Published:Updated:

சிறுகதை: நேசன்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

செந்தில் ஜெகன்நாதன் அரஸ் ஓவியங்கள்:

சிறுகதை: நேசன்

செந்தில் ஜெகன்நாதன் அரஸ் ஓவியங்கள்:

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை
காவிரிக்கரை அருகில் இருந்த வீட்டு வாசலில்தான் அந்த நாயைப் பார்த்தேன். கடந்த நான்கு நாள்களாக என் நிம்மதியைப் பறித்துக்கொண்டு என்னை வீதியில் தேடி அலைக்கழிய விட்ட நாய், என் குடும்பத்தினரின் அமைதியைக் கலைத்து ஓயாது சச்சரவு நடக்கக் காரணமான நாய்.

பிஸ்கட் நிறத்தில் முகத்தில் வெள்ளை அடையாளம், அப்போதுதான் புதிதாகக் காய்ச்சின தாரைக் குழைத்துப் பூசியதைப்போலப் பளபளப்பான நாசி, வாலின் நுனியில் வெள்ளைப்புள்ளி. எல்லாவற்றுக்கும் மேலாக அதன் கழுத்தில் சிவப்புக் கயிற்றில் கோத்துக் கட்டப்பட்டிருக்கும் என் மனைவியின் கொலுசிலிருந்த முத்துகள். நான் தேடிக்கொண்டிருந்த அதே நாய்தான்! ஐந்து வயதிருக்கும் ஒரு சிறுவனின் முன்பு அமர்ந்திருக்கிறது. சிறுவன் அலுமினியத் தட்டில் ஏதோ வைக்கிறான். ஆர்வமாக நக்கிக் குடிக்கத் தொடங்கியது. நாய் ஒரு வாய் குடிப்பதும், பின்பு சிறுவனைப் பார்ப்பதுமாக ஏதோ இருவருக்கும் இடையே அந்தரங்கமான உரையாடல் நிகழ்ந்துகொண்டிருப்பதைப்போலத் தெரிந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவன் நாயின் தலையைத் தடவிக்கொடுக்கிறான். உடலை மடக்கி அவனுக்குத் தலை வணங்குவதைப்போல அமர்ந்திருக்கிறது. அதைப் பார்க்கப் பார்க்க ரத்தம் தலைக்கு ஏறுகிறது. உடலே தீயில் நிற்பதைப் போலக் கோபம் திரண்டு எழுகிறது. பந்தல் போடப்பட்டு என் முன்னே மீதம் கிடக்கும் இந்தச் சவுக்கு மரத்துண்டை எடுத்து ஒரே அடியில் அதைக் கொன்றுவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால், இப்போது இந்த நாயை நான் வீட்டுக்குத் தூக்கிச் செல்ல வேண்டும்.

சென்ற வாரம் ஊரிலிருந்து வந்த அன்றுதான் என் மாமனார் வீட்டில் இந்த நாயை முதன்முறையாகப் பார்த்தேன். அன்று காலை வீட்டுக்குள் நுழையும்போது நாயை மடியில் போட்டுக்கொண்டு புளிக்குழம்பில் பிசைந்த சாதக் கவளங்களை அதன் எதிரே வைத்தாள் என் மனைவி. நாய், சோற்றுப் பருக்கைகள் ஒட்டியிருந்த அவள் கையை நக்க முற்படும்போது அதைப் பார்த்து அருவருப்பில் நான் கத்தி எழுப்பிய ஒலியில் திடுக்கிட்டு, என்னைப் பார்த்துக் குரைத்தது. என் மனைவி “உஷ்” என, மூடிய வாயில் பெருவிரல் வைத்துச் சைகை காட்டியவுடன் வாலை மடக்கி அமைதியாகச் சோற்றைத் தின்றது.

சிறுகதை: நேசன்

வைத்தீஸ்வரன் கோயிலில் நடந்த ஏழாவது மாத வளையல்காப்பு முடிந்த அன்று மதியம் வேனில் கொண்டுவந்து மனைவியை அவள் அப்பா வீட்டில் விட்டுவிட்டுச் சென்னைக்குச் சென்றவன், வேலை காரணமாக நாற்பது நாள்கள் கழித்துதான் மயிலாடுதுறைக்கு வந்தேன். இன்னும் பத்து நாள்களில் பிரசவம் என்று புனித லூர்து மருத்துவமனையில் தேதி குறித்துக் கொடுத்திருக்கிறார்கள். நான் பிறந்த மருத்துவமனை என்பதால் என் குழந்தையும் அங்கேதான் பிறக்கவேண்டுமென விரும்பினேன்.

காலை நடையும், மாலை நடையும் கரங்கள் கோத்துப் பேசிக்கொண்டே நடக்கவும், இரவில் என் மடியில் படுத்திருப்பவளின் வயிற்றைப் பார்த்தபடி கதை சொல்லவும், சாப்பிடும்போது சாதம் உருட்டிக் கொடுக்கவுமாக நான்கு நாள்களாகவே மாமனார் வீட்டிலேயேதான் இருந்தேன். என் வீடு ஐந்து கிலோமீட்டர்தான் என்றாலும், பனம்பள்ளியிலிருந்து மயிலாடுதுறை வரும் நேரத்தில் பிரசவ வலி வந்துவிட்டால் என்ன செய்வது என்பதால் மாமனார் வீட்டில் அவளுடனே எப்போதும் இருந்தேன்.

வேலை காரணமாகப் பிரிந்திருப்பதைத் தாண்டி வேறெந்த வகையிலும் அவள் முகம் சுருங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்கு முக்கியமான காரணம், தான் கர்ப்பிணியாக இருந்த காலத்தில் குடும்பச் சண்டையில் அப்பாவைப் பிரிந்து, சந்தோஷக் களையின்றி அழுதுகொண்டேயிருந்ததை என் அம்மா நினைவுகூரும் போதெல்லாம் எனக்குள்ளே மிகுந்த துயரம் சுழன்று எழும். ஒரு நொடியும் என் குழந்தைக்கு அந்த எண்ணம் தோன்றிவிடக் கூடாது என்பதில் கவனச் சிரத்தையோடு இருந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவளுக்கு எந்த வகையிலும் ஒரு சிறு சுணக்கமும் வந்துவிடக்கூடாது என்று கவனத்துடன் நான் இருந்தாலும், எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அந்தப் பெருஞ்சோகம் நிகழ்ந்தேவிட்டது.

அதற்கு முக்கியமான காரணம் என் மாமனார். சில மாதங்களுக்கு முன்னர் சைக்கிளில் வேலைக்குச் சென்றவர், பழங்காவேரிக்குப் பக்கத்தில் பியர்லஸ் தியேட்டரின் ஓரமாகக் கால் அடிபட்டுக் கிடந்த நாய்க்குட்டியொன்றைப் பார்த்துப் பரிதாபப்பட்டதுடன் விடாமல், அதை வீட்டுக்கும் எடுத்து வந்திருக்கிறார். அதன் அடிபட்ட காலில் மஞ்சள்பத்து போட்டு, பழம்புடவையில் கட்டுக் கட்டி அதன் காலைச் சரிசெய்திருக்கிறார். நாய் அது முதல் வேறெங்கும் போகாமல் அங்கேயே தங்கிவிட்டது.

திருமணம் ஆனதிலிருந்தே நாய் வளர்க்க வேண்டுமென என் மனைவி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாள். எனக்கு அதைக் கேட்பதே ஒவ்வாமைதான். நாய்களின் மீது எனக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததே இல்லை.

ஏழு வயது இருக்கும்போது சோழச்சக்கரநல்லூர் கடைத்தெருவில் கும்பலாகச் சண்டையிட்டுக்கொண்டிருந்த நாய்களுக்கு பயந்து ஓடும்போது துரத்திக்கொண்டு வந்த நாய் ஒன்றினால் வாய்க்கால் மதகு இடறித் தண்ணீரில் விழுந்தேன். சேற்றில் செருகியிருந்த கண்ணாடித் துண்டு காலில் ஏறி இரண்டு மாதங்கள் தரையில் கால் ஊன்றி நடக்க முடியாமல் வீட்டிலேயே கிடந்தேன். அப்போதிலிருந்து எங்கே நாய்கள் குரைத்தாலும் என்னையறியாமல் அச்சம் மனதைக் கவ்வும், நடுக்கம் ஏற்படும். நாய் இருக்கும் தெரு என்றாலே அந்த வழியாகப் போவதையே தவிர்த்துவிடுவேன்.

மனைவியோ எப்போது பார்த்தாலும் நாயை மடியில் வைத்து விதவிதமான செல்லப்பெயர்களில் கொஞ்சுவதும் குளிப்பாட்டுவதும், ஒரே தட்டில் சாப்பிடுவதும், நாய்க்கு வாயைத் துடைத்துவிடுவதுமாக இருந்தாள்.

``ஏங்க இங்க பாருங்க, சிரிக்கிறான் சின்னக்குட்டி” அவள் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருக்க, நாய் அவளது புறங்காலில் நின்று கொண்டிருந்தது. குழந்தையின் பிஞ்சுக் கரங்களைப் பிடிப்பதைப்போல நாயின் முன்னங்கால்களைப் பிடித்தபடி தன் புறங்கால்களை மெதுவாக உயர்த்தி அம்புலி ஆட்டிக்கொண்டிருந்தாள்.

``கர்ப்பமா இருக்குற நேரத்துல இந்த நாயினால ஏதாவது அலர்ஜி ஆயிடப்போவுது... தேவயில்லாத எதுக்கு ரிஸ்கு?” என்று முகத்தைச் சகஜமாக வைத்துக்கொண்டு சொன்னேன்.

நான் சொல்லிய எதுவும் அவள் கம்மலைத் தாண்டிக் காதுக்குள் நுழைந்ததே இல்லை. சம்பவத்தன்று நாயை மடியில் போட்டுக்கொண்டு அதன் தோலில் ஒட்டியிருந்த உண்ணிகளை எடுத்துக்கொண்டிருந்தாள்.

நாய் மீதிருந்த அவளது கரங்களுக்கு இடையில் மேடிட்ட வயிற்றைப் பார்க்கும்போது திடீரெனப் பொட்டுக்குழியில் ஓங்கி அடித்ததைப் போன்ற உணர்வு, ரத்தம் தலைக்கேறி மண்டையே கொதித்தது.

“ஏன்டி பிரசவம் நெருங்குற நேரத்துல இப்படி நாய கைல வச்சிக்கிட்டு இருக்குற? அது எங்கெங்க போயிட்டு வருமோ...ஏதாவது இன்ஃபெக்‌ஷன் ஆயிடப் போவுதுன்னுதான சொல்றன்?”

“அதெல்லாம் என் தம்பியால எதுவும் ஆவாது” என அவள் வெகு இயல்பாகச் சொல்ல... பக்கத்து வீட்டுக் கிழவி வாசலைக் கடந்தபடி, “அவரு சொல்றதும் நெல்ல துக்குதான் யம்மா... புள்ளதாச்சிப் பொண்ணு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுச்சின்னா என்னா பண்றது” எனச் சொல்லிச்சென்றது எனக்கு இன்னும் உத்வேகத்தை அளித்தது போலிருந்தது.

என் மாமனாரிடம் திரும்பி “இங்க பாருங்க மாமா... தயவு செஞ்சி இத எங்கியாவது கொண்டுட்டுப்போயி உட்டுடுங்க. இந்த நேரத்துல எதுனா ஆயிடப்போவுது.’’

அவர் பதில் எதுவும் சொல்லாமல் தரையில் கால்களைக் கட்டிக்கொண்டு குந்தியிருந்தார்.

``ஒரு நாயி வளக்கக்கூட எனக்கு விருப்பம் இருக்கக் கூடாதா? நான் அப்புடித்தான் வளப்பேன்... என் அம்மா வீட்ல நாயி வளக்கறதுக்கும் உங்க பர்மிஷன் கேக்கணுமா?”

எனக்கு வந்த கோபச் சூட்டை உள்ளங்கையை இறுக்கமூடித் தணிக்க முயன்றேன்.

”ஏன்டி குழந்தைக்கு ஏதாவது ஆயிடக்கூடாதுன்னு நான் சொல்றன். நீ தேவை யில்லாம எதையெதையோ பேசிக்கிட்டுருக்க.”

நான் சொல்லிக்கொண்டேயிருக்கும்போது அவள் கழுத்தைச் சொடுக்கி ‘ம்க்கும்’ என்றாள். அவள் அப்படிச் செய்தது நான் சொன்னதை அவள் பொருட்டாக மதிக்கவில்லை என்பதைக் காட்டுவதற்காகத்தான் என்று எனக்குத் தெரியும்.

”என் புள்ளைக்கி எதுவும் அலர்ஜியா ஆயிடுச்சின்னா உங்க யாரையும் சும்மா உட மாட்டேன் ஆமா” என்று தீர்மானமாகச் சொன்னேன்.

``நாய் ஒங்கள என்ன பண்ணுச்சு?” முகத்துக்கு நேரே கையை நீட்டிக்கொண்டு அவள் கத்த, அவளுக்குக் கரம் நடுங்கியது. “வாய மூட்றி” என்று உரக்கக் கத்தினேன். “வயித்துப் புள்ளத்தாச்சிப் பொண்ணுகிட்ட ஏங்க இப்புடியா கத்திப் பேசு வீங்க?” என்று மாமனார் என்னைப் பார்த்துக் கேட்க, மூவரின் அடுத்தடுத்த சத்தம் கேட்டு பெஞ்சுக்கு அடியில் படுத்திருந்த நாய் உடலை உதறிச் சடசடத்து ஓடி வந்தது. அதைப் பார்த்ததும் இருந்த கோபமெல்லாம் குவிந்து, ஓங்கி ஒரு உதையை விட்டேன்.

மாமனாரும் மாமியாரும் கத்த... மனைவியும் அடித்தொண்டை யிலிருந்து கத்தினாள். எதையும் காதில் வாங்காமல் அங்கிருந்து புறப்பட்டேன்.

மாயூரநாதர் கோயில் திருக்குளத்தில் மீன்கள் நீந்தி விளையாடுவதைக் குளக்கரையின் மேலமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். குளத்திலிருந்த மீன்கள் எல்லாம் என் மண்டைக்குள் நெளிந்து நெளிந்து நீந்துவதைப் போல அமைதியற்று உணர்ந்தேன். மனதை யாரோ சம்மட்டியால் அடிப்பதைப் போலச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. குளத்தின் எதிர்க்கரையில் ஒரு கிழவி துணியை ஓங்கிக் கல்லில் அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தாள். ஒரு நிலையாக உட்கார முடியாமல், அங்கிருந்து நீங்கினேன்.

சிறுகதை: நேசன்
வைத்தா டீக்கடையில் சென்று டீ குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து வண்டியை நிறுத்தவும் ஏதோ கூச்சல் சத்தம் காதில் விழ வாசலுக்கு ஓடினேன்.

என் மனைவி கதறி அழுதபடி அவள் வீட்டுக்கு அருகேயுள்ள வாய்க்கால் ஓரமாகப் பெருத்த வயிற்றோடு வேக வேகமாக நடந்துபோக அவளைப் பிடிப்பதற்காகப் பின்னாலேயே வயதான மாமியாரும் மாமனாரும் ஓடுகிறார்கள். மாமனார் ஓடும்போது அவரது தோளிலிருந்து விழுந்த துண்டு வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் அடித்துக்கொண்டு போனது. வண்டியை அப்படியே போட்டுவிட்டு அவர்களைக் கடந்து ஓடிப்போய் அவளைப் பிடித்தேன். என்னவென்று கேட்டு முகத்தைப் பிடித்துத் திருப்பினால், அழுது அழுது முகம் வீங்கிப்போய்க் கன்னம் கண்ணீர்ப் பிசுபிசுப்போடு இருந்தது.

“டேய் பாவி, எங்கடா என் தம்பிய வெரட்டி உட்ட? எங்கடா போனுச்சி... அடிச்சிக் கொன்னுட்டியாடா அத..?” அவள் ஆங்கார மெடுத்துக் கத்தவும், தெருக்காரர்கள் வீட்டுக்குள் இருந்து வரத்தொடங்கிவிட்டார்கள்.

ஐயோ... உதைத்த உதையில் நாய் செத்துப் போய்விட்டதா? என்ன ஆகியிருக்கும் என்று நான் ஊகிப்பதற்குள்.

“வயித்துல ஒரு உசுர வச்சிக்கிட்டுருக்குற என்புள்ளய இப்புடித் தவிக்க உடுறியே ஒனக்கு ஞாயமா தம்பி?” என்று மாமியார் உடைந்த குரலில் சொல்ல, எனக்குத் திக்கென்றிருந்தது...

“நாயி எங்க போயிடப்போவுது... நான் கொண்டாரன் நீ ஊட்டுக்குப் போம்மா” அவள் அப்பா அப்படிச் சொன்னது எனக்கும் சற்று ஆறுதலாக இருந்தது.

அவள் கண்கள் மேலும் மேலும் சமாதானமாகாமல் பெருக்கெடுத்தது. “நீங்கல்லாம் பேசாதீங்க... நான் போறன்... நான் போயி தேடிக்கொண்டாறேன்... கொண்டார முடியலன்னா நான் சாவுறன். என்ன உடு... என்ன உடு” என்று அலறினாள். அவளது அந்தப் பிடிவாத நிலையும், மூர்க்கமான தள்ளலும் என்னைப் பதற்றமாக்கியது. தெருக்காரர்கள் எங்களையே வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தார்கள்.

என் மனைவியிடம் இருந்து உய் உய் என்று அழுகைச் சத்தம் வந்தபடியே இருந்தது.

என் மாமனார் மகளைப் பார்த்துத் துடித்தவராக “எம்மாடி, அப்பா தேடிக் கொண்டாரம்மா... நீ அழுவாதம்மா” என்று சொன்ன பிறகு அழுகைச் சத்தமெழுப்புவதைச் சன்னமாகக் குறைத்தாள். அவளின் கண்கள், தெரு எல்லையையே நிலைக்குத்திப் பார்த்துக்கொண்டிருந்தது.

வீட்டுக்கு அழைத்து வந்து அவளைக் கைத்தாங்கலாகப் பெஞ்சில் பாயைவிரித்துப் படுக்க வைத்தோம்.

என் மாமனாரைக் குழப்பத்தோடு பார்த்தேன். அவர், “நீங்க போன செத்த நேரத்துக்கெல்லாம் வெளியில நின்னுகிட்டு இருந்த நாய காணும் மாப்ள... நானும் தெருவு மொன வரைக்கும் போயி பாத்துட்டு வந்துட்டேன். பக்கத்து வூட்டு அக்கம்மா தெருவத் தாண்டி ஓடுனத பாத்ததா சொல்றாங்க. பாப்பா நாய காணும்னு கெடந்து அழுவுதுங்க... நாய தேடிப்போறன்னு ஓடுது” என்று அவர் சொன்னதும் எனக்கு அரட்டியது.

“சரி நான் போயி பாத்துட்டு வர்றேன்” என்று கிளம்பினேன்... “நானும் வர்றன் தம்பி” என்று அவரும் புறப்பட, நான் பைக்கிலும் அவர் சைக்கிளிலுமாக ஆளுக்கொரு திசையாகத் தேடிப் போனோம். ராஜன் தோட்டத்தில் ஆரம்பித்து வலதுபக்கம் செட்டித்தெரு, இடது பக்கம் இந்திரா குடியிருப்பு என ஒவ்வொரு வீதியிலும் வீடு வீடாக வாசல் படிக்கட்டுகளில் பார்த்துக் கொண்டே வந்தேன். மகாதானத்தெருவில் கல்யாண மண்டபம் பக்கத்தில் கட்டட வேலை நடந்துகொண்டிருந்தது. சிமென்ட் கலவை மெஷினின் அலறல் எரிச்சலுண்டாக்குவதாக ஓடிக்கொண்டிருந்தது. கலவை மெஷினுக்குப் பக்கத்தில் இருந்த ஜல்லிக்குவியலில் முட்டாகக் கிடந்த நாய்களில் ஏதாவது ஒன்றில் இந்த நாயும் கிடக்கும் என்ற ஆவலில் நெருங்கிப்போய்ப் பார்த்தேன். அவற்றில் அது இல்லை. ஏதாவது கட்டடங் களுக்கிடையில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றெண்ணி கே.எஸ் கல்யாண மண்டப வாசலில் வண்டியைப் போட்டு விட்டு நடந்தேன். சின்னக் கடைத்தெருவில் நுழைந்து நடக்க முடியாத அளவிற்கு வாகனங்களின் நெரிசலாக இருந்தது. மாயூரநாதர் கோயில் நுழைவாயிலில் தொடங்கி பழைய மாட்டாஸ்பத்திரி வரை வாகனங்கள் நீண்டு இருந்தன. வீதி முழுதும் சகிக்க இயலாத ஹாரன் சத்தங்களும், மனிதக் கூச்சல்களுமாக எதிரொலித்தது.

வண்டியை எடுத்துக்கொண்டு நாராயணப்பிள்ளை சந்து வந்தேன். மணிக்கூண்டை நெருங்கும்போது பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்றுவிட்டது. சாய்த்துப் போட்டு ஸ்டார்ட் செய்து பார்த்தேன்... டேங்க்கில் துளிப் பெட்ரோல்கூட இல்லை. இறங்கி வண்டியைத் தள்ளிக்கொண்டே சென்றேன். பட்டமங்கலத்தெருவில் ஜன நெரிசல் மூச்சடைக்க வைத்தது. வண்டி கனக்கத் தொடங்கியதால் தள்ளுவேகத்தைக் குறைத்தேன். வயிற்றுக்குள்ளிருந்து குடலை யாரோ பிடித்து இழுப்பதைப் போலச் சுருக்கென்றிருந்தது பசி. கண்கள் இருட்டியது. காலையில் ஒரு டீ குடித்ததோடு இருக்கிறது வயிறு. தள்ள முடியாமல் இரைத்து மேல்மூச்சு வாங்கியது.

வெயிலில் தலைச்சூடு ஏறியிருந்தது. தலை வறண்டு கொதித்தது. முழுக்க வியர்த்து சட்டையின் இரண்டுபக்கமும் உப்பு பூத்திருந்தது.

பெட்ரோல் போட்டுக்கொண்டு எந்தப் பக்கம் போவது என்று குழம்பி நின்றேன். வீட்டுக்குச் செல்லத் தயக்கமாக இருந்தாலும் அவள் எப்படியிருக்கிறாள் என்று பார்ப்பதற்காகச் சென்றேன். மாமியார் அவளுக்கு முன் அமர்ந்து, “சாப்புடும்மா... வயித்துல இருக்குற பிஞ்ச மனசில வெச்சாவுது ஒரு வாயி தின்னும்மா” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். தட்டில் சாதமும் அதன்மேல் ஈரு குச்சியில் கோக்கப்பட்டுப் பத்தியக் குழம்பில் போட்ட பூண்டு வரிசையும் கீரையும் துவையலும் உலரத்தொடங்கி அதன்மேல் ஈக்கள் பறக்க ஆரம்பித்திருந்தன. மாமனாரும் மாமியாரும் முகம் பார்த்துப் பேசுவதில்லை. என்னைக் கொலைக் குற்றவாளியைப்போலப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்று மட்டும் புரிந்தது. வழக்கமாக வீட்டுக்குள் நுழைந்தால் சிரித்த முகத்தோடு, “சாப்டுங்க தம்பி” என்று சொல்லும் மாமியார், எதுவும் பேசாமல் பெஞ்சில் எனக்கும் சாப்பாடு கொண்டு வந்து வைத்தார். உண்ணும் மனநிலை எங்கே போனதெனத் தெரியாமல் அங்கிருந்து வெளியே வந்தேன்.

சிறுகதை: நேசன்

அவள் மறுநாளும் சுத்தமாகச் சாப்பிடாமலேயே இருந்தாள். தூங்காமல் இரவு முழுக்க விழித்திருப்பதும் வெறித்த கண்ணோடு சுவரைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பதும் எனக்கு அச்சமூட்டியது. அறைக்கதவைச் சாத்திக்கொண்டு மூன்று நான்கு நாள்களாகத் தலைவாரிக்கொள்ளாமல், ஒடுங்கிய கண்களுடன் பித்துநிலை கொண்டவளாக அவளது தோற்றம் இருந்தது.

தினமும், நானும் மாமனாரும் தெருத் தெருவாக நாயைத் தேடுவதையே வழக்கமாக ஆக்கிக்கொண்டோம். நாள்கள் கடந்ததே தவிர நாய் கிடைத்தபாடில்லை.

நாய் தொலைந்ததிலிருந்து தொடங்கிய அலைச்சல்களும், சச்சரவுகளும் இந்த நிமிடம் வரை அதீத மனக்குலைப்பை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. நாயைக் கொண்டு வந்து சேர்த்தால்தான் எனக்கு நிம்மதி.

வெளியே இருட்டிக்கொண்டிருந்தது.

பாலக்கரை ஓரமாக அந்த வீட்டை நோட்டமிட்டபடியே நின்றிருந்தேன். கடைத்தெரு வெளிச்சம் பல வண்ணப் புள்ளிகளாய் ஒளிர்ந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் சிறுவனின் அம்மா சிறுவனை அழைத்துக்கொண்டு எங்கோ புறப்படுவது போலத் தெரிந்தது. நாயை அவிழ்க்கப்போன சிறுவனை வேண்டாமென்பது போலத் தடுத்த அவன் அம்மா அவனது கரம் பிடித்து நடக்க அவன் நாயைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தான். கடவுள் என் பக்கம் இருப்பதாக நினைத்துக் காசி விஸ்வநாதர் கோயில் கோபுரத்தை நோக்கிக் கும்பிட்டேன். சிறிது நேரத்தில் அந்த வீட்டருகில் சென்றேன். நாய் தனியாகவே கேட் ஓரமாக வெளிப் புறத்திலேயேதான் நின்றுகொண்டிருந்தது. எனக்கு உடலெல்லாம் வெப்பமேறி விதிர் விதிர்த்துவிட்டது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நாயை அவிழ்த்துக்கொண்டு பின்னால் யாராவது துரத்தி வருகிறார்களா என்று பார்த்தபடியே வீட்டுக்கு நடை ஓட்டமாக விரைந்தேன்.

வீட்டு நுழைவில் விட்டதும் நாய் நேரே சென்று அவள் பக்கத்தில் நின்றது. முதலில் நம்பமுடியாமல் பார்த்தவள், கண்ணீரும் புன்னகையும் திணறும் முகத்தோடு நாயை இறுக்கக் கட்டியணைத்துக்கொண்டாள். நான்கு நாள்களுக்குப் பிறகு அவளது முகத்தில் சிரிப்பைப் பார்த்து மாமனாரும் மாமியாருக்கும் முகம் மலர்ந்தது. அவள் மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்பியதில் எனக்கும் ஆசுவாசமாக இருந்தது.

அடுத்தடுத்த நாள்களில் அந்தப் பையனின் வீட்டு வழியாக மாமனார் வீட்டுக்குப் போவதைத் தவிர்த்தேன். இருந்தாலும் அந்த வீட்டையும் அந்தப் பையனையும் அவ்வப்போது நினைத்துக்கொண்டேன். நாய் காணவில்லை என்று அந்தப் பையனும் அவன் அம்மாவை அழைத்துக்கொண்டு தேடுவானோ... போலீஸில் புகார் கொடுப்பார்களோ... தேவையற்று மனம் எழுப்பும் கற்பனைகளைக் கலைக்கவே தினசரி நான் பயிற்சி செய்ய வேண்டியிருந்தது.

இரண்டு நாள்கள் கழித்துக் கும்பகோணத்தில் நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன் மகாமகக் குளத்தின் படிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, போன் அடித்தது. மாமனார்தான் அழைத்திருந்தார். “மாப்ள, பாப்பாவுக்கு வலி வந்திருச்சி... பனிக்கொடம் ஒடஞ்சிடுச்சின்னு சொல்றாங்க” செய்தி கேட்ட அடுத்த நிமிடம் நண்பரிடம் விடை பெற்றுக்கொண்டு, வண்டியை முறுக்கி அடுத்த நாற்பது நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்தேன். குழந்தை தண்ணீரைக் குடித்திருந்தால் காப்பாற்றுவது கடினம் என்றார்கள். ஆபத்தான நிலை என்றால் திருவாரூர் கூட்டிச் செல்ல வேண்டும் என்றார்கள். அறுவை சிகிச்சைக்காக என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். நிலைதடுமாறிக் குழம்பியவனாக இருந்தேன். ஆஸ்பத்திரியின் சுவர் விளம்பரங்களும், நோயாளிகளின் வலிமிகு குரல்களும், மருந்து வாசனையும் வயிற்றில் அமிலத்தைக் கரைத்தன.

பிரசவ அறைக்கு அழைத்துச் செல்வதற்கு முன் ஸ்ட்ரெச்சரில் ஏற்றப்பட்டிருந்த மனைவியின் கரங்களை இறுகப்பற்றி, அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

என் உள்ளங்கை ஈரமாக வியர்த்திருப்பதைப் பார்த்துத் துணி எடுத்துத் துடைத்துவிட்டாள். அவள் நெற்றியில் முத்தமிட்டுப் பிரசவ அறைக்கு அனுப்பிவிட்டு இறக்கி வைக்க முடியாத பெருவலியின் தவிப்பைச் சுமந்து கால் தரையில் பாவாமல் வெளியே நின்றுகொண்டிருந்தேன். என் அம்மா, அப்பா, மாமனார், மாமியார் என எல்லோரும் உதிரா வார்த்தைகளை முணுமுணுத்துக்கொண்டு வான் நோக்கிக் கரம்குவித்த வண்ணம் இருந்தார்கள். சரியாக இருபது நிமிடங்களில் வெள்ளுடைச் செவிலியின் கரங்களில் ஈரத்தோடு என் சிறிய உருவம் என்னை நோக்கி வந்தது. வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டிருந்த என் பிஞ்சுக் குழந்தையை வாங்கியதும் மொத்த உடலும் கூசியது. என் சிசுவின் சிவந்த பாதத்தைக் கண்டு கண்கள் தளும்பி நின்றது. மகனை விரல் நுனியால் தொட்டேன். ஒரு துளி அளவிற்கான தொடுதல். மூடியிருந்த இந்தச் சின்னஞ்சிறு கண்களால் என் மகன் என்னை எப்போது பார்ப்பான் என ஆவல் மனதை நிறைத்தது. பெரியவர்களின் முகங்களில் சந்தோஷம் பொங்கியது. மனைவி அறுவை சிகிச்சை அறையிலிருந்து வந்தவுடன் களைத்த அவளது முகம் பார்த்தபோது இந்த உலகமே தாய்மடியில் இருப்பதாகப்பட்டது. பூமி என்னும் மூத்த அன்னையை மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். எல்லோரும் என்னைப் பார்க்கும் பார்வையில் அன்பு நிறைந்திருந்தது. மருத்துவமனையிலிருந்த எல்லோருக்கும் இனிப்பு வாங்கி வந்து கொடுத்தேன். அன்றிரவு முழுவதும் தூக்கமின்றி மருத்துவமனையிலேயே கழித்தேன். விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் குளித்துவிட்டு வரலாம் என வீட்டுக்குப் புறப்பட்டேன். வாகனக் கண்ணாடியில் தூக்கமில்லாக் களைப்பு எதுவுமில்லாமல் முகம் பிரகாசமாக இருந்தது. காலையின் குளிர்காற்று முகத்தில் பட்டது மனதுக்கு இதமானதாக இருந்தது. புன்னகையோடு வண்டியைச் செலுத்தினேன். எதிரில் வரும் மனிதர்களின் முகங்களெல்லாம் கவலையில்லாத சிரித்த முகமாக இருந்தார்கள். பாலக்கரைப் பாலம் தாண்டி ஏதோ ஒரு நினைவில் லாகடம் வழியே செல்லலாம் என வண்டியை விட்டேன். அந்தச் சிறுவனின் வீட்டு வாசலில் நாய் கட்டிப்போட்டிருந்த இடத்தில் ஒரு மெல்லிய சங்கிலியும், நாய்க்குச் சோறு வைத்திருந்த பாத்திரமும் கிடந்தது. அந்த இடத்தின் வெறுமையை மேற்கொண்டு பார்க்க முடியாமல் வீட்டுக்கு வந்தேன். மூங்கில் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தபோது புறங்காலில் ஐஸ்கட்டி உரசியதைப்போல இருக்க, கீழே பார்த்தேன். வாலை ஆட்டிக்கொண்டு, காலைச் சுற்றியபடி நாய் நின்றுகொண்டிருந்தது. குரைக்கும் என்று நினைத்துக்கொண்டே மெதுவாக அதன் மேலே தொட்டேன். எதிர்ப்பெதுவும் தெரிவிக்காமல் வாலை வேகமாக ஆட்டியபடி ஒரு சிறு குரைப்பொலிகூட எழுப்பாமல் இருந்தது. அதைப் பார்த்ததும் தொண்டைக்குள் அடைத்துக்கொண்டதைப் போல உணர்ந்தேன். கண்கள் ஓரமாக நீர் கசிய, உதடுகள் துடித்தது. வந்த அழுகையைக் கட்டுப்படுத்தி அடக்கிக்கொண்டேன். வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு நாயைத் தொட்டுத் தூக்கினேன். எடையற்று முறுக்கிப்போட்ட தேங்காய்ப்பூத் துண்டைப்போல இருந்தது. அதன் மெல்லிய சூடான தேகம் பட்டவுடன் என் ரோமங்கள் எல்லாம் சிலிர்த்து நின்றன. சுமை இறக்கி வைத்த கரங்களில் பிறக்கும் லேசான தன்மையால் கன்னத்தில் நீர்த்துளி வழுக்கியது. ஒன்றரை அடியில் ஒரு நாலுகால் ஜீவன். “ஐயோ தெய்வமே... இதுகிட்டயா நான் இவ்வளவு நாள் பகையோட இருந்தேன்?” முகம் விரிந்து எனக்குள் சிரிப்பாக வந்தது. மனதிற்குள் ஒரு பேரமைதி தரும் நிம்மதி. சற்று நேர அமைதிக்குப் பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக வண்டியை ஸ்டார்ட் செய்தேன். மறுபடியும் நாயைக் காணவில்லையென்றால் என் மனைவி முன்னளவிற்கு இனி வருத்தப்படமாட்டாள் என்பதை மட்டும் நான் உறுதியாக நம்பினேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism