Published:Updated:

செம்பா: `குயாவின் தலைவன் யார்?’ | பகுதி 33

செம்பா

``சுரோவுக்கும் பெரும் காயம்தானாம். பிழைத்தவன் சொன்னது. தலையிலும் தோளிலும் காயமேற்பட்டு மூர்ச்சை நிலையில்தான் கடலில் விழுந்திருக்கிறான், நீந்திப் பிழைக்கவோ மீண்டு வரவோ வாய்ப்பேயில்லை.”

செம்பா: `குயாவின் தலைவன் யார்?’ | பகுதி 33

``சுரோவுக்கும் பெரும் காயம்தானாம். பிழைத்தவன் சொன்னது. தலையிலும் தோளிலும் காயமேற்பட்டு மூர்ச்சை நிலையில்தான் கடலில் விழுந்திருக்கிறான், நீந்திப் பிழைக்கவோ மீண்டு வரவோ வாய்ப்பேயில்லை.”

Published:Updated:
செம்பா

சுரோ இறந்துவிட்டான்.

செய்தி காட்டுத்தீயாக ஊரெங்கும் பரவியது. அது குயா நகர் தாண்டி நக்தொங் கரை தாண்டி சாரோவுக்குள் நுழைந்தது.

சாரோ அரண்மனையில் யூரியோடு அமர்ந்து படையாலோசனையின் அமர்ந்த தல்ஹேவைத் தேடி ஓடோடி வந்தார் ஹோஹோங்.

“இளவரசே...”

“என்ன பதற்றம்... யாருக்கு என்ன?”

“வெற்றி...சாரோவுக்கு வெற்றி! இனி நாம் நினைத்ததெல்லாம் நடக்கும்.”

“அமைச்சரே, நீங்கள் நிதானம் தவறி நான் பார்த்ததே இல்லை. இவ்வளவு கொண்டாட்டமா... விரைந்து அதன் காரணத்தைச் சொன்னால் நாங்களும் குதூகலிப்போம்.”

மணிமாடத்திலிருந்து இறங்கியபடி கேட்ட பட்டத்து இளவரசன் யூரியின் முன்னே அடிபணிந்து நின்றார் ஹோகோங்.

“குதூகலிக்கக் காரணமிருக்கிறது இளவரசே! சொன்னால் நீங்களென்ன... இதோ புன்னகை தாண்டி வேறெதையும் வெளிக்காட்டாத இளவரசர் தல்ஹேகூட குதித்துக் கூத்தாடக்கூடும்.”

“அடேயப்பா! அப்படி என்னதான் நடந்துவிட்டது?” இலகுக் குரலில் கேட்டபடியே உடன் இறங்கினான் தல்ஹே. மன்னரும் இளவரசர்களுமாக மாலை சுகந்தத் தேநீர் அருந்தியபடி பல்வித ஆலோசனைகளில் ஈடுபட்டுவிட்டு அப்போதுதான் அவரவர் பகுதிகளுக்குக் கிளம்பத் தயாராகியிருந்தனர். மந்தமான மாலை மனநிலையை ஹோகோங்கின் வேகம் தடம்புரட்டியிருந்தது.

“இனி குயா நமக்குத்தான்.” அறிவிப்புப்போலச் சொல்லிவிட்டு தல்ஹேவைக் காரணமாகப் பார்த்தார் ஹோகோங்.

“என்ன உளறல்?” தல்ஹேவின் குரலில் சட்டெனக் காட்டம் கூடியது.

“ஆமாம் இளவரசே, இனி நம்மை எதிர்க்க ஆளில்லை. உங்கள் தயக்கங்களுக்குக் காரணமே இல்லை. இனி பியோன்ஹானின் பன்னிரண்டு குடிகளையும் படிப்படியாக நமக்கு அடிபணிய வைக்கலாம். அடுத்த இலக்கு எந்நேரமும் நம்மை வம்பிழுக்கும் அந்த போஜிதான். நடுவே இத்தனை பெரிய நிலப்பரப்பு இருப்பதால்தானே நம்மால் போஜியை நெருங்க முடியவில்லை... வடக்கே நமது சிறுகுடிகளை அவர்கள் அச்சுறுத்துகிறபோதெல்லாம் இங்கிருந்து ஓடி ஓடி காப்பாற்ற வேண்டியிருந்தது. இதோ வடமேற்கில் வம்பிழுத்த போஜிப் படையை விரட்டியடித்துவிட்டு வந்து நான்கு திங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் மீண்டும் மலைக்குடிகள் பக்கம் உள்ளேறப் பார்ப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. இந்நேரத்தில் இப்படியொரு அம்சம் அமைவதெல்லாம்… எல்லாம் இளவரசர் தல்ஹே வந்த நேரம்தான்.”

“ஆமாம்! தல்ஹே வந்த நேரம் சாரோவுக்கு நல்ல நேரம்தான்.” கைகளைப் பின்னுக்குக் கட்டியபடி மெல்ல நடந்த மன்னர் நம்ஹேவின் முகத்தில் திருப்திப் புன்னகை. அவருக்கு தல்ஹேவின் ஆற்றலில் மட்டுமின்றி குணநலன்களிலும் ஒரு பெரும் நம்பிக்கை சேர்ந்திருந்தது.

செம்பா
செம்பா

``அதெல்லாம் இருக்கட்டும். இப்போது திடீரென குயா நமது என்று நீங்கள் குதூகலிக்கக் காரணமென்ன முதலில் அதைச் சொல்லுங்கள்.” தல்ஹேவின் பதற்றம் ஹோகோங் அறிய மாட்டாரா! தல்ஹேவுக்கும் குயாவின் மீது கண், அதன் இரும்பாலை மீது பேராசை என்பதை அவர் அறிந்தே இருந்தார். இந்த இரும்பை இளகவைக்க இன்னும் காலம் கூடாமலா போய்விடும்! எண்ணிச் சிரித்தபடி பதில் கொடுத்தார்.

“சொல்கிறேன் இளவரசே. சில காலமாகவே நமது சாரோவின் நன்மையை முன்னிட்டு பியோன்ஹான் குடிகளைக் கைப்பற்றுவது பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். நீங்களும் ஒரு காரணம் சொல்லி மறுப்புக் கொடுத்துக்கொண்டே இருந்தீர்கள். ஆனால் உங்கள் மறுப்புக்குக் காரணமான அந்த சுரோ இப்போதில்லை. ஆக, இனி குயாவைக் கைப்பற்றலாம்தானே?”

நிதானம் கலைந்து தபதபவென ஓடிவந்து ஹோகோங்கின் அங்கியைக் கொத்தாலப் பிடித்தான் தல்ஹே.

“சுரோ இல்லை என்றால்... என்ன பொருள்?”

“சுரோ இறந்துவிட்டான்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“என்ன... இதெப்படி நடந்தது?” தல்ஹே சிலையாகி நிற்க, யூரியும் மன்னன் நம்ஹேவும் சுவாரஸ்யமாக ஹோகோங்கிடம் கேட்டனர். அங்கியிலிருந்து தளர்ந்த கைகள் நடுங்குவதை அறியாத தல்ஹே விலகி அப்படியே தூணில் சாய்ந்தான்.

“ஆம் மன்னா! கடலில் நங்நங் நோக்கிக் கிளம்பிய படகு கவிழ்ந்துவிட்டதாம். பிழைத்தவர்கள் பட்டியலில் சுரோ இல்லை. உடல்கூட மிஞ்சவில்லை என்கிறார்கள்.“

“அடடா! வணிகக்கலமா பிறண்டுபோனது?”

“இல்லை மன்னவா! சுரோவும் வீரர்கள் சிலரும் மட்டும் ஏதோ விவகாரமாகக் கிளம்பியிருக்கிறார்கள். வழியில் இப்படி.. உடன் சென்றவர்களில் இருவர் உடல் கிடைத்துவிட்டதாம். இருவர் பிழைத்திருக்கிறார்கள் ஆனாலும் பலத்த காயம். சுரோவுக்கும் பெரும் காயம்தானாம். பிழைத்தவன் சொன்னது. தலையிலும் தோளிலும் காயமேற்பட்டு மூர்ச்சை நிலையில்தான் கடலில் விழுந்திருக்கிறான், நீந்திப் பிழைக்கவோ, மீண்டு வரவோ வாய்ப்பேயில்லை என்று கதறி அழுதானாம். எப்படியும் சுரோவின் உடல் இன்னும் ஓரிரு நாள்களில் எங்காவது கரையொதுங்கிய செய்தி வரும். அத்தோடு ஐந்து நாள்கள் குயாவில் துக்கம் அனுசரிப்பார்கள். நாம் சரியாகத் திட்டம் வகுத்தால்…”

“விபத்தா?” சட்டென தல்ஹே இடைமறித்துக்கேட்டான்.

“இல்லை இளவரசே. யாரோ முகமறியா இருவர் வந்து அடியிலிருந்து கலத்தைப் பிரட்டியதோடு சுரோவையும் பிறரையும் தாக்கியுமிருக்கிறார்கள். சுரோவுக்கு உடலில் பல இடங்களில் வெட்டுக்காயமாம். பொருள்களைக் கவர்ந்து சென்றிருக்கிறார்கள். கடற்கொள்ளையர்களாக இருக்கலாமென்று எண்ணுகிறார்கள். ஆனால் என் கணக்கு வேறு.”

“என்ன கணக்கு?”

“சில காலமாகவே சுரோவின் தம்பி இஜினாசி சேர்ந்திருக்கும் கூட்டணி அத்தனை சரியானதாயில்லை.”

“என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“இளவரசே, நிலத்தில் தப்பாமல் மழை பொழிய வேண்டுமெனில் மன்னர் மகன் மணமுடிக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியும்தானே? அந்தச் சிக்கலில் சுரோவுக்கு முந்தி மக்களைக் காப்பாற்றுவதாயும், அதற்கு அந்த ஹிம்சானின் மகளை தான் மணக்கப்போவதாயும் இஜினாசி முடிவு செய்திருக்கிறானாம். ஊரெல்லாம் அதுபற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த ஹிம்சான் யாரென்று…”

செம்பா
செம்பா

அவனோடா கூட்டு வைக்கிறான் அந்த இஜினாசி? தல்ஹேவின் உள்ளம் கொதித்தது. ஹோகோங் சொல்வதுபோல ஒருவேளை அந்தப் படுபாதகன் ஹிம்சானின் வேலையா இது?

“அப்படியென்றால்…சுரோவைக் கொன்றுவிட்டார்கள் என்றா சொல்கிறீர்கள்?” யூரியின் கேள்வியோ அதற்கு ஹோகோங்கின் பதிலோ தல்ஹேவின் மனதில் பதியவில்லை.

உள்ளத்துக்குள் எங்கோ மூலையில் அடங்கிக்கிடந்த இரும்பாலை நெருப்பு சட்டெனப் பற்றிக்கொண்டு பெரும் ஜுவாலையாக உருமாறியது.

அந்த இஜினாசி… பொறாமை பிடித்த இஜினாசி… வெறிபிடித்த இஜினாசி... அவனை…

“மாமா…” படைக்களம் தாண்டி வேறெங்கும் பயன்படுத்தாத உறுமல் ஒலித்தது. மன்னர் அருகே வந்து அவன் தோள்களைப் பற்றிக்கொண்டார். அது நடுங்கிக்கொண்டிருந்தது.

“என்ன வேண்டுமென்று சொல் தல்ஹே!”

“சுரோ இறக்கக் காரணமானவனை உயிரோடுவிடக் கூடாது. உண்மையில் கொன்றது இஜினாசி என்றால்… அந்த இஜினாசியை… அவனைக் கொன்றே தீருவேன், அவனைக் கொன்று குயாவை அவனிடமிருந்து வென்றே தீருவேன். இது சுரோவுக்காக...” திமிறி விலகித் தூணில் அடித்துப் பேசியவன் கண்களில் தெரிந்த தீயின் உக்கிரம் ஹோகோங்கை வெகுவாகக் குளிர்வித்தது.

சுரோவுக்காக என்று தல்ஹே சொன்னாலும் சுரோவே வந்து படைக்களத்தில் நின்றால் சாரோவுக்காகத்தான் யுத்தம் புரிவான் தல்ஹே என்று நன்றாக உணர்ந்திருந்த ஹோகோங்குக்கு நெடுநாள் கணக்கைச் சரியாகத் தீர்த்துவிட்ட திருப்தி. புன்னகையோடு அடுத்தகட்ட ஆலோசனை குறித்துப் பேசலாமென அவர் எடுத்துக்கொடுக்க மூவரும் மீண்டும் ஆலோசனை மண்டபத்துக்குள் புகுந்துகொண்டனர்.

***

களையிழந்து தெரிந்த குயாநகர் மாளிகை முன்றலில் விளக்குகள் ஒளிர்ந்தன.

முன்றல் கட்டில்களால் நிரம்பியிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருளுயிர்களின் கச்சேரி உரத்து ஒலிக்க, அமர்ந்திருந்த அத்தனை பேரும் அமைதியாகத் தலைகவிழ்ந்திருந்தனர். இன்றோடு சுரோ தொலைந்து மூன்று நாள்களாகின்றன. இன்னும் அவனது உடல் கிடைக்காத நிலையில் நாளை சுரோவின் இறப்பை முறைப்படி அறிவிக்கவேண்டியிருக்கும்.

யாரொருவருக்கும் என்ன செய்வதென்று தெரியாத கையறுநிலைதான்.

ஆனாலும் அடுத்தடுத்த வேலைகளைச் செய்தாக வேண்டுமே! யூசுவை வேறு காணவில்லை. சுரோ இறந்திருக்க மாட்டான் அவனைத் தேடிப்பிடித்துக் கூட்டிவருகிறேன் என்று போனவர்தான். இன்னும் வரவில்லை.

காலம் யாருக்காகக் காத்திருக்கும்... அன்பின் சுரோவுக்கும்கூட அது காத்திருக்காதுதானே! ஏற்றுக்கொள்வது கடினமென்றாலும் ஏற்று நடக்கத்தான் வேண்டும். ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்த ஜீமின், சூழ்நிலை உணர்ந்து மெல்லத் தொடங்கினார்.

“எல்லோரும் இப்படி இருந்தால் என்ன பொருள்?”

“என்ன செய்வது தலைவ... இன்னும் யிபிகாவின் இறப்புக்கு அணிந்த வெள்ளுவர் ஆடைகளைக்கூட துறக்கவில்லையே! அதற்குள் இப்படி நேர வேண்டுமா... என்ன தலைவிதி இது?”

“ஆம்! உண்மையில் யிபிகா இறந்தபோதுகூட இவ்வளவு ஒடிந்துவிடவில்லை நான். நானென்ன... வெகுவிரைவில் மக்களே முன்னைப்போல தெம்படையத் தொடங்கிவிட்டனர் என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு உடல்நலம் குன்றி உருக்குலைந்துபோன அன்னையை மீட்டெடுத்து, நம்மோடு அமர்ந்து ஊர் விவகாரம் சரிசெய்து, மக்கள் மன்றத்தில் நின்று பேசி அவ்வப்போது அவர்களுக்குத் தெம்புகொடுத்து, தந்தை யிபிகாவுக்கு அற்புதமான வழியனுப்புதலைச் செய்து முடித்து- எப்பேற்பட்ட பிள்ளை... தன் இழப்பைத் தாண்டி மக்களை வழிநடுத்தும் தலைவன் கிடைத்துவிட்டான் என்ற நிம்மதி, இனி இந்த குயாநகர் பிழைத்துவிடுமென்ற நம்பிக்கை… அந்த நம்பிக்கை எப்படிச் சரியலாம்... சூரியன் எப்படி மறையலாம்?” யோதோகன் தலைவர் கண்களில் கண்ணீர்.

“சுரோ இனி இல்லை என்ற செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை. இல்லை... நம்ப முடியவில்லை என்பதைவிடவும் நம்ப விரும்பவில்லை என்பதுதான் உண்மை.”

எப்படியெப்படியோ பேச்சு போய்க்கொண்டிருந்தது.

இதெல்லாம் இஜினாசிக்கு இனித்திருக்க வேண்டும். எல்லாம் கூடி வருகிறதென்று மனதில் இன்பம் பெருகியிருக்க வேண்டும். ஆனால் இல்லை.

உண்மைத் தகப்பன் இல்லைதானே என்று ஆயிரம் முறை கூறிக்கொண்டாலும் அவனால் யிபிகா இல்லை என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.

சுரோவின் நடவடிக்கை குறித்து, அவன் மக்கள் மத்தியில் தனித்தெழும்புவது குறித்து ஹிம்சான் தினம் இரவில் வந்து ஓதிக்கொண்டிருந்தாலும் அவனால் அடுத்த காரியம் குறித்து சிந்திக்க முடியவில்லை. அப்படியிருக்க தனக்கு ஒற்றைப் போட்டியாக நின்ற சுரோ திடீரென கடலில் சிக்கி இறந்துபோனது கேட்டதும் இறக்கை கட்டிப்பறக்கத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் இல்லை.

உண்மையில் இஜினாசி இடிந்துபோயிருந்தான். பேச்சற்று அமர்ந்திருந்தவனைப் பார்த்து ஜீமின்னுக்கே பாவமாக இருந்தது.

“சரி ஆனது ஆகிவிட்டது. அதையே பேசுவதால் என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது. அடுத்த வேலையைப் பார்ப்போம்.”

“அதைத்தான் நானும் சொல்கிறேன் காலையிலிருந்து.” அவசரமாக வந்தது ஹிம்சானின் பதில்.

“சரி, எல்லோருக்கும் ஒப்புதல் என்றால் காலையில் அறிவிப்பைக் கொடுத்துவிடலாம். என்ன?” அவர் மற்ற குடித்தலைவர்களைப் பார்க்க அவர்களும் மெதுவாகத் தலையாட்டினர்.

“சரி அடுத்த வேலை...” என்று அவர் இஜினாசியைப் பார்க்க அவன் குனிந்த தலை நிமிரவில்லை.

“இஜினாசி... இனி நீதான் குயாவின் தலைவன். இப்படி இடிந்து போய் அமர்ந்திருந்தாலாகுமா?”

”என்ன செய்ய வேண்டும்?”

செம்பா
செம்பா

``நாளையே அறிவிப்புச் செய்துவிடுவோம். ஐந்தாம் நாள் காலை வழமைப்படி சுரோவை… சுரோவுக்கான வழியனுப்புதலை முடித்து துக்கம் வழித்து ஏழாம் நாள் தலைமைப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள்வாய். சரிதானா? ”

“சரி.”

“அதோடு இதையும் சொல்லிவிடுங்கள். இஜினாசிக்கும் ஆதோகன் தலைவரான என் மகளுக்கும் மணமுடிக்கிறோம். இனி குயாவும் ஆதோகன்னும் ஒன்றோடொன்று.” இஜினாசியைத் தோளோடு கட்டிக்கொண்டு பல்லிளித்த ஹிம்சானுக்கும் ஆதரவுக் குரல் இருக்கத்தான் செய்தது. கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போதும் அமைதியாக அமர்ந்திருந்தான் இஜினாசி.

“தெம்பாயிரு இஜினாசி. இனி எல்லாம் நீதான்.”

இனி எல்லாம் நான்தான்... ஆமாம் இனி எல்லாம் நான் தான். என்னை மீறி எதுவும் இல்லை. சுரோ கூட… மெல்லப் புன்னகையின் சாயல் எங்கிருந்தோ வந்து அவன் முகத்தில் ஒட்டிக்கொள்ளப்போகும் நேரத்தில் ஓடோடி வந்தான் வீரனொருவன். புரவியிலிருந்து விழுந்து எழுந்து ஓடி வருகிறானென்று புரிந்தது. அனைவருக்குள்ளும் ஒரு பேராவல்.

“என்ன... என்ன சுரோ கிடைத்துவிட்டானா?”

“உயிரோடு இருக்கிறானா?” ஜீமின் கேள்வியில் சட்டென இஜினாசியின் மனதுக்குள் எழுந்துகொண்டிருந்த கோட்டை இடிந்து நொறுங்கியது. ரௌத்திரம் பெருகியது.

“வாயைத் திறந்து பேசு முட்டாளே!”

“சுரோ இருக்கிறானா இல்லையா?”

“இது சுரோ பற்றிய செய்தியல்ல...”

“பின்னே?”

“சாரோ... சாரோ குயா நோக்கி. நம் பன்னிரண்டு குடிகள் நோக்கி படையெடுத்து வருகிறது.” ஸ்தம்பித்து நின்றது பியோன்ஹன் தலைவர்கள் கூட்டம்.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism