Published:Updated:

செம்பா: ``எதற்கும் அசராத நெடுஞ்செழியனே அசைவற்று நின்ற கணம்” | பகுதி 29

செம்பா

``உன் தாயைக் காப்பாற்ற முடியாதவன்... உன் தந்தைக்குச் சொந்தமான நிலத்தையாவது உனக்கு மீட்டுத்தர நினைத்தேன். மகளே! இனி ஆய்க்குடி உன் சொத்து."

செம்பா: ``எதற்கும் அசராத நெடுஞ்செழியனே அசைவற்று நின்ற கணம்” | பகுதி 29

``உன் தாயைக் காப்பாற்ற முடியாதவன்... உன் தந்தைக்குச் சொந்தமான நிலத்தையாவது உனக்கு மீட்டுத்தர நினைத்தேன். மகளே! இனி ஆய்க்குடி உன் சொத்து."

Published:Updated:
செம்பா

முகம் ஒளிர “தேவி!” என்றழைத்தபடி ஓடிச் சென்று நெருங்கி வந்துகொண்டிருந்த உருவத்தைக் கட்டியணைத்துக்கொண்டாள் செம்பவளம். அதற்காகவே காத்திருந்த பாண்டிமாதேவியும் கைகளை விரித்து வாரி அணைத்துக்கொண்டாள்.

ஆம், வந்து நின்றவர்கள் பட்டத்தரசி பாண்டிமாதேவியும், பசும்பூண் பாண்டியன் நெடுஞ்செழியனும்தான்.

“பாண்டிமாதேவியா!?” வியப்பும் திகைப்புமாகச் சமைந்து நின்ற சங்கனும் எழினியும் நிலையுணர்ந்து மடங்கியமர்ந்து மண்டியிட்டனர். குனிந்த பார்வையில் சிற்சில கால்களே கண்ணுக்கு அகப்பட்டன. மன்னரும் அரசியும் பத்திருபது அணுக்க வீரர்கள் மட்டும் தொடர எளிமையாக வந்திருப்பது புலப்பட்டது.

“எழுந்திருங்கள்!” தெளிந்த புன்னகையோடு தன் முன்னே நிற்பது பாண்டிய மன்னர் நெடுஞ்செழியன்தானா என்ற குழப்பம் இன்னும் சங்கனுக்குத் தீர்ந்தபாடில்லை.

இது எப்படிச் சாத்தியம்?

இந்தத் தங்கைப் பிசாசைச் சிறை செய்த மன்னரே இப்போது அவளை நாடி வந்திருக்கிறாரா? ஒருவேளை, அன்றிரவு அந்தத் தலைப்பாகை மனிதன் உண்மை விளக்க ஒருவரை அழைத்து வருவதாகச் சொன்னாரே... அது இவரைத்தானா... செம்பவளத்தின் ஐயங்களைத் தெளிவிக்க மன்னரே வந்துவிட்டாரா? ஓ! மருதனாருக்கு உள்ள செல்வாக்கு உண்மைதான்போலும்.

“என்ன சங்கா! மனதுக்குள் மருதனாருக்குக் கோட்டையே கட்டிக்கொண்டிருக்கிறாய்போலிருக்கிறதே!” என்றபடி சிரித்தார் மன்னர்.

“வந்து...” கண்கள் யாரையோ தேட அதற்கும் அவரே பதிலளித்தார்.

“தலைப்பாகை மனிதனையா தேடுகிறாய் இன்னும்?” அவரின் விஷமப் புன்னகையில் சற்றுக் குழம்பினான். அவர் கண்கள் மின்னின. சட்டெனப் புகை விலகியது.

“அன்று வந்தது தாங்கள்தானா?”

“ஆம்! நானேதான்.” வியப்பு அவனுக்குத்தான் தனக்கில்லை எனும்படியாக செம்பவளம் புன்னகை பூத்திருந்தாள். அவளது கண்கள் இன்னும் பாண்டிமாதேவியிடமிருந்து விலகியிருக்கவில்லை. கூடடைந்த தாய்ப்பறவையிடம் ஒட்டி நிற்கும் குஞ்சுபோல பாண்டிமாதேவியிடமிருந்து விலகாமல் நின்றாள்.

நெடுஞ்செழியனையும் பாண்டிமாதேவியையும் ஒருங்கே பார்த்த எழினிக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனால் செம்பவளத்தின் முகத்தைப் பார்க்கையில் அச்சங்கொள்ளத் தேவையில்லை என்பது மட்டும் புரிந்தது. அவளது பார்வையைப் படித்துத் திரும்பி பெண்கள் இருவரையும் பார்த்த நெடுஞ்செழியனின் புன்னகையும் விரிந்தது.

“பார்த்தாயா தேவி! இவளுக்கு ஆரம்பம் முதல் உதவி செய்ததெல்லாம் நான். அது அவளுக்கும் இப்போது ஓரளவுக்குத் தெரியுமென்றே நினைக்கிறேன். ஆனாலும் பார்... பார்வை மட்டும் எப்போதும் உன்னைத்தான் தேடுகிறது. ம்ஹும்.. பெண்களுக்கு எப்போதும் அன்னை மேல்தான் அன்பு, தந்தை தேவைக்குத்தான்போலும்!”

தந்தையா? விலுக்கென நிமிர்ந்தமர்ந்தாள் செம்பா.

தந்தையென்றா சொன்னார்?

உள்ளம் இன்னும் முழுமையான உண்மைகள் விளங்கச் சொல்லப்படவில்லையென்று குறை பேசினாலும் அவளைக் கேளாமல் நிறைந்துகொண்டன அவள் கண்கள். அதை உணர்ந்தவள்போல பாண்டிமாதேவி அவளது கரங்களை ஆதரவாகப்ப ற்றிக்கொண்டாள். அங்கே சட்டெனக்கூடிய அமைதியின் அசௌகரியத்தைத் தன் இயல்பான சிரிப்பால் தானே கரைத்தார் பாண்டியன் நெடுஞ்செழியன். பின் அவர் முகம் மாறியது, கனத்த குரலில் தொடர்ந்தார்.

“உன் தந்தை என்னைவிடச் சில அகவைகள் மூத்தவர் செம்பவளம், எனக்குத் தமையன். அப்படித்தான் நான் எண்ணியிருந்தேன். பழக்கத்தில் தமையனென்று நான் எண்ணியவர் திடீரெனச் சமரில் என் எதிரில் வந்து நின்றார்.” அன்று கண்ட வலி அப்படியே அவர் கண்களில் பிரதிபலித்தது. வலியோடு தொடர்ந்தார்.

“அது அவரது பிழையல்ல. அன்றைக்குச் சேரமானோடு சேர்ந்ததால் நேர்ந்த சூழ்நிலை. அதை நான் அறிவேன். அவர்மீது அன்பும் மரியாதையும் எப்போதும் எனக்கு உண்டு என்றபோதிலும் உறவென்றெண்ணி ஏமாந்தோமே என்ற வருத்தம் மேலோங்கியது. அதனால்தான் அவர் அகாலமாய் கடலுள் வீழ்ந்து இறந்தபோது, என்னை ஏமாற்றியதற்குச் சரியான தண்டனை என்று நினைத்துக்கொண்டேன். இளவயது பார்!”

செம்பா விழி விரிக்கவும் அவர் தலையசைத்து வருத்தப் புன்னகையொன்றைப் பரிமாறினார்.

“ஆம் மகளே! உன் தாய் தந்தையின் இறப்புக்குக் காரணம் நானல்ல. நெடுங்காலத்துக்குப் பிறகுதான் உன்னைப் பற்றிய செய்தியே ஒரு ஒற்றன் மூலமாக எனக்குத் தெரிய வந்தது. அப்போதுதான் உன் பெற்றோரின் இறப்பும், அதன் பின்னணியில் இருந்த மர்மமும்கூடத் தெரிந்தது.”

“ஆ... ஆனால்... என் தாயார்… இறந்தது...”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செம்பா
செம்பா

“அது ஒரு கொடியவனின் சதியால். உன் சிற்றப்பன் இளவேலனின் சதி…”

“சிற்றபனென்றால் செம்பவளத்தின் தந்தை அவருக்குச் சொந்த அண்ணனல்லவா... ஏன்?” சங்கனின் திகைப்பு இன்னும் விலகியிருக்கவில்லை.

“எல்லாம் பதவி மோகம்! ஹ்ம்ம்… அரியணையை எனக்குத் தா அண்ணா என்று அவன் கேட்டிருந்தாலே கொடுத்திருப்பார் அதியன். ஆனால் பறித்துப் புசிக்கும் புத்தி இளவேலனுக்கு. கடலாட அண்ணனை அனுப்பிய கையோடு கலத்தைப் பிரட்டவும் சதி செய்திருக்கிறான் படுபாவி. ஆனால்…” மன்னர் தயங்கினார். முகத்தில் எப்போதும் குலையாத மிடுக்கு மெல்லக் குறைவதுபோலிருந்தது.

அவர்கள் நின்றிருந்த பகுதியைச் சுற்றி சற்றுத் தொலைவில் சூழ்ந்து நின்ற காவற்படையினர் உடல்மொழியுணர்ந்து வேகமாக அவருக்கு இருக்கை கொண்டுவந்து போட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஆசனங்கள் இடப்பட்டன. நெடுஞ்செழியனுக்கு அப்போது அது மிகவும் தேவைப்பட்டதுபோலும். இருக்கையில் அமர்ந்தவர், சிறிது நேரம் ஏதும் பேசவில்லை. பிறகு மீண்டும் தொடர்ந்தார்.

“உன் தாயார் இறந்ததற்கு ஒருவகையில் நானுமொரு காரணம்தான்.”

செம்பா தட்டி விழிக்கவில்லை. அவர் சொன்ன அத்தனையையும் கல்லென இறுகிப்போயிருந்த முகத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஆம்! அச்சமயம் சமர் என்னை வெறியனாக்கியிருந்தது.. போர்! போர்! என்று குருதித் தினவெடுத்து அலைந்துகொண்டிருந்த காலமது. அந்த வெறி என்னிடமிருந்து என் வீரர்களுக்கும் பரவியிருந்தது. கண்ணுக்கு அகப்படும் எதிரிகளின் உடல்களைத் துண்டாக்குவதில் ஒரு பெரும் திருப்தி இருந்தது. அப்படித் தினவெடுத்து அவர்கள் செய்யத் துணிந்த ஒரு கொடுஞ்செயலைத்தான் தன் சூல்வயிற்றையும் பொருட்படுத்தாது எதிர்த்து நின்றாள் உன் தாய். வெறிகொண்ட என் வீரர்களால் கரமிழந்த நிலையிலும் அந்தப் பெண்ணைக் காப்பாற்றியுமிருக்கிறாள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் பாண்டிய வீரர்களின் வெறி வெற்றிக் களிப்பினால் கிளர்த்தப்பட்டக் கள்வெறி. அது அவள் கண்ணுக்கு அகப்படாமல் காணாமல்போனதுமே திசைமாறிவிட்டது. ஆனால் இதுவே காரணமாகத் திரிந்த அந்தத் துரோகியின் வெறி அப்படியானதல்ல. அவனது சூழ்ச்சியில் அதியன் இறந்தாலும், உன் தாய் கடலிலிருந்து தப்பிக் கரைமேவிவிட்டாள். இச்சம்பவத்துக்குக் காரணம் உன் சிற்றப்பன்தான் என்பதையும் அவள் அறிந்துகொண்டுவிட்டாள். இதுவே அவனை உறங்கவிடாமல் செய்திருக்க வேண்டும். அதனால் தானே பின்னோடு கொடித்தீவுக்கு வந்து, சரியான சமயம் பார்த்துத் தொடர்ந்திருந்திருக்கிறான். பாண்டிய வீரர்களிடமிருந்து தப்பிய உன் தாயாரைக் கொலையும் செய்திருக்கிறான்.

சொந்தத் தமையன் மனைவி, தாயே போன்றவள். வெறும் பதவிக்காக அவளைத் தன் கையாலே கொல்லத் துணிந்த மாபாதகன் அந்த இளவேலன். ஆய்க்குலத்தோன்றலுக்கே இழுக்கு. அவனிடமிருந்து தப்பித்துத்தான் கோடனிடம் உன்னைக் கொடுத்திருக்கிறாள் உன் அன்னை. உன் தாயாரின் இறப்பு என் கவனக்குறைவால் நேர்ந்துபோன பிழை மட்டுமல்ல... என் மூர்க்கத்தால் தொடங்கிய சிக்கலும்கூட. அதை உணர்ந்த அந்தக் கணம்…” கண்கள் மூடிக்கொண்டார் மன்னர். நீதி வழுவலைத் தாங்காத தென்புலக் காவலனின் உடல் சிறு நடுக்கத்துக்கு உள்ளானது. பின்பு மெல்ல கண்கள் திறந்தார்.

“அந்தக் கணம் முதலே, நீ எனது பொறுப்பாகிவிட்டாய் மகளே! அப்போதிருந்தே உன் வளர்ச்சியை நாங்கள் கவனித்துக்கொண்டுதானிருக்கிறோம்” பாண்டியனின் பன்மைப் பேச்சில் சட்டென செம்பவளம் பாண்டிமாதேவியை நோக்க அவள் சிரித்தாள். முதன்முறை பார்த்தபோதே அந்தப் பழகிய பாவனை ஏன் இருந்ததென்று இப்போது புரிந்தது.

“இதெல்லாம்... உங்களுக்கு...”

“கொஞ்சம் கொஞ்சமாக யாம் திரட்டிய செய்தி. நீ உயிரோடிருப்பது எமக்குத் தெரிந்ததுபோல அந்தக்கயவனுக்கும் எப்படியோ தெரிந்துவிட்டது. நீ உன் தாயை அப்படியே உரித்து வைத்தாற்போல் இருப்பதே அவனுக்குப் பெரும் பயத்தைத் தந்திருக்க வேண்டும். கூடவே எப்போதும் எனது பாதுகாப்பு உனக்கு இருப்பதும்.” வியந்து நிமிர்ந்தாள் செம்பா.

“ஆம் மகளே! அவன் உன் உயிருக்குப் பலமுறை தீங்கு விளைவிக்கப் பார்த்தான். உன்னை எப்போதும் தொடர்ந்த என் வீரர்கள் உனக்குப் பெரிதாக ஏதும் நேர்ந்திடாமல் காத்துவந்தார்கள். உனக்கு நான் அளித்த காவல் உன் மீதான அவனது கோபத்தையும் என்மீது பயத்தையும் மேலும் அதிகரித்திருக்க வேண்டும். இந்நிலையில்தான் நீ எல்லோரையும் ஏய்த்துவிட்டு கொற்கை கிளம்பினாய்.”

கதைபோல மன்னர் சொல்லச் சொல்ல பல கேள்விகளுக்கான பதில்கள் அவிழ்ந்துகொண்டேயிருந்தன சங்கனுக்கு.

“நீ உண்மையறிந்து கிளம்பிவிட்டாய் என்றதுமே என்னை நாடி வருவாய் என்று அறிந்தேயிருந்தேன். உன்னை மட்டுமல்ல, உன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஆபத்து இருக்குமென்று அறிந்து அவர்களுக்கும் பாதுகாப்பு செய்திருந்தேன். இருந்தும் ஒரு பிழை நேர்ந்துவிட்டது. இதுநாள் வரை வாய் திறக்காத கோடன் இப்போது எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டானென்று அவனையும் பழிதீர்த்துவிட்டார்கள் அவனது ஆட்கள். அவர்களின் இலக்கு நீ என்றுணர்ந்து உன்னைச் சூழும் அபாயத்திலிருந்து காக்கவே உன்னைக் கவர்வதுபோல மதுரைக்கு அனுப்பிவைத்தேன். அதன் பிறகுதான் மருதனாருக்கே முழு உண்மையையும் எடுத்துச் சொன்னேன். எப்படியும் இம்முறை இளவேலனைச் சிறைசெய்யச் சரியான சமயம் வருமென்று காத்திருந்தோம். எதிர்பார்த்ததுபோலவே அவனது ஆட்கள் அரண்மனைக்குள் புகுந்தனர். திட்டத்தை எளிமையாக்கவே உன்னை அந்தத் தனியறையில் அடைத்தேன். நான் நினைத்ததுபோலவே அவர்கள் உன்னை வெளியேற்ற முயன்றார்கள். நீயும் என் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் தப்பி வெளியே வந்தாய். காத்திருந்து அகழிக்குள் முதலையைத் திறந்துவிட்டது அவர்கள்தான். அங்கேயே கையும் களவுமாகப் பிடிபட்டார்கள். அவர்களின் வாக்குமூலம் வழியாக ஆய்க்குடியில் பத்திரமாக ஒளிந்திருக்கும் இளவேலனையும் பிடித்தாயிற்று. ராஜத்துரோகக் குற்றம், கொலைக் குற்றமென்று அவன் செய்த எல்லா குற்றங்களுக்குமாக அவனைச் சிறைக்குள்ளும் அடைத்தாயிற்று.” பெருமூச்சோடு நெடிய உரையை முடித்தவர்போல எழுந்து செம்பவளத்தினருகே வந்தார்.

செம்பா
செம்பா

கனிந்த புன்னகையோடு முன்னே நிற்பவர், தானறியாத பாதுகாப்பை எந்தப் பிரதிபலனுமின்றி தனக்குத் தந்தவர், தந்தை என்று தன்னைத் தானே சொல்லிக்கொண்டவர், இவரைக் கொல்லத்தானா கிளம்பினோம்!

செம்பவளத்தின் உள்ளக் குமுறல் அறியாதவராக தலையில் ஆதூரமாகத் தடவிக்கொடுத்தார். எவ்வளவு முயன்றும் கட்டுப்படாத கண்ணீர்த்துளிகள் சில வெளியேறித் தெறித்தன.

“உன் தாயைக் காப்பாற்ற முடியாதவன் நான்... உன் தந்தைக்குச் சொந்தமான நிலத்தையாவது உனக்கு மீட்டுத்தர நினைத்தேன். மகளே! இனி ஆய்க்குடி உன் சொத்து. உரியவனாக அதியனின் சிறிய தாதை உறவில் இளவரசன் திதியன் இருக்கிறான். அவனை மணந்துகொண்டு ஆய்க்குடியை ஆளலாம் அல்லது இதோ கண்ணன் இருக்கிறானே. இவன் உன் தாயாரின் உறவினன். இவன் மூலம் உன் தாய்வழித் தாத்தான் குட்டுவனுக்கும் செய்தி போய்விட்டது. ஆக, நீ பத்திரமாகச் சேரநாட்டுக்குச் செல்வதானாலும் சரிதான். இரண்டில் எதுவாயினும் அது உன் முடிவு. உனக்குத்தான், உன் முடிவுகளை அடுத்தவர் எடுத்தால் பிடிக்காதாமே! தேவி சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால், மீண்டுமொரு முறை சொல்கிறேன் மகளே, ஆய்க்குடியோ சேரநாடோ உன் முடிவு எதுவாயினும் நீ நாங்கள் பெறாத மகள் என்பதில் மட்டும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நீ எப்போதும் பாண்டிய இளவரசிதான். அதை மனதில் வைத்துக்கொள். இப்போது சொல் செம்பவளம்... உன் முடிவென்ன?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

***********************************

உப்புக்காற்று முகத்தில் மோத கடலைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் செம்பவளம்.

பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பேசி பதினைந்து நாள்களாகியிருந்தன. பாண்டியன் சொன்ன முடிவுகளுள் ஒன்றை எடுத்திருந்தால் அவளது வாழ்வு என்னவாகியிருக்கக்கூடுமென்று அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதுண்டு. நினைப்பாளேயன்றி வருந்தியதில்லை.

அவளது அந்த முடிவால் வாழ்வே திசைமாறிப்போயிருந்தது என்னவோ உண்மைதான்! அவளது வாழ்வு மட்டுமல்ல... அவளைச் சுற்றியிருந்தோர் வாழ்வுகளும் திருத்த முடியாத மாற்றங்களைப் பெற்றுவிட்டன.

செம்பவளம் இத்தனையாண்டுகளில் சிறியதும் பெரியதுமாக எத்தனையோ ஆயிரம் முடிவுகளை எடுத்திருப்பாள். ஆனால் எந்த முடிவிலும் அன்று பாண்டியன் முன்னிலையில் எடுத்த அந்த முடிவின் தெளிவு இருந்ததில்லை.

அதை அவள் வெளிச்சொன்ன கணத்தில் கூடியிருந்தோர் முகங்களைக் காண்கையில் யாரொவரும் அவளிடமிருந்து அப்படியொரு பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. எதற்கும் அசராத நெடுஞ்செழியனே அசைவற்று நின்றார் ஒரு கணம். அப்படியொரு முடிவது.

செம்பா
செம்பா

கொற்கை கிளம்பிய நாள் முதல் அன்று வரையிலான வெகு சில நாடள்களுக்குள் தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும் நல்லதொரு தெளிவு கிடைத்திருந்தது செம்பவளத்துக்கு. அந்தத் தெளிவின் பயனாக முகத்தில் தானாக ஓர் அமைதியும் வந்து சேர்ந்துகொண்டது.

தனக்கப்பாற்பட்ட விஷயங்கள் குறித்த அறிவும், தன்னைப் பற்றிய புரிதலின் நீட்சியாகக் கிடைத்த ஞானமும் அவளை அப்படியொரு முடிவு நோக்கிச் சடுதியில் அழைத்துச் சென்றிருந்தன. அதில் இப்போதும் அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. அத்தகைய முடிவை எடுத்த அன்றைய மாலை நிகழ்வு மீண்டும் மனதில் வந்து போனது.

“ஆய்க்குடியா... குட்டுவன் தேசமா?” பாண்டியனின் கேள்விக்குப் பதிலாகப் புன்னகைத்தாள் செம்பவளம்.

“இரண்டும் வேண்டாம். என் தாய் தந்த நிலமும் வேண்டாம், தந்தை வழி நிலமும் வேண்டாம். எனக்கென்று விதிக்கப்பட்ட நிலம் அங்கே எங்கோ இருக்கிறது... அது என்னை நெடுங்காலமாக அழைத்துக்கொண்டேயிருக்கிறது. அதைத் தேடிப் போகிறேன். என் நிலம் தேடிப் போகிறேன். கடல் தாண்டிப் போகிறேன்.”
அவள் கை நீட்டிய திசையில் நீண்டு ஆர்ப்பரித்துக் கிடந்தது நீலப்பெருங்கடல்.

தொடரும்…

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism