Published:Updated:

செம்பா: `அடடா என்ன அழகு... செஞ்சந்தனத்துக் கட்டையில் செய்த சிலை...’ | பகுதி 21

செம்பா

``நன்றாயிருக்கிறதே கதை. இழிவாகப் பேசுபவன் இவன். இவன் இப்படிப் பேசுவதற்கு ஏதுவாக நூதன ஆணையிட்டவர் மன்னர். இவ்விரண்டுக்கும் செம்பா எப்படிப் பொறுப்பாவாள்? பெண்ணை ஆண்கள் பண்டமாகத்தான் பார்ப்பார்கள் என்று செம்பா சொன்னது சரியாகத்தான் இருக்கிறது.”

செம்பா: `அடடா என்ன அழகு... செஞ்சந்தனத்துக் கட்டையில் செய்த சிலை...’ | பகுதி 21

``நன்றாயிருக்கிறதே கதை. இழிவாகப் பேசுபவன் இவன். இவன் இப்படிப் பேசுவதற்கு ஏதுவாக நூதன ஆணையிட்டவர் மன்னர். இவ்விரண்டுக்கும் செம்பா எப்படிப் பொறுப்பாவாள்? பெண்ணை ஆண்கள் பண்டமாகத்தான் பார்ப்பார்கள் என்று செம்பா சொன்னது சரியாகத்தான் இருக்கிறது.”

Published:Updated:
செம்பா
மலைக்காடு, கொரியா.

வழிநெடுக சிந்தித்துச் சரிபார்த்த திட்டமெலாம் சில்லு சில்லாகச் சிதறிப்போயிருந்தன.

தனியாக மாட்டிக்கொண்டு, தப்ப வழியின்றி, அடிபட்டு மிதிபட்டு, அந்தக் குயாநகரத் திமிர் தொலைந்து காலில் விழுந்து மன்னித்துவிடச் சொல்லிக் கதறி அழுவான். அவனது தவறுகளைச் சொல்லிக் காட்டி, பிறகு சாவகாசமாகக் கொன்று போடலாம். அல்லது அழும் வரை அழவிட்டு, கேலிபேசி, பின் மிரட்டி விரட்டிவிடலாம். ஊர் போற்றும் வீரன் தோற்று ஓடுவதைப் பார்த்து ரசிக்கலாம் - இப்படியெல்லாம் விதவிதமாகக் கனவு கண்டிருந்தாள் சூஜின்.

எல்லாம் பொய்யாகிப்போயிருந்தன.

அவனா தோற்று ஓடுகிறவன், அவனையா வெறும் காவற்காரனென்று நினைத்துக் கொல்லத் துணிந்தோமெனத் தன் மீதே கோபம் வந்தது. மதிப்புக்குரிய குடும்பத்துதித்த பெண் என்பது மறந்து, வாயில் வசவுகள் வரிசைகட்டி நின்றன. உள்ளம் கொந்தளித்துக்கொண்டிருந்தபோதும் எதிரில் நின்றவனின் பார்வையைத் தாங்கும் வலிமையின்றிக் கண்கள் தன்னிச்சையாகப் பணிந்தன.

கழுத்திலிருந்த வாள்முனை அழுத்தமின்றி வெறுமனே தொட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்து மீண்டும் நிமிர்ந்தவளைப் பார்த்து, தன் புன்னகையைப் பெரிதாக்கினான் சுரோ.

ஒளிவீசும் காந்தப் புன்னகை. வாள் விலகியது. அடிபட்டு விழுந்தவர்களில் ஒருவனும் உதவிக்கு வரக் காணோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலுவிலாரை எதிர்த்து வாளெடுக்க மாட்டான் சுரோ என்று ஊர் சொன்ன கதைகள் உண்மைதான் போலுமென்று நினைத்தாள். இலகுவாகவே பேசினான் சுரோ.

``சூஜின். சூஜின்தானே உன் பெயர்? ஈராண்டுகளுக்கு முன் ஆதோகன் மலைவிழாவில் பார்த்த நினைவிருக்கிறது. சூஜின், சட்டத்தின் முன்னே ஹிம்சான் குற்றவாளியென்றாலும் உனக்குத் தந்தை. அதனால் உனது இந்தக் கோபத்தை என்னால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது. உண்மையைச் சொல்வதென்றால் உன் வீரத்தைக் கண்டு எனக்குப் பெருமையாக இருக்கிறது. உன் ஆற்றலை மட்டும் நல்வழிப்படுத்திக்கொண்டால் உன் எதிர்காலம் அருமையாக இருக்கும் தெரியுமா?”

``ஏய்! உன்மீது கொலைவெறியில் இருக்கிறேன். அதுதான் அடித்துப் போட்டுவிட்டாயல்லவா... நின்று வீரம் பேசாமல் போய்த் தொலையவேண்டியதுதானே?”

``அதெப்படி? கண்முன்னே ஒரு திறன்மிக்கவள் திசை மாறுவதைப் பார்த்துக்கொண்டு எப்படிப் பேசாமல் போவது? நீ மட்டும் சரியான…”

``போதும் வாயை மூடு. என் எதிர்காலம் பற்றி சோஜோ பார்ப்பதற்குத்தான் உன்னை இங்கே வரவழைத்தேனா? குற்றவாளியாமே…என் தந்தையைக் குற்றவாளி என்று சொல்ல முதலில் நீ யார்?”

``குயாவின் காவலுக்குப் பொறுப்பானவன். இரும்புக்கட்டித் திருட்டு விவகாரத்தில் மூலகாரணியாக இருந்ததும், தோசுன்னைக் கடத்தியதுமென இன்னும் உன் தந்தை செய்த மறுக்க முடியாத குற்றங்கள் பல சூஜின். அதை நான் கூட்டமைப்பு அவையின் முன்னே சான்றுகளோடு நிறுவி, தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.

செம்பா
செம்பா

அதையும் எதிர்த்து நீங்கள்தான் முறையீடு செய்திருக்கிறீர்களே! எப்படியும் குடியாளும் பொறுப்பைக் கைகாட்டி, குறைந்தபட்ச தண்டனையோடு வெளியே வந்துவிடத்தானே போகிறார் உன் தந்தை, அதற்குள் எதற்கிந்தக் கோபம்... பழிவாங்கும் படலம்?”

``வெளியே வந்துவிடுவாரென்று தெரிந்தும் மாட்டிவிட்டாயா... ஏன், தேவையில்லாமல் தண்டனை ஏற்கச் செய்து ஊர் முன்னே நாங்கள் அவமானப்பட வேண்டும் அப்படித்தானே?”

``இல்லை. அது மிகவும் தேவையான தண்டனை. இனியொரு முறை அந்தத் தவற்றைச் செய்யாமலிருக்க வேண்டுமென்று நினைவூட்டவும் அப்படிச் செய்தால் கூட்டமைப்பின் நீதிக்குழு அவரை மீண்டுமொரு முறை மன்னிக்காது என்று எடுத்துக்காட்டவும்தான் அந்தத் தண்டனை. அதை அவமானமாக நினைக்கத் தேவையில்லை. எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ளலாம்.”

``ஆஹஹ்ஹா! சிறையில் கிடப்பது அவ்வளவு இலகுவாகப் போய்விட்டதா உனக்கு?

உனக்கென்ன நீ பேசுவாய். அங்கே அவமானத்தில் குன்றிக் குறுகிக்கிடப்பது என் தந்தைதானே??”

``சூஜின், அவர் எனக்கொன்றும் ஆகாதவரல்ல. தவற்றுக்கான தண்டனை முடிந்ததும், உன் தந்தை பழையபடி நம்மில் ஒருவர்தானே... காழ்ப்புகளை மறந்து வாழ வேண்டுமென்று நீயாவது உன் தந்தைக்கு எடுத்துச் சொல். நாமெல்லாம் ஒரு நிலத்தின் பிள்ளைகளல்லவா... நாளை நீயும் தலைமைப் பொறுப்பைப் பார்க்கத்தான் போகிறாய்... நீயே சொல்.

மக்கள் தவறலாம், ஆனால் தலைவன் தவறலாமா? உன் தந்தையைப்போல குறுகலாகச் சிந்திக்காமல் நீயாவது புரிந்து நடந்துகொள்வாய் என்று நம்புகிறேன். நான் வருகிறேன்.”

கோபத்தோடு எதோ சொல்லவந்தவளைத் தடுத்து ``கவலைப்படாதே! இங்கே நடந்தது எதுவும் என் வழியாக வெளியே போகாது. என் மீது ஆணை. நீ பத்திரமாக வீட்டுக்குப் போ. நான் வரட்டுமா?” முகத்தின் மீந்திருந்த அவனது ஆதூரமான மந்திரப் புன்னகை அவளது ஆத்திரங்களைத் துடைத்துப்போட்டு அவளை வெறுமையாக்கிவிட்டுப்போனது.

அவளுடைய தந்தை பார்க்க வளர்ந்தவன். இப்போது அவரையே கொஞ்சமும் இரக்கமின்றிக் கைதுசெய்து சிறையிலடைத்துவிட்டு என்னென்ன கதை சொல்கிறான்?

இவனை வெல்லத்தான் வேண்டும். ஆனால் எப்படி?

உள்ளே மீண்டும் குமுறலெடுக்க, குதிரையேறிக் கிளம்பிய அவனது பிம்பம் மறையும் வரை பேசாமல் பார்த்துக்கொண்டு நின்றாள் சூஜின்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மதுரை மாநகர், பாண்டியநாடு.

``அதோ! மதுரை வந்துவிட்டது” திரைநாடன் மெல்ல அழைக்கவும், மாட்டு வண்டியின் ஓரமாகக் குறுகிக்கிடந்த எழினி மெல்ல எழுந்தமர்ந்தாள்.

எரிச்சலோடு திரும்பிக்கொண்டான் சங்கன். அவனுக்கு எழினியைக் கூட்டிக்கொண்டு சுற்றுவதில் கொஞ்சமும் விருப்பமிருக்கவில்லை. ஆனால் அவள் விடுவதாகவுமில்லை. அவர்களோடு மதுரை செல்வதற்கு எப்படியோ திரைநாடனைச் சம்மதிக்கவைத்துவிட்டாள்.

அவளது சிற்றன்னையிடம் செம்பவளத்தின் கதையை ஓரளவுக்குச் சொல்லத்தான்வேண்டியிருந்தது. எந்த நாடென்று சொல்லாமல் வெறுமனே செம்பா ஓர் இளவரசியென்றும், அன்றைய நிகழ்வின் முடிவில் மதுரைக்கு அடிமையாக இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறாளென்றும் அறிந்து மிரண்டவள் முதலில் எழினியை அனுப்புவதற்குச் சம்மதிக்கவேயில்லை. ஆனால் அதுவரை பேசாமலிருந்த சிற்றப்பன் முன்வந்து அவளைச் சமாதானப்படுத்தி எழினியை அவர்களோடு உடன் அனுப்பச் சம்மதிக்கவைத்தான்.

இளவரசியை பத்திரமாக அவள் இருப்பிடத்தில் ஒப்படைக்கும் வரை எழினி இளவரசிக்குத் துணையாயிருக்கட்டும் என்று சொல்லிவிட்டான்.

இத்தனை காலம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த கதையை இப்படி யாரென்றே தெரியாதவரிடத்தில் சொல்வதில் சங்கனுக்குச் சற்றும் விருப்பமிருக்கவில்லை. ஆனால் ஏனோ திரைநாடன் பேசாமலே இருந்துவிட்டார்.

இருக்கிற தலைவலியில் இவள் வேறா என்று சங்கன் வெளிப்படையாகக் காட்டிய எரிச்சலை அவள் சற்றும் சட்டை செய்யவில்லை. அந்த வகையில் செம்பவளத்தை உரித்துத்தான் வைத்திருந்தாளெனத் தோன்றியது அவனுக்கு.

நாளெல்லாம் சாலைப் பயணத்தில் கழித்து, பின்மாலைப்போதில் சத்திரமொன்றில் தங்கிவிட்டு விடியல் வேளையில் வையைக்கரை வந்து சேர்ந்திருந்தனர். வண்டியிலிருந்தபடியே சுற்றிலும் பார்த்தாள் எழினி.

திசையெங்கும் பனிப்போர்வை படர்ந்தூறிச் சென்றுகொண்டிருந்தது. அதன் பின்னணியில் பசுமை குளித்துக் கிடந்தப் பாண்டிநாட்டைப் பார்க்கக் கண்கோடி வேண்டும்போலிருந்தது. வையைப் பெருநதியின் கரையோரமாகப் போய்க்கொண்டிருந்தது வண்டி. பாண்டிநாட்டை வளப்படுத்திச் செல்லும் ஆதி தேவதையாக மெல்ல உடன் நகர்ந்து வந்துகொண்டிருந்தாள் வையை எனும் பொய்யாக்குலக்கொடி.

தோணிகளும் சிறு கலங்களும் இன்னும் இறங்கியிருக்காத விடிகாலையாதலால் கலக்கமற்று ஆழ்கடலைப்போல அலைகளற்று அமைதியாகக்கிடந்தது நதி.

துணி வெளுப்போர் பாறையில் வீசித் துவைத்த சீலைகள், மீன் தேடிக் கவ்விய வெண் கொக்குகளுக்கு இணையாகப் பறந்தடங்கிக்கொண்டிருந்தன.

வயல்வெளிகளில் மடியாவினைஞர் மருதப் பண்ணிசைத்தபடி சுறுசுறுப்பாக வேளாண் பணியிலிறங்கியிருந்தனர். பண்ணுக்கிசைவாகப் புள்ளினங்களின் இறைச்சல் வேறு. காற்றும் கானமும் கமழும் காலை மணமும் இன்பமுமூட்டின.

``அடேயப்பா! எங்கு பார்த்தாலும் நீரும் நிலமும் வயலும் வரப்பும்தான் தெரிகின்றன. என்ன ஒரு செழிப்பு தாத்தா?”

``உண்மைதான். உனக்கொன்று தெரியுமா சங்கா? தனது முதல் சமருக்குப் பின் தொடர்ந்து போர்கள் பல செய்து அடங்கா தினவோடு இருந்த செழிய மகாராஜாவின் தீராத போர்ப் பசிக்கு மாற்றாக, அவரின் முன்னோர் மாண்பை எடுத்துரைத்து, மன்னரை நாட்டின் மீது, குறிப்பாக நாட்டின் செழுமை வேண்டி நீர்மேலாண்மையின் மீது கவனத்தைச் செலுத்தவைத்தது அவரின் அமைச்சர் குழுதான். அவர்களின் புண்ணியத்தால்தான் இப்போது பாண்டியநாடெங்கும் புதிதாகக் குளங்களும் ஏரிகளும் எடுக்கப்பட்டு இப்படி வேளாண் சிறப்புற்றிருக்கிறது.”

``யார் செய்த புண்ணியமோ! மண்மகள் மகிழ்ந்திருக்கிறாள். பார்க்கப் பார்க்க உள்ளம் களிப்படைகிறது. செம்பா இருந்திருந்தால் மிகவும் ரசித்திருப்பாள். கூண்டுபோல பல்லக்கில் மூடிக் கூட்டிப்போனார்களே! அவள் இதையெல்லாம் பார்த்திருப்பாளா?” சங்கனின் வருத்தப் பெருமூச்சு கரையுமுன்னே வையைக்கரை வந்துவிட்டது. தளும்பிச் சுழித்தோடிய வையையின் பின்னணியில் பனிப்போர்வை திரண்டிருக்க, மேகக்கூட்டத்தின் மீது எழும்பிய இந்திரலோகம்போலவே பிரமாண்டமாக எழும்பி நின்றது கூடல் பெருநகர்க்கோட்டை.

செம்பா
செம்பா

ஒருபுறம் ஆழ்ந்தகன்ற பெருவையை நதியைப் பேரகழியாகக்கொண்டு முப்புறமும் கடும் பொறிகள் வேலி செய்த செயற்கை அகழிகளையும்கொண்ட மதுரைக் கோட்டையின் கொடிகள் பறக்கும் மதிற்சுவர்களின் உச்சிகள் விடிகாலை இருளுக்குள் மறைந்துபோயிருந்தன.

அண்ணாந்து பார்த்து அசந்துகொண்டிருந்தனர் மூவரும். வையையில் இறங்கிய ஓடம் கரைமேவு முன்னரே பற்பல ஓசைகள் அவர்களின் செவி மோதத் தொடங்கின. மஞ்சுறங்கும் மதில்களுக்குள்ளிருந்த மதுரை நகர் துயில் விழித்துவிட்டது என்றார் திரைநாடன்.

நெய்பூசிக் கறுத்துப் பளபளத்த பெருங்கதவங்களின் மேலிருந்த நிலையில் திருவின் உருவத்தைக் கண்டு வணங்கியபடி கூட்டம் கூட்டமாக உள்ளே போய்க்கொண்டிருந்த மக்களோடு மக்களாக மூவரும் உள்ளே நுழைந்தனர்.

பெரிய பெரிய சாலைகள், வானை மறைத்தபடி அடுக்குநிலை கட்டடங்களென மிரட்டலாக வரவேற்றது மதுரை. சிறுகுடி வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட எழினி கொற்கையே இரைச்சலென்று நினைத்திருந்தாள். மதுரையோ மண்டையைப் பிளக்கும்விதமான இரைச்சலோடு வரவேற்றது.

``தாத்தா, இதென்னதிது... இவ்வளவு காலையிலேயே இவ்வளவு கூட்டமாக இருக்கிறது... ஏதேனும் விழாவா?”

சங்கனுக்கும் அப்படித்தான் தோன்றியதுபோலும்.

``இது கூட்டம் குறைவான காலை நேரம். இதற்கே இப்படிச் சொல்கிறாயே! கூடலுக்கு முதன்முறை வருகிறாயல்லவா அப்படித்தான் இருக்கும். வேடிக்கை பார்க்கத் தொடங்கினால் நாள் முழுவதும் அதிலேயே கழிந்துவிடும். கடிவாளமிட்ட குதிரைபோல வேலையில் மட்டும் கவனம் வைத்தாலொழிய மதுரையில் காலமோட்டுவது சிரமம்.”

``இப்போது நாம் எங்கே போகிறோம்... ஏதாவது சத்திரம் பார்ப்போமா?”

``இல்லை. நாம் பார்க்கவேண்டிய ஒருவர் இருக்கிறார். நமது சிக்கல்களுக்கெல்லாம் அவர் விடை தரக்கூடும். ஆனால் அவர் நமக்கு உதவி செய்வாரா என்பது கேள்விக்குறிதான்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அது யார் தாத்தா அபேற்பட்ட மனிதர்?”

``சொல்கிறேன். முதலில் எங்காவது பசியாறலாம்.”

வையைக்கரையில் முகம் கைகால் கழுவிக்கொண்டபோது பிடித்த பசிப் பிசாசு வேறு வயிற்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தது. அதை மடியில் வைத்துக்கொண்டு உருப்படியாக எதையும் சிந்திக்க முடியாதுதான்.

பெருநதிகளைப்போல பரந்து கிளைத்தோடிச் சென்ற சாலைகளில் ஒன்றின் சந்தியில் தெரிந்த பலகாரக்கடை வாசலில் சென்று அமர்ந்தனர். அங்கே ஏற்கெனவே பலரும் அமர்ந்து பசியாறிக்கொண்டிருந்தனர். தேங்காயும், வெல்லமும், பருப்பும் பொதித்து அவித்த கொழுக்கட்டைகள் ஆவிபறக்க இனிமையான வாசனையை எழுப்பியபடி அடுத்த மேசைக்குச் சென்றுகொண்டிருந்தன. அவர்களும் அப்பமும் கொழுக்கட்டையும் சொல்லிவிட்டுக் காத்திருந்தனர்.

``சேதி கேட்டாயா நீலா?”அடுத்த மேசையில் பேச்சு இப்படிக் கிளம்பியது.

``எந்தச் சேதியைச் சொல்கிறாய்?”

``நேற்று புதிதாக வந்திறங்கி இருக்கிறாளே கொண்டி மகளொருத்தி...”

``யாரது கொற்கையிலிருந்து வந்தாளே, கயல்போலக் கண்களைக்கொண்ட பேரழகுப் பெண்ணொருத்தி அவளையா சொல்கிறாய்?

அடடா என்ன அழகு, சையமலைச் சாரலிலே சொல்லிவைத்து வாங்கிய செஞ்சந்தனத்துக்கட்டையில் செய்த சிலைதான்.”

``அடேய்! நாவடக்கு. அறுத்துவிடுவார்கள். அவள் மன்னரின் தனிச்சொத்து என்று அவரே பிரகடனம் செய்திருக்கிறார் பார்த்துக்கொள்.”

``இதென்னடா இது... பாண்டிமாதேவியின் பொலிவான பேரழகு அதற்குள் கசந்துவிட்டதா மன்னருக்கு?”

``கசப்பானேன்? வக்கிருப்பவனுக்கு வகை வகையாய்ப் பண்டம், உனக்கென்ன அப்பத்தை அமுக்கு.” கொல்லெனச்சிரித்துக்கொண்டவர்களைப் பார்த்துப் பற்களை நறநறத்தான் சங்கன்.

``என்னென்னெ கேவலமெல்லாம் கேட்கவேண்டியிருக்கிறது இந்தப் பிசாசால்.”

``நன்றாயிருக்கிறதே கதை. இழிவாகப் பேசுபவன் இவன், இவன் இப்படிப் பேசுவதற்கு ஏதுவாக நூதன ஆணையிட்டவர் மன்னர். இவ்விரண்டுக்கும் செம்பா எப்படிப்பொறுப்பாவாள்... பெண்ணை ஆண்கள் பண்டமாய்த்தான் பார்ப்பார்கள் என்று செம்பா சொன்னது சரியாகத்தான் இருக்கிறது” முகத்தைத் திருப்பிக்கொண்டாள் எழினி.

``பார்த்தீர்களா உங்கள் பெயர்த்தியின் சமர்த்தை? ஒரே நாளில் அவளுக்கு ஓர் அச்சை செய்துவிட்டாள். அப்படியே அவளைப்போலவே, பைத்தியம்போலவே பிதற்றுகிறது இது.”

``அது இது என்றால் வாயைக் கிழித்து விடுவேன்.”

``கிழியேன். அதையும் சொல்லிக் கொடுத்திருப்பாளே அந்தப் பிசாசு.”

``அதெல்லாம் எனக்கே தெரியும்.”

``சும்மா இரு சங்கா. ஏனம்மா நான் கேட்க வேண்டுமென்று இருந்தேன். அதென்ன உனக்கு எழினியென்று பெயர் வைத்திருக்கிறார்கள்?”

``அழகினி என்று வைப்பதாகத்தான் இருந்ததாம். நான் பிறக்குந்தறுவாயில் எங்கள் குடிக்கு எழினி வேந்தன் வந்திருந்தாராம். அந்த நேரத்தில் நான் பிறந்ததால் எனக்குப் பரிசிலாக ஒரு நூறு காணம் தந்தாராம். அதனால் அவர் பெயரையே வைத்துவிட்டார்கள். என்ன இது ஆண் பெயரென்று எல்லோரும் கேட்பார்கள்.”

`அந்த எழினிகூட சமீபத்தில் செழிய மகராஜாவிடம் தோற்றோடியவர்தானே தாத்தா? சரியாகத்தானே வைத்திருக்கிறார்கள். பழைய பெயரும் சரிதான். அழகு இனியா வரப்போகிறது என்று எண்ணி வைத்திருப்பார்கள்.”

அவன் வேண்டுமென்றே வம்பிழுக்கவும், எழினி வக்கணை காட்டி முறுக்கிக்கொண்டாள்.

``என்னடா நீங்கள் சின்னப் பிள்ளைகள்போல… செய்கிற காரியத்துக்கான தீவிரம் கொஞ்சம்கூடத்தெரியவில்லை உங்களிடம்.” திரைநாடனின் ஆற்றாமை அவர் முகத்தில் தெரிந்துவிட இருவரும் சற்றுப் பேசாமல் இருந்தனர்.

``எப்படியும் செம்பாவைக் காப்பாற்றிவிடலாம்தானே தாத்தா.”

``காப்பாற்றித்தான் ஆக வேண்டும்” எழினியின் உத்வேகம் நிரம்பிய சொற்கள் நிராசை நிரம்பிய அவர்களின் உள்ளங்களில் கொஞ்சம் உறுதியைத் தெளித்தன.

``ஆம், அதற்கு முதலில் உங்கள் இருவரையும் அல்லது உங்களில் ஒருவரை அரண்மனைக்குள் அனுப்ப வேண்டும். செம்பவளத்தின் நிலையறிய உடனடியாகச் செய்யவேண்டியது அதுதான்.”

``தாத்தா செம்பாவைப் பார்க்கும்போது கோடன் இறந்த விஷயத்தை எப்படிச் சொல்லப்போகிறோம்?”

``ம்ஹ்ம்... இப்போதைக்கு அதையெல்லாம் சிந்திக்காதே சங்கா.”

``சிந்திக்காமல் எப்படித் தாத்தா? அவளது அன்னை சொன்ன ரகசியம்… அது எவ்வளவு முக்கியமான தகவல்… அதைக் கடைசி வரை நம்மிடம்கூடச் சொல்லாமலே போய்விட்டாரே அல்லது… உங்களிடம் சொல்லிவிட்டாரா?”

செம்பா
செம்பா

பதிலற்றவராக எதிரே வெறித்தார். மாடத்தின் உச்சிச் சாளரம் வழியாக குழலூதியபடித் தவழ்ந்த காலைத் தென்றலை ரசிப்பதுபோலக் கண்களை மூடிக்கொண்டார். இளையவர்கள் இருவரும் தன்னுள்ளுக்குள்ளிருக்கும் பதற்றத்தைக் கண்டுகொள்வார்களென்ற பயம்.

``சரி அடுத்து யார் வீட்டுக்குப் போகிறோமென்றாவது சொல்லுங்களேன்...”

``மன்னருக்கு மிகவும் விருப்பமான, அவர் மதிக்கின்ற ஒருவர். மாங்குடி மருதனார்.”

``ஓ! பெரும்புலவரென்று சொல்கிறார்களே அவரா?”

``அவரேதான்.”

``அவரை அவ்வளவு இலகுவாகப் பார்த்துவிடவும் முடியாதுதானே?”

``அந்தச் சிக்கலும் இருக்கிறது, அதைத் தாண்டி நாம் கேட்கும் உதவியைச் செய்ய அவர் மறுக்கவும் கூடும்.”

``முயற்சி செய்யலாம். முடியாமல் போனால் அடுத்த வழி யோசிப்போம்.”

``முழுமையாக முயற்சி செய்தால் முடியாமல் எப்படிப்போகும்?” பருத்திப்பாலை குடித்துவிட்டு வாயைத் துடைத்துச் சிரித்தபடி கேட்டவளை முறைத்தான் சங்கன்.

பின் மருதனாரை எப்படிச் சந்திப்பது என்னவென்று உதவி கேட்பது என்று உற்சாகமாக அவளும் எச்சரிக்கையோடு மற்ற இருவரும் திட்டமிடலாயினர்.

ஆயிரம் திட்டங்களை மனிதன் வகுத்தாலும் எல்லாமுமா அப்படியே நடந்துவிடுகின்றன?

ஆனால் நடக்கத்தான் போகிறது. ஆம்! தக்காண வரலாற்றில் தனியிடம் கோரும் பெருங்கதையொன்றின் முக்கிய கட்டம் வந்துவிட்டது. அதையுணர்த்தும்விதமாக அதிர்ந்து ஒலித்தது அரண்மனைப் பெரும் கோபுரத்தின் மணி!

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism