Published:Updated:

செம்பா: ``தமிழ்நிலத்தின் வரலாற்றில் எழுதப்படாத பேரதிசயம்...” | பகுதி 30

செம்பா

``நீங்கள் சொன்னால் ஒத்துக்கொள்கிறோம் தேவி. ஆனால் ஒன்று சொல்லுங்கள் தேவி... கடல் பயணம் என்று சொல்லிக் கிளம்பிவிட்டீர்கள் சரி. பயணத்தின் முடிவு எது என்று இன்றுவரை எங்களுக்குச் சொல்லவில்லையே..."

செம்பா: ``தமிழ்நிலத்தின் வரலாற்றில் எழுதப்படாத பேரதிசயம்...” | பகுதி 30

``நீங்கள் சொன்னால் ஒத்துக்கொள்கிறோம் தேவி. ஆனால் ஒன்று சொல்லுங்கள் தேவி... கடல் பயணம் என்று சொல்லிக் கிளம்பிவிட்டீர்கள் சரி. பயணத்தின் முடிவு எது என்று இன்றுவரை எங்களுக்குச் சொல்லவில்லையே..."

Published:Updated:
செம்பா

நீலப்பெருங்கடலில் சிறு செம்பொட்டாக மிதந்துகொண்டிருந்த அந்தச் சிவப்பு நிற மரக்கலம் கிழக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. பெரும் பகட்டுகளோ, பேராயுதங்களோ தாங்கியிராத அந்தக் கலத்தில் தமிழ்நிலத்தின் வரலாற்றில் எழுதப்படாத பேரதிசயம் ஒன்று ஓசையற்று நடந்தேறிக்கொண்டிருந்தது.

ஒவ்வொரு மனிதன் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் புதிதாக ஓர் உலகம் பிறந்து விரிகிறது. அன்று பாண்டியன் முன்னிலையில் செம்பவளம் எடுத்த முடிவும் அத்தகையதே! புதிய உலகைப் படைக்கும் முடிவு. தென்னவனைத் திகைத்து நிற்கச் செய்த முடிவு.

புதுமைகள் அப்படித்தான். அவை எப்போதும் சாமானியர்களைக் குழப்பும். மிரட்டும்.

ஆனால், ஒற்றைக் கணத்தில் பரந்து விரிந்த பாண்டியப் பேரரசின் மன்னவனை, தென்புலங்காத்தத் தலைவனையே சாமானியனாக்கிவிட்டாளே சிறு பெண்ணொருத்தி!

“என்ன... என்ன சொன்னாய் செம்பவளம்?” செம்பவளத்தின் பதில் கேட்டுச் சில கணங்கள் அமைதியான அவ்விடத்தில் பாண்டிமாதேவியின் குரல் சட்டென உரத்து ஒலித்தது.

“சரியாகத்தான் கேட்டீர்கள் தேவி! நான் கடற்பிரயாணம் செய்ய விரும்புகிறேன்.”

“கடல் தாண்டிப் போக வேண்டுமா... பெருங்கடல் பயணமெல்லாம் ஒரு பெண் காணும் கனவா... இதென்ன விபரீதம் செம்பா??”

“என் கனவல்ல தேவி, இதுவே என் பிறப்பின் பொருளென்று தோன்றுகிறது. என் மனம் இதையே நாடுகிறது. ஆணோ, பெண்ணோ மனம் சொல்லும் வாழ்வை வாழாத வாழ்க்கை என்ன வாழ்க்கை என்று நீங்களே ஒருமுறை சொல்லியிருக்கிறீர்கள். நினைவிருக்கிறதா?” செம்பவளத்தின் பதிலில் வாய் பிளந்து நின்றாள் பாண்டிமாதேவி.

“முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை என்பது நம் முன்னோர் வகுத்த வழி மகளே! பெண்கள் கடற்பயணம் செய்வது நம் மரபல்ல.” பாண்டியனின் குரலில் ஒரு தகப்பனின் தவிப்பைக் கண்டு வியந்தார் சற்று முன்னர்தான் திரைநாடனுடன் வந்து சேர்ந்திருந்த மருதனார். அவர் பார்த்து பாண்டியன் எடுக்கும் அடுத்த அவதாரம். அவ்வளவு நேரமும் அங்கே என்ன நடந்திருக்குமென்பதை ஒருவாறு ஊகித்துக்கொண்டார்.

இத்தனை நாள்களில் திரைநாடனிடமிருந்து செம்பவளம் குறித்தும் நிறையவே கேட்டிருந்தார். ஒரு தகப்பன் இடத்தில் நெடுஞ்செழியனையும், அவரின் இளவயது அழுத்த குணத்துக்குச் சற்றும் மாற்றுக் குறையாத செம்பவளத்தையும் எதிரெதிரே காண்பது வேடிக்கையாக இருந்ததோ என்னவோ... ஏதும் பேசாமல் சிறு புன்னகையோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செம்பா
செம்பா

``கற்றறிந்த தாங்களே இப்படிப் பிறழ்த்திச் சொல்லலாமா அரசே? ஓதல், தூது, பொருள் இம்மூன்றின் பொருட்டும்தானே பெண்கள் கடல் பயணம் செய்யத்தடை... நான் இதில் எதன் காரணமாயும் செல்லவில்லையே... என் நிலம் தேடிப்போகிறேன். அப்படியே மரபு என்று ஒன்று இருந்தாலும்தான் என்ன இப்போது... வழக்கிற்குதவாத பழைய மரபுகளை உடைப்பதில்தானே மானுட வளர்ச்சியே இருக்கிறது... புதியன செய்வதே எனக்குப் பிடித்தமானது. எல்லோரும் செய்வதைச் செய்வதில் என்ன சுவை இருக்கிறது அரசே?” இப்போது பாண்டியன் முகத்தில் புன்னகையொன்று மெல்ல எட்டிப்பார்த்தது.

“உளறாதே செம்பா. இது விளையாட்டல்ல, வாழ்க்கை. கடல் பயணம் மிகவும் ஆபத்தானது. இடையே எத்தனையோ தடைகளையும், வலிகளையும், இழப்புகளையும், இன்னல்களையும் சந்திக்கக்கூடும் தெரியுமா? உயிரேகூடப் போக நேரலாம். பிழைத்துவருவது அவ்வளவு எளிதல்ல.”

“கடலைப் பற்றி எனக்குப் புதிதாகச் சொல்லித் தருகிறாயா சங்கா?”

செம்பவளத்தின் குரலில் பழைய தன்னம்பிக்கை மீண்டிருந்தது. கடலெனும் ஒற்றைச் சொல்லில் அவளது தயக்கங்களும் குழப்பங்களும் கலைந்து காணாமல் போயிருந்தன. சங்கனுக்குமே பத்து வயதில் சுறா வேட்டைக்குக் கிளம்பிய சிறுமி சட்டென நினைவில் வந்து போனாள். பின்னாளிலும்கூட எத்தனையோ நாள்கள் அவள் கடலில் தனித்துக்கிடந்து திரும்பி வந்த சம்பவங்களுமுண்டு. கடலறிவில் அவளைக் குறை எப்படிச் சொல்ல முடியும்... வேறென்ன சொல்லி நிறுத்துவது?

“மனிதனுக்கு எத்தனை அறிவு இருந்தாலும் அது போதா! கடலன்னையின் அருள் வேண்டும். கடலன்னை உக்கிரமானவள். அவளுக்குப் பிடிக்கவில்லையென்றால் தாட்சண்யமெல்லாம் பார்க்கவே மாட்டாள். உறுப்புகளைத் தொலைத்தவர்கள் சித்தங்கலங்கியவர்கள் என்று கடல் மறுத்த மனிதர்களின் கதையெல்லாம் நானே எத்தனை முறை உனக்குச் சொல்லியிருப்பேன். நினைவில்லையா உனக்கு?”

சங்கனின் குரலில் அங்கலாய்ப்பு. ஏதாவது பேசுங்களேன் என்று இரைஞ்சுவதுபோல தாத்தனைப் பார்க்க, அவரோ கடலைப் பார்த்தபடி பேசாமல் நின்றிருந்தார். சுகவீனமும், கோடனின் இறப்பும் அவரை மெலிவாக்கியதோடு காதையும் செவிடாக்கியிருந்ததோ அல்லது செம்பவளத்தின் முடிவை அவர் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்தாரோ என்று தோன்றியது சங்கனுக்கு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“உக்கிரங்களைத் தணித்துக்கொள்ளலாம். உபாயமில்லாமல் இருக்காது. உடன் நீயும் வருகிறாய்தானே?”

அவ்வளவுதான். அனுமதியெல்லாம் கேட்கவில்லை. முடிவாகிவிட்டது. நெடுஞ்செழியன் அதற்குப் பிறகு அதிகம் ஆட்சேபிக்கவில்லை. எப்படி, எங்கே, யார் என்பன போன்ற திட்டங்கள் குறித்த கேள்விகளை முன்வைக்கவும், மன்னரும் பயணத்துக்குச் சம்மதித்துவிட்டாரென்று புரிந்தது. கேள்வியாகப் பார்த்த பாண்டிமாதேவியிடம் புன்னகைத்தார்.

“ஆசைப்பட்ட வாழ்வைத் தேடியடையும் துணிவு எத்தனை பேருக்கு இருக்கிறது தேவி... அவளது கனவை மறுக்க நாம் யார்?” அதற்கு மேல் பாண்டிமாதேவியும் ஏதும் பேசவில்லை. ஆனால் செம்பவளமும் எதிர்பாராத ஒன்றும் நடந்தது. அது சங்கனோடு எழினியும் கிளம்பி நின்றது.

“அகழியிலேயே நீந்தத் தெரியாத உன்னை எப்படிக் கடல் பயணம் கூட்டிப்போவது?”

“எல்லாவற்றுக்கும் முதன்முறை உண்டுதானே... எல்லாம் பார்த்துக்கொள்ளலாம்’’ என்று அவள் செம்பவளத்தைப்போலவே தலை திருப்பவும், சிரிப்பலை சின்னதாகப் பரவி வடிந்தது.

அதன் பிறகு காரியங்கள் மளமளவென நடந்தேறின. கண்ணனும் போவும் அவளது பயணத்தில் இணைய வேண்டுமென்ற பாண்டியனின் அன்புக்கட்டளையை அவனும் அவனோடு போவும் டோரியனும்கூட பணிவோடு ஏற்றுக்கொண்டனர்.

அவளுக்காகப் பாண்டியதேசத்தின் மிகச்சிறந்த மரக்கலத்தைத் தருவித்தார் நெடுஞ்செழியன். கண்ணனின் கலத்தைப்போல இருமடங்கு பெரியது அந்தக் கலம். நெடுங்கடலோடச் சரியான கலம்.

அது செம்பட்டுப் பாய்கள் அசைந்தா,ட மீன்கொடி படபடக்க வந்து நின்றதும், அதிலே பாண்டியனின் சீர்வரிசைப் பொதிகள் மிகுதியாக ஏற்றப்பட்டன.

“இதெல்லாம்?”

“நீ எங்கே சென்றாலும் இந்நிலத்தின் மகள்தானே! இளவரசியாகக் கிளம்புகிறாய். நீ சென்று சேருமிடத்தில் அரசியாகத் தேவையானவற்றை இந்நிலத்தில் தலைவனாய் நான்தானே தந்தனுப்ப வேண்டும்?”

வெகுநேரம் தாத்தன் அருகே அமரவைத்துப் பேசிக்கொண்டிருந்தார். எல்லாம் கடலைப் புரிந்துகொள்வது பற்றிய அரிய கதைகளும் விளக்கங்களும். இளமையில் அவரும் கீழ்த்திக்குப் பயணங்கள் சில மேற்கொண்டிருக்கிறார். அங்கே அவர் கண்ட மக்கள், இனம், அவர்களின் மொழி பற்றிய புரிதல் என்று அவருக்குத் தெரிந்ததையெல்லாம் வேகமாகவும் சுருக்கமாகவும் சொல்ல முயன்றார்.

அவரைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதிய முடிவல்ல. ஐந்து வயதிலேயே அடங்காத தேடல் இந்தப் பயணத்திலேயாவது அடங்கட்டுமென்று தோன்றியது. பெண்ணென்ற ஒரே சங்கடமிருந்தது. ஆனால் சங்கன் துணையிருக்கிற நம்பிக்கை இருந்தது. இதோ துணைக்கு எழினியும் இருக்கிறாள். இருவருமாகச் சமாளித்துக்கொள்வார்கள். கண்ணனும் அவனைச் சேர்ந்த தேர்ச்சி பெற்ற கடல் மாலுமி அவர்தம் குழு என்று பயண ஏற்பாடுகள் எல்லாமே நம்பிக்கை தருவனவாகவே இருந்தன.

இதற்காகவே எல்லாம் கூடிவந்ததுபோல எந்தச் சிக்கலுமின்றி வெகு சிறப்பான ஏற்பாடுகளோடு சில நாள்களுக்கு முன்பு தென்னகத்தின் கீழ்க்கோடித் துறையிலிருந்து கிளம்பியது அந்தக் கலம். சேரர் மகள் வாரிசாக, ஆய்க்குல அரசப் பிரதிநிதியாக, பாண்டியன் வரித்த பெண்மகளாக இளவரசி செம்பவளம் தமிழ்நிலத்தின் கரைகளைத் தாண்டினாள்.

இதோ! பல்வேறு தேசங்களைத் தாண்டி பல நிலத்து மனிதர்களைக் கண்டு இன்னும் நீண்டுகொண்டிருக்கிறது பயணம்.

அவர்களோடு அந்தக் கலத்தில் இன்னும் சிலரும் சேர்ந்திருந்தனர். சாவகத்தீவுக்குச் செல்லும் பௌத்த பிக்குகள், வாருசக வணிகர்கள் சிலர் என்று சிறு கூட்டம். அவர்களுள் பலரும் இடைவழியிலேயே இறங்கிவிட்டிருந்தனர்.

எஞ்சியவர்களும் அவரவர் அறைகளில் முடங்கத் தொடங்கியிருந்தனர்.

அமைதி விஞ்சித் தெரிந்தது. முன்மாலையில் அந்த பௌத்த பிக்கு சொன்னது நினைவுக்கு வந்தது. ‘ அமைதியின் தனிமையை அறிந்துகொள்கிறவன், மௌனத்தின் இன்பத்தை உணர்ந்துகொள்கிறவன், அச்சத்திலிருந்து முழுமையான விடுதலையைப் பெறுகிறான்.’

செம்பா
செம்பா

எவ்வளவு உண்மை!

கலத்தின் நீள்முனையில் பந்த வெளிச்சத்தில் பரந்துகிடந்த கருமையைப் பார்த்தபடி அமர்ந்திருந்த செம்பவளத்தின் மனம் அந்த ஆழ்கடலைப்போல அலைகளற்றுக் கிடந்தது.

“என்ன தேவி, ஆழமான சிந்தனை போலிருக்கிறதே!?” கையில் கோப்பையோடு கண்ணனும், தள்ளாட்டத்தோடு பின்னால் டோரியனும் போவும் வந்தனர். கண்ணனும் அவன் நண்பர்களும் இச்சில நாள்களில் அவளுக்கும் உற்ற நண்பனாகியிருந்தனர். அவர்களின் ஒருமித்த உலக அறிவு செம்பவளத்தைப் பிரமிக்கவைத்தது. அவர்களல்லாமல் சீனர்கள் என்று செம்பவளம் நினைத்த சிலரும் அந்தக்கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் சீனர்கள் அல்லர் என்று போ சொல்லி அறிந்திருந்தாள்.

“ம்ம்... மீன் காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன்.”

“இந்த இருட்டிலா?” போ மண்டிக்கொண்டிருந்த குடுவையைக் கீழே இறக்கியபடி கேட்டான்.

“இருளில்தானே மீன் நன்றாகத்தெரியும்?”

“நான்தானே குடித்திருக்கிறேன்... நீயேன் உளறுகிறாய்?”

“தேவி சொல்வது கடல் மீனல்ல முட்டாளே விண்மீன்.”

“ஓகோ!”

“இது என்னவென்று தெரிகிறதா செம்பா?” இந்தச் சில நாள்களாகவே வசதிக்காக அவர்களைப்போலவே ஆணுடை தரித்து பார்வைக்கு மாலுமியைப்போல இருந்த செம்பவளத்தை அவர்கள் மனம் ஆணாகவே நினைக்கத் தொடங்கியிருக்க வேண்டும். சங்கடம் மறந்து அருகே அமர்ந்துகொண்டு வானில் கைகாட்டிக் கேட்டான் டோரியன்.

“எங்கள் ஊரில் இதை டாரிஸின் வெறிமிகுந்த கண் என்போம். குளிர்காலத்தில்தான் காணக் கிடைக்கும். இங்கே இப்போது தெரிகிறது. உங்கள் ஊரில் இதற்குக் கதை இருக்கிறதா?”

“இது வயமீன். கதைப்படி இவள் பெயர் ரோகிணி, சந்திரனின் மனைவி. அவனுக்குப் பிடித்த மனைவி. சந்திரனோடு ஊடல்கொள்ளும் ரோகிணியை எங்கள் பாண்டிமாதேவியின் ஒரு கட்டில் விதானத்தின் மீது வெகு அழகாக ஓவியம் வரைந்து வைத்திருப்பார்கள். அதன் பிறகு இங்கேதான் தெளிவாகப் பார்க்கிறேன். சங்கன் எங்கே?”

“எழினி எங்கேயோ அங்கே” டொரியன் சொல்லவும், நால்வரும் சிரித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“அவளுக்கு இன்னும் கடல் பயணம் சேரவில்லையல்லவா, என்னைவிட சங்கன்தான் அருமையாகப் பார்த்துக்கொள்கிறான். அதனால்தான் அவனிடமே அந்தப் பொறுப்பை விட்டுவிட்டேன்.”

“அதனால் மட்டும்தானா?” கண்கள் மின்ன கண்ணன் கேட்கவும்,

”நான் தடையற்று மாலுமிப் பயிற்சி பெற வேண்டுமில்லையா அதனாலும்தான்.”

“நீங்கள் சொன்னால் ஒத்துக்கொள்கிறோம் தேவி. ஆனால் ஒன்று சொல்லுங்கள் தேவி. கடல் பயணம் என்று சொல்லிக் கிளம்பிவிட்டீர்கள் சரி... பயணத்தின் முடிவு எது என்று இன்று வரை எங்களுக்குச் சொல்லவில்லையே.... மன்னரும் ஏதும் சொல்லவில்லை.” பதிலாகப் பழக்கிய புன்னகையைத் தந்தாள்.

“அவ்வளவுதானா... எப்போதும் இதென்ன பதில் தேவி... மன்னர் நெடுஞ்செழியனிடமாவது சொன்னீர்களா அல்லது அவரிடமும் இதே புன்னகையைத்தான் தந்தீர்களா?”

”அவரிடமும் சொல்லவில்லை.”

“ஏன் தேவி?”

“கேள்விக்கு பதில் தெரிந்தால் அல்லவா சொல்ல முடியும்?”

அவளது இந்த பதிலில் ஆண்கள் மூவருமே திகைத்து நின்றனர்.

“என்ன இப்படி விழிக்கிறீர்கள்?”

“தேவி இத்தோடு மூன்று நெடுங்கடற்பயணம் மேற்கொண்டுவிட்டேன் நான். கிழக்கும் மேற்கும் அளந்துவிட்டேன். என் ஆயுளின் பாதி கடலிலேதான். ஆனால் இது வரை ஒரு நாள்கூட இலக்கின்றிப் பயணித்ததில்லை. என் நிலம் தேடிப்போகிறேனென்று நீங்கள் சொன்னதும் ஏதோ மனதில் கணக்கீடு வைத்திருக்கிறீர்கள் என்றல்லவா நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம்.”

செம்பா
செம்பா

“இலக்கு ஈதென்று எனக்கு இன்னும் தெளிவு பிறக்கவில்லை கண்ணன். அந்த நிலத்தில் இறங்கும்போது எனக்குத் தோன்றுமென்று நினைக்கிறேன். அது வரை பயணத்தைத் தொடரத்தான் போகிறேன். என்ன... ஏனப்படிப் பார்க்கிறீர்கள்?”

“நாங்களும் எத்தனையோ பெண்களைப் பார்த்துவிட்டோம், நீங்கள் தனித்த பிறவிதான் தேவி.”

“ஆமாம். அதீனா. நீ தான் அதீனா. எங்கள் அதீ... னா.” கலத்தின் முனையில் கையில் வேலோடு நின்றவளைப் பார்த்துச் சொல்லிக்கொண்டேயிருந்தான் டோரியன்.

“அழைத்துச் செல் போ. முற்றிவிட்டது அவனுக்கு.”

“செம்பா, நீ பேசாமல் எங்கள் நாட்டுக்கு வந்துவிடு. அங்கே உனக்கு நிரம்பப் பிடிக்கும்.” டோரியனைத் தோளில் சாய்த்தபடி போ சொன்னான்.

“அப்படியா? எதைவைத்துச்சொல்கிறீர்கள் போ?”

“எங்கள் நிலமும் உங்கள் தமிழ் நிலத்தைப்போலத்தான். நான் கண்ணனிடம் சொல்வதுபோல எனக்கு உங்கள் நிலத்துக்கு வந்தாலே எங்கள் ஊருக்குப் போனதுபோலிருக்கும். ஏனென்று தெரியவில்லை... ஏதோவொரு நெருக்கம் தோன்றும். மொழியும் வழமைகளும்கூட ஏதோ தாக்கமிருப்பதாகத் தோன்றும்.”

“என்ன பேசுகிறாய் போ. தமிழர் வழமைகள் உங்கள் நாட்டில் மட்டுமா... கீழ் திக்கெங்கும்தான் பரவிக்கிடக்கின்றன.” கண்ணன் குரலில் பெருமிதம்.

“அப்படியா கண்ணன்?”

“ஆமாம் தேவி. நம் முன்னோர்கள் பல்லாண்டு காலமாக கடலோடுவதால் வந்த பயன். வாருசகம் வந்து பாருங்கள்... இது வெளிநாடா என்று கேட்பீர்கள். கீழ் திக்கின் பல்வேறு கரைப்பட்டினங்களிலும் நம்மவர்களைப் பரவலாகக் காணலாம். அவர்கள் கொண்டுவந்த வழக்கங்களெல்லாம் பரவிப் பயன்பாட்டில் உள்ளன. அவ்வளவு ஏன்... சாவகத்தின் மன்னர் பரம்பரையே மீன்கொடிப் பரம்பரைதான். மாறவம்சம்தான்.”

“ஓ... நாம்தான் நில எல்லைக்குள் சுருக்கிக்கொள்கிறோம்போல.”

“ம்ம்... தமிழ்த் தரணியெங்கும் ஒளிவீசித் தெரிகிறது. அந்த ரோகிணியைப்போல...” சொல்லிச் சிரித்து வான் பார்த்த கண்ணனின் முகம் சட்டென இருண்டது.

“என்ன?”

”தெரியக் கூடாத சலனங்கள்.” அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தலைமை மாலுமி ஓடிவந்தார். காற்றிலும் பலமான மாற்றம் தோன்றியது.

“கொடும் புயலொன்று நம்மை நோக்கி வருகுது.” கவலையோடு திரும்பிய கண்ணன் ஒளிரும் செம்பவளத்தின் கண்களைக் கண்டு பிரமித்தான்.

“பயிற்சி முடிகிறது. தேர்வு தொடங்குகிறது கண்ணன்.” புயல்களைத் தின்று செறிக்கும் பெரும்பசியோடு ஒளிரும் கண்களால் கடலைப் பார்த்தாள் செம்பவளம்.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism