Published:Updated:

செம்பா: ``நான் சொன்னது சரிதான்... ஆபத்தே உன் அருகில் வர அஞ்சுகிறது” | பகுதி 27

செம்பா

``பார்த்தாயா செம்பா! நான் சொன்னது சரிதான். ஆபத்தே உன் அருகில் வர அஞ்சுகிறது! ஆனானப்பட்ட நெடுஞ்செழியன் காவலையே இத்தனை எளிதாகக் கடந்து வந்துவிட்டாய் நீ” எழினி மெல்லத் தலையசைத்தாள்.

செம்பா: ``நான் சொன்னது சரிதான்... ஆபத்தே உன் அருகில் வர அஞ்சுகிறது” | பகுதி 27

``பார்த்தாயா செம்பா! நான் சொன்னது சரிதான். ஆபத்தே உன் அருகில் வர அஞ்சுகிறது! ஆனானப்பட்ட நெடுஞ்செழியன் காவலையே இத்தனை எளிதாகக் கடந்து வந்துவிட்டாய் நீ” எழினி மெல்லத் தலையசைத்தாள்.

Published:Updated:
செம்பா

நெடுங்கனவிலிருந்து திடீரென விழித்தவன் முகத்தில் முத்துக்களாக வியர்வை திரண்டிருந்தது. உள்ளம் பதைபதைப்பிலிருந்து இன்னும் வெளிவரவில்லை.

“கெட்ட கனவா சுரோ?” அசைவில் எழுந்திருந்த மாமன் மெல்லக் கேட்டார்.

“ம்ம்? தெரியவில்லை மாமா.” என்ன கனவென்று அவர் கேட்கவில்லை. இப்போதெல்லாம் மருமகனுக்கு அடிக்கடி கனவு வருகிறது என்றெண்ணியபடி மீண்டும் துயிலில் ஆழ்ந்தார்.

சுரோவும் மெல்ல சாய்ந்துகொண்டு கண்மூடினான். உறக்கம் வர மறுத்தது.

எப்போதும் ஒரே கனவுதான். அதில் அவள் மட்டும். அவளது முகத்தை உருவகப்படுத்த முயன்றான். உறக்கத்தில் தெளிவாகத் தெரியும் அந்தத் திருமுகம் விழிப்பில் கலங்கலாகத்தான் தோன்றியது.

கனவில்...

கிடந்த நிலையில் அவனுக்கு மேலே செம்மஞ்சள் பூத்த வைகறை வானம். சீழ்க்கையடிக்கும் காற்றோடு கைகோத்துக் கடலின் அலையோசை. மெல்ல எட்டிப்பார்க்கிறது ஒரு நிலவு.

நிலவு முகம் சிரிக்கிறது. அதைச் சுற்றிப் பறக்கும் கருங்காந்தல் கூந்தல் கற்றைகள். அவன் இதுவரை கண்டறியாத காது மடல் வரை நீண்டு ஒளிர்ந்த அழகிய பெருவிழிகள். கம் (சீமை பனிச்சம்பழம்) பழங்களைப்போல செழித்த கன்னங்கள். மலர்ந்து சிவந்த இதழ்கள். அதில் இனிக்கும் புன்னகை.

அந்தப் புன்னகையோடு மென்விரல்களை அவனை நோக்கி நீட்டுகிறாள். எழுந்துகொள்ளச் சொல்கிறாள். நூதனமான ஆடை அணிந்திருக்கிறாள். குனிந்ததால் மடங்கிக்குழைந்த இடையும் யௌவன வளைவுகளும் கண்ணில்படுகின்றன. அதற்கு மேல் நிமிர முடியாமல் கண்களை தாழ்த்திக்கொள்கிறான்.

அவள் மீண்டும் அழைக்கிறாள். முகத்தில் பார்வை திரும்புகிறது.

புன்னகை விரிகிறது. அத்தோடு கனவு முடிந்துவிடும்.

ஆனால் இம்முறை கனவு வேறாக இருந்தது. அவள் முகத்தில் வழக்கமான அந்தச் சிரிப்பு இல்லை. அவளைச் சுற்றி இருள். இருளில் அவளுக்கு ஏதேனும்… ஒருவேளை அவள்… ஆபத்தில் இருக்கிறாளோ?

_____________________________________________

உடல் வெடவெடக்க அந்த ராட்சதத் தூம்பின் வாயிலில் அப்படியே அமர்ந்துவிட்டாள் எழினி. அந்தக் குளிர். அந்த இருள். நீரின் அழுத்தம். உயிர் போய்விடும்போலிருந்த மிக நீண்ட அந்தக் கணம். அவனது சொல்லை நம்பி அவன் இடை பற்றிக்கொண்டு நீரில் இறங்கிய நொடி முதல் ஒவ்வொரு தேர்த்துகள் கணமும் அவள் நினைவிலிருந்து அகலவில்லை. யுகமாகத் தோன்றிய கணங்கள்.

“எழினி... இதோ பார். உனக்கு ஒன்றுமில்லை. நீ நலமாகத்தான் இருக்கிறாய்.” கன்னம் தட்டிச்சொன்ன சங்கனின் வார்த்தைகள் அவளது செவிகளில் விழுந்ததுபோலவேயில்லை. அரைக்குடம் நீரை அப்போதுதான் வெளியேற்றியிருந்தாள். தொண்டை, நாசி எல்லாம் பற்றி எரிந்தன.

செம்பா
செம்பா

குளிரில் சிற்றுடல் நடுங்க அவள் கிடந்த கோலம் கண்டு, தான் தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் சங்கன் மனதில் வந்து போனது. சிதறிக்கிடந்த இலை தழைகளைச் சேர்த்துச் சிறு தீ மூட்டினான். மெல்ல மெல்லச் சூடு உறைக்கவும் அவள் மீண்டெழுந்தாள். சற்றுப் பொறுத்து தூம்பின் முகத்துவாரம் வழியாக இருவரும் உள்ளே நுழைந்தனர்.

சங்கன் பதுங்கிப் பதுங்கி அருகே தெரிந்த தோட்டத்துக்குள் நுழைய, ”மீண்டும் வந்த வழியில் அழைத்துச் செல்ல மாட்டீர்கள்தானே?!” என்ற கேள்வியோடு கைகளைத் தேய்த்து இன்னும் விலகாத குளிரை விலக்க முயன்றபடி அவன் பின்னே நடந்தாள் எழினி. அரை குறையாகக் காய்ந்திருந்த சீலையின் அசௌகரியம் வேறு.

“ஷ்... பேசாதே. அமைதியாக வா” அடர்ந்த அந்த நந்தவனத்தினுள் அவர்களைவிடவும் சப்தத்தோடு இருளுயிரிகள் பேசிக்கொண்டிருந்ததுபோலத் தோன்றவும் அவள் துணிவோடு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்.

“அகழியில் முதலை இல்லாமலிருந்ததும், நாம் நுழைந்து வந்த அந்தத் தூம்பு திறந்திருந்ததும் எப்படி... யார் செய்த மாயம்?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எல்லாம் மருதனார் செய்த மாயம்தான்.”

“ஓஹோ?!”

“அதுமட்டுமல்ல. இப்போது செம்பா, ராணியோடு இல்லையாம். மன்னர் கட்டளையின் பேரில் இதோ இந்தப் பெரிய கோட்டையில் யாருமறியா ஒரு தனியறையில் செம்பவளத்தை சிறை வைத்திருக்கிறார்கள். அது எந்த இடம், எங்கிருக்கிறது என்றுகூடச் சொல்லியனுப்பியிருக்கிறார். ஆனால் அங்கிருந்து எப்படி செம்பாவைக் காப்பாற்றுவது என்றுதான் தெரியவில்லை.”

“ஏன்... இவ்வளவு சொன்னவர் அதை மட்டும் சொல்லவில்லை?”

“அவருக்கே அது குழப்பம்தான். ஏனென்றால் அவ்வறையின் நுட்பமறிந்தவர்கள் சிலரே. மருதனார் அதிலொருவர் இல்லை.”

“உண்மையாகவா?”

“மன்னர் சில விஷயங்களில் யாரையும் கூட்டுச் சேர்க்க மாட்டாராம். நூதனங்களின் தலைவன் நெடுஞ்செழியனென்று சாமானியமாகப் பெயர் வந்துவிடுமா?”

“அதெல்லாம் சரிதான். ஆனால் தாத்தா கேட்டதற்காகவா இவ்வளவு செய்கிறார் மருதனார்?”

“தெரியவில்லை எழினி. கேட்டோருக்கு உதவும் குணம் செழியனைப்போல மருதனாருக்கும் உண்டென்று கேள்விப்பட்டுத்தான் தாத்தா அவரிடம் அழைத்துச் சென்றதே. அவர் சொன்னால் மறுக்காமல் மன்னர் கேட்பார் என்பது ஒரு காரணம். ஆனால் எனக்கென்னவோ வேறு காரணம் ஏதும் இல்லாமல் மருதனார் உதவுகிறார் என்று இன்னும் நம்ப முடியவில்லை. இங்கே தீர்க்கப்படாத கணக்கு ஏதோ இருக்கிறது. சில காலமாகவே செம்பவளத்தின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன தெரியும்தானே?”

“ம்ம்… செம்பாவைப்போல அம்முயற்சிகளைச் செய்வது செழிய மகாராஜாதான் என்று நீங்களும் நம்புகிறீர்களா?”

“செழிய மகாராஜாவின் ஆலங்கானத்துப் போர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அன்று எதிர்த்த எழுவரில் ஒருவர் குலத்துதித்தவள்தான் செம்பா. எதிரியின் மகள்.”

“இதைத்தான் செம்பாவும் சொன்னாள். ஆனால் செம்பவளம் ஆய் இளவரசர் அதியனின் மகள் என்று மன்னருக்கு எப்படித் தெரியும்?”

“தெரியாது என்பது நமது அனுமானம்தானே... ஒருவேளை தெரிந்திருந்தால்? சமரில் எதிர் நின்ற அதியனையும் மனைவியும் கொன்ற பிறகும் எஞ்சிப்போன செம்பா பற்றி அறிந்ததும் அவளையும் கொல்ல நினைக்கிறார் மன்னர். எதிரிகளின் குலமறுப்பது வீரம்தானே? ஆனால் மருதனார் அதைப் பாவமென்று கருதுகிறார். அதனால்தான் நமக்கு உதவுகிறார். மன்னரைப் பெரும்பாவம் செய்வதிலிருந்து காப்பாற்றுவதாக நினைக்கிறார்.”

“ம்க்க்கும்... இது ஒன்றுதான் பாவமா... போரில் நாடு நகர் வெல்வது, உயிர்களைக் கொன்று குவிப்பது, பெண்டு பொருள் கவர்ந்து வருவது... இதெல்லாம் பாவக்கணக்கில் சேராதா?”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“போரின் தர்மங்கள் வேறு எழினி.”

“மனிதன் வகுக்கும் தர்மங்கள் முரணானவை என்று செம்பவளம் சொல்வது சரிதான்.”

“எதற்கெடுத்தாலும் அந்தப் பிசாசின் பெயரைச் சொல்லி எரிச்சலூட்டாதே!”

“அடடா! அவ்வளவு கோபமா? அந்தப் பிசாசைப் பார்த்ததும் நீங்கள் துள்ளிக்குதிக்கும் அழகை நானும் பார்க்கத்தானே போகிறேன்.”

“அதெல்லாம் மாட்டேன். சரி பேச்சைக் குறைப்போம். அதோ மருதனார் சொன்ன மகிழ மரங்கள் சூழ்ந்த கட்டடம். இதற்குள்தான் செம்பவளம் சிறையிருக்கிறாள்.”

“எங்கே?”

“அதோ அங்கேதான் என்று நினைக்கிறேன்.”

“அந்த ஒற்றை அறையா... சாளரமே இல்லைபோலிருக்கிறதே... அத்தனை உயரமான விதானம் வேறு. சுற்றிலும் வீரர்கள். எப்படி மீட்பது?”

செம்பா
செம்பா

“யாரை மீட்கப்போகிறீர்கள்?” சட்டெனக் குரல் வந்த திக்கில் திரும்பியவள் திரும்பிய வேகத்திலேயே குரலை அடையாளம் கண்டுகொண்டிருந்தாள். ஆகையால் அப்படியே ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள்.

“செம்பா... எனக்குத் தெரியும். எப்படியும் நீ தப்பிவிடுவாயென்று எனக்குத் தெரியும்.” முகத்தில் அத்தனை ஆனந்தம் எழினிக்கு. அது செம்பவளத்தின் முகத்திலும் புன்னகையை வரவழைத்தது.

“ஷ்… கத்தாதே எழினி. இதோ! சுற்றுக் காவல் வீரர்கள் இந்தப் பக்கம் வருகிறார்கள், வாருங்கள்... அப்படிப் போய்விடலாம். மன்னர் வர இன்னும் ஓரிரு நாழிகைகள் ஆகும். என்னை அலங்கரிக்க இன்னும் சற்று நேரத்தில் சேடிப் பெண்கள் வருவார்கள். வந்தால் நான் அறையில் இல்லாதது தெரிந்து போகும். அதற்குள் நாம் கோட்டையிலிருந்து வெளியேற வேண்டும்.” பேசிக்கொண்டே எழினியின் கைபிடித்தபடி அவள் நடக்க, அவள் கடுங்காவற் சிறையினின்று சாதாரணமாக இறங்கி வந்ததன் அதிரிச்சியிலிருந்து மீளாதவனாகப் பேச்சின்றி அவளைத் தொடர்ந்தான் சங்கன்.

செம்பா
செம்பா

எப்படி... பாண்டியன் காவலிலிருந்து ஒரு சிறு பெண் தன்னந்தனியாக தப்பி வந்தாளா... எப்படிச் சாத்தியமானது இது?

”பார்த்தாயா செம்பா! நான் சொன்னது சரிதான். ஆபத்தே உன் அருகில் வர அஞ்சுகிறது! ஆனானப்பட்ட நெடுஞ்செழியன் காவலையே இத்தனை எளிதாகக் கடந்து வந்துவிட்டாய் நீ?” எழினி மெல்லத் தலையசைத்தாள்.

“இல்லை எழினி. அந்தப் பாராட்டுக்குரியவளல்ல நான்.” விட்டத்தின் இடைவெளி வழியே வெளியேறி நெடுமாடத்தின் வளைவுகளைப் பற்றிக்கொண்டு மந்திபோல மரம் தாவி வெளியேறி, அந்த கட்டடத்தின் பின்புறமிருந்த சிறு தோட்டத்தில் குதித்து எந்தச் சிக்கலுமின்றித் தப்பி வந்திருந்த செம்பவளத்துக்குப் பாண்டியனின் புகழ்பெற்ற காவலிலிருந்து தப்புவது இத்தனை எளிதாக இருக்குமென்று நம்ப மிகவும் சிரமமாக இருந்தது. எங்கேயும் தடையிருக்கவில்லை. அவள் செல்லும் வழிகளில் காவலிருக்கவில்லை. காரணம் ஒன்றேதான் இருக்க முடியும். அது உண்மையென்றால் அவளது அடிப்படை நம்பிக்கையே தவறென்றாகிறது.

“ஏனப்படிச் சொல்கிறாய் செம்பா?”

“அதைப் பிறகு சொல்கிறேன். நீங்களிருவரும் ஒன்றாக எப்படி... அதுவும் இங்கே இப்படி வந்தீர்கள்?” அவள் கேட்கவும் உத்வேகத்தோடு கதையைச் சொல்லலானாள் எழினி.

செம்பா
செம்பா

``ஓ! மருதனாரே வழி சொன்னாரா?” கேட்டபோது உள்ளுக்குள் இருந்த குழப்பம் களைந்ததுபோல் இருந்தாலும் குரல் இறங்கிப்போயிருந்தது. தவறு செய்திருந்தாலும் தன்னம்பிக்கை குறைந்தாலும் மட்டுமே இறங்கிப்போகும் குரல் அது என்று சங்கனுக்குத் தெரியும்.

“தாத்தாவும் அப்பாவும் நலமா... மருதனார் வீட்டில் இருக்கிறார்களா?” அவளது கேள்வியை மடைமாற்றி, “அதெல்லாம் போய்ப் பார்க்கலாம். இப்போது இங்கிருந்து வெளியேற வழி பார்க்கலாம்” என்றான் அவன்.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism