பிரீமியம் ஸ்டோரி
ண்டியில் எல்லாரும் நிசப்தமாக அமர்ந்திருந்தனர். அது தொண்ணூறுகளின் மாடல் டாடா சுமோ. தேய்ந்துபோன குடும்பவண்டி. சந்திரோதயம் அழுது கண்ணீர் காய்ந்திருந்த முகத்தில் ஒட்டியிருந்த மயிர்களை ஒதுக்கி, கண்களைச் சுருக்கி வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். பசும் வயல்வெளிகளுக்கிடையே சுமோ சென்றுகொண்டிருந்தது. “பட்டுக்கோட்டை போயி அப்படியே ஈசியாரப் புடிச்சுப்போப்பா, அந்த ரூட்டுலதான் இந்த டோல் எளவெல்லாம் இல்ல” என்றார் ராஜேந்திரன். முத்துராசாவின் தாய்மாமன். இரண்டு பங்காளிகள் வெள்ளையும் சொள்ளையுமாக இப்போதுதான் ஒரத்தநாட்டை விட்டே வெளியே போகப்போகிறோம் என்ற தோரணையில் அமர்ந்திருந்தார்கள். அதில் மூர்த்தி, முகத்தை எப்படி வைத்துகொள்வது என்று புரியாமல் எதையோ கடுமையாக முறைத்தபடி அமர்ந்திருந்தார். சக்திவேலு முகத்தில் அப்பாவித்தனம் குழைய, மெல்லிய புன்னகையோடு வண்டியின் குலுங்கல்களுக்கேற்ப இலகுவாக ஆடி அசைந்து அமர்ந்திருந்தார். சந்திரோதயம் ஒரு பெருமூச்செடுத்து விசும்பினாள்.

அண்ணன் தம்பிகளுக்கு வாக்கப்பட்டு வந்தவர்கள் சந்திரோதயமும் அவள் அக்காவும். அவளுக்குப் பிள்ளைகளில்லை. கண்மணியும் முத்துராசாவும் அக்காவின் பிள்ளைகள். பிறந்த அன்றிலிருந்து சந்திரோதயத்தால் தூக்கி வளர்க்கப்பட்டவள் கண்மணி. கண்மணிக்கு அம்மாவாகவும் மற்ற எல்லாமாகவும் இருந்தாள் சந்திரோதயம். பூவும்பிஞ்சுமாகக் கண்முன்னே ஓடித் திரிபவள், தன் கண்பார்வைக்குள்ளே கிடந்து, ஆளாகி நிறைந்து நிற்கும்போது அவள் வாழும் வாழ்வுக்கு, தான் சவரட்டனைகள் செய்து தீர்க்க வேண்டும் என்று நினைத்து மகிழ்வது அவளுக்கு சுகம்.

`இப்ப எங்க, எப்படி இருக்கிறாளோ’ என்று யோசித்தவாறு தன் வீட்டு ஆம்பளைகளைப் பார்த்தபோது பயமாக இருந்தது அவளுக்கு. பொங்கித்திரண்ட அழுகை பாவனையை மறைக்க, இறுக்கமாகப் பல்லைக் கடித்தாள். கண்களிலிருந்து நீர் பொலபொல வென வடிந்தது.

சந்திரோதயம் - சிறுகதை

கண்மணி அப்போது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். ``டீச்சர் விட்டுட்டு வரச் சொன்னாங்க’’ என்று இரண்டு பெண் பிள்ளைகள் கண்மணியை வீட்டில் விட்டுவிட்டு பதிலிற்குக் காத்திராமல் திரும்பி நடந்தார்கள். ரத்தக்கறை படிந்த சுடிதாருடன் கண்மணி நின்றிருந் தாள். சந்திரோதயம் மகிழ்ச்சியும் அழுகையும் கலந்த முகத்துடன் கண்மணியை அழைத்துப்போனாள். வீட்டுக்குள் சென்று “கெழவி ஒன் பேத்தி வயசுக்கு வந்துட்டா’’ என்று கண்மணியின் கொள்ளுப்பாட்டியிடம் சொன்னாள். கிழவி மெல்ல அசைந்தவாறு “ஏண்டி நடுவீட்டு வழியா கூட்டிகிட்டு வர்ற, கொல்லைப்பக்கமா கூட்டிட்டுப் போக வேண்டியதான’’ என்றாள்.

சந்திரோதயம், ``ஏண்டி கூறுகெட்ட சிறுக்கி! நான் என்ன மாரி விஷயத்த சொல்லிக்கிட்டுருக்கேன், இவ என்ன சொல்றா பாத்தியா’’ என, குனிந்து கையில் கிடைத்த தேங்காய்ச்சிரட்டையைக் கிழவிமேல் விட்டெறிந்தாள். ‘`அடி இருசி’’ என்றபடி கிழவி முனகி அடங்கினாள்.

சந்திரோதயம் பரபரவென ஆனாள். கண்மணிக்கு உளுந்தங்கஞ்சி செய்து நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து தந்தாள். நாட்டுக்கோழி முட்டைகளை வீடுதோறும் தேடி வாங்கி வந்தாள். எள்ளுருண்டைகளைப் பிடித்து இரண்டு வேளைகள் உண்ணத் தந்தாள். வறுத்த முந்திரிகளைக் கொறிக்கத் தந்தாள். உலர்ந்த அத்திப்பழங்களை நெய்சேர்த்துப் பனைவெல்லமிட்டு அரைத்துக்குழப்பி அவள் அருகிலேயே வைத்தாள். சோறு, வெள்ளாட்டாங்கொழம்பு, சோறு, கொழுப்பு மிதக்கும் ஆட்டு நெஞ்செலும்பு சூப்பு, சோறு, நாட்டுக்கோழி ரசம், நெய்யில் வறுத்த ஈரல், சொவரொட்டியென சந்திரோதயம் ஒரு வழி செய்ததில், ஒரு மாதத்தில் கண்மணியின் கன்னம் பூரித்துப் பளபளத்தது. பள்ளிக்குச் செல்லத் தொடங்கு கையில் ஆள் சற்று முதிர்ந்து தோற்றம் மாறி கொஞ்சம் பெரிய மனுஷி போலத் தோன்றினாள்.

சந்திரோதயம் - சிறுகதை

``ஏன்த்தா, உன் கூடவேதான திரிவா. எதுவுஞ்சொல்லலையா ஒனட்ட. உனக்குத்தான் அவ நடவடிக்கைல மாத்தம் தெரிய லையா?’’ என்றார் ராஜேந்திரன். `எங்க’ என்பதுபோல் பலவீனமாகப் பார்த்தாள் சந்திரோதயம்.

ஒருமுறை பள்ளியில் படிக்கும் போது அய்யங்குடிக்காரன் ஒருவன் பின்னாலே சுற்றுவதாகவும் ரொம்பத் தொந்தரவு தருவதாகவும் சந்திரோதயத்திடம் கூறினாள் கண்மணி. ஆத்திரமும் அழுகையு மாக அவளுடன் கிளம்பிப்போன சந்திரோதயம், அவனைப் பேருந்துக்குள்ளேயே வைத்து செருப்பைக் கழற்றி அடித்தாள். சாயுங்காலம் மருதாணி வைத்துக் கொண்டிருக்கும்போது கண்மணி, “எப்படிம்மா அவனை இப்புடி அடிச்ச” என்றாள் சிரித்தபடி. “தெரியலடி” என இழுத்துச் சொல்லியபடி வெட்கப்பட்டுக்கொண்டே மெலிதாகச் சிரித்தாள் சந்திரோதயம். கண்மணி அவளுக்கு ரொம்ப நாளைக்குப் பிறகு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்.

வெயில் தகிக்கக் தொடங்கியது. ஏசி இல்லாத வண்டி. கண்ணாடியை முழுக்க இறக்கிவிட, சூடான காற்று பட்டு சருமம் சுள்ளெனச் சுட்டது. ``இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் மாமா?’’ என்றார் சக்திவேல். ``கொஞ்சந்தான் மாப்ளை... ராம்நாட்டுல போயி சாப்டுக்கலாம்” என்றார் ராஜேந்திரன். மூர்த்தியும் சக்திவேலும் ஏதோ குசுகுசுவெனப் பேசிக்கொண்டார்கள். பின் மூர்த்தி, ராஜேந்திரன் காதில் ஏதோ சொன்னார். வண்டி நெடுஞ்சாலையை விட்டு இறங்கி ஊருக்குள் சென்றது. வண்டியை ஓரமாக நிறுத்தி, நடந்துவந்த ஒருவரிடம் ``கடை எங்க இருக்கு” என்றவுடன், அவர் எந்த சந்தேகமும் இன்றி உற்சாகமாக வழி சொன்னார். வண்டி டாஸ்மாக்கைத் தாண்டிக் கொஞ்சதூரம் தள்ளி நின்றது. “செத்த இருத்தா” என்று சந்திரோத யத்திடம் சொல்லிவிட்டு ராஜேந்திரன் இறங்கினார். வேட்டியை அவிழ்த்துக் காற்றில் ஆட்டி மறுபடி இறுக்கக் கட்டினார். ``சீக்கிரம் வாங்கப்பா’’ என்றபடி காசை எடுத்துக் கொடுத்தார். மூர்த்தியும் சக்திவேலும் பத்து நிமிடத்தில் திரும்பி வந்து நுனிவேட்டியில் வாயைத் துடைத்தபடி கமுக்கமாக வண்டியில் ஏறி அமர்ந்தனர். ``வண்டியை எடப்பா’’ என்றார் ராஜேந்திரன்.

பைபாசில் ஏறுவதற்குக் கொஞ்சம் முன்னால் எதுவோ காரின் முன்னால் ஓடியது. காரின் சக்கரம் `லடக்’ என ஏறி இறங்கிய சத்தம் கேட்கவும் வண்டியை நிறுத்தினர். இளம் வெள்ளாட்டுக் குட்டி டயருக்கடியில் மெலிதாகத் துள்ளி அடங்கியது. சட்டெனக் கூட்டம் கூடியது. ஒடிசலாய்க் கறுத்திருந்தவன் சத்தமிட்டபடி ஓடிவந்தான். பெண்கள் மல்லுக்கு நின்றனர். ராஜேந்திரன் வேட்டியை விலக்கி ட்ரவுசரிலிருந்து ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். “ஏங்க, அத எங்க புள்ளமாதிரி வளர்த்தோமுங்க’’ என்று கறுத்தவன் புலம்பினான். ராஜேந்திரன் இன்னொரு இரண்டாயிரத்தை எடுத்து நீட்டினார். வண்டிக்கடியில் கிடந்த ஆட்டுக்குட்டியைக் இழுத்துத் தூக்கிக்கொண்டு கூட்டம் கிளம்பியது.

ராமநாதபுர எல்லைக்குள் வண்டி நுழைந்தது. சாலையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெட்டவெளி. தகிக்கும் வெப்பம். நெடும்பனைகள் மட்டும் அனலுக்கு முழுதும் முகம் காட்டி நின்றன. பசியும் தாகமும் சோர்வடையச் செய்தன. ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்திச் சாப்பிட்டதும் யாருக்காகவோ காத்திருந் தார்கள். “பாத்ரூம் ஏதும் போறியா?” என சந்திரோத யத்திடம் கேட்டான் முத்துராசா. பறந்த தலைமுடியை ஒதுக்கியவாறு இல்லையெனத் தலையசைத்தாள். சிறிது நேரத்தில் இரண்டுபேர் பைக்கில் வந்தார்கள். நெற்றியில் குங்குமப்பொட்டு, கைகளில் பல வண்ணக்கயிறுகள். வெள்ளைச்சட்டை, ஜீன்ஸுடன், மீசை தாடியென இருந்தவர்கள் ராஜேந்திரனிடம் ஏதோ பேசினார்கள். பின்னர் வண்டியை உறுமிக்கொண்டு அவர்கள் முன்னே செல்ல, சுமோ பின்தொடர்ந்தது. முத்துராசா மாமாவைப் பெருமையுடன் பார்த்தான். ``நம்ம ஒன்றியத்துக்கிட்ட சொல்லி யிருந்தேன். அவரு இங்க பேசி நம்ம ஆளுக ரெண்டு பேர அனுப்பியிருக்காரப்பா’’ என்று கழுத்தைப் பின்னே திருப்பிச் சொன்னார் ராஜேந்திரன். சக்திவேலு பற்கள் தெரியச் சிரித்தபடி தலையாட்டினார். சந்திரோதயத்திற்கு மனதில் கலவரம் அதிகமானது. ஒரு நான்கைந்து கிலோமீட்டர் அவர்கள் பைக்கைப் பின்தொடர்ந்தது சுமோ. ஓரிடத்தில் பைக்காரர்கள் சுமோவைக் கைகாட்டி நிறுத்தினார்கள். ஒரு கடையில் பைக்கை நிறுத்தி லாக் செய்துவிட்டு வந்து காரில் ஏறி அமர்ந்தனர். வியர்வை வீச்சம் அடித்தது.

சந்திரோதயம் - சிறுகதை

வண்டி சாலையிலிருந்து திரும்பி இடதுபுறம் நுழைந்ததும் புழுதி பறந்தது. புதிதாகப் பச்சை வண்ணம் பூசப்பட்ட மசூதி தாண்டி சுமோ நகர்ந்தது. பொட்டலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் வண்டியை நிறுத்தி, ஒரு சிறுவனிடம் “தம்பி, கனிராவுத்தர் வீடு எங்கேடா இங்க” என்றான் முத்துராசா. “தெரிய லண்ணா” என்று கேள்வியையே காதில் வாங்காமல் பீல்டிங்கில் மும்முரமாய் இருந்தான் அவன். சிறிது தூரம் வண்டியை நகர்த்தி ஒரு பெட்டிக்கடையில் நிறுத்திக் கேட்டவர்கள், நான்கு வீடுகள் தாண்டி நிழலில் வண்டியை நிறுத்தி இறங்கி நடந்தார்கள். சந்திரோதயத்தை “நீ முன்னாடி வாத்தா” என்றார் ராஜேந்திரன். உள்ளூர்க்காரர்கள் காரிலேயே அமர்ந்திருந் தார்கள்.

பெரிய காரை வீடு. கனமான சுவர்கள். கெண்டைக்கால்களுக்கு மேல் கைலிகட்டிய ஒருவர் வந்து கதவைத் திறந்தார். “இது கண்மணியோட அம்மா” என்றார் ராஜேந்திரன். “உள்ள வாங்க” என்றபடி திரும்பி நடந்து உள்ளே சென்றார் அவர். காரைக் காம்பௌண்ட் சுவர், வீட்டு முகப்பில் சென்று முடிந்தது. தாழ்வாரம் இறக்கிய வீட்டு முன்பகுதி கொஞ்சம் குளிர்ந்திருந்தது. வீட்டின் ஓரத்தில் அமர்ந்திருந்த வயதான கனி ராவுத்தர் நடக்கச் சிரமப்பட்டுத் தரையில் காலை உரசியபடி நடந்துவந்து கம்மலான குரலில் ‘`வாங்க’’ என்றார். ஜன்னலில் பெண்களின் முக்காடிட்ட தலைகள் தெரிந்தன. பேச்சுக்குரல்கள் கேட்டன. சலசலப்பு அதிகமானது. மெல்ல காலை எடுத்துவைத்து வெளியே வந்தாள் கண்மணி. நெற்றியில் பொட்டின்றி, சேலைத் தலைப்பை எடுத்து உடலைப்போர்த்தி இருந்தாள். மனக்குமுறல்கள் மொத்தமாகக் கனன்று மேலேவர முகத்தைச் சற்றே தூக்கி தசைகள் நடுங்க ‘ஓ’வெனக் கத்தினாள் சந்திரோதயம். கால்கள் நிலைகொள்ளாமல் தடுமாறி ஓடிவந்த கண்மணி, சந்திரோதயத்தின் முழங்காலில் முகம்புதைத்துக் கதறி அழுதாள். முத்துராசாவின் கண்களின் நரம்புகள் கோடிட்டு சிவந்தன.

கொஞ்ச நேரத்தில் அழுகை தீர்ந்து அமைதி சூழ்ந்தது. முத்துராசா “கண்மணி, வா போகலாம்” என்றான் சத்தமாக. அவர்கள் வீட்டில் இருந்தவர்கள் பேச எத்தனித்தார்கள். “சார், ஒரு நிமிஷம்” என்று கைலிக்காரர் தொடங்க, முத்துராசா ``கண்மணி, நீ எந்திரி’’ எனக் கத்தினான். அவனுக்கு அதற்குமேல் அவ்விடத்தில் நிற்க இயலவில்லை. “ஆத்தா, நம்ம வீட்டுக்குப் போவோம் வா” என்றார் மூர்த்தி. கண்மணி சித்தியையும் மாமாவையும் மிரண்ட விழிகளுடன் பார்த்தாள். ராஜேந்திரனும் “முத்து, இருடா” என்று சமாதானம் செய்யும் விதத்தில் கையமர்த்தினார். ``மாமா சும்மா இருங்க ” என்று அழுத்தினான் முத்துராசா. வீட்டிற்குள்ளிருந்து கண்மணியின் கணவன் மன்சூரும் அவனின் இரண்டு அண்ணன்களும் வெளியே வந்தார்கள். “சார், பேசிக்கலாம். ஏன் இப்ப பிரச்சன பண்றீங்க?” என்று ஒரு அண்ணன் குரலை சற்றே உயர்த்தினான். “நாங்க பிரச்சன பண்றோமா? எங்க பொண்ண நொட்டிட்டு வந்து நீங்க குடும்பம் நடத்துவீங்க, கேட்டா நாங்க பிரச்சன பண்றோமா?’’ வார்த்தைகளைத் தவறவிட்டான் முத்துராசா. “ஹலோ, மரியாதையா பேசுங்க” என்றான் மற்றொரு அண்ணன். ``என்னடா ஹலோ’’ என்று மூர்த்தி இடத்தை யோசிக்காமல் அவனைப் பளாரென அறைந்தான். இடம் கலவரமானது. பெண்களின் கூச்சலும் சத்தமும் ஓவெனக் கிளம்பியது. காத்திருந்தது போல் திபுதிபுவென தெரு இளைஞர்கள், கையில் கிடைத்ததையெல்லாம் பற்றிக்கொண்டு ஓடி வந்தனர். அடிகள் சிதறியது. நால்வரும் சந்திரோதயத்தை இழுத்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். நாலாபுறமும் அடி விழுந்தது. காரில் இருந்தவர்கள் உள்ளே வரப் பார்த்து, கூட்டத்தைப் பார்த்து மீண்டும் காரை நோக்கி ஓடினர். உடல் களைத்து, தலை கலைந்து காரில் தட்டுத்தடுமாறி ஏறி காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினர். கார் தெருவை விட்டு அகலும்வரை ஆட்கள் ஓடிவந்தனர். காரில் உள்ளவர்கள் கார் மெயின்ரோட்டில் ஏறியவுடன் நிதானமடைந்தார்கள். ``காரை வேகமா ஓட்டுறா” கத்திய முத்துராசா ``...யா பயலுகள சும்மாவிடக் கூடாது மாமா’’ என்றான், நெற்றியில் இருந்த ரத்தத்தைத் தொட்டுப்பார்த்தபடி.

சந்திரோதயம் சுருண்டு கிடந்தாள். ராஜேந்திரன் கட்டுப்பாடாகப் பராமரித்த நிதானத்தை இழந்து, “உங்களைக் கூட்டிட்டு வந்தேன் பாரு, என்னைச் செருப்பால அடிக்கணும்” என்றார். ராஜேந்திரனிடம் “புள்ள நம்ம புள்ளதான், ஆனா உள்ளூருக்குள்ள கொஞ்சம் பொறுமையாதாண்ணே டீல் பண்ணணும்’’ என்றார்கள், கூட வந்த உள்ளூர்க்காரர்கள். முத்துராசா அவர்களை முறைத்தான். உள்ளூர்க்காரர்கள் பைக் விட்ட கடையருகே வந்ததும் வண்டியை நிறுத்தச் சொன்னார் ராஜேந்திரன். இறங்கியவர்களிடம் இரண்டாயிரத்தைக் கொடுத்தார்.

வண்டி நகருக்குள் வந்து கடைவீதிகளின் குறுக்குச்சாலைகள் வழியாக அலைந்தது. பழைய தங்கும்விடுதி ஒன்றின் அருகே வண்டியை நிறுத்தச் சொன்னார் ராஜேந்திரன். பக்கத்திலேயே டாஸ்மாக் என்ற பச்சைப்பலகையைப் பார்த்ததும் மூர்த்தியும் சக்திவேலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஐந்து பேர் தங்குவதற்கு வசதியாக ஒரு பெரிய அறை ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். ``எதுக்கு ரூமு’’ என்று வாயைத் திறந்தாள் சந்திரோதயம். ``நல்ல அடியா அடுச்சுப்புட்டானுவத்தா... டாக்டர கீக்டர பாத்து ஊசியைப் போட்டுக்கிட்டு கொஞ்சம் படுத்திருந்துட்டுக் கிளம்பலாம்’’ என்றார் ராஜேந்திரன். சந்திரோதயம் சமாதானப்பட்டவளாக இமைகளைக் கவிழ்த்துக் கொண்டாள். எல்லாரும் அமர்ந்தார்கள். சக்திவேலு பொத்தென மல்லாந்து மெத்தையில் விழுந்து மெத்தையின் சுகத்தை உடம்பில் அனுபவித்தார். சிறிது நேரத்தில் அவர்களை எழுப்பினார் ராஜேந்திரன். “செத்த படுத்திருத்தா, டவுனுக்குப் போயிட்டு வந்தர்றோம். எதுவும்னா செல்லுக்குக் கூப்புடு” என்றபடி கிளம்பினார்கள். கீழே வந்ததும் உற்சாகத்தை உணர்ந்தபடி பாருக்குள் நுழைந்தனர். குடிக்கக் குடிக்க அவமான உணர்ச்சி மேலெழுந்தது. வன்மம் கிளர்ந்து பேச்சுத் திரண்டது.

ந்திரோதயம் எழுந்து அமர்ந்தாள். கொஞ்சநேரம் மொபைலில் கேண்டிகிரஷ் விளையாண்டாள். மனம் அதில் லயிக்கவில்லை. உட்கார்ந்தே இருந்தவள் அப்படியே தூங்கிப்போனாள். கழுத்தில் வியர்த்துக் கசகசத்தது. எழுந்தபோது மணி பத்தரை ஆகியிருந்தது. போனவர்களை இன்னும் காணவில்லை. நன்றாகப் பசித்தது. மொபைலை எடுத்து முத்துராசாவுக்கு அழைத்தாள். எடுக்கவில்லை. ராஜேந்திரனுக்கு அழைத்தாள். அவரும் எடுக்கவில்லை. பயம் மெல்லக் கவ்வியது. வீட்டு ஆட்களைத் தவிர யாரிடமும் பேசிப் பழகாதவளுக்கு, யாரையும் கூப்பிடவேண்டும் என்ற எண்ணம்கூடத் தோன்றவில்லை. தண்ணீரை வயிறு நிறையும்வரை குடித்தாள். தலை வலிக்க ஆரம்பித்தது. மீண்டும் படுத்தாள்.

தப்தப்பெனக் கதவு தட்டும் சத்தம் கேட்டது. மூன்றாவது நான்காவது முறை கேட்டபோதுதான் திடுக்கிட்டு விழித்தாள். கடிகாரத்தில் மணி இரண்டாகியிருந்தது. எழுந்து தலையைச் சுற்றி முடிந்துகொண்டு தாழ்ப்பாளை இறக்கினாள். நால்வரும் படபடவென அறைக்குள் வந்தார்கள். சக்திவேலு மட்டும் ஆரஞ்சு நிறச்சட்டையில் தனியாகத் தெரிந்தான்.

``கெளம்பு சின்னம்மா’’ என்று கையைப் பிடித்தான் முத்துராசா. ``என்னடா ஏதும் பிரச்சனையா?’’ என்றாள் சந்திரோதயம் பதற்றத்துடன். ``ஒண்ணுல்ல... கெளம்பு’’ என்றான் முத்துராசா. முகம் கழுவினார்கள். கையில் ஒரு புதுத்துணிக் கவரில் பழைய சட்டையை வைத்திருந்தான் சக்திவேலு. கீழிறங்கி மேனேஜரின் தூக்கத்தைக் கலைக்காமல் கதவைத் திறந்து வெளியேறினார்கள். வண்டியை எடுத்துக்கொண்டு சீறிக் கிளம்பினார்கள். “வேகமா ஓட்டுப்போவ்” என்றார் ராஜேந்திரன். பழைய சுமோ தன்னால் முடிந்த அளவுக்கு உருண்டு முன்னேறியது. பதைபதைப்பாக அமர்ந்திருந்தாள் சந்திரோதயம். ``டோர் கண்ணாடியை ஏத்தி விடப்பா” என்றார் ராஜேந்திரன். கண்ணாடியை ஏற்றினார்கள். யாருக்கோ மொபைலில் அழைத்தார், “ம்ம்... விடியகாலைல வந்துருவோம். ம்ம்... ம்ம்... வந்துட்டுக் கூப்பிடுறேன். ஜட்ஜ் வீடு எங்க இருக்கு. கூட்டிட்டு வந்தறேன்.”

“உடையப்பன் வக்கீலு... நாளைக்கு கோர்ட் லீவு. ஜட்ஜ் வீட்டுக்கே கூட்டிட்டுப் போயிரலாங்கிறாரு.” முத்துராசாவிடம் சொன்னார். ஏதோ விபரீதமாய் நடந்து விட்டதென உணர்ந்த சந்திரோதயம் “என்னண்ணே ஆச்சு’’ எனக் கெஞ்சும் தொனியில் அழ ஆரம்பித்தாள். “நீ கொஞ்சம் தலையச் சாயித்தா, காலையில பேசிக்கலாம்” என்றார் ராஜேந்திரன். சந்திரோதயத்திற்கு இருப்புக் கொள்ளவில்லை.

கண்ணாடி ஏற்றியதிலிருந்து வெளியே பார்த்துக்கொண்டு வந்த சக்திவேல் ஒரு பெட்டிக்கடையைக் கண்டதும் ``வண்டியை ஒரு நிமிஷம் நிறுத்தப்பா’’ என்றான். இறங்கிக் கடையை நெருங்கி ``சாம்பிள் சோப்பு ஒண்ணு கொடு’’ என்றதும், கடைக்காரர் எடுத்துக் கொடுத்தார். அதனுடன் வாட்டர் பாட்டில் வாங்கி கையை நுரை வர தேய்த்துக் கழுவினான். வேட்டியைத் தூக்கித் துடைத்துக்கொண்டு தண்ணீரைக் குடித்தான். சிறிது தண்ணீர் மிச்சம் வைத்து வண்டிக்கு உள்ளே போட்டு ஏறினான். திடீரென்று ஞாபகம் வந்தவராய், ராஜேந்திரன் டேஷ் போர்டிலுள்ள ஆளுங்கட்சிக் கொடியை எடுத்து சக்திவேலிடம் கொடுத்து, ``முன்னாடி வச்சு திருகி விடு மாப்ள” என்றார்.

உள்ளே `வீல்’ என சந்திரோத யத்தின் அலறல் சத்தம் கேட்டது. எல்லாரும் திரும்பி சந்திரோதயத்தை உற்றுப் பார்த்தபோது, அவள் கையில், முழுவதும் ரத்தம் தோய்ந்த சக்திவேலுவின் சட்டை இருந்தது. நடுங்கிக் கை தவறினாள். சத்தமும் அழுகையும் சேர்ந்து வெடித்து அழுதாள். “யாரை என்னடா பண்ணீங்க, என் புள்ளைய எதுவும் கொன்னுட்டீங்களாடா பாவிகளா” என மடார் மடாரெனத் தலையில் அடித்துக்கொண்டாள். “அதெல்லாம் ஒண்ணுமில்ல சின்னம்மா, ஒரு சின்ன அடிதடி ஆகிப்போச்சு” என சமாதானப்படுத்த முத்துராசா தோளைப் பிடித்தான். சந்திரோதயம் திமிறினாள். பலம் கொண்டவளாய் இறுகிப்போய் இருக்கைகளைக் கைகளால் குத்தினாள். “வண்டிய நிறுத்து” எனக் கத்தினாள். “வேகமா போப்பா” எனப் பதறினார் ராஜேந்திரன். தலை சூடேற, சுமோவின் மேலே டம்டம்மெனக் கைகளால் குத்தினாள். ``ஏய்’’ என ராஜேந்திரன் நிதானமிழந்து பெருங்குரலெடுத்துக் கத்தினார். வண்டியின் வேகம் குறைந்தது. முன்னால், ஒரு முந்நூறு அடியில் போலீஸ் ஜீப் ஒன்று விளக்குகள் ஒளியைச் சிதற நின்றது.

ராஜேந்திரன் “அவளைஅடக்குங்கடா” எனக் கிசுகிசுக்க, தாமதிக்காமல் மூர்த்தி கைகளைப் பிடித்து வாயைப் பொத்தினான். சந்திரோதயம் திமிறி வெளியேறினாள். “யோவ் தள்ளுயா இங்குட்டு’’ என்றபடி சக்திவேலு சீட்டின் ஓரமாக அமர்ந்து பின்புறமாகக் கைகளை நுழைத்து அவள் அசைய முடியாமல் கைகளை முறுக்கி, வாயையும் மூக்கையும் பொத்தினான். சின்ன அசைவுகூட இல்லை. கண்களிலிருந்து நீர் தாரைதாரையாக வழிந்தது.

ஒரு ஏட்டு கம்பை நீட்டி, ஆளுங்கட்சிக் கொடியைப் பார்த்ததும் யோசனையாய் “ஓரமா நிறுத்துங்க” என்றார். “கட்சி வேலையா வந்துட்டுப் போறோம்ங்க, எம்.எல்.ஏகிட்ட பேசுறீங்களா’’ என்றார் ராஜேந்திரன். ``ஐயாட்ட ஒரு வார்த்த சொல்லிட்டுப் போயிருங்க’’ என்று சொல்லி லேசாகச் சிரித்தார் ஏட்டு. வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினர். எஸ்.ஐ ஒரு டாடா ஏஸைப் பிடித்து பேரம் பேசிக்கொண்டிருந்தார். பேரம் படியாததால் நேரம் நகர்ந்தது. பொறுமை இழந்தவராய் ராஜேந்திரன் இறங்கி எஸ்.ஐ-யிடம் சென்று ஆளுங்கட்சிக் கொடியைக் காட்டி ஏதோ பேசினார். எஸ்.ஐ ஏட்டைப் பார்த்து “யோவ் அனுப்பி விடுயா” என்றார் தலையில் அடித்துக் கொண்டு. வண்டி கிளம்பியது. வேகமெடுத்து அழுந்திச் சென்றது.

சந்திரோதயத்தின் வாயிலிருந்து கையை விடுவித்தான் சக்திவேலு. தலை ஒடிந்து கவிழ்ந்தது. சந்திரோதயத்தின் உடல் சூடு மெல்லமெல்லக் குறைய ஆரம்பித்தது. எதையோ காப்பாற்றி விட்ட நினைப்பில், ஆழமான மௌனத்துடன் அந்தக் குடும்ப வண்டி குலுங்காமல் சென்று கொண்டிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு