Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 2 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

செம்பருத்தி... இவ சொன்னதெல்லாம் கேட்டதான? இன்னிக்கு வி­ஷமா பேசுனவன் நாளைக்கி மேல கைவைக்க மாட்டான்னு என்னடி நிச்சயம்?

வெந்து தணிந்தது காடு - 2 - பட்டுக்கோட்டை பிரபாகர்

செம்பருத்தி... இவ சொன்னதெல்லாம் கேட்டதான? இன்னிக்கு வி­ஷமா பேசுனவன் நாளைக்கி மேல கைவைக்க மாட்டான்னு என்னடி நிச்சயம்?

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

பட்டுப்பூச்சி பாதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே கண்கள் சிவந்துபோன சின்ராசு கூரையில் செருகி வைத்திருந்த அரிவாளை சரக்கென்று உருவிவிட்டான்.

“இன்னிக்கு அந்த ரேஞ்சரோட தலைய வெட்டி வனச் சரகம் ஆபீஸ் வாசல்லயே நட்டு வெச்சிட்டுதான் வீடு திரும்புவேன். இல்லன்னா நான் எங்கப்பனுக்குப் பொறக்கலடி!’’ - ஆவேசமாக கத்திய சின்ராசுவை அச்சத்துடன் பார்த்தாள் பட்டுப்பூச்சி.

அரிவாள் பிடித்த கையை வலுவாகப் பிடித்துத் தடுத்தாள் அவன் மனைவி செம்பருத்தி.

வெந்து தணிந்தது காடு - 2 - பட்டுக்கோட்டை பிரபாகர்

“வெட்டிப்புட்டு நீ ஜெயிலுக்குப் போ. தூக்குல போடட்டும். நானும் இவளும் வெ­ஷத்தக் குடிச்சிட்டு பின்னாலயே வர்றோம்’’ பொலபொலவென்று கண்ணீரை உதிர்த்தபடி அவள் சொல்ல...

“செம்பருத்தி... இவ சொன்னதெல்லாம் கேட்டதான? இன்னிக்கு வி­ஷமா பேசுனவன் நாளைக்கி மேல கைவைக்க மாட்டான்னு என்னடி நிச்சயம்? மானம் கெட்டுப்போயி வாழச் சொல்றியா?’’ என்றான் சின்ராசு அரிவாளின் மீதான தன் பிடியை விடாமல்.

“அந்தாளு எல்லா பொம்பளைங்களையும் தான் தப்பா பாக்கறான். நடந்துக்குறான். வயசு வித்தியாசம், வெவஸ்தை எதுவும் கெடையாது அவனுக்கு. போன வாரம் நம்மூரு தேனம் மாட்டயும் வம்பு செஞ்சிருக்கான். புள்ளைத் தாச்சி பொம்பளைன்னு கொஞ்சம்கூட ஈரமில்லாம ‘வயித்துல என்னடி முட்டிக் கிட்டிருக்கு, சாராயம் கடத்துறீயா?’ன்னு கேட்ருக்கான். மூணு நாளைக்கு உக்காந்து அழுதுட்டிருந்தா. அந்தாளு நம்மூரு மேலயே காண்டா இருக்கான். எல்லாம் இந்தக் காடையன் செஞ்ச வேலை!’’ என்றாள் செம்பருத்தி.

“ஏய்... என்ன புள்ள... தலைவரை பேரைச் சொல்லிக் கூப்புடுறே?’’

“என்ன பெரிய தலைவரு... ஆ ஊன்னா ஆளுங்களைத் திரட்டிக்கிட்டுப் போயி ஆர்ப்பாட்டாம் செஞ்சிட்டா வேலைக்காகுமா சொல்லு..? பத்தாததுக்கு அந்த வெட்டுக்கிளி பய வேற நல்லா கொம்பு சீவி விடுறான். வனச் சரகம் ஆபீஸ் முன்னாடி நின்னுக்கிட்டு தொண்ட கிழிய கோஷம் போட்டமே, ரோடு வந்துடுச்சா?’’ என்றாள்அவிழ்ந்துவிட்ட கூந்தலை மீண்டும் அள்ளிச் செருகியபடி.

“அப்படி செஞ்சதாலதான பத்திரிகைக்காரன் வந்து போட்டோபிடிச்சான். நம்ம பிரச்னை உலகத்துக்கு தெரிஞ்சுச்சில்ல?’’

“தெரிஞ்சு? உலகம் புறப்பட்டு வந்து பிரச்னையைத் தீர்த்துப்புடிச்சா? ஆபீசருங் களோட வம்புதான் பெருசாயிருக்கு. ரேஞ்சரு இவளை எந்த ஊருடின்னு கேட்டு, குறிஞ்சிக் காடுன்னு இவ சொன்னதுக்கப்புறம்தான் விஷமம் செஞ்சிருக்கான்.’’

“உனக்கு ரத்தம் கொதிக்கலையா? அப்படியே விட்ரலாங்கிறியா? அறைஞ்சன்னா பாரு...’’

“அப்பதான் உன் ஆத்திரம் தணியும்னா அறைஞ்சிக்கயேன். இதுபுதுசா என்ன? மரத்தை வெட்டிப் பழகி மனு­ஷன வெட்றதுக் கும் துணிஞ்சிட்டப் பாரு... அந்த வெறிதான் வேணாங்கறேன்.’’

“அப்ப என்னதான் செய்யச் சொல்றே? அதச் சொல்லு!’’

“ஊர்ல எல்லார்ட்டயும் கையெழுத்து வாங்கி கலெக்டரம்மாவப் பாத்து மனு கொடுப்போம். அந்தாளை இந்தச் சரகத்தை வுட்டு மாத்தல் போட்டுட்டாலே நம்ம பிரச்னை தீர்ந்துடும்யா. அத விட்டுட்டு வெட்றேன், குத்துறேன்னுட்டு...’’

“போடி வெவரங்கெட்டவளே! எந்த அரசாங்க அதிகாரியும் இன்னொரு அரசாங்க அதிகாரிய விட்டுக் கொடுக்கவே மாட்டாங்க.’’

“பொங்கல் விழாவுக்கு வந்தப்ப எவ்ளோ சகஜமா எல்லாரோடவும் பேசுனாங்க... பழகு னாங்க. நம்மளோட சேர்ந்து டான்செல்லாம் ஆடல? ரொம்ப நல்லவங்களா தான் பட்டுது.’’

“ஆமாம்ப்பா... ஆத்தா சொல்றதுதான் எனக்கும் சரியாப் படுது’’ என்று சமாதானமாகப் பேசிய பட்டுப்பூச்சி நைசாக சின்ராசுவின் கையிலிருந்த அரிவாளை இயல்பாக வாங்கி ஓரமாக வைத்தாள்.

“ஆத்தாளும் பொண்ணுமா என் வேகத்த அடக்கிப்புட்டிங்க. நம்ம ஆடுங்க பூராத்தையும் புடிச்சிட்டுப் போயிருக்கானே... அதுக்கு என்ன வழி?’’ என்றபடி சட்டையின் கை மடிப்புக்குள் வைத்திருந்த பீடியை எடுத்து பற்றவைத்துக் கொண்டான் சின்ராசு.

“அபராதம் கட்டிட்டு மீட்டுக்கச் சொன்னா ருப்பா’’ என்றாள் பட்டுப்பூச்சி.

“எதுக்கு அபராதம் கட்டணும்? ஒத்தப் பைசா கட்ட மாட்டேன்... சொல்லிட்டேன். காட்டுக்குள்ளாற ஆயிரம் தகிடுதத்தம் இவ னுங்க பண்ணுவானுங்க. ஆடுங்க கொஞ்சம் புல்லு மேய்றதுலதான் குறைஞ்சு போச்சா?’’

“அப்பா... தலைவருட்ட சொல்லி யோசனை கேப்பமா?’’

“நீ என்ன சொல்றே செம்பருத்தி?’’

“தலைவரைக் கலந்துக்காம இங்க என்ன செய்ய முடியும்? போய்ப் பேசுங்க. எப்பயாச்சும் அபூர்வமா உருப்படியான யோசனையும் சொல்வாரு உங்க தலைவரு.’’

“அவரு உனக்கும்தான் புள்ளை தலைவரு.’’

“எதாச்சும் ஒண்ணு பெருசா சாதிக்கட்டும். அப்புறம் ஒப்புக்கறேன் அவரை தலைவருன்னு.’’

“உங்கிட்ட பேசி மாளாது. நீ வா பட்டு.’’

பீடியைப் புகைத்தபடி சின்ராசு பட்டுப் பூச்சியை அழைத்துக்கொண்டு லேசான தூறலைப் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்து காடையன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

வெந்து தணிந்தது காடு - 2 - பட்டுக்கோட்டை பிரபாகர்

இருள் விலகி விடியலுக்கு வழிவிட்டுக் கொண்டிருந்தது. காட்டுமரங்கள், சிறு நதி, புல்வெளி, சமவெளியென்று சகலத்தையும் தடவி நலம் விசாரித்தது சில்லென்ற தென்றல். முன்தினத்தின் மழையின் ஈரம் முற்றிலும் காயாத மண் சாலைகளும், நீர்ப்புள்ளிகளுடன் செடிகளின் இலைகளும்.

உதயகுமார் மொட்டை மாடியில் உடற் பயிற்சிகளை முடித்துவிட்டு வியர்வை வழிய கைப்பிடி சுவரில் கையூன்றி நாலா பக்கமும் எழில்கொஞ்சிய இயற்கையைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆழமாக மூச்சிழுத்து வெளியேற்றும் சுவாசமே சுகமாக இருந்தது.

எல்லாப் பக்கங்களிலும் சின்னச் சின்ன குன்றுகளும் மரங்களும் பிரதேசத்தை அடை காத்தது. தூரத்தில் ஓர் உயரமான மலைக் குன்றில் நாமம் போட்டது போல தெரிந்த சின்ன அருவியை இங்கு வந்த இந்த ஒரு வாரத்தில் இன்றுதான் கவனித்தான். உடனே தனி உற்சாகம் எழுந்தது.

குற்றால அருவிகளில் குளித்த புத்துணர்ச்சி அனுபவத்தை அந்தத் தூரத்து அருவியைப் பார்த்த மாத்திரத்திலேயே மனதில் உணர்ந் தான். உடனே நெருப்பு மாதிரி பல நினைவுகள் அவன் மனதில் வரிசைகட்டிப் பரவின.

சீசன் தொடங்கிவிட்டது என்று செய்தி அறிந்தாலே குடும்பம் மொத்தத்தையும் பெரிய வேனிலேற்றி குற்றாலம் அழைத்துச் சென்றுவிடுவார் அப்பா. சமைக்கவும் எடுபிடிக்கும் ஆட்களையும் அழைத்துக் கொள்வார். அங்கே வழக்கமாகத் தங்கும் ஆறு அறைகள் உள்ள பெரிய வீட்டில் வாடகைக்கு எடுத்த சமையல் பாத்திரங்கள், அடுப்பு, காஸ் சிலிண்டர் உட்பட எல்லாமே தயாராய் இருக்கும்.

மதுரையிலிருந்து அக்காவும் குடும்பத்துடன் வந்துவிடுவாள். பண்டிகையின் குதூகலத்துடன் பத்து நாள்களும் கழியும்.

அதிகாலையில் எழுந்ததுமே எல்லோருமாகப் போய் ஓர் அருவிக் குளியல் போட்டுவிட்டு வந்துதான் சிற்றுண்டி. காபிக்குப் பிறகு, எல்லோருமாக உட்கார்ந்து குடும்பக் கதைகள் பேசப்படும்.

அப்பா ராஜபாளையத்திலிருந்து நடந்தே வில்லிபுத்தூர் வந்தது... அப்போது அவரிடம் இரண்டு வேட்டி சட்டையும், வெறும் பத்து ரூபாய் ரொக்கம் மட்டுமே இருந்தது...அவருடைய சித்தப்பா வீட்டில் வேலைக்காரன் மாதிரி நடத்தப்பட்டதைப் பொறுத்துக் கொண்டு பால்கோவா தொழிலைக் கற்றுக் கொண்டது... செய்யாத தப்புக்கு பழி விழுந்தபோது ரோஷமாக வெளியேறி தனியாகத் தொழில் தொடங்கியது என்று தன் வரலாற்றை சொல்லும்போது அது பத்து, பதினைந் தாவது தடவையாக இருந்தாலும்... ஒவ்வொரு தடவையும் சுவாரஸ்யமாக இருக்கும். யாராவது ஒருவருக்கு சில விஷயங்கள் புதிய தகவல்களாகவும் இருக்கும்.

எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிட பழக்கமான ஆள் முனியப்பன் வந்துவிடுவார். ஊரிலிருந்தே எடுத்து வந்த செக்கு நல்லெண்ணெயை வைத்து ஆண்கள் எல்லோருமே தேய்த்துக்கொண்டு அப்படியே போய் டமடமவென்று அறையும் அருவியில் நின்றால் நிமி டங்களில் தலை பஞ்சு பஞ்சாகிவிடும்.

கொலைப்பசியுடன் வீடு திரும்பி னால் சுடச்சுட சாப்பாடு தயாராக இருக்கும். சாப்பிட்டுவிட்டு சாய்ந் தால் இரண்டு மணி நேரத்துக்கு உலக்கை வைத்து இடித்தாலும் எழுந்திருக்க முடியாதபடி தூக்கம் அசத்தும்.

மாலையில் ஊரிலிருந்து செய்து எடுத்துவந்த தின்பண்டங்களை ருசித்தபடி நடக்கும் சீட்டுக்கட்டு விளையாட்டில் பெண்களும் கலந்து கொள்ள... அப்பா மட்டும் வெளியே வட்டமாக நாற்காலிகள் போட்டுக் கொண்டு அவரைப் பார்க்க வரும் ஊர் நண்பர்களிடம் அரட்டை யடிப்பார்.

மொட்டை மாடியில் ஒதுங்கி அண்ணன், மச்சான், தம்பி என்று உறவு வித்தியாசமெல்லாம் பார்க்காமல் விஸ்கியோ, பிராந்தியோ அளவோடு குடித்தபடி வேறு வகையான அரட்டை.

அங்கே நடப்பது அம்மா, அண்ணி, அக்கா எல்லோருக்கும் தெரியும். குழந்தைகளை மட்டும் மேலே வராமல் பார்த்துக்கொண்டு, சுடச்சுட ஆம்லெட் போட்டு பணியாட் களிடம் கொடுத்தனுப்புவார்கள்.

சைக்கிளில் வந்த வாட்சர் சுந்தரம் அகலம் குறைவான மண் பாதையில் வழி மறித்து படுத்திருந்த எருமை மாட்டைக் கிளப்ப ஒலிக்கச்செய்த மணியின் சத்தத்தில் நினைவு களிலிருந்து மீண்ட உதயகுமார், “சுந்தரம்.. அது நகராது. சைக்கிளை அந்தப் பக்கமே வெச்சிட்டு நடந்து வந்துடு’’ என்றான்.

சொன்னபடி சைக்கிளை நிறுத்தி விட்டு சுந்தரம் காய்கறிப் பையுடன் எருமையைச் சுற்றிக்கொண்டு வந்தார். வீட்டுக்கு வெளியே புறப்பட்ட படிகளில் உதயகுமார் கீழே இறங்கி வந்து கை நீட்டினான்.

பையைக் கொடுக்காமல், “காபி மட்டும் போட்டுக் குடுத்துட்டுப் போறனே சார்’’ என்று இயல்பாக வீட்டுக்குள் போனார் சுந்தரம்.

பின்னாலேயே வந்த உதயகுமார், “உன் வீட்டுத் தோட்டத்துல இயற்கை உரம் போட்டு விளையற காய்கறின்னு சொன்னதாலதான் எடுத்துட்டு வரச்சொன்னேன். அதுக்குண்டான காசு அவசியம் நீ வாங்கிக்கணும். உன்னை வேலை வாங்கறது தப்பு சுந்தரம். நீ புறப்படு.’’

“அட.. நீங்க வேற சார்... இது மேலதிகாரிக்கு செய்ற வேலை இல்ல.. ஒரு நல்ல மனுஷ­னுக்கு செய்ற சின்ன ஒத்தாசை.’’

சுந்தரம் அவராக பாக்கெட் பால் எடுத்து கத்தரித்து பாத்திரத்தில் கொட்டத் துவங்க...“அப்படின்னா உனக்கும் சேர்த்துப் போடு. ஆமா... நான் டெப்டி ரேஞ்சரா நம்ம சரகத்துல சேர்ந்து ஒரு வாரம்தான் ஆச்சி. அதுக்குள்ளேயே முடிவு செஞ்சிட்டியா நான் எப்படிப்பட்டவன்னு?’’

“ஒரு கத்தி மொன்னையா, கூரான்னு ஒரு வெட்டுலயே தெரிஞ்சி டாதா சார்? ஆபீஸ்ல எல்லாருக்கும் உங்களை பிடிச்சிப் போச்சி.’’

செய்தித்தாளை எடுத்துக்கொண்டு வயர் பின்னிய சேரில் அமர்ந்து கொண்ட உதயகுமார், “எல்லாருக்குமா?’’ என்று சிரித்தான்.

“புரியுது சார். ரேஞ்சருக்கு யாரைதான் பிடிக்கும்? அவருக்குக் குடும்பம் சரியில்ல சார். கல்யாணமாகி வந்த பொண்டாட்டி இந்தாளோட குடும்பம் நடத்தமுடியாதுன்னு ஆறேமாசத்துல போயிடுச்சி. கோர்ட்டுல கேசு நடந்துட்டிருக்கு. அந்தக் கடுப்பை எல்லார்ட்டயும் காட்டுவாரு. சார்... ஊர்ல உங்களுக்கு பால் கோவா வியாபாரம்னுகார்டு சொல்லிட்டிருந்தாரு.’’

“ஆமாம். ரங்கவிலாஸ் பால்கோவான்னு ரொம்ப ஃபேமஸ். முப்பது வரு­ம் முன்னாடி அப்பா ஆரம்பிச்சது. அம்மா, அண்ணன், அண்ணி, தம்பி எல்லாருமே சேர்ந்து குடும்பமா செய்றோம். நான் மட்டும்தான் படிச்சிட்டு இப்படி உத்தியோகத்துக்கு வந்துட்டேன்.”

“நல்லதுங்க சார். இங்க சமைக்க, துவைக்க ஆளு ஏற்பாடு செய்யட்டுமாங்க சார்?’’

“நல்ல ஆளாப் பாரு.’’

“உங்களுக்குக் கல்யாணம்..?’’

“வீட்ல பாத்துக்கிட்டிருக்காங்க.’’

உதயகுமார் காபி பருகத் துவங்கும்போது பைக்கில் வேகமாக வந்த கார்டு வேலுச்சாமி பதற்றமாக உள்ளே வந்தார்.

“தம்பி.. நம்ம ஆபீஸ் வாசல்ல காடையன் நூறு பேத்தோட வந்து தகராறு செஞ்சிட்டிருக்கான். வீச்சருவா, வேல் கம்புன்னு வெச்சிருக்கானுங்க. பெரிய கலவரமாயிடும் போலிருக்கு. ரேஞ்சருக்கு போன் போட்டேன். எடுக்கல. உங்க போனு சிக்னல் கிடைக்கல.’’

உதயகுமார் இரண்டே நிமிடங்களில் யூனிஃபார்ம் அணிந்து வேகமாகப் புறப்பட்டபடி, “என்ன பிரச்னைண்ணே? போய்க்கிட்டே சொல்லுங்க’’ என்றான்.

வெந்து தணிந்தது காடு - 2 - பட்டுக்கோட்டை பிரபாகர்

உதயகுமார் வனச்சரகம் அலுவலகத்துக்கு வேலுச்சாமியுடன் வந்து சேர்ந்தபோது... வாசலில் காடையன் தலைமையில் சின்ராசு, செம்பருத்தி, பட்டுப்பூச்சி உள்பட ஆண்களும், பெண்களுமாக ஏராளம் பேர் கோபா வேசத்துடன் திரண்டு நின்றிருக்க... தொண்டையின் நரம்புகள் புடைக்க வெட்டுக்கிளி, “ரேஞ்சர் ருத்ரபாண்டியனின் அராஜகம்’’ என்று குரல் கொடுக்க... எல்லோருமாக, ``ஒழிக!’’ என்று உரத்த குரலில் கத்தினார்கள். உதயகுமார் அவர்களை நெருங்கி கையமர்த்தி சமாதானமாக பேசத் தொடங்கினான். ரேஞ்சர் வந்து மன்னிப்பு கேட்டு ஆடுகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதில் அவர்கள் உறுதியாக இருந்த தால்... விலகி வந்து ரேஞ்சரை போனில் அழைத்து விவரம் சொன்னான்.

“மன்னிப்பெல்லாம் கேக்க மாட்டேன். ஒரு மயிரும் புடுங்க முடியாது அவனுங்களால. போலீஸுக்கு போன் பண்ணிருக்கேன். நான் வந்துட்டே இருக்கேன். கொத்தா தூக்கிட்டுப் போயி பத்து நாள் உள்ளே வெச்சாதான் வழிக்கு வருவானுங்க’’ என்றார் ருத்ரபாண்டியன் ஆவேசமாக.

இந்த விவகாரம் எதில் போய் முடியப்போகிறது என்று கொந்தளிப்புடன் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தினரை கவலையுடன் பார்த்தான் உதயகுமார்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism