Published:Updated:

சிறுகதை: நிகழ்ந்தாய் முகிழ்ந்தேன்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

நர்சிம்

சிறுகதை: நிகழ்ந்தாய் முகிழ்ந்தேன்

நர்சிம்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை
‘லவ் ஓகே... இந்தக் கல்யாணத்துக்கு அப்புறமும் வர்ற லவ்வப் பத்தி என்ன நினைக்கிற கார்த்தி, ஐ மீன் வேற ஒருத்தங்க மேல வர்ற லவ்?”

பெண்கள். நல்ல மாதவம் செய்து இப்படிப் பெண்களாகப் பிறந்து, அற்புத வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்தானே! ஆண் பெண் நட்பில், பெண்கள் நினைத்தால் எதைவேண்டுமானாலும் சட்டெனக் கேட்டுவிடலாம். ஆண்கள்தான் பரிதாப ஜீவராசிகள். ஒரு எமோஜியைத் தப்பாக அனுப்பிவிட்டால் அவ்வளவுதான். மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிடும். அதுவும் ஊதா நிற டிக் வந்த பிறகும் எந்த பதிலும் வரவில்லை எனில் தொலைந்தது கதை. இடது உள்ளங்கையில் வந்த புண்ணை வாகாக வைத்து நோண்டிக்கொண்டிருக்குமே குரங்குகள், அப்படி போனை நோண்டி, அழைப்பதும் அவள் எடுக்காமல் விடுவதும் என. ஆனால் அந்தச் சுவடே இல்லாமல், எந்தவிதக் குரல் ஏற்ற இறக்க பதற்றமும் இல்லாமல், “ஹே கால் பண்ணியிருந்தியா, எனிதிங் அர்ஜென்ட்?” என்று கேட்டு ஒரு வித மதிப்பற்ற குத்தாக அதைப் பொருட்படுத்தாமல் முடித்துவிடலாம் அந்தப் பெண்ணாகப்பட்டவள். ஆண் மனம்தான், எங்கே அவள், ச்சீ த்து தூ போ போ நீயும் சராசரி ஆண் வகைதானாவில் ஆரம்பித்து, நட்பை முறித்துவிடுவார்களோ என்ற பயத்தின் ஊடாகவே பெரும்பான்மை பெண்நட்புகளைப் பேண வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேற்சொன்ன அத்தனைக்கும் ஊடாக, கேள்வியை உள்வாங்கிக்கொண்டு, சாரலைப் பார்த்தேன். என்ன ஓர் அற்புதப் பெயர் இவளுக்கு. இந்தப் பெயர் வைத்த காரணத்திற்காகவே அவ்வப்போது அவள் அப்பா குறித்து நாங்கள் பேசுவதும் உண்டு.

“ம்ம். இந்த ஒரு விசயத்துல மட்டும் வடிவேலு டயலாக்க உல்ட்டாவா யூஸ் பண்ணுவாங்க நம்ம மக்கள்”

“புரியல”

“அந்தக் காதல் தனக்கு வந்தா தக்காளிச் சட்னி, ருசிச்சு சாப்ட ஆரம்பிச்சிருவாங்க, அடுத்தவங்களுக்கு வந்தா இரத்தக் களேபரம் ஆக்கிவிட்ருவாங்க.”

சிரிக்கத்துவங்கினாள் சாரல். சிரிப்பினூடே ஆங்கில புணர்ச்சிச் சொல்லைச் சொல்லிச் சிரித்தாள்.

சிறுகதை
சிறுகதை

``True that” என்றவள், “நான் சீரியஸா கேட்குறேன்” என்றதும், ``தட் ஹவ் டூ ஐ நோ” என மீண்டும் வடிவேலுவைத் துணைக்கு அழைத்து சமாளித்துச் சிரித்து, அவளை வழி அனுப்பி வைத்ததும் பாரம் இறங்கியதுபோல் இருந்தது. அல்லது, பாரமாக இருந்தது.

சாரல், எனக்கு சமீபமாகத்தான் பழக்கம். கல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த ஒரு விமானப் பயணத்தின் போதுதான் அறிமுகம். சமீபம் என்கிறேன் பாருங்கள். விளையாட்டாக ஐந்து ஆறு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் இன்றுபோல்தான் இருக்கிறது. அதைவிட முக்கியமாய், நட்பு, அன்றுபோலவே இருக்கிறது. அதே மரியாதை நிமித்தம். அதே நாகரிக இத்தியாதிகள்.

பொதுவாக இதுவரை எந்த ஒரு பயணமானாலும் எனக்கு அருகில் ஏதேனும் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர் ஒருவர் அமர்வார். அமர்பவர் சும்மாவா அமர்வார்? கேள்விகளால் வேள்விகளை நிகழ்த்தி, சாளரத்தின் வழியாகக் குதித்துவிட மாட்டோமா என எண்ண வைத்துவிடுபவராகத்தான் அமைவார். அல்லது சற்றுப் பருமனான, வீட்டிலிருந்தே தூங்கிக்கொண்டே வந்து நம் தோள்பட்டையைப் பார்த்தவுடன் தன் தாய்மடியெனக் கண்டுகொண்டு படக்கென சாய்பவராக. பயணங்கள் இனிமையானவை எனச் சொல்பவர்க ளெல்லாம் எந்த உலகத்தில், எவர் அருகில் அமர்ந்து சென்றார்களோ, செல்கிறார்களோ, அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் அன்று மட்டும், ஏதோ ஒரு ததாஸ்து தேவதை செக் இன் கவுன்ட்டரில் அமர்ந்து உம் விருப்பப்படியே ஆகுக என ஆசீர்வதித்திருக்க வேண்டும். அத்தனை வரிசையையும் தாண்டி, என் அருகில் வந்து எக்ஸ்கியூஸ்மியைச் சொல்லும் வரையிலும் நம்பிக்கை இல்லாமல்தான் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். சர்வ நிச்சயமாக அவளுக்குப் பின்னால் வரும் இரட்டைநாடி அங்கிள்தான் நமக்கு வாய்த்த சக சாவடியாளர் எனவும் எதிர்பார்த்திருந்தேன். வந்தாள். அமர்ந்தாள். அமர்ந்தவுடன் ஸ்நேகமாய் ஒரு சிரிப்பு. கல்கத்தாவின் இலக்கியவாதிகளும் இயக்குநர்களும் செதுக்கிவைத்த ஊரும் உணர்வும் ஒருமித்து இருந்தது அச்சிரிப்பில். முன்பு எப்போதோ ஒரு பெரிய குழுமக்குடிவிவாதப் பொன் பொழுதில் யாரோ சொன்ன, பெங்காலிப் பெண்கள்தான் அழகு, அதற்கு அடுத்துதான் கேரளா என்று சொன்ன கருத்தும் நினைவிற்கு வந்துபோனது. என்ன சரிதானே என்பதுபோல் புருவம் உயர்த்திக் கேட்பதுபோல் இருந்தது, அச்சிரிப்பு.

அவ்வளவுதான். ஏதோ என் ஒருவனால்தான் மழையே பொழிகிறது என்பதுபோல் அந்த நல்லோர் ஒருவனாக கையைக் குறுக்கி அமர்ந்து வானம் பார்க்கத் துவங்கிவிட்டிருந்தேன்.

சத்தியஜித்ரேயின் பதேர் பாஞ்சாலியும் சாருலதாவும் பற்றிப் பேசி அசத்திடவேண்டும் என்ற எண்ணமும் தோன்றாமலில்லை. வானில் ஏகும் ஊர்தியும் அதைவிட சற்று உயரமாய் அல்லாடும் என் மனமும் சமநிலைக்குவர சற்றுக் காத்திருந்தேன். அவ்வளவுதான் வங்கக்கடல் தெரிய ஆரம்பித்து சர்ரென சென்னையும் வந்துவிட்டிருந்தது. ஒரு சொல்கூட உதிர்க்காமல் இறங்கவேண்டிய நிர்பந்தம்.

உடமைகளைக் கைப்பற்றும் இடத்திலும் அவளுக்கு முன்னும் பின்னும் “விஜி உன் சீனு விஜி”த்தனமாக இடர்ப்படுதலை அரங்கேற்ற நினைத்தாலும், அவள் கால்ஷீட்களை டீல் செய்யும் சிம்புவின் மெத்தனத்துடன் என்னைக் கடந்தாள். இரண்டு மூன்று பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுக்கவேண்டிய மும்முர முனைப்புடன் இருந்தாள் என்பதால் நான் என் பெட்டியை லாகவமாக எடுப்பதாக நினைத்துத் தவற விட்டு, பதறி ஓடி எடுத்துக்கொண்டு நடந்தேன்.

“முதல்ல செக் இன் பண்ணுனா, நம்ம பேக் லாஸ்ட்டா வரும்ங்க, அதனால லாஸ்ட்டா பண்ணலாம்” என்று எனக்கு முன்னர் இருந்த ஒருவரை அதட்டிப் பணிய வைத்த சாதுரியப் பெரியவர் தன் பெட்டியைக் காணாமல் இங்குமங்கும் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்ததில் ஓர் ஆனந்தம்.

மனமில்லாமல் வெளியேறும்போதுதான் அது நிகழ்ந்தது. அப்பெண் யாரிடமோ பேசிக்கொண்டே இரண்டு மூன்று லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு மும்முரமாய்ச் செல்லும்போது, தன் கைப்பையைத் தவறவிட்டுப் போவதைப் பார்த்தேன். அதை எடுத்து, அழைப்பதற்குள் தன்னை அழைத்துப்போக வந்தவருடன் போய்விட்டிருந்தாள். அந்தக் கைப்பை, லூயி விட்டான். விலையுயர்ந்த பிராண்ட் என்பதையும் தாண்டி, இதை அவளிடம் சேர்ப்பிக்கும்போது, தொலைந்த பொருளைக் கண்டடைந்த முகமலர்ச்சியைப் பார்க்கும் ஆவல் மேலிட்டது.

இது சிறுவயதில் இருந்தே எனக்குள் இருக்கும் பழக்கம். முன்பு ஒருமுறை, பக்கத்து வீட்டுச் சுட்டிப்பையன் சரவணன் எங்கோ தொலைந்துபோய்விட்டான். வீட்டினர் தேடத்துவங்கி பின்னர் ஊரே தேடும்படி இருட்டிவிட்டது. அவன் கிடைத்துவிடக்கூடாது என என் மனம் பட்டபாடு இருக்கிறதே, அதாவது வேறு யாருக்கும் அவன் கிடைத்துவிடக்கூடாது. நான்தான் அவனைக் கண்டுபிடித்துக் கூட்டிபோய் அவன் தாய் முன் நிறுத்தவேண்டும். அவன் வீட்டாரின் மகிழ்வைப் பார்க்கவேண்டும் எனும் எண்ணம் உந்தித்தள்ள, எதிர்காற்றில் சைக்கிளை மிதித்து ஏறாத மேடெல்லாம் ஏறி அலைந்து, சோர்ந்து தெருவிற்கு வந்தால், வீட்டு வாசலில் கூட்டத்திற்கு நடுவே உதடுகள் விம்ம நின்றிருந்தான். அவனை எங்கிருந்தோ தேடிக்கொண்டு வந்துவிட்ட செந்தில்தான் அன்று நாயகன். நான் கற்பனையில் மிதந்த நன்றி நவிலல் ஏற்புகளை செந்தில் செய்துகொண்டிருந்தான்.

சிறுகதை
சிறுகதை

பெண்களின் கைப்பையைத் திறத்தல் ஆகாது எனினும், வேறு வழியில்லாமல் திறந்து, அதிலிருந்த குறிப்புகளைக் கொண்டு, நேரில் நின்று, கைப்பையைக் கொடுத்தபோது, சரவணனின் தாய் அன்று அடைந்த மகிழ்விற்கு சற்றும் குறைவில்லாமல் முகமலர்ச்சியைக் காட்டினாள். உள்ளே இருந்து வந்தவர், அவளைவிடவும் முகம் மலர்ந்து, வரவேற்று தங்களை அறிமுகம் செய்துகொண்டது இன்று போல் இருக்கிறது. சத்தியஜித்ரேவாவது ஹித்தியஜித்ரேவாவது, அசல் சென்னைப் பெண். அதிலும் பெயர், சாரல். சொல்லும்போதே குற்றால நினைவு, தமிழுணர்வு என, ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது.

அதன் பிறகான நாள்களில் கணவன் மனைவி இருவருமே அவ்வப்போது என் அலுவலகம் கடக்கும்போது அழைப்பார்கள். பெரும்பாலும் அருகிலிருக்கும் அமித்திஸ்ட் என வளர்ந்த நட்பில் ஒரு படி மேல் ஏறியது, சாரலிடமிருந்து வந்த அந்த அழைப்பும் அது தாங்கிவந்த பதற்றமும்தான்.

“How you placed?”

குரலில் இருந்த விபரீதம் உணர்ந்து, என்னாச்சு என்றதும், சட்டென அழும் குரலில் தன் கணவரின் உடல் நிலை குறித்துச் சொல்லி உடனே மருத்துவமனை செல்லவேண்டும், தொந்தரவிற்கு மன்னிப்பும், உதவிக்கு முன்னதாகவே நன்றியும் என்றவளின் அந்த உரிமை கலந்த அழைப்பில் ஓடோடி, உடன் நின்று, லிவர் பழுதடையத் துவங்கிவிட்ட செய்தியை உள்வாங்கி, இரண்டு நாள்கள் மருத்துவமனை வாசத்தில், அடிப்படை உடனிருப்பு உதவிகள் செய்ததில் ஓர் அன்னியோன்யம் பூத்திருந்தது, எங்களுக்குள்.

ஆனால் எது மாதிரியும் இல்லாத புது மாதிரி எல்லாம் நமக்குத்தானே வாய்க்கும். அப்படித்தான் சாரல். நல்ல மரியாதையாக வாங்க போங்க என்றே பேசினாலும் எதிர்பாரா தருணங்களில் வாடா போடாக்கள் வந்து விழும். கூடவே ஆங்கில, தமிழ் கெட்ட வார்த்தைகளும்.

சில நாள்களாக அவளுக்கும் நான் சார் என்று விளிக்கும் அவள் கணவருக்கும் மனவிலகல். வழக்கமான, கணவன் கைப்பேசி நிமித்த சண்டைதான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அது பெரிதாகிக்கொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது. பொசசிவ்னஸ் என்று சொல்லப்படும் ‘தனதேயிவன்’ விழித்துக்கொண்டு, அவரைச் சற்று அதிகமாக நோட்டமிட, மாட்டிவிட்டார் தலைவன். யாரோ அலுவலகப் பெண்ணோடு சற்று நெருக்கமாகப் பேசியதை உணர்ந்து, உலுக்க ஆரம்பிக்க, சண்டையாக உருப்பெற்றுவிட்டது.

அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப் பதால் தான் இந்தக் கதையின் முதல் வரியை அவள் கேட்டது.

சாரலின் நினைவைச் சற்று ஒதுக்கி, நாளை மும்பை போகவேண்டிய பயண ஏற்பாட்டைச் செய்துகொண்டிருக்கும்போதே, சாரலிடமிருந்து அழைப்பு வந்தது.

“உடனே வீட்டுக்கு வர முடியுமா, இட்ஸ் ப்ளடி அர்ஜென்ட்”

மணி மாலை ஆறு. சல்லையாக உணர்ந்தேன். ஏனெனில், எனக்குப் பயணம் என்றால் எடுத்து வைத்த பெட்டியை மீண்டும் எடுத்து வைத்து, மீண்டும் ஒரு முறை சரி பார்த்து விட்டாலும், மீண்டும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று யோசிக்கும் வியாதி. இந்த நேரத்தில் இப்படிக் கூப்பிடுகிறாளே என யோசித்துக்கொண்டே கிளம்பினேன். அதற்குள் நான்கைந்து வாட்ஸப் செய்திகள். அதில் முக்கிய ஒன்று, “நல்ல லாயர் தெரியுமா உனக்கு?”

வீடு அமைதியாக இருந்தது. பார்த்துப் பார்த்து அலங்கரித்த வீடு அது. எங்கு நோக்கினாலும் ஏதேனும் ஓர் அலங்காரப்பொருள் தட்டுப்படும். என் வழக்கமான இடத்தில் சென்று அமர்ந்தேன். இரண்டு மூலைகள் சந்திக்கும் சோபாவின் பகுதி எனக்கு சற்று அதிக வசதியான மனநிலையைத் தரும்.

அமைதியை உடைக்கும் விதம் “ எங்க தலைவரக் காணம்?”

“காலைலயே பெட்டியெல்லாம் கட்டிக் கிளம்பிட்டாரு. ஹி இஸ் நோ மோர் இன் மை லைஃப்.”

”அட ஏங்க நீங்க வேற” என்ற என் அசட்டையான மொழியை சட்டெனக் கத்தரித்தாள் சுட்டெரிக்கும் சொற்களால்.

“கட் தட் க்ராப்.”

”என்ன ஆச்சு சாரல்?”

“உங்களுக்கெல்லாம் விளையாட்டாப் போச்சுல்ல.. காலைல நான் கேட்கும்போது நீ கூட நக்கலாத்தான என்னப் பார்த்த... பொண்ணுங்கன்னா என்ன வேணா கேட்டுறலாம்ன்ற மாதிரி.”

அமைதியாக இருந்தேன்.

“படு கேவலமான ஒண்ணுடா இந்த ஊர்ல பொண்ணாப் பொறக்குறது. ஐ மீன் இட். ஏதாவது ஒண்ணு எங்களுக்குப் பிடிச்ச மாதிரி பண்ண முடியுதா? அதாவது, எல்லாரும் இருக்கும்போது, எங்களுக்குப் பிடிச்ச ஒண்ண, இயல்பா பண்ண முடியுதா? இன்னும் கொஞ்சம் சாப்டணும்னு தோணும். ஆனா எல்லாரும் என்னையே பார்க்குற ஒரு ஃபீல் குடுப்பாங்க. நீ கூட ஏதோ சொல்லுவியே உன் கிரேட் தமிழ்ல... உண்டி... சம்திங்.”

“உண்டி சிறுத்தல் பெண்டிற்கழகு.”

“யெஸ், அதான். ஏண்டா, எல்லாம் பெருசு பெருசா வேணும் எங்க கிட்ட. ஆனா உண்டி மட்டும் சிறுக்கணும், அதான் அழகு, க்ராப். சாப்பாடுல ஆரம்பிச்சு, ஏன்... எனக்கா செக்ஸ் வேணும்னு புருஷன்கிட்ட நேரடியா கேட்டுறக் கூடாது, அப்பிடிக் கேட்டுட்டா என்னடா அலையுறான்ற மாதிரி பார்க்கவேண்டியது. தலைவலி, டென்ஷன் நீ வேறன்னு அப்பிடியே கில்ட்டியா ஃபீல் பண்ண வச்சு, உடம்பு கூசிப்போற மாதிரி பண்றது. பிடிச்ச டிரெஸ்ஸ போடுறதுல ஆரம்பிச்சு, இதுபோட வேண்டாமேன்னு நினைச்சாலும் போட வேண்டிய நிர்பந்தம்னு, ஒரு நாள்ள மட்டும் அவ்ளோ பிரச்னை எங்கள சுத்தி. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு, ரொமான்ஸ், பிசினஸ், காபி, படம்னு கூட இருந்தா, இன்னொருத்திகூட பேசிட்டு இருக்கான் இந்தாளு.”

இதுபோன்ற சூழலில் எதிராளி தன் பக்க நியாயமும் கழிவிரக்கமும் கலந்து பேசி, தன்னை நிலைநாட்டிக்கொள்ள முற்படும்போது, அதைத் தகர்த்து, சற்று ஆசுவாசப்படுத்துதலே சாலச்சிறந்தது.

``அட, இப்போ நாம இல்லயா... அந்த மாதிரி ஜாலியா ஃபிரெண்ட்லியா பேசியிருப்பாரு, இதப் போய் இவ்ளோ சீரியஸா எடுத்து, ஐ திங்க் நீ ஓவரா ரியாக்ட் பண்ற.”

என்னைப் பார்த்து, ஒரு சிரி சிரித்தாள். “இந்த ஒலகத்துல ரொம்பத் துல்லியமானதும் டேஞ்சரானதும் என்ன தெரியுமா? ஒரு பொண்ணோட இன்ஸ்டிங், உள்ளுணர்வு, நீ லாயர் நம்பர் குடு.”

ஆமோதித்தே தீரவேண்டிய கருத்து. ஆனாலும் இது சந்தர்ப்பமல்ல.

“அட, தனியால்லாம் இருக்க முடியாது சாரல்.”

``ஏன் நீ இல்ல? ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காத. அன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் குடிச்சுட்டு, இவரு ஓவராகி இங்கயே தூங்குனதும், நீ கிளம்பும் போது ஏதோ சொன்னியே, போதை யெல்லாம் இல்ல உனக்கு... நிகழ்ந்தாய்...மகிழ்ந்தேன்னு ஏதோ...’’

“நிகழ்ந்தாய் முகிழ்ந்தேன்” என்று திருத்திச் சொல்லும் போது பயந்தேன்.

சிறுகதை
சிறுகதை

“அதேதான். இவரு பெரிய கவிஞரு.பேசிட்டுப் போய்ருவாரு.”

“சரி, இரு, நான் நாளைக்கு மும்பை போய்ட்டு ரெண்டு நாள்ள வந்துருவேன். இல்ல நீயும் எங்கூட வா.”

“நோ நோ, லீவ் மீ அலோன்.”

“அவரு எங்க இருக்காருன்னு தெரியுமா?”

தெரியவில்லை என அவள் உதடு பிதுக்கிச் சொல்லும்போது அவள் கண்களிலிருந்து நீர் உகுந்தது.

வழக்கமாக அவர்போகும் சென்னையின் அத்தனை உயர் நடுத்தர பார்கள், டீக்கடைகள், காபி டேக்கள் எனத் தேடி அலைந்தாலும் அவரைக் காணவில்லை. மொபைலை அணைத்துவைத்திருந்தார். அடையாளத் துறப்பிற்கும், விட்டு விலகிப் போய்விடுவதற்கும் பெரிதாய் ஒன்றும் செய்யத்தேவையில்லை, மொபைலைத் தூர எறிந்து விட்டாலே போதும்போல. சட்டென நினைவிற்கு வந்து, நண்பனை அழைத்தேன். இரவு பதினொரு மணி என்பதே பிரச்னையின் ஆழம் உணர்த்திவிட்டபடியால், உடனடியாக உதவினான். கடைசியாக அணைத்து வைக்கப்பட்ட டவர் விவரங்களை அரைமணி நேரத்தில் அனுப்பி வைத்தான். இரவில் மகாபலிபுரக் கோயிலின் தொன்மம் மனதிற்கு இதமாய் இருந்தது. அலைகளின் சத்தம். அவ்வளவு இருட்டிலும் அலையின் ஆரம்பப் புள்ளியின் துல்லிய வெண்மை துள்ளிக் கொண்டு அலையாக ஆகி வரும் காட்சி ரம்மியமாய் இருந்தது. இரவும் கடலும், அலையும், கரும்பாறைகளும் அதில் படரும் ஈரமும் அப்போதைய மனதிற்கு அவ்வளவு தேவையாக இருந்தது.

அதிகாலை மூன்று மணிக்கு சாரலை அழைத்த நொடியில் எடுத்தாள். கதவைத் திறக்கச் சொன்னதும், எதிர்முனையிலிருந்து கனத்த மெளனம்.

“சார் வந்துட்டாரா?”

“நோ”

“என்னாச்சு? கதவத் தெற?”

மீண்டும் அமைதி நிலவியது. பிறகு ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, திறந்தவள் முகத்தில் மின்னல் வெட்டிய மலர்ச்சி. சட்டென அதைக் கட்டுப்படுத்த எத்தனிக்கும் விதமாய் முகத்தை மாற்றிக்கொண்டிருந்தாள்.

நான் என்னுடன் நின்றிருந்த சாரை உள்ளுக்குத் தள்ளிவிட்டு, தண்ணி வேண்டும் என சைகை செய்ய, எடுத்து வந்து கொடுத்த, சாரல், தன் கணவனைப் பார்க்க,

அவர் அவ்வளவு பெரிய பெட்டியைத் தள்ளிக்கொண்டு உள்ளே போக,

“ஒரு நாள் கூத்துக்கு பீரோவ ஃபுல்லா இழுத்துப் போட்டுப் போயிருக்கான்” என்றாள்.

இனி நேராக விமான நிலையம் போகவேண்டியதுதான்போல. அல்லது, டிக்கெட்டை கேன்சல் செய்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, சாரலிடமிருந்து செய்தி வந்திருந்தது, தப்பும் தவறுமான தமிழில்,

‘நிகழ்ந்தாய் முகில்ந்தென்.’

அடுத்த நொடி, அவள் கணவரிடமிருந்து வந்தது.

செந்நிற இதயத் துடிப்பின் ஊடாக `லவ் யூ சார்’ என்று அனுப்பியிருந்தார்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினேன்.

ஆம். ஓர் எளிய அன்பைக் கையாள்வது அவ்வளவு கடினமாகத்தான் இருக்கிறது.