Published:Updated:

சிறுகதை: அடுத்த ரயில்

சிறுகதை: அடுத்த ரயில்
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை: அடுத்த ரயில்

இந்த ரயிலுக்கும் அடுத்த ரயிலுக்கும் இடையே ஏழு நிமிட இடைவெளி.

சிறுகதை: அடுத்த ரயில்

இந்த ரயிலுக்கும் அடுத்த ரயிலுக்கும் இடையே ஏழு நிமிட இடைவெளி.

Published:Updated:
சிறுகதை: அடுத்த ரயில்
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை: அடுத்த ரயில்

காதலியின் கரங்களை முதன்முறையாக வருடும் காதலனின் லாகவத்தோடு அந்த ரயில் நடைமேடையில் வழுக்கிக்கொண்டு வந்து நின்றது. ஒரு ரயில் வந்து நிற்பதற்கான பயமுறுத்தல்களோ, கூச்சல் குழப்பமோ, அடித்துப் பிடித்து ஏறும் மக்கள் கூட்டமோ அங்கு இல்லை. மாறாக, சில்லென்ற காற்றும், அப்போதுதான் துடைக்கப்பட்ட கிருமி நாசினியின் வாசனையும் அந்த இடத்தை நிறைத்திருந்தன. மெட்ரோ ரயில் கதவுகள் திறந்துகொண்டன. ஒருசிலர் இறங்க, காத்திருந்த பத்திருபது பேரும் ஏறிக்கொண்டனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ரயிலுக்கும் அடுத்த ரயிலுக்கும் இடையே ஏழு நிமிட இடைவெளி. வழக்கத்தைவிட அதிக நொடிகள் ரயில் தன் கதவுகளைத் திறந்தேவைத்திருந்தது. புறப்படும் நேரத்தில் கைகளை விரித்துக்கொண்டு தூக்கச் சொல்லும் குழந்தையைப்போல அவன் அதனுள் பிரவேசிக்கலாம் என்று அது எதிர்பார்த்திருக்கலாம்.

சிறுகதை: அடுத்த ரயில்
சிறுகதை: அடுத்த ரயில்

ஊரில் எங்கு பார்த்தாலும் பஸ்ஸை நிறுத்தி, ‘ஏறு’ என்று சொல்லும் அறிந்த டிரைவரைப்போல இந்த ரயில் ஸ்நேக பாவம் காட்டுவதாக இருக்கலாம். ஆனால், அதன் அன்பான காத்திருப்பை நிராகரித்து, புறமுதுகு காட்டி நின்றான் அவன்.

கடைசி நொடியில் அவள் ஓடிவந்துவிடலாம். வேக வேகமாகப் படிகளில் தாவிக் குதித்து இறங்கி ஓடிவந்து, அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு, ரயிலின் கதவுகள் மூடிக்கொள்ளுமுன் உள் நுழைந்து விடலாம். எப்போது வேண்டுமானாலும் உள் நுழையத் தயாராக இருக்க வேண்டும் என்பதான ஆயத்தத்தோடு அவன் தயாராக நின்றான். ஆனால் அவள் வரவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிச்சை மறுக்கப்பட்டதும், கைகளைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு நகரும் யாசகனைப்போல ரயில் சத்தமில்லாமல் கடந்து சென்றது. இப்போது ரயில் நின்ற இடத்தில் வெறும் கண்ணாடிச் சுவர்.

நடைமேடையில் இப்போது அவனும் நிசப்தமும் மட்டுமே இருந்தார்கள். அதுவரை இறங்கிக்கொண்டிருந்த படிக்கட்டுக்களும் நின்றுவிட அந்த அமைதியில் ஓர் அமானுஷ்யம் கூடிவிட்டது. அதற்கு சுருதி சேர்க்கும்வண்ணம் கடைசியில் ஒரு விளக்கு மினுங்கிக் கொண்டிருந்தது. செல்போனை எடுத்துப் பார்த்தான். சுத்தமாக சிக்னல் இல்லை. பூமிக்குள் யாராலும் தொந்தரவு செய்யப்பட முடியாத இடம் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது. ஆனால், அவன் மனம் இந்தச் சிந்தனைகளிலெல்லாம் நிலைக்கவேயில்லை. அதில் அவளே நிறைந்திருந்தாள்.

அவள் ஏன் வரவில்லை... ஒருவேளை இதற்கு முந்தைய ரயிலில் போயிருப்பாளா... வாய்ப்பில்லை. அலுவலகத்தில் அவசர வேலைகள் கொடுத்து இருக்கச் சொல்லியிருக்கலாம். ஒருமுறை அப்படிக்கூட நடந்தது.

அன்று அவனுக்கும் அலுவலகத்தில் வேலை சரியாக இருந்தது. நேரம் ஓடிக்கொண்டிருந்ததை கவனிக்க வேயில்லை. எல்லாம் முடித்துப் புறப்படும்போது பார்த்தால் வழக்கத்தைவிட அரை மணி நேரம் தாமதமாகியிருந்தது. அலுவலகத்துக்கு வெளியே தெருவிளக்கில்லாதது அந்த மாலையை இன்னும் இருளாகக் காட்டியது.

இந்நேரம் அவள் கிளம்பியிருப்பாள் என்ற எண்ணம் நடையில் சுவாரஸ்யமில்லாமல் செய்தது. வெறுப்பாக நடந்து நடைமேடையை அடைந்தபோது அவன் எதிர்பார்க்கவேயில்லை. அவள் அங்கு இருந்தாள். கடைசி நேரத்தில் அதிகாரி வேலை ஒன்றைத் தலையில் கட்டிவிட்டதாகப் புகார் சொன்னாள். அன்றைக்கு அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஒருவேளை அவள் தனக்காகக் காத்திருந்திருக்கலாம் என்று எண்ணிக் கொண்டான். அந்த நினைப்பே பெரும் போதையாக இருந்தது. ரயிலில் பெரும்பாலும் யாருமில்லை. ஆனாலும் அவன் அவளோடு ஒட்டியே அமர்ந்து வந்தான். அவள் அதில் அசௌகர்யப்பட்டதாகவோ ஆனந்தப்பட்டதாகவோ தெரியவில்லை.

அன்று வீடு திரும்பும் வழியெல்லாம் அவளின் ஸ்பரிசத்தின் சிலிர்ப்பிலேயே நிறைந்திருந்தான். வீட்டில் பூரணி கேட்ட கேள்விகள் எதுவும் அவன் காதுகளில் விழவேயில்லை. பூரணிக்கு அவன் செய்கைகள் புதிதாக இருந்தன. ஒருவேளை மது அருந்தியிருப்பானோ என்று அருகில் வந்து வாசனை பிடித்துவிட்டு, ‘இல்லை’ என்ற நிம்மதியில் வேலையைத் தொடர்ந்தாள்.

இளமையைப்போல நடு வயதில் லஜ்ஜையின்றிக் காத்திருக்க முடிவதில்லை. இருபுறமும் ரயில்கள் ஓடிக்கொண்டிருக்க, படிக்கட்டுகளைப் பார்த்தபடி அவளுக்காகக் காத்திருக்கக் கூச்சமாயிருக்கும். அவள் மாநிறம்தான். அதிகபட்சமாக 5.4 இருக்கலாம். குண்டு என்று சொல்ல முடியாது. ஆனாலும் கொஞ்சம் பருமன்தான். எண்ணெய் தேய்த்துப் படிய வாரி, கரிய சாலைக்கு நடுவில் கோடிடுவது போன்ற வகுடெடுத்து அதன் முனையில் சிவப்பாக ஒரு தீற்றல். புன்னகைக்கும் வரை அவளைப் பேரழகி என்று சொல்ல முடியாது. புன்னகைத்துவிட்டால், விளக்கு ஏற்றப்பட்டதும் பேரெழில்கொள்ளும் தீபம்போல அவ்வளவு அழகாகிவிடுவாள்.

அந்த ரயிலில் பயணிக்கும் வேறு யாரின் கண்களுக்காவது அவள் அழகாகத் தெரிகிறாளா என்று சில நேரம் அவன் சுற்றிப் பார்ப்பதுண்டு. ஆனால், யாரும் அங்கு ஒரு பெண் இருப்பதான பாவனையே இல்லாமல் அவரவர் வேலைகளில் மூழ்கியிருப்பார்கள். அதுவே அவனுக்கு இன்னும் அவள்மீது அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தக் காரணமாகிவிட்டது. அலுவலகம் போய்வரும்போது அவளோடு பழகுவதுபோய் இப்போது அவளோடு பேசிப் பழகுவதற்காகவே அலுவலகம் வந்துபோகிறான்.

ஒருநாள் இருபுறமும் ரயில்கள் கடந்து கொண்டிருந்தன. அவன் ஏறிச் செல்வதாக இல்லை. விடிந்துவிடும் என்று கருக்கலிலேயே விழித்துக் காத்துக்கிடக்கும் பறவையைப்போல அவன் அவள் வருகைக்காகக் காத்துக்கிடந்தான். நடைமேடையில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண்மணிக்கு வித்தியாசமாக இருந்திருக்கிறது. வாக்கி டாக்கியில் மேல்தளத்தில் இருக்கும் பாதுகாவலருக்குத் தகவல் சொல்ல, உறுதியான தேகத்தோடு ஒருவன் படிக்கட்டுகளில் இறங்கினான்.

முன்னல்லாம் 1,000 ரூபாய் பாஸ்ல முடிஞ்சிரும். மெட்ரோல போக ஆரம்பிச்சதிலேர்ந்து 2,400 ரூபாய் ஆகுது உங்களுக்கு.

அவன் முகம் மாறிப் புன்னகை பூத்தது. கூடவே அவள். படிக்கட்டுகளின் பாதி இறக்கத்திலேயே அவனைப் பார்த்துக் கையசைத்தாள். இதைப் பார்த்ததும் அந்த ஆள் தன் இறுக்கத்தைக் கைவிட்டதைப் போன்ற ஒரு பாவனை செய்தான். ஏதும் சொல்லாமல் மீண்டும் மேலேறும் படிக்கட்டுகளில் ஏறிப்போனான்.

“அவரு கார் கம்பெனில வேலை பார்க்குறாரு. ரெண்டு பசங்க. அம்மா வீடு பக்கத்துலதான். அதனால கவலையில்லை. இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பாரு. சில நாள் ஸ்டேஷனுக்கே வந்து இட்டுனு போவாரு. சில நாள் நடந்துதான் போவணும்.”

எப்போதாவது இப்படித் தன்னைப் பற்றி அவள் சொல்லியதுண்டு. அதில் எந்தப் புகாரும் இருப்பதாக அவனால் அடையாளம்காண முடியவில்லை. புகார்கள் பிற ஆண்களுக்கான சமிக்ஞை களாகக் கருதப்படலாம் என்கிற எச்சரிக்கை உணர்வாகவும் இருக்கலாம். அவனும் ஒருபோதும் தன் வீடு பற்றிய புகார்ப் பட்டியலை வாசித்ததில்லை. அப்படி வாசிக்க எதுவுமில்லை. என்ன... பூரணி கொஞ்சம் சிக்கனப் பேர்வழி. எண்ணி எண்ணிச் செலவு செய்பவள்.

சிறுகதை: அடுத்த ரயில்
சிறுகதை: அடுத்த ரயில்

“முன்னல்லாம் 1,000 ரூபாய் பாஸ்ல முடிஞ்சிரும். மெட்ரோல போக ஆரம்பிச்சதிலேர்ந்து 2,400 ரூபாய் ஆகுது உங்களுக்கு. சரி, பஸ் நெரிசல்ல கசங்காமப் போய் வர்றீங்களே, அதுக்குக் கொடுக்க வேண்டியதுதான்” என்று புலம்புவாளே தவிர்த்து வேறு குறைகள் சொல்ல முடியாது. உண்மையில் அவன் புகார் மனிதர்கள் மீதல்ல, வாழ்க்கையின் மீது. அலைகளற்ற கடல் போன்ற அமைதி வாழ்க்கையை துயரமிக்க தீவாக மாற்றி விடுகிறது.

அடுத்த ரயிலுக்கான அறிவிப்பு அவன் சிந்தனையைக் கலைத்தது. இந்த முறை அவனைத் தவிர வண்டியில் ஏற யாருமேயில்லை. இனி அவள் வருவாள் என்று காத்திருப்பதிலும் அர்த்தமில்லை.

அவளைப் பார்த்து இன்றோடு ஏழு நாள்கள் ஆகின்றன. கடைசியாக உள்ளூர்க் கடைத் தெருவில் வைத்துப் பார்த்தது. என்ன ஆனதென்று தெரியவில்லை. அலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொள்ளாதது எவ்வளவு மடத்தனம்...

கதவு மூடிக்கொள்ளுமுன் ஏறிக்கொண்டான். ரயில் நகர்ந்தது. நடைமேடையைக் கடக்கும்வரை அவன் படிக்கட்டுகளையே பார்த்தான். அவன் வாழ்க்கை அங்கே வெறிச்சோடிக் கிடந்தது.

காதலோடு எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும், யாருக்காகவும் காத்திருக்கலாம். ஆனால், வெறுப்பு முளைவிட்ட பின்பு ஒரு சில நாள்கள்கூட யாரோடும் தாக்குப் பிடிக்க முடியாது. அவனுக்குள் அவள் மீதான வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக வேர்விடத் தொடங்கிவிட்டது. அவள் வேலை பார்க்கும் நிறுவனம் அவனுக்குத் தெரியாமல் இல்லை. ‘நான் ஏன் சென்று பார்க்க வேண்டும்’ என்று தோன்றியது.

வெறுப்போடு சேர்த்து புதிய ஞானமும் உண்டாகிவிடுகிறது.

நல்லவேளை... நல்ல மனைவி, அழகான குழந்தைகள், அமைதியான வாழ்க்கை. இவையனைத்தும் வெள்ளம் அடித்துக்கொண்டுபோகும் மலர்களைப்போல அவளின் சிரிப்பில் காணாமல் போயிருக்கும். எந்தக் கடவுள் செய்த புண்ணியமோ...

அவனுக்கு என்னென்னமோ தோன்றியது. யாரிடமாவது பகிர்ந்துகொள்ளலாம் என்றால், இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று கேட்டுவிடும் அபாயம் இருக்கிறது. மிகுதியான வேலைகளில் பலவும் மறந்துபோகின்றன. அதற்கு நேர்மாறாக விடுமுறை நாள்களில் மனைவி மக்களோடு அர்த்தமில்லாமல் ஊர்சுற்றினான். உணவகங்களுக்கு அழைத்துப் போனான்.

“சும்மாச் சும்மா வெளியில சாப்பிட்டா கட்டுபடியாகுமா... என்ன வேணுமோ சொல்லுங்க சமைச்சுப் போடுறேன்... இல்லையா நீங்க மட்டும்போய் சாப்பிட்டுக்கங்க... எங்களை விட்டுடுங்க” பூரணி இரண்டாம் முறையோ, மூன்றாம் முறையோ மறுத்துவிட்டாள்.

ஜிம்னாஸ்டிக் பார் விளையாட்டுகளில் நொடியில் அடுத்த கயிற்றுக்குத் தாவும் வீரன் போன்றது ஆண் மனம்.

‘சே, எவ்வளவு நல்லவள். இவளுக்குப் போய்...’

அவனுக்குக் கண்களில் நீர் திரண்டது.

அன்று மாலை சீக்கிரம் வேலை முடிந்துவிட்டது. பூமிக்குள் அவ்வளவு சீக்கிரம் புதைந்து இறங்க மனம் இன்றி ஸ்டேஷன் வாசலிலேயே நின்றிருந்தான். அந்த நேரத்திலும் வேக வேகமாக மக்கள் கடந்துகொண்டிருந்தனர். ஒரு தேநீரை அருந்திக்கொண்டே வேடிக்கை பார்க்கலாம் என்றால், தேநீர்க்கடை அகலமான அந்தச் சாலையின் எதிர்ப்புறம் இருந்தது. வாகனங்களின் பாய்ச்சல் குறைந்த கணத்தில் சாலையைக் கடந்து தேநீர்க்கடைக்குப் போனான்.

நாளைக்கு ஒரு ஆயிரம் ரூபா கொடுப்பா. பஸ் பாஸ் எடுக்கணும்.

தேநீர் அருந்தித் திரும்ப சாலையைக் கடக்க நின்றபோது அவள் எதிர்ப்பட்டாள். எதிர்பாராத சந்திப்பு. அவன் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தடுமாறினான். ஆனால் அவளோ, எந்தத் தடுமாற்றமும் இன்றிப் புன்னகைத்தாள். அதே புன்னகை. ஆளைக் கவிழ்த்தும் அதே புன்னகை.

தன் நிலை நழுவுவதை அவன் உணர்ந்தான். அதைப் பேச்சில் மீட்டெடுக்க முயன்றான்.

“என்ன ஆச்சு... எங்க போனீங்க இத்தனை நாளா... ஏன் ரயில்ல வர்றதில்லையா...”

அவள் நேராகப் பார்க்காமல் தலைகவிழ்ந்து நின்றாள்.

“முன்னல்லாம் 1,000 ரூபா பாஸ்ல முடிஞ்சிரும். இந்த மெட்ரோ சுகம் கண்டதிலேருந்து மாசமானா 2,400 ஆகுது. அது இருந்தா பிள்ளைங்களுக்கு எதுனா ஆகுமே...”

யாரோ அவன் சட்டையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளியதுபோலிருந்தது.

சிறுகதை: அடுத்த ரயில்
சிறுகதை: அடுத்த ரயில்

“அதுதான் காரணமா...”

அவள் பதில் சொல்லவில்லை. ``பஸ் வந்துடுச்சு...” என்று சொல்லி, வந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டாள். ஜன்னல் வழியாகப் பார்ப்பாள் என்று எதிர்பார்த்து ஏமாந்தான். சாலையில் காரி உமிழ்ந்த படியே எதிர்ப்புறம் கடந்து போனான்.

பேருந்துக்குள் கூட்டமில்லை. அனைத்து இருக்கைகளிலும் ஒரு ஒரு ஆளாக அமர்ந்திருந்தார்கள். சன்னமாய் வயதான ஒரு ஆண் அமர்ந்திருந்தான். அந்த இருக்கையைக் கடந்து முன்னால் போய் நின்றுகொண்டாள்.

அன்று அவனைக் கடைவீதியில் பார்த்ததை நினைத்துக்கொண்டாள். அந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கவே வேண்டாம். காய்கறி வாங்கிக் கொண்டிருந்தவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டான்.

குனிந்து காய்கறி பொறுக்கிக் கொண்டிருந்த அவள் கணவன் நிமிர்ந்து என்ன என்பதுபோலப் பார்த்தான்.

ஒரு கணமும் தாமதிக்காமல் ``என் வீட்டுக்காரரு...’’ என்று அவனுக்கு அறிமுகம் செய்தாள். அடுத்த நொடி சுதாரித்துக்கொண்ட அவன் விலகி நின்றான். ‘யார் இவன்’ என்னும் கேள்வி கணவனின் கண்களில் நிரம்பி வழிந்தது.

``சார், தினமும் ட்ரெயின்ல கூட வர்றவரு...’’

``ம்க்கும், மயிரு...’’ என்று அவள் காதுகளுக்குக் கேட்கும்படி மட்டும் புலம்பினான்.

சிறுகதை: அடுத்த ரயில்
சிறுகதை: அடுத்த ரயில்

செருப்பில்லாமல் வெயிலில் நிற்பவன்போல அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

அவள் பதில் பேசவில்லை. வெயில் ஏறிப் புழுக்கம் அதிகரித்ததுபோலானது. கணவனைத் தொல்லை செய்து சர்பத் வாங்கிக் குடித்தாள். கொஞ்சம் ஆசுவாசமாயிருந்தது.

“நாளைக்கு ஒரு ஆயிரம் ரூபா கொடுப்பா. பஸ் பாஸ் எடுக்கணும்” என்றாள். அடுத்த கணம் கணவன் யோசிக்காமல் பணத்தை எடுத்து நீட்டினான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism