Published:Updated:

சிறுகதை: தக

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

ஓவியங்கள்: இயக்குநர் பொன்வண்ணன்

டியில் இருந்த கதைப்புத்தகம் கைநழுவிக் கீழே விழுந்தது. உறக்கம் கலைந்து, அவசரமாகப் புத்தகத்தைக் கையிலெடுத்தேன்.

சத்தம்கேட்டு மனைவி குரல் விடுத்தாள். ‘`ஒறக்கம் வந்தா விரிச்சுப் படுக்க வேண்டியதான. ஒக்காந்தமானைக்கிம், நிண்டமானைக்குமா மனுசரு ஒறங்குவாக?” குப்புற விழுந்தா என்ன செய்ய எனச் சொல்லாமல் சொல்லும் எச்சரிக்கை.

அக்கறையோடுதான் சொல்கிறாள். இப்போ எனக்கு இங்கே என்ன வேலையிருக்கிறது? முழு ஊரடங்கில் யாருக்குத்தான் வேலை. அதும் ரெட் அலர்ட் பகுதி. தூங்கி எந்தரிச்சுப் பார்ப்பதற்குள் சந்துபொந்து எல்லாம் தகரத்தை வைத்து அடைத்து, தெருவின் போக்குவரத்தை நிறுத்திவிட்டார்கள். வண்டி வாகனம் எதுவும் எடுக்க - போக வழியில்லை. சைக்கிள் போகும் பாதைகூட இல்லை. இதனால் குப்பை வாங்குபவர்களும் வரமுடியாத சிக்கல்.

காலையில் எழுந்ததும் தடுப்புகளின் இடைவெளியில் நுழைந்துதான் பால் வாங்கிவர வேண்டும். பலசரக்குக் காய்கறிக் கடைகளில் பதறி நிற்கும் சனங்கள், அவசர அவசரமாய் அள்ளிவிட்டுக் கடையை மூடக்காத்திருக்கும் கடைக்காரர்கள். இப்படி எல்லோரது முகத்திலும் ஒரு பீதி. அதனால் கடைக்காரர்கள் வைப்பதுதான் விலை. அவர்கள் கணக்கிடுவதற்கு ஏதுவாய் ஒரு நூதனமான வழிமுறையினை அவர்களே உருவாக்கிக் கொண்டனர்.

ஒரே நிறை ஒரே விலை.

பலசரக்கு, காய்கறி அத்தனை பொருள்களையும் எடை அளவைக்குக் கொண்டு வந்தனர். வாழைக்காய், முருங்கை, தேங்காய், கறிவேப்பிலை உட்பட அத்தனையும் நிறுத்தலளவை. அதுபோல எல்லாக் காய்கறிகளும் பீன்ஸ் முட்டைக்கோசு, கத்தரி, வெண்டை எல்லாம் ஒரே விலை. பலசரக்கில் பயறுகள் அது பாசிப்பயறு, தட்டைப் பயறு, சுண்டல்பயறு, கொள்ளுப்பயறு வரைக்கும் ஒரே விலை. அதுபோலவே பருப்பு வகைகள், அப்புறம் வத்தல், வடகம் இப்படிப் பிரித்துக் கொண்டதில் அதிகமாகக் கூட்டம் சேர்க்காமல் வாடிக்கையாளர்களை வெளியேற்ற முடிந்தது. பேரம் பேச நேரமில்லை. ``நாங்களே ஹோல்சேல் கடையில வரிசகட்டி நின்னு, அடிபெத்து வாங்கிட்டு வரோம். பேரம்பேசினா சரக்கு கேக்காதீங்க’’ கடைக்காரர்கள் தொட்டாச் சிணுங்கியாய் முகம் சுருக்கினார்கள்.

சிறுகதை: தக

ஆரம்பத்தில் மதியம்வரை விற்கலாம் என்ற விதி, படிப்படி யாகக் கரைந்து ஒருமணி நேரம் மட்டுமே என்றானது. அதையும் ஆட்கள் அதிகமாகக் கூடுகிறார்கள் எனக் காரணம் காட்டித் திறந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். வீடுகளைத் தேடிக் காய்கறி, பலசரக்குகள் வரும் என்றனர். காய்கறிப் பை 250, பலசரக்குத் தொகுப்பு 500 எனும்போது அஞ்சுக்கும் பத்துக்கும் வாங்கியவர்களிடம் அது செல்லுபடியாகவில்லை. உழவர் சந்தை வண்டிகள் பிரதான வீதிகளில் மட்டும் வந்து நின்றன. சனங்களின் பரிதவிப்பு கண்டு சின்னஞ்சிறு கடைகள் பயந்து பயந்து விற்பனை செய்தார்கள். சில போலீஸாரின் கருணையாலும், கவனிப்பாலும் அப்பாவி சனங்கள் மூச்சுவாங்க முடிந்தது. அப்படியும் சில கடைகள் சீல் வைக்கப்படுவதும் அபராதம் விதிக்கப்படுவதும் நடந்தன.

இந்த களேபரங்கள் அனுதினமும் காலை எட்டுமணி, ஒன்பது மணிக்கெல்லாம் முடித்து அரசு அறிவித்தபடி கைகால் முகம் கழுவி, மாஸ்க் மற்றும் பைகள் அத்தனையும் சுத்தப்படுத்தி, முடிந்தால் துவைத்துக் காயப்போட்டு தானும் குளித்துவிட்டு வீட்டுக்குள் அடைந்தால் அப்புறம் புத்தகம், டி.வி. செல்போன், மனைவி மக்களுடன் ஹாய், ஹாய்... அவ்வளவுதான்.

‘`இப்பொவெல்லா அவ்வளவா பசிக்கவே மாட்டேங்கிது மாமி’’ பக்கத்து வீட்டு பாமிதா மாமியும் என் மனைவியும் பேசிக்கொள்ளும்போது அடிக்கடி மாமி சொல்வார்.

‘`ஆமா கழுத, இந்த வெய்யிலுக்கே இப்பிடித்தேன். பொழுதுக்கும் தண்ணியக் குடிச்சுக் குடிச்சு வகுறு நெம்பீருது’’ என் மனைவி தனது அனுபவத்தை பதிலாக்க,

‘`அடிக்கொருச தண்ணி குடிச்சாலும் தொண்ட கட்டிக்கிது. ராவெல்லா, இருமச் சனியே வந்து மறிச்சுக்கிட்டு ஒறக்கத்தக் கெடுக்கிது.’’

காலையில் எழுந்ததுமே தும்மலும் இருமலுமாய் சாக்கடையில் உட்கார்ந்து சளியை வெளித்தள்ளிக்கொண்டிருக்கும் மாமியை தெருவாசிகள் அச்சத்துடனேயே அணுகுவார்கள்.

‘`இம்பிட்டுச் சளிய வச்சுக்கிட்டு தண்ணிப்பழமும், வாழப்பழமும் நேரகாலம் இல்லாம முழுங்கிக்கிட்டிருந்தா அப்பறம் எங்கிட்டுப் பசிக்கும்.’’

‘`இத அவங்ககிட்ட நேர்ல சொன்னா அவங்களுக்குப் பிரயோசனப்படும். எங்கிட்ட பொலம்பி என்னா புண்ணியம்?”

‘`ஒங்ககிட்ட யாரு ஒப்பிச்சா’’ என வழக்கம் போல முறைத்தாள். தனக்குத்தானே பேசிக் கொள்கிறாளா அல்லது என்னை ஒரு ஜடமாகப் பாவித்தாளா? ஜடம் பேசியது அவளுக்கு அதிர்ச்சிதான்.

மாமி சொன்னதுபோல எனக்குமே இப்போது பசி எடுப்பதே இல்லை. முன்னெல்லாம் சாப்பாடு தயாராக பத்து நிமிசம் தாமதமானாலும் வீடு ரெண்டுபட்டுப் போகும். ‘வீடுகழுவியதில் நேரம் போச்சு, துவைக்கும் வேலை இழுத்துப் போனது என்பதான சமாதானமெல்லாம் சாப்பாடு முடித்த பிற்பாடுதான் செல்லுபடியாகும்

கடந்த பதினைந்து நாள்களாக உண்மையில் பசி தலைதூக்கவே இல்லை. அது, காலை, மதியம், இரவு எந்தப்பொழுதாக இருந்தாலும். வீட்டுக்காரியாக ‘`சாப்பிட வரலியா?” எனக் கேட்டபின்தான் உணவின்மீதான கவனம் வருகிறது. காரணமெல்லாம் புரியவில்லை. நண்பர் சுரேசிடம் பேசுகிறபோது `கலக்கம்’ என்கிற வார்த்தையைப் பிரயோகித்ததாக ஞாபகம். `எதனாலான கலக்கம்?’ என்ற கேள்விக்கு விடை சொல்லவும் தெரியவில்லை.

ஊரடங்கு என திடீரென அறிவித்ததும் சட்டென மனதில் தோன்றிய பிம்பங்கள். ஜம்முகாஷ்மீர் மற்றும் நாட்டின் எல்லைப்பகுதிகளில் நடந்த பாதகச் செயல்கள், பயங்கரங்கள் பற்றியவற்றைக் கதைகளாக செய்திகளாக படங்களாகப் பார்த்த, படித்த மனப்பதிவுகளின் தாக்கம் உருவாக்கிய கலக்கம் எனக் கூறலாம். அடுத்து, இருபத்தோரு நாள்களுக்கு எந்தவொரு வருமானமும் இல்லாமல் இருட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பது. அந்த நாள்களுக்கான சாப்பாட்டுக்கு ஆகும் செலவு, தேவையான பொருள்களைச் சேகரிக்க ஒரு குறிப்பிட்ட கால அவகாசம்கூடக் கிடைக்காதது. ஆயிரம் ரூபாயும் ரேசன் அரிசியும் கஞ்சிப்பாட்டுக்குப் போதும் என்றாலும். மாசம் பிறந்ததும் வீட்டுவாடகை, கடைவாடகை, கரன்ட்பில், தினக்கந்து, வாரக்கந்து, மாசவட்டி, பையன்கள் வைத்திருக்கும் ஈ.எம்.ஐ தவணை. ஏலச்சீட்டு...

நினைக்கும்போதே தலைசுற்றியது. வயிறு ஓட்டப்பந்தயத் திடலாய் மாறி சடுகுடு ஆட்டத்தைத் தொடக்கியது.

‘ப்பா, பாத்துக்கலாம் ப்பா’ சின்னவன் தனது அலட்சியமான பதிலால் அந்த நேரத்திய ஓட்டத்தை நிறுத்தினான். சென்னையில் வேலைபார்க்கிறான். ஊரடங்கு பிறப்பித்ததும் பைக்கிலும், நடந்தும், பஸ்சிலுமாக கண்டம் விட்டுக் கண்டம் தப்பி வரும் அகதிபோல வீடு வந்து சேர்ந்தான்

தொடர்ந்த ஐந்தாறு நாள்களில் ஊடகச் செய்திகளும், ஊருக்குள் நடந்த கெடுபிடிகளும் எல்லோரையுமே வைரஸ்வாதிகளாய் அனுமானித்த போக்கும், கொஞ்சமல்ல நிறையவே கலக்கிவிட்டது. இதில் பசி என்ன, புதுசாய்க் கல்யாணம் முடித்தவனுக்கே சந்தோசம் கிடைக்காது.

‘`இப்பத்தான சொன்னே, எந்திச்சிப் போய்க் கட்டில்ல படுங்கன்னு. நடுவீட்ல சேரப் போட்டு உக்காந்துக்கிட்டா வீட்டக் கூட்டச் செய்ய வேண்டாமா?” மறுபடியும் வந்துவிட்டாள்.

கையிலிருந்த புத்தகத்தை மூடிவைத்தேன். கொஞ்சநேரம் நடைகொடுத்துவிட்டு பிறகு வாசிப்பைத் தொடரலாம் என முடிவுசெய்தேன். படுக்கை வேண்டாம்.

பால்கனிக்குப் போய்நின்று வேடிக்கை பார்க்கலானேன். மொட்டைமாடி தோறும் சிறுவர்கள் காகிதப்பட்டம்செய்து காற்றில் ஏவிக்கொண்டிருந்தார்கள். சிறுவயசில் நாங்கள் பட்டம் விட்ட ஞாபகம் வந்தது. அப்போதெல்லாம் இன்றுபோல மாடிவீடுகள் அதிகம் இல்லை. கூரைவீடு, தகரவீடுகளே மெத்த அதிகமாய் இருந்தன. அதனால் பட்டம் செய்து மந்தைக்கு எடுத்துப் போய் அங்கிருக்கும் குத்துக் கல்லில் ஏறிநின்று பட்டம் விடுவோம். அல்லது காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாய் எதிர்த்திசையில் பட்டத்தை இழுத்துக்கொண்டு ஓடுவோம். அந்நாளில் இத்தனை கெட்டியான நூல்களும் கிடைக்காது. அதனால் பல பட்டங்கள் மேலே ஏறும்போதே நூல் அறுந்துவிடும்.

இப்போதும் அவரவர் வீட்டில் செய்தித்தாள்களை வைத்துத்தான் சுயமாகத் தயாரித்துக்கொள்கிறார்கள் போலிருக்கிறது. நல்ல உயரத்தில் பருந்தினைப் போலவும், பெரிய தட்டானைப் போலவும் வால்கள் படபடக்க வானத்தில் மிதந்துகொண்டிருந்தன. அந்த வால்களைப் போலவே உற்சாகத்தில் சிறுவர்களும் குதூகலித்துக்கொண்டிருந்தனர்.

``இன்னம் பசி வரலியா?” வீட்டைக் கூட்டி முடித்தவள், கதவின் பின்புறத்தில் விளக்குமாற்றை வைத்தாள். அடுத்தகட்டமாகப் பூத்தொடுத்து சாமிபடங்களுக்குப் போட்டு விளக்கேற்றுவாள்.

செடியில் பறித்த பூவும், டம்ளரில் தண்ணீரும் நூலுமாய் பூக்கட்ட உட்கார்ந்தாள். பால்கனி விட்டு வீட்டுக்குள் நுழைந்தபோது கடிகாரம் ஐந்தரை எனக் காட்டியது. நேரத்தைக்கூட அளந்துவிட முடிகிறது. கிழமைதான் ஞாபகத்தில் இல்லாது போகிறது.

சிறுகதை: தக

அவளருகில் நானும் அமர்ந்தேன். எடுத்துக் கட்டுவதற்கு ஏதுவாய் இரண்டிரண்டு பூக்களாய் ஜோடி சேர்த்து வைத்தேன்.

‘`கீழ பாத்தீங்களா’’ எனப் பேச்சைத் தொடக்கியவள், ‘`ஆறுபேர். மொத்த மொத்தமா ஒக்காந்து அரட்டை அடிக்கிறானுக’’ வாசலில் தெருப்பசங்களுடன் மூத்தவனும் இளையவனும் ஒன்றாகத் திரிவதை நான் கண்டிப்பதில்லை என்பது அவளது குற்றச்சாட்டு.

‘`விடுக்கா, நீயும் நானுந்தே விதியேன்னு வீட்டுக்குள்ளயே வேலையப் பாத்துக்கிட்டுத் திரியுறம். எளந்தாரிப் பயலுக வேற எங்க போவாங்கெ. வீட்டுக்குள்ள எத்தன நேரந்தே அடஞ்சு கெடப்பாங்கெ’’ கீழ்வீட்டு இந்திரா எடுத்துச் சொன்னாள்.

‘`தள்ளி ஒக்காந்து பேசலாம்ல. போலீஸ் வந்து வெரட்டுனாத் தெரியும்’’ என அவர்களை பயமுறுத்துவது போலவும் பேசினாள்.

ஆனால் உண்மையில் அவளுக்குத்தான் அதிக பயம். வீட்டில் நாள்தவறாமல் சாமி கும்பிடுவதுபோல வெள்ளி செவ்வாய்க்கு கிழமை மாறாமல் அய்யனார் கோயில் பெருமாள் கோயிலுக்கு விளக்குப் போடப் போவாள். கூப்பிடு தூரத்தில் கோயில்கள் இருந்தாலும் இந்தப் பதினைந்து நாள்களாய் எட்டிப்பார்ப்பதில்லை. ‘`கண்ட ஆளுக வாராக, எல்லாம் முடியட்டும் போய்க்கலாம்க்கா’’ என தனன் அக்காளிடம் போனில் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது.

சரியாக ஆறுமணிக்கு எழுந்தேன். ‘`நா, சாப்புடட்டுமா?”

வழக்கம்போல சாப்பிடும்போது தண்ணீர் எடுக்க மறந்திருந்தேன். அதைமட்டும் இன்றும் மறக்காமல் மொண்டு வந்து வைத்தாள்.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது நண்பர் சுகந்தன் போனில் அழைத்தார். எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். சாவதானமாகப் பேசலாமென அழைப்பைத் துண்டித்தேன்.

‘`சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்’’ என மொட்டைமாடிக்கு வந்து சுகந்தனை அழைத்தேன். பொழுது சாம்பல்நிறம் கொண்டிருந்தது. இன்னமும் சில சிறுவர்கள் பட்டம் விடுவதை நிறுத்தவில்லை. வானில் அப்பட்டங் களோடு கூடுதிரும்பும் பட்சிகளும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன.

படிப்பது, எழுதுவதைக் கேட்டுவிட்டு லௌகீக சமாச்சாரங்களையும் விசாரித்தார். பின்பு, ‘`அழைப்பின் நோக்கம் என்னன்னா, உங்ககிட்ட ஒரு தகவல் கேக்கணும்’’ என்றவர், ‘`விபச்சார ஸ்தலங்கள் ஏதும் நம்ம ஊர்ல இருக்கா?” என்றார்.

“ஸ்தலங்கள்ங்கறது இப்பத்தக்கி கெடையாது. ஆனா, போன் டீலிங் உண்டு.’’

‘`போன் டீலிங். வசதிப்பட்டவங்களுக்கு. சாதாரண லேபர் இவங்களுக்கான இடம்?”

‘`இருக்கலாம். எனக்குத் தெரியல’’

``வேற பிக்பாக்கட், ஜேப்படி, திருட்டு செய்ற ஆளுங்ககூட உங்களுக்குப் பழக்கம் உண்டா?’’

‘`ஆள் இருக்காங்கன்னு சொல்லிக்குவாங்க. ஆனா நேரடியான தொடர்பு இல்ல.’’

‘`வேறொண்ணும் இல்ல தோழர். இந்த ஊரடங்கு காலத்தில இவங்கள்ளாம் எங்க போவாங்க? இவங்களுக்குக் குடும்பம்னு இருந்தா அவங்களோட நிலமை என்ன. கொஞ்சம் விசாரிச்சுச் சொல்லுங்க. ஏதாச்சும் செய்ய முயல்வோம்’’ என்றார்.

முகத்தில் அறைந்தாற்போலிருந்தது. மொட்டைமாடியிலேயே உட்கார்ந்துவிட்டேன்.

மழைக்கு ஒழுகாத வீடும், கிழியாத உடுப்புகளும், மூணுவேளைக்கும் பசியாத வயிறும், தாங்கிப் பிடிக்கப் பிள்ளைகளும், தணிப்பதற்குத் தாரமுமான சமூக உத்தரவாதத்துடன் வாழ்க்கை அமைந்த பேர்வழியான நமக்கே இன்றைய சூழல் குறித்து அச்சமும் கலக்கமும் கொள்ளும்போது, எந்த உத்தரவாதமும் இல்லாத அவர்களைப் பற்றி எப்படி யோசிக்காமல்போனோம்.

சுகந்தனின் கேள்விக்குப் பின்னால் அவர் குறிப்பிட்டவர்களைப் பட்டியல் போட்டேன். விபச்சாரிகளோ, பிக்பாக்கட்காரர்களோ, திருடர்களோ நினைவில் இல்லை. அப்படிப்பட்ட நபர்களுடனான பழக்கங்களைப் பழகவேண்டிய சந்தர்ப்பமோ நிர்பந்தமோ இல்லாத வாழ்க்கைதான் எனக்கும் வாய்த்திருக்கிறது.

சம்பத் என்ற சாட்ட ‘`வணக்கம், காமண்ணே’’ என ஸ்டைலாகக் கையை வளைத்து சலாம் வைப்பது ஞாபகம் வந்தது. சம்பத்து இந்த மூன்று வகையிலும் சேரமாட்டான். தான் ஒரு நாய்சேகர் –டான் எனும் மிதப்பு அதிகமான பேர்வழி. ஒருகாலத்தில் நல்ல உழைப்பாளியாக இருந்தவன். இப்போவெல்லாம் எந்த வேலைக்கும் போவதில்லை. மனைவி கூலி வேலைக்குப் போகிறாள். நாலு பிள்ளைகள்.

நகர்முழுக்க குறிப்பாக வியாபார ஸ்தலங்களைச் சுற்றிவருவான். கடையில் உட்கார்ந்திருக்கும் முதலாளிமார்கள் மானேஜர்கள் இவர்களுக்குக் கண்ட நேரத்தில் சலாம் வைப்பான். பலகாலம் பழகியவன்போல. ``அரிசிக்கட மொதலாளி சௌக்கியமா? எதோ இந்த சாட்டையக் கொஞ்சம் நெனெச்சிக்கிங்க’’ எனச் சொல்லிவிட்டு மறைந்துவிடுவான். சிலநேரம் போதையைப் போட்டு வந்து யாரையாவது ஒருத்தனை கடைக்கு முன்னால் நிறுத்திவைத்து வீம்புக்கே வம்பிழுப்பான். கடைக்காரர் விரட்டும்போது ‘`ஒரு நூறு ரூபா குடுங்கண்ணே. இவனுக்குக் கட்டிங் வாங்கிக்குடுத்து கடைல விட்டுட்டு வந்திரேன்’’ எனப் பேரம் பேசுவான். சம்பத் ஒருகடையில் நின்றுவிட்டால் பத்து ரூபாயாவது வாங்காமல் நகரமாட்டான்.

கோயில் திருவிழாக் காலம் தொடங்கிவிட்டால் சம்பத்துக்குக் கொண்டாட்டம்தான். அன்னதானம் செய்வதாக ஒரு பத்திரிகை ஒன்றை சொந்தமாக அச்சடித்துக் கொண்டு தன்னோடு சில நபர்களை இணைத்துக்கொள்வான். ஒருமஞ்சள் வேட்டி ஒருமஞ்சள் துண்டு இதுபோதும். சிப்பம் சிப்பமாக அன்னதானத்துக்கு அரிசி வசூல் ஆகிவிடும். பலசரக்கு வேணுமா, காய்கறி வேணுமா சந்தைக்குள் போய் சாக்கைப் பிடித்தால் ரெப்பாமல் வரமாட்டான். அதட்டலும் மிரட்டலும் கொஞ்சலும் கெஞ்சலும் எல்லாமுமாகக் காரியம் சாதித்துவிடுவான். உடன் வருபவர்களுக்கு சாப்பாடு தண்ணி, சம்பளம். பாக்கி எல்லாமே சம்பத்துக்குத்தான். அன்னதானத்தன்றைக்கு பேருக்கு ஒரு சிப்பத்தை ஆக்கி விளம்பி புகைப்படம் எடுத்துவைத்துக் கொள்வான்.

இதில் எத்தனை வீட்டுக்குப் போகும், எத்தனை கடைக்குப் போகும் என யாராலும் அனுமானிக்க முடியாது. கோயில் சீசன் முடிந்ததும் எப்பவும் போல மறுநாளே கையேந்த ஆரம்பித்துவிடுவான். அவன் பிள்ளைகள் இதுவரை நல்லதுணிமணிகள் உடுத்தி யாரும் கண்டதில்லை. சம்பத்தின் சம்சாரம் கழுத்தில் அழுக்குக் கயிறே சாஸ்வதம் என்பதுபோல மாற்றுத் தாலிக்கயிறுகூட இல்லாமல் திரிகிறாள். இதில் இவன் யாருக்காக இந்தப்பாடு படுகிறான் என்பதும் கேள்விதான். இப்படியான இந்தச் சூழலில் அவனின் நாலு பிள்ளைகளும் எப்படிப் பசியாறுகின்றன. மனைவிக்கு எங்கே வேலை கிடைக்கும்?

சுகந்தன் சொன்னதுபோல அப்படிப்பட்ட நபர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் யாரிடம் கையேந்துவார்கள். யாரை மிரட்டுவார்கள். கெஞ்சிக்கேட்க யார் - எந்த பஜார் இயங்கிக் கொண்டிருக்கிறது? எந்த முதலாளி கல்லாவில் உட்கார்ந்திருக்கிறார். களவு செய்யக்கூட வழி இல்லை. வீதிக்கு வீதி போலீஸ். நகரமெங்கும் ரோந்துப்படை.

சம்பத் சாராயம் குடிக்காமல்கூட செத்துக்கூடத் தொலையட்டும். அவனை நம்பிய பெண்டு பிள்ளைகள்? இருக்கும்போது பத்துக்கு ஒன்னாவது வீட்டுக்குத் தந்திருப்பான். இப்போது என்ன தருவான். என்ன உத்தரவாதம்? பார்க்காத பிள்ளைகளும் பார்த்த அந்த அப்பிராணியான அவனின் மனைவியும் என்னை ரொம்பவே இம்சித்தார்கள்.

சிறுகதை: தக

திடுமென ஒரு யோசனை வர, மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் தர்மர் அண்ணனை அழைத்தேன்.

‘`விஎம் ஸ்டோர். என்ன சார் வேணும்.’’

‘`தர்மர் அண்ணே, நாந்தே பிரபுவோட தம்பி பேசறேன்’’ என்று அறிமுகம் செய்துகொண்டு, ‘`ஒரு சின்ன தகவல்’’ என சம்பத்தைப் பற்றிக் கேட்டதும் வாடிவாசலிலிருந்து வெளியேறும் ஜல்லிக்கட்டுக்காளைபோலச் சீறினார்.

‘`அவனுக்கு நல்ல சாவே வராது பிரபுண்ணே. காலுகையி வெளங்காமப் போயி புழுத்துத்தே சாவான் பாருங்க’’ ஒரு முதுகிழவியைப்போல சாபம் கொடுத்தார்.

``என்னாச்சு?’’

``என்னத்தச் சொல்ல, அரிபரியா வித்துக்கிட்டிருக்கப்ப கோயில்மாடா வந்து நின்னா. போய்ட்டு வாடான்னு சொன்னேன். போலீசக் கூப்புட்டு வந்துட்டானய்யா. அஞ்சாயிரம் அவராதம்’’ மூக்கால் அழுதார்.

‘`ஊருக்குள்ள யார்யாருக்கோ சாவு வருது, இப்பிடிப்பட்ட பயல்களுக்கு வரமாட்டேங்கிதே பிரபண்ணே.’’

இனிமேல் சம்பத் பத்து கேட்டால் தர்மர் இருபது தந்துவிடுவார்.

ரொம்பவே வேதனையாய் இருந்தது. எந்தச் சூழலிலும் தனது சொந்த நலனை எதற்காகவும் விட்டுக்கொடுக்காத - மாறாத இந்த நபர்களுக்காகவே எல்லாச் சந்தர்ப்பங்களும் அமைந்து விடுகின்றன. இதே போலத்தானே பிக்பாக்கெட்டும் திருட்டும் விபச்சாரமும் நடக்கும் ? தனக்கென ஒரு வழிமுறையை எப்படியாவது வகுத்துக்கொள்ளத்தான் போகிறார்கள். இதனை நினைக்கையில் ரொம்பவே கலக்கமாய் இருந்தது.

இரவெல்லாம் உறக்கம் வரவில்லை. இந்த ஊரடங்கு காலம் முடிந்ததும் உடனடியாக இயல்புநிலை திரும்ப முடியுமா?

நிச்சயம் ஒன்றிரண்டு மாதங்கள் - ஏன் கூடுதலாகவும் ஆகலாம். அதுவரை வேலையின்மை, பொருள்களுக்கான தட்டுப்பாடு, பதுக்கல், விலையேற்றம் என வரிசையாகத் தொடர்ந்தால் சமூக ஒழுங்கு என்னவாகும். இச்சூழலில் சம்பத் போன்றவர்களின் கைவரிசை எப்படியெல்லாம் ஓங்கும் - வலுப்பெறும்? திருட்டும் கொள்ளையும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம். கலக்கமும் குழப்பமும் அதிகமானது.

தாமதமாகத் தூங்கினாலும் வழக்க ம்போல ஆறுமணிக்கே விழித்து விட்டேன். தலைக் கனமும், கண் எரிச்சலும் மட்டும் இருந்தது. பல் தேய்த்து, காலைக்கடன் முடித்துவிட்டு முகமூடி யுடன் பால் வாங்கக் கிளம்பினேன்.

தூக்கில் பாலை வாங்கி மீதப் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது, ‘`காமண்ணே’’ என்ற குரல் திடுக்கிடச் செய்தது.

கையில் பெரிய கேனோடு வந்தான் சம்பத். எப்போதும்போல சிரிப்பும் துள்ளலுமாய் நின்றான்.

“ `சாட்ட, எப்பிடி இருக்கு நெலவரம்?” பணத்தை மறைத்தபடி பேசினேன்.

‘`எனக்கு நல்லா இருக்குணே’’ என்றவன், ‘`கடயத் தெறந்துராதீகண்ணே ரெய்டு கூடுதலா இருக்கு. முந்தாநேத்து கீரக்கல் மார்க்கட்ல தர்மர் கடய சீல் வச்சுட்டாக.’’

‘`ஏ, நீதே போட்டுக் குடுத்தியாம்லப்பா’’ ஆவேசமாகவே கேட்டேன்.

‘`ணே, எனக்குக் காசு வேணும்னா அடம்பிடிச்சுக் கேப்பேன். அதுக்காக இப்பிடி வேலயெல்லா உயிரழிஞ்சாலும் செய்ய மாட்டேண்ணே! ரெய்டு வாராக அடைங்கன்னு நாந்தே வந்து சொல்றேன்... மும்முரமா ஏவாரத்தப் பாத்தாரு, வச்சுட்டாங்கெ சீலு.’’

‘`சாட்ட, சடார்னு காசக்கொண்டாப்பா. பால் வாங்குனவங்க கெளம்புங்க. கூட்டமா நிக்காதீங்க’’ பால்காரர் ஒழுங்குபடுத்தினார்.

அவரிடம் காசைக் கொடுத்துப் பாலை வாங்கிய சம்பத், ``வீட்ல டீயப் போட்டு சந்து பொந்துல கேன் டீ ஏவாரம் பாக்கறேண்ணே. பீடி சீரட்டும் பைல வச்சுக்கறேன். பதினஞ்சு ரூவாக்கட்டு இருவது ரூவா’’ சிரித்தான்.

நிரம்பிய பால்கேனை எடுத்தவன், திக்பிரமை பிடித்து நின்ற என்னை உலுப்பினான்.

‘`என்னா காமண்ணே, நம்பலையா. பால்காரர்கிட்ட கேளுங்க. ரேசன்கடைல ஆயிரம் ரூவா குடுத்தாகில்ல, அதவச்சு கடையப் போட்டாச்சு. தெனத்துக்கு முந்நூறு ரூவா கெடைக்கிது. பத்தலியா!”’

``வரட்டா’’

நான் முகமூடியை மாட்டிக்கொண்டேன்.