Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 3 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

``வெவகாரத்த அமைதியா முடிக்க நெனைக்காம பெருசு பண்ணப் பாக்கறாரே... இப்ப எதுக்கு போலீஸ் வரணும்?’’

வெந்து தணிந்தது காடு - 3 - பட்டுக்கோட்டை பிரபாகர்

``வெவகாரத்த அமைதியா முடிக்க நெனைக்காம பெருசு பண்ணப் பாக்கறாரே... இப்ப எதுக்கு போலீஸ் வரணும்?’’

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

“மன்னிப்பெல்லாம் கேக்க மாட்டேன். ஒரு மயிரும் புடுங்க முடியாது அவனுங்களால. போலீஸுக்கு போன் பண்ணிருக்கேன். நான் வந்துட்டே இருக்கேன். கொத்தா தூக்கிட்டுப் போயி பத்து நாள் உள்ள வெச்சாதான் வழிக்கு வருவானுங்க” என்றார் போனில் ரேஞ்சர் ருத்ரபாண்டியன் ஆவேசமாக.

வெந்து தணிந்தது காடு - 3 - பட்டுக்கோட்டை பிரபாகர்

கொந்தளிப்புடன் அந்தக் கூட்டம் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்க, ‘இந்த விவகாரம் எதில் போய் முடியப்போகிறது’ என்ற கவலையுடன் பார்த்தான் உதயகுமார்.

அவனருகில் நின்ற கார்டு வேலுச்சாமியிடம் ரேஞ்சர் சொன்னதைப் பகிர்ந்ததும் அவர் உச்சுக் கொட்டினார். தொப்பியை எடுத்துவிட்டு பாதி நரைத்த தலையை பரபரவென்று தேய்த்துக்கொண்டார்.

‘`என்ன தம்பி இந்த மனுஷன்... ஒருபக்கம் அந்த ஆடுங்களை ஏலத்துல விடறதுக்கு ஏற்பாடு செஞ்சிட்டாரு. அதை எடுக்கறதுக்கு ரெண்டு பேரு வந்து உக்காந்திருக் கானுங்க.’’

``இது வேறயா...’’

``வெவகாரத்த அமைதியா முடிக்க நெனைக்காம பெருசு பண்ணப் பாக்கறாரே... இப்ப எதுக்கு போலீஸ் வரணும்?’’

‘`இதுவரைக்கும் சும்மா கோஷம் மட்டும்தான் போடறாங்க. திடீர்னு கல்லெடுத்து வீசறாங்கன்னு வைங்க. அப்ப கலவரமாயிடாது... நம்மகிட்ட இருக்கற இருபது, முப்பது பேத்தை வெச்சிக்கிட்டு இவங்களை எப்படி சமாளிக்க முடியும்’’ என்றான் உதயகுமார்.

வெட்டுக்கிளி ஆவேசமாகக் கத்தினான், ``எல்லாம் அப்படியே உக்காருங்க. நம்ம ஆடுங்களை ஏலத்துல விடப் போறாங்களாம். ஏலம் எடுக்கறவன் உசுரோட ஊர்ப் போய்ச் சேர்றானான்னு பாத்துட லாம்.’’

இப்போது கூட்டத்தினர் அனை வரும் அப்படியே அமர்ந்து எதிர்ப்பு கோஷங்களைத் தொடர்ந்தார்கள்...

‘`மன்னிப்பு கேள்! மன்னிப்பு கேள்!’’... ``ரேஞ்சரே, மன்னிப்பு கேள்!’’... ``திமிர் காட்டும் ரேஞ்சரே!’’... ``ஊரை விட்டு ஓடிப் போ!’’

``ஆனா, போலீஸ் இங்க வர்றது நல்லதில்ல வேலண்ணே! பிரச்னை பெருசாயிடுச்சின்னா நாமதான் டி.எஃப்.ஓ ஆபீசுக்கு பதில் சொல் லணும்’’ என்றான் கர்ச்சீப் எடுத்து நெற்றியில் வியர்வையை ஒற்றிக் கொண்ட உதயகுமார்.

‘`ஆடுங்களை அவுத்து வுட்டுட்டு, இனிமே இப்படி நடக்காதுன்னு இதமா பதமா சொன்னா கலைஞ்சி போயிடுவானுங்க தம்பி.’’

‘`அப்படியா? இப்ப ஆபீஸ்ல ரேஞ்சர் இல்ல. அடுத்து முடிவெடுக்கற உரிமை யாருக்கு?’’

‘`டெப்ட்டி உங்களுக்குதான்.’’

‘`அந்தக் கூட்டத்துல தலைவரையும் இன்னும் ரெண்டு மூணு முக்கியமான வங்களையும் கூப்புடுங்க. பேசிப் பார்ப்போம்.’’

உதயகுமார் அலுவலகக் கட்ட டத்துக்குள் சென்று தனது அறைக்குள் நுழைந்து, சுவரில் தொங்கிய காலண்டரில் தேதி கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நாற் காலியில் அமர்ந்தான்.

காடையனும், வெட்டுக்கிளியும், சின்ராசுவும் இன்னும் ஒருவரும் உள்ளே வந்தார்கள்.

காடையனின் கறுத்த முகத்தில் விழிகளின் வெண்மை மட்டும் பளீரிட்டு தனியாகத் தெரிந்தது. ஒருகாலத்தில் வெள்ளையாக இருந்து பழுப்பேறிய ஜிப்பாவும், கசங்கிய வேட்டியுமாய் இருந்த அவன் கழுத்தில் பச்சை, மஞ்சள், கறுப்பு என்று பல வண்ணங்களில் கயிறுகள் அழுக்கேறியிருந்தன. அதே மாதிரி இரண்டு மணிக்கட்டுகளிலும் பலவகையான கயிறுகளைக் கட்டியிருந்தான். நெற்றியில் குங்குமமும், சந்தனமும் தாயத்து சைஸில் வைத்து கிட்டத்தட்ட கோயில் பூசாரி மாதிரி இருந்தான்.

வெட்டுக்கிளியோ அடிக்கும் ரோஸ் கலரில் லுங்கி கட்டி, மேலே மன்றத்தில் கொடுத்த தளபதி விஜய் புகைப்படத்துடனிருந்த டிஷர்ட் அணிந்திருந்தான். கழுத்தில் கட்டம் போட்ட கைக்குட்டை வைத்திருந்தான். சிகரெட்டும் பீடியும் விடாமல் புகைத்து கறுத்துப்போன கீழுதடு தடித்து தனியாகத் தெரிந்தது. அடர்த்தியான மீசையை முறுக்கி முனைகளை மேல் நோக்கி வளைத்துவிட்டிருந்தான்.

வெந்து தணிந்தது காடு - 3 - பட்டுக்கோட்டை பிரபாகர்

‘`வாங்க’’ என்றான் உதயகுமார் புன்னகை யுடன் எழுந்துநின்று.

விரோத முகங்களுடன் ஆவேசமாக வந்த அவர்கள் ஒரு சீருடை அரசு அதிகாரி தங்களை எழுந்துநின்று வரவேற்பதை எதிர் பார்க்காமல் ஆச்சர்யத்தில் தடுமாறிப் போனார்கள்.

“எல்லாருமே குறிஞ்சிக்காடுங்களா?’’

“ஆமாம் சார்...’’

‘`உக்காருங்க’’ என்று தனக்கெதிரில் இருந்த இரண்டு நாற்காலிகளையும், சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த மர பெஞ்சையும் காட்டினான். அவர்களால் இதையும் நம்பவே முடியவில்லை.

‘`இல்லங்க சார்... நிக்கிறோம்.’’

‘`அட... உக்கார்றதுக்குதானே வாங்கிப் போட்ருக்கோம். இதெல்லாம் நீங்க கட்ற வரிப் பணத்துலதான் அரசாங்கம் வாங்குது. உக்காருங்க... இல்லன்னா... நானும் நிக்கிறேன்.’’

எழப்போன உதயகுமாரை காடையன் தடுத்து, “இல்லங்க சார். நீங்க உக்காருங்க. இப்படி மரியாதை கொடுத்து எந்த ஆபீசருமே பேசுனதில்லிங்க சார். அதான் ஆச்சர்யம். உக்காருங்கப்பா” என்றான். ஆனாலும் மேல்துண்டை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டான்.

‘`என் பேரு உதயகுமார். முதுமலைலேர்ந்து மாத்தலாகி இங்க டெப்டி ரேஞ்சரா சேர்ந்து ஒரு வாரம்தான் ஆச்சு. இந்த சரகத்துல இருக்கற பிரச்னைகளை இனிமேதான் தெரிஞ்சிக்கிட்டு சரி செய்யணும். எங்க காட்டிலாக்கா நடுவுல வந்ததுங்க. நீங்க இந்தக் காட்டுல பல தலைமுறையா வாழ்ந்துட்டிருக்கறவங்க. உங்களைப் பகைச்சிக்கிறதால ஒரு பிரயோஜனமும் இல்ல...’’ உதயகுமார் முடிப்பதற்குள் குரலுயர்த்தினான் வெட்டுக்கிளி. “நீங்க ஒருத்தர் தன்மையா பேசிட்டா சரியாப் போச்சா... உங்க ரேஞ்சர் விரைப்பா கெடுபிடி காட்றாரே... இல்ல... தெரியாமதான் கேக்கறேன்... காட்டோட எல்லை எங்க ஆரம்பிக்குது, எங்க முடியுதுன்னு ஆட்டுக்குத் தெரியுமா... அது பாட்டுக்கு புல்லு கண்ட எடத்துல மேயப் போயிடுது. சும்மா எங்களை விரட்டிக்கிட்டு...’’

“டேய்! எதுக்குடா சவுண்டு ஏத்தறே? சார் அமைதியாதானே பேசறாரு...’’ என்றான் காடையன்.

‘`பரவால்ல... கேக்கட்டும். நீங்கள்லாம் ஒண்ணு தெரிஞ்சுக்கணும். உங்க ஆடுங்களும் மாடுங்களும் சும்மா புல்ல மட்டும் மேய்றதில்ல. நாங்க புதுசா அங்கங்க நட்டுவைக்கிற புது செடிங்களையும் சாப்ட்ருது. அதனாலதான் அதுங்களை காட்டுக்குள்ள கொண்டாந்து மேய்க்காதிங்கன்னு சொல்றோம்.’’

‘`அப்படின்னா இதான் எல்லைன்னு வேலி கட்டுங்களேன். அதை ஏன் செய்ய மாட்டேன் றிங்க? காட்டுல ஒடிஞ்சி விழற சுள்ளிங்களை வெறகுக்காக பொம்பளைங்க பொறுக்கிட்டிருந் தாங்க. அதையும் கூடாதுன்னுட்டிங்க” என்றான் விரைப்பு குறையாத வெட்டுக்கிளி.

‘`தம்பி. உன் பேரென்ன?’’

‘`வெட்டுக்கிளி.’’

“தானா ஓடிஞ்சி விழற சுள்ளிங் களையும், செத்தைங்களையும் மட்டும்தான் பொறுக்கறாங்களா? அரிவா எடுத்துட்டுப் போயி நல்ல மரத்தோட கிளைங்களையும் வெட்டிக்கிட்டுப்போயி கடையில் காசுக்குப் போடலைன்னு சொல்ல முடியுமா... காட்டுக்குள்ள சந்தன மரம், தேக்கு மரம்னு எவ்வளவு காஸ்ட்லியான மரம்லாம் இருக்கு...’’

வெட்டுக்கிளி அதற்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் சற்றே தடுமாறி, “அது... ஏதோ ஒண்ணு ரெண்டு பேரு செய்யலாம். எல்லாருமா அப்படி செய்றாங்க?” என்றான் முனகலாக.

``அந்த ஒண்ணு ரெண்டு பேரு செய்றதாலதான் எல்லாருக்கும் தடை போட வேண்டியதா இருக்கு.’’

‘`சார்... இவன் சின்ராசு. இவன் பொண்ணுட்டதான் நேத்து உங்க ரேஞ்சர் தப்பா நடந்துக்கிட்டாரு. அது நியாயத்துல சேர்த்தியான்னு நீங்களே சொல்லுங்க’’ என்றான் கடையன்.

“இந்தக் காட்ல இருக்கற அரசாங்க சொத்துக்கு சேதமாச்சுன்னா அவரு தான் பொறுப்புங்க. அந்தக் கோபத்துலதான் அவரு...’’

‘`அதுக்காக வயசுப் புள்ளைக்கிட்ட சட்டையக் கழட்டிக் காட்டுன்னு கேக்கறது எந்த ஊரு நியாயம்? புள்ளை அழுதுட்டே வந்து சொன்னதும் துடிச்சிப் போய்ட்டேன். அரிவாளை எடுத்துட்டுப் புறப்பட்ட என்னை என் பொண்டாட்டிதான் கண்ல தண்ணி வுட்டு தடுத்துட்டா. இல்லன்னா நேத்து ஒரு கொலை நடந்திருக்கும். நாங்க சோத்துக்கு சிங்கியடிக்கிறவங்கதான். ஆனா மானம், மரியாதைய உசுரா நினைக் கிறவங்க... தெரிஞ்சிக்கங்க” என்று பொங்கிய சின்ராசுவின் இரண்டு கைகளையும் பிடித்த உதயகுமார்...

“உங்க ஆத்திரமும் கோபமும் ரொம்ப சரிதான். இனிமே இப்படி நடக்காது. உங்க ஆடுங்களை விட்டுடச் சொல்றேன். என் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து எல்லாரும் அமைதியா கலைஞ்சி போங்க’’ என்றான்.

அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“தம்பி பொறுப்பா அனுசரணையா பேசறப்ப நாம மல்லுக்கு நிக்கிறது சரியில்ல. அந்தாள்ட்ட சொல்லி வைங்க. இன்னொரு தரம் வாலாட்டுனா ஆபீசருன்னெல்லாம் பாக்க மாட்டோம், வாலை நறுக்கிடு வோம்... வாங்கப்பா...’’ என்றான் காடையன்.

அடுத்த சில நிமிடங்களில் ஒட்டுமொத்த கூட்டமும் கலைந்து போக... வேலுச்சாமி பரவசத்துடன், “தம்பி... அம்பது, அறுபது வயசுக்கு உண்டான பக்குவம்! பொறுப்பான புள்ளையா உங்களை வளர்த்திருக் காங்களே... அவங்களதான் கையெடுத் துக் கும்புடணும்” என்றார்.

‘`நீங்கதானே யோசனையே சொன்னிங்க... போய் வேலயப் பாருங்கண்ணே” என்ற உதயகுமார் ஒலித்த லேண்ட்லைன் போனை எடுத்து, “மருது காட்டூர் வனச்சரகம். சொல்லுங்க” என்றான்.

“சேலம் டி.எஃப்.ஓ ஆபீஸ்லேர்ந்து பேசறோம். யார் பேசறிங்க?’’

‘`டெப்ட்டி ரேஞ்சர் உதயகுமார் பேசறேன்.’’

‘`நம்ம ஆபீஸ் வாசல்ல எதாச்சும் கலாட்டாவா? ஒரே கூட்டமா இருக்குன்னு ஒரு பப்ளிக் போன் பண்ணிச் சொன்னாரு. டி.எஃப்.ஓ விசாரிக்கச் சொன்னாரு.’’

வெந்து தணிந்தது காடு - 3 - பட்டுக்கோட்டை பிரபாகர்

‘`ஒண்ணும் இல்லங்க சார். சின்னப் பிரச்னை. இப்ப சால்வ் ஆயிடுச்சி’’ என்று சொல்லி வைத்தான்.

காட்டுக்குள் ஒரு பகுதியில் புதிய மரக்கன்றுகள் நடப்படுவதை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த உதயகுமார் அருகில் இருந்த சுந்தரத்திடம் சுட்டிக்காட்டி, “அந்த அருவிக்கு என்ன பேரு சுந்தரம்?” என்றான்.

‘`குயிலருவி சார். அங்க குயிலுங்க ஜாஸ்தி. விடியக்காலையில போய் நின்னா ஒரே சமயத்துல அம்பது நூறு குயிலுங்க சேர்ந்து கூவுறதைக் கேக்க சுகமா இருக்கும்.”

‘`அந்த அருவில் குளிக்க முடியுமா?’’

‘`குளிக்கலாம் சார். ஆனா, ஒரு எல்லை வரைக்கும் பைக்குல போலாம். அப்பறம் ரெண்டு கிலோமீட்டர் நடந்துதான் போகணும். ஒழுங்கான பாதை கிடையாது. வழில பாசி படிஞ்ச பாறையெல்லாம் இருக்கும்.’’

‘`நாளைக்கு என்னை அங்க கூட்டிட்டுப் போறியா?”

“போலாமே சார்’’ என்று அவன் சொன்னபோது ஜீப் வந்து நிற்க... அதிலிருந்து ரேஞ்சர் ருத்ரபாண்டியன் வேகமாக இறங்கி இவர்களை நோக்கி வந்தார். கூடவே வேலுச்சாமியும்.

வந்த வேகத்திலேயே கத்தினார், “யோவ்... நம்ம சரகத்துக்கு நான் ரேஞ்சரா... நீ ரேஞ்சரா? யாரைக் கேட்டுய்யா ஆடுங்களைல்லாம் அவனுங்கக்கிட்ட ஒப்படைச்சே?’’

``இல்லன்னா அங்க பெரிய கலவரமாயிருக்கும் சார்.’’

‘`பத்து பேத்தோட வந்து கத்துனா பணிஞ்சி போயிடுவியா? அப்பறம் எனக்கு என்னய்யா மரியாதை இருக்கு? போலீஸ் வேன் வந்து திரும்பிப் போயிடுச்சி. இன்ஸ்பெக்டர் கரிகாலன் என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அம்பது பேரோட வந்தாரு தெரியுமா?’’

‘`பிரச்னைய சுமுகமா தீர்க்கறதுதான சார் முக்கியம்’’

‘`பெரிய புத்தரு! அவனுங்க பெரிய மனுஷங்க பாரு... உக்கார வெச்சிப் பேசிருக்கியே? நாளைக்கி மதிப்பானுங்களா நம்மளை?’’

‘`இப்பதான் சார் மதிக்க ஆரம்பிச்சிருக்காங்க”

‘`என்ன நீ எல்லாத்துக்கும் எதிர்த்துப் பேசிட்டிருக்கே? சரியில்ல... சொல்லிட்டேன்...’’

‘தகவல் தெரிஞ்சதும் அடுத்த நிமிஷம் நீங்க வந்து நின்னிருக்கணும் சார். அப்படி வந்திருந்தா உங்களைத் தாக்கியிருக்கலாம். அசிங்கமாயிருக்கும். எந்த வன்முறையும் நடக்காம சரி செஞ்சிருக்கேன். நீங்க இல்லாதப்ப முடிவெடுக்கற உரிமை எனக்கு இருக்கு. ஒரு நட்சத்திரம் தோள்ல அதிகமா இருக்கறதால ரொம்ப ஆடாதிங்க!’ என்றெல்லாம் சுடச்சுட சொல்லத் துடித்தவன் விரோதம் வேண்டாம் என்று அமைதியாக நகர்ந்து சென்றான்.

‘`சீனியர் ஆபீசர் பேசிட்டிருக்கேன்... ஒண்ணும் சொல்லாம நீ பாட்டுக்கு பெரிய புடுங்கி மாதிரி நகர்ந்து போனா என்னய்யா அர்த்தம்?’’ என்று அவன் தோளில் ருத்ரபாண்டியன் கைவைக்க...

ஆத்திரம் கொப்புளிக்கத் திரும்பினான் உதயகுமார்.

- தொடரும்