கள்.” அவன் மீண்டும் ஓரப்பார்வை பார்க்க,

“போய்விட்டோம்” என்று தோல்வியை ஒப்புக்கொள்பவள்போல முடிக்க இருவரும் கலகலத்துச் சிரிந்தனர். கோட்டை வாயில் தாண்டி மதுரைப் பெருந்தெருவில் கலந்தவர்கள் நெடுநாள் நட்புபோல சலசலவெனப் பேசிக்கொண்டே கடைவீதிகளைச் சுற்றியபடி அவர்களின் இருப்பிடம் வந்தபோது மாலை மங்கி இருள் கூடத் தொடங்கியிருந்தது.

மாளிகையின் உள்ளே நுழைந்ததும், அங்கே தெரிந்த பணியாளர்களின் பதற்றத்தைப் பார்த்ததும் கிலி பிடித்துக்கொண்டது அவ்விளைஞனுக்கு. உடையவன் வந்துவிட்டானா... அதற்குள்ளா? இன்னும் சில நாள்களாகுமென்று நினைத்தார்களே!

கலங்கிய மனத்தின்கண் இத்தனை நாள்களாக உறங்கிக்கொண்டிருந்த சினமும் துளிர்த்தது.

இப்படி அவன் மனைவியை யாருமறியாமல் வெளியே கூட்டிக்கொண்டு சுற்றியது தெரிந்தால் என்ன செய்வானோ! தேவையில்லாத வேலைதான் பார்த்துக்கொண்டிருக்கிறோமோ? வந்த வேலை என்ன... இப்போது செய்யும் வேலையென்ன?

“உடை மாற்றிக்கொண்டு என் அறைக்கு வா.”

“இப்போதா தேவி? வந்து… பிறகு… அவர் இல்லாத வேளையில்.”

“ஏன் அவரில்லாத வேளையில்... பயமா?”

“பயமா... எனக்கா?”

“உன் திட்டம் எனக்குத் தெரியாதென்றா நினைக்கிறாய்? என்னவனைக் காணத்தானே நீ இத்தனை நாகளாகக் காத்திருந்தாய்? இடைப்பட்ட நாளில் எனை மயக்கி மடியில் போட்டுக்கொண்டாய்.”

“தேவி..”

“சரி சரி... காலம் தாழ்த்துவானேன். சீக்கிரம் வந்து சேர்” என்று விஷம ச்சிரிப்போடு சொல்லிவிட்டு சீலை சரசரக்க அறைக்குள் புகுந்துகொண்டாள் பட்டத்து அரசி பாண்டிமாதேவி.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism