Published:Updated:

செம்பா: ``தப்பிவிடு... இல்லையென்றால் செத்துவிடுவாய்!" | பகுதி 25

செம்பா

இந்தக் காவலையும் மீறி என் உயிருக்கு ஊறுவிளைவிக்க வேறு யாருக்குக் காரணமிருக்கிறது? யாருக்கோ இருக்கிறதென்ற எண்ணமே அவளுக்கு அதிர்ச்சியளித்தது. அதைவிடவும் இதனால் இதுவரையிலான அவளது அனுமானங்களெல்லாம் தவறோ என்கிற கோணத்திலும் எண்ணம் போனது.

செம்பா: ``தப்பிவிடு... இல்லையென்றால் செத்துவிடுவாய்!" | பகுதி 25

இந்தக் காவலையும் மீறி என் உயிருக்கு ஊறுவிளைவிக்க வேறு யாருக்குக் காரணமிருக்கிறது? யாருக்கோ இருக்கிறதென்ற எண்ணமே அவளுக்கு அதிர்ச்சியளித்தது. அதைவிடவும் இதனால் இதுவரையிலான அவளது அனுமானங்களெல்லாம் தவறோ என்கிற கோணத்திலும் எண்ணம் போனது.

Published:Updated:
செம்பா

அவள் வாய்பிளந்து நின்ற நிலை கண்டு சத்தமாகச் சிரித்துவிட்டுப் பின் வாய்பொத்திக்கொண்டான் சங்கன்.

பந்தங்களின் சடசடப்புக்கிடையே கோட்டைக் காவலர்களின் வீரக் கழல்கள் எழுப்பிய ஓசை கோர்வையான இடைவெளியில் ஒலித்துக்கொண்டிருந்தது. மற்றபடி முழுமையான, மதுரைக்குக் கொஞ்சமும் பொருத்தமற்ற அமைதி. அதில் அவனது நகைப்பொலி உரத்துக் கேட்டுவிடக்கூடும்.

நள்ளிரவு வேளை.

குடியிருப்புகளோ அல்லங்காடிச்சாலைகளோ பரபரப்பாக்காத உட்கோட்டைச்சுவரின் வெளிப்புறப்பகுதி. சோலையொன்றின் மறைவில் நின்றபடி எதிரில் இருட்டில் கிடந்த அகழியை ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தாள் எழினி.

இரவு வானத்தைச் சாடிய கருமை பொதிந்த அகழி நீர். அதற்குள் குதி என்றால் எப்படி?

என்ன சிரிப்பு என்று சிடுசிடுக்கவேண்டியவள் இன்னும் அசையாமல் நிற்பதிலேயே அவளது அச்சத்தின் அளவு புரிந்தது சங்கனுக்கு. சங்கடம் விலக்கி, மெல்ல தோள் தொட்டு உலுக்கினான்.

“இப்படி நின்றால் எப்படி?”

“நீங்கள் விளையாட்டுக்குத்தானே சொல்கிறீர்கள்?”

“இல்லை திட்டம் இதுதான்.”

“என்னை உயிரோடு முதலைக்குப் பலியிடுவதுதான் உமக்குத் திட்டமா... வந்ததும் வராததுமாக மருதனார் உங்களை அழைத்துப்பேசினாரே, இதையா சொன்னார்... ம்ஹும்ம்... கண்டிப்பாக இருக்காது. இது உங்கள் பழைய திட்டம் அப்படித்தானே அல்லது நேரம் பார்த்து என்னை வஞ்சம் தீர்க்கிறீர்களா?”

“கிறுக்கச்சி! உன்னிடம் எனக்கென்ன வஞ்சம்?” சட்டெனக் குழைந்த குரலில் இருவருமே திடுக்கிட்டு அமைதியாகினர். முதலில் தன்னைச் சமன் செய்தவனாகச் சங்கன் தொடர்ந்தான்.

“உண்மையிலேயே இதுதான் திட்டம். உட்கோட்டைக்குள் செல்ல இது தவிர வேறு எந்த வழியும் இல்லை, இது உறுதி.”

“எனக்கென்னவோ எல்லாமே நீங்கள் தப்பும் தவறுமாக சிந்திப்பதாகத் தோன்றுகிறது.”

“தோன்றும் தோன்றும்... ஒரு முழுநாள் அந்த அரைப் பைத்தியத்துடன் இருந்திருக்கிறாயல்லவா... என்னைப் பார்த்தால் முழுப்பைத்தியமாகத்தான் உனக்குத் தோன்றும்” சட்டென நிலை மறந்து அவள் கன்னங்குழிய சிரிக்கவும், அது பந்த ஒளியில் அவனுக்குத் தனிப்படத் தெரியவும் சங்கன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். குண்டுக் கண் அகழியோ, கொடுங்கடற்சுழியோ இதற்குப் பரவாயில்லை. இந்தச் சுழியில் விழுந்தால் தப்ப வழியேயில்லை.

“நானல்ல, இந்தத் திட்டத்தை யார் கேட்டாலும் உங்களைப் பைத்தியம் என்றுதான் நினைப்பார்கள். அகழியில் நீந்துவதாம் சுருங்கை வழியே கோட்டைக்குள் செல்வதாம். இதெல்லாம் நடக்கிற கதையா... அகழியில் திரியும் முதலைகளெல்லாம் நம்மை நீந்தவிட்டு வேடிக்கை பார்க்குமா?”

“முதலைகள் இருப்பதை நீ பார்த்தாயா?”

“நேற்று பின்மாலையில்கூட காவலர் கை விளக்கொளியைப் பண்டமென நினைத்துப் பாய்ந்தது ஒரு முதலை. நீங்கள் பார்க்கவில்லையா?”

“அது கோட்டை முன்வாசலில். இங்கே?”

“ஏன் அங்கிருக்கும் முதலைக்கு இங்கே நீந்தி வரத் தெரியாதா?”

“இங்கே முதலைகள் கிடையாது. குறிப்பாக இன்று. என்னை நம்ப மாட்டாயா?”

“மாட்டேன்.”

“இதுவே செம்பா சொல்லியிருந்தால்…”

“குதித்திருப்பேன்.” அவன் முடிக்கு முன்பு பதில் வந்தது.

“சரியான மாயக்காரப் பிசாசு...” குரலில் அவனையறியாமல் பொறாமை எட்டிப் பார்த்தது.

“ஒரு நாளில் அவள்மீது வந்த நம்பிக்கை இந்த மூன்று நான்கு நாள்களில் என்மீது வரவில்லையா?”

“உங்களை நம்பாமல் இல்லை. ஆனால்…”

“சரி. நீ இங்கேயே இருந்து தொலை. எனக்கு என் தங்கைப் பிசாசைப் பார்க்க வேண்டும், நான் கிளம்புகிறேன்” அகழி நோக்கி நடந்தவனின் கையைப் பிடித்து நிறுத்தினாள்.

“என்ன?”

“சரி.”

“என்ன சரி?”

“நானும் வருகிறேன். நான் உங்களை நம்பத்தான் செய்கிறேன். என் பயம் எனக்காக மட்டுமல்ல” தயக்கமும் குழைவும் கலந்த அவளது பதிலில் சட்டென முல்லை அவிழ்ந்ததுபோல சூழலெங்கும் இன்ப மணம் பொங்கிப் பரவியது அவனுக்கு. அவனைப் பற்றியிருந்த அவளது குளிர்க் கரத்திலிருந்து அவனுடலின் அத்தனை பாகங்களுக்கும் நீரோட்டம்போல வெப்பம் பெருகியோடியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன்னை மீறிய பெருந்தேவையொன்று தன் உள்ளத்தை நிறைக்க திமிறிக்கொண்டு வருவதுபோலிருந்தது.

சங்கன் மிகவும் முயன்று மனதைத் திருப்பினான். அவனது அசைவில் இயல்புக்குத் திரும்பியிருந்த எழினியும் அவனது கரத்தை விடுவித்தாள்.

“நன்றாகக் கவனித்துக்கொள். இதோ... இங்கே இறங்கி நூல் பிடித்ததுபோல நேரே நீந்தினால் அங்கே தெரிகிறது பார், அந்த சுருங்கைகள் இருக்குமிடத்தை அடையலாம்” சாம்பல் நிறத்துக் கோட்டைச்சுவரில் கரும் பொட்டுகள்போலத் தெரிந்த நீரகற்றும் வட்டத் தூம்புகளைக் கைகாட்டிச் சொன்னான்.

“அந்த வரிசையில் மூன்றாவதாக இருக்கிறது பார்! அதன் வழியாக நேரடியாக அந்தப்புரத்தின் சோலைக்குள் நுழைந்துவிடலாம். சரி, இப்போது கிளம்பினால்தான் அடுத்த நாழிகை மணியடித்து காவலர்கள் இந்தப் பக்கம் வருமுன் போக முடியும். இறங்கலாமா... நீச்சல் தெரியும்தானே?” சாதாரணமாக அவன் கேட்க,

“தெரியாதே! ” கண்களையும் கைகளையும் ஒருசேர அவள் விரிக்கவும் அதிர்ந்து நின்றான் சங்கன்.

—----------------

எங்கென்று தெரியாத தனியறை பாண்டியன் கோயில்.

சாளரங்களற்ற அந்த அறையில் சங்கனின் தங்கைப் பிசாசு பாண்டியனின் வருகைக்காகப் பெரும் பதற்றத்தோடு காத்திருந்தது.

சுவர் முழுவதும் அழகிய சர விளக்குகளும், அவை துப்பிய ஒளியின் தயவில் தென்பட்ட நுண்ணோவியங்களும், சீலைகளும், தொங்கு சாமரங்களுமென அந்த அறையில் எந்தச் சுகக்கேடுமில்லை.

சாளரங்களில்லாத குறையைத் தீர்க்கும்விதமாக உயர்ந்த விட்டத்தைச் சுற்றியோடிய பெரிய கம்பியிட்ட இடைவெளிகூட அறைக்கு அழகு சேர்த்தது. பலமான காவல்தான். ரசனை குறைவற்றவனாகவும், தெளிந்த சித்தமுடையவனாகவும் தெரிகிற இந்தப் பாண்டியனின் மனநிலையைக் கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ள முடியவில்லையே என்றெண்ணியபடி பஞ்சணையில் சாய்ந்தாள் செம்பவளம்.

தலைவனென்பவன் தாயல்லவா? ஓர் உயிரை அதுவும் தாய்மையுற்ற ஓர் உயிரைக் கொல்லத் துணிந்தவன் மனிதனே அல்ல, அவன் எப்படி ஒரு தலைவனாக… நாடாளும் மன்னனாக இருக்கலாம்?

என்னைத் தெரிந்ததுபோலப்பேசுகிறான். இவனுக்கு என்னை எப்படித் தெரியும்... இத்தனை ஆண்டுகளில் இவன் எவ்வளவு அட்டூழியங்கள் செய்திருப்பான்... அதிலே என்னையும் என் தாயையும் எப்படி நினைவிருக்கும்... ம்ஹூம். நான் பிறந்ததுகூடத் தெரிய வாய்ப்பில்லை. இது ஏதோ குழப்பம். என்னை யாரோ என்று நினைத்திருக்கிறான். அதுவும் நல்லதற்குத்தான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனியாக வருகிறேன் என்றானே... மனைவி முன்னிலையில் ஒரு பெண்ணிடம் இப்படிச் சொல்ல நாக்கூசவில்லையே!

ச்சீ என்ன மனிதன்... ஆனால் பேச்சிலிருந்த கயமை பார்வையில் இல்லையே ஏன்... என்னை என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறான்?

என்ன செய்வான்... பார்த்துவிடலாம். என் ஒரு கை போனால் அவனது இரு கைகளையும் துண்டித்துவிட மாட்டேன்?

பண்டு நிலத்துப் பாண்டியன் அவனென்றால் ஆதியில் தோன்றிய ஆய்க்குடி மகள் நான்.

பார்த்துவிடலாம் ஒரு கை.

என்னென்னவோ எண்ணியபடி கையருகேயிருந்த தட்டிலிருந்த பால் குவளையைக் எடுத்துக் குடிக்கப்போனாள். சர்ரக்கென்று வந்து தலையணையில் குத்தி நின்றது அம்பொன்று. அதன் முடிவில் சிறு துணி. வேகமாக எடுத்துப் பிரித்தாள்.

“தப்பிவிடு. இல்லையென்றால் செத்துவிடுவாய்.” பெயரற்ற மிரட்டல். அசட்டையாக எண்ணி அதைத் தூக்கியெறிந்தவள், கையிலிருந்த பாலை யோசனையாகப் பார்த்தாள். ஒருவேளை இந்த மிரட்டல் உண்மையாக இருந்தால்?

பாண்டியனா கொல்லப்போகிறான்... அவனுக்குக் கொல்லும் எண்ணமிருந்தால் கிளிப்பாவையில் அம்பு பாய்ந்த அன்றே கொன்றிருக்க வேண்டும்.

அவனைப் பொறுத்தவரை அவள் ஒரு கேளிக்கைப் பொருள். கேளிக்கை முடியாமல் தூக்கியெறிய வாய்ப்பில்லை.

இங்கே வைத்து இந்தக் காவலையும் மீறி என் உயிருக்கு ஊறு விளைவிக்க வேறு யாருக்குக் காரணமிருக்கிறது?

யாருக்கோ இருக்கிறதென்ற எண்ணமே அவளுக்கு அதிர்ச்சியளித்தது. அதைவிடவும், இதனால் இதுவரையிலான அவளது அனுமானங்களெல்லாம் தவறோ என்கிற கோணத்திலும் எண்ணம் போனது. என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி- தலையணையைக் கொலை செய்த அம்பைப் பார்த்தபடி நின்றாள் செம்பவளம்.

செம்பா
செம்பா
குயா நகர், கொரியா

மழைமேகங்களற்ற வானம் நிர்வாணமாக மல்லாந்து கிடந்தது.

அதை வெறித்தபடி பாறையில் பரவிக்கிடந்தான் சுரோ. அருகிலேயே போதை விக்கலோடு குப்புறக் கவிழ்ந்து அரற்றிக்கொண்டிருந்தான் ஏகிம். யூசுன் மாமன் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தார்.

எதை உற்றுப் பார்க்கிறார்... காய்ந்துகொண்டிருந்த நதிப்படலத்தில் கானல் நீர் தெரிகிறதுபோலும். ஓ! இது இரவாயிற்றே... கானலெப்படி?

“சம்சொன்…”

“ஓ...”

“இப்படி வாருங்கள்” சுரோவின் வழக்கமான இளகிய குரல் இப்போது மிகையாகிப்போன சோஜுவின் உபயத்தில் இன்னும் இளகிக்கிடந்தது.

“வாருங்கள் இங்கே...” தனக்கருகே பாறைத்திட்டைத் தட்டிக் காட்டினான். அவரும் பேசாமல் வந்து அவனருகே படுத்துக்கொண்டார். அகண்ட வானில் பார்வையைப் பதித்தபடி பேசாமலிருந்தார்.

“என்ன மாமா பேசாமலிருக்கிறீர்கள், என் மீது கோபமா... வருத்தமா?”

“இரண்டும்தான். ஏன் இருக்கக் கூடாதா?”

“நீங்களும் இப்படிப் பேசலாமா... எனக்கென்று பேச யாருமே இல்லையா?” திடீரென உயர்ந்த அவனது குரலுக்கு எதிரொலியாக “நானிருக்கேன்டா” என்று குப்புறப்படுத்தபடியே குறட்டைக்கும் விக்கலுக்கும் இடையே அரைகுறைப் புலம்பலை உதிர்த்தான் ஏகிம். பாசத்தோடு அவனைத் தட்டிக்கொடுத்துவிட்டு மீண்டும் மாமனிடம் திரும்பினான் சுரோ. போதையின் உச்சத்தில் கண்கள் ஒளிர்ந்த மருமகனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார் யூசுன். பின் மெல்லக் கேட்டார்.

“யார் நீ?”

“என்ன சம்சொன்... சட்டென்று இப்படிக் கேட்டுவிட்டீர்கள்?”

“கேள்விக்கு பதில் சொல். யார் நீ?”

“கிம் சுரோ. குயாநகர்த் தலைவரின் மூத்த மகன். உங்கள் அன்புத் தங்கையின் மகன்.” அவர்மீது விழுந்த கையை அகற்றியபடி அடுத்த கேள்வி கேட்டார்.

“தலைவனின் மகனாக உன் பொறுப்புகள் என்னென்ன?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“என்ன மாமா?”

“சொல் சுரோ.” நீண்ட அமைதியின் பின் சுரோவின் பதில் வந்தது.

“நான் மணமுடிப்பது இப்போது அவ்வளவு அவசியமா மாமா?”

“இதற்கு பதில் உனக்குத் தெரியாதா சுரோ... தலைவர் வீட்டில் மணமாகும் வயதில் பிள்ளையிருந்து காலம் தாழ்த்தினால் மழையும் காலம் தாழ்த்தும் என்பது நமது மக்களின் நம்பிக்கை. மழையின்மை குறித்து மூன்று திங்களாகப் பேசிக்கொண்டு மட்டும்தானே இருக்கிறோம்?”

“மழையின்மைக்கும் நான் மணமுடிப்பதற்கும் காரணமிருப்பதாக எவ்வளவு சிந்தித்தாலும் என்னால் நம்ப முடியவில்லை.”

“நம்புபவன் சிந்திக்க வேண்டியதில்லை”

“சிந்திக்காமல் நம்புவது சரியா மாமா?”

”மூதாதையர் சொல்லிச் சென்றதெல்லாம் வெற்றுப்பேச்சு என்கிறாயா?”

“அவர்கள் சொன்னதைத் தாண்டி நாம் சிந்திக்கவே கூடாது என்கிறீர்களா?”

“ஆக மணம் செய்துகொள்ள மாட்டாய்... யாரோ தந்து சென்ற நம்பிக்கைகளை விடு. நீ நல்லது மட்டுமே செய்வாயென்று நம்பத் தொடங்கியிருக்கும் மக்களுக்காக இதைச் செய்ய மாட்டாயா? இப்போதே உன்னால்தான் மழையில்லையென்று இஜினாசியின் ஆட்கள் பேசிப் பேசி மாய்கிறார்கள். ஊரில் எல்லோரும் அதை நம்பவும் உன் எதிர்வினையை எதிர்பார்க்கவும் தொடங்கிவிட்டார்கள். நீ இப்படிப் பிடிவாதம் பிடிப்பதால் இதுநாள் வரை கஷ்டப்பட்டதெல்லாம் வீணாகிப்போகும். ஒன்றுமில்லை, நாளைக்கே இஜினாசி நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று முன்வந்து மணமுடித்து அதன் பின்னோடு மழையும் வந்துவிட்டதென்று வை. உன் கதை அவ்வளவுதான். என்றென்றைக்கும் நீ குயாவின் தலைவனாகவோ அல்லது நீ கனவு காணும் பெருநிலத்து வேந்தனாகவோ ஆகவே முடியாது.” படபடவென பொரிந்து தள்ளினார் மாமன்.

“என் சேவையில் வராத பதவி…”

“வேண்டாம் முடித்துவிடாதே... சொல்லித் தொலைத்துவிடாதே! இப்படிப் பேசாதே என்று எவ்வளவுதான் சொல்வது? தெய்வம் கேட்டுக்கொண்டிருக்கும் சுரோ. நீ வேண்டுவதும் வேண்டாமென்பதும் நீ சொல்வதத்தனையும் தெய்வம் கேட்டுக்கொண்டேயிருக்கும். இதைக் கொடுத்துத் தொலைத்துவிடப்போகிறது.

நீ மன்னனாவது உன்னைவிட எனக்கு முக்கியம். ஏனென்றால் எனக்கு என்னைவிட நீ முக்கியம்.”

சிரித்தான் சுரோ. அவனது கண்கள் எங்கோ வானத்து மூலையிலிருந்த விண்மீனில் நிலைகொண்டிருந்தன.

“ஏன் மணமுடிக்க மறுக்கிறாய்... உனக்குத் தகுந்த பெண் இங்கில்லை என்று நினைக்கிறாயா? என்ன மாதிரியான அழகி வேண்டுமென்று சொல் சுரோ. நான் கடல் கடந்து போயாவது கப்பலில் கொண்டு வந்தாவது இறக்குகிறேன்.”

“ஆம்... சம்சொன்... கப்பலில்தான் வர வேண்டும்.” மெல்லிய குரலில் வந்த பதில் அவரைக் குழப்பியது.

“என்ன சொல்கிறாய்?” திரும்பி அவனைப் பார்த்தார். கண்கள் இன்னும் விண்மீனைப் பிரதிபலித்தன.

“நான் மணக்கப்போகும் அவள் கப்பலில்தான் வர வேண்டும். அவளுக்காகத்தான் காத்திருக்கிறேன் மாமா.”

“என்னடா உளறுகிறாய்?” போதை தெளிகிறதென்று நினைத்தால் இவனென்ன பிதற்றுகிறான் என்றெண்ணினார் யூசுன். சுரோவோ ஏகாந்தமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் இதுவரை அவனிடம் கண்டிராத ஓர் உல்லாசம் நிலைகொண்டிருப்பது தெரியவும் வியந்துபோனார் யூசுன்.

“கனவு கண்டாயோ மருமகனே?”

“ஆமாம் மாமா. கனவுதான். கலமேறி ஒரு தேவதை எனை நோக்கி வரும் கனவு.

அந்தக் கனவில் இவள்தான் என் துணையென்று என் ஆழ்மனம் அடித்துக்கொள்கிறது. இதோ கேட்டுக்கொண்டிருக்கும் என்று சொன்னீர்களே... அந்த தெய்வத்தின் மீது ஆணை. அவள்தான் மாமா என் மனைவியாகப்போகிறவள். அவள்தான் மாமா இந்த குயாவை... ம்ம்ஹூம்ம்... நான் உருவாக்கப்போகும் பொன்கயா நாட்டின் ராணியாகப்போகிறவள். அவளேதான் மாமா.” அடித்துச் சொன்னவன் கண்களே இப்போது விண்மீன்களாக ஒளிர்ந்தன.

(தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism