Published:Updated:

குறுங்கதை - 1: அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
குறுங்கதை

காஞ்சாஹசி

குறுங்கதை - 1: அஞ்சிறைத்தும்பி

காஞ்சாஹசி

Published:Updated:
குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
குறுங்கதை

``சாராயத்துக்கு உங்க பாஷையில என்ன சொல்வீங்க?” என்றேன்.

“காஞ்சாஹசி” என்றார் ஜெய்சங்கர்.

“பேரே பயங்கர போதையா இருக்கே...” என்று சிரித்தேன். அவரும் இணைந்துகொண்டார்.

குறுங்கதை - 1: அஞ்சிறைத்தும்பி

ஜெய்சங்கர் ஒரு நரிக்குறவர். தமிழ் சினிமா பார்த்து நரிக்குறவர்களைப் பற்றி உங்களுக்குச் சில பிம்பங்கள் இருக்கும் என்றால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. தகர டப்பா, டால்டா டின், ‘சாமியோவ்’ என்ற விளிப்பு, இரைச்சல், அழுக்கு...இவையல்ல அவர்கள். இந்தியாவின் ஆதிப்பழங்குடிகள் அவர்கள். உங்களைப்போல் என்னைப்போல் நவீன நாகரிக மனிதர்களுக்கு இருக்கும் சில அழுக்குகளோ பிரச்னைகளோ அவர்களிடமில்லை. அதிகபட்ச ஏமாற்று என்பது நரிக்கொம்பு விற்பதாக இருக்கலாம். அதை விற்று அவர்கள் சொத்து சேர்க்கப்போவதில்லை. அடுத்த மாத வீட்டுக்கடன் தவணை குறித்து அவர்களுக்கு பயமில்லை. வீடு என்பது அவர்களுக்குத் தங்கிச்செல்லும் ஓர் இடமே தவிர, அடுத்த தலைமுறைக்கான சொத்து இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“எங்க ஆட்களில் யாராவது பிச்சை எடுத்துப் பார்த்திருக்கீங்களா, திருடிப் பார்த்திருக்கீங்களா சார்? எங்க பொண்ணுங்க விபசாரம் பண்ணிப் பார்த்திருக்கீங்களா சார்? ஆனா இந்த சினிமாவில எல்லாம் எங்களை ரொம்பக் கேவலமாக் காட்டுறாங்க. அதுவும் ஜெமினி கணேசன் நடிச்ச ‘குறத்தி மகன்’ ரொம்ப மோசம் சார்.”

“ஆனா, நீங்கதான் சினிமா பார்க்கிறதை விட மாட்டேங்கிறீங்களே?”

குறுங்கதை - 1: அஞ்சிறைத்தும்பி

“ஆமா சார். எங்க ஆளுங்களுக்கு சினிமான்னா உசிரு. எங்க தாத்தாவுக்கு எம்.ஜி.ஆர்ன்னா ரொம்பப் பிடிக்கும் சார். தாத்தா, பாட்டி ரெண்டுபேருமே ஊசி, பாசியெல்லாம் எடுத்துட்டு கொட்டாய் போயிடுவாங்களாம். அங்கேயே உக்காந்து பாசிமணி பின்னுவாங்களாம்.

எம்.ஜி.ஆர் நம்பியாரைக் குத்து விடும்போதெல்லாம் இவங்க பின்னுற ஸ்பீடு அதிகமாகுமாம் சார்” என்றான் அஜித்.

அஜித், ஜெய்சங்கரின் மகன். சினிமாப் படங்கள் பார்த்துத் தங்கள் குழந்தைகளுக்கு சினிமா நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டுவது அவர்கள் வழக்கம். தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம், ஜீவா, ஏன், அமிதாப், சல்மான்கான்கூட இருக்கிறார்கள். பெண்களிலும் பத்மினி, ஜெயலலிதா, குஷ்பு, சிம்ரன், ஜோதிகா, சினேகா எல்லாம் உண்டு.

“ஆமா, உங்க அப்பாவுக்கு எம்.ஜி.ஆர்தானே பிடிக்கும், ஜெய்சங்கர் பேரை ஏன் வெச்சாரு?” என்றேன் ஜெய்சங்கரிடம்.

“எனக்கு ஒரு அண்ணன் இருந்தான் சார். அவனுக்கு ‘வேட்டைக்காரன்’னு எம்.ஜி.ஆர் சினிமாப் பேர் வெச்சிருந்தார். அவன் சின்னவயசில செத்துட்டான். எங்கப்பாவுக்குத் துப்பாக்கின்னா ரொம்பப் பிடிக்கும். ஜெய்சங்கரும் நிறைய படத்துல எங்க வேட்டைத் துப்பாக்கி வெச்சிருப்பாரில்ல, அதான் எனக்கு அந்தப் பேரு வெச்சிட்டாரு.”

“ஆமா, இப்போ எனக்கு உங்க கூட்டத்தில ஒரு பொண்ணைப் பிடிக்குதுன்னு வெச்சுக்கங்க. உதாரணத்துக்கு இந்த குஷ்பு இருக்குல்ல, அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணணும்னு கேட்டாத் தருவீங்களா?”

சடாரென்று தலைகுனிந்த ஜெய்சங்கர் “பண்ணலாம் சார். ஆனா... அதுக்கப்புறம் அந்தப் பொண்ணையும் உங்களையும் எங்க கூட்டத்துல சேர்த்துக்க மாட்டோம் சார்” என்றார்.

அஜித் போய்விட்டான். சுற்றிலும் பார்த்தேன். ஒரே இரைச்சல். உற்சாகம், அழுகை, விவாதம், கவிதை, சினிமா, கட்சி, பாட்டு எல்லாம் கலந்த இரைச்சல்.
அஜித் போய்விட்டான். சுற்றிலும் பார்த்தேன். ஒரே இரைச்சல். உற்சாகம், அழுகை, விவாதம், கவிதை, சினிமா, கட்சி, பாட்டு எல்லாம் கலந்த இரைச்சல்.

“சரி விடுங்க. நான் சீரியஸால்லாம் கேக்கலை. இந்த முயல் கறி செமையா இருக்கே?” என்றேன்.

“ஆமா சார்” என்றபடி தட்டை என்பக்கம் நகர்த்திவைத்தார் ஜெய்சங்கர். என் வாழ்க்கையில் சாப்பிட்ட சுவையான இறைச்சியுணவு களில் இவர்களின் உணவும் ஒன்று. குழம்பு, ரசமெல்லாம் கிடையாது. கறியை மசால் போட்டு வறுத்து, சோற்றில் பிசைந்து சாப்பிடலாம்.

நான் அப்போது பழநியில் ஒரு என்.ஜி.ஓ-வில் வேலை செய்துகொண்டி ருந்தேன். அப்போது அந்த என்.ஜி.ஓ.வின் மெயின் புராஜெக்ட் ‘குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு.’ குழந்தைத் தொழிலாளர்களைப் பள்ளியில் சேர்ப்பது, சேராதவர்களுக்கு மாலை வகுப்பு எடுப்பது என் பணி. பழநி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் எதிரில் ஒரு பெரிய மைதானம். அங்கேதான் அவர்கள் தங்கியி ருந்தார்கள். முதலில் வகுப்பு எடுக்க அனுமதிக்கவில்லை. பேசிப் பேசி சம்மதிக்கவைத்தேன். ஜெய்சங்கரின் மகன் அஜித்துக்குப் படிப்பில் நிறைய ஆர்வம். பள்ளியில் சேர்த்திருந்தேன். எப்போதாவது ஜெய்சங்கருடன் குடிப்பேன்.

“சார், காஞ்சாஹசி பத்தி எங்க கூட்டத்தில ஒரு கதை இருக்கு சார். படவேட்டம்மன், காளி, மதுரை மீனாட்சி, துர்க்கை இதுதான் நாங்க கும்பிடற சாமிக. எல்லாமே பொம்பளைச் சாமிதான் சார். ஆடு சாப்பிடறவங்க, எருமைக்கிடா சாப்பிடுறவங்கன்னு எங்களுக்குள்ள ரெண்டு பிரிவு உண்டு. எருமைக் கறி சாப்பிடுறவங்க கும்பிடற தெய்வம்தான் படவேட்டம்மன். ‘தேஹோ’ன்னு ஒரு அரக்கன் பகல்ல எருமை மாடாவும், ராத்திரியில அரக்கனாவும் மாறி எல்லாரையும் புடிச்சுத் தின்னான். அந்த அரக்கனை அழிக்க அவதாரம் எடுத்த சாமிதான் படவேட்டம்மன். அரக்கனை அழிக்கிறதுக்காகப் படவேட்டம்மன் ஊர் ஊரா அலையுறப்ப அம்மனுக்குத் தாகம் எடுத்துச்சு. அப்ப எதிர்க்க வந்த தயிர் விக்கறவன்கிட்ட, ‘தயிர்க்காரா... தாகமாயிருக்கு. தயிரு கொஞ்சம் தா’ன்னு அம்மன் கேக்க, அவன் ‘தர மாட்டேன்’னுட்டான். கொஞ்ச தூரத்துல காஞ்சாஹசி விக்கறவன் வந்தான். அவன் கொடுத்த காஞ்சாஹசியிலதான் அம்மனோட தாகமே தணிஞ்சுச்சு. உடனே அம்மன், ‘இனிமே தயிர்க்காரன் தயிரைத் தெருத்தெருவா அலைஞ்சு திரிஞ்சு கஷ்டப்பட்டு விக்கட்டும். காஞ்சாஹசி விக்கிறவன்கிட்ட சனங்களே தேடிப் போயி வாங்குவாங்க!’ன்னு வரம் கொடுத்திருச்சு. அதனாலதான் இன்னிக்கு வரைக்கும் காஞ்சா ஹசியை நாமளே தேடிப் போய் வாங்குறோம் சார்.”

“சூப்பர் கதை ஜெய்சங்கர்” என்று அவரைத் தோளோடு அணைத்துக்கொண்டேன்.

பிறகு நான் அந்த என்.ஜி.ஓ-வில் இருந்து விலகி வேறுவேறு வேலைகள். வேறுவேறு ஊர்கள். சிலமுறைதான் பழநிக்குச் செல்லும் வாய்ப்பு. இரண்டுமுறை ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினேன். அஜித் நன்றாகப் படித்துக்கொண்டிருந்தான். அவன் படிப்பைத் தொடர்வதே ஆறுதலாக இருந்தது. கடைசியாக ஒருமுறை சென்றபோது அந்த மைதானத்தில் சர்க்கஸ் நடந்துகொண்டிருந்தது. அவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.

பத்து வருடங்கள் கடந்திருக்கும். சென்னையில் பணி. வீட்டில் யாருமில்லை. ஒரு சனிக்கிழமை இரவு. டாஸ்மாக்கில் நுழைந்தேன். இதேமாதிரியான ஒரு டாஸ்மாக்கில்தான் நானும் என் நண்பன் சத்யனும் பேசிக்கொண்டி ருந்தோம்.

“இருக்கிறதிலேயே ரொம்ப போரான இடம் தெரியுமா? சொர்க்கம். ஓஷோதான் இதைச் சொன்னார். அங்கே மது ஆறா ஓடுமாம். சொர்க்கத்துக்குன்னே ரம்பா, ஊர்வசின்னு சியர்ஸ் கேர்ள்ஸ் இருப்பாங்களாம். யாருக்கும் எந்தக் கவலையும் கிடையாது. அதான் ஓஷோ சொல்வாரு, சொர்க்கத்தில ஒரே ஒருநாள் நியூஸ் பேப்பர் அடிச்சிருப்பாய்ங்க. கொலை கிடையாது, விபத்து கிடையாது, சீட்டுக்கம்பெனி கிடையாது, மோடி கிடையாது, பிக்பாஸ் எலிமினேஷன் கிடையாது, இன்க்ரிமென்ட் கிடை யாதுன்னா என்னடா சுவாரஸ்யம் இருக்கும்?”

“சரிதான். நரகம் எப்படி இருக்கும் தெரியுமா? தமிழ்நாட்டில டாஸ்மாக் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும். சொர்க்கம், நரகம் ரெண்டுக்கும் உள்ள ஒத்துமை சாராயம்” என்றேன் நான்.

நரகத்தைச் சுற்றிப்பார்த்தேன். மேஜை என்ற பெயரில் ஒரு குப்பைத்தொட்டி. காலி பாட்டில்கள், காது கிழிந்த வாட்டர் பாக்கெட்டுகள், கால்வாயாய் ஓடும் நீரில் ஊறிய காராபூந்தி, மிக்சர், மூன்று மாமிசத்துண்டுகள்...

“என்ன சார் வேணும்?” என்று வந்தவனுக்கு 25 வயதுக்குள் இருக்கும்.

குறுங்கதை - 1: அஞ்சிறைத்தும்பி

“முதல்ல இதை க்ளீன் பண்ணச் சொல்லுங்க.”

யாரையோ அழைத்து சுத்தம் செய்யச்சொன்னான். சில நிமிடங்களில் குப்பைத்தொட்டி மேஜையானது.

“மார்ப்பியஸ் புளூ ஒரு குவார்ட்டர். அப்புறம், சைடிஷ் என்ன இருக்கு?”

“சார் மார்ப்பியஸ் இருக்கான்னு தெரியலை. இல்லைன்னா என்ன வாங்கணும்?”

இந்தக் குரல் நிச்சயம் அவனுடையதுதான். அந்தத் தனித்துத் தெரியும் மூக்கும் நெற்றித்தழும்பும் அவனைத்தான் அடையாளம் சொல்கின்றன.

“உங்க பேர் என்ன?”

“எதுக்கு சார்...? அஜித்.”

“பழநியில நீங்க இருந்திருக்கீங்களா?”

“பழநியிலும் இருந்திருக்கேன். சார்... நீங்க...பாலா சார்தானே? எப்படி சார் இருக்கீங்க? சென்னையிலதான் இருக்கீங்களா?”

“ஆமா அஜித். ஜெய்சங்கர் எப்படியிருக்கார்? நீ படிச்சு முடிச்சியா?”

“அப்பா செத்துட்டார் சார். இப்போ நான் கூட்டத்தில இல்லை சார். மடிப்பாக்கத்தில ஒரு ரூமெடுத்துத் தங்கியிருக்கேன். படிச்சேன் சார். டிகிரி வரைக்கும் படிச்சேன். ஏதாவது கவர்மென்ட் வேலை கிடைக்க டிரை பண்ணினேன். இதான் இப்போதைக்குக் கிடைச்சது. எப்படியாவது டாஸ்மாக் சூப்பர்வைசர் ஆகணும் சார். அதுக்குத்தான் சார் டிரை பண்ணிக்கிட்டிருக்கேன். சார் உங்க போன் நம்பர் கொடுங்க. நான் ஃப்ரீயா பேசறேன். இப்போ என்ன சரக்கு இருக்குன்னு பார்த்துட்டு வர்றேன் சார்.”

அஜித் போய்விட்டான். சுற்றிலும் பார்த்தேன். ஒரே இரைச்சல். உற்சாகம், அழுகை, விவாதம், கவிதை, சினிமா, கட்சி, பாட்டு எல்லாம் கலந்த இரைச்சல். “ரெண்டு கடலை மட்டும் தாங்க சார்” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். “இப்பதான் கொஞ்சம் தண்ணி கேட்டீங்க. ஒரு வாட்டர் பாக்கெட் தந்தேன். என்னதான் வாங்கிட்டு வருவீங்க, வெறும் சரக்கு மட்டும்தானா?” என்று கடுப்படித்தார் ஒருவர்.

வெளியே வந்துவிட்டேன். அஜித்துக்கு என் போன் நம்பரைத் தரவில்லை என்பது நினைவிருந்தது.

- தும்பி பறக்கும்...