Published:Updated:

செம்பா: ``இணையில்லா தலைவன் கிம் சுரோ” | பகுதி 39

செம்பா

இடமும் வலமும் அவனுக்கு இடம் கொடுக்காத வேகத்தில் திரும்பியது எதிரியின் வாள். அவனது அத்தனை தாக்குதலையும் அநாயாசமாக எதிர்கொண்டது. நளினம் மிகுந்த வேகத்தோடு சண்டையிட்ட அவ்வுருவம் அவன் எதிர்பாராத வேளையில் அவனது கையிலிருந்த வாளை நழுவச் செய்தது.

செம்பா: ``இணையில்லா தலைவன் கிம் சுரோ” | பகுதி 39

இடமும் வலமும் அவனுக்கு இடம் கொடுக்காத வேகத்தில் திரும்பியது எதிரியின் வாள். அவனது அத்தனை தாக்குதலையும் அநாயாசமாக எதிர்கொண்டது. நளினம் மிகுந்த வேகத்தோடு சண்டையிட்ட அவ்வுருவம் அவன் எதிர்பாராத வேளையில் அவனது கையிலிருந்த வாளை நழுவச் செய்தது.

Published:Updated:
செம்பா

“கிம் சுரோ! கிம் சுரோ!”

விண்ணதிர ஒலித்தது அவன் பெயர்.

அவன் கடந்துசெல்லும் பாதையை நிரப்பியபடி இஜினாசியின் கூடாரம் நோக்கி நகர்ந்துவந்தது ஆங்காங்கு தேங்கி நின்ற படை. காயமேற்றவர்கள்கூடச் சிரமப்பட்டு வரத் தொடங்கினர்.

சுரோ உயிரோடு இருக்கிறான் என்ற மகிழ்ச்சியில் அவர்கள் உற்சாகக் கூச்சலிட்டனர். அவன் இறந்திருக்க மாட்டானென்று நம்பியவர்களெல்லாம் `சொன்னேனே... பார்...’ என்று சொல்லிக் குதித்துக் கூத்தாடினர். அவன் இறந்திருக்கக் கூடாதென வேண்டியவர்களெல்லாம் வானைப் பார்த்து நன்றி சொல்லிக்கொண்டிருந்தனர்.

புரவியிலிருந்து குதிந்திறங்கியவன் கையுயர்த்தவும் மந்திரம்போல உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருந்த மக்கள் குரல் அடங்கியது. மைதானப் புழுதியும் அடங்கி விலகியது.

இஜினாசியின் அருகே வந்தான் சுரோ.

”நலமா தம்பி?”

இஜினாசிக்கு அந்த மாற்றம் விளங்கியது. அவன் எவ்வளவு கேவலமாகப் பேசினாலும் தந்தையிடம் எத்தனை முறை மாட்டிவிட்டுத் திட்டும் தண்டனையும் வாங்க வைத்திருந்தாலும் சுரோ, இஜினாசிக்கெனத் தனித்துவைத்திருந்த புன்னகையில் எந்த மாற்றமும் இதுவரை இருந்ததேயில்லை. சிறு வயதில் வந்தபோதிருந்த அதே தோழமை தவழும் புன்னகை அது.

இன்று அவன் முகத்தில் அது இல்லை. அந்தப் புன்னகையை எச்சரிக்கையெனும் முகமூடிகொண்டு மறைத்திருந்தான் சுரோ.

இஜினாசிக்கு வலித்தது. அவனையறியாமல் அந்தப் புன்னகையைத் தேடியது மனம். அதையும் தாண்டி அவன் உயிரோடு நல்ல தேகபலத்தோடு வந்து நின்றதில் அவன் மனதை முழுமையான மகிழ்ச்சி நிரப்புவது கண்டு தன் மீதே வியப்பும் சினமும் ஏற்பட்டது.

இல்லை, இதற்கு வேறு காரணமிருக்க வேண்டும். ஒருவேளை என்ன இருந்தாலும் தன் தந்தையின் மகன்தானே என்ற பரிவு காரணமாயிருக்கலாம். அன்றி யாரோ என்றாலும் அநியாயமாக இறந்து போகாமல் தப்பிவிட்டானே என்ற பொதுவான அக்கறையாக இருக்கும். ஆம் அப்படித்தான் இருக்கும். மற்றபடி இவன் மீதெல்லாம் பாசமா இருக்கும்.... என் ஜென்ம விரோதி இவன்.

”நீயா... நீ எப்படி உயிரோடு வந்தாய்... உன்னைத்தான் கொன்றுவிட்டார்களே?” ஹிம்சான் குதித்துக்கொண்டு வந்தார்.

``அதெப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்கள் ஹிம்சான்... சொல்லியனுப்பியதே நீங்கள்தானோ?”

``என்ன அநியாயம்... எல்லோருக்கும் வந்த சேதியைச் சொன்னேன். அதெப்படி என்னைக் குற்றம் சொல்லலாம்?”

``யாரையும் குற்றம் சொல்ல நான் இங்கே வரவில்லை.”

``பின் எதற்காக வந்தாய்?” ஹிம்சானின் கேள்வி அர்த்தமற்றது என்பதுபோல மெல்லச் சிரித்தான் சுரோ.

``பொருளற்ற கேள்வி ஹிம்சான்.” முன்னே வந்த ஜீமின் சொல்லிக்கொண்டே படையினர் நோக்கித் திரும்பினார்.

``வீரர்களே! இதோ உங்கள் தலைவன் திரும்பி வந்துவிட்டான். உங்களுக்கு மகிழ்ச்சிதானே?” அவரது கேள்விக்கான பதில் விண்ணைப் பிளந்தது.

இஜினாசிக்கு வலி தலையைப் பிளந்தது. மற்ற தலைவர்கள் ஜீமின்னோடு சேர்ந்து இஜினாசி அருகே கூடினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``இஜினாசி. இதோ குயாவின் தலைமைக்குரிய மூத்த வாரிசு வந்துவிட்டான். இனி அவனே குயாவின் தலைவன். அவனே இந்தப் படையின் தலைவன் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.”

``யாரைக் கேட்டு முடிவு செய்தீர்கள்?” சினம் மிகக் கத்தினார் ஹிம்சான்.

செம்பா
செம்பா

``யாரைக் கேட்க வேண்டும்... இதோ! நேற்றைய போரின் இழப்புகளைப் பார்த்துவிட்டுப் பேசுங்கள். அதுகூடப் பரவாயில்லை. இன்று நாமிருக்கும் நிலையைப் பாருங்கள். கிழக்கே ஆபத்தான நிலையில் நம் குடிகள். இங்கேயும் வெற்றிக்கு எந்த வழியும் இல்லை. இத்தனைக்கும் காரணம் இந்தத் தலைவரின் தவறான முடிவுகள்தானே?”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஐயா! வேண்டாம் சொல்லம்புகளைப் பார்த்துப் பயன்படுத்துங்கள். அது எந்த நேரமும் உங்களை நோக்கித் திரும்பக்கூடும்.” சுரோவின் பேச்சில் தொனித்த எச்சரிக்கை கண்டு அதிர்ந்தார் அவனுக்கு ஆதரவாகப்பேசியவர். இஜினாசியைச் சொன்னால் இன்னுமா இவனுக்குக் கோபம் வருகிறது?

“இதற்கெல்லாம் இப்போது நேரமில்லை என்று முதலில் புரிந்துகொள்ளுங்கள். சுரோ இப்போது என்ன நிலை என்றால்...”

“தெரியும் ஐயா! கிழக்கே சாரோவின் படைகள் இறங்கிக்கொண்டிருக்கின்றன. கூட்டுப்படைகள் பாதி இங்கே வந்துவிட்டதால் கிழக்கு மலைக்குடிகள் ஆதரவற்று நிற்கின்றன. அதுதானே?”

``அது மட்டுமல்ல... நமக்கு வந்து சேரவேண்டிய ஆயுதக்கலங்களை அந்தக் கடற்கொள்ளையர் கும்பல் கடத்திக்கொண்டு போய்விட்டதாம்.”

``நல்லது. இனி ஆகவேண்டியதைப் பார்க்கலாம். காலம் அதிகமில்லையே...”

``பேச்செல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. முதலில் எங்கள் தலைவர் இஜினாசியால் தீர்க்க முடியாதென நீங்கள் நினைக்கும் இந்தச் சிக்கலை உங்கள் அருமை சுரோ மட்டும் எப்படித் தீர்த்துவைப்பார் என்று நினைக்கிறீர்கள்?” ஜீமின்னுடனான கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார் ஹிம்சான். பதிலுக்கு ஜீமின் சுரோவைப் பார்த்தார்.

சுரோ முன்னே வந்தான். பதிலை ஹிம்சானிடம் சொல்லவில்லை. இஜினாசியிடமும் சொல்லவில்லை. அது தேவையில்லை என்பதுபோல அவன் வீரர்கள் புறம் திரும்பினான்.

``எனதருமை நண்பர்களே...” கணீரென்ற குரலில் அவன் பேசத் தொடங்கவும் மொத்தக் கூட்டமும் ஆவலோடு கேட்கத் தொடங்கியது.

``உங்கள் வலியை நான் உணர்கிறேன். உங்கள் அச்சத்தை, உங்கள் நிச்சயமின்மையை, உங்கள் கோபத்தை அத்தனையையும் நான் உணர்கிறேன். உங்களுக்குள் கொதிப்பதுபோலவே எனக்குள்ளும் கொதித்துக்கொண்டிருக்கிறது குருதி. எதிரி நம்முடைய இழப்புகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இனியொருவர் இந்த குயாவின் மீது போர்தொடுக்க அஞ்ச வேண்டும்.

என்னிடம் திட்டமிருக்கிறது. சாரோவின் இன்றைய படை பலமும் அவர்கள் தற்போது இருக்குமிடம் கொண்டு அவர்களது இன்றைய போர் யுக்தியும் நானறிவேன்.

வெற்றி நமதென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. என்னைப்போலவே தாய்மண்ணைக் காக்கப் போராடும் என் அன்பு நண்பர்களே... இறப்பையும் வென்று இதோ உங்கள் தோளோடு தோள் நின்று சமராட வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக்கொள்வீர்களா... என்னோடு வருகிறீர்களா?”

``வருகிறோம்! வருகிறோம்!”

``இன்றைய போரின் முடிவில் குயாவின் கொடியை விண்ணுயரச் செய்ய வேண்டும். செய்வோமா?”

“செய்வோம். செய்வோம். கிம் சுரோ! கிம் சுரோ!” மீண்டும் உற்சாகக் கூச்சல்.

படை என்றுமில்லா வேகத்தோடும் ஆவேசத்தோடும் களமிறங்கத் தயாரானது. வேகமாக ஆலோசனைக் குடில் நோக்கி நடந்தவனைக் கேட்காமலேயே தொடர்ந்தது உபதலைவர்கள் குழு. பின்னோடு ஒற்றறிய ஓடியது ஹிம்சானின் குழு.

யாருமற்ற மைதானத்தில் தனித்து நின்றான் இஜினாசி .

போர் தொடங்கியது. மந்திரத்தால் கட்டுண்டதுபோல புதிய வேகத்தோடும், ஒருமித்த யுக்தியோடும் போரிட்ட குயாவின் படை கண்டு மிரண்டது சாரோவின் படை.

குயா பகுதியை யூரியைக் கவனிக்கச் சொல்லிவிட்டு வடகிழக்கு எல்லை நோக்கிப் பாய்ந்திருந்தான் தல்ஹே. அவனுக்குத் தெரியும் ஜீமின்னின் தந்திரங்களை அவனால் மட்டுமே வெல்ல முடியும், யூரியால் முடியாதென்று அவனுக்குத் தெரியும். அது மட்டுமின்றி இந்த வெற்றி யூரியுடையதாக இருக்க வேண்டுமென்பதும் அவனது விருப்பம்.

செம்பா
செம்பா

அதனால் முக்கிய திசையை, ஏறத்தாழ வெற்றி அவர்கள் பக்கமே என்று ஆன நிலையில் யூரியின் கையில் ஒப்படைத்துவிட்டு அதிகாலையிலேயே கிளம்பியவன் கிழக்கே காத்திருந்த சாரோவின் இன்னொரு படைப்பிரிவோடு இணைந்துகொண்டு பியோன்ஹான் கூட்டமைப்பின் கிழக்கு எல்லை நோக்கி வெகுவேகமாகப் பாய்ந்தான்.

ஜீமின் எப்படித் திட்டமிடுவாரென்று சிந்தித்தான். மலைக்காடுகள் சிறு படைகொண்ட அவர்களுக்குச் சாதகமல்ல. பெரும்படையோடு வரும் தனக்கே சாதகம். நிலக்களம் அறியாப் புதியவர்களை வேண்டுமானால் அங்கே அவர்கள் தோற்கடிக்கலாம். ஆனால் நிலக்களம் அனைத்தும் அறிந்த தல்ஹேவை அப்படிச் செய்ய முடியாது. அதனால் ஜீமின் காடு தொடங்கும் முன்பே சமதளத்தில் அவனைச் சந்திப்பாரென்று எதிர்பார்த்தான்.

ஆனால் அங்கே யாருமில்லை.

“மன்னா! ஆதரவற்ற மலையெல்லையைப் பாருங்கள்! பாவம் படை மொத்தமும் குயா நோக்கித் திருப்பிவிட்டதாக வந்த செய்தி உண்மைதான் போலும்.”

“இஜினாசி கேட்டிருப்பான். ஆனால் ஜீமின் முழுமையாக அதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. கண்டிப்பாக ஒரு பகுதிப் படையை இங்கே வைத்திருப்பார்.”

“எங்கே மன்னா... இனி குடிகளின் எல்லைவரை நம்மை எப்படி, யார் எதிர்க்க முடியும்... வில்லிற் சிறந்த வீரர்களும் காடு மலைகளைக் கடக்கும் புரவிப்படையும் நம்மிடம் உண்டு. அவர்களது புரவிப்படை வலிமை நமக்குத் தெரிந்ததுதானே... அதுவும் அங்கே இருக்கிறது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தல்ஹே இன்னும் சிந்தனையில் இருந்தான். படை எச்சரிக்கையோடு முன்னேறியது.

அடர்ந்த வனங்களின் மத்தியில் சற்றே எச்சரிக்கையைக் கைவிட்டு பேசியபடி நடந்தது அந்தப் படை. ஏறத்தாழ முந்நூறு பேர் கொண்ட அந்தப் படைப் பிரிவு போதுமென்று எண்ணி வந்தது தவறோ என்று திடீரெனத் தோன்றத் தொடங்கியிருந்தது தல்ஹேவுக்கு.

“என்ன மன்னா, சிந்தனை பலமாக இருக்கிறதே!”

“ஏதோ விபரீதமாக எனக்குப் படுகிறது. இன்னும் ஓரிரு நாழிகைகளில் குடிகளின் எல்லைகள் வந்துவிடும். இப்போது வரை எந்த எதிர்ப்பும் இல்லை.”

“எதிர்க்கப் படை வேண்டுமே மன்னா! வீரர்கள் இல்லாக் குடிகள். வீட்டிலிருக்கும் வயதான ஆண்கள்தான் கோடரிகளோடு வாசலில் நிற்பார்கள் பாவம்” வெடிச் சிரிப்பு கிளம்பியது.

ஏனோ தல்ஹேவுக்கு அதை நம்ப முடியவில்லை. ஜீமின்னை அத்தனை இலகுவாக எடை போட முடியாது.

”நம்புங்கள் மன்னா! அந்தக் கிழட்டு ஜீமின்கூட அங்கேதான் இருக்கிறான். நீங்கள் இங்கே வந்திருக்கவே தேவையில்லை. நாங்களே பார்த்துக்கொண்டிருப்போம். ஜீமின்னை நீங்கள் அதிகமாக எடைபோட்டுவிட்டீர்கள். அவனை... ஹக்…” திடீரெனக் கழுத்தில் பாய்ந்த அம்பு, பிடரி தாண்டி நீண்டிருக்க விழிபிதுங்கிய நிலையில் பாதிப் பேச்சில் புரவியிலிருந்து விழுந்தான் அவன்.

தல்ஹேவின் முக்கிய உபதலைவர்களில் ஒருவன். துணிவு மட்டுமல்ல... மிகத் தெளிவான திட்டம் மிகுந்த செயல். அவன் வியப்பதற்குள் அம்பு மழை பொழியத் தொடங்கியது.

அப்போதுதான் விளங்கியது தல்ஹேவுக்கு. பின்னடைய முடியாத அளவுக்குக் காட்டுக்குள் முழுமையாக மாட்டிக்கொண்டிருந்தது அவனது படை.

அம்புமாரியோ எதிர்க்க முடியா திசையில் மேலே... மரங்களின் மேலிருந்து வந்துகொண்டிருந்தது.

தல்ஹேவைச் சுற்றி மூடிய தற்காப்புப்படை பல காயங்களை ஏந்தியது. கணிசமான அளவு சேதமேற்படுத்திய பிறகே நிலத்தில் நேரே வந்து மோதியது எதிர்ப்படை. அதற்குள் அவர்கள் கிழக்குக் குடியொன்றின் எல்லைக்குள் வந்திருந்தனர்.

இல்லை தள்ளப்பட்டிருந்தனர்.

இருபுறமும் எதிரி வீரர்கள். மலைக்காடுகளில் சற்று நிதானித்து நடந்த போர் சமதளத்துக்கு வந்து உடனே உக்கிரம் நிரம்பியதானது.

சாதகமற்ற நிலையிலிருந்த எதிரிக்கும் சற்றே வாய்ப்புக்கொடுக்கும் அறம்... தல்ஹே மனதில் புதிய மரியாதை பிறந்தது.

சிந்திக்க இடம் இல்லாமல் வாட்கள் எதிர்ப்பட்டுக்கொண்டே இருந்தன. வெறிகொண்ட போரை நடத்தினர் அந்நிலத்தினர். அவர்கள் நிலத்தின் பலத்தைச் சரியாகப் பயன்படுத்தினர். காயப்பட்டவர்கள் உடனடியாக கவனிக்க இழுத்துச் செல்லப்படுவதைப் பார்த்தான்.

அப்போதுதான் அவன் அந்த ஆச்சர்யத்தை உணர்ந்தான். ஊர்ப்புறமிருந்த வந்த படையில் கணிசமான பேர் பெண்கள்.

காயப்பட்டவர்களை இடையில் புகுந்து இழுத்துச் செல்லும் துணிகரமான செயலை வெகுவேகமாகச் செய்து கொண்டிருந்தனர். முதலில் முட்டாள்தனமாகத் தோன்றிய இந்தச் செய்கை விரைவில் வியப்பை ஏற்படுத்தியது. உண்மையில் அவன் பெரிதாக எந்தச் சேதத்தையும் அவர்களுக்கு அளிக்கவில்லை. ஆனால் அவனுடைய வீரர்களோ எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வந்தார்கள்.

செம்பா
செம்பா

எதிரிப்படையில் குறையக் குறைய ஆட்கள் உள்ளிருந்து வந்து சேர்ந்துகொண்டிருந்தனர்.

பெண்கள். ஆம் பெண்கள் போருக்கு வந்தனர். பயிற்சியற்ற மோதல். ஆனால் வீரம் மிளிர்ந்த பாய்ச்சல். இதை... இப்படியொரு தாக்குதலை, இப்படியொரு வீரத்தை அவன் இங்கே எதிர்பார்த்திருக்கவேயில்லை.

யார் இதற்குக் காரணமென்று அவன் தேடினான்.

அவன் தேடலுக்கு பதில் சொல்வதுபோல எதிரே வந்து நின்றது ஓர் உருவம். அவ்வப்போது அந்த உருவம் மின்னலைப்போலக் கடந்து செல்வதைப் பார்த்திருந்தான். அசாத்திய வாட்திறன்கொண்ட அவ்வுருவம் யாரென்ற கேள்வி நெடுநேரமாக ஓடிக்கொண்டிருந்தது அவன் மனதில்.

வாளோடு வந்து நின்ற உருவத்தோடு வாட்போரில் ஈடுபட்டான். என்ன வேகம்!

இடமும் வலமும் அவனுக்கு இடம் கொடுக்காத வேகத்தில் திரும்பியது எதிரியின் வாள். அவனது அத்தனை தாக்குதலையும் அநாயாசமாக எதிர்கொண்டது. நளினம் மிகுந்த வேகத்தோடு சண்டையிட்ட அவ்வுருவம் அவன் எதிர்பாராத வேளையில் அவனது கையிலிருந்த வாளை நழுவச்செய்தது. தோளிலே பாய்ந்து மீண்டது அந்த வாள்.

ஓய்ந்துகொண்டிருந்த அவனது படையினரின் முன்னிலையில் காயப்பட்டு நிராயுதபாணியாக நின்றான் தல்ஹே. அவனது படையினர் ஸ்தம்பித்தனர். ஏறத்தாழ தோல்வி நிலை.

உருவம் நின்றது. பின் பாதிமுகத்தை மூடிய சீலையை விலக்கியது.

“பொன்கயாவின் கிழக்கு எல்லை உங்களை அன்போடு வரவேற்கிறது.” அவனது குருதி தோய்ந்த எதிரியின் வாள்முனை அவன் முகத்தின் முன்னே நீண்டது. அதிர்ந்து பேச்சற்று நின்றான் தல்ஹே.

அவனது அதிர்ச்சி கண்டு இன்னும் உரக்கச் சிரித்தபடி அவன் எதிரே நின்றாள் செம்பா.

தொடரும்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism