Published:Updated:

செம்பா: `போர் முரசு’ | பகுதி 38

செம்பா

எண்ணற்ற மனிதத் தலைகள். கூர்வேல்களோடும் வில்லம்புகளோடும் கூச்சலிட்டபடி மோதின. வாட்கள் சதைகளில் விளையாடி தெறித்த குருதி திசையெங்கும் செவ்வரியோடிக்காட்டின. குதிரைகள் குளம்படியில் மிதித்துக் கொன்று தீர்த்த வீரர்களின் உடல்கள் மலைபோலக் குவிந்தன.

செம்பா: `போர் முரசு’ | பகுதி 38

எண்ணற்ற மனிதத் தலைகள். கூர்வேல்களோடும் வில்லம்புகளோடும் கூச்சலிட்டபடி மோதின. வாட்கள் சதைகளில் விளையாடி தெறித்த குருதி திசையெங்கும் செவ்வரியோடிக்காட்டின. குதிரைகள் குளம்படியில் மிதித்துக் கொன்று தீர்த்த வீரர்களின் உடல்கள் மலைபோலக் குவிந்தன.

Published:Updated:
செம்பா

சமர் தொடங்கும் ஏற்பாடுகள் மும்முரமாகியிருந்தன. நக்தோங் நதிக்கரை செம்புழுதி பறக்கக்கிடந்தது.

பன்னெடுங்காலமாக இந்த பூமியில் உதிரம் சிந்தியதில்லை. முன்னெப்போதோ வடதிசை நாடோடிகள் தென்புலம் வந்தபோது ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டதுதான். அதன் பிறகு குடிகள் உருவாகிப் பெருகிக் கூட்டமைப்புகள் அமைந்த பிறகு இந்த பியோன்ஹான் பகுதியில் பெரும்பாலும் அமைதியும் செழிப்பும் மட்டுமே பொருந்தியிருந்தன.

ஆனால் இன்று அந்த நதிக்கரையின் பரப்பெங்கும் யுத்த பரீட்சைக்கான ஆயத்தங்களால் நிரம்பி வழிந்தது.

சாரோவின் போர்க் கூடாரங்களில் இரவு பகலென இடையறாத நடமாட்டமிருந்தது. இளவரசன் யூரியும் ஹோகோங்கும் தல்ஹேவோடு போருக்கு வந்திருந்தனர்.

தல்ஹே வேறொரு முடிவெடுத்திருந்தான். போஜியுடனான போரின்போது வாளைக் கையிலேந்திய பிறகே தனக்குள் யுத்தவெறி நிரம்பிக் கிடக்கிறதென்பதைத் தெரிந்துகொண்டிருந்தான் அவன். இன்று அது பன்மடங்காகி நின்றது. அது இஜினாசியின் உதிரத்தைக் காவு வாங்கக் காத்துக்கொண்டிருந்தது.

தெற்கே குயாவும் கொதித்துக்கொண்டிருந்தது.

யுத்தசாலையில் குறுக்கும் நெடுக்குமாகப் பதற்றத்தோடு நடந்துகொண்டிருந்தான் இஜினாசி. வீரனொருவன் கொண்டுவந்திருந்த செய்தியின் விளைவு அந்தப் பதற்றம்.

“என்ன சொல்கிறீர்கள்... மொத்த சாரோ படையினரும் நக்தோங் நதிக்கரையை அடைந்துவிட்டார்களா?”

“ஆம். நாளை குயாவின் எல்லைக்குள் கால்பதித்துவிடுவார்கள்.”

“வெட்டியெறிந்துவிடுவேன். சாரோ வீரன் ஒருத்தன் உள்ளே கால் பதிக்கக் கூடாது.”

“மொத்தப் படையையும் ஒரே இடத்தில் இறக்குவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை.” ஜீமின் முகத்தில் ஐயம் தீர்ந்தபாடில்லை.

“அவனுக்கு அவசரம். எப்படியாவது இந்தக் குயாவை, அவன் வெறும் பயிற்சிக்கொல்லனாக இருந்த இந்த நிலத்தைக் கையகப்படுத்திவிட வேண்டுமென்ற பேராசையில் முடிவெடுக்கிறான். ஒருவகையில் அது நமக்கு நல்லதுதானே... நக்தோங் பகுதியை நாம் நன்கறிவோம். மொத்தப் படையையும் தந்திரமாகவ் சுற்றிவளைத்து...”

“கிழித்தாய்… பொருளற்று உளறத்தான் தெரியுமென்றால் வாயை மூடிக்கொண்டே இரு. எரிச்சலைக் கிளப்பாதே.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செம்பா
செம்பா

``ஆகப்பொருளோடு நீ பேசு பார்ப்போம்.” பிளவு பெருத்துவிடும்போலிருந்தது. ஜீமின் கர்ஜனையில் அப்போதைக்கு அடங்கியது.

“நீங்கள் சொல்வது சரியல்ல இல்சங். நானறிந்த தல்ஹே அத்தனை பேராசைக்காரனல்ல. அதைவிட முக்கியம் அவன் கண்டிப்பாக அவசரக்காரனல்ல. “

“உண்மை. நாம் நினைப்பதுபோல் அத்தனை எளிதாக சாரோவின் படையைச் சுற்றி வளைக்கவும் முடியாது.”

“ஏன் முடியாது?”

“சாரோவின் தற்போதைய படை பலம் என்னவென்று தெரியுமா உனக்கு... கேட்காதே தலைசுற்றிப்போவாய்.

அதிலும் தல்ஹேவுடன் இருக்கிறானே ஒரு தொங்குமீசைக் கிழவன் அவன் மகா தந்திரக்காரன். நாம் மிகவும் எச்சரிக்கையோடு கையாளவேண்டிய நேரமிது.”

“அதற்கெல்லாம் ஏது நேரம்... எதிரி வாயிலில் வந்துவிட்டான். கதை பேசிக்கொண்டிருக்கிறாயே கிழவா... அனைத்துப் படைகளையும் வடக்கே நதிக்கரை நோக்கித் திருப்பச்சொல்லி அனுப்பு.”

“ஹிம்சான் நீ என் படைத்தலைவனுமல்ல; நான் உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் வீரனுமல்ல.” ஜீமின்னின் வயோதிக மீசையில் இன்னும் துடிப்பு மிச்சமிருந்தது.

“மாமா! இந்த நேரத்திலென்ன பிடிவாதம்... எல்லோரும் ஒன்றிணைந்து வேலை பார்க்க வேண்டாமா?” இல்சங் சமாதானப்படுத்த முயன்றான். ஜீமின் அவனைப் பொருட்படுத்தக்கூட இல்லை.

“இஜினாசி. என் குடியின் படை உட்பட கிழக்குக்குடிப் படைகள் ஆறும் தயாராக இருக்கின்றன. ஆனால் அவற்றை வடக்கே திருப்புவதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் தல்ஹே தன் படை மொத்தமும் ஓரிடத்தில் குவித்திருக்கிறான் என்ற செய்தியில் எனக்கு நம்பிக்கையில்லை. எங்கள் பாதுகாப்பு ஒருவகையில் நமது கூட்டமைப்பின் பாதுகாப்பு. நாங்கள் காத்திருக்கிறோம்.”

“தலைவனின் உத்தரவை மீறுகிறாயா?” வெடித்தான் ஹிம்சான்.

“மாமா! பொறுமையாக இருங்கள்.” கையமர்த்தித் தடுத்தான் இஜினாசி.

“இஜினாசி, இது என்ன நீங்களும் இந்தக் கிழவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களே இது நியாயமா... எதிரி கண்ணெதிரே முன்வாசலில் வந்து நிற்கிறான். நான் கொல்லைப்புறத்தில்தான் காவல் காப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பது முட்டாள்தனமல்லவா... நீங்களும் இப்போது அந்த சுரோவைப்போலத்தானே நடந்துகொள்கிறீர்கள்...” சரியான இடம் பார்த்துத் தாக்கியிருந்தான் ஹிம்சான்.

கொதித்து எழுந்தான் இஜினாசி. வசைமொழி பொழிந்து, பிறகு கர்ஜித்தான்.

“அனைத்துப் படைகளையும் குயா நோக்கித் திருப்புங்கள். வேறு ஏதும் பேச்சில்லை. நாளை மறுநாள் சமரில் கிழக்குப்படைகள் இங்கே இருந்தாக வேண்டும். கூட்டமைப்பு விதிகளை மீறாமல் உங்கள் படைகளைக் கொண்டு வந்தே தீர வேண்டும். இது கூட்டமைப்புத் தலைவனான எனது நேரடி ஆணை.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நாளை நான் சமரில்...”

“ஜீமின் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆணையைப் பின்பற்றுங்கள். நாளை சமரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் கிளம்பலாம்.” பேசாமல் வேடிக்கை பார்த்திருந்த ஜீமின் மெல்ல எழுந்தார்.

“தலைவனுக்கான பண்புகளை மெல்ல இழந்துகொண்டிருக்கிறீர்கள் இஜினாசி” என்று அடிக்குரலில் சொன்னபடி வெளியேறினார்.

மறுநாளும் வந்தது.

போரும் தொடங்கியது. சாரோவின் படைகளும் குயாவின் படைகளும் ஒரு சமவெளியில் பொருதி மோதின.

எண்ணற்ற மனிதத் தலைகள். கூர்வேல்களோடும் வில்லம்புகளோடும் கூச்சலிட்டபடி மோதின. வாட்கள் சதைகளில் விளையாடித் தெறித்த குருதி திசையெங்கும் செவ்வரியோடிக்காட்டின. குதிரைகள் குளம்படியில் மிதித்துக் கொன்று தீர்த்த வீரர்களின் உடல்கள் மலைபோலக் குவிந்தன. அம்புமாரி பொழிந்தவண்ணமிருந்தது.

தல்ஹேவின் குத்தூசிக் கண்கள் இஜினாசியைக் குறிவைத்திருந்தது. இரு முறை நேருக்கு நேர் மோதினர்.

செம்பா
செம்பா

இஜினாசியை நெருங்கிய தல்ஹேவின் வாள்முனை போர்வாள் போலல்லாமல் கொலைவாளாக மாறியிருந்தது. கண்கள் அதீதமாக ஜொலிக்க நெஞ்சை ஊடுருவி நெடுந்தூரம் பாய்ச்சும் வேகத்தோடு வாளை முன்னே பாய்ச்சினான் தல்ஹே. அந்த வெறி கண்டு இஜினாசி தடுமாறினான்.

ஹியோங்... அவனறிந்த தல்ஹே ஹியோங்கா அது... ஒவ்வொரு முறை அவனைச் சந்திக்கச் செல்லும்போதும் அவனுக்குப் பிடித்த பழங்களும் தேயிலைகளும் கொண்டு சென்றானே... அவற்றைப் புன்னகையோடு கொண்டு வந்து தனக்கே பரிமாறுவானே அந்த தல்ஹேவா இவன்?

இல்லை என்றது வெறிகொண்ட கண்கள். அவனது நெஞ்சு நோக்கி வேக வேகமாக மீண்டு வந்தது நீள்வாள். சில முறை பாய்ந்து மீண்டது. இஜினாசி பின்னேறினான்.

மாலைப் போர் முரசும் கூம்பொலியும் ஒலித்து அடங்கின. படைகள் கூடாரங்களுக்குத் திரும்பின.

சேலாமலர்கள் மட்டுமே உதிர்ந்து பறந்த நிலத்தில் தலைகளும் மனித உறுப்புகளும் உருண்டு கிடந்தன. நிலமே குருதி குடித்துக்கிடந்தது.

செம்பா
செம்பா

ஒரு பகலில் இருபுறமும் பெருமளவில் சேதமாகியிருந்தது.

ஆனால் ஓடிய குருதியில்தான் கூடியது பலம் என்று சொல்வதுபோல சாரோவின் கூடாரத்திலிருந்து வெற்றிக் கூக்குரல்கள் இரவின் மௌனத்தைக் கிழித்துக்கொண்டிருந்தன.

இப்புறம் இஜினாசி இடிந்துபோயிருந்தான். இடையிலும் தோளிலும் பட்ட காயத்துக்கு மருந்திழைத்துக் கட்டு போடப்பட்டிருந்தது. ஹிம்சானிடமும் பேச்சில்லை. அப்போதுதான் வந்து சேர்ந்திருந்த ஜீமின் இஜினாசியில் தோளில் தட்டி ஆறுதல் சொன்னார்.

“எல்லாம் முடிந்துவிடவில்லை. நம்பிக்கை இழக்காதீர்கள் இஜினாசி.”

“படைகளில் பாதிக்கு மேல் காவு கொடுத்துவிட்டோம் ஜீமின். ”

“கிழக்குப் படைகள் இருக்கின்றன.”

“ஆமாமாம். பத்திரமாக மலைக்காடுகளில் ஒளிந்துகொண்டிருந்த படைகள்தானே... இன்று மட்டும் அவை இங்கே இருந்திருந்தால்...” ஹிம்சானின் பேச்சை உதாசீனப்படுத்தியபடி தொடர்ந்தார் ஜீமின்.

“சாரோவின் படையில் கணிசமான பாதிப்பு என்று செய்தி.”

“ம்ம்... ஆனாலும் பாருங்கள் வெற்றிக் கூச்சலை...”

“அவனது தன்னம்பிக்கையைச் சொல்லும் கூச்சல் அது. நம்மிடமும் அது இருக்க வேண்டும். பாதகமில்லை. நாளைக்கு என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்?”

“என்ன வியூகம்... இருக்கிற சொற்பப் படையை வைத்துக்கொண்டு என்ன வியூகம், என்ன தந்திரம்?”

“நம் பக்கம் பலம் தாழும்போது வியூகம் மாற்ற வேண்டும் இஜினாசி. ”

“எதுவும் வேண்டாம் ஜீமின். எனக்கு நம்பிக்கையில்லை. இன்றிரவு அல்லது நாளை விடியலுக்குள் சீன ஆயுதங்கள் புதியவரத்து கலவழியாக வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் நாளை அந்த சாரோப்படையை சீன வெடிப்பொறி ஆயுதங்கள் கொண்டு தகர்த்துவிடலாம். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. நான்கு கலங்கள் நிறைய சீன ஆயுதங்கள் வருகின்றன. நங்நங் துறையிலிருந்து நமக்காகவே. ஹிம்சானின் ஏற்பாடு. அவர் உங்களைப்போல காடுகளில் மறைவதை வியூகமெனச் சொல்லி விலகிக்கொள்ளவில்லை. நினைவிருக்கட்டும்... நாளை உங்கள் குழுப்படை ஹிம்சானின் தலைமையில் களமிறங்கும்.” முகம் பார்க்காமல் ஆணையிட்ட இஜினாசியை ஒரு கசந்த புன்னகையோடு பார்த்திருந்துவிட்டு, “ ஆகட்டும் தலைவரே” என்றபடி கூடாரத்தைவிட்டு வெளியேறினார் ஜீமின்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவது நாள் காலை

ஜீமின் உள்ளிட்டோரின் மற்ற கிழக்குக்குடிகளின் படைகள் கணிசமான அளவுக்கு வந்திறங்கியிருந்தன. இஜினாசியின் படையோடு இணைந்து சீன ஆயுதங்களை ஏந்திப் போருக்குச்செல்ல அவை புத்துணர்ச்சியோடு காத்திருந்தன. அப்போதுதான் வந்து சேர்ந்தது முதல் இடி.

”தலைவரே! மோசம் போனோம்.”

“என்னடா?”

“சீன ஆயுதங்களைக் கொண்டுவந்த கலங்கள் இரண்டுதான் வந்திருக்கின்றன. இரண்டைக் காணவில்லை. இந்த ஆயுதங்கள் நமக்கு எப்படிப் போதும்?”

“இது எப்படி நேர்ந்தது?”

“தெரியவில்லையே...”

“இப்போது என்ன செய்யப்போகிறோம்?”

“ஐயோ இஜினாசி...” அலறியபடி உள்ளே ஓடி வந்தார் இல்சங். பதறியபடி மற்ற குடித்தலைவர்களும் உடன் வந்தனர்.

“என்ன என்ன, என்ன இது... ஏனிந்த அலறல்?”

“குடி முழுகிப்போனது. கடைசியில் அந்தக் கிழவன் சொன்னதுதான் சரியாகப்போனது. தந்திரக்கார தல்ஹே மொத்தப்படையையும் இங்கே கொண்டுவந்ததாகத் தகவல் கசியவிட்டு நம்மை திசைதிருப்பிவிட்டு அங்கே கிழக்கு மலைக்குடிகள் நோக்கி படைப்பிரிவுகளை அனுப்பிவிட்டான். எல்லாம் போனது. இனி என்ன செய்வது?”

இடிந்துபோய் அமர்ந்தான் இஜினாசி.

இது எப்படி நேரலாம்... அவனுக்கு இது எப்படி நேரலாம்... எல்லாம் சரியாகத்தானே திட்டம் போட்டான்.

“இஜினாசி என்ன செய்வது சொல்லுங்கள்?”

“...”

“தலைவரே! போர் முரசொலிக்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்றன. உங்கள் முடிவென்ன சொல்லுங்கள்?”

“....”

“எப்படிப்போனாலும் நமக்குச் சிக்கல்தானே... இருபுறமும் சாரோவின் படை. நம்மிடமோ படைபலமும் இல்லை, ஆயுதமும் குறைவு. எப்படிச் சமாளிப்பது?”

“...”

“அதிகபட்ச உயிர்ச்சேதத்தைத் தடுக்க வேண்டுமென்றால் சமாதானமே ஒரே வழி.”

உடல் இறுகி நடுநடுங்க கண்களை மூடிக்கொண்டான் இஜினாசி. தாள முடியாத வலி.

“சமாதானமும் தோல்வியும் ஒன்றுதான். சாரோவோடு இணையச் சொல்கிறாயா?”

செம்பா
செம்பா

“படையிலிருக்கும் சொற்ப வீரர்களையும் மக்களையும் இழக்கச் சொல்கிறீர்களா?”

“இதற்கு என்னதான் வழி... சமாதானம் ஒன்றுதானா வழி?”

“சும்மா நிற்கிறாயே இஜினாசி. சுரோ இருந்திருந்தால் இப்படி நின்றிருப்பானா?”

சுரீரென்று வலித்தது. சொன்ன மொழியைவிடவும் உண்மை சுட்டதாலே அதிகம் வலித்தது.

“ஐயோ எல்லாம் போனதே!”

“எதுவும் போகவில்லை. என்ன ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். இதென்ன போர்ப்பாசறையா என்ன?” ஜீமின்னைக் கண்டதும் பிளவுபட்ட குடித்தலைவர்கள் ஒன்றிணைந்து அவர்புறம் ஓடினர். இஜினாசி தனித்து அமர்ந்திருந்தான்.

“செய்தி கேட்டீர்களா... கிழக்குப்பக்கமிருந்து சாரோவின் படை வருகிறது. ”

”வரட்டும்.”

”நாம் பெரிதும் நம்பியிருந்த ஆயுதங்களும் நம்மிடம் தேவையான அளவு இல்லை.”

மெல்லச் சிரித்தார் ஜீமின். பின் உரக்கச் சிரித்தார். சிரிப்பொலி கூடாரவெளியெங்கும் பரவிச் சென்றது. கிழவனுக்கு பயத்தில் கிறுக்குப்பிடித்துவிட்டதோ என்றுதான் பலருக்கும் தோன்றியது. ஆனால் இஜினாசி அவரின் முகத்தைக் கவனமாகப் படித்தான். அதில் அசாத்தியமானதோர் ஒளி கூடியிருந்தது. அதை அவன் பார்த்திருக்கிறான். ஒருவனைக் கண்டால் மட்டுமே அத்தகைய ஒளி பூக்கும் ஜீமின்னின் முகத்தில். அப்படியென்றால்...

“ஆயுதமா... இந்தப் பெருநிலத்தின் பேராயுதம் நம்மிடம் இருக்கிறது மக்களே. இனி நமக்கு பயமே வேண்டாம்.”

அந்தக் குரலில் இருந்த உறுதி வீரர்கள் முகத்தில் மெல்ல நம்பிக்கையைக் கூட்டியது. கிழவன் இப்படிச்சொன்னால் ஏதோ ஒரு பெரிய திட்டம் இருக்கிறதென்றுதானே பொருள்.

”பேராயுதமா... என்ன அது?”

செம்பா
செம்பா

``வானம் வணங்கி வழங்கிய பேராயுதம் இல்சங். தெய்வங்கள் நமக்குத் தந்த வரம். இந்தப் பெருநிலத்தை பொன்னிலமாக்கப் பூத்த வரம். ” கண்கள் சிவக்க கைகள் விரித்துக்காட்டி அவர் உரக்க கர்ஜித்த பாவனையில் நின்ற அனைவருக்கும் மயிர்க்கூச்செறிய ஆவலும் தேடலுமாக அவர் முகத்தைப் பார்க்க, அவரோ தொலைவில் நோக்கிக் கைநீட்டினார்.

கருமேகம் படைபோல சூழ்ந்து விரட்ட, பேரிடி முழுங்க சுழன்ற புழுதிச் சூறாவளியின் மையமாக ஓர் உருவம் புரவியில் பறந்து வந்துகொண்டிருந்தது படைக்கொட்டளத்தை நோக்கி. நம்பிக்கை தொலைத்த முகங்களோடு வெளியெங்கும் கூடாரங்களின் முகப்புகளில் நின்றுகொண்டிருந்த வீரர் கூட்டம் அவ்வுருவத்தைக் கண்டவுடன் உற்சாகத்தில் பெருங்கூச்சலிட்டனர்.

“கிம் சுரோ! கிம் சுரோ!” முதன்முறையாக வெற்றியே கிடைத்துவிட்டது போன்ற வேகத்தில் கூச்சலிட்டது குயாவின் படை. அக்கூச்சல் தொலைவில் சாரோவின் படைக் கூடாரத்தில் உலவிக்கொண்டிருந்த தல்ஹேவின் காதுகளை அடைந்தது.

”கிம் சுரோ... கிம் சுரோ..!”

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism