கட்டுரைகள்
Published:Updated:

சிறுகதை: நட்சத்திரம்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

ஹேமி க்ருஷ்

“சிணுங்கிக்கொண்டு மின்னும் ஒவ்வொரு நட்சத்திரமும் சமீபமாக விடுதலையடைந்த ஆன்மா” என்ற அவன் பிதற்றலை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் வான்மதி.

இந்த வார்த்தையை மட்டும்தான் அடிக்கடி சொல்கிறான். இந்தச் சிறிய கூடத்தில், ஜன்னலையொட்டி இருந்த மேசையில் எதிரெதிர் அமர்ந்திருந்தார்கள் சூர்யாவும் வான்மதியும்.

ஜன்னல் வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறான். வெளியே மட்டும்தான் பார்க்கிறான். சுருள் தலைமுடிக்கும் அடர்தாடிக்கும் இடையில் வெண்ணிற நீலக் கண்கள் தெரிந்தன. ஆஜானுபாகுவான உடல்.

முதன்முறை இவனைப் பார்த்தபோது இவனா தற்கொலைக்கு முயன்றான் எனத் தோன்றியது. அதுசரி, உடல் தோற்றத்திற்கும் மனோபலத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ன?

சிறிய அடுக்கு ஓடு வேய்ந்த வீடு. குளிர் காலமென்பதால், சுண்ணாம்புச் சுவரின் வாசம் காற்றில் அடித்தது. வீடு படுசுத்தமாக இருந்தது. சிறிய தொலைக்காட்சிப் பெட்டி, அருகிலேயே கட்டில், அதில் இரு தலையணைகள் ஒன்றின்மேல் ஒன்று வைத்து, கச்சிதமாய் மடித்த போர்வையும் வைக்கப்பட்டிருந்தது. வழவழப்பாக்கப்பட்ட சிமென்ட் தரை.

பிறகு இந்த மேசை நாற்காலிகள், தடதடவென ஓடும் மின்விசிறி இந்தக் கூடத்தில் இருக்கின்றன.

இவனைப்போல் பிடிவாதம் கொண்டவனை இதுவரை வான்மதி சந்திக்கவில்லை. இதுவரை அவள் சந்தித்தவர்கள் இவள் ஆறுதலாய்க் கேட்டதும் உடனே கண்களில் தாரையாய்க் கண்ணீர் வழிய அவர்களின் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இவன் வாயைப் பிடுங்க பிரம்மப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தாள்.

இதுவரை அவனுடைய தற்கொலை முயற்சிக்கான காரணத்தைச் சொல்ல மறுக்கிறான். நேரமாகியிருந்தது. வீட்டிலிருந்து நாலைந்து அழைப்புகள் வந்துவிட்டன. கிளம்ப வேண்டும். .

“சூர்யராஜ், நான் கிளம்பறேன். நாளைக்கு காலைல வர்றேன்.”

“வராதீங்க... உங்களை யாரும் வரச் சொல்லலை” ஜன்னல் வழியே மீண்டும் வானத்தைப் பார்த்தான்.

வான்மதி ஏதும் பேசாமல் தாழ்வாரத்திற்கு வந்தாள். தாழ்வாரத்திற்குப் பக்கவாட்டிலிருந்த சமையலறையில் மஞ்சள் குண்டு விளக்கில் சூர்யராஜின் சித்தி சமைத்துக் கொண்டிருந்தார். அந்த வீட்டில் சர்வ சுதந்திரமாக ஒரு பச்சைக் கிளி உலவிக்கொண்டிருந்தது.

“நான் வர்றேங்க” என்றாள். அவன் சித்தி, குரல் வந்த திசையை நோக்கித் திரும்பி, “அவன் ஏதுஞ் சொன்னானா கண்ணு?”

“உடனே சொல்ல மாட்டாங்க. கொஞ்சம் பொறுமையாகத்தான் இருக்கணும்” என்றபடி வெளிவந்தாள்.

சிறுகதை
சிறுகதை

அவன் பாட்டி வெளிப்புறமிருந்த திண்ணையில் காலை நீட்டி அமர்ந்து சுவரில் சாய்ந்து எங்கேயோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

இவள் வெளிவந்ததைப் பார்த்தும் “ஏதுஞ் சொன்னானா கண்ணு” சொல்லி வைத்தாற்போல் பாட்டியும் கேட்டாள்.

“சொன்னா சொல்றேங்க பாட்டி” என்றபடி நகர்ந்தாள். தெருவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். எல்லா வீடுகளிலும் சீரியல்களின் சப்தம் கேட்டது. வான்மதி இப்போது பேருந்து நிறுத்தம் வந்தடைந்த போது மினி பஸ் ஒன்று வந்தது. “ஈரோடீரோடீரோட்’’ என்று ஈரோட்டை இரட்டைக்கிளவியில் சொல்லிக் கொண்டிருந்தான் ஒருவன்.

ஏறலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டே ஏறியும் விட்டாள். இப்போதைக்கு எது வருகிறதோ அதில் ஏறுவதுதான் உத்தமம்.

ஜன்னல் சீட்டில் அமர்ந்ததும் வான்மதி கண்களை உள்ளங்கைகளால் தேய்த்துக்கொண்டாள். களைப்பாய் இருந்தது. நன்றாக இருட்டிவிட்டிருந்தது.

அவள் பகுதி நேரச் சேவை செய்யும் `விருட்சம்’ என்ற, தற்கொலை முயற்சி செய்பவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பிலிருந்து அழைப்பு வந்தது.

அவள் எடுத்துப் பேசினாள். “இன்னும் சரியா தெரிய வரலைங்க மேடம். கொஞ்சம் நேரம் எடுக்கும்னு நினைக்கிறேன். பிடிவாதமா இருக்கிறார். இதோட ரெண்டு வாட்டி போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன். நாளைக்கு எனக்கு ஆபீஸ் லீவ்தான். அதனால காலைல போறேன்... நாளைக்கும் பிடி கொடுக்கலைனா பாக்கலாம்” என்றபடி அலைபேசியைத் துண்டித்தாள்.

வான்மதிக்கு ஆரம்பத்தில் இந்த அமைப்பில் சேரும்போது சிறு தயக்கமிருந்தது. ஆனால் “சாகத் துணிந்தவர்களை அந்த எண்ணத்திலிருந்து மீட்டு, புது வாழ்க்கைக்குத் தயார்படுத்துவது புனிதமானது. நீ செய்ய வேண்டும். உன் உற்சாகமான பேச்சு மற்றவர்களுக்கு உந்துதல் அளிக்குமென்றால், அதை ஏன் இவர்களுக்குச் செய்யக்கூடாது?’’ அவள் மேலாண்மை புராஜெக்ட் செய்ய, பேராசிரியர் புனித மேரியைத் தொடர்புகொண்டபோது அவர் சொன்னது இது.

சிறு தயக்கத்துடன் இந்த புராஜெக்டிற்காக ஆரம்பித்து அதிலேயே பகுதி வேலையும் பார்க்க ஆரம்பித்து இரண்டு வருடங்களாயிற்று. 15 வயது இளம்பிள்ளைகள் முதல் 80 வயது முதியவர் பலரையும் பார்த்தாயிற்று. ஏதோ ஒரு புள்ளியில் உண்டான விரக்தி, பகிர்ந்துகொள்ள இயலாத தனிமை, பயம் ஆகியவைதாம் பெரும்பாலானோரின் தற்கொலை முயற்சிக்குக் காரணமாக இருந்தன. மயிலிறகுபோல் வருடியும், செல்லமாய்த் திட்டியும், அவள் சந்தித்த அனைவரையும் வழிக்குக் கொண்டு வந்திருக்கிறாள். ஏதோ வாழ்க்கையில் சில உருப்படியான செயல் செய்ததுபோல் நிறைவிருந்தது. ஆனால் இவன் மிகக் காட்டமாக இருக்கிறான். இவனைப் பேச வைப்பதே பெரும்பாடாக இருந்தது வான்மதிக்கு. மறுநாள் காலை அவர்களின் வீட்டிற்குச் சென்றாள். அந்தப் பாட்டி அதே திண்ணையில் அதே இடத்தில் அமர்ந்திருந்தார்.

“சாப்பிட்டீங்களா பாட்டி’’ என்று கேட்டாள். “இப்பதான் ஆச்சு கண்ணு” எனத் தலையை பலமாக ஆட்டினார்.

“ ஐயா என்ன பண்றார்?’’ எனத் தலையை உள் திசையில் அசைத்துக் கேட்டாள்.

“உள்ளதான் இருக்கான். சித்த பொறு. அதுவரையிலும் இங்க ஒக்காரு” என்றார்.

அவர் பக்கத்தில், பச்சைக் கிளி சிதறியிருந்த தானியங்களைத் தின்றுகொண்டிருந்தது.

“இந்தக் கிளி பறந்துபோகாதா பாட்டி, கூண்டுல இல்லாம வெளில விட்ருக்கீங்க?”

“ அட நீ ஒண்ணு. பொட்டாட்ட கெடக்கும்... எங்க போனாலும் எங்கூட்டுக்குள்ளார வந்துடும். எம் பொண்ணு காலைல கோலம் போட்டா, அதும் அலகால கொஞ்சம் கோலப்பொடியை எடுத்துத் தரையில கொத்தும்.

சாயங்காலம் இந்தத் திண்ணைல எல்லாரும் உக்காந்து பேசிக்கிட்டு இருப்போம். இதும் வந்து உக்காந்துக்கும்... அட! திண்ணைல சாயங்காலம் யாருமில்லைனாக்க, அது எங்களாட்டமே பேசறதா நினச்சுட்டு கியகியான்னு உளறிட்டுக் கெடக்கும். எல்லாரும் வாயப் பொளப்பாங்க. அவ்ளோ அறிவு இதுக்கு” என, பச்சைக் கிளியின் பெருமையைக் குழந்தைபோல் பொக்கை வாய்திறந்து சொன்னவர்,

“மனுசங்களுக்குதே புத்தி பல தெசைக்கு அலையுது. எம் பேரன பாரு, இப்படிக் கெடக்கிறான்” என, சேலைத் தலைப்பால் வாயைப்பொத்தி விசும்பினார்.

உள்ளே எட்டிப் பார்த்தாள். சமையலறையிலிருந்து வெளிவந்த சூர்யராஜ் வான்மதியைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு கூடத்திற்குப் போய்விட்டான். “ஒண்ணும் கவலைப்படாதீங்க பாட்டி. பாத்துக்கலாம். நான் உள்ள போறேன்” என்று சொல்லி உள்ளே சென்றாள்..

தயாராய், சூர்யராஜ் மேசைமுன் அமர்ந்திருந்தான். நேற்றுபோலவே ஜன்னலின் வழியே வெறித்துப் பார்த்தான்.

அவளும் எதிரிலிருந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்தாள். சன்னல் வெளிச்சம் உள்ளே கூசிற்று, ஓடுகளுக்கு நடுவிலிருந்த கண்ணாடி ஓடும், சன்னலும் வெயிலை அழகுபோல் உள்ளே கொண்டு வந்தன.

“சாப்பிட்டீங்களா சூர்யராஜ்? என்னை ஒரு வார்த்தைக்கூட சாப்பிடக் கூப்பிடல” என, அவனை சகஜமாக்கக் கேட்டாள்.

“எனக்கு சம்பந்தமே இல்லாத வாழ்க்கையை வாழறேன். அதான் வாழப் பிடிக்கல” நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“எது சம்பந்தமில்லாத வாழ்க்கை?’’ எனக் கேட்டாள்.

“சிறு வயசில இருந்தே சம்பந்தமே இல்லாத யாரோட வாழ்க்கையிலோ என்னையும் அறியாம நான் புகுந்துடறேன். அதால நான் கடுமையா பாதிக்கப்படறேன்.”

அவன் எந்த விஷயத்தைப் பற்றிச் சொல்கிறான் எனப் புரிந்தது. அவனே தொடர்ந்தான்.

“ஸ்கூல படிக்கிறப்போ, யாரோ குறும்பு பண்ணினா, நான்தான் அடி, திட்டு வாங்குவேன். ‘பழி ஒரு பக்கம்; பாவம் ஒரு பக்கம்’ங்கற பழமொழி எனக்கு எல்லா நேரமும் நடந்துச்சு.”

“இது எல்லாருக்குமே நடந்திருக்குமே சூர்யராஜ்.”

“முழுசா கேளுங்க. என் அப்பாக்குக் குடி, எப்பவும் குடிதான். குடிச்சுட்டு, என்னைச் சிறுபிள்ளைன்னுகூடப் பாக்காம அடிப்பார். மிதிப்பார். ஏன் எதுக்குன்னுகூட எனக்குக் காரணம் தெரியாது. தட்டிக் கேக்க அம்மாவும் இல்லை. அக்கம்பக்கம் இருக்கிறவங்க கேட்டா. அவங்களையும் திட்டி அடிக்கப் போனதால, அவங்களும் கண்டுக்காமப்போயிடுவாங்க.

ஒருமுறை என் அப்பாவின் அடிக்காக பயந்து வீட்டைவிட்டு ஓடிப்போனேன். அப்புறம் என்னைக் கண்டுபிடிச்சு, ஏன் ஓடிப்போனேன்னு தினமும் அடிப்பார். வாழவும் முடியாம, சாகவும் தெரியாம இருந்தேன். அப்புறம் என் அப்பா குடியினாலேயே செத்துப்போய்ட்டார். கொஞ்ச காலம் நிம்மதியா இருந்தேன். என் பாட்டியோட இந்த வீட்டுலதான் இருந்தேன். ஸ்கூல்ல நல்லா படிப்பேன்.”

“ம்ம்...”

“ப்ளஸ் டூ படிப்புச் செலவுக்கு, ஒரு ஜெராக்ஸ் கடைல சாயங்காலம் வேலை செஞ்சுட்டிருந்தேன். வேலைமுடிஞ்சு லேட்டாதான் வீட்டுக்குப் போவேன். அப்போ, அங்க ஒரு வீதில எவனோ திருட வந்து தப்பி ஓடியிருக்கான். அந்தச் சமயத்துல வீட்டுக்குப் போயிட்டிருந்த என்னைத் திருடன்னு நினைச்சுப் பிடிச்சாங்க. மரத்துல ரெண்டு நாள் முழுக்க கட்டி வச்சி அடிச்சாங்க. நான் செய்யலைங்கறதை யாருமே நம்பத் தயாரில்ல. இதனால எனக்கு ஒரு தோள்பட்டையே இறங்கி, ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணினாங்க. எந்தத் தப்பும் பண்ணாம தண்டனை வாங்கறது கொடுமை. என்னைத் திருடன்னு சொல்லி எல்லாரும் கேலி பண்ணினப்போ மனசுல வந்த வலி எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த ஊரே வேணாம்னு தூரமாப் போயிடணும்னு நான் மதுரைப் பக்கத்துல ஒரு காலேஜ்ல பி.எஸ்ஸி படிச்சேன். என் சித்திதான் படிக்க உதவி பண்ணினாங்க. காலேஜ் போனாலும் யாரோடவும் ஒட்டாமத் தவிச்சேன். சிறு வயசுல உண்டான வலி என்னை ரொம்ப இம்சை பண்ணுச்சு. இப்பவும்கூட! எல்லாத்தையும் மறக்கவும், வலில இருந்து மீள்றதுக்கும் என்ன வழி தெரியுமா? மரணம்! சர்வ சுதந்திரமா என் ஆன்மா திரியணும். இந்த உலகம் எப்பவும் என்னை வஞ்சிச்சுகிட்டே இருக்கறப்போ நான் ஏன் இந்த உலகத்துல வெக்கமில்லாமல் இருக்கணும்? இந்த உடலுக்குள்ள இருக்கிற ஆன்மாவை முழுசா நம்பறவன் நான். அது ரொம்ப சுத்தமானது. இந்த பூமியில நிறைய அழுக்குகள், சூழ்ச்சிகள் இருக்கு. என் பரிசுத்தமான ஆன்மாக்கு இதெல்லாம் பிடிக்கலை. அதனால விட்டு விடுதலையாகணும்.”

சிறுகதை
சிறுகதை

“சூர்யராஜ், நீங்க ஆன்மாவை நம்பறீங்கன்னா, அதைத் தாண்டி இருக்கிற சக்தியையும் நம்பித்தான் ஆகணும். உங்க விருப்பப்படி பிறக்காதப்போ, விருப்பப்படி இறக்கிறதும் எதிரானதுதானே? அது நீங்க உங்களுக்கே செய்யற துரோகம் இல்லையா?’’

அவன் எதுவும் பேசவில்லை அவன் நீலக் கண்கள் வெறித்தபடி இருக்கின்றன. அதில் மகிழ்ச்சி, குறும்பு, கோபம், சோகம் என மனிதனின் எந்த உணர்ச்சியையும் வான்மதியால் பார்க்க முடியவில்லை. அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்க யோசித்தாள். ஆனால் கேட்டால்தான் அதைப் பற்றிய கண்ணோட்டத்தைத் தெரிந்துகொள்ள முடியும். அதனால் நிதானமாகத் தொடர்ந்தாள்.

“சூர்யராஜ் நீங்க ஜெயிலுக்குப் போனீங்கன்னு கேள்விப்பட்டேன்?’’

சட்டென அவளைப் பார்த்தான்.

“அது உங்களுக்கு அவசியமில்லாதது.’’

வான்மதி கொஞ்சம் இறங்கிப் பேசினாள்.

“உங்க வலி காயம் எனக்கும் புரியுது சூர்யராஜ். எல்லாருமே அவமானங்களைப் பழகியவங்கதான்... நீங்க எவ்வளவு நல்லவர்னு எனக்குத் தெரியும்... நாளைக்கு என்ன நடக்கும்ங்கறது எதையும் நாம் தீர்மானிக்கிறது இல்லையே... கொஞ்சம் மனம்விட்டுப் பேசுங்களேன் ப்ளீஸ்” கனிவாய்ப் பேசினாள்.

“அந்தக் குழந்தை எவ்வளவு அழகா இருந்துச்சு தெரியுமா?’’ சூர்யராஜ் கண்களில் கண்ணீர் கோத்தது. மேலும் தொடர்ந்தான்.

“குறுகலான சாலைதான் அது. ரெண்டு பக்கமும் கடைகள், அந்தச் சாலையோட வளைவுல இருந்து ஒரு ஸ்கூட்டி திரும்புச்சு ஒரு அம்மா, தன்னோட அஞ்சு வயசுக் குழந்தையை ஸ்கூட்டில முன்பக்கம் நிக்கவச்சுட்டு வந்தாங்க. அந்தக் குழந்தை கையில் சின்ன காத்தாடி, வண்டிக் காத்துல ஓட்ற காத்தாடியப் பார்த்து சந்தோஷமா சிரிச்சுட்டு வந்துச்சு.

எனக்கு அந்தக் குழந்தையைப் பார்த்ததும் என்னை மறந்து ரசிச்சேன். எல்லாம் சில நொடிதான் இருக்கும். நான் இளநீருக்குக் காசு கொடுத்துட்டுத் திரும்பறதுக்குள்ள... அந்தக் குழந்தை லாரியோட டயருல சிக்கியிருந்துச்சு. அந்த ஸ்கூட்டி தாறுமாறா கிடந்துச்சு.எல்லாரும் ஓடுனாங்க. நானும் பதறி ஓடினேன். அந்தக் குழந்தையைப் பாக்கிற அளவுக்கு திராணியில்லை. லாரி டிரைவரை மூர்க்கத்தனமா வண்டில இருந்து இறக்கினேன். மூச்சுமுட்ட குடிச்சிருந்தான். என் அப்பாவப் பார்த்த மாதிரி இருந்துச்சு. அவன்ட்ட ஏண்டா இவ்ளோ வேகமா வந்தன்னு கேட்டேன். திமிரா பதில் சொன்னான். பளார்னு அடிச்சேன். பிறகு அங்க நிக்கக்கூட முடியாம நான் வந்துட்டேன். என்னோட ஹாஸ்டல் வந்தப்புறம்கூட அந்தக் குழந்தையோட முகம் கண் முன்னாடி வந்துட்டே இருந்துச்சு” அவன் குரல் தழுதழுத்தது... ஓரு பெருமூச்சு விட்டு, “அப்புறம் நடந்ததுதான் விதியோட வேடிக்கை” என்றான்.

``என்னாச்சு” சுரத்தில்லாமல் வான்மதி கேட்டாள்.

“மறுநாள் நான் காலேஜ்ல இருக்கிறப்போ, போலீஸ் வந்துச்சு. நான் கொலை பண்ணினதா சொன்னாங்க.

எனக்கு ஒண்ணுமே புரியலை. நான் யாரையும் பண்ணலைன்னு அதிர்ச்சில சொன்னேன். அப்புறம்தான் தெரிஞ்சுது, நான் முந்தின நாள் விபத்துல அந்த லாரி டிரைவரை அடிச்சதுல அந்த ஆள் அப்பவே காலி. பக்கத்துக் கடைல இருந்த சிசிடிவி கேமரா மூலமா தெரிஞ்சிருக்கு. அப்புறம் என்னையும் கண்டுபிடிச்சிருக்காங்க. ஆறு மாசம் ஜெயில்ல இருந்தேன். அப்புறம் பெயில் கிடைச்சுது.”

வான்மதி விக்கித்தாள். அவள் கேள்விப்பட்டது வேறு. குடிகாரனிடம் நடந்த சண்டையில் கொலை நடந்ததாகக் கேட்டதற்கும், இவன் சொன்னதற்கும் நிறைய மாறுபாடுகள்.

வான்மதி இறுக்கத்தைத் தளர்த்தாள்.

“சூர்யராஜ் இந்தக் காலத்துல யார் தப்பு செஞ்சாலும் நமக்கென்னன்னு போவாங்க. ஆனா நீங்க எவ்ளோ கிரேட் தெரியுமா? யாருன்னே முகம் தெரியாத ஒரு குழந்தைக்காக ஜெயில் வரைக்கும் போயிருக்கீங்க... அதும் அவனைக் கோபத்துல ஒரு அடி விட்டதுக்கே இறப்பான்னு யாருக்குத் தெரியும்? இதுல உங்க தப்பு எதுமில்லையே?”

“அதான் சொன்னேன். அந்தக் குழந்தை பேர்கூடத் தெரியாது. அந்த லாரி டிரைவர் யாருன்னும் தெரியாது. ஆனா விபத்துக்கு சம்பந்தமே இல்லாத எனக்கு ஜெயில் தண்டனை. வாழ்க்கை எவ்ளோ விநோதமா என்னை ட்ரீட் பண்ணுதில்ல?’’

“இருக்கலாம், நீங்க எதையும் திட்டமிட்டுப் பண்ணல. அப்படித் தப்பு செஞ்சவங்களே வெக்கமில்லாம உலாத்திட்டு இருக்காங்க. நீங்க ஏன் சாகணும்?”

“எனக்குத் துன்பம் நடக்கிறப்போ மௌனமா உச்சுக்கொட்டுற உலகம், சாகத் துணியறப்போ மட்டும் ஏன்னு உரிமையா கேள்வி கேக்கிறது எரிச்சலா இருக்கு. அதனாலதான் இந்த உலகம் எனக்குப் பிடிக்கலை” கடுமையான குரலில் சொன்னான்.

“சூர்யராஜ், கொஞ்சம் பொறுமையா இருங்க. இந்த உலகம் எல்லாருக்குமானதுதான். யாரும் யாரோட வாழ்க்கையையும் பிடுங்கக்கூடாது. பூமி சுழற்சில உங்க மேலேயும் வெளிச்சம் பட்டே தீரும். இது உலக நியதி. உங்களுக்கு உங்க பாட்டி, சித்தி, நாங்க எல்லாம் இருக்கோம். எங்களோட அமைப்புல சொல்லி, உங்களுக்கு வேலைக்கு நாங்க ஏற்பாடு பண்றோம். இனி நீங்க நிச்சயம் புது உலகத்தைப் பார்ப்பீங்க” என்றாள்.

அவன் எதுவும் பேசாமல் இருந்தான். வான்மதி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்...

போதும், இன்றைக்கு இவன் இவ்வளவு பேசினதே அதிகம். கொஞ்சம் யோசிக்கட்டும் என அவனிடம் விடைபெற்றுக் கொண்டாள்.

அவன் சித்தியைச் சந்தித்து,

“அவர் கொஞ்சம் உளவியல் பிரச்னைல பாதிக்கப்பட்டிருக்கார். கொஞ்சம் மருத்துவ சிகிச்சையும் அவசியம். எங்க அமைப்புக்குத் தெரிஞ்ச சைக்கார்ட்டிஸ்ட் இருக்கார். நான் வேணும்னா ரெண்டு நாள் கழிச்சு கூட்டிட்டுப் போறேன்’’ என விவரங்களைச் சொல்லிட்டு வெளிவந்தாள்.

“பாட்டி, ஒண்ணும் கவலைப்படாதீங்க. கொஞ்ச நாள்ல சரியாயிடுவார். இனிமே புது ஆளா உங்க பேரனைப் பாப்பீங்க. ரெண்டு நாள் கழிச்சு வரேன்” என்றதும், அவர் வான்மதியின் கையைக் கண்களால் ஒற்றிக்கொண்டார். அவர் கண்களின் ஈரம் வான்மதியின் கைகளில் ஒட்டிக்கொண்டது.

அன்று அவள் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்திருந்தாள். வண்டியில் செல்லச் செல்ல, அவள் மனதில் திரும்பத் திரும்ப சூர்யராஜ் வந்துகொண்டிருந்தான். இவனுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். அவன் பழையதை மறந்து புதியவனாய் வந்தால் மிளிர்வான். தன் கண்முன்னே இருந்த சவாலை எப்படிச் சமாளிப்பது என யோசித்துக்கொண்டே வந்தாள்.

சிறுகதை
சிறுகதை

வான்மதி இரு நாள்கள் கழித்து, அவனைப் பார்க்கச் சென்றாள். கடந்தமுறையைவிட இன்று உற்சாகமாக இருந்தாள். கையில் ஒரு ரோஜாவை வைத்திருந்தாள். அவனுக்கு வாழ்க்கை சுவாரஸ்யமானது எனச் சொல்லிட வேண்டும். நீ பார்த்த உலகம் கடுகளவு, பார்க்காத உலகம் வேறு மாதிரியானது. அது வேடிக்கையானது, வித்தியாசமானது, வியப்பானதும்கூட எனச் சொல்லிக் காண்பிக்க வேண்டும்!

இரவு 8 மணிக்கு ஈரோட்டில் மன நல மருத்துவரிடம் டோக்கன் வாங்கியிருந்தாள். அவனையும் அவன் சித்தியையும் அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தாள்.

பேருந்தில் அவனைப் பார்க்கப் போய்கொண்டிருக்கும்போது அவளுக்கு அமைப்பிலிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது.

“வான்மதி, சித்தோடு போயிட்டியா?’’

“போயிட்டேருக்கேன். 15 நிமிஷத்துல போயிடுவேன் மேடம்.”

“வேண்டாம் வந்துடு... சூர்யராஜ் சூசைட் பண்ணிட்டானாம்! இந்த டைம் காப்பாத்தமுடியல” என்றார்.

வான்மதிக்கு நம்ப முடியவில்லை.

“எப்போ?’’

“மத்தியானமே ஆயிடுச்சு... இப்போ அங்க போகாத... நீ இங்க வா அப்புறம் பேசிக்கலாம்” என்று அழைப்பை வைத்தார்.

நான் அவ்ளோ தூரம் சொல்லிட்டு வந்தேனே... சே..! கண்களில் ஆதங்கமும் கண்ணீரும் சேர்ந்து வந்தது. ஏன் இப்படிச் செய்தான்? மனம் குமுறியது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கினாள். அவளையும் அறியாமல் கண்களில் நீர் வழிந்துகொண்டே வந்தது.

போலியோவில் தேய்ந்த காலை இழுத்துக்கொண்டு, தள்ளுவண்டியில் மூட்டைகளைத் தள்ளிக்கொண்டு போய்க் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்தாள்.

அவன் மேட்டில் ஏற்றத் திணறியபோது, அங்கிருந்த சிலர் வண்டி ஏற்ற உதவினார்கள்.

அவன் மெதுவாய் வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்றான். வான்மதி அவனருகில் சென்று கையிலிருந்த ரோஜாவைக் கொடுத்தாள். அவன் முதலில் ஆச்சர்யமாகிப் பின் “தேங்க்ஸ்கா” என்று சிரித்தபடி வாங்கி, சட்டைப்பையில் போட்டுக்கொண்டு வண்டியைத் தள்ளிக்கொண்டே போனான். இந்த ரோஜா இவனுக்குப் போவதுதான் சரியாக இருக்கும்...

“இவ்வுலகம் எல்லாவற்றையும் தாக்குப்பிடித்து வாழ்பவர்களுக்கானது” என்ற டார்வின் கோட்பாடு நினைவிற்கு வந்தது. சாலையைக் கடந்து, வந்த பாதையிலேயே ஆதங்கத்துடன் செல்லத் தொடங்கினாள். இருட்டிவிட்டது. வானத்தில் என்றுமில்லாமல் ஜகஜோதியாக நட்சத்திரங்கள் மின்னின. ``சிணுங்கியபடி மின்னும் ஒவ்வொரு நட்சத்திரமும் சமீபமாக விடுதலையடைந்த ஆன்மா” என்று அவன் சொன்னது ஞாபகம் வந்தது. புதிதாக இன்னொரு நட்சத்திரமும் அந்த வானத்தில் சிணுங்கிக் கொண்டிருந்தது.