பிரீமியம் ஸ்டோரி
டுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு அவள் பத்தடி ஓடுவதும் மீண்டும் தன் கணவனிடம் திரும்புவதுமாக இருந்தாள். அவள் கணவன், சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு அருகில் நின்று கொண்டிருந்தான். பார் கம்பியில் ஒரு சீட் அமைத்து அதில் தன் மகனை அமர வைத்திருந்தான். அந்தப் பையனுக்கு மூன்று வயது இருக்கலாம். அவள் இடுப்பில் இருக்கும் குழந்தைக்கு மிஞ்சிப்போனால் ஒன்றரை வயது இருக்கும்.

ஏதேனும் கார் வருவதை தூரத்தில் பார்த்தால், ஆயத்தமாகி, குழந்தையை இறுகப்பிடித்துக்கொண்டு, மஞ்சு விரட்டு மாட்டை அணையப்போகிறவனின் முஸ்தீபுகளோடு அவள் ஓடுவதும், காருக்குள் இருப்பவர்கள் இவளைக் கண்டும் காணாமல் போவதுமாய் இருக்க, ஏதேனும் ஒருசில வண்டிகள், என்ன ஏதென்று கணிக்க, லேசாக நிறுத்தினால், கொஞ்சம் நம்பிக்கையுடன் இன்னும் வேகமாய் ஓட, அவள் நெருங்கும் முன்னரே எதற்காக அவள் ஓடி வருகிறாள் என்று அவள் தோற்றமும், ஒரு கையில் குழந்தை போக, மறு கையால் தன்னியல்பாக யாசித்து நீள்வதையும் பார்த்து அப்படியே வேகமெடுத்துப் போவதுமாய் இருந்தன.

கணவன், அமர்ந்திருந்த சிறுவனின் தலையைக் கோதிக்கொண்டும், அவளை முறைத்துக்கொண்டும் நின்றிருந்தான்.

அவள் மூச்சுவாங்க அவனிடம் வந்து நிற்க, கடுகடுவென வைத்திருந்த தன் முகத்திலிருந்து மிக மென்மையான சொற்களை உதிர்த்தான்.

“நீ சொன்னாக் கேக்க மாட்ட, எவனும் என்ன ஏதுன்னு கேட்க மாட்டான், நான் சொல்றதக் கேளு.”

சிறுகதை : வெளிச்சம்

அவள் தன் புறங்கையால் வாயைத் துடைத்துக்கொண்டு மூச்சிரைக்கப் பேசினாள்.

“கொஞ்சம் பொறுய்யா, பெரிய்ய இவருமாதிரி, நீ சொல்றதச் செய்ய ஒத்த நிமிசம்தான், அதுக்கா இத்தனவருசம் இம்புட்டு பாடுபட்டோம்.”

தன் கையில் இருந்த குழந்தையின் கன்னத்தில் தன் மூக்கை வைத்து அழுத்தி முத்தினாள். தன் தாயின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் தன் கன்னத்தில் பிசுபிசுக்க, சிரித்தது குழந்தை. பெண் குழந்தை.

அதே முத்தம் தனக்கும் வேண்டும் என்பதுபோல் சைக்கிளில் இருந்து எக்கி, இரு கைகளையும் அம்மாவை நோக்கி நீட்டினான் சிறுவன்.

அவன் கன்னத்தில் தட்டி முத்தம் வைக்கப் போகும்போதே ஒரு கார் வருவதைப் பார்த்தவள், பரபரப்பாகி காரை நிறுத்தும் நோக்கில் கை நீட்ட, கார் லேசாக வேகம் குறைத்து, பின் வேகமெடுத்துப் போய்விட்டது.

ஓடிவரும் தன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன். அவன் கைகள் இன்னும் அவளை நோக்கி நீண்டிருந்தன.

முருகன், சைக்கிள் ஹேண்ட்பாரில் கையை வைத்துக்கொண்டு சற்று விலகி, தன் கோலத்தை ஒரு முறை குனிந்து பார்த்தான்.

அவன் போட்டிருந்த வெள்ளை நிற பேன்ட் பழுப்பேறி, அதன் நிறத்தை இழந்து கறுப்பும் சாம்பலும் கலந்த அழுக்குத் தீற்றல்களாக தொடைப் பகுதியில் ஆரம்பித்து கீழ் வரை தென்பட்டன. சட்டையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் என்பது போல் இருந்தது. சைக்கிளில் அமர்ந்திருந்த பையனின் தலை பரட்டை படரத் துவங்கியிருந்தது.

நான்கு மாதங்களுக்கு முன்னர் அவன் கனவிலும் நினைத்திருந்திருக்க மாட்டான், இப்படித் தன் மனைவியை சாலையில் கையேந்த வைப்போம் என.

இதே சைக்கிளில், தன் நிறைமாதக் கர்ப்பிணி மனைவியின் தலைப்பிரசவத்திற்காக மருத்துவ மனைக்குப் போகும் வழியில்தான் அந்தச் சம்பவம் நடந்து, அவன் வாழ்வை மாற்றியது.

சிறுகதை : வெளிச்சம்

கொஞ்சம் பிசகியிருந்தாலும் அன்றே முருகனையும் பிரேமாவையும் சைக்கிளோடு சட்னி ஆக்கி இருந்திருக்கும் அந்தக் கார். சட்டென சுதாரித்து சைக்கிளைப் பின்வாங்கி, அவளை ஓரமாக அமரவைத்துவிட்டு, அங்கே சாலையின் ஓரத்தில் கிடந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்துக்கொண்டு, நிலைதடுமாறி இருந்த காரை நெருங்கி, ஓட்டிவந்தவரைக் கொன்றுவிடலாம் எனும் நோக்கத்தோடு நெருங்கிய பிறகுதான், உள்ளே அவர் நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, ஒரு நிமிடத்தில் நிலைமை உணர்ந்து, அவரைப் பின் சீட்டில் படுக்கவைத்துவிட்டு, தன் மனைவியையும் அதே காரில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் மருத்துவமனை அடைந்து, அவர் உயிரைக் காப்பாற்றினான். அன்றிலிருந்து, அவன் கட்டியிருந்த கைலி, பட்டுக்கொண்டிருந்த துயரம் எல்லாவற்றுக்கும் விடுதலை. அவரே அவனை டிரைவராக நியமித்து, வேண்டிய அடிப்படை வசதிகள் சம்பளம் என மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை.

அவர் எந்தச் சொந்த பந்தமும் அருகில் இல்லாத, வெளிநாட்டில் சம்பாதித்து, தன் இறுதி நாள்களை சொந்த ஊரில் நிம்மதியாகக் கழிக்க வந்திருக்கிறார் என்பதும், அவ்வளவு பெரிய வீடும் வசதியும் என வாழ்ந்தவர், முதன்முறையாக இப்படி நெஞ்சுவலி வந்து, கார் நிலைதடுமாற, தன் உயிரைக் காப்பாற்றிய முருகனைக் கடவுளாக பாவித்து, நன்றி சொல்லி, தன்னோடு ஒரு ஆள் இருத்தல் அவசியம் என்பதை உணர்ந்து சேர்த்துக்கொண்டார்.

காலை ஆறுமணியை அடிக்க விடமாட்டான் முருகன். எழுந்து குளித்து, வெள்ளைச் சட்டை வெள்ளைப் பேன்ட் எனக் கிளம்பி, தூங்கிக்கொண்டி ருக்கும் மனைவி மக்களின் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு சைக்கிளை எடுத்தான் எனில், சரியாக அரைமணி நேரத்தில் கார் முன் நிற்பான்.

காரைக் கழுவித் துடைத்து, வைப்பரை நிமிர்த்தி வைத்துவிட்டு, அமர்ந்து கொள்வான். அவன் வந்துவிட்டான் என்பதன் அடையாளம்தான் அந்த வைப்பர் நிமிர்த்தல். அதுதான் அவனது வருகைப் பதிவேடு.

உள்ளிருந்து அவராக வெளியே வரும்வரை, சுற்றிலும் இறைந்து கிடக்கும் கொய்யாமர இலைகளைக் கூட்டி விடுவது, செடிகளுக்குத் தண்ணீர் தெளிப்பது, செய்தித்தாள்களை எடுத்துப் போய் படிக்கும் நாற்காலிக்கு முன்னர் இருக்கும் டீப்பாயில் வைப்பது எனக் கனகச்சித அன்றாடக் காலை முருகனுக்கு.

இத்தனை வேலைகளைச் செய்யும்போதும் உடுப்பில் சின்ன அழுக்குகூடப் படிந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளும் ஒரு திறமையும் அவனுக்கு இருந்தது. அது திறமை என்பதைவிட அவனுடைய ஆசை, வெள்ளைச் சட்டை வெள்ளைப் பேன்ட், பளிச் என. ஓனர் எத்தனையோ முறை சொல்லிவிட்டார், இதெல்லாம் ஏதாவது கம்பெனிகளில் டிரைவராக இருந்தால்தான் தேவை எனவும், வீட்டில் ஓட்டுபவர்களுக்குத் தேவையில்லை எனவும் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்பதாய் இல்லை.

ஏனெனில் அவனுக்கு அந்த உடுப்பும் மிடுக்கும் அவ்வளவு முக்கியம்.

ஊரில், படிப்பு பத்தாம் வகுப்பிற்கு மேல் ஏறாமல் விளம்பரங்களுக்குத் தகரம் அடிப்பது, தறி நெய்வது, ட்ரை சைக்கிள் ஓட்டுவது என சகல வேலைகளிலும் ஓரிரண்டு வருடங்கள் செய்து, இறுதியாக குட்டி யானை எனப்படும் சரக்கு வேன் ஓட்டும் பணியில் ஒருவாறு தன்னை இருத்திக்கொண்டான்.

நேரம் காலம் இல்லாமல் வண்டி ஓட்டுவான். தலைமுடியும் சீர் இல்லாத தாடியும் அழுக்குக் கைலியும் என ஒருமாதிரியான கோலத்தில் இருந்தாலும் சட்டென வசீகரித்துவிடும் கண்களும் சிரிப்பும் அவனுக்கு வாய்க்கப் பெற்றிருந்தன.

சிறுகதை : வெளிச்சம்

குடோனில் இருந்து சரக்குகளை ஏற்றி சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பித்து, அன்றைய நாள் வாடகையை ஓனரிடம் சேர்ப்பித்துவிட்டு, அவனுடைய நாள்சம்பளத்தை வாங்கிக்கொண்டு நகரும்போது வண்டியின் பக்கவாட்டில் ‘வாடைக்கு விடப்படும்’ எழுத்துகளின் மீது கைவிரல்களை உரசிக்கொண்டே புரோட்டாக் கடையை நோக்கிப் போவான்.

அன்றைய நாள் சம்பாதிப்பு அன்றைய நாள் செலவு, அவ்வளவுதான் அவன் வாழ்க்கை. அவனுக்கென்று யாரும் இல்லை.

ஒரு மழை நாளில், சரியான கிராக்கியோ, வழக்கமான லோடு வேலைகளோ இல்லை என்பதால் எப்போதும் போகும் நேரத்தைவிட சற்று முன்னதாகப் போய் வண்டியைக் கொடுத்துவிட்டு, உடல்வலி போக நன்றாகத் தூங்கலாம் என முடிவெடுத்துப் போனவனின் தூக்கம் அன்றோடு தொலைந்தது.

ஆம், அந்த நேரத்தில் ஓனருக்கு பதில் கதவைத் திறந்து விவரம் கேட்டது, பிரேமா. அந்த வீட்டில் வேலை செய்யும் பெண். அவளிடம் விவரம் சொல்ல, அவள் உள்ளே போய் ஓனரை அனுப்பினாள். மழையைக் காரணம் சொல்லி, அன்றைய கணக்கை ஒப்படைத்துவிட்டு நடந்தவனின் கண்களில் முதலில் தென்பட்டது, வண்டியின் ஆயில் சிந்தி, மழை நீர் பல வண்ணங்களில் வானவில் போல் சாலையில் தேங்கி இருந்த காட்சி, அடுத்து அவன் பார்த்தது அந்தத் தேங்கிய நீரை சளக்புளக் என மிதித்துப் போகும் கெண்டைக்கால்களை. சட்டென நிமிர்ந்தான்.

பிரேமா தன் தாவணியின் முனையைத் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் ஓடிக்கொண்டிருந்தாள், மழைக்கு அஞ்சி. அவளை ஐந்து நிமிடத்திற்கு முன்னர் பார்த்திருந்த அசட்டை மனநிலை இப்போது இல்லை அவனுக்கு. மழையும் வண்ணமும் கெண்டைக்கால் ஒற்றை ரோமமும் எல்லாவற்றையும்விட, இவனைப் பார்த்து, இப்போதுதானே உன்னைப் பார்த்தேன் என்ற அந்தச் சிரிப்பும் அவனைத் தடுமாறச் செய்தது. அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, நடுவில் இருந்த பள்ளத்து நீரை ஒரே தாவலில் தாவி, மறைந்தாள்.

அவ்வளவுதான். அவனது இலக்கற்ற பெருவாழ்வு முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு நாளின் இரவு எட்டுமணி என்ற இலக்கே அவன் வாழ்வானது. எங்கு சுற்றினாலும் இரவு எட்டுமணிக்கு ஓனரின் வீட்டிற்கு வந்து கணக்கு முடித்து, தெருவின் முனையில் காத்திருக்கத் தொடங்கினான். அவள் வேலை முடித்து வர, அவளுக்கு இணையாக நடக்க ஆரம்பித்தான். மிகக் கவனமாக மாலை வேளைகளில் தொலைதூர லோடு சவாரிகளைத் தவிர்த்தான். கைநிறைய காசை அள்ளிக்கொண்டு வந்து தருபவனின் இந்த சுணக்கம் பெரிதாய் ஒன்றும் செய்துவிடவில்லை ஓனரை. ஏனெனில் இதற்கு முன்னர் இருந்த ஓட்டுநர்களெல்லாம் டீசல், பஞ்சர், கண்ணாடிக் கீறல், சைடு உராய்ப்பு என ஏகப்பட்ட பொய்க்கணக்குகளைச் சொல்லி, கையில் சொற்பத்தைத்தான் தருவார்கள். கையில் இருந்துதான் வண்டியின் மாதத் தவணையைக் கட்டுவார். ஆனால் இவன் வந்தபிறகு எப்படியும் தவணைக்கு மோசமில்லை. சமயத்தில் அதைவிடவும் அதிகமாகவே கையில் நிற்கும். அதனால் அவனுடைய இந்தத் திடீர் மாற்றம் அவரை ஒன்றும் பாதித்துவிடவில்லை.

ஆனால், பிரேமாவின் மனதை பாதித்தது. முதலில் சிரித்துக் கடந்தவள், பின்னர் இவனைக் காணவில்லை எனில் காத்திருந்து கிளம்பத் தொடங்கினாள்.

“என்ன அய்யா ஒரே செல்லப் புள்ள போல ஓனருக்கு” என்பதாக ஆரம்பித்தது அவர்கள் இருவருக்குமான வாழ்வின் முதல் வாக்கியம்.

“ஆமா, அப்போறம் இருக்காதா, மாடு மாதிரி வண்டி ஓட்டி காசக் கொண்டாறேன்ல”

சொல்லும்போது அவனையறியாமல் இடது காலை வலி என்பதுபோல் காட்ட, ஒரு பரிதாபம் மெல்லக் காதலாக மாறத் தொடங்கியது.

ஒரு மழைநாளில் தொடங்கிய காதல், இன்னொரு மழைநாளில் விபரீதம் அடைந்தது. வண்டியை நிறுத்திவிட்டு நடந்தவன், கதவைத் திறந்துகொண்டு பிரேமா ஓடி வருவதைப் பார்த்தவன் அப்படியே நின்றான். அவள் இவனைப் பார்த்ததும் தன் இயலாமையை அழுகையாக வெடித்து மார்பில் புதைந்து கையை ஓனரின் வீட்டை நோக்கிக் காட்டினாள், அவள் கைகள் நடுங்கின.

வேனில் இருந்த ராடை எடுத்துக்கொண்டு உள்ளே போனவன், ஓனரின் கையில் ஒரே போடாய்ப் போட்டான்.

கணக்கு முடித்த பணத்தை அவரிடம் காட்டிவிட்டு, தான் எடுத்துக்கொள்வதாக அதட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி, அவளையும் அழைத்துக்கொண்டு வந்தவன்தான்.

மீண்டும் ஒரு வாழ்வைத் தொடங்கினான், தன் பழைய வாழ்க்கையைப் போலவே. எல்லா வேலையும் செய்தான். சைக்கிள் கடையில் வேலை பார்த்து ஒரு பழைய சைக்கிளை ஓவராயிலிங் செய்து, தனக்காக ஆக்கிய நாளில் பிரேமாவை வைத்து ஊர் சுற்றி, கோயில் வாசலில் பூ வாங்கிக்கொடுத்ததுதான் அவனின் அதுவரையிலான வாழ்வின் ஆகப்பெரிய வெற்றி என்று நினைத்தான்.

சைக்கிளில் போகும்போதெல்லாம் ஏதேனும் வாடகைக் கார்களைப் பார்த்து, அந்தச் சீருடை அணிந்த ஓட்டுநர்களைப் பார்த்து, பிரேமா ஆசையாய் அவன் தோளைத் தொட்டு, வேன் ஓட்டியதுபோல் காரும் ஓட்டலாம்தானே என்பதாகக் கேட்டு, திட்டு வாங்குவாள்.

“அந்த டிரைவரையே ஏன் பார்க்குற?”

என்ற அவன் கேள்விக்கு வெடுக்கென பதில் வரும்,

“அவன யாரு பார்த்தது, அவன் உடுப்பு பாரு, வெள்ளை வெளேர்னு, ராஜா மாதிரி.”

பிறகு அவளை சமாதானப்படுத்த வம்பாடுபட்டு பத்து ரூபாய்ப் பூவில் தஞ்சம் புகுவான்.

ஏனெனில், தனக்கென்ற அவளிடமான இடத்தை வேறு எவனும் அடைந்திட முடியாது என்ற நம்பிக்கை அவனுக்கும், தன்னைவிட எவளும் இவ்வளவு அன்பை அவன்மீது காட்டிடமுடியாது என்ற திமிர் அவளுக்கும் இருக்கின்ற காரணத்தினால், எல்லாமே சிற்றூடல்தான். கூடி முயங்கிப்பெறும் வகையில்தான் அந்நாள் முடியும்.

அவனுடைய, அன்றைய நாள் சம்பாத்தியம் அதை அன்றே செலவுசெய்து வானம் நோக்கிக் கை விரித்து ஏதும் இல்லை என்னை ஏற்றுக்கொள்வாயா என்பதுபோன்ற வாழ்க்கை நடைமுறை பிரேமா வந்த பின்னும் அப்படியே தொடர்ந்தது. இந்த உலகில் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிடலாம், அத்தனைக்கும் அதனதன் அளவில் வழி இருக்கும். அப்படித்தான் அவனும் அவளும் சேர்க்கும் பணத்திற்கு ஏற்ப காலை முழுதாக நீட்டிவிடாமல் படுத்துக் கொண்டால் சுகமாக இருக்கலாம் போன்ற அளவிலான வீடொன்றும், அன்றாடத்தில் ஏதேனும் சற்று பத்து ரூபாய் அதிகம் தேவை எனில் முதல் நாள் இரவில் அவள் சொல்லிவிட்டால், அதற்கான அதிக உழைப்பைக் கொட்டி, காசோடு வந்துவிடுவதுமாய் இருந்தான்.

அப்படிப் போய்க்கொண்டிருந்த வாழ்வில்தான் கார் ஏற்றிக் கொல்லத் தெரிந்த ஒருவரை இவன் காப்பாற்றியதும் பதிலுக்கு இவன் வாழ்க்கையை அவர் மேடேற்றியதும் நிகழ்ந்தன.

அதுவரையிலான தன் வாழ்வின் எந்த ஒரு கனவும் அவன் பெரிதாய்க் கண்டதில்லை. பெரிதாய் எந்த இலட்சியமும் அவனுக்கு இல்லை. ஆனால், தன்னை நம்பி தன்னோடு வந்தவளை இப்படி இரண்டு வேளையில் ஒரு வேளைதான் நல்ல உணவு, வேறெந்த மேற்படியும் இல்லாத வரட்டு வாழ்க்கையைக் கொடுத்துவிட்டோமே என்ற நினைப்பு மட்டும் அவனுக்கு வந்து போகும்.

தனக்காக இல்லாமல் பிறர் நலனுக்காகக் கொள்ளப்படும் இலட்சியங்களை அடையக்கூடிய சாத்தியங்கள் அதிகம் என்பதுபோல் அவனுக்கு அமைந்தது.

முதல்நாளே அவன் அன்பாய் அழைத்த ‘ஓனர்சார்’ பிரேமாவின் பிரசவத்திற்குத் தேவையான உதவிகளையும், அவனுக்கு உடைகள் எனக் கொடுத்ததில் அவன் ஆழ்மனம் இனி இங்குதான் நம் ஆயுள், இதுதான் நம் வாழ்வு என்று உணர்த்திவிட்டது. அவனுடைய ஓனர்சார் சொன்ன “இந்த உலகத்துல மனுஷங்க கண்ணாடி மாதிரி, நீ எப்பிடி மத்தவங்களப் பார்க்குறியோ அப்பிடித்தான் அவங்களும் உன்ன பார்ப்பாங்க” என்ற வாக்கியம் உள் செல்ல, அவரை அவ்வளவு அன்பாகப் பார்க்க ஆரம்பித்தான். பதிலுக்கும் அதுவாகவே கிடைத்தது.

“இம்புட்டு அன்பு காட்ற ஆளுக்கு பதிலுக்கு நான் என்ன செய்யுறது” என்ற கேள்விக்கு பிரேமாவின் பதில் சட்டென வந்து விழுந்தது.

“கடேசி வரைக்கும் உண்மையா இரு, அதவிடவா பெருசா வேற எதுவும் செஞ்சுறப்போற.”

அப்படித்தான் இருந்தான். அவ்வளவு உண்மையாக.

இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துபோது அவ்வளவு பெருமையாக ஓனர்சார் கொடுத்து அனுப்பிய குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான். அவன் முகத்தில் அவ்வளவு பெருமிதம்.

அக்கம்பக்கம் யாரும் அவ்வளவு எளிதில் ஒரு துரும்பைக்கூட எடுத்துவிட முடியாது அந்த காம்பவுண்டிலிருந்து, அவனுக்குத் தெரியாமல்.

ஒரு நாள் வழக்கம்போல் காரைக் கழுவிக்கொண்டி ருந்தவனை அழைத்த ஓனர்சார், ஏதோ ஒரு துணிபோன்ற ஒன்றைக் கொடுத்து, பிறகு கையை நீட்டச் சொல்லி ஒரு திரவத்தைத் தெளித்து, மாஸ்க் எப்படி அணிய வேண்டும், கையை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனச் சொல்லிக்கொடுத்தார். அதை அவன் வீட்டில் பிரேமாவிடம் விளக்க, அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் சிரிப்பதைப் பார்த்து அவனுக்கு முதலில் கோபம் வந்தது. ஆனால் அவனுடைய மூன்றுவயது மகனும் எதுவும் புரியாமல் தன் தாயோடு சேர்ந்து சிரிக்க, அவனும் சிரித்தான். பிறகு விளக்கினான். அதை வாங்கி பவுடர் டப்பா வைக்கும் செல்ப்பில் வைத்துவிட்டு, தட்டை வைத்தாள்.

கொரோனாவின் அடுக்குகள் மெல்ல சமூகத்தில் விரவத்தொடங்கியதில், ஒரு நடைமேடையில், தன் அம்மா இறந்ததை அறியாமல் அவள்மீது இருந்த போர்வையைத் தன் முகத்தில் மூடி விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் காணொலியைக் கண்ட துக்கம் என ஓனர்சாரை மன அழுத்தம் ஆட்கொள்ள, ஒரு நாள் இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸை அழைக்க, அவர்கள் வந்து சேரவும் இவர் போய்ச்சேரவும் சரியாக இருந்தது.

அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தான் முருகன். சட் சட்டென அனைத்தும் நிகழ்ந்து முடிய, அதுவரை அப்படி ஒரு கூட்டத்தை அந்த வீட்டுக் காம்பவுண்ட் சுவர் பார்த்ததில்லை என்பதுபோல் எங்கெங்கிருந்தோ அவருடைய தூரத்துச் சொந்தங்கள் என்ற பெயரிலும் அவருக்குப் பின் அனுபவிக்கப்போகிறவர்கள் என்ற கூட்டமும் சேர்ந்து, முடித்து, காரையும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். போவதற்கு முன், அந்த மாதம் எத்தனை நாள் எனக் கணக்கிட்டு மிகச்சரியாக அவனுடைய சம்பளத்தையும் கொடுத்து அனுப்பினார்கள்.

கொரோனா பணக்காரர்களுக்கு மட்டும் வரும் வியாதி என்ற முழக்கத்தின் கீழே ‘ஆனால் அதன் பாதிப்பு அன்றாடங்காச்சிகளுக்குத்தான் முதலில்’ என்ற சொல்லப்படாத நியதி நிகழ்ந்து கொண்டிருந்தது.

முதல் மாதம், இரண்டாம் மாதம் என சமாளித்து சமாளித்து, முன்பு பார்த்த சைக்கிள் கடையில் ஆரம்பித்து எந்த விதமான தொழிலும் இயங்கவில்லை என்றானபின், மெல்ல மெல்ல ஒரு வேளை உணவிற்கே திக்கு திசையற்றுப் போகும் நிலைக்குப் போய்விட்டதை உணர்ந்து, செத்துவிடலாம் அல்லது சைக்கிளில் தெற்கு நோக்கிப் போகலாம், இங்கு இனி இருக்க முடியாது என்ற அவனுடைய யோசனைக்குத்தான் அவள் முட்டுக்கட்டை போட்டு, எவரிடமேனும் உதவி கேட்போம், ஓனர்சார் போல் இன்னொருவரை இந்த உலகம் நம் கண்களுக்குக் காட்டும் என நம்பிக்கையாகச் சொல்லி, அவனை இப்படி இந்தச் சாலையில் நிறுத்திவிட்டு, ஓடிக்கொண்டிருக்கிறாள்.

யாராவது நிறுத்தி என்ன ஏதென்று கேட்டால், முதலில் பசிக்கு ஏதேனும், பிறகு அவனுக்கு ஓட்டுநர் வேலை அல்லது தனக்கு வீட்டு வேலை, இதுதான் திட்டம்.

ஆனால் எவரும் அவர்களைப் பொருட்படுத்தவில்லை.

இப்படித்தான் ஆகும் என அவனுக்குத் தெரியும் என்பதால், அவன் சைக்கிளில் இருக்கும் மகனை அவ்வப்பொழுது எடுத்து முத்தம் வைத்துவிட்டு மீண்டும் அமர்த்தினான்.

காலையில் இருந்து இங்கும் அங்குமாய் ஓடியதால் பிரேமாவின் உடல் நடுங்கி, வாய் வழியாக சுவாசத்தைப் பெரிதும் சிறிதுமாய் விடுவித்தாள். இடுப்பில் இருந்த குழந்தை அவளின் செய்கையைப் பார்த்துச் சிரித்தது. குழந்தை சிரித்ததைப் பார்த்த சிறுவன் `ஹெக்ஹெக்’ எனச் சிரித்தான். வயிற்றில் ஏதுமில்லாததால் அவன் வயிறு இழுத்துக்கொள்ள, அழத் தொடங்கினான்.

முருகன் அவனைத் தூக்கிக்கொண்டு, நடைமேடையில் அமர்ந்து, வயிற்றைத் தடவிக்கொடுத்து, அவன் தொப்புளில் புர்ர்ர்ர்... என ஊதி சத்தம் வரவழைத்தான்.

அந்தச் சத்தம் சிறுவனைக் குதூகலப்படுத்தியது. மேலும் மேலும் செய்யச்சொல்லி, சிரித்தான். அவளுடைய இடுப்பில் இருந்த குழந்தை தனக்கும் அப்படிச் செய்யவேண்டும் என்பதுபோல் கையைத் தன் அப்பா, அண்ணன் பக்கமாய் நீட்டி, தாவ ஆயத்தமாகி, ஒவ்வொரு புர்ர்ர்... சத்தத்திற்கும் களுக் களுக்கெனச் சிரித்தது.

குழந்தைகள் சிரிப்பு அவனுக்கு உற்சாகத்தைக் கொடுக்க, இன்னும் மூர்க்கமாக தொப்புளில் ஊதி, சத்தம் எழுப்பினான்.

தூரத்தில் ஒரு கார் வரும் ஒளி தெரிந்தது.

பிரேமா அழத் தொடங்கினாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு