Published:Updated:

சிறுகதை: பாண்டி

Short Story
பிரீமியம் ஸ்டோரி
Short Story

சாம்ராஜ்

சிறுகதை: பாண்டி

சாம்ராஜ்

Published:Updated:
Short Story
பிரீமியம் ஸ்டோரி
Short Story

கோயில் எங்கோ தூரத்தில் இருந்தது. சுற்றிலும் எரியும் வெயில். ஓலைப் பந்தல்கள், வேன்கள், மினி லாரிகள், இருசக்கர வாகனங்கள் என மைதானம் நிரம்பிக்கிடந்தது.எல்லா ஓலைப் பந்தல்களிலும் வெயிலுக்கு நிகராக அடுப்பு எரிந்துகொண்டிருந்தது. ஆடுகள் வெட்டப்பட்டு, தோல்கள் உரிக்கப்பட்டு, கூறுகூறாக வெட்டப்பட்டுப் பெரிய பெரிய ஈய போனிகளில் அதன் கறியும், எலும்பும் பிரித்து வீசப்பட்டுக்கொண்டிருந்தன. காலையிலேயே ஆடு வெட்டப்பட்ட பந்தல்களில் பந்தி நடந்துகொண்டிருந்தது. இலையிலிருந்து மண்ணை நோக்கிப் போகும் குழம்புக்கு சிறுவர்கள் சோற்றால் அணைபோட்டுக் கொண்டி ருந்தார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தப் பெரிய சதுரத்தில் குறுக்கும் நெடுக்குமாக மனிதர்கள், கறிவாடை, ரத்தம், மொய் செய்ய அழைப்புகள், மொட்டை அடித்து, காதுகுத்தி அழுது களைத்துப்போய் உறங்கும் குழந்தைகள், தன் குழந்தைக்கு முறையாகச் செய்முறை செய்யாத தாய்மாமன்களைக் கண்டபடி ஏசும் தங்கச்சிகள், கக்கத்தில் தோல்பையை வைத்து மொய் வாங்குபவர், மெல்ல முடியாமல் கறியை மெல்லும் தண்டட்டிக் கிழவிகள், வியர்வை வழிய வழிய அடுப்பிலிருக்கும் பாத்திரத்தில் கறியை அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கும் சமையல்காரர்கள். இலை போடும் இடத்தில் நாய்கள் ஆர்வமாய் இலைகளுக்குள் முகத்தை நுழைத்துக் கொண்டிருந்தன. ஒரு செவலை நாய் மத்திரம் மற்ற நாய்களோடு சேராமல் தனியாக நின்று கொண்டிருந்தது. மற்ற நாய்கள் இலைகள் எறியப்பட்ட வுடன் கூட்டமாய் ஒன்றை ஒன்று பார்த்துப் பல்லை விகாரமாய்க் காட்டியபடி உறுமிக்கொண்டு இலைகளின் மீது பாய்ந்தன. ரத்தக் கவிச்சி காற்றில் அலைந்தது.

ஆடு
ஆடு

சாமி இருக்கும் இடம் குறுகலாக இருட்டாய் இருந்தது. தூணில் ஒரு ரசம் போன கண்ணாடி மாட்டப்பட்டி ருந்தது. உபயம் செய்திருந்தவரின் பெயரும் அழிந்திருந்தது. சகதியிலிருந்து நடந்து வந்த கால்கள் தரையெங்கும் தடத்தை உருவாக்கியிருந்தன. அந்தத் தடங்களின் ஓரங்களில் லேசான தீற்றலாய் சிவப்பு பரவியிருந்தது. ஈக்கள் அந்தச் சிவப்பின் மீது பறந்து பறந்து அமர்ந்தன. தடம் முடியும் இடத்தில் சகதி தொடங்கியது. சகதியின் ஓரத்தில் வெட்டப்பட்ட ஆட்டின் தலையில் அதனுடைய வலது கால் வாயில் திணிக்கப்பட்டி ருந்தது. ஈக்கள் ஒற்றுமையாய்ப் பறந்து அமர்ந்தன. வெள்ளை, கறுப்பு, காபிநிறம், செம்பட்டை எனப் பல நிறத்தில் தலைகள் அடுக்கப்பட்டிருந்தன. சகதியில் ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகக் கலந்திருந்தன. வெட்டப்படப் போகும் ஆடு சகதியின் மத்தியில் கொண்டு வந்து நிறுத்தப்பட, ஆட்டின் உரிமையாளர், அதன் கழுத்துக் கயிற்றை இழுத்துப் பிடிக்க, வெட்டுபவர் அலட்சியமாக வந்து ஆட்டின் கழுத்தில் கூர்மையான அரிவாளால் ஒரு பாய்ச்சு பாய்ச்ச தலை தனியாக சகதியில் உருண்டது. தன் உடலைப் பார்த்தபடி துடிக்கும் ஆட்டின் தலையை பரட்டைத் தலை சிறுமி அதன் காதைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போனாள். ஆட்டின் தலை இன்னும் துடித்துக் கொண்டிருக்க அதன் ரத்தம், சாயம்போன அவளது பாவாடையில் தெறித்தது. ஏற்கெனவே குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆட்டின் தலைகளின் மீது புதிய தலை வைக்கப்பட, அந்த ஆட்டின் தலை தனக்குக் கீழே இருக்கும் செம்பட்டை ஆட்டின் நிறத்தை மாற்றியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``முடி எடுக்குமிடம்” என அம்புக்குறி இடப்பட்டிருக்கும் தகர போர்டைத் தாண்டி, தகரக் கொட்டகைகளுக்கு அந்தப்புறம் கோயில் கொட்டலின் வலப்புறத்தில் கருவேல மரத்தின் நிழலில் ராமரும் குருவும் சோனையும் உட்கார்ந்திருந்தார்கள். இலையில் அப்பொழுதுதான் வெந்த கறி இலையைக் கருக்கியபடி கிடந்தது. எண்ணெய் இலையிலும் மண்ணிலும் பரவிக் கிடந்தது. பாட்டிலில் சரக்கு முக்கால்வாசி காலியாகியிருந்தது. தண்ணீர் பாக்கெட்டுகள் தாறுமாறாய்க் கிடந்தன. சோனை நிதானமில்லாமல் இருந்தான். குரு இடம் மாறி இடம் மாறி உட்கார்ந்தான். ராமர் நிதானமாய் மீதம் இருக்கும் சரக்கை மூன்று பிளாஸ்டிக் டம்ளர்களிலும் அளவு மாறாமல் துல்லியமாய் ஊற்றினான். ஒரு சின்னப் பிள்ளை பட்டுப்பாவாடை யோடு அவர்களை தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தது. நிமிர்ந்து அந்தப் பெண் குழந்தையைப் பார்த்த ராமர் “ஏய், போய் அப்பத்தாகிட்ட மாமா நெஞ்சுக்கறி கேட்டேன்னு வாங்கிட்டு வா” சின்னப்பிள்ளை போகாமல் அங்கயே நிற்க “போடி” என்றவாறு தீப்பெட்டியை அவள்மீது எறிவதுபோல பாவனை செய்ய பட்டுப்பாவாடைப் பிள்ளை பந்தலுக்குள் ஓடியது.

மாதம் முழுக்க அடகு வைக்க வரும் நகைகளுக்கான தொகையும், ஐந்து கிளைகளுக்கான சம்பளமும் அங்கிருந்தே போகின்றன என்பதையும் கண்டுபிடித்திருந்தான்.

காலியான பாட்டிலைப் பார்த்து எரிச்சலான சோனை ராமரைப் பார்த்து “அவ்ளோதானாண்ணே சரக்கு?” என ஏமாற்றத்துடன் கேட்க, ராமர் “உனக்குப் பத்தலையாடா? வேணும்னா வாங்கிக்கலாம்” என்றான். சோனை பதிலொன்றும் சொல்லாமல் பாட்டிலையே பார்த்தவாறு இருந்தான். குரு திடீரென உணர்ச்சி வசப்பட்ட வனாய் “என்னடா சோனை வேணும்? நான் வாங்கித் தாரேன்… சொல்றா… சொல்றா” எனத் தொண்டை நரம்பு புடைக்கக் கத்தி, பெருமூச்சு விட்டபடி “அந்தப் பரதேசி மட்டும் நம்மள ஏமாத்தலைன்னா நம்ம எதுக்கு இப்படி நாயி மாதிரி நக்கிட்டுக் கிடக்கிறோம்” என்றான். சோனை பிளாஸ்டிக் கப்பைக் கைகளால் கசக்கினான். வானைப் பார்த்து ``யாவ்” என ஏப்பமிட்டவன், ராமரின் தோளை அழுத்தமாய்ப் பிடித்து “அண்ணே அந்தக் குமாரை ஏதாவது செய்யனும்ணே. இல்லைனா நம்ம எல்லாம் மொன்னப்பயல்கள்னு அர்த்தம்” அவன் முடிப்பதற்குள் குரு, “அந்த நாய் என் முன்னாடியே சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுட்டுத் திரியிறான். அன்னிக்கி சேந்தமங்கலம் தேரப்ப அந்தக் கோனவாச்சி ராணியோட, பொண்டாட்டி மாதிரி சோடி போட்டு நடக்கிறான். எல்லாம் யாரு காசு? எல்லாத்தையும் அடிச்சிட்டுப் போயிட்டான். கேட்டா போலீஸ் எல்லாத்தையும் புடுங்கிட்டாங்கன்னு சொல்றான். ஸ்டேசன்ல விசாரிச்சா, பணமா ஒரு ரூபாகூடக் கிடைக்கல, நகைய மட்டும்தான் மீட்டோம்னு சொல்றாங்க.” சோனை தரையில் ஓடும் எறும்புகளை வழிமறித்துக்கொண்டிருந்தான். தரையையே பார்த்துக் கொண்டிருந்தவன் நிமிராமலே “தினம் காலையிலயும் சாயங்காலமும் லாடனேந்தல் சொசைட்டிக்குப் பால் ஊத்த வர்றான். ஆவாரங்காடுகிட்ட ஆள் நடமாட்டமே இருக்காது. அங்க வச்சி சோலிய முடிச்சிறலாம்.”

ராமருக்கும் ஆறு மாதங்க ளாய்க் கனன்று கொண்டிருந்தது. பட்டுப்பாவாடை சின்னப்பிள்ளை பக்கத்தில் வராமல் தூரமாய் நின்று “மாமா, கறி” என்றபடி இலையைக் கீழே வைத்துவிட்டு ஓடியது. குரு குத்துக்காலிட்ட வாறே நடந்து கறி அருகே போய் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். சோனையும் போய் அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். இருவரும் ஒரு சேர ராமர் பக்கம் திரும்பி “அண்ணே இன்னைக்குப் பண்ணிரு வோம்ணே” என்றார்கள். ராமர் பதிலொன்றும் சொல்லாமல் எழுந்து வேட்டியை உதறிக் கட்டினான். கத்தி கீழே விழ, எடுத்து மறுபடியும் அடிவயிற்றில் செருகிக் கொண்டான். குருவைப் பார்த்து `வண்டி எடு’ என சைகையில் சொன்னான். குரு லேசான தள்ளாட்டத்துடன் வண்டியை நோக்கிப் போனான். ராமர் தன் வண்டியை உதைத்துக் கிளப்பினான். குருவின் வண்டியில் சோனை ஏறிக்கொண்டு வண்டியின் பக்கவாட்டில் `பொருள்’ இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டான்.

இரண்டு வண்டிகளும் அந்தச் சதுரத்திலிருந்து ஒரு தீப்பெட்டியிலிருந்து எறும்புகள் வெளியேறுவதைப்போல வெளிப்பட்டன. ராமர் வண்டியை மேட்டில் ஏற்றி நிறுத்தி சாமி இருக்கும் பக்கம் திருப்பி “பாண்டிச்சாமி! எல்லாம் உன்ன நம்பித்தான்” என இரண்டு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டான்.

ராமர், சோனை, குரு மூவரும்தான் முதலில் கூட்டாளிகள். ஊருக்குள் இவர்களுக்கு இடையே இருக்கும் உறவு யாருக்கும் தெரியாது. ராமர்தான் தலைவன்போல. சொந்த ஊரான கரட்டுப்பட்டி யிலிருந்து 50 கிலோமீட்டர் தள்ளித்தான் `சம்பவங்கள்’ செய்வார்கள். வழிப்பறி, சங்கிலி பறித்தல், ஆளில்லாத வீட்டை நோட்டம் பார்த்துத் திருடுவது, தனியாகப் போகும் பெண்களை மடக்கித் தூக்கிக்கொண்டு போவது என எல்லாக் குற்றங்களையும் ஒற்றுமையாகச் செய்வார்கள். குமார் பின்னால் இவர்களுடன் சேர்ந்து கொண்டான். ராமர்தான் அவனைக் கூட்டி வந்தான். சோனைக்கும், குருவுக்கும் அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. “அவன் நம்மளோட சரிப்பட்டு வருவானான்னு தெரிலண்ணே” என மறைமுகமாய்ச் சொல்லிப் பார்த்தார்கள். ராமர் அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வில்லை. குமார் ராமருக்கு ஒன்று விட்ட தம்பி முறை. குமார் வந்தபின் `சம்பவங்கள்’ வேறு விதமாய் நடந்தன. குமார் பல காரியங்களை அறிந்து வைத்திருந்தான். எத்தனை மணிக்கு பெட்ரோல் பங்கிலிருந்து பேங்கிற்குப் பணம் கட்டப்போகிறார்கள், மாட்டுத்தாவணியிலிருந்து திரும்பும் வியாபாரிகளில் யாரிடம் கூடுதலாகப் பணம் இருக்கிறது, எந்தக் கல்லாவில் என்றைக்கு ராத்திரி பணம் இருக்கும், எந்த வீட்டில் கல்யாணத்திற்கு வாங்கிய நகை இருக்கிறது எனப் பல தகவல்களைத் தெரிந்து வைத்திருந்தான். தனியாகவே செய்பவனாக இருந்தான், குற்றம் ரத்தத்திலேயே இருந்தது. ராமரைத் தலைவனாக பாவித்தான். மற்ற இருவரோடும் அவ்வளவு இணக்கமும் இல்லை பிணக்கமும் இல்லை. ராமரிடம் எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருப்பான். ``அண்ணே சில்லறை திருட்டுக்காக உங்கிட்ட சேரலண்ணே. பெருசா எதாவது செய்யணும்.”

“மலையாளத்தான் கம்ப்ளெயின்ட் கொடுக்காம கமுக்கமா விசாரிக்கப் பார்க்கிறான். வெளிய தெரிஞ்சா யாரும் அடகு வைக்க வரமாட்டாங்க!’’

அப்பொழுதுதான் கரட்டுப்பட்டியில் வர்கீஸ் என்ற பிரபல நகை அடகு நிறுவனம் தனது 439வது கிளையை திறந்தது. பிரபல நடிகரைக் கொண்டு எல்லோரையும் அடகு வைக்கச் சொல்லி விளம்பரத்தில் வற்புறுத்தியது.

குமார் தனியாக வழிப்பறி செய்து கிடைத்த சங்கிலியை அங்கு அடகு வைக்கப் போக, தனது அறையின் கண்ணாடிக் கதவு வழியாக அவனைப் பார்த்த மாத்திரத்தில் பிராஞ்ச் மேனேஜர் மத்தாயிக்கு “ஆள் பிசகானு” எனத் தோன்றியது. மத்தாயி கேஷியரிடம் கண்ணால் பேசினான். கேஷியர் கம் அப்ரெயிஸர் சிவநேசன் குறைந்த தொகையே அதற்கு அடகுத் தொகையாய்க் கிடைக்கும் என்றான். குமார் ஏன் எனக் கோபமாய்க் கேட்க, ``இது அவ்வளவு நல்ல தரமான நகை இல்லை.’’ குமார் வெறுப்போடு நகையை எடுத்துக்கொண்டு வெளியே போனான். மத்தாயி ``கர்த்தாவே! ரட்சிச்சு” எனக் காற்றில் சிலுவையிட்டுக்கொண்டான்.

அப்பொழுது முதல் ராமரிடம் விடாமல் குமார் ஓதிக்கொண்டேயிருப்பான். “அந்த மலையாளத்தான் கம்பெனிய ஏதாவது செய்யணுமே.” ராமருக்கும் பணமுடை இருந்தது. சின்னச் சின்னதாய்ச் செய்து, அதை குரு, சோனையோடு பிரித்து... பெரிதாய் ஏதாவது செய்ய வேண்டும் என்று குமார் வந்ததிலிருந்து எல்லோருக்கும் தோன்றியிருந்தது.

சிறுகதை
சிறுகதை

வர்கீஸைக் கண்காணிக்கத் தொடங்கினார்கள். எப்பொழுது பணம் வருகிறது, என்றைக்குக் கூடுதலாய்ப் பணம் இருக்கும் என குமார் குருவிபோல துருவித் துருவி தகவல் சேகரித்தான். மாதத்தில் முதல் திங்கள்கிழமை கூடுத லாய்ப் பணம் இருக்குமென அங்கு கூட்டிப் பெருக்கும் மகேஸ்வரி மூலம் கண்டுபிடித்தான். மாதம் முழுக்க அடகு வைக்க வரும் நகைகளுக்கான தொகையும், ஐந்து கிளைகளுக்கான சம்பளமும் அங்கிருந்தே போகின்றன என்பதையும் கண்டுபிடித்திருந்தான். முன்பு சோனையின் அம்மாச்சியின் வீடாக இருந்ததைத்தான் வர்கீஸ் நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்தது. அம்மாச்சியின் சொத்துகளை யாருக்கும் தராமல் தாய்மாமன் மணிகண்டன் சூறையாடி யிருந்தார். அவரிடமிருந்து இந்த வீட்டை வாங்கிய மேட்டுத் தெரு சிங்காரம் வீட்டை மாற்றம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்திருந்தார். கிழக்குத் தெருவில் தொடங்கி பின்னாலிருக்கும் நடுத்தெரு வரை செல்லும் அறுபது அடி வீடு அது. வர்கீஸ் அந்த வீட்டை மராமத்து பார்த்து எடுத்திருந்தாலும் அந்த வீட்டிற்குள் நுழையும் ரகசிய வழி ஒன்றை சோனை மாத்திரமே அறிவான். சிறுவயதில் அவன் தாய் மாமன் உருவாக்கிய வழி அது.மெதுவாக ஆராய்ந்து இரண்டு மாதங்கள் கழித்து மாதத்தில் முதல் திங்கள்கிழமை இரவு சோனை முன்னால் போக, நால்வரும் இறங்கினார்கள். அம்மாச்சி வீட்டின் சாமி ரூம் லாக்கர் ரூமாக மாறியிருந்தது. உள்ளே நுழைந்தவுடன் குமார் அலாரம் வயரை அறுத்தி ருந்தான். நான்கு பேரும் மூன்று மணி நேரம் சுவரை இடித்து உள்ளே நுழைந்தார்கள். பணத்தையும், நகையையும் ஒரு பெரிய ரெக்ஸின் பையில் போட்டார்கள். அறையை விட்டு வெளியே வரும்போது சோனை கதவு நிலையில் இடித்துக்கொண்டான். ஒரு கணம் திரும்பி அந்த நிலையையே உற்றுப் பார்த்தான். அம்மாச்சி அந்த நிலைக்கதவுக்கு மஞ்சள், குங்குமம் அப்பியிருப்பாள்.

ராத்திரியில் நகையையும் பணத்தையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டாம் என ராமர் சொன்னான். குமார் வீடுதான் பக்கத்திலிருந்தது. அங்கேயே பணமும், நகையும் அன்றைக்கு இரவு இருக்கட்டும் என ராமர் சொல்ல, சோனையும், குருவும் தயங்கி னார்கள். குமாருக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. ராமர்தான் சோனையையும், குருவையும் ஒரு நாள்தானே என சமாதானப்படுத்தினான்.

மறுநாள் வர்கீஸ் திறக்க வில்லை. ஊழியர்களும் வேறு சிலரும் உள்ளே போவதும் வருவதுமாய் இருந்தார்கள். ராமருக்கு ஒரு விஷயம் புரிந்தது. “மலையாளத்தான் கம்ப்ளெயின்ட் கொடுக்காம கமுக்கமா விசாரிக்கப் பார்க்கிறான். வெளிய தெரிஞ்சா யாரும் அடகு வைக்க வரமாட்டாங்க.” சோனையிடம் குமாரைக் கூட்டி வரச் சொன்னான். மொபைலில் எதுவும் பேசக்கூடாது என ஏற்கெனவே பேசி வைத்திருந்தார்கள். போன சோனை பதறி ஓடி வந்தான். ராத்திரி குமார் வீட்டிற்கே வரவில்லை என அவன் பொண்டாட்டி சொன்னதாகச் சொன்னவன், அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டான். குரு ராமர்மீது பாய, சோனைதான் அவனை விலக்கி விட்டான். மேனேஜர் மத்தாயிக்கு குமார் மீது ஏதோ சந்தேகம் இருந்தது. வர்கீஸ் தலைமை `எவ்வளவு பணம் செலவானாலும் எல்லாம் ரகசியமாய் நடக்க வேண்டும், நியூஸ் பேப்பரிலோ வேறெங்குமோ செய்தி வந்து விடக் கூடாது’ என்று கறாராகச் சொல்லியிருந்தது.

மத்தாயி இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை வீட்டில் போய்ப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் ராஜ மாணிக்கமும் சஸ்பெண்டில் இருக்கும் ஹெட் கான்ஸ்டபிள் மாரிச்சாமியும் நான்காவது நாள் கொடைக்கானலில் குமாரை அவன் நண்பன் டப்பா ரவி அறையில் வைத்துத் தூக்கினார்கள். மதுரையில் இருக்கும் வர்கீஸ்டின் கெஸ்ட் ஹவுஸில் வைத்து, குமாரைப் பிரித்தெடுத்தார்கள். நான்கு நாள்கள் இரவுபகலாக அடித்தார்கள். நகை மொத்தத்தையும் டப்பா ரவியின் அறையிலிருந்து மீட்டிருந்தார்கள். எவ்வளவு அடித்தும் பணத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட அவனிட மிருந்து வாங்கமுடியவில்லை. கூட்டாளிகளைப் பற்றியும் பேசவில்லை குமார். வர்கீஸ் தலைமையகம் மத்தாயிடம் தொகை எவ்வளவு என்று கேட்டது. எட்டு லட்சம் என்றான். நகைகள் முழுவதும் மீட்கப்பட்டுவிட்டது என்றான். நிறுவனத் தலைமை `இப்போதைக்கு ஆளைச் சிதைத்து அனுப்பு. பின்பு அவனைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்றது.

ராஜமாணிக்கமும், மாரிச்சாமியும் குமாரை ஆயுளுக்கும் நொண்டி நொண்டி நடக்கும்படி செய்துவிட்டார்கள். மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்தான் குமார். ராமர், சோனை, குரு போய்ப் பார்த்தார்கள். குமார் ``எல்லாம் போயிடுச்சு” என்றான். ராமர் விசாரித்த வகையில், பணம் உறுதியாக குமாரிடம்தான் இருக்கிறது என போலீஸ் வட்டாரம் சொன்னது. கெஞ்சி, மிரட்டிப் பார்த்தார்கள். குமார் ``வேணும்னா போலீஸ்ல போய் கம்ப்ளெயின்ட் கொடுங்க” என்றான். டிஸ்சார்ஜ் ஆன பிறகு அறவே மூவரையும் பார்ப்பதைத் தவிர்த்தான். குடித்தவன் தடுமாறுவதுபோல் தடுமாறித் தடுமாறி நடந்தான். பத்து மாடுகள் வாங்கி தீவிரமாகப் பால் வியாபாரத்தில் இறங்கினான் குமார். காலையும் மாலையும் சொசைட்டியில் பால் ஊற்ற மாத்திரம் போகவும் வரவுமாய் இருந்தான். ஊரில் யாரோடும் பேச்சு இல்லை. மூன்று பேரும் ஒரு நாள் அவனை மறித்துக் கேட்டார்கள். “கேனையன் மாதிரி நீங்க நொண்டி நொண்டி நடக்க லேல்ல. உங்களப் பத்தி யெல்லாம் ஒரு வார்த்தைகூடப் பேசல. அதான் நான் உங்களுக்குச் செஞ்ச பெரிய உபகாரம்” என்றான்.

வாரங்காட்டில் சோனையும், குருவும் மறைந்து காத்திருந்தார்கள். அங்கிருந்து ஒரு அரை கிலோ மீட்டர் தள்ளி, திருப்பத்தில் ராமர் நின்றான். ஒருவேளை சோனையும், குருவிடமும் இருந்து தப்பினால் ராமர் முடிக்க வேண்டும். சூரியன் மலைகளில்லாமல் அடிவாரத்திற்குச் சென்று கொண்டிருந்தான். கொக்குகள் விச்ராந்தியாய்ப் பறந்து கொண்டிருந்தன. இருட்டுவதற்கு நேரமிருந்தது. இந்தப் பாதையில் தினமும் குமார் போய் வருவான். ஆட்கள் அதிகம் புழங்காத பாதை அது. திருட்டு பயமும் உண்டு. ஆலமரத்திற்குப் பின்னால் உட்கார்ந்திருந்தான் ராமர். ஆலமரத்தில் பிச்சைக்காரன் பொதிபோல துணி மூட்டைகள் தொங்கின. பறவையின் எச்சம் தரையெங்கும் படர்ந்திருந்தது. விழுதில் தொங்கும் ஓலைக் கொட்டான்களில் பசு மாட்டின் தொப்புள்கொடி காய்ந்து கிடந்தது. ராமர் ரோட்டைப் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தான். ரோட்டில் ஏதோ அரவம் கேட்க இன்னும் மறைந்து கொண்டு பார்த்தான். குமாரின் மகன் சுரேஷ் அழுதபடி ஓடி வந்து கொண்டி ருந்தான். ஒரு கணத்தில் சுதாரித்து கொண்ட ராமர் வேட்டியை மடித்துக் கட்டியவாறு சுரேஷை நோக்கி ஓடினான். இவனைப் பார்த்ததும் சுரேஷ் கூடுதலாய் அழுதவாறு “மாமா குரு மாமாவும், சோனை மாமாவும் அப்பாவை வண்டியிலிருந்து கீழ தள்ளிவிட்டாங்க, என்ன ஓட்றானு சோனை மாமா கல்லைக் கொண்டு எறிந்தாரு, நான் பயந்துட்டு ஓடி வந்துட்டேன். நீங்க போய்ப் பாருங்க மாமா” எனத் திக்கித் திக்கிப் பேச, ராமருக்கு `ஏன் இந்த இரண்டு பேரும் சின்னப் பையன வச்சுக்கிட்டு இப்படிப் பண்ணாங்க இன்னொரு நாள் பண்ணியிருக்கலாம்’ என்று தோன்றியது. சுரேஷை ஆலமர மறைவிற்கு அழைத்துப் போனான். விடாமல் அவன் அழுதுகொண்டிருந்தான். வண்டி பவுச்சில் தண்ணீர் பாக்கெட்டின் முனை தெரிந்தது. அதை எடுக்கும்போது உள்ளே பொட்டலம் ஒன்று தட்டுப்பட்டது. காலையில் தன் மகளுக்காக வாங்கி வைத்திருந்த இனிப்பு சேவு. சேவு இல்லாமல் வீட்டிற்கு வரக்கூடாது எனச் சொல்லியிருந்தாள் மகள். பொட்டலத்தை எடுத்து சுரேஷ் கையில் கொடுத்தான். “சாப்பிடு” என்றான். தண்ணீர் பாக்கெட்டைக் கடித்து ஒரு கல்லில் அணைவாய் வைத்து “சாப்பிட்டுட்டு தண்ணி குடிச்சிட்டு இரு, நான் போய் என்னன்னு பாத்துட்டு வந்தர்றேன். மாமா வர்ற வரைக்கும் எதுக்காகவும் வெளியே வரக்கூடாது. இங்கயே இரு” என்றபடி சோனையும், குருவும் இருக்கும் திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போனான்.

சாலையின் நடுவே பெட்ரோல் திட்டுதிட்டாகக் கிடந்தது. மரத்துக்குப் பின்னால் குமாரின் வண்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. தோப்புக்குள்ளிருந்து சோனை கை காட்டினான். ஏறக்குறைய குமார் செத்திருந்தான். குரு “எங்கடா பணம் எங்கடா பணம்” கேட்டவாறு உடம்பெல்லாம் வெட்டாய்க் கிடக்கும் குமாரின் முகத்தில் மிதித்தான். குமார் என்னவோ சொன்னான் யாருக்கும் புரியவில்லை. ராமர் இருவரையும் விலக்கி பக்கத்தில் போய் உட்கார்ந்து “பணம் எங்க” எனப் பாதிப் பேச்சும் சைகையுமாய்க் கேட்க, குமார் கையை லேசாக `இல்லை’ என்பதுபோல் விரித்தான். ஆங்காரத்தில் ராமரைத் தள்ளிவிட்டு சோனை, “சாகுடா சாகுடா” என்றவாறு வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டே இருக்க, ராமர் அவன் தோளைத் தொட்டு குமாரின் முகத்தைக் காண்பித்தான். அது தொங்கியிருந்தது.

சிறுகதை
சிறுகதை

ஏற்கெனவே வக்கீலிடம் பேசி வைத்திருந்தார்கள். எக்காரணத்தைக் கொண்டும் சம்பவ இடத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது. போலீஸ் தேடினால் கோர்ட்டில் சரணடைந்துகொள்ளலாம் எனச் சொல்லியிருந்தார். சோனை கையை உதறிக் கொண்டான். குரு குமாரின் உடம்பை மறைவாய் புதருக்குள் இழுத்துப் போட்டான். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “ஏண்டா சின்னப்பையன வச்சுக்கிட்டு செஞ்சீங்க” என ராமர் கேட்க, “அப்படியே ராசா மாதிரி அவரு போயிட்டு வர்றத பாத்துகிட்டிருக்கணுமாக்கும். அதான் என்ன வந்தாலும் பாத்துக்கலாம்னு போட்டோம்” என்றான் ஆவேசமாய் குரு. ராமர் “சரி ஏற்கெனவே பேசிக்கிட்ட மாதிரி” என்று தொடங்க, குருவும் சோனையும் ஒரே குரலில் ``பையன் ஓடி வந்தானே?” ராமர் சைகையில் அங்கே இருக்கிறான் என்பது போல் காட்டினான்.

ராமர் அங்கு போகும்பொழுது சுரேஷ் இனிப்பு சேவு முழுவதையும் சாப்பிட்டு முடித்திருந்தான். ராமரைப் பார்த்தவுடன் மறுபடியும் `அப்பா’ என அழத் தொடங்கிய வனை அணைத்துக் கொண்ட ராமர், “அப்பாவை ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு கட்டு போட்டுட்டு வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கேன். உன்ன ஊர்ல விடுறேன். அய்யா வீட்டுக்குப் போறியா?” சுரேஷ் தலையசைத்தான்.

காலையில் தன் மகளுக்காக வாங்கி வைத்திருந்த இனிப்பு சேவு. சேவு இல்லாமல் வீட்டிற்கு வரக்கூடாது எனச் சொல்லியிருந்தாள் மகள்!

வண்டியில் ராமரை இறுக்கிப் பிடித்துக் கொண்டான் சுரேஷ். இருட்டத் தொடங்கியிருந்தது. சிறிய பூச்சிகள் முகத்தில் வந்து மோதத் தொடங்கின. ராமர் பின்னால் திரும்பாமலே “முகத்தைக் கையாலே மூடிக்க” என்றான். பறவைக் கூட்டம் ஒன்று வானத்தில் குறுக்கே போனது. இருட்டு பின்னால் நிதானமாய் வந்து கொண்டி ருந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் குளித்து உடனே புறப்பட வேண்டும். வக்கீல் வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லியிருந்தார். சட்டையின் கீழ்ப்புறத்தில் ரத்தம் படிந்திருந்தது. அதை சின்னப்பையன் பார்க்காத வண்ணம் உள்ளே மடித்து விட்டிருந்தான்.

பஜாரில் வண்டியை நிறுத்திய ராமர் “அய்யா வீட்டிற்குப் போயிருவல்ல” எனக் கேட்க, சுரேஷ் தலை யாட்டினான். வண்டியைத் திருப்பியவனின் கண்ணில் இனிப்புக்கடை பட்டது. மகளுக்கு வாங்க வேண்டும் என்பது ஞாபகத்திற்கு வந்தது. “ஒரு கால் கிலோ இனிப்பு சேவ் போடுங்க’’ என்றவன், திரும்பி சுரேஷைப் பார்க்க, கடைகளை வேடிக்கை பார்த்தவாறு மெதுவாய்ப் போய்க்கொண்டி ருந்தான். ``சுரேஷ் சுரேஷ்” எனக் கூப்பிட்டான். யாரோ சுரேஷின் தோளில் தட்டி ராமரைக் காண்பித்தார்கள். இங்கே வா என்பதுபோல் சைகையில் அழைத்தான். கடைக்காரனிடம் ``இன்னொரு கால் கிலோ இனிப்பு சேவ் போடுங்க” என்றான். சேவுப் பொட்ட லத்தைக் கையில் வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்த சுரேஷ் சட்டென நின்று திரும்பிப் பார்த்து, ராமரிடம் கேட்டான்,

``மாமா! எங்கப்பாவை நீங்களும் அடிச்சீங்களா?”

``இல்லை’’ என்றபடி, ராமர் வண்டியைக் கிளப்பிச் சென்றான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism