Published:Updated:

அம்மாவின் செல்லப்பிள்ளை - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

சிறுகதை : என்.உலகநாதன்

அம்மாவின் செல்லப்பிள்ளை - சிறுகதை

சிறுகதை : என்.உலகநாதன்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை
நான் சிங்கப்பூரில் போர்டு மீட்டிங்கில் இருக்கும்போதுதான் அந்த போன் வந்தது. தம்பிதான் போன் செய்தான். “அம்மாவிற்கு ரொம்ப முடியவில்லை. உடனே கிளம்பி வா.”

மீட்டிங் முடிந்தவுடன் அவசர அவசரமாகக் கிளம்பினேன். சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானம் கிடைக்கவில்லை. கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்து, பின் திருச்சி வரும் விமானத்தில் அவசரமாக புக் செய்தேன்.

அம்மா! நினைத்தாலே உடம்பு சிலிர்க்கிறது. அம்மா எனக்கு எப்பொழுதும் ஒரு ஆச்சர்யம் தான். அப்பா அம்மாவிற்கு மொத்தம் பத்துப் பிள்ளைகள் இருந்திருக்க வேண்டுமாம். தங்கியது என்னவோ ஏழுதான். அந்த ஏழு பேரில் அம்மாவின் செல்லப் பிள்ளை நான்தான். சிறு வயதிலிருந்து என்மேல் பாசத்தைப் பொழிவாள். தம்பி, தங்கை, அக்காக்கள் என் மேல் பொறாமைப் படுவார்கள். மற்ற பிள்ளைகள்மேல் அன்பு இல்லாமலில்லை. என்மேல் கொஞ்சம் அதிக அன்பு, அவ்வளவுதான்.

எனக்கு ஒரு 12 வயசு இருக்கும். அப்போது வீட்டில் சமைக்க அரிசி இல்லை. அப்பா, எங்கோ யாரிடமோ கடன் வாங்கப் போயிருந்தார்கள். அப்போது அம்மா என்னைக் கூப்பிட்டு, ஒரு ட்ரங்க் பெட்டியிலிருந்து, ஒரு பழைய 5 ரூபாவை எடுத்து என்னிடம் கொடுத்து, `ஹோட்டலில் போய் சாப்பிட்டு வா’ என்று அனுப்பினார்கள். நானும், தம்பி, தங்கை, அக்காவைப் பத்தியெல்லாம் நினைக்காமல் ஹோட்டலில் போய் சாப்பிட்டு வந்தேன். இப்போது யோசித்துப்பார்த்தால், என்னைப் பற்றி எனக்கே கேவலமாக, அருவருப்பாக இருக்கிறது. ஆனால் அம்மாவின் அந்த அன்பு இன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

அம்மாவின் செல்லப்பிள்ளை - சிறுகதை

எந்தப் படம் பார்த்துவிட்டு வந்தாலும், நான் கதையை அப்படியே அம்மாவிடம் சொல்வேன். அம்மா சில சமயம் `ஏண்டா, கண்ட படத்துக்கெல்லாம் போற’ என்று திட்டாமல் மிக நாசுக்காக எடுத்துச் சொல்லி அந்தப் படத்துக்கெல்லாம் ஏன் போகக்கூடாது என்று புரிய வைப்பாள். அம்மா படித்தது என்னவோ எட்டாம் வகுப்பு வரைதான். ஆனால் ஒரு மெத்தப் படித்த மேதை மாதிரி எங்களுக்குப் படிப்பு சொல்லிக்கொடுப்பாள். தினமும் காலை 4 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, எனக்கு காபி போட்டுக் கொடுத்து, நான் படிக்கிற வரை பக்கத்திலேயே அமர்ந்திருப்பாள். அம்மா மட்டும் அன்று அப்படி உதவவில்லை என்றால் என்னால் இவ்வளவு சாதித்திருக்க முடியுமா தெரியவில்லை.

அம்மா என்னிடம் அடிக்கடி இப்படிச் சொல்வாள், ‘நமக்குன்னு ஒரு சொத்து கிடையாது. படிப்பு ஒண்ணுதான் மூலதனம். அதை வச்சுதான் முன்னேறணும். அதனால நல்லாப் படி.’ அவள் சொன்ன அந்த வார்த்தைகள்தான் என்னை இந்த அளவுக்கு உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஒருமுறை அப்பா, அம்மாவைக் கெட்ட வார்த்தை சொல்லி ஏதோ கோபத்தில் திட்டி விட்டார். அதற்கு நான் அப்பாவைப் பார்த்து, ``அடுத்த பிறவியிலாவது மனுசனாப் பொறங்க’’ என்று சொல்லிட்டேன். அதனால் அப்பா என்னிடம் ஒரு வாரம் வரை பேசாமல் இருந்தார். குடும்பத்தில் இருந்த அனைவரும் என்னை அப்பாவிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள், நான் ‘`அப்பா பண்ணுனது தப்பு, மன்னிப்பு கேட்கமாட்டேன்’’ என்று அம்மாவிடம் அடம் பிடித்தேன். அப்போது அம்மா, `கணவன் மனைவி உறவு என்றால் என்ன, அதில் பிள்ளைகள் எதுவரை தலையிடலாம்’ என்று எடுத்துச் சொல்லி, நான் செய்த தவற்றை உணர வைத்து அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வைத்தாள்.

அம்மா என்றைக்கும் எனக்கு அம்மாவாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த தோழியாவும் இருந்தாள். அது எனக்கு வாழ்க்கையில் பல விஷயங்களில் உதவியது. பல பெண்களோடு பழகுகிற வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், சில தவறுகள் செய்யக் கூடிய வாய்ப்புகள் வந்த போதெல்லாம், அம்மா தோழி போல் சொன்ன அறிவுரைகள்தான் என்னைத் தவறு செய்யவிடாமல் தடுத்தது.

அம்மாவின் செல்லப்பிள்ளை - சிறுகதை

அப்பா மிகுந்த கோபக்காரர். அம்மா நேர் எதிர். அம்மாவிற்குக் கோபம் வந்து நான் பார்த்ததில்லை. எப்பொழுதுமே சிரித்த முகம் தான். அப்பா, அம்மாவைத் திட்டிக்கொண்டே இருப்பார். ஆனாலும் அப்பாவிற்கு அவ்வளவு செய்வாள். எங்கள் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம். சித்தப்பாக்கள், அத்தைகள் நிறைந்த வீடு. அத்தனை பேருக்கும் அம்மாதான் சமையல். முகம் கோணாமல் சமைப்பாள். எங்கள் வீட்டில் சாப்பிடும்போது பார்த்தீர்களென்றால் கல்யாணப் பந்திபோல் இருக்கும். அத்தனை பேரும் ஒன்றாக உட்கார்ந்துதான் சாப்பிடுவோம்.

அம்மா ஒரு இரும்பு மனுஷி. எதையும் தாங்கும் இதயம் கொண்டவள். சொந்தக்காரர்கள் எல்லோருமே அம்மாவைப் பாராட்டுவார்கள். அம்மா சொல்வதைத்தான் எல்லோரும் கேட்பார்கள். அம்மா நன்றாகப் பாடுவாள். நான் அம்மாவைப் பாடச்சொல்லிக் கேட்டுக்கொண்டே இருப்பேன். அப்பாயி சொல்லிக் கேட்டிருக்கிறேன். அம்மா என்னை வயிற்றில் சுமந்தபோது அடிக்கடி `எனக்கொரு மகன் பிறப்பான்’ என்ற பாடலைப் பாடிக்கொண்டே இருப்பாளாம். அம்மாவிற்கு முதல் மூன்றும் பெண் பிள்ளைகள். நான்காவதாக நான் பிறந்தேன்.

அம்மா என்னிடம் கோபப்பட்டதே இல்லை. ஆனால் கோபப்படும்படியான ஒரு நிகழ்வு என் வாழ்வில் நடந்தது. நான் அப்போது ப்ளஸ் டூ முடித்து கல்லூரி அட்மிஷனுக்காகக் காத்திருந்த நேரம். நான் அம்மாவிடம் எதையுமே மறைத்ததில்லை. பள்ளியில் நடக்கும் அனைத்தையுமே நான் அவளிடம் ஒன்று விடாமல் சொல்வேன். எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக்கூடாது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவள் எனக்கு நல்லது எது, கெட்டது எது என்று புரிய வைப்பாள். அம்மாவிடம் ஒரு விஷயத்தை மட்டும் மறைத்திருந்தேன். ஏன் மறைத்தேன் என்று தெரியவில்லை. அந்த விஷயம் வேறு ஒன்றுமில்லை. என் இளமைக்காலக் காதலி விஜி.

விஜி எனக்கு 9-ம் வகுப்பு படிக்கும்போது அறிமுகமானாள். நான் அப்போது 11வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது எதேச்சையாக விஜி என் கண்களில் பட்டாள். எதிரில் வந்து கொண்டிருந்தாள். நீலநிறப் பாவாடை அணிந்திருந்தாள். பிங்க் போன்ற ஒரு நிறத்தில் சட்டை அணிந்திருந்தாள். முகம் பிரகாசமாக பளபள என்று இருந்தது. நீண்ட தலைமுடி. நன்றாக முடியை வாரிப் பின்னல் இட்டிருந்தாள். நெற்றியில் சிறிய அளவு பொட்டு வைத்திருந்தாள். அவளை வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் கவனித்தேன். அவள் பின்னால் ஒரு மாடு ஓடிவந்தது. ஒரு நிமிடம் நான் தாமதிக்காமல் ஓடிச்சென்று அவளை என் பக்கத்தில் இழுத்தேன்.

என்னை முறைத்துப் பார்த்துவிட்டு அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிப் போய்விட்டாள். அதன்பிறகு அவளை தினமும் பார்க்க ஆரம்பித்தேன். நான் பள்ளிக்குக் கிளம்பி வீட்டில் தயாராக இருப்பேன். அவள் தெருவில் வந்தவுடன்தான் நான் கிளம்புவேன். நான் அவளிடம் பேச மாட்டேன். சும்மா அவள் பின்னால் செல்வேன். அவளை தினமும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும், அவ்வளவுதான். ஒரு மாதம் எந்த முன்னேற்றமும் இல்லை. திடீரென ஒரு நாள் அவள் பள்ளிக்குள் நுழையும்போது திரும்பிப் பார்த்தாள். இப்படியே ஒரு வாரம் போனது. பின் மெல்ல சிரிக்க ஆரம்பித்தாள். இதுதான் அதிகபட்சம் எங்கள் காதலில் நடந்தது. அது காதலா என்ன என்று அப்போது அந்த வயதில் எனக்குத் தெரியாது. ஆனால் அவளைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது என்பது மட்டும் புரிந்தது.

இப்படியே ஒரு வருடம் கழிந்தது. அந்த வருட விடுமுறையில் ஒரு நாள் அவளின் தோழி ஒருத்தி, நான் கோயிலில் பிராகாரத்தில் சுற்றிக்கொண்டிருந்தபோது என் கையில் ஒரு கடிதத்தைத் திணித்துவிட்டு ஓடினாள். அவசரமாக வீட்டிற்குச் சென்று கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.

`நான் உங்களை விரும்புகிறேன்’ – அன்புடன் விஜி.

இவ்வளவுதான் இருந்தது. அவ்வளவுதான், சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தேன். உலகமே என் காலடியில்... ஆனால் விஜி புத்திசாலி. ஒரு கடிதத்தில் நான் கடிதம் எழுதக்கூடாது என்று சொல்லியிருந்தாள். காரணம் அவளுக்கு நான்கு அண்ணன்கள். மாட்டினால் என் தோலை உரித்துவிடுவார்கள்.

இப்படி நன்றாக சந்தோஷத்தில் இருந்தபோதுதான் ஒரு நாள் அவளின் தோழி என்னிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தபோது தோழியின் அண்ணன் பார்த்துவிட்டான். உடனே கடிதத்தை வாங்கிப் படித்துவிட்டான். உடனே அங்கே இருந்து சென்றுவிட்டான். நான் பயத்துடன் வீட்டிற்கு வந்து விட்டேன். அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை. அடுத்த நாள் காலை நூலகத்திற்குச் சென்று படித்துக் கொண்டிருந்தேன். அம்மாவும் அத்தையும் நூலகத்திற்கு வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். எதற்கு என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். அத்தைதான் விஷயத்தைச் சொன்னார்கள்.

விஜியின் தோழியின் அண்ணன் கடிதத்தை அவள் அண்ணன்களிடம் கொடுத்து விட்டதாகவும், விஜியின் அண்ணன்கள் என் மேல் கோபமாக இருப்பதாகவும் என்னை அடித்துத் துவைக்க ஏற்பாடு செய்யவிருப் பதாகவும் எப்படியோ விஷயம் தெரிந்ததாகவும் சொன்னாள். நான் அம்மாவிடம் பேச முயற்சி செய்தேன். வாழ்வில் முதல் முறையாக அம்மா என்னிடம் பேச மறுத்தாள். எவ்வளவோ கெஞ்சியும் என்னிடம் பேசவே இல்லை. நான் பயத்துடன் படுத்திருந்தேன்.

அப்பா இரவு 9 மணிக்கு வந்தார். நான் தூங்குவதுபோல நடித்துக் கொண்டிருந்தேன். அம்மா அப்பாவிடம் விஷயத்தைக் கூற அப்பா கோபமாக என்னை எழுப்பி விட்டார். என்னை எதுவும் கேட்கவில்லை. பெல்ட்டை எடுத்து விளாசித் தள்ளினார். அம்மா தடுக்கவே இல்லை. அன்று இரவு நான் தூங்கிக்கொண்டிருக்கும் போது என் தலையை ஒரு கை தடவிக்கொண்டிருந்தது. அது நிச்சயம் அம்மாதான் என்று எனக்குத் தெரியும்.

அப்பா ஆட்களை வைத்து சமாதானம் பேசி ஒரு வழியாக பிரச்னையை முடித்து வைத்தார். ஆனாலும் அம்மா பேசவில்லை. மூன்று மாதம் கழித்து ஒரு நாள் நான் அம்மாவிற்கு என் நிலையை விளக்கி ஒரு கடிதம் எழுதினேன். அதைப் படித்து முடித்தவள் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள். பின் நான் செய்த தவற்றை விளக்கினாள். முதலில் படிப்பில் கவனம் செலுத்து என்று அறிவுறுத்தினாள். பின் நான் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். விஜியை அதன் பின் என்னால் பார்க்க முடியவில்லை.

பின் வந்த நாள்களில் எந்த ஒரு பெண்ணையும் நான் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. என் மனம் முழுவதும் விஜியே நிறைந்திருந்தாள்.

மூன்றாவது வருடம் கடைசி செமஸ்டர் பரீட்சை நடந்து கொண்டிருந்த சமயம் ஒரு நாள் தபாலில் ஒரு கடிதம் எனக்கு வந்தது. அம்மாதான் பிரிக்காமல் எடுத்து வைத்திருந்தாள்.

நான் கல்லூரியிலிருந்து வந்தவுடன் என்னிடம் கொடுத்தாள். பிரித்தால் ஆச்சர்யம். அந்தக் கடிதம் விஜியிடமிருந்து வந்திருந்தது. விஜிக்கு அவள் தாய் மாமனை மணம் முடிக்க ஏற்பாடு நடப்பதாகவும், உடனே வந்து தன்னை அழைத்துச் செல்லும்படியும் எழுதியிருந்தாள்.

“என்ன கடிதம், யார் எழுதியது?’’ என்று கேட்டாள்.

நான் உண்மையைச் சொன்னேன்.

சிறிது நேரம் என்னையே பார்த்தாள்.

‘`என்ன செய்யப்போற ரவி?’’ என்றாள்.

`நீ சொல்லும்மா?” என்றேன்.

“நீ அவளைத் திருமணம் செய்யக்கூடாது?” என்றாள்.

“ஏம்மா?”

“ஏனோ எனக்குப் பிடிக்கலை. காரணம் கேட்காத. உனக்கு எது நல்லதுன்னு எனக்குத் தெரியும்.”

எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன். அம்மா கடைசி வரை ஒப்புக்கொள்ளவே இல்லை. அம்மாவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் நினைத்திருந்தால், விஜியைக் கல்யாணம் செய்திருக்க முடியும். ஆனால், ஏனோ அம்மாவை மீறி என்னால் ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை.

விஜி நான் வருவேன் என்று நிச்சயம் காத்திருந்திருப்பாள். என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள். நான் ஒரு கோழை. அம்மாவின் பேச்சை மீறாத ஒரு கோழை.

சரியாக ஒரு மாதத்தில் விஜிக்குக் கல்யாணம், வெகு விமரிசையாக நடந்தது. ஊரே திருவிழாக் கோலம். திருமணத்திற்கு முதல் நாள் என்னைக் கண்காணிக்க ஒரு படையே இருந்தது. எல்லோரும் விஜியின் அண்ணன்கள் அனுப்பியிருந்த ஆட்கள். அன்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. விஜியின் திருமணத்தன்று பூஜை அறையில் அமர்ந்தவன் வெளியில் வரவே இல்லை. அழுதுகொண்டே இருந்தேன்.

அம்மாவிற்கு ஏன் விஜியைப் பிடிக்கவில்லை, என்ன காரணம்? இன்றுவரை எனக்குப் புரியவில்லை. பின் வாழ்க்கையே எனக்கு சூன்யமானது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஊரை விட்டுச் செல்லத் தீர்மானித்தேன். அந்தச் சமயத்தில் சிங்கப்பூரில் ஒரு வேலை கிடைக்கவே அங்கு சென்று விட்டேன். ஆனாலும் விஜியை மறக்க முடியவில்லை.

மூன்று வருடம் கழித்து திருச்சிக்கு வந்தேன். வாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லாமல் இருந்தேன். என்னால் மற்றவர்கள் திருமணம் பாதித்தது. அப்போதும் அம்மாதான் முடிவெடுத்தாள். அவளே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தாள். என்னைத் திருமணம் செய்ய வற்புறுத்தினாள். அவளின் பிடிவாதத்திற்காகவும் மற்றவர்களின் எதிர்கால வாழ்க்கைக்காகவும் கோமதியைத் திருமணம் செய்துகொண்டேன்.

முதல் இரவு. வாழ்க்கையில் யாருமே செய்யாத, செய்யத்துணியாத காரியத்தை அன்று செய்தேன். ஆம். கோமதியிடம் எல்லா உண்மையையும் கூறினேன். பொறுமையாகக் கேட்டவள், செருப்பைக் கழற்றி அடிப்பதுபோல் ஒரு கேள்வியை என்னிடம் கேட்டாள்,

“இப்ப சொல்றதுக்கு பதில் நேத்தியே சொல்லியிருக்கலாம்ல.”

என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் கேள்வியில் உள்ள கோபம், ஆத்திரம் என்னைத் தாக்கியது. என்ன செய்வது என்று எனக்கும் தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை.

விஜியை மனதில் வைத்துக்கொண்டு கோமதியிடம் வாழ்க்கை நடத்த எனக்குப் பிடிக்கவில்லை. சரியாக ஆறு மாதத்தில் அவள் அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டாள். ஒரு வருடத்தில் விவாகரத்து செய்துவிட்டாள். அடுத்த ஆறு மாதங்களில் அவளின் பெற்றோர் அவளுக்கு இன்னொரு திருமணம் செய்து விட்டார்கள்.

விஜியும் குழந்தை குட்டியுடன் இருப்பதாக நண்பர்கள் கூறினார்கள். கோமதியும் மாசமாக இருப்பதாகச் செய்தி வந்தது. தம்பி, தங்கைகள் எல்லோருக்கும் திருமணமாகி நன்றாக வாழ்க்கையில் செட்டிலாகி இருந்தார்கள்.

அம்மாவின் செல்லப் பிள்ளையான நான் மட்டும் இப்படி! அதன்பின் நான் அதிகம் இந்தியாவிற்கு வருவதில்லை. எந்த விதக் குறிக்கோளும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

அம்மாவிடம் பேசுவதையே நிறுத்தி விட்டிருந்தேன்.

ஆறு மாத்திற்கு முன் ஒரு நாள் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று தம்பி மெயில் அனுப்பியிருந்தான். விசாரித்துவிட்டு செலவிற்குப் பணம் அனுப்பினேன். `ஒரு தடவையாவது வந்து பார்த்துட்டுப் போண்ணா’ என்று கெஞ்சினான். ஏனோ எனக்குப் போகத் தோன்றவில்லை.

இந்த முறை நான் வந்தே ஆகவேண்டும் என்று எல்லோரும் கூறியதால் இதோ, திருச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். விமானத்தை விட்டு இறங்கி இமிக்ரேஷன் முடிந்து, செக்யூரிட்டி செக் அப் முடிந்து கஸ்டம்ஸ் முடிந்து வெளியே வந்தேன். மாமாவும் தம்பியும் வந்திருந்தார்கள்.

காரில் ஏறினேன். தம்பிதான் பேசிக்கொண்டே வந்தான்.

“எப்படித்தான் இருக்கு அம்மாவுக்கு?”

“ரொம்ப மோசமாயிட்டாங்கண்ணா. ஒரு மருந்தும் வேலை செய்யல. வயசு ஆச்சில்ல. முதல்ல நடக்கறது நின்னுபோய், இப்போ எல்லாமே படுக்கைலதான். ஆஸ்பத்திரியில வச்சு எவ்வளவோ பார்த்தாச்சு. டாக்டர் ‘வீட்டுலயே வச்சுப் பார்த்துக்கங்க’ன்னு சொல்லிட்டாரு. கொஞ்சம் கொஞ்சமா உடம்பு மோசமாயிட்டே இருக்கு. நண்பர்களெல்லாம் அம்மா படற கஷ்டத்தைப் பார்த்துட்டு, ‘எமன் கோயில்ல போய் தீர்த்தம் வாங்கிட்டு வந்து குடுங்க. எல்லாம் முடிஞ்சுரும்’னு சொல்றாங்க. மனசு கேட்கலண்ணா. அவங்க நம்மள பெத்த அம்மாண்ணா. ஆனா அவங்க மனசுல ஏதோ குறை இருக்கு. அதான் அவ்வளவு சீக்கிரம் அவங்க ஆன்மா போக மாட்டேங்குதுன்னு எல்லாம் சொல்றாங்க. பக்கத்து வீட்டு மாமிகூட நேத்து பார்த்துட்டு, `டேய் அம்பி, அவங்க எதையோ யார்கிட்டயோ சொல்லணும்னு நினைக்கறாங்கடா. ஆனா என்னான்னுதான் தெரியல’ன்னு சொன்னா. எப்படி இருந்த அம்மா. பார்க்க வேதனையா இருக்குடா” என்றவன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். ஒருவழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். வீடு முழுக்க சொந்தக்காரர்கள்.

‘`ரவி வந்தாச்சு’’ என்று ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோரையும் தள்ளிக்கொண்டு அம்மா இருந்த அறைக்குள் போனேன்.

“மாமி. யார் வந்துருக்கா பாருங்கோ. ரவி. உங்க மூத்த பிள்ளையாண்டான்” என்று சத்தம் போட்டுக் கத்தினாள் பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி.

“அம்மா” என்று மெல்ல கூப்பிட்டேன்.

மெதுவாகக் கண்களைத் திறந்தவள், என் கைகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். ஏதோ நான்காக மடித்து வைத்திருந்த பேப்பரைக் கையில் திணித்தாள். எந்த ஒரு ஆர்வமும் இல்லாமல் வாங்கி சட்டைப் பையில் வைத்து க்கொண்டேன். என் கைகளையே பிடித்துக்கொண்டிருந்தவளின் கண்களைப் பார்த்தேன். அப்படியே விழியோரங்களில் கண்ணீர்த்துளி. ஒரு நிமிடம்தான். உடம்பு தூக்கிப் போட அவள் பிராணனை விட்டாள்.

வீடே அழுது தீர்த்தது. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, எனக்கு ஒரு துளிக் கண்ணீர் வரவில்லை. எல்லாக் காரியங்களையும் தம்பிகள்தான் பார்த்தார்கள். நான் ஏதோ ஒப்புக்குச் சப்பாணி போல் அலைந்து கொண்டிருந்தேன். மயானத்திற்குச் சென்று வரும் வரை நான் அழவே இல்லை.

பின் வந்த பதினொரு நாள்களும் ஒரு நடைப்பிணம்போல் வாழ்ந்துகொண்டிருந்தேன்.

பதினோராம் நாள் காரியம் முடிந்த அன்று இரவு சிங்கப்பூருக்குக் கிளம்பினேன். ஊருக்கு வந்த அன்று போட்டிருந்த அதே சட்டையை அணிந்திருந்தேன். ஒரு முறை நனைத்துப் போட்டதொடு சரி. போர்டிங் பாஸை உள்ளே வைக்கும்போது ஏதோ தட்டுப்பட எடுத்துப் பார்த்தேன். ஒரு கசங்கிய பேப்பர்.

உடனே நினைவுக்கு வந்தது. அம்மா உயிர் பிரியும்போது என்னிடம் கொடுத்தது. என்னதான் இருக்கிறது என்று பிரித்துப் படித்தேன். சட்டையை நனைத்துப் போட்டிருந்தாலும் பால் பாயின்ட் பேனாவில் எழுதியிருந்ததால் அழியாமல் இருந்தது. உற்றுப் பார்த்தேன்.

`சாரிடா ரவி. அம்மா’ என்று எழுதியிருந்தது.

குரல் உடைய குலுங்கிக் குலுங்கி, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன்.

அம்மாவின் செல்லப்பிள்ளை - சிறுகதை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism