Published:Updated:

செம்பா: ``பேராசையில் நிலம்கொள்ள யாரும், எத்திசையிலிருந்தும், எப்போதும் வரக்கூடும்..!” | பகுதி 34

செம்பா

சுரோவின் திட்டம் வேறு. அவன் தலைமையைத் தக்கவைத்துக்கொள்ளவோ, பேரரசனாகவோ அப்படியொரு யோசனையைச் சொல்லவில்லை. வளர்ந்துவரும் நமது இரும்புப் புகழை மொய்க்கும் ஈக்கள் அதிகரித்துவருகின்றன.

செம்பா: ``பேராசையில் நிலம்கொள்ள யாரும், எத்திசையிலிருந்தும், எப்போதும் வரக்கூடும்..!” | பகுதி 34

சுரோவின் திட்டம் வேறு. அவன் தலைமையைத் தக்கவைத்துக்கொள்ளவோ, பேரரசனாகவோ அப்படியொரு யோசனையைச் சொல்லவில்லை. வளர்ந்துவரும் நமது இரும்புப் புகழை மொய்க்கும் ஈக்கள் அதிகரித்துவருகின்றன.

Published:Updated:
செம்பா

கூட்டம் ஸ்தம்பித்து நின்றது.

ஒற்றன் வந்து செய்தி சொன்னதும், யிபிகாவுக்கும் சுரோவுக்குமான இரங்கல் கூட்டம் கணத்தில் பன்னிரு குடிகளின் மந்திராலோசனைக் கூட்டமாக மாறியிருந்தது.

`குயா மீது சாரோ படையெடுத்து வருகிறதாமே... இதென்ன அடிமேல் அடி விழுந்துகொண்டே இருக்கிறதே...’ என்று அனைவர் மனதிலும் அச்சமும் நிராசையும் பரவத்தொடங்கின. முகங்கள் பொலிவிழந்துகொண்டிருந்தன.

“இது சரியான தகவல்தானா?” ஜீமின் உரத்துக் கேட்கவும் அச்சத்தில் உறைந்து நின்றவர்கள் விரைத்து நிமிர்ந்தனர்.

“ஆம் தலைவ! ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. இன்னும் சில நாள்களில் அவர்கள் படைநடத்திக் கிளம்பிவிடுவார்கள். மிகையாகப் பார்த்தாலும் பத்திருபது நாள்களில் நக்தோங் கரை தாண்டி வந்துவிடுவார்கள்.” ஒற்றன் கண்களில் தீவிரம்.

“அவ்வளவுதான் அவகாசமா... அதற்குள் எப்படித் தயாராவது... சாரோவின் படையோடு நம்மால் எப்படி மோதி வெல்ல முடியும்?”

“அதேதான். சில திங்கள் முன் வடதிக்கில் போஜிப்படையை ஓட ஓட விரட்டினார்கள் நினைவிருக்கிறதா?”

“ஓ! நன்றாக. ஆனால் அதற்குள் நம் மீது ஏன்?”

“என் கணக்குச் சரியென்றால் எல்லாம் அந்த தல்ஹேவின் முயற்சியாகத்தான் இருக்கும்.” ஹிம்சானின் பொருமலில் பொருள் இல்லாமல் இல்லை என்பதுபோல ஜீமின்னும் தலையசைத்தார்.

“நம் மீது அன்புள்ளவன் என்று நினைத்தேன். நம்மைவிட இம்மண்ணை அதிகம் நேசித்திருக்கிறான்.”

“இளையவரே, நீங்களும் அந்த தல்ஹேவும் நண்பர்கள்தானே... தூதனுப்பிப் பார்க்கலாமா?” இல்சங் ஏதோ நம்பிக்கையில் இஜினாசியைக் கேட்கவும், பலருக்கும் அதுவே சரியெனத் தோன்றியதுபோல ஆதரவுக் குரல் கொடுத்தனர். இஜினாசி இன்னும் கவிழ்ந்த தலை நிமிரவில்லை.

“என்ன சிந்தனை இஜினாசி... தல்ஹேவுடன் பேசிப் பார்ப்பதே இந்நிலையில் நமக்கு இருக்கும் ஒரே வழி என்று தோன்றுகிறது.” ஜீமின் இப்படிச் சொன்னதும் இஜினாசி சட்டென நிமிர்ந்து பார்த்தான். இதுவே இந்த இடத்தில் சுரோ இருந்திருந்தால் இப்படிச் சொல்லியிருப்பானா இந்தக்கிழவன்... படையின் முன்னே நின்றிருப்பான். நானென்றால் சமாதானம் பேச வேண்டுமா?’ என்று தோன்றியது.

”போர் ஏற்பாடுகள் பற்றிப் பேசலாம் ஜீமின்.”

“இஜினாசி நான் சொல்வதை...” வெறித்த பார்வையில் தெறித்த சினம் தல்ஹேவின் மீதானதல்ல தன் மீதானது, சுரோவின் மீதானது என்பதைப் புரிந்துகொண்ட ஜீமின் ஒரு பெருமூச்சோடு பேச்சை நிறுத்தினார்.

செம்பா
செம்பா

வழிகாட்டலுக்குப் பணியா இளங்குருதி வீணாக மண்ணில் கரையுமே! என்ற அங்கலாய்ப்பு அவருக்கு.

“யாரும் குறுக்காகப் பேச வேண்டாம். இனி எல்லாம் இஜினாசியின் முடிவுதான். முதலில் அவரைக் குயாவின் தலைவராக ஒரு மனதாக முடிவு செய்துவிடலாம்.” இல்சங் வேக வேகமாகச் சொன்னதும் எழுந்து நடுவில் வந்து நின்று கொடுத்தார் ஹிம்சான்.

“நான் சொல்வதைக் கேளுங்கள். நம் பன்னிரு குடிகளின் கூட்டமைப்பென்பது மிகவும் அருமையான விஷயம்தான். ஆனால், காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நம்மைச் சுற்றிப் பெரும் அரசுகள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் பன்னிருகுடிகள் கூட்டமைப்பு என்ற நிலையிலிருந்து அடுத்தகட்டத்துக்கு நகரவேண்டிய நிலையில் நாமிருக்கிறோம். அதுவும் இப்போது மிகவும் முக்கியமாகிறது.”

“என்ன சொல்ல வருகிறாய் ஹிம்சான்?” ஜீமின்னின் குரலில் எச்சரிக்கை வெளிப்படையாகவே தெரிந்தது.

“குடிகளை ஒன்றிணைப்போம். நாடெனக்கொண்டு நமக்கென ஒற்றைத் தலைவனைத் தேர்ந்தெடுப்போம்.”

“என்ன உளறல்!”

“ஆரம்பித்துவிட்டாயே பிதற்றுவதை.”

“இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.” அவரவர் எதிர்த்துப் பேசத் தொடங்கியதும் யோசனையாக இஜினாசியைப் பார்த்தார் ஜீமின். அவன் கண்களில் தெரிந்த தீவிரம் அவருக்கு மேலும் கவலையை அளித்தது.

“என்ன ஜீமின்! எடுத்துச் சொல்லுங்கள். இதெல்லாம் புதிய திட்டமா என்ன... எல்லாம் நீங்களும் சுரோவும் பேசியதுதானே... தனித்த தலைவனாவது சுரோவின் திட்டம்தானே... தெரியாததுபோல நின்றால் எப்படி?”

என்ன சொல்கிறான் இவன் என்பதுபோல அனைவரும் ஜீமின்னைப் பார்க்க, அவரோ, “சுரோவின் திட்டம் வேறு. அவன் தலைமையைத் தக்கவைத்துக்கொள்ளவோ, பேரரசனாகவோ அப்படியொரு யோசனையைச் சொல்லவில்லை. வளர்ந்துவரும் நமது இரும்புப்புகழை மொய்க்கும் ஈக்கள் அதிகரித்துவருகின்றன. பேராசையில் நிலம்கொள்ள யாரும் எத்திசையிலிருந்தும் எப்போதும் வரக்கூடும். அப்படி வரும்போது வலுவான எதிர்ப்பைக் காட்ட, அதாவது நம்மைக் காக்கவே சுரோ ஒரு குடையின் கீழ் ஆட்சி வேண்டுமென நினைத்தான். ``உண்மையில் பன்னிரு குடிகளின் தலைவர்கள் சிலரது போக்கு சரியில்லை என்பதும், மக்கள் நல்வாழ்வில் கவனம் காட்டுவதில்லை என்பதும், அதனால் ஏதாவது செய்து தன் நிலத்து மக்கள் அனைவருக்கும் சமமான வாழ்வு தர வேண்டுமென்பதும்தான் சுரோவின் எண்ணமாக இருந்தது. அவனது இந்தக் கவலையையே காரணமாக்கி ஒரே நாடெனும் எண்ணத்தை அவன் மனதில் விதைத்ததே ஜீமின்தான். அதையெல்லாம் அவையில் சொல்ல முடியுமா?!

“எல்லாம் ஒன்றுதானே! நானும் அதற்குத்தானே கேட்கிறேன். சுரோவால் முடிந்ததை இஜினாசியால் செய்ய முடியாதென்கிறீர்களா?”

”ஆமாம். செய்ய முடியாது.” ஆணித்தரமாக உரக்க ஒலித்த ஜீமின்னின் இந்த மறுப்பு கூட்டத்தையே ஒருகணம் அசைத்துப்போட்டது.

“தலைவரே... எல்லை மீறுகிறீர்கள். எச்சரிக்கை.” ஹிம்சான் கர்ஜித்தான்.

“போடா திருட்டுப்பயலே! உன் எச்சரிக்கையைத் தூக்கி ஆலை நெருப்பில் போடு. யாரை அச்சுறுத்தப் பார்க்கிறாய்?” ஜீமின் உடலில் இல்லாத உரம் குரலில் இருந்தது.

“இதோ பாருங்கள். இஜினாசியை நான் இழிவாய்ச் சொல்லவில்லை. ஆனால் சுரோ வேறு... இஜினாசி வேறு. அதுதான் உண்மை. இதைச் சொல்ல எனக்கு எந்தத் தடையும் இல்லை. ஒருவன் தலைவனாகையில் அவனது பண்புகளுக்கேற்றாற்போலச் சுற்றம் சரிசெய்வதும் மரபுதான். அப்படிச் சிந்தித்துத் தான் பேசுகிறேன். செய்கிறேன். இப்போது சொல்கிறேன்... சாரோவுடனான போர் - இந்தப் பெரும் பொறுப்பை இஜினாசி எதிர்கொள்ளும்விதம் கொண்டு அடுத்தகட்டம் குறித்து நாம் முடிவு செய்வோம். இனி கண்முன்னே இருக்கும் சிக்கலைக் களைவதில் கருத்து வைப்போமா?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஆம்! சரியாகச் சொன்னீர்கள்.”

“ஜீமின் சொல்வதே சரி.”

“தலைவர் சொல்வதுதான் எங்கள் கருத்து.” ஒருமித்த குரலில் எழுந்த ஆதரவைக் கையுயர்த்தி நிறுத்திவிட்டு, மீண்டும் இஜினாசியிடம் கேள்வியை வைத்தார் ஜீமின்.

“சொல் இஜினாசி. தல்ஹேவுடன் பேச்சுவார்த்தை வேண்டாம் என்பதுதான் உன் இறுதி முடிவா?” மெல்லிய தலையசைப்புக்கு வேகமாக அடுத்த கேள்வியை வைத்தார்.

“அப்படியென்றால் சரிதான். நீ தான் படைத்தலைவனென்று முடிவு செய்துவிட்டோம். போர் வியூகங்களையும் நீயே சொல்லிவிடு.” இஜினாசி நிமிர்ந்து அவரைப் பார்க்க எவ்விதப் பாசாங்கும் இல்லாமல் சவால் தோரணையோடு சிரித்தார் அந்தக் கிழவர்.

—----------

செம்பவளத்தின் கலம் தம்னா கடற்கரை வந்தடைந்து சில நாள்களாகியிருந்தன. எஞ்சியிருந்த மாலுமிகளைக்கொண்டு தீவு மக்களில் சிலரையும் துணைக்கழைத்துக்கொண்டு கண்ணனின் மேற்பார்வையில் கலம் செப்பனிடப்பட்டுக்கொண்டிருந்தது, கூடவே கூடாரத்தில் அவனும்.

பெருமூச்சோடு மனதை அவனிடமிருந்து விலக்கி எதிரில் படரவிட்டாள் செம்பா.

கடற்கரைப் பாறையொன்றில் அமர்ந்திருந்தவள், நிமிர்ந்து நிலத்தின் உயர்ந்த முனையைப் பார்த்தாள். அழகிய கூம்புகள் ஊசி ஊசியாக முளைத்து நின்றன வான் நோக்கி. இந்த நிலத்தைப் படிப்பதற்கே இன்னும் ஒரு திங்களாகும் என்று தோன்றியது அவளுக்கு.

ஆனால் ஒவ்வொரு நிலமும் ஒவ்வோர் உலகமாகத்தானே இருக்கிறது!

செம்பா: ``பேராசையில் நிலம்கொள்ள யாரும், எத்திசையிலிருந்தும், எப்போதும் வரக்கூடும்..!” | பகுதி 34

கொற்கையில் கலத்திலேறிய கணம் முதல் எத்தனைவிதமான நிலங்களைக் கண்டுவிட்டாள்... ஆடையணியா மாந்தருலாவிய அழகிய நக்கவாரம், அகிலும், துகிலும், கண்ணாடி மணிகளும் தமிழ்வணிகர்கள் பொதிப்பொதியாகச் சுமந்துசெல்லும் சொர்ணதீபம், தமிழ் நிலமா... சீனமா என்று குழப்பம் தந்த சம்பாபதி, எட்ட இருந்து பார்த்ததற்கே கற்பனையிலிருந்து மீளாத சீன தேசம்.

கருவம்பூவும், கற்பூரமும், ஆமையோடுகளும் அடேயப்பா... அவள் எண்ணியும் பார்த்திராத பொருள்களைப் பயன்படுத்தும் மக்களடங்கிய உலகங்கள் கண்முன்னே விரிந்துகொண்டே வந்தன. எத்தனை வகையான மனிதர்கள்... அவர்களுக்குத்தான் எத்தனையெத்தனை விசித்திர வழமைகள். கலத்திலே அவளோடு பயணித்த வணிகர்கள் சொன்ன கதைகளெல்லாம் அவளுக்கு மேலும் ஆயிரம் உலகங்களை விரித்துக்காட்டின.

போவும் டோரியனும் கதை சொல்லத் தொடங்கினால் போதும்... பசி, தூக்கம் மறந்து கதை கேட்பாள் செம்பா. மேற்திக்கிலே ரோமானியப் பேரரசின் தொடக்கம் முதல் இதோ சில ஆண்டுகள் முன்பு சீனத்திலே நிலவிய பெரும்பஞ்சம் வரை எல்லாக் கதைகளும் கேட்டுவிட்டாள். இடையிடையே சீன பிக்குகளின் பௌத்தக் கதைகளும். புத்தர் பிறந்த மண்ணிலிருந்து வந்துவிட்டு பௌத்தம் பற்றிய பிடிப்பில்லையே என்று அங்கலாய்த்த அவர்களுக்கெல்லாம் புன்சிரிப்பைத்தான் பதிலாகத் தந்தாள். பல நல்ல கொள்கைகளை போதித்த பௌத்தம் அவளுக்குப் புதிது.

அவளைப் பொறுத்தவரை தமிழர் வாழும் ஐந்திணை நிலத்தில் நிலமே கருப்பொருள். இயற்கையின் வடிவே இறைமை. தன் நிலத்தை அதன் மக்களைக் காத்து நின்று, இன்னுயிர் ஈந்து, நடுகல்லாகிய வீரர்களே கடவுளர். அவர்களன்றி நெல்லு குத்துப்பரவும் வேறு கடவுளும் அவளுக்கு இல்லை!

அந்த வகையில் இந்த நிலமும் அதன் மக்களும் அவளுக்கு மிகவும் அணுக்கமாகத் தோன்றினர். ஊசியிலைக் காடுகளால் நிரம்பிய மலையுச்சி முதல் பெயரறியா புது வனங்கள் நிரம்பிய சமதளப்பரப்பு வரை இந்நிலத்து மக்கள் அதற்குப் பற்பல பெயர்களும் அதற்குத் தக்க கடவுளரையும் உருவாக்கி வைத்திருந்தனர். அவர்களுக்கும் வனமே, நிலமே, கடலே கடவுள். தமிழ் நிலத்தைப்போலவே.

தீவிலே ஆங்காங்கு இருந்த குடியானவர்கள் புதிதாகக் கலம் வந்த செய்தியறிந்து பார்த்துப்போக வந்தனர். எங்கிருந்தோ வந்த இளவரசிக்கு எப்படி தங்கள் மொழி தெரியுமென்று அதிசயித்தனர். அவர்களுக்கு அரிசியும் சோளமும் பரிசாகக் கொடுத்தாள் செம்பவளம். சொற்ப நாள்களிலேயே அவர்கள் இனி அவளுடைய மக்களென்ற எண்ணம் அழுத்தமாக விழுந்திருந்தது அவள் மனதில்.

“செம்பா! கனவிலிருந்து விழிப்பதாகக் காணோமே!” கஞ்சியும் சுட்ட மீனும் கொண்டு வந்து நின்றிருந்தாள் எழினி.

முகத்தில் புதுமணம் புரிந்த பொலிவு. அவளது புதுக்கணவன் சங்கனைக் காணவில்லை. பொதுவாக அவளுக்கு நிழல்போல வருபவன். அவளுக்குப் பின்னால் எட்டிப் பார்த்துப் புருவம் உயர்த்தியவள் கண்களில் தெரிந்த குறும்பில் எழினி வெட்கிச் சிவந்தாள்.

“அவர் ஆளைக் காணவில்லை. இப்போது நீ பசியாறப்போகிறாயா இல்லையா?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“அடேயப்பா! இப்படித்தான் அண்ணனையும் மிரட்டுகிறாயா? பாவம்தான் அவன்.”

“ரொம்பப் பாவம்தான் போதும். கஞ்சியைக் குடி.”

“உணவைப் பார்த்துக்கொண்டு அப்படியே இருந்தால் என்ன பொருள்?”

“அவர் விழித்துவிட்டாரா?”

“இன்னும் இல்லை. ஆனால் உடல்நிலையில் நல்ல தேர்ச்சியிருப்பதாக மருதன் கூறுகிறார். இங்கேயிருந்து சில மூலிகைகளைக் கொண்டு வந்து தந்தான் போ. வந்து...”

செம்பா: ``பேராசையில் நிலம்கொள்ள யாரும், எத்திசையிலிருந்தும், எப்போதும் வரக்கூடும்..!” | பகுதி 34

“என்ன?”

“அவர் யாரென்று..”

“போ சொன்னான்.”

“போ பிறந்த குடி குயா. அந்தக் குயாவின் குடித்தலைவன் மகன்தான் அவர் என்று போவுக்கே இந்தத் தீவு மக்கள் சொல்லித்தான் தெரிந்ததாம். சிறு வயதில் பார்த்தது. ஆனால் அவர் பற்றி உள்நிலத்துக்குச் செய்தி செல்லக் கூடாதென நீ சொன்னதாக அவர் சொல்கிறார்.”

“ஆமாம்!”

“ஆனால் ஏன் செம்பா... தலைவர் குடும்பத்தில் தவிக்க மாட்டார்களா?”

“சிந்தித்துப் பார்! ஒரு குடித்தலைவரின் மகன். அவர் கலம் பிரண்டு கரையொதுங்கியதுபோலில்லை. காயங்களைப் பார்க்கையில் யாரோ வேண்டுமென்றே தாக்கி கொலை செய்ய முயன்றிருப்பதாகத்தான் தெரிகிறது. அப்படியென்றால் இவர் உயிருடன் இருப்பது வெளியே தெரிவது ஆபத்தாகிவிடாதா?”

“அதற்காக எத்தனை நாள்தான் இந்த விஷயத்தை மறைத்து வைப்பது செம்பா?” கேட்டபடி கண்ணனும் சங்கனும் பாறைகளைத் தாண்டி அவளருகே வந்து நின்றனர். கண்ணன் கண்களில் அயர்ச்சி. இன்னும் சில தினங்களில் கிளம்புவதாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.

அதிக நாள் இங்கே தங்கிவிடாமல் கிளம்ப வேண்டுமென்பது அவன் நிலைப்பாடு. ஆனால் இனி செல்வதற்கு கிழக்கே நிலமில்லை. திரும்பத்தான் வேண்டும். இதை செம்பவளம் எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறாள் என்ற கவலை போய், இங்கிருந்து செம்பவளம் கிளம்ப மாட்டாளோ என்கிற சிந்தனை முளைத்திருந்தது அவனுக்கு. அப்படி இளவரசி இங்கே தங்க முடிவெடுத்தால் உடன் இருப்பதா அல்லது தான் மட்டும் திரும்புவதா என்ற எண்ணப் போராட்டம் அவனுக்குள். டோரியனுக்கு வேறு உடல்நிலை சரியில்லை. பாவம் அவனுக்குக் கடைசி சில நால்கள் பயணம் ஒவ்வவில்லை. அவனை என்ன செய்வதென்ற குழப்பம் வேறு.

“மறைத்து வைப்பது கடினம்தான். போ இப்போது குயா நகருக்குத்தான் போயிருக்கிறான். அவன் வந்து சொல்லும் செய்தி கொண்டு அடுத்த என்ன செய்யலாமென்று யோசிப்போம். முதலில் இவர் உடல்நிலை நன்றாகத் தேறட்டும். அதுவரை நாம் எச்சரிக்கையோடும் மறைவாகவும் இருப்பதே நல்லது.”

“தீவு மக்களைப் பற்றிக் கவலையில்லை. அவர்கள் பொதுவாகவே உள்நிலத்து மக்களோடு அதிகம் கலப்பதில்லை. அதனால் செய்தி வெளியே போகாது. ஆனால்...”

“ஆனால் என்ன?”

“போ வரும்போது அவருக்கு உடையவர்களை அழைத்துவந்தால் அப்போது...”

“அனுப்ப மாட்டேன்.”

“செம்பா...”

“சங்கா! அந்த மனிதரின் உயிர் இனி என் பொறுப்பு. அவரது உயிருக்கு ஊறு விளையாது என்று முழுமையான நம்பிக்கை எனக்கு வரும்வரை அவர்கள் வணங்கும் அந்த மலைக்கடவுளே இறங்கிவந்து கேட்டாலும் அவரை யாரோடும் அனுப்பவதாயில்லை.” புன்சிரிப்பைப் பூசிக்கொண்டு வந்த தீர்க்கமான அவளது பதிலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செய்தி இருந்தது.

எழினியின் முகம் ஏதோ நம்பிக்கையில் புன்னகை பூக்க, சங்கனின் நெற்றி எச்சரிக்கையில் சுருங்க, கண்ணனோ இனி இவள் கலப்பயணத்தைத் தொடரப்போவதில்லையென்பதைப் பரிபூரணமாக உணர்ந்துகொண்டு பெருமூச்செறிந்தான்.

மாலைக்கதிரின் மஞ்சள் ஒளியில் செம்பவளத்தின் புன்சிரிப்பு ஒளி பொருந்தித் தெரிந்தது. தூரத்தில் வந்து ஓரமாஆ நின்று பாறையே சிம்மாசனம்போலக் கம்பீரமாக அமர்ந்திருந்த புது நிலத்து இளவரசியை வேடிக்கை பார்த்துச் சென்றுகொண்டிருந்த மக்களின் முகங்களிலும் கூடிப் பொருந்தியது அவள் முகத்தில் ஒளிர்ந்த அந்தச் செம்பவள ஒளி.

(தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism