Published:Updated:

ஏழு கடல்... ஏழு மலை... - 17

ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
ஏழு கடல்... ஏழு மலை

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

ஏழு கடல்... ஏழு மலை... - 17

இந்தியாவின் கடைசி வீட்டில் இருந்து இரண்டு பயணங்கள்

Published:Updated:
ஏழு கடல்... ஏழு மலை
பிரீமியம் ஸ்டோரி
ஏழு கடல்... ஏழு மலை

தந்தை வழி (1951-பனிக்காலம்)

“நீ எங்கே பயணத்தை நிறுத்துகிறாயோ அதோடு உன் பூமியின் தூரம் முடிவடைகிறது.” - பராரிகள்

ஏழு கடல்... ஏழு மலை... - 17

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிகாலையில் கரியன் எழுப்பிக் கூப்பிட்டுப் போய் ஜன்னலின் வழியே காண்பித்தான். பத்துக்கும் மேல் ஈரமாய் ரத்தக்கறை படிந்த தொரட்டிகள் வீட்டின் பின் கட்டு சுவரில் சாத்தி வைக்கப்பட்டுக்கிடந்தன.பார்த்த மாத்திரத்திலேயே கொம்பையா வெலவெலத்துப்போய்விட்டார். அந்த நேரத்தில் மெல்ல புரண்டு படுத்த அந்தோணிமுத்து ஜன்னலின் அருகில் தீவிரமாக எதையோ பார்த்தபடி நின்றுகொண்டிருக்கும் இருவரையும் பார்த்தார். எழுந்து வந்து கொம்பையாவின் தோளைத் தொட்டார். கொம்பையா வெடுக்கெனத் திரும்பினார். அவர் திரும்பிய மாத்திரத்திற்கு கரியனும் திரும்பினான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``என்ன பாக்குறீக?''

``ஸ்... சத்தம் காட்டாம அப்படியே எதுத்த சுவத்துல பாரு.'' மூவரும் மீண்டும் ஜன்னல் வழியாக அந்தச் சுவரைப் பார்த்தார்கள். இப்போது சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்த தொரட்டிகளைக் காணவில்லை. கொம்பையா விறுவிறுவென பார்வையை இரண்டு புறமும் ஓடவிட்டார். அடுத்தடுத்த ஜன்னல்களுக்கு நகர்ந்து அதன் வழியே பார்த்தார். ``நொடிப்பொழுதுக்குள் யார் எடுத்துப் போயிருப்பாங்க?'' அவருக்கு யோசனையாயிருந்தது. அதற்குள் கரியன் அந்தோணிக்கு தொரட்டி விஷயத்தை விளக்கிக் கொண்டிருந்தான்.

கொம்பையா எதிர்ப்பக்க ஜன்னலுக்கு ஓடிப்போய்ப் பார்த்தார். அங்கேயும் யாரும் இல்லை. வீட்டின் முன்பகுதி வழியே கொண்டு சென்றிருக்க வாய்ப்பில்லை. மீண்டும் பின்கட்டு ஜன்னலுக்கு வந்து கூர்ந்து பார்த்தபடி நின்றார். பின்கட்டில் தூரமாய் ஆங்காங்கு மாட்டுத்தீவனத்திற்காய் பெரிய பெரிய வைக்கோல் படப்புகள் யானை முதுகுபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதன் ஒரு படப்பின் நுனியில் ஒரு சிறு பிசிராய் தொரட்டி முனைகளும், ஒரு கறுத்த முதுகும், வெள்ளையாய் உருமாக்கட்டின் துண்டும் தெரிந்தன. ஓரிரு நிமிடங்கள் முதுகும், தொரட்டி முனையும், உருமாக்கட்டும் சிறு சிறு அசைவிலிருந்தன. பின் எல்லாமும் மறைந்துபோயின. அந்தோணி முத்து அங்கே போய்ப் பார்க்கலாமாவெனக் கேட்டார். கொம்பையா கொஞ்சநேரம் தாமதிக்கலாம் என்று அவரை அமர்த்தினார்.

பொழுது நன்கு தெளிய விடிந்துவிட்டது. ஆத்தியப்பனும், மலையரசனும் எழுந்துகொள்ள ஜமீன் வீட்டு வேலையாள் ஒருவர் வந்து, கம்மாக்கரைக்குப் போயிட்டு வேகமா வந்து காலை ஆகாரம் சாப்பிட வருமாறும், சாப்பிட்ட பின் மாடு பார்க்க தொழுவத்திற்கு அழைத்துப் போகும்படிக்கு ஜமீன் தனக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் சொன்னார்.

எல்லோரும் கம்மாக்கரைக்குக் கிளம்ப வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். இரவில் தெரிந்ததைவிட ஜமீன் பங்களா பிரமாண்டமாயிருந்தது. நாலைந்து பெண்கள் அங்கங்கே சிதறிக்கிடக்கும் கூளங்களையும், இலைதழைகளையும் கூட்டிப் பெருக்கிக்கொண்டிருந்தார்கள். ஓரிருவர் மோட்டார் கார்களை பவுசாய், கவனமாய் நீர் தொட்டுத் துடைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 17

யாரோ ஜமீன் வீட்டு நுழைவாயில் வழியாக மூன்று யானைகளை ஓட்டிக்கொண்டு வந்தார்கள். யானைகள் நன்கு குளிப்பாட்டப்பட்டு, நெற்றியில் சுத்தமான முகப்படாம் சாத்தப்பட்டு தேவகடாட்சமாயிருந்தது. ஜமீன் பங்களா எதற்கோ தயாராவதுபோலிருந்தது. இரவில் குரைத்த நாய்களை வேலையாள் சங்கிலியைப் பிடித்தபடி எங்கயோ அழைத்துப் போய் க்கொண்டிருந்தான். அவை ஓடுவோமா, துரத்துவோமாவென்று திசைக்கொன்றாய் அவனை இழுத்துக்கொண்டிருந்தன.

வழியில் நடந்து போகும்போது எல்லாருடைய பார்வையும் தொரட்டி முனை தெரிந்த வைக்கோல் படப்பின் மீதே இருந்தது. அவர்கள் அதைக் கடக்கையில் ஏதாவது தடம் தெரிகிறதாவென ஒருசேர எல்லோருமே அதைத் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள்.

தூரத்திலிருந்து வேலையாள் குரல் கொடுத்தார். ``எய்யோ... அங்கிட்டு எங்க போறிங்க. கம்மாபாதைக்கு இப்படி மேக்காத்த வாசல் வழியா போங்க.''

``செத்த இருங்க... கூட யாராவது ஆள் அனுப்புறேன். லேய் வேங்கடம்...’’

வேறொரு வைக்கோல் படப்பின் பின்பக்கமிருந்து உயரமும் ஒடிசலுமான இளந்தாரி ஒருவன் வந்தான்.

``இவுகள அங்கிட்டு கம்மாபக்கம் கூட்டிப்போய்ட்டு வா.''

``ஆகட்டுங்க...''

அவன் நடந்து வருவதில் சிறு நளினம் தெரிந்தது. குரலிலும், ஒவ்வொரு கை அசைவிலும் சிருங்காரமிருந்தது. அரைவாசி குழைவான பெண்குரல். அவன் இடுப்பில் சகதி நிறத்தில் இப்போவோ, அப்பாவோ கிழிந்துவிடுவது மாதிரியான ஒரு வேட்டியிருந்தது. தோளில் குறுக்கிடையாக பெண்கள் முந்தானையிடுவது போல புத்தம் புதிதான நல்ல தும்பைப்பூ நிறத்தில் அகன்ற நீளமான வெண்துண்டு. அவனுக்கும் அந்தத் துணிக்கும் சம்பந்தமில்லாதது போலிருந்தது. எல்லோரும் அவனைப் பின் தொடர்ந்து மேற்குப் பக்கமாக நடக்கத் துவங்கினார்கள்.

கம்மாக்கரையில் ஆலும் அரசும் புளியமரமும் வரிசைகட்டி நின்றன. ஆலமரத்தில் பொதி பொதியாய் ஈன்ற மாட்டின் நஞ்சுக்கொடி கிளைகளில் கட்டிக் கிடந்தது. கொம்பையா உடன் வந்த வேங்கடத்திடம் கேட்டார். ``தொழுவத்துல எத்தன மாடுங்க நிக்கிது.'’

ஏழு கடல்... ஏழு மலை... - 17

``ஒரு காலத்துல ஐந்நூறுக்குக் குறைவில்லாம நின்னுச்சிங்க. இப்போ நூறு, நூத்தம்பதுதான் நிக்கிது.''

``ம்.”

``நீங்க என்ன மாடு வாங்க வந்தீகளா?''

``ஆமா''

``ஏன், ஜமீனு வித்துப்புட்டாரா?''

“ஐயோ... சாமி... என்ன வார்த்த சொல்லிட்டீக. அவரு எங்க விக்க. எல்லாம் அவரு கொடி வாரிசுதான். இளையவரு வித்து வித்து எல்லாத்தையும் அழிச்சிக்கிட்டிருக்காரு. இன்னும் கொஞ்ச வருசத்துல இந்த பங்களாவையும் வித்துக் கட்ட மண்ணா ஆக்கிருவான் அந்தக் கட்டையில போறவன்''- சொல்லி முடித்தபின் வேங்கடம் சுற்றும்முற்றும் யாரும் இருக்கிறார்களாவெனப் பார்த்துக் கொண்டான்.

அடிக்கொருதரம் தன் குறுக்கிடைத் துணியை பெண்கள்போல் இழுத்து விட்டுக்கொண்டான்.

ஏழு கடல்... ஏழு மலை... - 17

கொம்பையா அவன் தோள் துணியை கவனித்தபடியே இருந்தார். இன்னும் ஒருமுறை கூட நீர்காட்டியிருக்காத துணியென்பது கஞ்சி மொடமொடப்பில் தெரிந்தது.

இரண்டு நாள்களுக்கு முன்னிரவில் கொல்லங்கிணறு பண்ணையார் மகன் கழுத்தில் இந்த உருமாத் துணியைப் பார்த்தோமோவென்று திரும்பத் திரும்ப நினைவுபடுத்திப் பார்த்துக் கொண்டேயிருந்தார். அவருக்கு நினைவு பிடிபடவில்லை.

அவனிடமே கேட்டார். ``துணி நல்ல ரகமான துணியால இருக்கு. எந்த ஊர்ச் சந்தையில வாங்குனது?''

``நான் பொழைக்கிற பொழப்புக்கு இவ்வளவு வெலையில வாங்கி உடுத்துற மாதிரியா இருக்கு? காளிப் பய குடுத்தது. அவன்தான் எங்கயோ காட்டுக் கோயிலுக்குப் போன இடத்துல வேண்டுதல் துணி சாத்துனாக, உனக்கு எடுத்திட்டு வந்தேன்னு சொல்லி நேத்து குடுத்தான். இன்னிக்கி ஜமீனுக்கு யாரோ படம் பிடிக்கிறவங்க வாராங்கன்னு சொன்னாங்க, அதான் நல்லதா போட்டுட்டு வந்தேன்.''

``படம் எழுதவா?''

``படம் எழுத இல்ல. படம் பிடிக்க. ஒரு பெட்டில கறுப்புத் துணிய மூடி எதோ பண்ணுனா நம்மள அப்படியே அதுவே படம் பிடிச்சிருதாம். ஏற்கெனவே பெரிய ஜமீன் மதராசுக்குப் போனப்ப நாலஞ்சி படம் பிடிச்சி சொவத்துல மாட்டி வெச்சிருக்காரு. வெள்ளக்காரன் கண்டுபிடிச்சதாம்.''

``ம்.''

ஆத்தியப்பன் சொன்னார். ``அது போட்டா பிடிக்கிறது. ஒரு மிசினு நம்ம மூஞ்ச அப்படியே அச்சி அசலா எடுத்துக் குடுத்துரும். எங்கூர்ல எம்.எஸ்.பி.ராசான்னு ஒரு காப்பி எஸ்டேட்காரரு, நீதிக்கட்சி ஆளு. அவக வீட்ல இதையெல்லாம் பத்திருபது வருசத்துக்கு முன்னாடியே பாத்துருக்கேன்.''

``ஓ... வெள்ளக்காரன் இதெல்லாம் செஞ்சி வெச்சிருக்கானா?''

``இது வந்து எத்தன வருஷம் ஆகிப்போச்சி. நாடெல்லாம் சுத்துறீரு... உமக்குத் தெரியாதா?''

``நமக்கென்ன தெரியுது. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்த மாடு, சுழி, வாகடம்தான்.''

``ம்.''

அவர்கள் கம்மாக்கரைக்கு வந்தபோது இரண்டு பேர் வீட்டிலிருந்த நாய்களை கண்மாயில் குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லா நாய்களும் துடியான வேட்டை நாய்கள். அடி வயிறு ஒட்டிப்போய் தலையை எக்கிக்கொண்டு எப்போதும் விடைத்த காதோடு நின்று கொண்டிருந்தன.

வேங்கடம் `அவன்தான் காளி’ என்று ஒருவனைச் சுட்டிக்காட்டினான். கொம்பையா அவன் கண்களைப் பார்த்தார். அவன் கொம்பையாவின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு நாய்களைக் குளிப்பாட்டினான். அடிக்கொருதரம் அவன் திரும்பித் திரும்பி கொம்பையாவைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

கொம்பையாவும் மற்றவர்களும் குளிக்கக் கண்மாய்க்குள் இறங்கினார்கள். கொம்பையா சற்று தூரமாய் நின்றுகொண்டு அவன் கண்களைப் பார்த்தபடியே இருந்தார். அவன் சிறிது பதற்றமாவது தெரிந்தது. கரைக்கு ஏறி விசில் அடித்து நாய்களைக் கரைக்கு அழைத்தான்.

வேங்கடம் அவனிடம் பேச்சுக்கொடுக்கப் போனான். அவன் வெடுக்கெனத் திரும்பி வேகவேகமாக நடந்தான். நாய்கள் அவன் பின்னாலேயே ஈரத்தைச் சிலுப்பியபடியே ஓடின.

``வேத்து ஆம்பளைககூட நான் பேசுனா காளிக்குப் பிடிக்காது. அதான் இப்படி வெடுக்குனு போறான்.''

மற்றவர்கள் குறும்பாய்ச் சிரித்துக் கொண்டார்கள்.

அவர்கள் அங்கு சென்றபோது இரண்டு வெள்ளைக்காரர்கள் ஜமீன் வீட்டின் முற்றத்தில் நின்று புகைப்படம் எடுக்க, தகுந்த இடத்தைத் தேர்வு செய்து கொண்டிருந்தார்கள்.

ஜமீன் வீட்டு வேலையாட்கள் முழுக்க புகைப்படக்கருவியையும், அந்த வெள்ளைக்காரர்களையும் வேடிக்கை பார்த்தபடி நின்றார்கள்.

அப்போது நன்கு படாடோபமாய் மேல் உடை அணிந்த இளந்தாரி ஒருவன் அந்த வெள்ளைக் காரர்களோடு ஏதோ பேசப் போனான். கொம்பையா அவனைப் பார்க்க அவனும் கொம்பையாவைப் பார்க்க, அவன் முகம் இறுகிப் போனது. கொம்பையாவைப் பார்ப்பதிலிருந்து விலகி அவன் தன் பார்வையைத் திருப்பினான். அவன் மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்து அந்தக் கூட்டத்தில் காளியைத் தேடினான். காளி தூரத்தில் நின்றபடி படாடோபமாய் உடை அணிந்திருந்த அந்த இளந்தாரியைப் பார்த்தான். இருவரும் கண்களால் சிறு கோபமும் பயமும் கூடிப் பார்த்துக்கொண்டார்கள். இளந்தாரி கொம்பையாவை நோக்கிக் கழுத்தை ஆட்டியபடி ``அந்தாளப் பாத்தியா?'' என்பதுபோல் கண்களால் சைகை செய்தான். பின் அவன் காளியை அருகில் அழைத்து ரகசியமாய் ஏதோ பேசி அனுப்பினான்.

வேங்கடம் அவர்களை உணவு உண்ண அழைத்துப் போனான். காலை உணவுக்குக் கேழ்வரகுப் புட்டும் ஆப்பமும் செய்திருந்தார்கள். கொம்பையா கொஞ்சம் நீராகாரம் மட்டும் கிடைக்குமாவெனக் கேட்டு வாங்கிக் குடித்துக்கொண்டார். கரியனும் மலையரசனும் சாப்பிட்டு வந்தபோது அவர்கள் இருவரையும் தனியே அழைத்துப்போய் ஏதோ பேசினார். இருவரும் தலையாட்டிக்கொண்டார்கள்.

அவர்கள் மீண்டும் முற்றத்திற்கு வந்தபோது அங்கு ஜேஜேவென ஜனத்திரளும், கலகலவென பேச்சு சப்தமும், எல்லார் முகத்திலும் சந்தோஷமுமிருந்தன. நலிந்த உடலில் பட்டு உடைகளும் பொன் நகைகளும் மினுங்க ஜமீன் புகைப்படக்கருவியின் முன் அமர்ந்திருந்தார். சுற்றிலும் அவர் மனைவிமார்கள் ஐவரும் நன்கு உடுத்தி, புகைப்படக்கருவியின் முன் சிறு பயத்தோடும் கூச்சத்தோடும் நின்று கொண்டிருந்தார்கள், ஜமீனின் மூத்த மனைவிக்கு எப்படியும் ஐம்பதைத் தாண்டிய வயதிருக்கும். கடைசி மனைவிக்கு முப்பதுக்கு சமீபமாய்த்தானிருக்கும். ஜமீனின் மொத்தக் குடும்பமும் வரிசையாய் வந்து நின்றார்கள். நூற்றைத் தாண்டி ஆட்களிருந்தார்கள்.

வேங்கடம்தான் சொன்னான். ஜமீனின் ஐந்து மனைவிக்குமாய் சேர்த்து மொத்தம் பதினேழு பெண் மக்கள். இரண்டே இரண்டு ஆண் மக்கள் தான். அதில் படாடோபமாய் உடையணிந்து நிற்பவன் ஜெயவீரன் என்றும் அவன் ஜமீனின் மூன்றாம் மனைவியின் மகன் என்றும் சொன்னான். ``அப்போ இன்னொரு மகன் யாரு?'' என அந்தோணி கேட்டார். ``அதோ'' என ஜமீனின் மூத்த மனைவியின் அருகில் நிற்கும் சிறுவனை அடையாளம் காட்டினான்.

“ஜமீனின் மூத்தபொண்டாட்டிக்கு நெடுங்காலமா வாரிசு இல்ல. ஆனா ஜமீனோட மத்த எல்லாப் பொண்டாட்டிக்கும் பிள்ளையிருந்தது. மூத்த பொண்டாட்டிக்கு பலகாலமா இது பெருங்குறை. ஆண் வாரிசு பெத்துத் தந்ததால மூணாம் பொண்டாட்டிதான் எல்லா விசேஷங்களுக்கும் நடுநாயகமா செல்வாக்கா இருந்தாக. பல வருசத்துக்கு அப்புறம் காலம் போன காலத்துல இப்போதான் ஏழெட்டு வருசத்துக்கு முன்னாடி நாப்பத்தாறு வயசுல மூத்தவகளுக்கு ஆண்குழந்த பொறந்துச்சி. ஜமீனுக்கு ஏக சந்தோசம். இப்போ மூத்த பொண்டாட்டிக்கு வாரிசு வந்துட்டதால மூணாம் பொண்டாட்டியும் அவக உறவுக்காரங்களும் எரிச்சலாகி இந்த ஆறேழு வருசத்துல அந்த ஆண் குழந்தையக் கொல்றதுக்குப் பல தடவ முயற்சி பண்ணிட்டாக. ஜமீன் அந்தக் கொழந்தைய பொத்திப் பொத்தி எங்குனயோ குடுத்து வளத்திக்கிட்டு இருக்காரு. ஒரு வெள்ளக்காரரு சிபாரிசுல தூரமா மதராசுல தங்கி அந்தச் சின்னப் புள்ள படிக்கிறானாம். நாட்டுக்கு சுதந்திரம் வந்த பின்னாடி ஜமீனுக்கும் அதிகாரம்லாம் போயிடுச்சில. போதாக்குறைக்கு ஜமீனுக்கு மேலுக்கும் முடியாமப்போயிடுச்சி. அதான் இருக்குற சொத்தெல்லாம் வாரிசுகளுக்குப் பகுந்து குடுக்குறாரு. வேலக்காரங்க எல்லாத்துக்கும் ஏற்கெனவே ஜமீன் நிலத்துல கொஞ்ச கொஞ்சம் பகுந்து குடுத்துட்டாரு, இப்போ பிள்ளைகளுக்கு பாகப்பிரிவினை. மூணாம் பொண்டாட்டி மகன் ஜெயவீரன் தனக்குத்தான் மொத்தச் சொத்தும் வேணும். நான் பாத்து ஆளுக்கு இவ்வளவு அவ்வளவுன்னு குடுத்துக்குறேன்னு நிக்கிறான். மூத்தவங்களுக்கு ஆண் குழந்த இருக்குறதால அந்தக் குழந்தைக்கு போக மிச்சம் சொச்சம்தான் ஜெய வீரனுக்கு வரும்ங்கிறதால அவுக அப்பா மேல கோபமா இருக்கான்'' -வேங்கடம், ஜமீனின் நடப்பு கதையைச் சொல்லி முடித்தான்.

இப்போது வேலைக்காரர்கள் மற்றும் பண்ணை ஆட்களோடு ஜமீன் போட்டோ பிடிக்க எல்லோரையும் அழைத்தார். அதில் ஒரு முதிய வயது வேலைக்காரப் பெண் எவ்வளவு வற்புறுத்தியும் போட்டோ பிடிக்க மறுத்துவிட்டாள். ``அந்த போட்டோ பிடிக்கிற பெட்டிக்குள்ள வசிய மை வச்சிக்கிட்டு குட்டிச்சாத்தான் உக்காந்திருக்கு, அதுதான் உங்களை இப்படி வரஞ்சி குடுக்குதுன்னு அந்தப் பெண் மற்றவர்களையும் நிற்க விடாமல் தடுத்தார். மற்றவர்கள் அந்தப் பெண்ணை உதாசீனப்படுத்திவிட்டு படம்பிடிக்க நின்றார்கள். வேங்கடம் காளியின் அருகில் போய் பிரயாசையோடு நின்றுகொண்டான். வளர்ப்பு நாய்களையும் குதிரைகளையும், பின்பக்கம் தூரமாய் யானையையும் நிறுத்திப் புகைப்படம் எடுத்தார்கள். அப்போதுதான் ஜமீன் இவர்கள் ஐந்து பேர் மட்டும் தனியே நிற்பதைக் கவனித்தார்.

வேலையாட்கள் புகைப்படம் எடுத்துக் கிளம்பியபின் ஜமீன் கொம்பையாவை அழைத்தார். ``நீரு இன்னும் தொழுவத்துல மாடு பாக்கலையா?''

``இல்லைங்க.''

அவர் ஆள் விட்டு காளியை வரவழைத்தார். ``இவங்க ரெம்ப வேண்டப்பட்டவங்க. கேக்குறத பண்ணிக்குடு. குடுக்குறத வாங்கிக்கோ, செரியா?''

``ஆகட்டுங்க.''

காளி தொழுவத்தை நோக்கி நடந்தான்.

``டேய்... செத்த இரு. ஹாலிஸ் இவங்களையும் படம் பிடிக்கணும்.''

தான் அமர்ந்திருக்க, கொம்பையாவையும் மற்றவர்களையும் தன்னைச் சுற்றி நிற்க வைத்துக்கொண்டார். கொம்பையா தனது வளர்ப்பு நாயை அழைத்து, தன் காலடியில் நிறுத்திக்கொண்டார். என்ன நினைத்தாரோ ஜமீன் தானும் எழுந்து நின்றுகொண்டார்.

``தொழுவத்துல உங்களுக்குப் பிடிச்சத எடுத்துக்கோங்க. விலய பத்தி ஒண்ணும் நினச்சிக்கவேண்டாம். ஆனதக் குடுங்க.''

கொம்பையா கையெடுத்துக் கும்பிட்டார். முப்பது மாடுகள். அவ்வளவுதான் நல்லதாய்த் தேறின. கொம்பையா ஜமீனிடம் பணத்தைக் கையளித்துவிட்டு, கிளம்ப ஆயத்தமானார்.

ஜமீன் கொம்பையாவின் கையைப் பற்றிக்கொண்டு விடவில்லை. ``நீங்க மட்டுமாவது என்கூட நாலஞ்சி நாளக்கி விருந்தாளியா இங்க தங்கணும். மறுக்கக்கூடாது. யாருகிட்டயாவது மனசுவிட்டுப் பேசிப் பலகாலம் ஆகிப்போச்சி. இந்தப் பணம்கூட எனக்கு வேண்டாம். எடுத்துக்கோங்க. மாடுகள ஓட்டிட்டுப் போங்க.''

கொம்பையாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மலையரசனிடம் கேட்டார். ``ஒத்தையா நீ மாடுகள ஒட்டிக்கிட்டுப் போயி அவக ஊர்ல சேத்துக்குடுத்துருவியாடா?''

ஆத்தியப்பன் அந்தோணியையும் மலையரசனோடு விட்டுச் செல்வதாய்ச் சொன்னார். மலையரசன் தான் பார்த்துக் கொள்வதாய்ச் சொல்லி உச்சி வேளையில் மாடுகளோடு கிளம்பினான். கொம்பையாவோடு, கரியன் உடன் நின்றுகொண்டான்.

அன்று இரவில் உணவெடுத்து முடித்தபின் கொம்பையா ஜன்னல் ஓரமாய் நின்றபடி ஆழ்ந்த யோசனையோடு சுருட்டு புகைத்துக் கொண்டிருந்தார். சுருட்டை அணைத்துவிட்டு கரியனை அழைத்து ஏதோ பேசினார். தன் வீட்டிலிருந்த சிம்னி விளக்கை ஊதி அணைத்து வீட்டை இருட்டாக்கினார். நெடுநேரம் ஜன்னல் ஓரமாய் அமைதியாக நின்றுகொண்டிருந்தார். நேரம் பத்தைத் தாண்டியபோது ஜமீன் பங்களா முழுக்க அரவமுமில்லாமல் இருந்தது. வைக்கோல் படப்பின் பின்னால் மனித நடமாட்டமும் சிறு சிறு சப்தமும் கேட்கத் துவங்கின. சிறிது நேரத்தில் ஜமீன் வீட்டின் பின்பக்கமாய் நாலைந்து வில்வண்டிகள் வந்து நிற்க. நிறைய ஆட்கள் இருளுக்குள் ஓடிப்போய் அதில் ஏறுவது தெரிந்தது. கொம்பையா தன் காவற்கம்பை எடுத்துக்கொண்டு புளியமரக் காட்டின் திசைக்குக் கிளம்பினார்.

நள்ளிரவு புளியமரக்காடு ஒரு அரவமு மில்லாமல் இருளடைந்து கிடந்தது. கொம்பையா நடு மண்சாலையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது பத்திலிருந்து பன்னிரண்டு பேர் இருப்பார்கள், தலையில் சாக்கால் முக்காடிட்டு முகத்தை மறைத்தபடி கையில் தொரட்டிக் கம்புகளோடு எதிரில் ஓடி வந்துகொண்டி ருந்தார்கள். இருண்ட சாலையில் கொம்பையா நிற்பதை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. பத்தடி தூரத்திற்குள் வரும் போதுதான் முன்னால் சென்ற ஒருவன் விக்கித்து அரண்டுபோய் நின்றான். அவன் பின்னால் ஓடி வந்த எல்லோருமே அப்படியே சட்சட்டென்று நின்றார்கள். கொம்பையா ஒரு கையில் காவற்கம்பையும், மறு கையில் பெரிய வெட்டருவாள் ஒன்றையும் ஏந்தியபடியே நின்றுகொண்டிருந்தார். எல்லோரும் பின்வாங்கி அடியெடுத்து வைத்தார்கள்.

அதேநேரம் புளியமரத்தின் மேலிருந்து ஒருவன் தொரட்டிக் கம்பைக் கொம்பையாவின் தொண்டைக்குழியைக் குறிவைத்து மெல்ல கீழே நகர்த்தினான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`பிறந்த இடத்திற்கும் மறைந்த இடத்திற்கும் நடுவே எவ்வளவு தூரம் பயணித்தாய் என்பதுதான் வாழ்வு.’’ - - பராரிகள்

மகன் வழி ( 1977 - மழைக்காலம்)

வேம்புவும், உடன் வந்த கூட்டாளிகளும் வந்த சிறிய வேன் சாலையில் ஏறிச் செல்வதை கே.சியும் அங்கு நிற்கும் லாரி ஓட்டுநரும் பார்த்தார்கள். அவர்கள் சென்ற சிறிய வேன் தத்தித் தத்தி வேகம் குறைந்து நின்றுபோனது. ஆற்றுப் பாலத்திலிருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்த லாரி ஓட்டுநர் அந்த வேனை நோக்கி வேகமாக ஓடிவரத் துவங்கினார். லாரி ஓட்டுநர் ஓடிவருவதைக் கண்ட மற்றவர்கள் வேனிலிருந்து இறங்கி வேனைத் தள்ளத் தொடங்கினார்கள். வேன் டிரைவர் எவ்வளவு முயன்றும் வண்டி இயக்கமில்லாமல் செத்துப் போனதைப்போல் நின்றது. லாரி ஓட்டுநர் அருகில் வந்து வேனைத் தள்ளிக்கொண்டிருப்பவரை எட்டிப்பிடிக்கக் கையை வைத்த போது வேன் நல்லவேளையாக மீண்டும் ஸ்டார்ட் ஆனது. வண்டியைத் தள்ளி விட்ட இருவரும் தாவி ஏறுவதற்குள் அதில் ஒருவரை லாரி ஓட்டுநர் பிடித்து விட்டார். வண்டி மெதுவாக நகரத் துவங்க, லாரி ஓட்டுநர் அவரை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். லாரி ஓட்டுநர் கத்தத் துவங்க, தூரத்தில் கே.சியும், ஓட்டுநரோடு உடன் வந்தவனும் ஓடிவரத் துவங்கினர். வண்டியின் பின்பக்கம் ஏற்கெனவே ஏறியவர் பன்றியைப் பிடிக்கும் சுருக்குக் கண்ணியை லாரி ஓட்டுநரின் கழுத்தில் போட்டு இழுத்துக் கீழேதள்ளிவிட, பிடியை உதறிவிட்டு வேகமாக அவரும் தாவி ஏற, அந்தச் சிறிய வேன் வேகமெடுத்து இருளுக்குள் ஒரு புள்ளியாய்ச் சென்று மறைந்தது.

ஏழு கடல்... ஏழு மலை... - 17

கே.சி வந்து ஓட்டுநரின் கழுத்தில் மாட்டியிருந்த சுருக்கை எடுத்து விட்டார். கீழே விழுந்ததில் ஓட்டுநருக்குக் கையிலும் காலிலும் சிராய்ப்புக் காயங்களிருந்தன. ஓட்டுநர் கே.சியிடம் சொன்னார் ``நீங்க வண்டிய பயமில்லாம எடுத்திட்டுப் போங்க. பன்னி அதுவா விழுந்து சாகல. இவனுங்கதான் குறுக்க ஓட விட்ருக்கானுங்க. நான் அந்த வண்டிய விரட்டிப் போகப் போறேன். எப்படியும் வண்டி எங்கயாவது நிக்கத்தான் போவுது. விரட்டிப் பிடிச் சிருவேன்’’ வேகமாக அவன் வண்டியை நோக்கி ஓடி சாவியைத் திருகி முடுக்கினான்.

லாரிக்காரன் சொன்னது போலவே சிறிது தூரத்திலேயே வேன் பழுதாகி நடுச்சாலையில் நின்றது. இருளுக்கிடையே தூரத்தில் இரண்டு மஞ்சள் புள்ளிகள் நகர்ந்து வருவதைப் பார்த்து நால்வரும் வண்டியை அவசர அவசரமாக உருட்டி சாலையின் சரிவுக்கு இறக்கினார்கள். பின் நால்வரும் வேறு எங்கெங்கோ போய் ஒளிந்து நின்றுகொண்டார்கள். வேகமாக மஞ்சள் புள்ளி லாரியாக உருப்பெற்று அவர்களைக் கடந்து சென்றது. எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள்.

வேம்பு வேன்காரனை ஏசினாள். ``ஒண்ணுக்கு பத்துத் தடவ சரியா இருக் கான்னு பாத்துக்கோன்னு சொன்னேனா இல்லையா...ச்சே...’’ - பெரும் சிரமப்பட்டு வண்டியை மீண்டும் சாலைக்கேற்றி தள்ளிக் கிளப்பினார்கள். வேம்பு தூரத்தில் சாலையில் எங்காவது சூரனின் முகம் தெரிகிறதாவெனப் பார்த்தாள். ``வேணும்னா சூரன திரும்பிப் போயி தேடலாமா?’’ உடன் வந்தவர்களில் ஒருவர் சொல்ல. ``தேவையில்ல...அவன் திரும்ப வர வேண்டாம். எங்கயாவது தொலஞ்சி போகட்டும்.’’ -அவளுக்கு அழுகையாய் வந்தது. தன் முகத்தை சேலைத் தலைப்பால் மூடியபடி மூக்கை உறிஞ்சினாள்.

அவர்கள் சூளைக்கு வரும்போது எப்படியும் நள்ளிரவு 2 மணிக்குமேல் ஆகியிருக்கும். கங்கையன் பதறிக்கொண்டிருந்தார். வண்டி சூளைக்குள் நுழையும்போதுதான் அவருக்கு உயிரே வந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

``ஏ ஆத்தா... எம் மகளே, இனிமே என்னால முடிஞ்சா நான் போயி இந்த வேலைய பாக்குறேன்.இல்லாட்டி பேசாம கிடக்கலாம். உன்ன அனுப்பிட்டு நான் இங்க உயிர கையில பிடிச்சிக்கிட்டு கிடக்குறேன்.’’

வேம்பு எதுவும் சொல்லாமல் விறுவிறுவென வண்டியிலிருந்து இறங்கி மயிலாத்தா கோயில் நோக்கி நடந்தாள். கங்கையனுக்கு ஒன்றும் புரியவில்லை. ``என்னாச்சி?’’ உடன் போன பெரியவரிடம் கேட்டார். பெரியவர் நடந்ததைச் சொன்னார். ``அப்போ கொஞ்ச நாளைக்கு நாம இருளி விடுறத நிறுத்தி வைக்கணும். இந்த வண்டிய கொஞ்ச நாளைக்கி அங்க ஓரமா செடி செத்தைக்குள்ள மறச்சி நிப்பாட்டு.’’

டிரைவர் வேனைக் கொண்டு போய் செடிகளுக்குள் மறைத்து நிறுத்தினார். சாலையிலிருந்து இறங்கி வேன் சூளைக்குள் வந்த மண் தடத்தைக் கால்களால் மண்ணைப் பிரட்டி விட்டு மறைத்தார்கள்.

ஏழு கடல்... ஏழு மலை... - 17

வேம்பு நெடுநேரமாய் கண்களை மூடியபடி மயிலாத்தாவை வேண்டியபடி நின்றுகொண்டிருந்தாள். கங்கையன் அவள் அருகில் போய் ``வந்துருவான், ஒண்ணும் கவலப்படாத’’ என்று சொன்னார். ``நான் ஒண்ணும் அவன் திரும்ப வரணும்னு சாமி கும்பிடல. திரும்ப இங்க வந்திடக்கூடாதுன்னு தான் சாமி கும்பிடுறேன்’’ - அவள் விறு விறுவென தன் அறைக்குள் போய் தூங்கப்போனாள். எல்லோரும் அவரவர் இடத்திற்குப் போய் தூங்கினார்கள். வேம்பு வெறுமனே படுத்திருந்தாள். அவளுக்குத் தூக்கம் வரவில்லை. அதிகாலை நான்கு மணி இருக்கும். அவளுக்கு ஏதோ உள்ளுணர்வு உறுத்த எழுந்து வெளியே வந்தாள். வெளியே மரத்தடியில் யாரோ படுத்துக் கிடப்பதுபோல் தோன்ற, கையில் டார்ச்சை எடுத்துக்கொண்டு அங்கு வந்தாள். கொஞ்சம் தூரமாய் நின்றுகொண்டு அந்த உருவத்தின் மேல் அடிக்க, அங்கு சூரன் படுத்திருந்தான். அவள் முகத்தில் அடிக்கும்போது அவன் வெளிச்சம் பொறுக்காமல் கைகளால் கண்களை மறைத்தான்.

அவன் எழுந்து நின்றான். வேம்பு வேகமாக வந்து அவன் சட்டையைப் பிடித்து இழுத்தாள். ``சொல்லு, யாரு அவ... அவள ஏன் ஆத்துக்குள்ள இழுத்துக்கிட்டுப் போன... அவள என்ன பண்ணுன சொல்லு?’’ - அவளுக்கு மூச்சு வாங்கியது.

- ஓடும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism