Published:Updated:

செம்பா: ``நெடுங்காலத்துக்குப் பின்னர் ஒரு சமர்” | பகுதி 37

செம்பா

ஓரக்கண்ணால் போவைப் பார்த்து சிரித்துவிட்டுப்போன பெண்ணை, குழப்பத்தோடு பார்த்தான் சுரோ. போ இன்னும் சிரித்துக்கொண்டிருந்தான். அவர்களுக்குள் என்ன ரகசியக் கேலி... அதுவும் என்னை வைத்து?

செம்பா: ``நெடுங்காலத்துக்குப் பின்னர் ஒரு சமர்” | பகுதி 37

ஓரக்கண்ணால் போவைப் பார்த்து சிரித்துவிட்டுப்போன பெண்ணை, குழப்பத்தோடு பார்த்தான் சுரோ. போ இன்னும் சிரித்துக்கொண்டிருந்தான். அவர்களுக்குள் என்ன ரகசியக் கேலி... அதுவும் என்னை வைத்து?

Published:Updated:
செம்பா
சுரோ கண்விழித்திருந்தான்.

முழுமையாகத் தன்னிலை உணரும் நிலையை அடைந்திருந்தான்.

இளங்காலை வேளை. கதிரவனின் செவ்வொளிபட்டு உடலில் பிணியின் இறுக்கம் இளகுவதுபோலிருந்தது. படுக்கையிலிருந்தபடியே சுற்றிலும் பார்த்தான் சுரோ.

தான் இருப்பது ஒரு கூடாரமென்பதை உணர்ந்திருந்தான். இடைவெளி வழியாக வெளியே பார்த்தான். தூரத்தில் தெரிந்த நிலத்திட்டுகளைக் கண்டு அவன் இருக்குமிடத்தை ஓரளவுக்கு புரிந்துகொள்ள முயன்றான்.

தம்னா?

ஆம்! வாய்ப்பிருக்கிறது. காயத்தோடு ஏதோ மரக்கட்டையின் மேல் சாய்ந்து நெடுநேரம் கடலிலே கிடந்த கொடூர நினைவு இன்னும் அவ்வப்போது மனதை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. பல யுகங்களாக முடிவற்ற கணங்களாகத் தோன்றிய பொழுதுகள் அவை. ஆம்... அவன் தம்னா தீவருகே கரையொதுங்கியிருக்க வாய்ப்புண்டு. அல்லது யாராவது அவனைக் காப்பாற்றி இங்கே தூக்கி வந்திருக்கலாம்.

இந்தக் கூடாரமும், அவ்வப்போது அவனை வந்து பார்த்துப்போகும் மனிதர்களும் புதியவர்களாக இருந்தார்கள். கூடாரத்திலிருக்கும் பொருள்கள், அவர்கள் பேசும் மொழி எல்லாமே புதுமை. நங்நங் நோக்கிச் செல்லும் வேற்று நிலத்து வணிகர்களாயிருக்கும் என்பதுதான் அவனது அப்போதைய கணிப்பு.

கடற்பாறைகளால் சூழ்ந்த தம்னாவிலே தங்கிச் செல்ல நினைக்கும் வணிகச்சாத்தென்றால் துணிவுமிக்கவர்களாகவும், கடலோடுவதில் திறமிக்கவார்களாகவும்தான் இருக்க வேண்டும். ஆம்,,, மேற்திசையிலிருந்து வந்த வணிகர்கள்தாம்.

எல்லாவற்றையும் தாண்டி அவள்…

அவனது கனவில் வந்த அதே பெண். அவள் மேற்திசையில் இருந்து வந்தவள்தான். அவளே அந்தக் கூட்டத்தின் தலைவி என்றும் தோன்றியது.

எழுந்து அமர முயன்றான். சொற்ப முயற்சிக்குப் பின் முடிந்தது. கை கால்கள் சற்றே இறுகியிருந்தாலும் மெல்ல அவன் வசப்படலாயின. கூடாரத்தைவிட்டு வெளியே வந்தான்.

“எழுந்து விட்டீர்களா தலைவா?” போவின் குரல் கேட்டு வியப்பு. கண்விழித்த பொழுதுகளில் அவ்வப்போது கண்ணில்பட்ட முகமென்று நினைவுக்கு வந்தது.

“நீங்கள்… நம் நிலத்தவரா... நீங்கள் எப்படி இவர்களுடன்?”

“நானொரு வணிகன் ஐயா. குயாவைச்சேர்ந்தவன்தான். ஏழாண்டுகளுக்கு முன் ஹான் தேசத்துக்குப் போனவன். அங்கிருந்து சில வணிகர்களோடு மேற்திசை சென்றுவிட்டேன். உலகின் மேற்கு எல்லை வரை சென்றுவிட்டு இதோ இவர்களோடுதான் திரும்பி வருகிறேன்.”

“ஓ! கடல்வணிகனா... உலகெங்கும் சென்று வந்தீர்களா... அப்படியென்றால் உங்களிடம் நிறைய பேச வேண்டுமே... மேற்திசை நாடுகளில் உங்களைப்போல நம்மவர்கள் நிறைய இருக்கிறார்களா?”

செம்பா
செம்பா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அதிகமில்லை ஒருசிலர் இருக்கிறார்கள். இதோ எங்கள் இளவரசியின் பரந்து விரிந்த தேசத்திலே ஒரு கடற்பட்டினமுண்டு. அங்கே உலகின் எல்லா தேசத்து மக்களுமுண்டு. மேற்திசை யவனர்கள் முதல் ஹான் மக்களோடு நம்மவர்களும் வா தேசத்தினரும்கூட இருக்கிறார்கள். அங்கேயே குடிகொண்டிருக்கிறார்கள்.”

“உங்கள் இளவரசி?” கண்களில் வியப்பு அகலவில்லை.

“ஓ! அது… வந்து… செம்பாவைச் சில காலமாக அப்படியே சொல்லிப்பழகிவிட்டதா... சட்டென வாயில் வந்துவிட்டது. அது தவறாகவும் வாய்ப்பில்லை.”

போவின் பேச்சு சுரோவை வெகுவாகக் குழப்பியது. காயங்களில் வலி இன்னும் மீதமிருந்தது. ஆனால் உடல் பழைய சுறுசுறுப்பை மீட்டுக்கொண்டிருந்தது. மனக்குழப்பம் தீர மெல்ல நடக்கலானான். ஒருவேளை ஜுர வேகத்தில் கண்ட கனவுதானோ என்ற அவனது ஐயத்தை போவின் சொற்கள் தெளிவித்திருந்தன.

இளவரசி... பரந்து விரிந்த நாட்டின் இளவரசி. அவன் அவளைப் பார்த்தாக வேண்டும்.

“போ… உங்களைத்தான் தேடி வந்தேன் பசியாறவில்…அடடே... இளவரசர் எழுந்தாயிற்றா... இப்போது உடல்நிலை எப்படியிருக்கிறது இளவரசே?”

வந்து நின்ற பெண் வேற்று மொழி பேசினாலும் உடல்நிலை பற்றித்தான் கேட்கிறாள் என்று தோன்றவும் மெல்லத் தலையசைத்தான் சுரோ.

”அப்படியென்றால் சரி, உங்களுக்கும் சேர்த்து உணவு எடுத்து வருகிறேன். அல்லது எடுத்து வரச்சொல்கிறேன்.” படபடவெனச் சொல்லிவிட்டு ஓரக்கண்ணால் போவைப் பார்த்துச் சிரித்துவிட்டுப்போன பெண்ணைக் குழப்பத்தோடு பார்த்தான் சுரோ. போ இன்னும் சிரித்துக்கொண்டிருந்தான். அவர்களுக்குள் என்ன ரகசியக் கேலி... அதுவும் என்னை வைத்து?

இவள் அவளல்ல. அவள் பேசும் அதே மொழியில் பேசுகிறாள். அவளது தோழியாக இருக்கக்கூடும்.

“உங்கள் பெயர்?” போவை நோக்கி மீண்டும் கேள்வியைப்போட்டான்.

“மன்னிக்கவும் இளவரசே. அடிப்படைத் தகவல்களைச் சொல்ல மறந்துவிட்டேன். என் பெயர் போ. நீங்கள் இருப்பது...”

“தம்னாவில்.”

“நினைத்தேன். கண்டுபிடித்திருப்பீர்களென்று நினைத்தேன்.”

“இங்கே இவர்கள் எப்படி... இவர்கள் யார்?”

மெல்லப் புன்னகையோடு தொடங்கி போ மொத்தக் கதையையும் சொல்லி முடிப்பதற்கும், அவள் கையில் பெரிய தட்டில் மூடியிட்ட கிண்ணங்களோடு வருவதற்கும் சரியாக இருந்தது.

நடந்து வந்துகொண்டிருந்தவளின் மீதிருந்து பார்வையைப் பிரித்தெடுக்க முடியவில்லை சுரோவினால். முதன்முறையாக தெளிவான மனநிலையில் அவளைக் காண்கிறான்.

ஆண்களைப்போல கால்களைக் கவ்வும் இடையாடையும், யௌவன இடை தெரியும் மேலாடையும், அதைச் சுற்றியோடிய மெல்லிய சீலையும், செம்மஞ்சளாக ஒளிர்ந்த சிறு பொன் நகைகளும் தெளிந்த முகமும், அதிலே தீர்க்கமான பாவனையும் அவள் இளவரசி என்பதில் அவனுக்கு ஐயமிருக்கவில்லை.

அவனை நோக்கிப் பாய்ந்த அவளது பார்வையில் ஓராயிரம் உணர்ச்சிகளைப் படிக்க முடிந்தது அவனால். மிகத் தெளிவாக. அவர்களுக்குள்ளான ரகசிய மொழிபோல. எப்படி முடிகிறது?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

”நடைப்பயிற்சி கிளம்பிவிட்டீர்கள்போலிருக்கிறது. நல்லது. இறுகிய தசைகள் இளக நடை மிகவும் முக்கியம். உணவருந்தி சற்றே தெம்பேற்றிக்கொண்டு செல்லலாம். திட உணவு உண்டு வெகுகாலம் ஆகிவிட்டதல்லவா... அதனால் கஞ்சியாகக் கொண்டு வந்தேன். கஞ்சியோடு எங்கள் பக்கத்து கருவாடும். பிடித்திருக்கிறதா... உண்டு சற்று அமர்ந்துவிட்டு அதோ அந்த மரக்கூட்டங்கள் வரை நடக்கலாம். இப்போதைக்கு அது போதும்.”

அவனை அமரவைத்து கிண்ணத்திலிருந்து கஞ்சியைப் பருக வைத்தபடி அவள் பேசிக்கொண்டே போனாள். அவளது அண்மை அவனை இம்சித்தபோதும் என்னென்ன செய்யலாம் என்று அவனுக்கு அவள் சொல்லிக்கொடுக்கிறாளே என்றும் தோன்றியது. அவள் அவனுக்குத் தாதியா அல்லது அவன் அவளுக்கு அடிமையா... உடல்நிலைக்காகத்தான் நடைப்பயிற்சிக்கு எல்லை வகுத்தாளா அல்லது?

“எங்கள் மொழி எப்படித் தெரியும்?” உண்டு முடித்ததும் கஞ்சிக் கிண்ணத்தை மூடிவைத்துவிட்டு, பருக நீர் தந்தபடி பதிலளித்தாள் செம்பவளம்.

“நெடுந்தொலைவு கலப்பயணமல்லவா... அப்போது போவிடம் கற்றுக்கொண்டேன்.”

“ஓகோ.”

“ஐயம் வேண்டாம். தங்கள் பாதுகாப்புக் கருதித்தான் எங்கள் காவலிருக்கும் பகுதி வரை நடைப்பயிற்சிக்கு எல்லை வகுத்தேன்.”

“என் நிலத்தில் நீங்கள் எனக்குப் பாதுகாப்புத் தருகிறீர்களா?”

ஒற்றை நொடியில் அவனது காயங்களைக் கண்களால் வருடிப் புருவம் உயர்த்திய தினுசில் சட்டெனச் சிரித்துவிட்டான்.

செம்பவளத்துக்குள் பல நூறு சூரியன்கள் புதிதாக உருவாகின. இடையிடையே வானவில்களும் வண்ண மலர்வனங்களும் தோன்றின.

அவளது எண்ண ஓட்டத்தைத் தடைசெய்யும் சிரிப்பை இதுவரை அவள் எதிர்கொண்டதில்லை. அதிலும் தன்னைக் கேலி செய்கிறாளென்று தெரிந்து புரியும் மந்தகாச நகை. கொஞ்சமும் மனதில் அகந்தையற்றவனாக அழகனாகத் தோன்றினான் சுரோ.

அவள் கண்ணால் சொன்னதை ஒப்புக்கொள்வதாக அவன் தலையசைத்துப் பணிந்தவிதம் இன்னமும் ஈர்த்தது. வெகு அருகே சந்தித்த அந்தக் கண்கள்.

செம்பா
செம்பா

எழுந்து விலகி அமர்ந்தாள்.

”உணவு பிடித்தவிதமாக இருந்ததா அரசே?” விளிப்பில் மெல்லிய அதிர்வைக் காட்டினான்.

“அரசனா... நானா?”

“பின் இல்லையா?”

”ம்ஹும்... தற்போது குயாவின் தலைவன்கூட இல்லை நான்.”

“அப்படியா... என்ன ஆச்சர்யம்... நான் உங்களை இந்த நிலத்தின் பெருந்தலைவனென்றல்லவா நினைத்தேன்.” புன்னகைத்த அவள் கண்களில் தொக்கி நின்ற மறைபொருள் அவனுக்கு எப்படி விளங்கலாம்... ஆனால் விளங்கியது. அவன் மெல்லத் தலையசைப்பது கண்டு அவளுக்கே வியப்பானது.

“கனவுகளெல்லாம் பலித்தால் நன்றாகத்தான் இருக்கும்.”

“குறைந்தபட்சமாக இந்தக் கனவைப் பலிக்க வைப்பதற்கு எங்களால் ஆன எல்லா உதவிகளையும் செய்யச் சித்தமாக இருக்கிறோம்?”

“ஏன்?” கண்களைப் பார்த்து அவன் கேட்ட கேள்வியில் முகம் சிவப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

“சில சமயங்களில் நம் மனம் செய் என்று சொல்வதற்கு நாம் காரணம் தேட முயல்வதில்லை. மறுப்பும் சொல்வதில்லை. இல்லையா?”

புரிந்தவன்போலப் புன்னகைத்தான். பார்வையிலொரு துணிவு தெரிந்தது. உரிமையால் பிறந்த துணிவுபோல்.

“உங்களைக் காயப்படுத்தியவர்கள் யாரென்று நினைவிருக்கிறதா... யார் அனுப்பியிருக்கக் கூடுமென…”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“அவர்கள் இஜினாசியின் தனிப்படை வீரர்கள்தான். எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள்தான்.” குரலில் தோல்வியின், இயலாமையின் வலி வெளிப்படையாகத் தெரிந்தது. அவளுக்கு எல்லாம் தெரியுமென போ சொல்லியிருந்தான். அதனால் மட்டுமல்லாமல் அவளிடம் அவனுக்கு ஏனோ எந்தத் தயக்கமும் தோன்றவில்லை.

“எனக்கும் இஜினாசிக்கும் இடையே விரிசல்தான், காலப்போக்கில் எப்படியாவது சரியாகிவிடும். என்றாவதொரு நாள் அவனை என் தம்பியென்று உரிமையோடு கட்டிக்கொள்ள முடியுமென நினைத்திருந்தேன். ஆனால்… என்னைக் கொல்லுமளவுக்கான வெறுப்பை நான் சம்பாதித்தேனே என்று கவலையாக இருக்கிறது.”

“அது வெறும் வெறுப்பினால் வந்த முடிவாக இருக்காது. அத்தோடு தலைமை மீதான ஈர்ப்பும் இருந்திருக்கும்தானே... உண்மையில் அதுதான் முதன்மையாக இருந்திருக்கும். உங்கள் மீதான தனிப்பட்ட வெறுப்பு வெறும் கிரியா ஊக்கி அவ்வளவுதான். அதுமட்டுமல்ல... அது அவரது முடிவுதான் என்பதோ அல்லது வந்தவர்கள் அவர் சொல்லித்தான் வந்தார்கள் என்பதோ … எ…என்ன?” அவனது வியந்த பார்வையில் சிவந்து சொற்கள் பாதியிலேயே இடறின.

“நான் நினைக்க நினைக்க என் எண்ணங்களை அப்படியே பேச உங்களால் எப்படி முடிகிறது என்று வியந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.”

“ஒத்த சிந்தனையாளர்கள்போல” வேறு திசையில் பார்வையைப் பாய்ச்சினாள்.

“இருக்கலாம், நீங்கள் சொல்வதுபோல இஜினாசியின் முடிவாக இருக்காது என்பதுதான் என் அனுமானமும். அவனுக்கு நான் தீராப்பகையாளிதான். ஆனால் அவன் தீயனில்லை. அவனுக்கு இப்போது அமைந்திருக்கும் சேர்க்கை சரியில்லை. அதன் விளைவாக இருக்குமென்பதே என் கணிப்பும்.”

“ம்ம்.”

”போ சொன்னான். மாமாவை மிரட்டி அனுப்பிவிட்டீர்களாமே... ஆனால் உங்கள் திட்டத்தை முழுவதுமாகக் கேட்டேன்.”

“கேட்டு..?” ஆவல் உந்த திடீரென அவன் முன்னே வந்து நின்றாள். இருவருமாக நடந்துகொண்டிருந்தது இருபுறமும் இளஞ்சிவப்பு நிறத்துச் சேலா மலர்கள் பூத்துச்சிரித்த அழகிய நெடும்பாதையில். திடீரென அவள் வந்து முன்னே நிற்கவும் செம்மலர்களின் நடுவே கருநீல மலரொன்று பூத்ததுபோல அவளது பூமுகம் வெகு அருகே தெரியவும் சற்றே அசைவற்று நின்றிருந்தான் சுரோ.

“கேட்டபின் என்ன தோன்றியது... உங்களுக்கு என் திட்டம் நன்றாகப் புரிகிறதல்லவா... உங்களுக்கு அதில் ஏதும் சங்கடமில்லையே... எனது கவலையெல்லாம் அதுதான். திட்டம் சரிதானே... உங்களுக்குச் சம்மதம்தானே?”

“மிகச் சரியான திட்டம். எனக்குச் சம்மதமே. உங்கள் முடிவுகள் எல்லாவற்றுக்கும்.” அவன் முடித்தவிதத்தில் முகம் சிவந்துபோனது. அதைப் பார்த்தவனுக்கு மற்ற எல்லாமே மறந்துபோனது. தந்தை இழந்து, நிலமிழந்து, தம்பியின் அன்பை இழந்து நிற்கும் நிலை இவையெல்லாம் மறந்து குளிர்ந்த நீலத் தடாகமெனத் தோன்றிய அவள் கண்களுக்குள் அமிழ்ந்து தொலைந்துபோகத் தோன்றியது.

செம்பா
செம்பா

“செம்பா. யூசு வந்திருக்கிறார்” கண்ணனின் குரலில் சட்டென நிதானமடைந்த இருவரும் திரும்பிக் கூடாரம் நோக்கி நடக்கலாயினர்.

இணைந்து பேசியபடி நடந்து வந்த இருவரையும் பார்த்த யூசு. ”ஆகா! இதோ, பொன்கயா பிறந்தேவிட்டது” என்று மனதுள் முனுமுனுத்துக்கொண்டார். சிரித்தவண்ணம் கைகளைக் கட்டியபடி வரும் சுரோவையும் அவனுக்கு ஏதோ சொன்னபடி (யூசுவின் கணிப்புப்படி போர்த்திட்டம்தான்), கைகளையாட்டி, கண்களுருட்டி விளக்கியபடி வரும் புதிய பெண் அந்த செம்பவளத்தையும் கண்டு ஜீமின் மனமும் குளிர்ந்துபோனது. பார்த்த உடனேயே கிழவனுக்கு அவளைப் பிடித்துப்போனது.

இதிகாசங்களில் வரும் பெண் தெய்வங்களில் ஒன்று தரையிறங்கி நடந்து வருவதுபோலிருந்தது. குயாவுக்கு, சுரோவுக்கு இனி நல்ல காலம்தான்.

எல்லாம் கூடிவருவதாக எண்ணி மகிழ்ந்துகொண்டார் அவர்.

அதன் பிறகு எங்கும் எதிலும் தொய்வில்லை. ஆயத்தங்கள் வெகு வேகமாக நடந்தன. சுரோவும் இஜினாசியும் காத்திருந்த தருணம் வந்தது.

சாரோவின் படை நக்தோங் நதிக்கரையை நெருங்கிவிட்டதாகச் செய்தி வந்தது.

குயாவின் நிலத்தில் நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு நடக்கப்போகிறது ஒரு சமர்!

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism