Published:Updated:

செம்பா சிரித்துக்கொண்டிருந்தாள்... `பொன்கயா ஒளிர்ந்தது’| பகுதி 40

செம்பா

``அதெல்லாம் நீங்கள் சுரோவாக இருந்தபோது. இப்போது நீங்கள் எங்கள் தேவியின் தேர்வு. எங்கள் மன்னர்.” அந்த முகத்திலே ஒளிர்ந்த பெருமிதத்தையும் மரியாதையையும் கண்டு ஜீமின் மிக மகிழ்ந்தார்.

செம்பா சிரித்துக்கொண்டிருந்தாள்... `பொன்கயா ஒளிர்ந்தது’| பகுதி 40

``அதெல்லாம் நீங்கள் சுரோவாக இருந்தபோது. இப்போது நீங்கள் எங்கள் தேவியின் தேர்வு. எங்கள் மன்னர்.” அந்த முகத்திலே ஒளிர்ந்த பெருமிதத்தையும் மரியாதையையும் கண்டு ஜீமின் மிக மகிழ்ந்தார்.

Published:Updated:
செம்பா
செம்பா சிரித்துக்கொண்டிருந்தாள்.

வெற்றியை தீர்க்கமாக உணர்ந்த சிரிப்பு அது. ஆனால் தல்ஹே தோல்வியை ஏற்றுக்கொள்வதாகயில்லை. தனியொருவனாயினும் குயாவைத் தகர்த்து அந்த இஜினாசியின் நெஞ்சைப் பிளக்காமல் அவன் விடுவதாகயில்லை.

அந்த எண்ணத்தோடு அவன் சட்டென வளைந்து இறந்துகிடந்த வீரனொருவனின் வாளைப் பிடுங்கிக்கொண்டு பாய, திடீரென அவன் பெயரை அழைத்தபடி அவன் முன்னே வந்து நின்றார் யூசு. தடப்பட்டான் தல்ஹே.

“யூசு?”

“நானேதான். தோல்வியை ஏற்றுக்கொள் தல்ஹே.”

தல்ஹே மிகக் குழம்பினான். இஜினாசியின் படையில் இத்தனை பூரிப்போடு யூசுவா... இந்தப் பெண்... இவள் யார்?

இந்தப் போர் யுக்திகள்.. இது யார் செய்த விநோதம்... யூசுவா அன்றி இந்தப் புதியவளா?

ஆம்... அவனைக் குழப்பிய போர்த் தந்திரங்கள் இந்த நிலத்துக்கே புதியவை.

சிறு குடிகளாக இருந்த பியோன்ஹானோ சிறு தேசமாக இருந்த சாரோவோ அவர்களுக்குப் போர் முறை கற்றுத்தந்த பூர்வகுடியோ அறியா யுக்திகள்.

செம்பா
செம்பா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆநிரை கவர்தலிலும் அறங்கள் வகுத்த ஆதிக்குடிகளின் போர் யுக்திகள் அவை. மேற்திசை தமிழ் மண்ணிலிருந்து செம்பவளத்தின் வழியாக இறக்குமதியாகியிருந்த தந்திரங்கள் அவை.

எத்தனை கதைகள் பாண்டிமாதேவியிடம் கேட்டிருப்பாள் செம்பா! பேரரசன் நெடுஞ்செழியனின் எத்தனை விசித்திர யுக்திகளைக் கேட்டு வியந்திருப்பாள்... சேரனுடனான போரிலே அவனது மலை நிலத்திலே பாண்டியன் உடைத்து முன்னேறிய கண்ணிகளையெல்லாம் விவரமாகச் சொல்லியிருக்கிறாள் பாண்டிமாதேவி. அவைதான் இப்போது குயாவின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்கின்றன.

``யார் நீ?” யூசுவை விடுத்து கேள்வியை அந்தப் பெண்ணை நோக்கி எறிந்தான் தல்ஹே.

``சுரோவின் படைத் தளபதிகளில் ஒருத்தி. அறிமுகம் போதுமா?” வாளை நீட்டி அவசரப்படுத்தினாள்.

``சுரோ... சுரோவா... சுரோ இப்போது...” தல்ஹேவிடம் தடுமாற்றம் மிகத் தெளிவாகத் தெரிந்தது. செம்பா நிதானித்தாள்.

ஒரு நாள் முழுவதுமாக தல்ஹேவின் போர்முறையை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருந்தவள், தனது முதல் போரிலே ஒரு பெருவீரனோடு மோதுகிறோமே என்று உளம் மகிழ்ந்திருந்தாள். அவனது ஆக்ரோஷம் அச்சம் தந்ததோடு உற்சாகமும் தந்தது.

இந்த வீரத்தை வென்றுவிட்டால் எப்படியிருக்கும் என்ற வேகத்தில்தான் அவன் யுக்திகளை உடைக்கும் வேகம் கணித்து கண்ணிகளை வைத்துக்கொண்டே வந்தாள். அந்த வீரன் இப்போது தடுமாறுகிறான். சுரோவின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் தடுமாறுகிறான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சுரோ உயிரோடிருக்கிறானா... நலமாயிருக்கிறானா?” விசித்திரமான வகையில் முகமெங்கும் ஒளிர, கண்கள் பனிக்க நடுங்கும் குரலில் தல்ஹே கேட்ட அதே நொடி தெற்கே நக்தோங் நதிக்கரையில் வெற்றி கோஷம் விண்ணைப் பிளந்தது.

இரண்டாம் நாளின் பிற்பகுதி வரை நடந்த உக்கிரச் சமரில் யூரி தன் முழு பலத்தையும் வீரத்தையும் காட்டினான். குயா நகரின் எல்லையில் நடந்த அப்போரிலே இருபுறமும் சேதமேற்பட்டபோதிலும் குயாப் படையினரின் அன்றைய உத்வேகம் அளவிட முடியாததாகவே இருந்தது. சாரோவின் படை தடுமாறியது.

இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட சுரோ படை நடுவே பெருவீரனாக நின்றதைப் பார்த்து அதிர்ந்தான் யூரி. அந்தப் பொன் முகத்தைப் பார்த்த பூரிப்பில் எதிரியின் படையில் அனைவரும் இரு மடங்கு வேகத்தோடு போர்புரிவதைக் கண்டான். புதிய யுக்திகள் கையாளப்பட்டன. இதற்கெல்லாம் தயாராகியிருக்காத யூரி மெல்லத் தன் தோல்வியை உணர்ந்தான். இரண்டாம் நாளின் அந்தி தொடக்கத்தில் சாரோவின் படை பின்வாங்கியது.

“கிம் சுரோ... கிம் சுரோ...” நிலம் அதிர்ந்தது. நதி குளிர்ந்தது. வானம் வளைந்து வானவில்லாக நின்றது. உற்சாகப் பெருங்கூச்சலில் குயா தத்தளித்தது.

குயாவின் பெருவெற்றிச் செய்தி நிலமெங்கும் பரவியது.

போர் முடிந்த மறுநாள் குயாவில் சபை கூடியிருந்தது.

பியோன்ஹான் பெருந்தலைகள் கூடியிருந்த அவை அது. இஜினாசியும் அங்கேதானிருந்தான்.

``தலைவரே அந்தக் கடவுளரின் திருவுளத்தால்தான் நீங்கள் திரும்பி வந்தீர்கள். வெற்றியும் நம்மைத் தேடி வந்தது. ஒரு விழா ஏற்பாடு செய்தே ஆக வேண்டும்.” உற்சாகக் குரலொன்று கோரியது.

``விழா எடுப்பதிருக்கட்டும்... அதைவிட முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டியதிருக்கிறதே... முதலில் அதைச் செய்யலாம். பிறகு விழாவும் எடுக்கலாம்.” ஜீமின் பீடிகையோடு பேச்சை நகர்த்தினார். சுரோ புன்னகையோடு எழுந்து நின்றான்.

``ஒரு படைத்தலைவனாக என்னுடைய எண்ணத்தைச் சொல்கிறேன். குயாவும் நமது கூட்டமைப்புக் குடிகளும் வளர்ந்து வருகின்றன. பிறர் கண்களில் படும்படியான உறுத்தும்படியான வளர்ச்சி. இனி நாம் நமது ஆட்சிமுறைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்தேயாக வேண்டும்.

நமது பன்னிரு கூட்டமைப்புகளையும் இணைத்து புதிய கயா நாடுகளாக அறிவிக்க நினைக்கிறேன். இனி ஓர் எதிரியின் வாள்முனைக்கு மடியா வண்ணம் நமது படைபலத்தைப் பெருக்குவோம். இந்த நிலத்திலே நம் கயாவை மிஞ்சிய நாடு எங்குமில்லை என்ற பெயரை உருவாக்குவோம். என்ன சொல்கிறீர்கள்... முடிவை உங்கள் கையிலேயே விடுகிறேன்.”

எளிமையாக, தெளிவான அவனது பிரகடனத்தைக் கேட்டு பெரும்பான்மையினர் உற்சாகக்குரல் எழுப்பினர். இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதானே... இனி குடித்தலைவர்கள் நிம்மதியாக இருக்கலாமே... அரசன் பார்த்துக்கொள்வானே!

செம்பா
செம்பா

``கயாவின் மன்னர் கிம் சுரோ வாழ்க... வாழ்க!”

``நிலம் தந்த நெடுவேந்தன் வாழ்க... வாழ்க!”

``பொறுங்கள்... அதற்குள் கூச்சலென்ன... எங்கள் இஜி...” ஹிம்சானின் குரலை இடைமறித்து உரக்க ஒலித்தது சுரோவின் குரல். அவன் இன்னும் முடித்திருக்கவில்லை. மெல்ல நடந்து இஜினாசியின் அருகே வந்து நின்றான் சுரோ.

``என் சகோதரன், உங்கள் தலைவன் இஜினாசியின் வீரத்தை மறுப்பதற்கில்லை. முதல் நாள் போரிலே அதை எல்லோருமே கண்டிருப்பீர்கள். அவனைப் போலொரு பெருவீரன் நிலத்தை ஆள்வது அவசியம்.”

``என்ன... என்ன... ஆட்சியை அவனுக்கு விட்டுக் கொடுக்கப்போகிறீர்களா... மன்னா இதை நாங்கள் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம்.”

``யாருடைய பிச்சையும் எனக்குத் தேவையில்லை.” விலகி நடக்கப்போன இஜினாசியைக் கைப்பிடித்து நிறுத்தினான் சுரோ.

``அனைவரும் நான் சொல்வதைப் பொறுமையாகக் கேளுங்கள். இனி குயாவின் வடக்கும் வடகிழக்கும் ஆகிய எட்டுக்குடிகளை ஒன்றிணைத்து ‘பொன்கயா’ உருவாகும். தென்மேற்கே நான்கு குடிகளும் மலைநிலங்களும் கடலொட்டிய பகுதியும் சேர்த்து ‘தேகயா’ உருவாகும். தேகயாவின் மன்னராக இஜினாசியை முன்னிறுத்த விரும்புகிறேன். எல்லோருக்கும் சம்மதம்தானே?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவை யோசித்தது. அண்ணன் தம்பி இருவரும் ஆட்சியில் இருப்பது ஒருவகையில் நல்லதுதான். ஆளுக்கொரு திசையைப் பார்த்துக்கொள்வார்கள். மெல்ல ஆமோதிப்புக் குரல்கள் ஒலிக்கலாயின. ஹிம்சானுமே இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அதிலும் தனது குடி இருந்த மலைப்பகுதியை ஒட்டி இன்னும் நாட்டின் எல்லையை விரிவாக்கும் வாய்ப்புள்ள, கடல் பட்டினம் உருவாக்க வாய்ப்புள்ள பகுதியை இந்த அண்ணன், தம்பிக்குத் தருவானென்று ஹிம்சான் நினைத்திருக்கவேயில்லை.

இத்தனைக்குப் பிறகும் இஜினாசிக்காக யோசித்திருக்கிறான் இந்த சுரோ மடையன். என்னவோ போகட்டும். இனி தேகயா என் நாடு. இஜினாசி மன்னனானால் என்ன... இனி ஹிம்சான்தானே மன்னனின் மாமன்... போனவுடனே திருமணத்தை நடத்திவிட வேண்டும். முகத்தில் பூரிப்பைப் பூசிக்கொண்டான்.

போலவே மற்ற குடித்தலைமை குடும்பத்தினர்களுக்கும் அந்தந்த நாடுகளில் முக்கியப் பொறுப்புகள் தரப்பட்டன. அனைவருக்கும் ஆனந்தம். ஓலைகள் வரையப்பட்டன. சாசனங்கள் அறையப்பட்டன. புதிய ஆணைகள். புதிய தொடக்கம்.

செம்பா
செம்பா

எல்லாம் நல்லபடியாகவே நடந்தன. ஆனால் யூசு எதிர்பார்த்த அன்புமழை பொழியவில்லை. சகோதரர்கள் ஒரு சொல் பரிமாறிக்கொள்ளவில்லை. அவன் மீதான கொலைவெறித் தாக்குதலைச் செய்தது யாரென்ற விசாரணை வேண்டுமென்ற கோரிக்கையை உடனே நிராகரித்தான். செய்கைகளில் தம்பி மீதான அன்பை தயக்கமின்றிக் காட்டியிருந்த சுரோ சொற்களை எண்ணிப் பகிர்ந்தான். இஜினாசியோ வாய் திறக்கவில்லை.

அவன் மனதில் இருப்பதுதான் என்ன... இன்னும் தீராப்பகையா அன்றி பகையுருகி புதிதாய் மலர்ந்த மதிப்பா... அன்றி யாருமறியாமல் அவன் நெடுநாளாக ஒளித்துவைத்திருந்த அன்பா... என்று எதுவுமே காட்டாமல் ஒரு சொல்கூட உதிர்க்காமல் அண்ணனின் முகத்தைக்கூடப் பார்க்காமல் இஜினாசி பரியேறிக் கிளம்பினான் தன் புதிய தேசம் நோக்கி. நாடு கிடைத்த மகிழ்வில் உற்சாகமாக உடன் கிளம்பினர் ஹிம்சானும் அவனது அடிப்பொடிகளும்.

பிறந்தது பொன்கயா

பட்டொளிவீசிப் பறந்த புதிய கொடியின் கீழே நின்று கையசைத்த கிம் சுரோவின் உருவத்தைப் பார்த்து கண்கள் பனிக்க, கையாட்டி கூக்குரலிட்டுச் சிலிர்த்தது மக்கள் கூட்டம்.

அவை கும்மாளமாயிருந்தது. அமைச்சர் ஜீமின் சிரித்தபடியே கேள்வியைப் போட்டார்.

“மன்னா! நாடு பிறந்தது. நல்லது. இனி தலைவனுக்கான லட்சணத்தோடு ஒரு மணமும் செய்துகொள்ள வேண்டும். இனியும் தாமதிப்பதற்கில்லை.”

``இல்லை. இல்லை. இனி தாமிப்பதற்கில்லை.” சுரோவின் பேச்சில் தொனித்த பொருளை உணர்ந்தவராக யூசு மட்டும் அவையடக்கம் மறந்து அட்டகாசமாகச் சிரித்தார்.

``அப்படியென்றால் அதற்கான ஏற்பாடுகளை...” யாரோ எடுத்துக்கொடுக்க ஜீமின் கைநீட்டி இடைமறித்தார்.

``நாமென்ன ஏற்பாடுகளைச்செய்வது... இதோ நம் மன்னர் சுரோ அந்தக் கடவுளர் தந்த வரம்தான். அதிலே உங்களில் யாருக்காவது மாற்றுக் கருத்துண்டா?”

``இல்லை. இல்லை... இல்லவேயில்லை. நாங்கள் அந்தக் கனவை மறக்கவேயில்லை. வானிலிருந்து வந்த பொன்முட்டையில் தோன்றியவர்தான் சுரோ. கடவுளர் பரிசு.”

“ஆம்! அந்தக் கடவுளர்தான் இறப்பின் வாயிலுக்குச் சென்றுவிட்ட நம் மன்னர் சுரோவை மீண்டும் அழைத்து வந்து தந்தது.”

“ஆமாம்... ஆமாம்...” ஆமோதிப்புகள் தொடர்ந்தன.

``அந்தக் கடவுளரே அவரின் இணையையும் தீர்மானித்துவிட்டனர்.”

``என்ன சொல்கிறீர்கள் ஜீமின்?” ஜீமின் யூசுவைப் பார்க்க, யூசு சுரோவின் கனவையும் அதிலே கண்டபடியே அந்த இளம்பெண் நிஜத்தில் வந்து சுரோவைக் காப்பாற்றியதைப் பற்றியும் எடுத்துக் கூறினார். ஏற்கெனவே செம்பாவைப் பற்றி அறிந்திருந்தவர்கள்கூட கனவு குறித்த புதிய தகவலைக் கேட்டு வாய்பிளந்தனர். எல்லாம் கடவுளரின் முன்னேற்பாடுதான். அன்றி சரியாக நம் நிலத்தருகே வந்து அவர்கள் வந்த கலம் சிதையுமா... சுரோவைக் காப்பாற்றத்தான் இளவரசி இங்கே வந்திருக்கிறாள். கடவுள் சித்தம்.”

``அதுமட்டுமல்ல... இந்தப் போரின் வெற்றிக்கும் மிகப்பெரிய பலம் இளவரசியின் யோசனைகள்தான்.”

“உண்மையாகவா?”

“ஆம்! அவர் தந்த யுக்திகளால்தான் சாரோவை வென்றோம். அவரே தல்ஹேவின் முன் வாளெடுத்து வென்றார்.”

“ஆமாம் ஆமாம்! கிழக்கே நடந்த போர் பற்றித்தான் ஊரெல்லாம் ஒரே பேச்சு. யாரந்த பெண் தளபதி என்று பேசி மாளவில்லை.”

“அவர் யாரென்று நினைத்தீர்கள்... மேற்திசையிலே பெயர்பெற்ற ஆதிநிலத்தின் மன்னன் மகள். ஹியோ (ஆய்) வம்சம் என்று பெயர். தவிரவும் பாண்டியன் எனும் பெருவேந்தனின் சுவீகாரப் புத்திரியாம். இளவரசியின் பெயர் ஹுவாங் ஓக் (செம்பவளம்). தாய் வழியிலும், தந்தை வழியிலும் சுவீகாரத் தந்தை வழியிலும் என்று அவர் ஆள நாடுகள் பல இருந்தபோதும் தனக்கென ஒரு நாட்டை, தானே தேடிப்பிடிப்பேன் என்று கடலோடிக் கிளம்பிவிட்டவர்.

அவர் வந்து வாளெடுத்தது நமக்காகத்தான். நமது மன்னர் சுரோவுக்காகத்தான். விசித்திரத்தைப் பாருங்கள்! சுரோவின் கனவில் வந்த இளவரசி. அவளது கனவே சுரோ என்று எண்ணுகிறார். அவரை சுரோவுக்கு மணமுடிப்பதே கடவுளருக்கு நாம் செய்யும் சரியான மரியாதையாக இருக்குமென நான் நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?”

“அருமையான யோசனை.”

“அப்படியே செய்வோம்.”

அமைச்சர்கள் புடைசூழ தீவுக்கரையில் வந்திறங்கியது சுரோவின் தூதுக்குழு.

கூடாரத்து வாயிலில் நின்ற கண்ணன் புன்னகைத்தான். மனம் நிறைந்த புன்னகை. போர் முடிந்த நாளிலிருந்து செம்பவளத்தின் கண்களில் தென்படும் மாற்றங்களை அறியாதவனல்லவே... கடலோடி கரை கண்டவள். போரிலே வென்று கொடுத்தவள். அவளை இந்த நிலத்தினர் ஏற்றுக்கொள்வார்களோ என்ற அவனது எண்ணக் குமைச்சலுக்கு மருந்தாக வந்து நின்றிருந்தனர் அவர்கள்.

”நாங்கள் இளவரசியைக் காண வந்திருக்கிறோம். பொன்கயாவின் மன்னர் அவரை முறைப்படி காண விழைகிறார்.”

“என்ன நோக்கமோ?”

“மணமுடிக்கும் எண்ணம்தான். வேறென்ன?”

“எங்கள் ஊரில் மணமுடிக்க மாப்பிள்ளைதான் மணமகள் வீட்டுக்கு வந்து நின்று கேட்கவேண்டும்.”

“அதாவது...”

“அதாவது உங்கள் மன்னரை நேரே வந்து அழைக்கச் சொல்லுங்கள்.” மிடுக்காகவே சொன்னபோதும் விளையாட்டுப் புன்னகையை மறைக்க முடியவில்லை அவனால். உடன் நின்ற போ, சங்கன், எழினியின் முகங்களிலோ மகிழ்ச்சிப் புன்னகை வெளிப்படையாகவே தெரிந்தது.

இவ்விரு நாட்களாக செம்பவளத்தை எவ்வளவு கேலியும் கிண்டலும் செய்து விளையாடியிருப்பார்கள்... அதிலும் சங்கன் முகம் அளவிட முடியாத பூரிப்பைக் கொண்டிருந்தது. அவனது குட்டித் தங்கைக்குக் கல்யாணமாகப் போகிறதே... இப்படி வேடிக்கையாக அவர்கள் கேட்க, “உங்கள் புறத்து முறைமைகளை நானும் படித்துக்கொண்டேன் கண்ணன். இதோ... நானும்தான் வந்திருக்கிறேன்.” கூட்டத்தை விலக்கியபடி சுரோ வந்து நிற்கவும் சட்டென மடிந்து பணிந்தான் கண்ணன். “மன்னருக்கு வணக்கம்.”

``அடடா! என்ன இது... இத்தனை நாள் இல்லாத பழக்கம்... கூடாரத்தில் இருந்தபோது என்னை வேடிக்கை பேசிப் பரிகசித்ததெல்லாம் மறந்துவிட்டதா கண்ணன்?”

``அதெல்லாம் நீங்கள் சுரோவாக இருந்தபோது. இப்போது நீங்கள் எங்கள் தேவியின் தேர்வு. எங்கள் மன்னர்.” அந்த முகத்திலே ஒளிர்ந்த பெருமிதத்தையும் மரியாதையையும் கண்டு ஜீமின் மிக மகிழ்ந்தார். சுரோ கொடுத்து வைத்தவன்தான்.

”இனியாவது உங்கள் இளவரசியாரின் தரிசனம் கிடைக்குமா?”

“கிடைக்கும்.” உள்ளிருந்து வந்த குரலும் உருவும் கண்களை மனதை நிறைத்த நொடி சுற்றி இருந்த யாவும் மறந்துபோனது சுரோவுக்கு. அவர்கள் இருவரைத் தவிர்த்து மற்ற யாவரும் கரைந்துபோயினர்.

கனவுகள் இரண்டு நனவாகியிருந்தன.

காதல் பூத்த கண்களோடு மௌனித்து நின்ற இருவரையும் கண்டு மகிழ்ந்தது சுற்றம்.

வெகு விமரிசையாக நடந்தது திருமணம். கண்ணனும் நோய்ப்பட்ட டோரியனும் சுரோ தந்த பரிசுப்பொதிகளோடு மனமின்றி விடைபெற்றுக் கிளம்பினர் மேற்திசை நோக்கி.

இளவரசி செம்பவளம் கொண்டுவந்த பொன், பொருள் பொதிகள் அரண்மனைக்குச் சென்ற வரிசை கண்டு வாய் பிளந்தது மக்கள் கூட்டம். இளவரசி செம்பவளம் அவளது குடிப்பெயரான ஆய் (ஹியோ) பெயரையே தாங்கி - ராணி ஹியோ ஹுவாங் ஓக் ஆனாள்.

கிம்ஹே என்று பெயர் சூட்டப்பட்ட தலைநகரிலே இருந்தபடி தாய்போல அரசியும், தந்தைபோல அரசனும் காப்பாற்ற பொன்கயா பொலிவான ஆட்சியைக் கண்டது.

நாடு நகர் செழிக்க நல்லாட்சி நடந்தது.

பொன்கயா ஒளிர்ந்தது.

(முற்றும்)

—---------------------------------------------------------------------------------------------------------------------

பியோன்ஹான் கயாவானது. சாரோ ஷில்லாவானது. மன்னன் நம்ஹே தல்ஹேவை அடுத்த மன்னனாக்க முயல தல்ஹே மறுத்து யூரியை மன்னனாக்குகிறான். யூரிக்குப் பின்னரே மன்னர் பதவி தல்ஹேவுக்கு வருகிறது. கிம் சுரோ ஹியோ ஹுவாங் ஓக்கின் இரு பெண்கள் தல்ஹேவின் மருமகள்களானதாகவும் கதைகளுண்டு.

கொரிய இதிகாசங்களிலே கிம் சுரோவின் ராணி தனியிடம் பெறுகிறாள். அவளது மொழியும் வழமைகளும் கலாசாரக்கூறுகளும் கொரிய நிலத்து மக்களோடு பிரிக்க முடியாத இணைப்பைப் பெறுகின்றன. பிற்காலத்தில் அவளது இரு பிள்ளைகள் ஆய்குலப்பெயரை- ’ஹியோ’வைத் தக்கவைத்துக்கொள்கின்றனர்.

செம்பா சிரித்துக்கொண்டிருந்தாள்... `பொன்கயா ஒளிர்ந்தது’| பகுதி 40

இன்றளவும் கொரிய நிலத்தின் பெரும்பான்மை வம்சமான கிம் வம்சம், கிம் சுரோ வழி வந்தவர்களாகவும் ஏறத்தாழ ஆறு மில்லியன் கொரிய மக்கள் ஹியோ வழி வந்தவர்களாகவும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.

இப்படித்தான் கனவு தேடி, கரைகடந்த ஒரு வீரப் பெண்ணின் எழுதப்படாத வரலாறு அந்நிலத்தின் காற்றோடு மண்ணோடு கலந்திருக்கிறது. பன்னெடுங்காலமாக மொழியிலும் கலாசார, பண்பாட்டு வடிவங்களிலும் ஆங்காங்கு விடுபட்ட விடுகதைத் துணுக்குகளாக விரவிக்கிடக்கிறது. அந்த விடுகதைத் துணுக்குகளை, தமிழ் நிலத்துக்கும் கொரிய தீபகற்பத்துக்குமான உறவின் சாரங்களைப் பொறுக்கிக் கதைசெய்து வாசகர்களிடம் தந்துவிட்டேன். இனி இரு நிலத்தின் தொடர்புகளை வரலாற்றுப் பெருவெளியில் நிறுவும் சாத்தியங்களை வருங்காலம் செய்யட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism