Published:Updated:

இருளின் கைதி

இருளின் கைதி
பிரீமியம் ஸ்டோரி
இருளின் கைதி

மராத்தி மூலம் : பாபுராவ் பகுல் தமிழாக்கம் : லதா அருணாச்சலம் ஓவியங்கள் : ரவி

இருளின் கைதி

மராத்தி மூலம் : பாபுராவ் பகுல் தமிழாக்கம் : லதா அருணாச்சலம் ஓவியங்கள் : ரவி

Published:Updated:
இருளின் கைதி
பிரீமியம் ஸ்டோரி
இருளின் கைதி

றையப்போகும் கதிரவனின் கனிந்த அன்பினால் அலங்கரிக்கப்பட்ட பெண்போல இருந்த அந்தி, மேற்கு நோக்கி நகர்ந்து செல்ல, இருள் கவிந்தது. துயரார்ந்த அவ்வேளையில்தான் ராம்ராவ் தேஷ்முக்கின் உடல், சிதையில் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது. வெற்று மார்புடனிருந்த, கடும் பாறையைப்போன்ற திண்மையான தேகம்கொண்ட அவர் மகன் தேவ்ராம், சிதைக்கு மறுபுறம் திரும்பிக்கொண்டான். அனலின் வெப்பம், பிணத்தின் தாடைப்பகுதியில் இறங்கியதின் காரணமாக, மண்டையோடு வெடித்த சட சடவென்ற முறிவொலியைக் கேட்டதும் இறந்தவருக்கு நெருக்கமானவர்கள் துக்கத்தில் ஓலமிட்டனர். வலுவான சுத்தியல் போன்ற தன் கை முட்டியை மடக்கி, காற்றில் குத்துவிட்டான் தேவ்ராம். கேவல்களுக்கிடையே பற்களை நறநறத்துக்கொண்டே கத்தினான், “பானூ… உன்னை…”

ஒரு புலியைப்போன்று இரக்கக் குணமில்லாதவனாகவும், உணர்வற்றவனுமாகவே எப்போதும் அவனைப் பார்த்திருக்கும் மனைவி, வழக்கத்துக்கு மாறாக மிக விசித்திரமான முறையில் அவன் துக்கம் பாவிப்பதைக் கண்டதும் தானும் பெருங்குரலெடுத்துக் கதறத் துவங்கினாள். அந்திம யாத்திரையில் கலந்துகொண்ட அனைவரும், அரக்கனைப் போன்றவனின் துயரத்தையும், அவன் மனையின் ஒப்பாரியையும் கேட்டவுடன் தலைமீது போட்டிருந்த துணியை எடுத்துக் கண்களைத் துடைத்துக்கொண்டனர்.

இருளின் கைதி

கண்களில் நீருடன் துயரத்துடன் நின்றுகொண்டிருந்தபோதிலும், உருண்டு திரண்டிருந்த தேவ்ராமின் தேகத்தை மறைமுகமாக வெறித்துப் பார்த்தவர்களுக்கு அவன்மீது அச்சம் எழுந்தது. தந்தை இறந்த மாத்திரத்தில், அவனுள்ளிருக்கும் கட்டுக்கடங்காத கோபமும், பழிவாங்க வேண்டுமென்ற துடிப்பும், மாற்றவே முடியாத இறுதி முடிவை எடுக்கவைத்தன. ‘தந்தையின் மரணத்தால் விதவையான பானுவை’ அவன் கொல்ல வேண்டுமென்பதே அது. எதிரிகளைக் குத்திச் சாய்க்கும் முன்பு கொம்புகளைத் தாழ்த்தும் எருமைக் கிடாய்போல, தலையை முன்னே நீட்டிக்கொண்டு நடந்தான். கொலைசெய்ய வேண்டும் என்னும் வெறி அவனுக்குப் புதிய வேகத்தைக் கொடுத்தது. அவனுடைய முதுகும் கைகளின் இறுகிய தசைநார்களும் தோல்சட்டைக்குள் சிறைப்பட்ட பாம்பின் உடலைப்போல நெளிந்தன.

இறுதி ஊர்வலத்தில் கூடியிருந்தவர்கள், தேவ்ராமைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாலும், கடிவாளமற்று அலையும் அவன் பெருஞ்சினம் அவர்களுக்குப் பெரும்பீதி ஏற்படுத்தியது. அவனுடன் இணையாகச் செல்ல ஓடவேண்டியிருந்தது. ஆனால், ஒருவருக்குக்கூட அவனைத் தடுத்து நிறுத்தும் துணிவில்லை. அவனுடைய ஆத்திரப் புத்தியையும், வாலிப முறுக்கையும் பற்றி அனைவரும் அறிவார்கள். எலும்பை உடைத்துத் தூளாக்கும் அவன் முஷ்டியைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தார்கள். அதனால், எதுவும் பேசாமல் தங்கள் நாவைப் பற்களின் பின்னே பத்திரமாகச் சுருட்டிக் கொண்டார்கள்.

ஆற்றுப்படுகையின் சரளைக் கற்களைக் காலடியில் அரைத்தவாறு நடந்து போய்க்கொண்டிருந்தான் தேவ்ராம். அவன் பாதங்களின் எடை தாளாது உடைந்தும் நொறுங்கியும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தின மணற்துகள்கள். சிறு கூழாங்கற்கள் சிதறி ஓடி தங்களைப் பாதுகாத்துக் கொண்டன. அனைத்திற்கும் மேலாக, வன்மம் தீர்க்கும் அவன் ஆத்திரம் நொடிக்கு நொடி தீவிரமாக வளர்ந்துகொண்டிருந்தது. பானுவின் உடலைக் கணக்கற்ற துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கும் ஆசை, தந்தைக்கு அஞ்சி கடந்த 20 ஆண்டுகளாக நெஞ்சில் புதைத்துவைத்திருந்த அந்த எண்ணம் தீப்பிழம்பாகச் சுடர்விட்டு எரிந்தது.அவளுடைய கவர்ச்சியான, அழகான, மென்மையான புட்டங்களை எட்டி உதைக்க வேண்டும்போல இருந்தது. கணுக்கால் வரை நீண்டு தொங்கும் செழித்த பட்டுபோன்ற கேசத்தைப் பற்றி இழுத்து, வெறியுடன் அவளை உலுக்க வேண்டும் என்று கைகள் பரபரத்தன. அவள்மீது தன் கைகள் படும் தருணத்திற்காகப் பொறுமையின்றி அவன் துடிப்பதைக் கண்ட கூட்டம், அவனுக்காக வேதனைப் பட்டது. துக்கத்திற்காக வந்தவர்கள் அனைவரும், தேவ்ராமை பானு வசியப்படுத்திவிட்டாள் என்று நிச்சயமாக நம்பினார்கள். ஏதோ மாய மந்திரத்தை அவன்மீது ஏவியிருக்கிறாள் என்று நினைத்தனர். இந்த உறுதியான நினைப்பே சிதையில் இன்னும் எரிந்து கொண்டிருக்கும் உடலைக்கூட உதாசீனம் செய்துவிட்டு அவன் பின்னால் அவசரமாக ஓடவைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இருளின் கைதி

பெரும் அச்சத்தில் உழன்றுகொண்டிருந்த கூட்டத்தின் மத்தியில்தான் இளமையான, மெல்லிய உடல்வாகுடைய கமலாவும் இருந்தாள். கட்டியிருந்த பட்டுச்சேலை மடிப்புகள் அவ்வப்போது காலைத் தட்டிவிட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டிருந்தாள். தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கணவனைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தாள். இரண்டு நாள்களாக அழுத அழுகையும், பட்டினியும் வாடிப்போன கொத்தமல்லிக் கட்டுபோல அவளைத் துவள வைத்திருந்தன. ஆனாலும், ஒருவாறு சமாளித்துக்கொண்டு நடந்தாள். அந்தச் சூழல் ஏற்படுத்தியிருந்த விசித்திரமான பரபரப்புக்கிணையாக, கணவனின் வெறியும், பானுவின் மீதிருந்த பயமுமே அவளைச் செலுத்தியது. கணவனை வெல்வதற்காக பானு ‘கண்டோபா’ பிரார்த்தனை செய்திருப்பாளோ எனும் சந்தேகம், கமலாவின் மனதைப் புலிபோலத் தாக்கி அரித்துக்கொண்டிருந்தது.

கமலாவின் தந்தை, அவளைவிடவும் பயந்துபோய்க்கிடந்தார். அவளுடைய வாழ்க்கை என்னவாகுமோ எனக் கலக்கமுற்றிருந்தார். சிவந்த நிறமுடைய, பளபளக்கும் மொட்டைத்தலை வெறுமையாக இருக்க, தலைப்பாகையையும் காலணிகளையும் கையிடுக்கில் வைத்துக்கொண்டு முனகியவாறு தள்ளாடிக் கொண்டே நடந்துவந்தார். பாதையில் கிடந்த கூழாங்கற்களும் பொடிக்கற்களும் பலவீனமடைந்திருந்த அவரது பாதங்களைத் தட்டிவிட்டன. அவ்வப்போது தடுமாறினாலும் தவறிவிழாமல் பார்த்துக் கொண்டார். அவரால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை; மகள்மீது கொண்டிருக்கும் பாசம், கால்களையும் உயிரையும் பணயம்வைத்து நடக்கவைத்தது.

அவர்களைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த தான்தோன்றித்தனமான கும்பல், பானுவின் பெயரை முணுமுணுத்துக் கொண்டு வந்தது. அழகான பெண்ணுருவில் வந்த பிசாசு அவளென்று அனைவரும் உறுதியாக நம்பினார்கள். பணத்தின் மீதுள்ள பேராசையால் தேவ்ராமின் மீது மாய மந்திரத்தை ஏவியிருக்கிறாள், எந்த நேரத்திலும் மண்ணில் விழுந்து வாயில் ரத்தம் கக்கி அவன் இறந்துவிடப்போகிறான் என்பது நிச்சயம், என்னும் அச்ச உணர்வு அவர்கள் உடலில் சரசரவென ஊர்ந்தது.

கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டிருந்த தேவ்ராம் சட்டென்று அசையாமல் நின்றான். கொடிய பேய்கள் கண்களுக்குப் புலப்படாத கைகளால் அவனை அள்ளி விழுங்கியதுபோல உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. பலம் பொருந்திய அவனுடைய முதுகுப்புறத்தின் மீதே பார்வையைப் பதித்திருந்த இரங்கல் கூட்டத்தின் நடை, திடீரென்று தடைபட்டுப்போனதில் ஒருவர்மீது ஒருவர் சரிந்துவிழுந்தனர். ஆனாலும் அவன்மீது நிலைத்திருந்த பார்வையை மட்டும் திசைதிருப்பாமல் அப்படியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ‘இதோ, இப்போதே, தேவ்ராம் வாயில் ரத்தம் கக்கப் போகிறான், தலை மயிரைப் பிடித்து இழுக்கப் போகிறான், உடலை முறுக்கிக்கொண்டு நிலத்தில் விழுந்து, வலியிலும் வேதனையிலும் துடிதுடித்துச் சாகப்போகிறான்’ என்றெல்லாம் நினைத்துக்கொண்டார்கள். ஒவ்வொரு முதுகின் ஒவ்வொரு மயிரும் கிலியில் குத்திட்டு நின்றது. வாழும் வாழ்வே தகுதியற்றது என்பதாக உணரச்செய்யும் பேரச்சம். சுவாசிப்பதுகூடக் கடினமாக இருந்தது. தேவ்ராம், கைகளை இடுப்பில் ஊன்றிக்கொண்டு, கால்களை அகட்டி, கிராமத்தை நோக்கித் தலையைத் திருப்பிக்கொண்டு நின்றான். கழுத்தை விறைத்தவாறு வானத்தை அண்ணாந்து பார்த்தான். சேவலைப்போல உடலைக் குலுக்கிக்கொண்டு சுற்றும் முற்றும் திரும்பி கைக்கு வாகான கல்லைத் தேடினான். கிடைத்த ஒன்றைப் பெயர்த்தெடுத்து பெருத்த குரலெழுப்பியவாறு, அசையாமல் நின்றுகொண்டிருக்கும் கூட்டத்தை நோக்கித் திரும்பினான். தங்கள் தலைமீது அந்தக் கல் பட்டுவிடாமலிருக்க அனைவரும் ஆற்றுநீரில் வளரும் தாவரங்கள்போல வளைந்து பின்வாங்கினார்கள். அந்த நேரத்தில், தலையைக் கைகளால் தாங்கிப் பிடித்துக்கொண்டே சட்டென்று கீழே அமர்ந்தாள் கமலா. பின், முழங்கால்களுக்கு நடுவே தலையைப் புதைத்துக் கொண்டவளிடமிருந்து, எரிமலையின் வாயிலிருந்து வெடித்துச் சிதறும் அக்கினிக் குழம்புபோலப் பெருங்கேவல் எழுந்தது. “பானு, முரலி, அரக்கியே, நீ என் வாழ்வை நாசமாக்கிவிட்டாய்! கடவுள் உனக்கும் இதே தண்டனை தரப்போகிறார்”

“பானேய்!” கையில் கல்லோடு தேவ்ராம் மீண்டும் மீண்டும் அவள் பெயரைச் சொல்லி கர்ஜித்துக்கொண்டே கிராமத்தின் திசைநோக்கி வேகமாக நடந்தான். இந்த அவல நிலைமைக்கு அவனை ஆளாக்கிவிட்ட பானுவைப் பற்றி ஒவ்வொருவரும் விஷம் கக்கினார்கள்.

“அந்தச் சனியனை இங்கே கூட்டிக்கொண்டு வாருங்கள். அவள் ஆடையை அவிழ்த்துவிட்டு, கிராமத்தைச் சுற்றி அம்மணமாக ஊர்வலம் கொண்டு சொல்ல வேண்டும்” என்றார் கன்னோஜ் பாட்டீல்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இல்லையில்லை, அவள் ஆடையை அவிழ்த்துவிட்டு மாடுபோலக் கட்டிவைத்து சவுக்கால் விளாசியபின் அப்படியே சிதைக்கு இழுத்துச் செல்ல வேண்டும்” கடுஞ்சினத்தில் மொழிந்தார் சத்வா சோனார்.

“நல்ல யோசனை, நல்ல ரசமான வேடிக்கை காணக்கிடைக்கும். இந்தமுறை அந்த வேசியைத் தடயம் இல்லாமல் அழிக்க வேண்டும். அவள் ‘சதி’யை மேற்கொண்டாள் என்று என்னால் சொல்லிவிட முடியும்” பானுவின் மேனி வனப்பைக் காணும் பேராவலில் பேசிக்கொண்டிருந்தார் காவல் அதிகாரி பாட்டீல்.

“ஆமாம், அவளை எரிக்க வேண்டும்” கடுஞ்சீற்றத்துடன் சொன்னார் குல்கர்னி.

இருளின் கைதி

“அவளைப் பொசுக்கிவிடலாம்” சினத்துடன் குரல்கள் எதிரொலித்தன.

“இவளைப்போன்ற சூனியக்காரிகளுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைதான் இது. இல்லையென்றால் இந்தக் கலியுகத்தில் பெண்கள் நம் கையைவிட்டு நழுவி விடுவார்கள். வித்தல் ஆண்டவர் என்ன விதித்தாரோ அதை மீறிவிட்டாள் இவள். இருபது வருடங்களாகக் கிராமத்தை அசுத்தப் படுத்திக்கொண்டிருந்தாள். தேஷ்முக் சுற்றத்திற்கே அழிவைக்கொண்டுவந்தவள். அங்கு யாரையுமே நிம்மதியாக வாழ விடவில்லை. ராம்ராவை வீட்டைவிட்டு அகலாமல் பிடித்துவைத்திருந்தாள். சாகும் வரை அவர் வெளியே தலைகாட்டவில்லை. வீட்டின் கடைசி வாரிசு தேவ்ராம்?! அவன் புத்தி பேதலிக்குமாறு செய்துவிட்டாள். அப்புறம் அவளுடைய சொந்தப்பையன்... தௌலத்? அவனையும் பைத்தியகாரனாக்கி விட்டாள். ஒரு இடத்தில்கூட நிற்காமல் இங்கேயும் அங்கேயும் காற்றைப்போல ஓடிக்கொண்டு திரிகிறான். நாளெல்லாம் சுற்றி அலைந்துவிட்டு ராத்திரியில் எங்காவது மலைக்குப் பக்கத்திலோ, வயல்வரப்பிலோ, ஓடைக்கரையிலோ கிடைத்த இடத்தில் தூங்கப் போய்விடுகிறான். யாராவது கேள்வி கேட்டால், கோடாரியால் தாக்கத் தயாராக இருக்கிறான். துயரத்தில் முணுமுணுத்துக் கொண்டிருந்த சுதாமா பேச்சை முடிக்கும்முன் குறுக்கே புகுந்தான் ருஞ்சா, “சுதாமா, கடந்த பதினைந்து நாள்களில் மட்டும் அந்தப் பைத்தியக்கார முட்டாள் பதினைந்தாயிரம் சண்டை இழுத்திருப்பான். நேற்று வயதான விதவை பாண்டுவின் பூஜை மாடத்திற்கு உள்ளேயே நேராகப்போய் நின்றுகொண்டு குடிக்கத் தண்ணீர் வேண்டுமென்று கேட்டிருக்கிறான். அவள் தரவில்லையென்று சொன்னதும் அங்கேயும் ரகளை செய்திருக்கிறான்.”

“அந்த முதியவளையும் அடித்து விட்டானா?”

“என் உயிரே போனாலும் உனக்குத் தண்ணீர் தரமாட்டேனென்று அந்தக் கிழவி சொல்லிவிட்டாள்.”

“என்னவெல்லாம் நடக்குது!”

“அந்த வேசி எல்லாவற்றையும் அழித்து விட்டாள். நாளைக்கு மாங், மஹர், சமர் எல்லோரும் பிராமணர்களின் வீட்டுக்குப்போய் குடிக்கத் தண்ணீர் கேட்கப் போகப்போகிறார்கள் பாரேன். சாதி, சம்பிரதாயங்களையெல்லாம் அந்தப் பரத்தை களங்கம் செய்துவிட்டாள்.” பானுவிற்கு எதிரான புகார்களை அடுக்கிக்கொண்டே போனான் சுதாமா.

பானுவின் நடத்தையைப் பற்றிக் கேள்விப் பட்டதிலிருந்து அவர்களைப்போலவே கோபத்தில் கொதித்துக்கொண்டிருந்தார் நானா. அவளுக்கு விடப்படும் கொடிய சாபங்களைச் செவிமடுத்தவர், “வாயை மூடிக்கொண்டு சற்று சும்மா இருக்கிறீர்களா? இப்படியே வாயில் அடுக்கிக்கொண்டிருந்தால், நம்முடைய வேட்டியை உருவி, சேலை கட்ட வைத்துவிடுவாள். நம்மையெல்லாம் கோழைகளாக்கி, பொட்டைகளைப்போல கைதட்டி ஆடவைத்துவிடுவாள். இல்லாவிட்டால் குருடாக்கிவிடுவாள். அதனால் வாயை மூடுங்கள்” என்று எச்சரித்தார்.

“நானா சொல்வது சரிதான்” பயந்துபோய் கத்தினான் சங்கர்.

அதுவரை பானுவை ஆத்திரத்தின் கூரிய கத்தியால் குத்திக் குதறிக்கொண்டிருந்த ஐதீகக் குழு, அவளுடைய ஆற்றலால் தண்டிக்கப்படுவோமோ என உடனே பயந்துபோனது. இருபது வருடங்களாக அந்தக் கிராமம் யாரை வெறுத்து ஒதுக்கி வைத்திருந்ததோ அவளுடைய அமானுஷ்ய சக்தியைப் பற்றிய வதந்திகளைக் கேட்டுத்தான் எதுவும் செய்யாமல் விட்டுவைத்திருந்தார்கள். இல்லாவிட்டால் அவள்மீது ராம்ராவ் கொண்டிருந்த ஆசையைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் கிராமத்துக்குள்ளேயே அனுமதித்திருக்கமாட்டார்கள். ஆனால், அவளோ மாளிகையில் செருக்குடன் வாழ்ந்தாள். தன் கையாலேயே ராம்ராவுக்கு உணவளித்தாள்; தேவ்ராமின் அன்னையின் இறப்புக்குக் காரணமானாள்; அவனின் முதல் மனைவி உட்பட, குடும்பத்தினரின் மற்ற உறுப்பினர்களையும் விரட்டிவிட்டாள். தேவ்ராமின் முதல் மனைவி, அங்கு நடக்கும் கூத்துகளைக் காணச் சகியாது, அவள் பிறந்தகத்துக்குப் போய்விட்டாள். அவளால் இரண்டாம் மனைவியான கமலாவின் நிலை, பூஜ்ஜியத்துக்குச் சமானமாகத் தள்ளப்பட்டது. ஆசார சீலம் மிக்க அந்தக் கிராமம் முழுவதுமே அவளுடைய ரத்த தாகத்தில் இருந்தது. இப்போது தேவ்ராம் உயிரோடு மிஞ்சுவானா அல்லது இறந்துவிடுவானா என்று அறிந்துகொள்ளும் ஆவலிலும் பானுவைப் பற்றிய பயத்துடனும் அவனைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார்கள்.

கிராமத்தில் தேவ்ராம் நுழைந்ததும் நிலைமை சற்று சிக்கலானது. அவன் தங்களையும் அடித்து நொறுக்கிவிடுவானோ என்னும் அச்சத்தில் அத்தனை பேரும் மறைந்தும் ஒளிந்தும் கொள்ளத் தொடங்கினார்கள். விரைந்து வீட்டிற்குள் சென்று பதுங்கிக்கொண்டார்கள். ஆனால், வெறியில் பிசாசைப்போலவே மாறிவிட்ட தேவ்ராம், யாரையும் கண்டுகொள்ளாமல் முன்னேறி நடந்துகொண்டிருந்தான். எண்ணங்களில் பானுவின் உருவமும், தந்தையின் துப்பாக்கியும் தென்பட்டன. அவன் காதுகளில் துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் பானுவின் மரண ஓலமும் இணைந்து ஒலித்தன. கடுஞ்சினம், கொட்டும் வெள்ளமென அவனைத் தாக்க, கண்மண் தெரியாதவனாய் ஓடத் தொடங்கினான். அவனது இந்தச் செய்கை, கிராம மக்களை வீட்டிலிருந்து வெளியே வரவழைக்கப் போதுமானதாக இருந்தது. பானு, நிச்சயமாக ‘கண்டோபா’ அழைத்து அவனுக்குச் சாபம் கொடுத்துப் பைத்தியமாக்கிவிட்டாள் என்று நம்பியவர்கள், மேலும் அவளை வசை பாடத் தொடங்கினார்கள்.

வீட்டை நெருங்க நெருங்கக் குதித்துக்கொண்டே கூவத்தொடங்கினான். மாடியிலுள்ள தந்தையின் அறைக்குப் படிகளில் தாவி ஏறிச்சென்று சுவரில் தொங்கிக் கொண்டிருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு உறுமினான். “பானேய்ய்ய், சாகத் தயாராக இரு”

ராம்ராவை தன் உயிரினும் மேலாக நேசித்தவள், தாய்மை உணர்வுகளின் கழுத்தை நெரித்து , பெற்ற மகன் தௌலத்தையே தொலைவில் வைக்குமளவு அவர் இறக்கும் வரை அன்பு செலுத்தியவள், அறையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். ஹீர்கனி போன்ற துணிவுகொண்டவள், இருண்ட எதிர்காலத்தை நினைத்துத் துயரத்தில் ஆழ்ந்திருப்பதைப்போல இருந்தாள். அந்தக் கோலத்தில் அவளைப் பார்த்தபோது, தேவ்ராம் குழப்பமடைந்தான்.

தன்னுடைய தாயைக் கொன்ற குற்றத்திற்காக அவளுக்குத் தண்டனை அளிப்பதா அல்லது அவளுடன் உடலுறவு கொள்வதா என்று அவனால் முடிவுசெய்ய இயலவில்லை. பார்க்கப் பார்க்க அவளது பேரழகின் இந்தப் புதிய அம்சம் அவன் மனதை வசீகரித்தது.

துக்கத்தில் மூழ்கியிருந்த பானு, பாறையைப்போல அசையாமல் அமர்ந்திருந்தாள். தேவ்ராமின் கண்களில் இருந்த வன்மத்தை அவள் இன்னும் கவனிக்கவில்லை. தன்னை வேட்டையாடப்போகும் வேடனைப்போல அவன் வந்திருப்பதை, அவளைக் கொல்லும் முடிவுடன் நிற்பதை, அவளது மானத்தை அழிக்கப்போவதை அவள் அறியவில்லை. துக்கத்தால் அவன் மனம்பிறழ்ந்திருக்கிறான் என்று நினைத்தவள், மேலும் உரத்து அழத் தொடங்கினாள். கண்களைத் துடைத்துக்கொண்டேதேவ்ராமைப் பார்த்து மிகவும் கனிந்த குரலில் சொன்னாள் “தேவ்ராம், மகனே...உன் துக்கத்தினால் விரக்தி அடையாதே, என் மகன் தௌலத் ஒரு பைத்தியக்காரன். அவனுக்கும் எனக்கும் எதுவுமே வேண்டாம். உடுத்தியிருக்கும் ஆடையுடன் இங்கிருந்து போய்விடுகிறேன்…” அழுகையில் தேம்பித் திக்கியதில் அவள் வாயிலிருந்து மேலும் வார்த்தைகள் வரவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“நீ எங்கேயும் போகப்போவதில்லை, என்னை தேவ்ராம் என்று அழைக்காதே, நான் உன்னைவிட வயதில் மூத்தவன். அப்புறம்….”

“என் மகனே, நீ என்னைவிட வயதில் மூத்தவனாக இருக்கலாம், ஆனால் நான் உன் தந்தையின் மனைவி. ஒருவரின் மனைவி என்பவள் அவர் பிள்ளைகளுக்கு அன்னைதானே. நான் வேறு சாதியைச் சேர்ந்தவளாக இருந்தாலும்கூட அதில் மாற்றமில்லையே?”

இருளின் கைதி

“என்னை மகனே என்று அழைக்காதே, நீ எங்கேயும் போக நான் அனுமதிக்கப்போவதில்லை. தெருவில் அலைந்துகொண்டு, கைக்குட்டையை ஆட்டி பாடிக்கொண்டு திரிவதைவிட என்னுடைய வைப்பாட்டியாக இங்கேயே இரு.”

“தேவ்ராம், என் மகனே...”

“நான் ஒரு தேஷ்முக். நானொன்றும் தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் வெட்கம் கெட்ட கீழ்சாதிப் பெண்மணியின், ஒரு முரலியின் மகன் அல்ல. வேசிகளுக்கு மகன்கள் கிடையாது. அப்பன் பெயர் தெரியாத பிள்ளைகள்தான் உண்டு.”

“வார்த்தைகளை அளந்து பேசு!” சினத்திலும் அச்சத்திலும் உக்கிரமானாள் பானு. எங்காவது ஓடிவிடலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். ஓடுவதற்கு இடமே இல்லை.

அந்தக் கணத்தில்தான் உதவி கேட்டு அவள் இதயத்திலிருந்து அலறல் எழுந்தது.

“தௌலத்!”

“தேவ்ராம், கடவுளுக்கும் தர்மத்துக்கும் கட்டுப்பட்டு அமைதியாக இரு, துக்கத்தில் புத்தி கெட்டு எல்லாவற்றையும் அழித்துவிடாதே” அவன் பிடியிலிருந்து தப்பி ஓடும் வழியைத் தேடியவள் தன்னிலை மறந்து பேசிக்கொண்டிருந்தாள்.

அவள் பேசி முடிக்கையில், கமலா உள்ளே நுழைந்தாள். தன் கணவன் இறந்துபோய் விட்டானா அல்லது குருடாகிவிட்டானா என்று தெரிந்துகொள்ளும் ஆவேசத்தில் இருந்தாள் கமலா. உதவிக்காக அலறினாள் பானு.

“கமலா, என்னைக் காப்பாற்று”

“அவளா? உன்னையா? காப்பாற்றுவதா? இங்கே பார், உன்னுடைய சேலையை அவிழ்த்துக் கொடு,” பாய்ந்து அவள் கூந்தலைப் பிடித்திழுத்துத் தரையில் தள்ளி அவள் சேலையை உருவி நிர்வாணமாக்க ஓடினான் தேவ்ராம்.

கணவன் மாயசக்தியால் குருடாகிப் போகாமலிருப்பதைத் தடுக்கும் பொருட்டு, கமலா ஓடிப்போய் அவன் இடுப்பைச் சுற்றிக் கைகளைப் போட்டுப் பின்னால் இழுத்தாள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, கதவு வழியாக முன்னறையை அடைந்து அங்கிருந்து கீழ்த்தளம் செல்லும் படிகளில் தாவி இறங்கினாள் பானு.

எண்ணங்களில் பானுவின் உருவமும், தந்தையின் துப்பாக்கியும் தென்பட்டன. அவன் காதுகளில் துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் பானுவின் மரண ஓலமும் இணைந்து ஒலித்தன.

“என்னைப் போகவிடு” கத்தினான் தேவ்ராம். அப்போதுதான், துப்பாக்கி விசையை அழுத்திய பின்னும் அது வெடிக்கவில்லை என்று அறிந்து, அதைத் தூக்கி வீசியெறிந்துவிட்டு மனைவியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அவன் தள்ளிய வேகத்தில் உருண்டுபோய்க் கீழே விழுந்தாள் கமலா.

அதற்குள் படிகளில் இறங்கி, வீட்டிலிருந்து வெளியேறித் தெருவை அடைந்துவிட்டாள் பானு. அவளுடைய பயங்கரமான தோற்றத்தைக் கண்டு கூட்டம், தானாகப் பின்வாங்கி அவளுக்கு வழிவிட்டது. உள்ளே என்ன கலவரம் நிகழ்ந்ததென்பதை அறிந்து கொள்வதற்காக அங்கிருந்த பெரியவர்களும், உயர்குடி மாந்தர்களும் படிகளில் ஏறத் தொடங்கினார்கள். அங்கே தரையில் உணர்வற்ற நிலையில் கமலா கிடப்பதையும், தேவ்ராம் துப்பாக்கியில் ரவைகளை நிரப்பிக் கொண்டிருப்பதையும் பார்த்தார்கள். உயிரை எடுக்கும் எமதர்மனின் சாயலில் தெரிந்த அவன் முகத்தைப் பார்த்ததும், யாருக்குமே கேள்வி கேட்கும் துணிச்சல் வரவில்லை.

இருபது வருடங்களாக தான் வாழ்ந்த வீட்டின் படிகளைத் தாண்டாத பானு, அனைத்து நெறிமுறைகளையும் தொலைத்துவிட்டு, உயிரையும் மானத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு வெளியே ஓடிக்கொண்டிருந்தாள். அனைவரும் கதவோரத்தில், மொட்டை மாடியில், தெருவின் சந்துகளில் கூட்டம் கூட்டமாக நின்று, அவளுடைய விசித்திரமான நடவடிக்கையையும், அதேவேளை அவளின் அழகை உள்வாங்கிக்கொண்டும் ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய இந்த நிலையைக் கண்டு அதிர்ந்துபோனார்கள்.

‘எப்பேர்ப்பட்ட கவர்ச்சியான பெண்” வியந்தான் ஒருவன், பானுவின் ஆளைக் கொல்லும் அழகு, அங்கிருந்தவர்கள் இதுவரை கட்டிக் காப்பாற்றிவந்த கண்ணியத்தின் புனிதத்தை உடைத்தெறிந்தது. அவர்களுக்குள் தேங்கியிருந்த நஞ்சு கசியத் துவங்கியது. தீயைத் தீண்டியதுபோல பானுவின் தேகம் துடித்தது. சட்டென்று சேலை நுனியை இழுத்து, தலையைச் சுற்றி முக்காடு போட்டுக்கொண்டாள். இந்தச் செய்கையைக் கண்டும் அவர்கள் கேவலமாகச் சிரித்தனர்.

மென்றுகொண்டிருந்த புகையிலையை அப்படியே விழுங்கப் போய்விட்ட நானாவை, பானுவின் மெல்லிய வளைந்த தட்டையான இடுப்புப் பகுதி கிளர்ச்சியூட்டிப் பேசவைத்தது. “அவள் கால்களுக்கிடையில் புடவை எப்படி வழுக்கிச் சரிந்துபோகுதுன்னு பாருங்க, இந்த அழகைப் பார்த்தால்...”

இந்த வர்ணனையைக் கேட்ட சுகா, சத்தமாகச் சொன்னான், “தேவ்ராம் அவனுடைய இச்சையைத் தீர்த்த பிற்பாடு இந்தக் கோலத்தில் அவளை விட்டிருப்பான். என்னைப்போன்ற ஒருவனுக்குத்தான் அவளை மனைவியைப்போல எப்படி அனுபவிப்பதென்று நன்றாகத் தெரியும்…”

“நீ ஒரு மிருகத்துக்குக் குறைந்தவனில்லை, அவள் ஒரு முரலி, இப்ப என்ன சொல்லப் போகிறாய்?” உள்ளேயிருந்து அவன் மனைவி கேட்டாள்.

“என்ன அபத்தமாகப் பேசுகிறாய்? அவள் என்ன உன்னை மாதிரி பெண்ணா? சொல்லப்போனால் பெண்கூட இல்லை, அவள் ஒரு அரக்கி, நாம் எல்லோருமே அவளை ஒரு கை பார்க்க வேண்டும்”

ஒவ்வொரு பார்வையாளரும் இழிசொல்லைப் பங்களித்துக் கொண்டிருந்தார்கள். பானு, காட்டுத் தீபோன்ற அவர்கள் வார்த்தைகளைக் கேட்டுப் படபடத்து அஞ்சியோடும் பறவைபோலத் தன் உயிரைக் காத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருந்தாள். நெருப்புக் குண்டுகள் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஈடுகொடுக்கும் விதமாகப் பெருத்த குரலில் அலறினாள்.

“தௌலத்!”

அவன் வந்து காப்பாற்றப்போவதில்லை என்று அவள் அறிவாள். நினைவுதெரிந்த நாளிலிருந்தே அவளை ஓர் எதிரியாகத்தான் பாவிக்கிறான். அவளது நிழல்கூட அவன்மீது விழ அனுமதிப்பதில்லை. அவனை அழைத்தாலோ அல்லது தாய்ப்பாசத்தின் விழைவில் ஏதோ பேசினாலோ அவனுக்குக் கடுங்கோபம் வந்துவிடும். கோபம் தலைக்கேறி விட்டால், அவளை அடிக்க ஆரம்பித்து விடுவான். ஒருமுறை அவளைக் கொன்றுவிடக்கூட முயற்சி செய்தான்.தாயின் மீது அவ்வளவு வெறுப்பு கொண்டிருந்தவன். அவளைப் பாவம்செய்த பிறவியாகப் பார்த்தான். அதனால் இந்தக் கும்பலிலிருந்து தன்னை மீட்பான் என்று அவளுக்குத் தோன்றவில்லை. பழிச்சொற்களையும் வசைமொழிகளையும் வாரி இறைக்கும் அந்தக் கூட்டத்தோடு அவனும் இணைந்துகொள்ளக்கூடும். ஒருவேளை, அவன் சத்தியம் செய்தபடி, அதேபோலக் குரூரமாகச் சிரித்துக்கொண்டே மறுபடியும் அவளைக் கொல்லக்கூட முயற்சி செய்யலாம். அந்த நினைப்பே நடுக்கம் ஏற்படுத்த, நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தாள்.

“பானு இந்தா இதையும் வாங்கிக்கொள்… கேட்கச் சகிக்காத கடும் கெட்டவார்த்தையொன்று, எருமைமாடு வலுவாக முட்டியதுபோல் அவளைத் தாக்கியது. அவமானத்தில் தலைகுனிந்தாள். மீண்டும் ஒரு கேலிச் சிரிப்பலை கொதிநீரைப்போல அவள்மீது ஊற்றப்பட்டது.

“தௌலத்!”

“கொழுப்பெடுத்தவள், பரத்தை, உன்போன்ற பெண் மூவுலகிலும் பிறக்கவே கூடாது. இனிமேலும் இப்படி ஒரு பிறப்பைப் பார்க்க முடியாது. பெத்த மகனையே பாவத்திற்குப் பிறந்தவனென்று பித்தனாக அலையவிட்டுவிட்டாய். மறுபடியும் உண்டானதும், புருஷன் உன்னைவிட்டு வேறெங்காவது போய்விடுவானென்று அதையும் கர்ப்பத்தில் அழித்தாய். இப்போது, உன் பாவத்தின் பலனை அறுவடைசெய்” முதிய பெண்மணி ஒருத்தி அவளுக்குச் சாபமிட்டாள்; அவளை நிமிர்ந்து பார்த்த பானு அழத்தொடங்கினாள். அவள் இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் துயரக் கதையை சொல்லிவிடும் ஆசையில் உதடுகள் துடித்தன. சொல்வதற்காக வாயைத் திறந்தபோது, “ஓடிப் போ, இல்லாட்டி அந்த அரக்கன் வந்து என்னுடைய ராமனைக் கொடுமைப்படுத்துவான். போ, போ!”

“ஐயோ, அத்தைபாய், அவளை அப்படிச் சொல்லாதீங்க, பிறகு சாபம் கொடுத்துவிடப்போகிறாள்” இடுப்பிலிருக்கும் குழந்தையைப் பாதுகாப்பாகப் புடவைக்குள் மறைத்துக்கொண்டே முதியவளின் மருமகள் சொன்னாள்.

முதியவளின் வார்த்தைகளைவிட அந்தப் பெண்ணின் சொல், பானுவின் மனதிற்கு வேதனையளித்தது. மீண்டும் ஓடத் துவங்கினாள்.

“என்ன அபத்தமாகப் பேசுகிறாய்? அவள் என்ன உன்னை மாதிரி பெண்ணா? சொல்லப்போனால் பெண்கூட இல்லை, அவள் ஒரு அரக்கி, நாம் எல்லோருமே அவளை ஒரு கை பார்க்க வேண்டும்”

அவள் ஓட ஓட, தேஷ்முக் வீட்டில் அவள் கழித்த இருபது வருடங்கள் கண்முன்னே விரிந்தது. அந்தக் காலங்களில் அவள் ஒருமுறைகூட உண்மையான தாயைப்போல நடந்துகொண்டதில்லை. ராம்ராவின் ஆசைநாயகியாகவும் அவருடைய காம இச்சையைத் தீர்க்கும் போகப்பொருளாக மட்டுமே அவள் இருப்பு இருந்தது. தௌலத்தின் பால்ய நாள்கள் ஒவ்வொன்றும் அவள்முன் இப்போது அசுர கணங்களாக மாறி, அவள் உதாசீனத்தைக் குற்றம் சாட்டி வதைத்தன. அவளின் உயிர் எரிந்தது, குற்ற உணர்வு அலறியது... “தௌலத்!”

வீட்டுக் கதவருகில் நின்றுகொண்டிருந்த அனைவரின் செவியிலும் அவள் அலறல் கேட்டது. ஆனால், ஒருவர்கூட சற்றும் இரக்கம் காட்டவில்லை. மாறாக, அவள் கதறக் கதற அவர்களின் வசைச்சொல்லில் மேலும் நஞ்சேறியது.

தௌலத், அறிவில்லாத முட்டாள் குழந்தை இல்லையென்று பானு அறிவாள். வன்முறை மனநிலையின் ஆழத்தில், அவன் மறைத்துவைத்திருக்கும் ரத்தம் தோய்ந்த ஒவ்வொரு ரகசியங்களையும் கண்டுகொள்ளத் துவங்கியிருந்தாள். அவனுடைய தாயாக இருந்தபோதிலும் அதைச் செய்தாள். கொடூரமான வீட்டின் சூழலுக்கும், பழைமையும் ஆசார ஐதீகமும் மலிந்த கிராமச் சூழலுக்கும், எப்போதும் மற்றவர்கள் சீண்டிப் பரிகசிக்கும் பரிதாபமான நிலைக்கும் குழந்தைப் பருவத்திலேயே அவனை உட்படுத்தினாள். இவை அனைத்தும் அவனைப் பைத்தியமாக உருமாற்றின. அந்த அவமதிப்பும் புறக்கணிப்பும் அவன் மனதைத் திசைமாற்றின. அந்த வெறுப்பு அவன் வாயை அடைத்தது. அத்தனைக் கொடுமைகளையும் சகித்துவந்தவன் நாளடைவில் வன்முறையின் பக்கம் திரும்பிவிட்டான். இதை அறிந்து விழிப்படைந்தவள், தாய்மையின் உருவாக மாறிநிற்கிறாள். வாணலியில் உருளும் ஒற்றை நீர்த்துளிபோல அவன்பொருட்டு கடும் மனவேதனையில் நெளிகிறாள்.

“அவள் களைப்படைந்துவிட்டாள். பிடித்து அவளை மானபங்கப் படுத்துங்கடா…” யாரோ ஆஞ்சநேயர் ஆலயத்திலிருந்து கத்தினார்கள்.

“ஆனால் அவள் என்ன செய்துவிட்டாள்? அப்படியெல்லாம் அவளுக்கு அமானுஷ்ய சக்தி இருந்திருந்தால், இப்படி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்க என்ன தேவை? அவள் பேரழகியாக இருந்தபோதிலும் தந்தை வயதுக்குச் சமமான ஒருவரோடு வாழ்ந்து கொண்டிருந்தாள். பதின்மூன்று வயதிலிருந்து அவருக்குத் தகுந்த நல்ல மனைவிபோல இருந்தாள். அவள் நினைத்திருந்தால், இந்தச் சுற்றுப்புறத்தையே மாற்றியிருக்க முடியும். தௌலத்தை ஒரு முட்டாள்போல இங்கேயும் அங்கேயும் அலையவிடாமல் நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்து, இந்தக் குடும்பத்திற்கேற்ற வாரிசாக்கியிருக்க முடியும். அவனுக்குக் கிடைத்திருக்கும் சொத்துக்கும் பணத்துக்கும் யார் வேண்டுமானாலும் பெண் கொடுக்க முன்வந்திருப்பார்கள்”

“அபத்தம், அவள் திருப்தியில்லாமல் அலையும் பிறவி. அந்தக் கிழவன் போதவில்லை என்றதும் அவனைக் கொன்றுவிட்டு இப்போது அவர் மகன்மீது கண்வைத்திருக்கிறாள். ஆனால் அவன் இவளைத் தெருவுக்கு விரட்டிவிட்டான்.”

“உண்மைதான், இவளை மாதிரி பெண்களெல்லாம் வாலிப வயதிலிருக்கும் அழகன்களுக்கு அலைகிறார்கள்”

“தெய்வம் குடியிருக்கும் இடத்தில் உட்கார்ந்துகொண்டு எந்த மாதிரி கேவலமான பேச்சு பேசறீங்க?”

ஆலயத்திலிருந்து வீசப்பட்ட சொற்கள் அனைத்தும் பானுவைத் தேளாகக் கொட்டின. உண்மையை உடைத்துச் சொல்லிவிட ஏங்கினாள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏழை ஒருவரின் மகள் அவள். ‘காண்டோபா’ வழிபாட்டுக்கு அவள் அர்ப்பணிக்கப்பட்ட பின், பானு என்று பெயர் மாற்றப்பட்டு ஆலயத்திலேயே விடப்பட்டாள். சாதிய, பொருளாதார வேறுபாடின்றி, அவள் அழகில் மயங்கிப் பைத்தியமாகிய அனைத்து குல ஆண்களும் கையில் பெருந்தொகையோடு அவள் தந்தையை அணுகினார்கள். ஒரேவேளையில், பத்து வேறுபட்ட ஆண்களுக்கு மனைவியாவதிலிருந்து அவளைப் பாதுகாக்கவும், ஏதேனும் விபசார விடுதியில் அவள் அமர்த்தப்படுவதைத் தடுக்கவும் கடும் முயற்சி செய்தார் அவர். பானுவின் சௌந்தர்யத்தைப் பற்றிய சிலாகிப்புகளைக் கேள்விப்பட்டுக் கிளர்ச்சியுற்ற ராம்ராவ் அவளைப் பார்க்கச் சென்றார். இறுதியில், பணத்தையும் தனக்கு மட்டுமே அவள் சொந்தமாக இருப்பாள் என்ற வாக்குறுதியையும் விலையாகக் கொடுத்து அவளை வாங்கிவந்தார்.

தன்மீது ஆர்வம் குறைந்து வெளியேற்றாமல் இருப்பதற்காகவும் வெளியே சென்று பல ஆண்களுக்கு மனைவியாக இருந்து, அவர்கள் இச்சையைத் திருப்திப்படுத்தி வாழ்வதைத் தவிர்க்கும் பொருட்டும் ராம்ராவ் சொன்னதற்கெல்லாம் இணங்கினாள் பானு. அதனால்தான் அவள் செய்யக்கூடாத காரியங்களையெல்லாம் செய்யவேண்டிய திருந்தது. ராம்ராவுக்குக் கோபம் வந்துவிடக் கூடாதென்று குழந்தை தௌலத்துக்குச் செலுத்த வேண்டிய கவனத்தைச் செலுத்தவில்லை. மேலும், குழந்தைகள் பிறக்காமலிருக்க ராம்ராவின் கட்டளைப்படி கருத்தடை செய்துகொண்டாள். தன்னுடைய வாழ்க்கை சீரழிந்து போகாமலிருக்கவும், ராம்ராவின் கட்டற்ற காமம் வேறு யாரையும் நாடிப்போகாமல் இருக்கவும் இதையெல்லாம் செய்தாள்.

இதைப்பற்றி அறிந்தவர்கள் யாருமே இல்லை. எப்படி அறிவார்கள்? இந்த இருபது ஆண்டுகளில் எவர் முன்பும் அவள் தோன்றியதில்லை. அவர்கள் அவளுக்காக இரக்கப்பட்டு, ராம்ராவ்தான் அத்தனைக்கும் காரணம் என்று உணர வேண்டும். மாறாக, பழைமையையும் ஆசாரத்தையும் கட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கிராமத்தார்கள் அவள்மீதுதான் மாளாத வெறுப்புக் கொண்டிருந்தார்கள். அவள் எதை வேண்டி வெளியில் தலைகாட்டியிருக்கிறாள் என்று அவர்கள் அனுமானித்தார்களோ அதைத் தர நினைத்தார்கள்.

“அவளைப் பிடி நீ…” ஆலயத்திலிருந்து கத்தினான் ஒருவன்.

“அவளைத் தாவிப் பிடி” பல உற்சாகக் குரல்கள் இணைந்துகொண்டன.

“நான் அவளை இழுத்துவருகிறேன் என்று சொல்லிக் கொண்டே சீதா பிராட்டியாருக்காக இலங்கைக்கு நெருப்பு மூட்டிய ஆஞ்சநேயர் ஆலயத்திலிருந்து குதித்திறங்கி ஓடினான் காஷிநாத். சூறாவளிபோல எழுந்த கூக்குரல்களும் சீழ்க்கையும் கலந்த அருவருப்பான ஒலி, கிராமம் முழுவதும் பரவியது. அவளை விரட்டுவதில் அனைவரும் இணைந்துகொண்டனர். பெண்கள் வீட்டிற்குள் முடங்கி, கதவைச் சாத்திக்கொண்டார்கள். “அவளை நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்” என்று பலர் கூக்குரலிட்டாலும், முன்னே சென்று அவள்மீது கைவைக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை என்று தோன்றியது. ஒரு முதிய பெண்மணி மட்டும் அவளைத் தொடர்ந்து சென்று சாபத்திற்கு மேல் சாபம் விட்டுக்கொண்டிருந்தாள். மற்றொரு பெண், வீட்டுக் கதவின் முன்னால் தூண்போல நின்றுகொண்டு அவளைத் தூண்டி விட்டுக்கொண்டிருந்தாள்.

“காஷ்யா, அவள் சேலையைக் கிழித்தெறி” இந்தக் கீழ்ச்சாதிக்காரிக்கு தேஷ்முக் மனைவியாகிவிடலாம்னு நினைப்பு, விடாதே அவளை...”

“அவன் வருகிறான், பார்த்துப் பார்த்து... கவனம்!”

தேஷ்முக் வாடி, முலான் வாடி பகுதிகளைச் சுற்றியும் பெருங்கூச்சல் எழுந்தது.

என்ன விஷயம் என்று காஷிநாத் திரும்பிப் பார்க்கையில், தௌலத்தின் கையிலிருந்த கூரிய பட்டாக்கத்தி அவனுடைய வயிற்றில் சரேலென இறங்கி மறுபக்கம் வெளிவந்தது.

“டேய் காஷினாத், வேசித்தரகனே!”

துப்பாக்கியும் கையுமாகத் தேவ்ராமைப் பார்த்ததிலிருந்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்த பானு, இப்போது தாய்மையின் உணர்வில் மயங்கி, வலுவிழந்த தன் உடலின் இரு கைகளையும் முன்னே நீட்டிக் கதறினாள். “தௌலத்!”

“கொலை! கொலை!”

“அந்தப் பைத்தியக்காரன் தௌலத், காஷிநாத்தைக் கொலைசெய்துவிட்டான்…”

ஆஞ்சநேயர் ஆலயத்தைச் சுற்றிலும் கூக்குரல்கள் அதிர்ந்தன.அங்கிருந்தவர்கள், தௌலத்தைப் பிடிப்பதற்காகப் படியிறங்கி ஓடிவந்தார்கள்.

“பின்னால் நகருங்கள், வானரங்களே!” கர்ஜித்தபடி, அங்கே தேவ்ராம் வர, மற்றவர்கள் மீண்டும் ஆலயத்திற்குள் சென்றுவிட்டார்கள்.

“தௌலத்...”

அவளுடைய உதாசீனம் தந்த வலியாலும், அதற்குச் சற்றும் குறைவில்லாமல் நஞ்சில் புரட்டியெடுத்த வசைமொழிகளையும் கேட்டு மனம்பிறழ்ந்து நிற்கும் மகனைப் பாதுகாக்கும் பொருட்டு அவன் முன்னே ஓடினாள். ரத்தம் தோய்ந்த கத்தியை ஆட்டியபோது அவன் முகத்தில் தாண்டவமாடிய கோரம், முன்பொரு நாள் அவளைக் கொலைசெய்ய வந்தபோது அவன் கண்களில் வெளிப்பட்ட அதே வன்முறையை நினைவூட்டியது. அவளை நோக்கி விரைந்து வந்துகொண்டிருக்கும் தேவ்ராமைக் கண்டதும், இதுகாறும் தௌலத்துக்குத் தன்னால் மறுக்கப்பட்டிருந்த தாயன்பு மீண்டும் அவளுள் பீறிட்டெழ, முன்னேறிச் சென்றாள். இப்போது அவளுக்கு எந்த அச்சமும் இல்லை. தௌலத்தின் முகத்தில் கண்ட அவளது மரணமோ அல்லது அரக்கனின் சாயல்கொண்ட தேவ்ராமோ எதுவுமே அவளைப் பாதிக்கவில்லை. வியர்வையில் நனைந்திருந்த கரங்கள் தௌலத்தின் தோளைத் தொட்டவுடன், அவளது குரல்வளையை இறுகப் பற்றித்தூக்கி அவளைத் தூக்கி எறிந்தான் அவன். நிலைதடுமாறியவள் சமாளித்து எழுந்து, பாசத்தில் கட்டுண்டு மீண்டும் அவனை நோக்கி முன்னேறினாள். தௌலத், பின்வாங்கினான். கத்தியைச் சுழற்றியபடி உரத்த குரலில் கத்தினான். “சண்டாளி, போய்விடு, என்னைத் தொடாதே, நான் செத்தாலும் தொடாதே. நான் சாக விரும்புகிறேன்.” அவன் வாயைத் திறந்து சில வார்த்தைகள் பேசிவிட்டான் என்பதை மற்றவர்கள் உணர்ந்து அறிந்துகொள்ளும் முன்பு மீண்டும் உதடுகளை இறுக மூடிக்கொண்டான். அன்னையின் அணைப்புக்காகவும் அன்பான சொற்களுக்காகவும் காலம் காலமாக ஏங்கிக்கிடந்த தன் உடலை விறைப்பாக்கிக்கொண்டான். குழந்தைப் பருவத்திலிருந்தே தொடரும் அவள் அண்மைக்கான ஏக்கத்தையும் தேடலையும் திடீரென ஏற்பட்ட அன்புப் பசியால் நிரப்பிவிடுவோமோ என்று எண்ணி, அங்கிருந்து நகர்ந்துசென்று உணர்வுகள் அனைத்தையும் கனன்று கொண்டிருக்கும் இதயக்கொதிகலனில் புதைத்தான். வெறுப்புமிழும் அவன் வார்த்தைகளைக் கேட்டவுடன், கரைபுரண்டோடிய அன்பின் வெள்ளம் அவளுள்ளேயே சுருண்டது. பின்னோக்கி அடியெடுத்து வைத்தாள். ஆண்கள் அனைவரும் கையில் மூங்கில் கழிகளுடன் இருவரையும் சுற்றிவளைத்தனர். எச்சரிக்கையுடன் நின்றபடி கழியால் தாய், மகன் இருவரையும் நகரவிடாமல் கட்டுப்படுத்தினார்கள்.

தௌலத்தின் கண்முன்னே சற்றும் வெட்கமின்றி பானுவை பலவந்தப்படுத்தும் நோக்கத்துடன் அவள் புட்டங்களைத் தடவினான் தேவ்ராம். பின் அவனது கை, அவளது தோளுக்கடியில் நுழைந்து சில கணங்கள் அசையாமல் நின்று, தௌலத் எப்போதோ உயிராதாரத்திற்கென அமுதுறிஞ்சிய மார்பின் மீது படர்ந்து அரவத்தைப்போல நெளிந்தது.

அவனுடைய மற்றொரு கையையும் அவளது அக்குள் வழியாகச் சரித்து, அவளைக் கீழே தள்ள முயன்றான். அவனிடமிருந்து விடுவித்துக்கொள்ளப் போராடியவள், தன்னை விட்டுவிடும்படிக் கெஞ்சிக் கதறினாள். மகனையும் உதவிக்குக் கூவி அழைத்தாள்:

“தௌலத், என் மகனே, என்னைக் காப்பாற்று”

ஆனால், அவனோ பாறையைப்போல அசையாமல் நின்றவாறு வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய முகபாவனைகள் சற்றும் மாறவில்லை. கண்கள் அசையாமல் நிலைகுத்தியிருந்தன. பயனற்ற இரு குச்சிகள்போலக் கைகளிரண்டும் உடலில் தொங்கிக்கொண்டிருந்தன. பதினேழோ, பதினெட்டோ வயதான இந்தச் சின்னப்பயல் தன்னிடம் பயந்துவிட்டான் என்று யூகித்துக்கொண்டான் தேவ்ராம். பானுவை ருசிக்க வேண்டுமென்ற வெறி பெருகியது தேவ்ராமுக்கு. அவளை இழுத்துக் கீழே தள்ளும்போது, பானு கூக்குரலிட்டாள்.

“தௌலத்...”

“முட்டாளே, அறிவுகெட்டவனே, கோழையே, உன் அம்மாவைப் பார் இப்போது” என்று கூவிக்கொண்டே, தௌலத்தின் நெஞ்சில் கைவைத்துத் தட்டினான் தேவ்ராம். மரத்துகள்களால் செய்துவைத்த உருவம் போலச் சரிந்து நிலத்தில் விழப்போன தௌலத், தள்ளாடிப் பின் சமாளித்து நிமிர்ந்தான்.

தேவ்ராம், திரும்பி நிலம் நோக்கிப் படுக்கக் குனிந்தபோது, தௌலத்தின் கையிலிருந்த கூரிய கத்தி, இருளில் பளபளவென மின்னிய கத்தி, அடுத்த நொடியே பாறைபோல இறுகியிருந்த தேவ்ராமின் முதுகில் இறங்கி, சிறு உதறலுக்குப் பின் வெளியே வந்து, பின் மீண்டும் உள்ளிறங்கியது. தௌலத்தின் கத்திக்குத் தாங்கள்தான் அடுத்து இரையாகப் போகிறோம் என்ற பீதியில் கூட்டம் அவனைத் தாக்கத் தொடங்கியது. முரசு அடிப்பவர்கள்போலச் சரமாரியாகக் கழிகளால் அவன் தலையில் அடித்தார்கள்.காத்திரம் நிரம்பிய, வெறுப்பில் ஊறியிருந்த அவனது குருதியின் துளிகள் இங்குமங்கும் தெறித்தன.

“ஆ…ஆயி என்று சொல்லவந்த வார்த்தையைச் சொல்லிமுடிக்கும் முன்பே, தாக்குதலில் சேதமடைந்திருந்த அவனது உயிர், அந்நேரம் கிழக்குத் திசை நோக்கி நழுவிச் சென்றிருந்த இரவோடு சங்கமித்தது.

பானுவின் சௌந்தர்யத்தைப் பற்றிய சிலாகிப்புகளைக் கேள்விப்பட்டுக் கிளர்ச்சியுற்ற ராம்ராவ் அவளைப் பார்க்கச் சென்றார்.

“ஆயி...”

பழியையும் அவமானத்தையும் சுமந்தவள், வாழ்க்கையின் இறுதி வரை அதைச் சுமக்கப் போகிறவளான பானு. தேவ்ராமின் உடலுக்கு அடியிலிருந்து கையை நீட்டி, தௌலத்தின் முட்டியிலிருந்த கத்தியைப் பிரித்தெடுக்கப் போராடினாள். அவளின் ரவிக்கை, கந்தல் கந்தலாகியிருந்தன. வாயில் கவ்வியிருந்த சேலை கிழிந்து தொங்கியது. கரிய திரைபோன்ற கூந்தல், சரிந்து அவிழ்ந்து கிடந்தது. அவளது கை, தௌலத்தின் பிடியிலிருந்த கத்தியை விடுவிக்கப் போராடிக் கொண்டிருந்தது. அந்த இடமெங்கும் நீக்கமற ரத்தம் பரவியிருந்தது.

தெரு, நிசப்தத்தில் ஆழ்ந்திருக்க... கிராமம் அசைவின்றி உறைந்துபோனது. கூப்பியக் கரங்களுடன் கிராமத்தைப் பார்த்தவாறு அமைந்திருக்கும் ஆஞ்சனேயர் சிலையின் முகம், முன்னே ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபத்தின் நடுங்கும் சுடரொளியில், ஒரு சமயம் சினத்தோடும் மறுசமயம் துக்கத்தோடும் இருப்பதுபோலத் தோன்றியது.

தேஷ்முக்: ஒரு கிராமத்துக்கோ அல்லது சரகத்துக்கோ பரம்பரைத் தலைவராக இருப்பவர்கள். அவர்களின் ஆளுமைக்குள்ளான அந்தப் பகுதிகள் ‘தேஷ்முக்கி’ என்று அறியப்படுகின்றன. சுதந்திர இந்தியாவில் இந்தமுறை நீக்கப்பட்டுவிட்டதென்றாலும், இன்றும் மஹாராஷ்ட்ராவின் சில பகுதிகளில் தேஷ்முக் குடும்பங்கள் செல்வாக்கு நிறைந்ததாக இருந்துவருகின்றன.

காத்திரம் நிரம்பிய, வெறுப்பில் ஊறியிருந்த அவனது குருதியின் துளிகள் இங்குமங்கும் தெறித்தன.

கண்டோபா: மஹாராஷ்ட்ராவின் சக்திவாய்ந்த நாட்டார் குலதெய்வம். மக்களைத் துன்புறுத்திய ‘மணி’ எனும் அரக்கனை ஒழிக்க, கடவுள் ஒரு மன்னர் அவதாரமெடுத்து வந்ததாகக் கதைகள் புழங்குகின்றன. பல இடங்களில் ஆலயங்கள் உள்ளன. இங்கு நடைபெறும் திருவிழாக்கள் மிகப் பிரபலமானவை. அந்த தெய்வத்தை வழிபட்டு, பல நோன்புகளால் சாந்தப்படுத்தி, அதன் பயனால் எதிரிகளை வலுவிழக்கச் செய்வதே ஒருவர்மீது ‘கண்டோபா’ ஏவிவிடுவதென்பதாகும்.

முரலி: முரலி என்பது, குறிப்பிட்ட சமூகத்தில் பெண் குழந்தைகளை ‘கண்டோபா’ ஆலயத்துக்கு அர்ப்பணித்துவிடுவது. அந்தக் குழந்தையை ஏதேனும் ஒருவழியில் தெய்வம் அழைப்பதுபோல சங்கேதங்கள் தோன்றுகையில் இவ்வாறு செய்வார்கள். குழந்தையின் தலைமுடி திரிந்து முடிச்சுகள் விழுவது, இனம்புரியாத விசித்திர நடத்தை போன்றவற்றைத் தெய்விக அழைப்பாக எண்ணிக்கொள்வார்கள். ஆனால் பரவலாக, பெண் குழந்தையைப் பராமரிக்க இயலாத அளவு வறுமையான சூழலில் இந்தப் நடைமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். பல முரலிகள், வறுமையில் உழன்றும் பெரும்பாலும் ஆண்களின் காம இச்சைக்குப் பலியாகியும் உள்ளனர். நடனக் கலைஞர்களாகவும் இவர்கள் பயன் படுத்தப்படுகிறார்கள். தேவதாசி முறைக்கு ஒப்பானது இந்த நடைமுறை.

மாங், மஹர், சமர்: இந்தியாவின் பல பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சில பெயர்கள். இந்தக் கதையில், பானு மஹர்’ இனத்தைச் சேர்ந்தவள்.

ஹீர்கனி: சிவாஜி மகராஜ் அரச குலத்திற்குப் பால் விற்றுப் பிழைக்கும் எளிய பெண் ஹிர்கனி. ஒருமுறை, இரவில் நேரம் தாழ்ந்து திரும்பியதில் ராய்காட் கோட்டையில் அடைபட்டுவிடுகிறாள். அவளது குழந்தையின் அழுகுரல் கேட்டதும், கடினமான மலைப்பாதைகளில் இருளில் இறங்கி வருகையில், கடும் இடையூறுகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு குழந்தையை அடைந்து, பாலூட்டி அதன் பசியைத் தணிக்கிறாள். இதனால் சத்ரபதி சிவாஜியின் நல்மதிப்பையும், பாராட்டுகளையும் பெற்று, தாய்மையின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறாள்.இன்றும் ஹீர்கனியின் கதை, சாமானியப் பெண்ணின் வீரக்கதையாகப் பேசப்படுகிறது.

தெரு, நிசப்தத்தில் ஆழ்ந்திருக்க... கிராமம் அசைவின்றி உறைந்துபோனது. கூப்பியக் கரங்களுடன் கிராமத்தைப் பார்த்தவாறு அமைந்திருக்கும் ஆஞ்சனேயர் சிலையின் முகம், முன்னே ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபத்தின் நடுங்கும் சுடரொளியில், ஒரு சமயம் சினத்தோடும் மறுசமயம் துக்கத்தோடும் இருப்பதுபோலத் தோன்றியது.

*ஏழைகளும் சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்போரும் தேஷ்முக் மாளிகைக்குள் என்ன நடக்கிறதென்று அறிய ஆர்வமாகயிருந்தாலும், அவர்கள் அந்த இடத்தின் புனிதத்தை மாசுபடுத்திவிடுவார்கள் எனும் ஐதீகப்படி அவர்களின் நுழைவு அங்கே மறுக்கப்பட்டு வருகிறது. தேஷ்முக், மனைவிக்குச் செய்த துரோகத்தைக் காட்டிலும், அவர் ஒரு தாழ்ந்த சாதி மஹர் பெண் மணியை ஆசைநாயகியாக அழைத்து வந்ததே அச்சமூகத்துக்கு அதிகம் வருத்தமளித்தது.

பாபுராவ் பகுல், (1930 - 2008)

ஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மூத்த எழுத்தாளரான பாபுராவ் பகுல், தனது முற்போக்கு எதார்த்தப் படைப்புகளின் வாயிலாக நவீன இலக்கியப் பரப்பை நோக்கி நகர்ந்தவர்களில் மிக முக்கியமானவர். அவரது சிறுகதைகள் ‘முதல் தலித் இதிகாசங்கள்’ என்று இன்றளவும் பேசப்படுகின்றன. அவர் பிறந்தது 1930-ம் ஆண்டாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. அவரது பிறந்த ஆண்டைக்கூட நினைவில் வைத்துக்கொள்ள இயலாத எளிய, விளிம்புநிலை வாழ்க்கைச் சூழலில், நாசிக் நகரின் அருகிலுள்ள சிறு கிராமத்தில், தலித் குடும்பத்தில் பிறந்தவர் பாபுராவ் பகுல். அம்பேத்கருக்கு நெருக்கமானவரான கெய்க்வாட் எனும் தலைவர் அவர்களது கிராமப்பகுதியில் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பரப்புரை செய்து, அங்குள்ள பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்காக முயற்சி மேற்கொண்டிருந்த காலகட்டம் அது. தலித் எழுச்சி, ஆலயப் பிரவேசம், தீண்டாமைக்கு எதிரான புரட்சிக் குரல்கள் ஆகியவற்றினிடையே பகுலின் இளமைக்காலம் கழிந்தது.

இருளின் கைதி

உயர்நிலைப் பள்ளிக் கல்விக்காக மும்பையிலிருக்கும் தனது அத்தை வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார் பகுல். மிகவும் அசுத்தமான சுற்றுப்புறம், வறுமை மற்றும் ஒடுக்குமுறைக்கும், சாதி வித்தியாசங்

களுக்கும், அவமானங்களுக்குமிடையே நாள்கள் நகர்ந்தன. மிகுந்த சிரமங்களுடன் பள்ளிக்கல்வியை நிறைவுசெய்த பாகுல், ‘மாதுங்கா’ தொழிலாளர் முகாமில் இணைந்தார். தாராவியில் வாழும் புலம்பெயர்ந்த உழைப்பாளிகள், ரயில்வே ஊழியர்கள், துறைமுக மற்றும் நூற்பாலைத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக்கொண்ட தொழிற்சங்கத்தில் இணைந்து பணியாற்றுகையில், அவர் மனதை மார்க்சியக் கொள்கைகளும், சமத்துவச் சிந்தனைகளும் ஈர்த்தன.தன்னைச் சுற்றியுள்ள இளைஞர்களின் மனதில் வன்முறையை விட்டொழித்து, உணர்வுப்பூர்வமான, அறிவுசார்ந்த எழுச்சிமிக்க எண்ணங்களை விதைப்பதற்காக எழுதத் தொடங்கினார். பாபுராவின் எழுத்தில் அம்பேத்கரிய மார்க்ஸிய பாதிப்பு அதிகமாக இருப்பதற்குச் சூழல் யதார்த்தமும் தொழிற்சங்கச் சூழலும் முக்கியக் காரணங்கள்.

தான் ஒரு தலித்தாக இருப்பதால் தனக்கிழைக்

கப்பட்ட தீமை, மறுக்கப்பட்ட வாய்ப்புகள், கிடைத்த தோல்விகள் யாவையும் நன்கு உணர்ந்திருந்தார். அந்த நடைமுறை உண்மையிலிருந்து தப்புவதற்காக அவர் எழுத்தை நாடவில்லை. மாறாக, அதனால் நேர்ந்த துயரங்களையும் வலிகளையும் மாற்றவும் அதற்கு எதிரான குரல்களை எழுப்பவும் தன் எழுத்தைப் பயன்படுத்தினார். தான் அதிகமாக எழுத விருப்பப்பட்டதாகவும் பல்வேறு புறக்காரணங்களால் விரும்பிய அளவு எழுத இயலவில்லை என்றும் பாபுராவ் பகுல் குறிப்பிடுகிறார். அவரது எண்ணற்ற கவிதைகளில் மிகச்சில கவிதைகளே அச்சில் ஏறின. அச்சிடப்பட்டவைகளும் கடுமையாகத் தணிக்கை செய்யப்பட்டன. பதிப்பாளர்கள் அவருடைய பல முக்கிய ஆக்கங்களை நிராகரித்துவிட்டதை வேதனையுடன் பதிவுசெய்திருக்கிறார். அவருடைய நாவல், கதைகளைத் தவிர மற்ற எழுத்தாக்கங்கள் இன்று அதிகம் கிடைக்கப்பெறவில்லை. பதிப்பகங்களும் அவரைக் கைவிட்ட நிலையில், நிரந்தரப் பணியுமின்றி மும்பையின் புறநகர்ப் பகுதியில் பொருளாதாரச் சிக்கலுடன் கழிந்த அவரது இறுதிக் காலத்தைப் பற்றி அதிகமான தகவல்கள் இல்லை.  

‘When I Hid My Caste’ என்னும் தலைப்பில் Jerry Pinto என்பவரால் கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் இவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாயின. இதன்வழி பாபுராவ் பகுல் எனும் அற்புதமான எழுத்தாளரின் படைப்புகள், மஹாராஷ்ட்ரா மாநிலத்தைக் கடந்து பரந்த வாசகப் பரப்பைச் சென்றடையும் என்று நம்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism