Published:Updated:

சிறுகதை: பேச்சரவம் கேட்டிலையோ

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

சிறிய வீடுதான்... ஒரு நீளமான சந்து போன்ற நடை, அதன் முடிவில் ஒரு பெரிய அறை, அஸ்பெஸ்டாஸ் கூரை, அறையின் ஓரத்தில் ரீப்பர் நிலை வைத்து மேடை அமைத்தொரு கிச்சன், கிச்சனை அறையிலிருந்து பிரிக்கும் அழுக்கான விநாயகர் படம் போட்ட திரைச்சீலை.

சிறுகதை: பேச்சரவம் கேட்டிலையோ

சிறிய வீடுதான்... ஒரு நீளமான சந்து போன்ற நடை, அதன் முடிவில் ஒரு பெரிய அறை, அஸ்பெஸ்டாஸ் கூரை, அறையின் ஓரத்தில் ரீப்பர் நிலை வைத்து மேடை அமைத்தொரு கிச்சன், கிச்சனை அறையிலிருந்து பிரிக்கும் அழுக்கான விநாயகர் படம் போட்ட திரைச்சீலை.

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

வையெல்லாம் இருப்பதால் இதை வீடு என்று கருதலாம்தான். ஆனால், `சொரட்டை’ என்ற பட்டப்பெயர் கொண்ட வீரன், இதை வீடாக ஒப்புக்கொள்வதில்லை. ``வீடா இது… பன்னிக் குடிசை கணக்கா... மனுசன் இருப்பானா இதுல... தூத்தேறி…” என்று ஓரத்திலேயே துப்புவான். அது அவன் வீடுதான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வீடென்று சொல்லத்தக்க ஒன்று தனக்குச் சொந்தமாக இருப்பதில் அவனுக்குப் பெருமிதமேதும் இல்லை. ``இந்த ஊரில் பாதி எனக்குச் சொந்தமா இருந்திருக்கணும். குடிகார...... அப்பனால இப்போ இது மட்டும்தான் மிஞ்சிக் கெடக்கு. அப்பன் மட்டுமா காரணம்? வந்து வாய்ச்ச மூதேவி .....யும்தான். பொய் ஜாதகம் குடுத்து ஏமாத்திட்டான் அந்த மாமனார்...... (கோடிட்ட இடங்களை இஷ்டமான கெட்ட வார்த்தைகளால் நிரப்பிக்கொள்ளவும்)” என்று வாய்த்த உறவுகள், ஊர், உலகம், கடவுள் எல்லா வற்றையும் விடிந்தது முதல் உறங்கும்வரை வைது தீர்ப்பது வீரனின் இயல்பு. எப்போதும் குடி. மனைவி கோபித்துக் கொண்டு, பிள்ளையைக் கூட்டிக்கொண்டு அப்பன் வீட்டுக்குப் போய் ஆறு மாதங்களுக்கு மேலாகிறது.

அப்பன், தாத்தன் சம்பாரித்த மானாவாரிக்காடு கொஞ்சம் இருந்தது. அதைத் துண்டு துண்டாக விற்றுக் குடிக்க ஆரம்பித்தான்.

எப்போதும் எல்லோர் மேலும் கோபம் கொண்டு, ஊரிலிருக்கும் எல்லோரிடமும் சண்டை இழுத்துக்கொண்டு திரியும் இவனோடு எப்படி இருப்பதென்று, மத்தியஸ்தம் போனவனிடம், பொண்டாட்டிகாரி சொல்லி அழுதாள். அவள் சொன்னதை இவனிடம் வந்து சொன்ன வீரனின் பெரியப்பன் மகனை வீரன் கோபமாகக் கன்னத்தில் அறைய, அவன் பதிலுக்கு கையில் சிக்கிய விறகுக் கட்டையை எடுத்து முழங்காலில் போட்டு ஒரு வாரமாகிறது. பொண்டாட்டி சொன்ன வார்த்தையைச் சொன்னதற்காக பெரியப்பன் மகனை அடித்திருக்க வேண்டாம்தான். ஆனால், அதற்காக அவன் விறகுக் கட்டையைத் தூக்குவான் என்று வீரனாகப்பட்டவன் எதிர்பார்த்தி ருக்கவில்லை. அந்த செகண்ட் கோபம் வந்து கன்னத்தில் அறைந்தால், பதிலுக்கு அவனும் கன்னத்தில் அறையாமல் கட்டையையா தூக்குவது? ஒரு வாரமாக, `கக்கா’ போவதற்குக்கூட கஷ்டமாயிருக்கிறது.முழங்காலைச் சரியாக மடக்க முடியவில்லை.ரொம்பத் தனியாக இருக்கிறான். அவசர ஆத்திரத்துக்குக் குழம்பு, ரசம் ஓசிகூட வாங்க முடியாதபடிக்கு பக்கத்து வீடுகள் எல்லோருடனும் சண்டை. இத்தனைக்கும் சின்ன கிராமம். எல்லாரும் சொந்தம்தான். இருந்தாலும், ``இந்தச் சொரட்டைப் பயகூட மனுசன் பேசுவானா...ச்சேய்...” என்று எல்லோரும் சொல்லும்படிதான் வீரனின் சமூக பராக்கிரமம் இருக்கிறது.

வாசலுக்கு நொண்டிய படி வந்தான். கையில் தூக்குப் பாத்திரம். வீட்டினருகே இருந்த டீக்கடையில் ஒரு டீயையும் பன்னையும் வாங்கிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான். காலையில் குடித்த போதை கொஞ்சம் இறங்கியிருந்தது. லேசாகத் தலை வலித்தது. டீயையும் பன்னையும் சாப்பிட்டான். கொஞ்சம் தெம்பாக இருந்தது. பாட்டிலை கவனித்தான். மிலிட்டரி ரம் ஒரு ஆளிடம் வாங்கி வைத்திருந்தது கால் பாட்டில் குடித்தது போக, முக்கா பாட்டில் இருக்கிறது. சாயங்காலம்வரைக்கும் மெள்ள மெள்ளக் குடிக்கலாம் என்று நினைக்கும்போது ஆறுதலாக இருந்தது.

சிறுகதை: பேச்சரவம் கேட்டிலையோ

கால் வலித்தது. பிளாஸ்டிக் சேரில் சாய்ந்து அமர்ந்து, காலை நீட்டி வாகாகச் சாய்ந்துகொண்டு கூரையைப் பார்த்தான். ஆஸ்பெஸ்டாஸ் போட்டுப் பல வருஷங்களாகிவிட்டன. எல்லா இடத்திலும் தேமல் தேமலாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னாடிவரை விவசாயமும் பார்த்துக்கொண்டு மில் வேலைக்கும் போய் வந்துகொண்டிருந்தான். சில ஆண்டுகளாகப் பழகியிருந்த குடி, மெள்ள மெள்ள அவனுக்கே தெரியாமல் அதிகரித்துவந்தது. ஒரு காலத்தில் ராத்திரி ஷிஃப்ட் எல்லாம் வேலை பார்த்தவன், மெள்ள மெள்ள அதைத் தவிர்த்தான். சாயங்காலமே கிளம்ப வேண்டுமென்கிற துடிப்பு வந்துவிட, சீக்கிரம் வேலையை முடித்துவிட்டுக் கிளம்பினான். சில நாள்களில் வேலையை முடிக்காமலேயே கிளம்பினான். ஒரு கட்டத்தில் காலையில் எழுந்து வேலைக்குக் கிளம்பும்போதே, `எப்படா வேலை முடிஞ்சு கடையில போய் குவார்ட்டரை வாங்கி வாயில ஊத்திக்கிட்டு, கையில் ஒரு குவார்ட்டரைப் பிடிச்சுக்கிட்டு வீடு திரும்புவோம்?’ என்கிற பதற்றத்துடனேயே கிளம்பிப் போக ஆரம்பித்தான். காலையில் லேசாக இருக்கும் படபடப்பு மதியத்துக்கு மேல் அதிகரிக்கும். சாப்பிடவே தோன்றாது. சாயங்காலம் மூணு மணி ஆனால், நேரத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பான். பிரைவேட் மில் என்பதால், கரெக்டாக அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்ப முடியாது. `எல்லாத்தையும் முடிச்சுட்டுக் கிளம்பு’ என்று மேனேஜர் அதட்டுகையில், கைகாலெல்லாம் நடுங்கும். ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு சைக்கிளை எடுத்தால் உடம்பு, மனசு எல்லாமே கடையை நோக்கி விரைந்து போய், வேகமாக வாங்கி அந்த பெட்ரோல் நிற திரவத்தை வயிற்றுக்குள் அனுப்பி, தொண்டையும் வயிறும் லேசாகக் காந்துகையில், சுண்டலையோ மிக்ஸரையோ சப்போர்ட்டுக்கு அனுப்பினால்தான் கை நடுக்கம் நிற்கும்.

இப்படிப் பழகிய உடம்பால் ஒரு கட்டத்துக்கு மேல் வேலைபார்க்க முடியவில்லை. கை நடுக்கத்துடன் கிளம்பத் துடித்தவனை மேனேஜர் அதட்டி, `ஏழு மணிக்குப் போ’ என்று சொல்ல, வீரன் கை நீட்டி மேனேஜரை அடிக்க, அதோடு சோலி முடிந்தது. அதன் பின் சின்னச் சின்ன அத்தக்கூலி வேலைகள்... எதுவும் நிலைக்கவில்லை. வேலைக்குப் போகப் பிடிக்கவில்லை. பொண்டாட்டி தோட்ட வேலைக்குப் போனதில் வண்டி ஓடியது. வீட்டிலேயே பாதி நேரம் இருக்க ஆரம்பித்தான். பகல் குடி தொடங்கியது. அப்பன், தாத்தன் சம்பாரித்த மானாவாரிக்காடு கொஞ்சம் இருந்தது. அதைத் துண்டு துண்டாக விற்றுக் குடிக்க ஆரம்பித்தான். ஒருகட்டத்தில் வீரனுடன் யார் பேசினாலும் அது சண்டையில் முடிய, மனிதர்களுடன் பேச்சு குறைந்து, குடி அதன் உச்சத்தைத் தொட்ட ஒரு நாளில், பிள்ளையுடன் பொண்டாட்டி, அப்பன் வீட்டுக்குப் போய்விட்டாள். அன்று முதல் தனிமைதான். குடிதான். நாள் கிழமை வித்தியாசமெல்லாம் மறந்துபோய் அவனது பொழுதுகளும் வாழ்க்கையும் மிடறு மிடறாக நகர்ந்துகொண்டிருந்தன.

எப்போதாவது குடிக்கு இடையில் விழும் சின்ன இடைவெளியில் கீற்றாக மனதில் தோன்றும். `என்னடா வீரா பொழைப்பு பொழைக்கிற... குடிக்கிறது, ஒண்ணுக்குப் போறது, பொலம்புறது... இப்படியே ஆகிப்போச்சே பொழைப்பு...’’ என்ற எண்ணம் தோன்றும். வேதனையும் கழிவிரக்கமும் போட்டு அழுத்த, வாய்விட்டு அழுதிருக்கிறான். ஆனால், அடுத்த கிளாஸ் அருகிலேயே இருப்பதால், தோன்றும் ஞானம் உடனே மறைந்துவிடுகிறது.

கொஞ்ச நேரம் மேலே பார்த்தவன் பாட்டிலை எடுத்து அப்படியே வாயில் கவிழ்த்து, இரண்டு மடக்கு குடித்தான். தொண்டையில் `சர சர...’வென்று அறுத்துக்கொண்டு அந்தத் திரவம் இறங்குகையில், `சர சர...’வென்று சத்தம் கேட்டது. `என்னடாது... குடிக்கும்போது இந்த மாதிரி சத்தம் ஃபர்ஸ்ட் டைமா கேக்குது...’ என்று பாட்டிலைக் கீழேவைத்த பிறகும் அந்தச் சத்தம் கேட்டது. ஓர் ஓரத்திலிருந்த சிறிய காலி டப்பா ஒன்று திடீரென்று உருண்டு நகர்ந்தது. வீரனின் கவனம் அதில் குவிந்தது. `எதுக்கு இது உருளுது... தன்னால உருள இது என்ன தண்ணியா போட்டிருக்கு?’ என்று அதையே பார்த்தான். வெந்நீர் வைப்பதற்காக வாங்கிப் போட்டிருக்கும் சிரட்டைகள், பழைய சாக்குகள், விறகு, பக்கத்திலேயே அரிசி மூட்டை, தாத்தா காலத்து அடுக்குப் பானைகள், அவற்றில் அடைத்து வைத்திருக்கும் புளி… இவை தவிர பெரிய கொச்சைக்கயிறுகள், வெண்கலப் பாத்திரங்கள், எரிந்துபோன பழைய மோட்டார் ஒன்று தூசி ஏறிப்போய் தொல்பொருள் போலிருக்க, அதனருகே பழைய போட்டோக்கள், வெல்லத்தைக் கொட்டிக் காயவைக்க என்றோ வாங்கிய ஓலைப்பாய்ச் சுருட்டல்கள் என... விவசாய வீட்டின் எச்சங்கள்.

மண்டையில கரெக்டா போட்டுட்டா நச்சுன்னு சிதைஞ்சுபோயிரும்.ஆனா, கரெக்டா போடணுமே... இல்லாட்டி நம்மளைப் போட்டுரும். டேய் நீ வீரன்டா

பார்த்துக்கொண்டி ருக்கையிலேயே சிரட்டைக் குவியல் லேசாகச் சரிந்தது. என்னமோ அதனடியில் நகர்வதைப்போல்… `எலியாக இருக்குமோ?’ வீரனுக்குள்ளிருந்து வீரம் தலை நீட்டியது. வாய்விட்டே சொன்னான்.

``ஏய்… விளா எலி! என்னளா... என்னாத்தை உருட்டுற? வந்தேன்னா உரிச்சு உப்பைத் தடவி சுட்டு, சைடு டிஷ்ஷுக்கு வெச்சிக்கிருவேன்...கம்முன்னு கிட… என்னா?”

மெதுவாக எழுந்து போய், செம்பில் தண்ணீர் எடுத்து, `மட மட’வெனக் குடித்தான். காந்தும் வயிற்றுக்குக் கொஞ்சம் இதமாக இருந்தது.மிதமான ஒரு ராஜபோதை லேசாக ஆட்ட, நாணல்போல் அசைந்தான். இப்போது கொச்சைக் கயிறுகளில் ஓர் அசைவு தெரிந்தது. `எழவு போதையேறினா, எல்லாமே மூவ்மென்ட்டாகுதே?’ என்று தலையை உலுப்பிக்கொண்டு பார்க்கையில், அந்த அசைவு நின்று, அடுத்திருந்த ஓலைப்பாயில் தெளிவான சரசரப்புச் சத்தம் கேட்டது. வீரனுக்குக் கோபம் வந்துவிட்டது. ``ஏய் கழுதை... பேசாம கெடக்க மாட்டே... இந்த வீட்டுல நீ திங்கிறதுக்கு என்னா இருக்கு? போ அங்கிட்டு...’’ என்று கையிலிருந்த டம்ளரை ஓலைப்பாய்க் கட்டின் மீது வீசி அடித்தான்

`உஸ்ஸ்ஸ்...’ என்ற ஒரு பெரிய அதட்டல் ஓலைப்பாய்ச் சுருளின் பின்னாலிருந்து வந்தது.

பாம்பின் சீறல்... ஒரு விநாடி என்னவென்று புரியவில்லை. குழப்பத்துடன் வீசி எறிந்த டம்ளரை எடுக்கக் கையை நீட்டியபோது, ஓலைப்பாய்ச் சுருளின் பின்னாலிருந்து இன்னும் பெரியதாக `உஸ்ஸ்ஸ்...’ என்ற கோபமான அதட்டல் கேட்டு அங்கம் பதறிப்போய் பின்னால் நகர எத்தனித்த வீரனின் காலில், `சுர்ர்...’ என்று இழுத்துப் பிடித்தது. வலி. அப்படியே கீழே சரிந்தான். `பாம்பு எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம்’ என்ற பயம் பரவ, எழ முயன்று, வலியின் காரணமாகத் தடுமாறு கையில் அது வெளியே வந்தது. கருநாகம். தாராளமாக நாலரை ஐந்தடி நீளம் இருக்கும். ஓலைப்பாயின் பின்னாலிருந்து வெளிப்பட்டு, அடுக்குப் பானைகளின் அருகே இருந்த சாக்குகளுக்குள் போய் மறைந்தது.

பயத்தில் வீரனின் வாயெல்லாம் வறண்டுபோய்விட்டது. தள்ளாடி எழுந்தவன் ஓட்டமும் நடையுமாக அந்தச் சிறிய நடை வழியாகத் தெருவுக்கு வந்தான். வாசலில் நின்றிருந்த இரண்டு பேரைக் கூப்பிடலாமென்று பார்த்தால், ஒருவன் முத்து, இன்னொருத்தன் செல்வம். ரெண்டு பேரோடயும் போன வாரம் டீக்கடையில் தகராறு. இருவரும் முறைத்துப் பார்த்துவிட்டு அவர்களுக்குள் பேசியவாறு சென்றுவிட, எதிர்வீட்டைப் பார்த்தான். அங்கே சின்னச்சாமி நின்றுகொண்டிருக்க, வீரன் தன் வெட்கத்தை விட்டுப் பேசினான்.

``சின்னச்சாமி... கொஞ்சம் இப்பிடி வாறயா?’’

``என்னா சொரட்டை?’’

``வீட்டுக்குள்ள ஒரு சீவாத்தி வந்துருச்சு. கம்பு இருந்தா எடுத்துட்டு வர்றியா?’’

சின்னச்சாமி பதில் சொல்லுமுன், அவன் பொண்டாட்டி உள்ளேயிருந்து வந்தவள் புருஷனிடம், ``போனேன்னா வெளக்கமாறு பிஞ்சிரும். இந்த எடுபட்ட சொரட்டைப்பய முந்தா நாள் தண்ணியப் போட்டுட்டு என்னென்னா பேசுனான்... வெக்கமில்லாம இப்ப வந்து கூப்பிடறான்னு போயிட்டுத் திரியாத... உள்ளே போ.’’

சின்னச்சாமி பெட்டிப் பாம்பாக உள்ளே போய்விட, வீரனுக்கு உள்ளிருந்து வீரம் கொப்புளித்தது. `இவனுக எல்லாம் ஒரு ஆளா... இவங்கெகிட்ட கெஞ்சணுமா... இருவது வயசுல தோட்டத்துல எத்தனை உருப்படியைத் தனி ஆளா அடிச்சு எறிஞ்சிருக்கோம்... ஒத்த சீவாத்தியை அடிக்க பொண்டாட்டிக்கு பயந்த பயலை எல்லாமா துணைக்குக் கூப்பிடறது... வாறது வரட்டும்... நானாச்சு அதாச்சு...’

வீட்டுக்குத் திரும்பும் முன்னர் சந்து நடையில் வாகான கம்பு தேடினான். கம்பு எதுவும் தோதாக இல்லை. கடப்பாரை கிடந்தது. அதை எடுத்தான். நல்ல கனம்.

``பரவாயில்லை. மண்டையில கரெக்டா போட்டுட்டா நச்சுன்னு சிதைஞ்சுபோயிரும்.ஆனா, கரெக்டா போடணுமே... இல்லாட்டி நம்மளைப் போட்டுரும். டேய் நீ வீரன்டா.உனக்குக் கைகாலெல்லாம் இருக்கு. அது என்னா இருந்தாலும் புழுவுடா. என்னா... கொஞ்சம் பெரிய புழுவு... பல்லெல்லாம் இருக்கு… பல்லுல வெசத்தைத் தடவிப் படைச்சுப்புட்டான் அந்த எடுபட்ட பய சாமி. இல்லாட்டி இதெல்லாம் ஒரு ஆளாடா நமக்கு... பயப்புடுற வம்சமா நாம…”

தனக்குத் தானே பேசிக்கொள்வதை ஒரு விநாடி உணர்ந்தான். `பல மாசமாவே இது நடக்குது. யோசிச்சுக்கிட்டு இருக்காப்லதான் இருக்கு. ஆனா பேசிக்கிட்டு இருக்கோம். சரி பேசினாத்தான் என்ன தப்பா... கூட ஆள் இருக்கும்போது பேசுறோம். ஆள் இல்லாட்டி என்னா பண்றது... பேச்சை நிறுத்த முடியுமா... நம்மளா பேசிக்கிற வேண்டியதுதான்.’

யோசித்தவாறே அல்லது பேசியவாறே உள்ளே வந்தவன், ஒரு விநாடி யோசித்தான். ``எதுக்கு இப்போ கடப்பாரையைக் கையில தூக்கிட்டு வந்தோம்? ச்சேய்... வர வர தேவையில்லாம என்னத்தை யாவது செஞ்சுகிட்டு...’’ என்று சொன்னபடியே கடப்பாரையைக் கீழே போட்ட அடுத்த விநாடி மனசில் உறைத்தது. மூளையில் ஏதோ ஒரு மின் தூண்டலில் ரீவைண்டு பட்டன் சுழன்று, `வீட்டுக்குள் பாம்பு இருக்குடா பாவி...’ என்ற செய்தி உறைக்க, `ஐயய்ய...’ என்று பதறி கடப்பாரையைக் கையிலெடுத்தான். அறையின் நட்ட நடுவில் கடப்பாரையைத் தரையில் ஊன்றி, சாமி வந்தவன் மாதிரி நின்றான்.

இவனுடைய மூச்சுக்காற்று மாத்திரம் கேட்டது. அறையில் எந்தச் சலசலப்பும் இல்லை.

``ஏய்... எங்கே இருக்கே... வெளியில வந்துரு. அலையவைக்காத ஆமா... `குடிகாரப் பயதானே... கத்திக்கிட்டு கெடக்கட்டும்’னு நினைச்சே...நல்லாருக்காது ஆமா...’’

`பாம்புக்குச் செவி கிடையாது’ எனும் விஞ்ஞான உண்மை தெரியாத வீரன், அடுத்த அரை மணி நேரமும் பாம்புக்கு எச்சரிக்கை விட்டபடியே இருந்தான். தொண்டையெல்லாம் காய்ந்துபோய், மறுபடி ரம் பாட்டிலை எடுத்து ஊற்றிக்கொண்டான். இப்போது தலைக்குள் ஒளிப்புள்ளிகள் ஊர்ந்து செல்வதை உணர்ந்தான். மின்மினிப் பூச்சிகள்போல அவை ஒளிர்ந்து ஒளிர்ந்து நகர்ந்தன. திடீரென்று பாட்டு கேட்டது. `வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே...’ மொபைல்போனில் பாட்டு கேட்க அதை எடுத்தான்.

இறக்கை விரித்த வௌவால்போல அகன்ற படம் பளபளக்க, நின்று அது விட்ட சீறும் மூச்சுக் கேட்ட வீரனின் வயிறு புரண்டது.

மறுமுனையில் கந்துவட்டி கோயிந்தன்... கோபமான குரலில், ``ஏம்ப்பா... மனசுல என்ன நெனைச்சுக்கிருக்க... வாங்குன காசைச் செமிச்சுப்போடலாம்னு இருக்கியா? மீசைவெச்சிருந்தா பத்தாதுரா. வாங்கின கடனைத் திருப்பிக் குடுத்தாத்தான் நிய்யி ஆம்பளை... எப்பக் கேட்டாலும் காசில்லைங்கிற... குடிக்கிறதுக்கு மட்டும் துட்டு இருக்கா ஒனக்கு?’’

கோயிந்தன் கோபமான குரலில் கத்திக்கொண்டேயிருக்க, `இவனிடம் கடன் வாங்கியிருக்கிறோம். அதைக் கேட்டு நம்மை வைகிறான்’ என்ற தகவல் சில விநாடிகள் தாமத மாகத்தான் வீரனுக்கு உறைத்தது

கோயிந்தன் தொடர்ந்து, ``வீட்ல புகுந்து உள்ள இருக்கறதையெல்லாம் தூக்குறதுக்கு எம்புட்டு நேரமாகும்? ஒரு மரியாதைக்கி சும்மா இருந்தா என்னை என்ன சவங்கப் பயன்னு நெனைச்சுக்கிட்டியா?’’

வீரன், `பக பக’வென்று சிரித்தான். ``வாய்யா... வந்து வீட்டுக்குள்ள இருக்கற தங்கக்கட்டி, ரொக்கம் எல்லாத்தையும் எடுத்துட்டுப் போ’’ என்றான் தன் கண்முன்னால் இருக்கும் பொருள்களை ஏளனமாகப் பார்த்தபடி.

``திமிராடா ஒனக்கு... நேர்ல வந்து சட்டையைப் பிடிச்சாத்தான் புத்தி வரும் ஒனக்கு. இரு வாறேன். நக்கல் மயிரா பண்ற?’’

போன் கட்டாகிவிட்டது.

வீரன் போனை வைத்துவிட்டு, கடப்பாரையை எடுத்தான். கடுப்புடன் பாம்பு இருக்கும் பகுதியைப் பார்த்து… ``அஞ்சாயிரம் ஓவா… அதுக்கு இந்தப் பேச்சுப் பேசுறான். கேட்டுச்சா ஒனக்கு... ஒரு வெவரஞ் சொல்றேன் கேட்டுக்க... மனுசப் பயலுக்கு ஒன்னய மாதிரி ஜாலியான பொழைப்பு கெடையாது. நீ என்ன வெவசாயம் பண்றியா... மில்லு வேலைக்கிப் போறியா... உன் பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டுப் போய்ட்டாளா... கந்துவட்டிக்கிக் குடுக்குற நாய்கிட்ட வசவு வாங்குறியா... ஒரு வெங்காயமுங் கெடையாது... சவுரியத்துக்கு இருக்கலாம். `ஏன் இப்பிடி இருக்கே?’ன்னு யாரும் கேக்கப் போறதுல்ல. `எதுக்கு நீ குடிக்கிறே... எதுக்கு பொண்டாட்டியைவெச்சு வாழலை... எதுக்கு சம்பாரிக்கலை?’ன்னு ஒரு கேள்வியும் கெடையாது’’ என்றான்.

கோபத்துடன் கடப்பாரையைத் தூக்கித் தரையில் `டொம்’மென்று ஒரு குத்து குத்தினான். நாகம் மெதுவாக அடுக்குப் பானையின் பின்னிருந்து எட்டிப் பார்த்து, தேங்காய்ச் சிரட்டைகளை நோக்கி `சர சர’வென்று நகர்ந்தது. வீரன் அது நகர்ந்து செல்லும் பாங்கைப் பார்த்தபடியே நின்றான். கடப்பாரையை நிலத்தில் உறுதியாக ஊன்றி இருந்தான். அவன் அசைவை மேற்கொள்ள யோசிக்கும் முன் நாகம் சிரட்டைக் குவியலுக்குள் போய்விட்டது.

``ந்தா... நீ பாட்டுக்கு என் வீட்டுக்குள்ள வந்து என் முன்னாடியே போக வர இருக்கே. வீட்டு ஓனர் நான் பயந்துகிட்டுக் கெடக்கேன். நீ ஜாலியா இருக்கே.”

சிரட்டைகளினிடையே எந்த அசைவுமில்லை. `ரொம்ப நேரமா பேசிக்கிட்டே இருக்கோம்.காரியத்தில இறங்கலை. கையில கடப்பாரை வேற இருக்கு’ என்று யோசித்தவன், ஒரு எட்டு வைக்க கால் `விண்...’ணென்று வலித்தது. வலியைப் பொறுத்துக்கொண்டு, கடப்பாரையை நீட்டி, தேங்காய்ச் சிரட்டைகளுக்குள் கடப்பாரையை விட்டு `கொச கொச’வென்று ஆட்டினான். அடுத்த விநாடி `புஸ்ஸ்...’ என்ற பெருஞ்சீற்றத்துடன் அது குவியலின் பின்னிருந்து தலையை உயர்த்திப் படமெடுத்து நின்றது. `கரு கரு’ என்ற நிறத்துடன் கோயிலில் கறுப்பாக எண்ணெய் மினுங்கும் கருங்கல் போன்ற உடல். இறக்கை விரித்த வௌவால்போல அகன்ற படம் பளபளக்க, நின்று அது விட்ட சீறும் மூச்சுக் கேட்ட வீரனின் வயிறு புரண்டது. கை நடுங்கியது. கடப்பாரையைத் தூக்க நினைத்தான். ஆனால் கை வெலவெலத்து, கடப்பாரை நழுவியது. இறுகப் பற்ற நினைத்தால், உள்ளங்கை முதற்கொண்டு வியர்த்ததில், கடப்பாரை வழுக்கித் தரையில் விழுந்து தரை அதிர்ந்தது.

நாகம் படத்தைத் திருப்பி, இருபுறமும் பார்த்தது. வெறும் ஐந்தடி தூரத்தில் வீரன் வெலவெலத்து நிற்க, அது ஓரிரு விநாடிகள் அமைதியாக இருந்துவிட்டு நகர்ந்தது. அடுக்குப் பானைகளைத் தாண்டி ஒரு ஒற்றை மண் பானை தரையில் சுவரோரமாக இருந்தது. நாகம் அந்தப் பானைக்குப் பின்னால் போய் சுருண்டு கொண்டது. சுவர் ஓரம் பானை. பானையின் பின்னே நாகம். கடப்பாரையை எடுத்து பானையைத் தாக்கினால், பானை உடைந்து பாம்புக்கும் அடி விழும். வாகாகத்தான் இருக்கிறது என்று வீரனுக்குத் தோன்ற, கடப்பாரையை எடுக்கக் குனிந்தான். முழங்கால் `சுர்...’ரென்று வலித்தது. பொறுத்துக்கொண்டு எடுக்க எத்தனிக்கையில், கோயிந்தன் மடித்துக் கட்டிய வேட்டியுடன் உள்ளே வந்தான்.

``ஏண்டா... குடிச்சுப்புட்டா நீ என்ன பெரிய கொம்பேறி மூக்கனா... போன்ல கேட்டா நக்கலா பதில் சொல்றே...’’

``என்னா நக்கலா பதில் சொன்னேன்?’’

`` `வீட்டுக்குள்ள இருக்கற தங்கக்கட்டி, ரொக்கம் எல்லாத்தையும் எடுத்துட்டுப் போ’ன்னு எகடாசி பேசுறவன்... அதையெல்லாம் வீட்டுலவெச்சிருக்கற கோடிஸ்வரப் பிரபு என்னா கழுதைக்கு என்கிட்ட காசு வாங்கறே?’’

``இப்ப என்ன செய்யணும்ங்கிற?’’

``காசைக் குடு.’’

``இப்ப கையில அம்புட்டுக் காசு இல்லையே கோயிந்தா...’’

``அசலை யாரு கேட்டா... அஞ்சு மாச வட்டிக்காசு நிக்கிது. அதைக் குடு முதல்ல. மித்தது அப்புறம் பார்த்துக்கலாம்.’’

சட்டென்று வீரனின் மனதில் அந்த எண்ணம் தோன்றியது.

``வட்டிக் காசா?’’ ஒரு விநாடி யோசிப்பதுபோல பாவனை செய்தான். அந்தப் பானையில என் பொண்டாட்டி காணிக்கைத் துட்டு சேர்த்து வெச்சிருப்பா. அதை வேணும்னா எடுத்துக்க.’’

``காணிக்கைத் துட்டா... அதைப் போயாடா எடுப்பாங்க?’’

``என்ன பண்ணச் சொல்றே... வேற காசு இல்லை. அது இருந்தா உன் யோகம். எடுத்துக்க.’’

``எந்தப் பானை?’’

``அந்தா... அதுதான்’’ நாகம் பதுங்கியிருக்கும் பானையைக் காட்டினான் வீரன்.

கோயிந்து எரிச்சலாக இவனைப் பார்த்தான். ``தொரை எடுத்துக் குடுக்க மாட்டிங்களோ?’’

``கால்ல அடிபட்டிருக்கு. நடக்கறதுக்கே முடியலை. அதான்...’’

கோயிந்து நாகம் இருக்கும் அந்தப் பானையை நெருங்க, வீரன் சுதாரிப்படைந்தான்.கடப்பாரையைக் கைகள் பற்றின. `இவனை அது போட்டதும், அதை நாம போட்டுற வேண்டியதுதான்...’

கோயிந்து பானையைக் கையில் எடுத்தான்.பானைக்குள் கையை விட்டான்.

ஒன்றுமே நடக்கவில்லை. நாகம் அங்கே இல்லை.

நிலைமை இருவிதத்தில் மோசமடைந்தது. `பாம்பைக் காணோம். எதிர்பார்த்தது நடக்கலை.’ அதில் வீரனுக்கு ஏமாற்றம். `பானைக்குள் காசைக் காணோம்.’ கோயிந்து கோபமானான். வெறி கொண்டவனாக அந்தப் பானையைக் கீழே போட, அது உடைந்து சிதறியது.

கோபத்துடன் வீரனின் கன்னத்தில் அறைந்தான். ``பொய்யாடா சொல்றே... எங்கடா காசு?’’

``வெச்சிருப்பான்னுதானே சொன்னேன். சிறுக்கி எடுத்துட்டுப் போயிட்டாபோலத் தெரியுது.’’

கோபம் அதிகரித்தவனாக மேலும் நான்கைந்து அறைகளை விட்டான் கோயிந்து.

``இந்தா பாரு... வீடு புகுந்து அடிக்கிறே. நான் போதையில இருக்கேன். காலு வேற சரியில்லை…’’

``காலு சரியாருந்தா என்ன புடுங்கிருவியா நிய்யி?’’

``அடிக்க அடிக்க வட்டி கொறையும். ரத்தம் வந்துட்டா அசலையே குடுக்க மாட்டேன்.போலீஸுக்குப் போயிருவேன்.’’

கோயிந்து இந்த வார்த்தைகளால் சுதாரித்தான். `இந்த நாயி அப்படிச் செஞ்சாலும் செஞ்சிரும்’என்று யோசித்தவன், ``பத்து நாளு டைம் உனக்கு. அப்புறமும் வட்டி வரலைன்னா ஆளுகளைவெச்சு இந்த வீட்டை எழுதி வாங்கிருவேன். ஆமா...’ என்று அதட்டலாகச் சொல்லிவிட்டு வெளியேறினான்.

அவன் போனதும் அழுகையும் ஆத்திரமுமாக பாட்டிலை எடுத்தான் வீரன். `மடக் மடக்’கென்று குடித்துவிட்டுக் கத்த ஆரம்பித்தான்.

தலை சுத்திக்கிட்டே இருக்கு. காலுவலி கொல்லுது. நிதானமா ஒரு எட்டுக்கூட வைக்க முடியலை. இந்தச் சனியனை அதுக்காக இப்படியே விட்டுட முடியுமா...

``ஒனக்கெல்லாம் வெக்கம் கெடையாதா... ஒத்தையில இருக்கப்ப, அம்புட்டு ஒசரத்துல படமெடுக்கத் தெரியுதுல்ல... அவன் வந்து சட்டியைத் தூக்குறான். எங்கே போய் ஒளிஞ்சுகிட்ட நிய்யி... ம்... கந்துவட்டிக்காரனைப் பார்த்து நான் பயக்குறது நியாயம்... நீ என்ன கழுதைக்குப் பயக்கணும்னு கேக்குறேன்... நான்னா அம்புட்டு எளக்காரமா ஒனக்கு... வீரன்னா அம்புட்டு லேசாப் போச்சுல்ல...’ என்றவனின் கண்கள் கலங்கின. குரல் உடைந்தது. ``ஒனக்கு மட்டுமா... அந்த மில்லு மேனேஜரு, என் பொண்டாட்டி, மாமனாரு, சின்னச்சாமி, அவன் பொண்டாட்டி, கோயிந்தன்... எல்லாப் பயலுக்கும் நான்னா எளக்காரம். அந்தளவுக்கு ஆகிப்போச்சுல்ல?” என்றவன் உடைந்து கிடக்கும் பானையை எட்டி உதைத்தான். அதில் ஒரு சில்லு போய் அடுக்குப் பானைக்குப் பின்னால் விழ, அங்கிருந்து அந்த நாகம் வெளியே வந்தது. நேராக, கத்திக்கொண்டிருக்கும் வீரனை நோக்கி வர, வீரன் கீழே இருக்கும் கடப்பாரையை எடுக்கக் குனிய கால் வலி, `சுள்’ளென்று இழுக்க, அதற்குள் அருகே வந்த அந்தப் பாம்பு கடப்பாரை மீதே ஏறிவிட்டது. ஏறி அதைக் கடந்து வீரனின் பின் பக்கம் போக, வீரன் பயத்துடன் அதையே பார்க்க, அது மறுபடி திரும்பி தேங்காய்ச் சிரட்டைகள் இருந்த பக்கமாக `விறு விறு’ என்று நகர்ந்துவந்தது.

இந்த முப்பது நொடிகளில் வீரனின் இதயம் வேகமாகத் துடித்து, நாக்கு வறண்டு, மூச்சு நிலை தடுமாறி, கண்கள் இருட்டி, ஒரு விநாடி தலை சுற்றிச் சுதாரித்து, ஒரு நிலை கொண்டு பார்க்கையில் நாகம் சிரட்டைக் குவியலில் நுழைந்து அதனுடைய வால் பகுதி சிரட்டைக் குவியலுக்குள் போய்விட்டது.

நிதானத்துக்கு வந்த வீரனுக்கு சர்வாங்கமும் கொந்தளித்தன. ``ஏய்... நீ என்னா நினைச்சுக்கிட்டிருக்கே… வெளையாட்டாப் போச்சா ஒனக்கு... சிக்கினேனு வையி. உன்னை சீனாக்காரன் மாதிரி சூப்புவெச்சுக் குடிக்கிறனா இல்லயா பாரு’’ என்றவன் கோபத்துடன் கடப்பாரையைத் தூக்கித் தேங்காய்ச்சிரட்டைக் குவியலை நோக்கிப் பாய்ந்தவன், நிலை தடுமாறிக் குவியலின் மீது விழுந்தான். `ஐயோ... போச்சு...’ என்று இதயம் துடிக்கையில், காதுக்கருகில் `உஸ்’ஸென்ற ஒரு சத்தம் பேரோசையாகக் கேட்க, கண்கள் இருட்டிக்கொண்டு வர, ஒரு விநாடி, `செத்துவிட்டோம்’ என்று நினைத்துக் கொஞ்ச நேரம் கழித்து எழுந்து உட்கார்ந்து பார்த்தான். சிரட்டைகள் சுற்றிலும் சிதறிக் கிடந்தன. நாகத்தைக் காணோம். அது வேறு எங்கோ இருக்கிறது.

மெதுவாகத் தள்ளாடி எழுந்து போய் தண்ணீர் குடித்தான். யோசித்தான். பிறகு பேசினான்.

``தலை சுத்திக்கிட்டே இருக்கு. காலுவலி கொல்லுது. நிதானமா ஒரு எட்டுக்கூட வைக்க முடியலை. இந்தச் சனியனை அதுக்காக இப்படியே விட்டுட முடியுமா... இந்த வீரன்கிட்ட ஒரண்டை இழுத்தா, அதுக்குண்டான பலனை அனுபவிக்கணுமில்ல. யாரு, யாருகிட்டவெச்சுக்கணும்னு ஒரு மொறை இருக்கில்ல... ம்... உன் வெளையாட்டு திருகுதாளத்தை எல்லாம் நிய்யி எலிகிட்ட வெச்சுக்கிரணும். என்கிட்ட வெச்சுக்கலாமா... ஒனக்கு என்ன வேற வீடு இல்லையா... எதுக்கு இங்கே வர்ற... சரி வந்தேல்ல, கோயிந்தன் சட்டியைத் தூக்கும்போது ஒரு போடு போட்டிருந்தா நீ ஆம்பளை. அப்ப நைஸா ஒளிஞ்சிக்கிட்டு அவன் போன பெறகு எங்கிட்ட வந்து ஷோ காட்டறே... இருடி இரு. என்னா பண்றேன் பாரு.’’

தலைக்குள் ஒளிப்புள்ளிகள் ஊர்ந்து செல்வதை உணர்ந்தான். மின்மினிப் பூச்சிகள்போல அவை ஒளிர்ந்து ஒளிர்ந்து நகர்ந்தன. அவற்றை கவனித்தபடியே இருந்தான்.

போனை எடுத்தான். ``அலோ... அய்யா... ஃபயரு சர்வீஸுங்களா... இங்கே ஒரு பெரிய பாம்புங்க. கருநாகம். வீட்டுக்குள்ள இருக்கு. வந்து புடிக்கிறீங்களா?’’

மறுமுனையில் யாரோ ஏதோ கேட்க, உளறி உளறி பத்து நிமிடங்கள் வீட்டு விலாசம் சொல்லி போனை வைத்தான்.

போனை வைத்து அரை மணி நேரம் கழித்து, இரண்டு பேர் வந்தார்கள். ஃபையர் சர்வீஸில் பாம்பு பிடிப்பதில்லை என்றும், இவர்களுக்கு போன் செய்து அவர்கள் அனுப்பியதாகவும் சொன்னார்கள்.

சிறுகதை
சிறுகதை

வீரன் அப்போது நிறை போதையில் இருந்தான். ``யாரு அனுப்புனா என்னா... நீங்க பாம்பு புடிப்பீங்கள்ல?’’

``ஆமா புடிப்போம். பல வருஷமா புடிக்கிறோம்.’’

``புடிச்சு என்னா செய்வீங்க?’’

``ஃபாரஸ்ட்டுக்குள்ள கொண்டு போய் விட்ருவோம்.’’

``அது வேணாம். இந்தப் பாம்பைப் புடிச்சு என்கிட்ட குடுத்துருங்க.’’

அவர்கள் இருவரும் திகைத்தனர். ``உங்ககிட்ட குடுத்தா?’’’

``அதை சூப்புவெச்சுக் குடிக்கப் போறேன்.அதுகிட்டயே சொல்லியிருக்கேன்.’’

அவர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டு, ``சரிங்கண்ணே. நீங்க வெளியில ஒக்காருங்க. நாங்க முதல்ல அதைப் புடிக்கிறோம். அப்புறம் பார்க்கலாம்.’’

வீரன் வெளியில் உட்கார்ந்திருக்க, சின்னச்சாமி அவன் பொண்டாட்டி எல்லாரும் இவனையே வேடிக்கை பார்த்தார்கள்.

உள்ளே இரண்டு பேரும் வீட்டைத் தலைகீழாக்கிப் புரட்டினார்கள். தேடு தேடு என்று தேடியும் பாம்பைக் காணவில்லை..

இருவரும் வெளியே வர, ஆவலுடன் காத்திருந்த வீரன் ``எங்கே பாம்பு?’’ என்று கேட்டான்.

``அண்ணே... வீட்டை நல்லா அலசிட்டோம். பாம்பு எங்கியுமே இல்லை.’’

``காலையிலேருந்து அங்கதான இருந்துச்சு?’’

``தெரியலைண்ணே. ஒரு பொடவு இருந்துச்சு. அதுக்குள்ளயும் தேடிட்டோம். காணாம். அந்தப் பொடவையும் இப்ப நல்லா அடைச்சுட்டோம். ஒண்ணும் இல்லை. தைரியமாப் போய்ப் படுங்க.’’

வீரனால் நம்ப முடியவில்லை. ``அதெப்படிய்யா... எங்கே போயிருக்கும் அது?’’

``அது பாம்புண்ணே... நாம போகாத எடத்துக்கெல்லாம் அது போயிரும். நீங்க பயத்தை விடுங்க. உள்ளே பாம்பு இல்லை. அது வர்றதுக்கு பாதையும் இல்லாம மூடியாச்சு. போங்க.’’

அவர்கள் கிளம்பிச் சென்றதும், வீரன் வீட்டுக்குள் வந்து அமர்ந்தான். வந்தவர்கள் கொஞ்சம் அந்த அறையை ஒழுங்கு படுத்தியிருந்தார்கள். ``பரவால்லையே...’’ என்று உட்கார்ந்தான். கால்வலி அதிகமாகிவிட்டது. வயிறு பசிக்கத் தொடங்கிவிட்டது. சட்டியை எடுத்துப் பார்த்தான். கொஞ்சம்போல் பழைய சோறு கிடந்தது. பாட்டிலைப் பார்த்தான். காலி.பெட்டிக்குள்ளிருந்து இன்னொரு புது பாட்டிலை எடுத்தான். திறந்து, கடகடவென்று வாயில் ஊற்றிக்கொண்டு கொஞ்சம் பழைய சோற்றைச் சாப்பிட்டான். ஜிவ்வென்று ஏறியது. வெற்றிச் சிரிப்புச் சிரித்தான்.

``பயமுறுத்திட்டு ஓடிட்டியா இல்லை பயந்துகிட்டு ஓடிட்டியா... யாருகிட்ட... ஹெஹ்ஹே...’’

தலைக்குள் ஒளிப்புள்ளிகள் ஊர்ந்து செல்வதை உணர்ந்தான். மின்மினிப் பூச்சிகள்போல அவை ஒளிர்ந்து ஒளிர்ந்து நகர்ந்தன. அவற்றை கவனித்தபடியே இருந்தான். இட வலமாக, மேலும் கீழுமாக, பக்கவாட்டில், சுழற்சியாக என்று எல்லாக் கோணங்களிலும் அந்த ஒளிப்புள்ளிகள் பயணித்தன.வேடிக்கையாக இருந்தது. மனதுக்குள் மகிழ்ச்சியும் லேசான பயமும் ஒரே நேரத்தில் தோன்ற அருகிலிருந்த பாட்டிலை எடுத்து வாயில் ஊற்றிக்கொண்டான். அந்தத் திரவம் தொண்டையில் சரசரவென்று அறுத்துக்கொண்டு இறங்குகையில். `சர சர...’வென்று சத்தம் கேட்டது. ``என்னடாது... குடிக்கும்போது இந்த மாதிரி சத்தம் ஃபர்ஸ்ட் டைமா கேக்குது?’’ என்று பாட்டிலைக் கீழே வைத்தான்.

அடுக்குப் பானையின் பின்னா லிருந்து அந்த நாகம் வெளியே வந்து, `சர சர...’வென்று ஓலைப்பாய்ச் சுருட்டல்களின் மீது ஏறியது.