Published:Updated:

செம்பா: ``புயலுக்கும் அவளுக்குமான போர்...” | பகுதி 31

செம்பா

புயலுக்கும் அவளுக்குமான போர் என்பது போல வெறிகொண்டு ஈடு கொடுத்தாள் செம்பா. இடது காலில் கூம்புத்தூண் கிழித்து அடிபட்டுக்கிடந்த சங்கனும், பருமலை இறக்க முயன்று கூம்புத்தூண் ஆணியில் மாட்டி மண்டை உடைந்த போவும் நடுத்தளத்து அறையில்...

செம்பா: ``புயலுக்கும் அவளுக்குமான போர்...” | பகுதி 31

புயலுக்கும் அவளுக்குமான போர் என்பது போல வெறிகொண்டு ஈடு கொடுத்தாள் செம்பா. இடது காலில் கூம்புத்தூண் கிழித்து அடிபட்டுக்கிடந்த சங்கனும், பருமலை இறக்க முயன்று கூம்புத்தூண் ஆணியில் மாட்டி மண்டை உடைந்த போவும் நடுத்தளத்து அறையில்...

Published:Updated:
செம்பா

செம்பவளம் நிம்மதிப்பெருமூச்சு விடுவதற்கு முழுதாய் இரண்டு நாள்கள் ஆகிவிட்டன. அன்று இரவு வானில் கெடுநிலை கண்ட பிறகு நடந்ததெல்லாம் மீண்டும் மீண்டும் கண்முன்னே வந்து போனது.

செம்பவளத்தின் கலம் சம்பாபதியில்(வியட்னாம்) கடைசிக்குழு வணிகர்களை இறக்கிவிட்டுச் சீனத்துறவிகள் சிலரை ஏற்றிக்கொண்டு நான்ஹாய் என்று சொல்லப்பட்ட தென்சீனக்கடலிறங்கி இரண்டாவது நாளிரவு தான் அந்தக்கெடுசூழ் உதித்தது.

அதன் மறுநாளே புயல் வெகுவேகமாக இறங்கியது. பொதுவாகவே அப்பகுதிக்கடல் புயலதிகம் பாதிக்கும் பகுதியென்று சொல்லியிருந்தனர். நக்கவாரம் தாண்டிய மறுநாள் கண்ட சிறுபுயலல்ல இது. இந்தப்பகுதிப் புயல்களுக்கு அசகாய கடற்கொள்ளையர்களே அஞ்சுவார்களென்று முன் தினம் தான் மீகாமன் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைப் பலிக்கவைப்பதற்கே வந்தது போலிருந்தது அந்தக்கடும்புயல்.

இரு பனை உயர அலைகளென்று கேள்விப்பட்டிருக்கிறாள். முதல்முறையாக அப்போது தான் நேரில் பார்த்தாள் செம்பவளம். முரசறிந்து போருக்கு வருவது போல பேரிரைச்சல் காட்டித்தான் இறங்கியது.

கடல்நீரள்ளி மழையாய்ப்பெய்தது. கலத்தைக் கவிழ்த்தாமல் விடுவேனா பார் என்று கங்கணம் கட்டியது போல ஊளையிட்டபடி கப்பலைப் பிரட்டுப்பிரட்டென்று பிரட்டியது. வாழ்க்கையை முழுவதும் நிரப்பியழித்துவிடவே வேகவேகமாக வருவது போல கடலலைகள் பொங்கிப்பொங்கி உள்ளிறங்கின. எங்கும் நீர். கலம் பிரண்டு திரும்புகையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீரின்றி வேறேதும் தெரியவில்லை.

இப்போது போலல்ல. நீரோட்டத்தையும் துடுப்பினரையும் கடலறிவையும் மட்டுமே நம்பி இறங்கிய அன்றைய காலத்து நாவாய்கள் புயலை எதிர்ப்பது எமனை எதிர்ப்பதற்கு ஒப்பு, சிறிது பிசகினாலும் அத்தனை பேருக்கும் சாவு நிச்சயம். புயலுக்கு அனுசரித்து நடப்பது மட்டுமே அப்போது அவர்களால் முடிந்தது.

முன்பே மீகாமனின் எச்சரிக்கைப்படி மாலுமியரல்லாதவர் கப்பலின் கீழ்தளத்திலிருந்த அறைகளுக்குள் சென்று பதுங்கியிருந்தனர். மேல் தளத்திலிருந்த பெரும்பொதிகளெல்லாம் இடம்பெயர்ந்திருந்தன. புயலுக்குத் தகுந்த பருமலைக்கூட மாற்ற நேரம் கிடைக்காததால் ஏற்கனவே ஏறியிருந்த பாய்களை பின்னிருந்து இறக்கிச்சுருட்டினர்.

இனி செய்யக்கூடியது ஒன்று தான். புயலோடு சேர்ந்து கலமோடுவது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செம்பா
செம்பா

இரவைக்கடந்துவிடுவது அத்தனை இலகுவல்ல என்பதை அடித்து அடித்துக்காட்டிக்கொண்டிருந்தது புயல். அந்த இரவு மட்டுமல்ல, இரவா பகலா என்று உணரமுடியாத அடுத்த இரு நாட்களுமே அப்படித்தான். கலத்திலிருந்த அத்தனை பேரும் பயந்திருந்தனர். அவர்களின் வாழ்வின் மகத்துவக் கணங்களெல்லாம் ஒன்றொன்றாய் கண்முன்னே வந்து போயின. இனி விடியும் காலையென்பது புதிய வாழ்வு தானென்பதை உணர்ந்திருந்தனர். பொங்கு கடலில் ஒவ்வொரு நாளுமே புதிய வாழ்வு தான் என்பதறிந்த அனுபவசாலிகளும் வாழ்வின் மீதான பிடிப்பகற்றும் வித்தை கற்ற பிக்குகளும் தான் மனம் பிசகிடாதபடி புதியவர்களை வழிநடத்தினர்.

மாலுமிகளுக்கோ அதற்கெல்லாம் நேரமில்லை. அத்தனை உயிர்களையும் காக்கும் பொறுப்பு அவர்களுடையதாகியிருந்தது. அவர்கள் தலைமை மீகாமன் சொற்படி நடந்தனர். ஒற்றை மீகாமனின் எண்ணற்ற கைகள் போல ஓடியோடி பணி செய்து கொண்டிருந்தனர்.

இரண்டு முழு நாள்கள் புயலுக்குத் தாக்குப்பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. நாவாய் ஈடுகொடுத்தது. மாலுமிகள் சரியாகக் கையாண்டனர். வெள்ளம் உள்ளேறிவிடாமல் பார்ப்பது தான் முதல்வேலை. அதன்பின்னர் புயலின் திசைக்குச்சரியாக கலத்தைத் திருப்புவது.

கலத்தின் முனையைப் புயலுக்கு எதிராகவோ பின்னாகவோ திருப்பிவிடக்கூடாது. குறுக்குச்சாய்வாக, கலத்தின் பலமான பகுதியான நடுப்பகுதியை காற்றுக்கெதிராய்த்திருப்பி வைத்துத்தான் ஓட்ட வேண்டும். அதற்குச் சுக்கான் பிடிப்பவனின் திறமையே பொறுப்பு.

இரண்டாம் நாள் மாலை...

புயல் வலுவோடு இறங்கியிருந்தது. அடிமரத்தில் பலமான உடைப்பு ஏற்பட்டிருந்தது. வங்கு உடைபடும் சாத்தியம் உருவாகியிருந்தது. இனியும் கப்பல் தாங்காது. எப்படியாவது புயலிடமிருந்து விலகியாகவேண்டிய நிலை. தொடர்ந்து சுக்கான் பிடித்து மீகாமனும் அனுபவம் வாய்ந்த மாலுமிகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டு அடிபட்டுக்கிடந்தனர். இந்நிலையில் தான் சுக்கான் கடைசியாக எஞ்சியிருந்த செம்பவளத்தின் கையில் வந்திருந்தது.

``வங்கு உடைந்துவிட்டால் ஒன்றும் செய்ய இயலாது. சுக்கானை வலிந்து திருப்பாதே! ஜாக்கிரதை செம்பவளம்!” தலைமை மீகாமனின் குரல் பேரிரைச்சலுக்குள் தேய்ந்து ஓய்ந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புயலுக்கும் அவளுக்குமான போர் என்பது போல வெறிகொண்டு ஈடு கொடுத்தாள் செம்பா. இடது காலில் கூம்புத்தூண் கிழித்து அடிபட்டுக்கிடந்த சங்கனும், பருமலை இறக்க முயன்று கூம்புத்தூண் ஆணியில் மாட்டி மண்டை உடைந்த போவும் நடுத்தளத்து அறையில் அமர்ந்து சாளரம் வழியாக பெருங்கடலின் சாம்பல் பிரம்மாண்டத்தின் முன்னே கடுகாய் நின்ற அந்தச்சிற்றிருவத்தை அச்சத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர். இதற்கெல்லாம் அஞ்சி முதலிலிருந்தே அறைக்குள் முடங்கியிருந்த டோரியனுக்கோ சுக்கான் பிடித்து அணியத்தில் நின்ற செம்பவளம் அந்த அதீனாவாகவேத் தோன்றினாள்.

“இன்னும் ஒரு நாழிகை தான் புயல் விலகிவிடும். விட்டுவிடாதே செம்பவளம்!” உள்ளிருந்து ஒலித்த மீகாமனின் ஓய்ந்த குரலுக்கு தலையைத் திருப்பாமலே ஆமோதிப்பாய் ஆட்டிக்காடியபடி சுக்கன் பிடித்த செம்பாவைப்பார்த்தபடி மூர்ச்சித்தாள் எழினி.

செம்பா
செம்பா

புயல் கடந்தது...

புயலைக்கடந்து மூன்றாம் நாள் இரவைக்கடந்து விடிகாலை வெகு அழகாக இருந்தது. கலத்தில் அனைவரும் நிம்மதியான உறக்கத்தில் இருந்தனர். இன்னும் உடல்வலு மிச்சமிருந்த செம்பவளம் தான் சுக்கானில் இருந்தாள்.

சேட்டை செய்து ஓய்ந்துறங்கும் சிறுபிள்ளை போல சாதுவாகியிருந்தது கடல். நீலப்பட்டாய்ப் பளபளத்த கடலின் கீழ்க்கோடியில் நிலத்தில் சாயல் தென்பட்டது. ஏனோ செம்பவளத்தின் உள்ளத்தில் இனம் புரியாத பூரிப்பு ஏற்பட்டது. வாழ்வு முடிந்துவிட்டதென எண்ணிய மூன்றுநாள்களுக்குப்பின் தெரியும் முதல் நம்பிக்கை என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

“மேற்கே சீனக்கரை தெரிகிறது. கலத்தை கிழக்கே திருப்பு செம்பவளம். சிறு தீவுகள் சில தாண்டிவிட்டால்…தெரியுமா செம்பா! நான் என் தந்தையோடு வீட்டைவிட்டு நங்நங் வழியாக சீனக்கரை வரும்போது எனக்கு வயது ஆறு. ஆறு ஆண்டுகள் ஹன் தேசத்தில் என் தந்தையோடு வாழ்ந்தேன். நோய்வாய்ப்பட்டு அவர் இறந்து போனார். தனியே சுற்றிக்கொண்டிருந்த என்னை மேற்திசை வணிகர்கள் கலமேற்றினர். அத்தோடு ஊருலகு சுற்றிவிட்டு இத்தனைக்காலம் கழித்து இப்போது தான் வீடு திரும்புகிறேன். அதோ தொலைவில் ஒரு சிறு கோடு தெரிகிறது பார். அது தான். எனது நிலத்துக்கு வந்துவிட்டோம்.” கூடடைந்த பறவையின் நிம்மதி அந்தக்குரலில். தலைக்காயத்தின் கட்டு இன்னும் கசிந்துகொண்டிருந்தது. ஆனால் முகத்தில் அத்தனை பெரிய வெளிச்சம்.

“உங்கள் நாடு பெரியதோ போ?”

“நாடு..ம்ஹ்ம்..உங்கள் பாண்டிய தேசம் போல பெரிய தேசமல்ல எங்களுடையது. ஆனால் கோகுர்யோ போஜி சாரோ என்று நாடுகளால் சூழ்ந்தது. மலையும் கடலும் நதியும் கூடுமிடத்து குடிகொண்ட அழகிய குடிகள் பனிரெண்டின் கூட்டமைப்பு. ”

“பெயரென்ன?”

“குயா…”

—-----------

அரசமாளிகையின் அந்தப்புர உப்பரிகையிலிருந்து பரந்து விரிந்த நிலப்பரப்பைப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அது அத்தனைக்கும் அதிபதியானவருக்கு அணுக்கமாகியிருந்தான் அதுவும் குறுகிய காலத்திலேயே. இதை எப்படி நம்புவது?

ஒரு திங்கள் முன் அவனது வாழ்வு இப்படி மாறுமென்று யாரேனும் சொல்லியிருந்தாலும் அவன் நம்பியிருக்க மாட்டான்.

ஆம்! நம்பவில்லை தான். இதோ பின்னால் அரசரோடு நின்று தொங்குமீசை நீவிக்கொண்டு அரசகாரியங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தப்பெரிய மனிதன் வந்து சொல்லத்தானே செய்தார்! எங்கே நம்பினான்?

அவர் சொன்னது சொன்னபடி ஒற்றைத்திங்களில் அவனும் மனம் மாறி (அவனது மனமாற்றுத்துக் காரணமானவள் மல்லிகை மணம் கமழ அருகே அமர்ந்திருந்தாள்) சாரோவின் அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினராகியிருந்தானே! அரசாளும் தகுதி பெற்றவனாகிவிட்டான்.

ஆம்! இனி அவன் வெறும் தல்ஹே அல்ல.

சாரோ நாட்டு இளவரசி அஹியோவின் கணவன் - சாரோவின் இளவரசன் சியோக் தல்ஹே. வயதில் இளைய மைத்துனனும் பட்டத்து இளவரசனுமான யூரியோடு சேர்ந்து திட்டமிட்டுத் தாக்கி இரு சிறு குடிகளை சாரோவோடு இணைக்கக் காரணமான தளபதி தல்ஹே. நெடுநாள் பதற்றம் தந்த போஜி தேசம் திடீரென சாரோவின் வடமேற்கு எல்லையில் படையெடுத்து வந்து நின்றது. அதை முறியடித்து ஓட ஓட விரட்டிவிட்டு வெற்றியோடு திரும்பியிருந்த வீரன் தல்ஹே. அதனாலேயே மன்னரின் விருப்பத்துக்கும் மதிப்புக்கும் உரியவனாகிப்போன மருமகன் தல்ஹே.

இதெல்லாம் எப்படிச் சாத்தியமானது?

எல்லாம் ஹோகோங்கின் வழிமுறை.

தல்ஹேவை சாராவுக்குள் அழைத்து வரும் ஆற்றல் மட்டும் ஹோகோங்குக்கு இல்லை. அது அஹியோவிடமிருந்தது. அஹியோவின் அன்பை அவனால் எவ்வளவு முயன்றும் நிராகரிக்கமுடியவில்லை. முடிவில் அவளது விருப்பப்படி அவன் அவளது தேசத்துக்கு வந்து அவளது தந்தை தமயனைச் சந்திப்பது என்று முடிவெடுத்தபோது தான் அஹியோ யார் என்பதையே அறிந்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்று அவையில் வைத்துத்தான் அவனே அறிந்திடாத அவனது வரலாறு குறித்தும் அறிந்துகொண்டான். ஆம்! அவன் வெறும் மீனவனல்ல, கொல்லனுமல்ல. அவன் இளவரசன். வா தீவு தேசங்களுள் ஒன்றான தபனா தேசத்தின் அரச குடும்பத்துத் தோன்றல். தீவினை ஆருடத்துக்குப் பயந்து கடலில் மிதக்கவிடப்பட்டு கியேரிம் காடுகளில் வந்து அகப்பட்டுக்கொண்ட தூய அரசகுடும்பத்து குருதியோடும் இளவரசன். எப்போதோ இதை உறுதி செய்திருந்த ஹோகோங் எப்படியாவது தனது நிலத்து இளவரசனை சாரோவின் அரச குலத்தில் ஏற்றுக்கொள்ளச்செய்யவேண்டுமென்ற ஆசைப்பட்டார். அது எப்படியோ அஹியோவின் ஆசையோடு சேர்ந்துவிட்டது. விளைவு போஜியுடனான போரில் அவனது திறமையை நிரூபித்த கையோடு அஹியோவுக்கு அவனுக்கு சீரும் சிறப்புமாய் மணமும் முடிந்தது.

செம்பா: ``புயலுக்கும் அவளுக்குமான போர்...” | பகுதி 31

காதல் மனைவி, கண்ணுக்கெட்டியவரைச் சொந்தமெனச்சொல்ல நிலம், இருந்தும் மனம் மட்டும் நிம்மதியடைந்திருக்கவில்லை. அவனது பார்வை நக்தோங் நதியிருக்கும் திசையில் சாய்ந்தது.

அத்திசையில் அவன் பார்வை சாய்ந்த அதே வேளையில் அங்கே நதியிக்கப்பால் சிரிமலைச்சாரலின் ஆதோகன் குடியில் தலைவன் மாளிகையில் ஹிம்சானோடு அமர்ந்திருந்தான் இஜினாசி.

”இதைக்குடி இஜினாசி. வா தேசத்திலிருந்து சிறப்பாய் தருவிக்கப்பட்ட சோஜு.”

“இருந்தாலும் ஹிம்சான்..”

“சம்சொன்..சம்சொன் என்று விளி இஜினாசி.”

“ம்ச்..இந்த முடிவை நான் எப்படி எடுக்க முடியும்? இது போன்ற பெரிய முடிவுகளை தந்தை தான் எடுக்க வேண்டும்.”

“இஜினாசி! இன்றைய உனது தேவை என்ன?” இஜினாசி பேசாமல் இருந்தான்.

“உனது குடிமக்களின் நிலை புரியாமல் உன் அருமருந்த அண்ணன் சுரோ இருப்பது போல உன்னால் இருக்க முடியாதென்பது உன்னைப் பார்த்தாலே தெரிகிறது. ஊருக்காக உன்னையும் கொடுக்கச் சித்தப்படுகிறவன் தானே நீ? அதை ஊருக்குக் காட்டு ஏன் மறைக்கிறாய்.”

“என்ன செய்யவேண்டுமென்கிறீர்கள்?”

“மணம் செய்து கொள். உனது திருமணத்தால் ஊரே மகிழ்ச்சி எய்தும்.”

“அப்படியே திருமணம் செய்வதென்றாலும் திடீரென பெண்ணுக்கு எங்கே போவது? இதெல்லாம் அன்னையவர்களின் பொறுப்பல்லவா?”

“ஏனப்படி நினைக்கிறீர்கள். என் மகளை விடத்தகுதியான பெண்ணைக் உங்கள் அன்னையாரால் கண்டுபிடித்தவிட முடியுமா? அவரே அவள் மீது அத்தனை அன்பு வைத்திருக்கிறார். அவளைப்போய் வேண்டாமென்று சொல்வார்களா?”

“ இப்போது என்ன தான் செய்யச்சொல்கிறீர்கள் ஹிம்..”

“சம்…சொன்.”

“சரி சம்சொன்.”

“அவ்வளவு தான். செய்ய வேண்டியதைச் சொல்லிவிட்டீர்களே! இனி எல்லாம் சரியாக நடக்கும். யாரடா அங்கே!” ஓடி வந்த பணியாளிடம் குடியினர் நலத்துக்காக திருமணம் செய்துகொள்ள இஜினாசி எண்ணியிருப்பதாகவும் அப்படி அவர் திருமணம் செய்யப்போவது யார் என்றும் தெளிவாகச்சொல்லி இந்தச்செய்தி குயா நகர் மட்டுமல்லாமல் பனிரெண்டு குடிகளிலும் மறுநாள் காலைக்குள் பரவச்செய்யும்படி ஆணையிட்டார். அதன்பிறகு அவர் முகத்தில் ஒரு திருப்தி நிலவியது. இனி அவரின் கனவுகளுக்குத் தடையில்லை. தடைகளைத் தகர்க்க அவருக்கு இஜினாசி இருக்கிறான். புன்னகையோடு அவர் அடுத்த குவளை சோஜுவை வாயில் நிறைக்க வெளியேறி ஓடும் பணியாளோடு இடித்துக்கொண்டு உள்ளே ஓடி வந்து மூச்சிறைக்க நின்றான் ஒருவன். இஜினாசியின் இல்லத்துப்பணியாட்களில் ஒருவன்.

“என்ன யோங் ஏனிப்படி ஓடி வருகிறாய்?”

“தலைவர்…”

“தலைவர்? தலைவருக்கு என்ன?”

“தலைவர் யிபிகா இறந்துவிட்டார்.” அந்தச்செய்தி அங்கிருந்த இருவரையும் வெவ்வேறு விதமான பாதிப்புக்குள்ளாக்கியது. செய்தியைப் பிரதிபலிப்பது போல தொலைவில் அடங்கிக்கொண்டிருந்தது சூரியன்.

(தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism