Published:Updated:

சிறுகதை: அகாலத்தின் பாடல்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

அரவிந்த் குமார்

‘சார் வர்றார், சார் வர்றார், வழி விடுங்க’ என்று பதற்றக் குரல். சட்டென்று அந்த இடமே ஏகத்துக்கும் பரபரப்பாகி விட்டது. ஏவிஎம் ஸ்டூடியோவின் பாடல் பதிவு அறையை நோக்கி பிரபல பாடகர் ராஜசேகரன் வந்து கொண்டிருந்தார். சினிமா ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்தவர்கள், படப்பிடிப்பு இடைவேளையில் நின்றுகொண்டிருந்தவர்கள், வெண் பொங்கலையும் வடையையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், பெரிய பெரிய அரண்மனை செட்டுகளைத் தூக்கிக் கொண்டு நடந்து கொண்டிருந்தவர்கள் என எல்லோரும் ஒருகணம் அப்படியே நின்றுவிட்டனர். பளீர் வெள்ளைநிற ஜிப்பாவில் பறவையின் இறகசைவென நடந்து வந்தார் ராஜசேகரன்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவருக்கும் இவரே குரல் நாயகன். எந்த நடிகருக்குப் பாடுகிறாரோ அவராகவே மாறிவிடுகிற ஆச்சர்யம். மாநில விருதுகள், தேசிய விருதுகள் என அவர் வீட்டு வரவேற்பறை முழுவதும் கேடயங்களால் நிரம்பிவழிகிற அளவுக்குப் புகழ்மிக்கவர். ராஜசேகரன் பாடுகிறார் என்றாலே அந்தப் படத்திற்கு தனிமவுசு வந்துவிடும். அதனால் எங்கேயும் எப்போதும் அவருக்கு முதல்மரியாதை.

அவரின் உதவியாளர்தான் குரல் கொடுத்தபடி முன்னே ஓடிக் கொண்டிருந்தார். பாடல் பதிவு அறையி லிருந்து தயாரிப்பாளர் ஆத்தங்குடி ராமசாமி அவசரம் அவசரமாகக் கைகளைக் கூப்பியபடி வெளியே வந்தார்.

அகாலத்தின் பாடல்
அகாலத்தின் பாடல்

“என்ன ராமசாமி சார், எப்படி இருக்கீங்க?” என்று தயாரிப்பாளருக்கு வணக்கம் வைத்தார் ராஜசேகரன்.

‘`பிள்ளையாரப்பன் அருளாலயும், உங்க ஆதரவாலயும் நல்லா இருக்கேன் சார்’’ என்று நளினமாக வளைந்தார்.

‘`என்னோட ஆதரவு இருக்கு எப்போதும், நீங்கதான் கடைசி ரெண்டு படத்துலயும் நமக்கு ஆதரவு தரவே இல்லையே’’ என்று மெலிதாகச் சிரித்தார்.

‘`ஐயையோ, என்ன இப்பிடி சொல்லீட்டீங்க, ஒண்ணு சைல்ட் சப்ஜெக்ட், ஒண்ணு இந்தி டப்பிங் ரெண்டிலுமே ஆம்பள சிங்கரே இல்லை சார். இருந்தா உங்ககிட்ட வராம எங்க போவேன்’’ என்று சட்டென்று குனிந்தார்.

‘`பரவாயில்ல பரவாயில்ல... வாங்க உள்ள போகலாம்’’ என்று தயாரிப்பாளரின் தோளைத் தட்டியபடி ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்குள் அடியெடுத்து வைத்தார்.

இசையமைப்பாளர் ஞானசுந்தரம், இயக்குநர் அருள்தாஸ் ஆகியோர் ராஜசேகரனை வரவேற்றனர். அப்போது பதற்றத்துடன் ஓடிவந்த ஸ்டூடியோ மேனேஜர் சண்முகம், “சார் தப்பா நெனைக்காதீங்க, ஜஸ்ட் டென் மினிட்ஸ், புதுப் பையன் ஒருத்தன் பாடிட்டிருக்கான். ஏற்கெனவே ட்ராக் எல்லாம் பாடி வெச்சதுதான், இதோ முடியப் போகுது. கொஞ்சம் லேட்டா வந்தா சரியா இருக்கும்னு உங்க மேனேஜருக்கு போன் பண்ணிச் சொன்னேன். அவர் உங்ககிட்ட சொல்லலபோல” என்று தலையைச் சொறிந்தார்.

கோபத்தின் உச்சிக்குச் சென்ற தயாரிப்பாளர், “யோவ், என்னய்யா நெனச்சிட்டிருக்கீங்க, சாரை வரச் சொல்லிட்டு வேற ஒரு பையன் பாடுறான், வெயிட் பண்ணுங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்” என்று குதித்தார்.

உதவியாளரைப் பூப்போலத் திரும்பிப் பார்த்தார் ராஜசேகரன். ‘`நான்தான் சொல்ல மறந்துட்டேன் சார்’’ என்று தலைகுனிந்தார் உதவியாளர்.

“பரவாயில்ல சண்முகம், நான் உள்ளேயே வந்து வெயிட் பண்றேன், அந்தப் புதுப் பையன் பாடட்டும், அப்புறமாவே நான் பாட்றேன், இதுல என்ன இப்போ” என்று கண்ணாடி அறைக்கு வெளியே அமர்ந்தார்.

ராஜசேகரனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஒரு கந்தர்வனைப்போல் பாடினான் அந்த இளைஞன். கண்களை மூடியபடி உச்சஸ்தாயியில் சரளமாக துளி பிசிரின்றி, ரீ டேக் இன்றி மழைபோலப் பொழிந்து கொண்டிருந்தான்.

உள்ளே பார்த்தபோது சிறிய தாடியுடன் சின்னஞ்சிறு உருவத்தில் ஓர் இளைஞன் தலையில் ஹெட்செட்டை அணிந்தபடி மைக் முன்னால் நின்றிருந்தான். இவரைப் பார்த்ததும் ஹெட்செட்டைக் கழற்ற முயன்றபடி வணக்கம் வைத்தான். ஆசீர்வதிப்பதுபோல் கையை ஆட்டிய ராஜசேகரன், ‘பாடுப்பா’ என்றார்.

பாடல்பதிவு தொடங்கியது. சுத்தமான ஆபேரி ராகத்தில் இசைத்துணுக்கு ஒலிக்க, சிட்டுக்குருவிபோல் இருந்த அந்த இளைஞன் பாட ஆரம்பித்தான். முதல் வார்த்தையின் முதல் எழுத்து ஒலிக்க ஆரம்பித்ததுமே ராஜசேகரனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஒரு கந்தர்வனைப்போல் பாடினான் அந்த இளைஞன். கண்களை மூடியபடி உச்சஸ்தாயியில் சரளமாக துளி பிசிரின்றி, ரீ டேக் இன்றி மழைபோலப் பொழிந்து கொண்டி ருந்தான். சிக்கலான ஸ்வரக்கோவை வேறு பாடலுக்கு இடையே இருந்தது. தாளக்கணக்குகள் சொல்லி வைத்தாற்போல் வந்து விழுந்தது. மானுடர்கள் பாடுவதுபோலவே அல்ல அது. பலஆண்டுகள் அனுபவம் இல்லாமல், பயிற்சி இல்லாமல் அந்தக் குரல் வளமும், ஸ்வர சுத்தமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், அந்தத் தாடிக்கார இளைஞன் பாடி முடித்துவிட்டு வெளியே வந்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும்போதுதான் ராஜசேகரனுக்கு சுயநினைவே வந்ததுபோல் இருந்தது. தன் கைகளில் உள்ள மயிர்க்கால்கள் எல்லாம் நட்டுக்குத்தாக நிற்பதை உணர்ந்தார் ராஜசேகரன்.

அவனைத் தூக்கி நிறுத்திய ராஜசேகரன்,

“உன் பேர் என்னப்பா?”

“யூசுப் அலி.”

“எங்க சங்கீதம் கத்துக்கிட்ட, யார் குரு?”

“நீங்கதான் சார் என் குரு, உங்க பாட்டைக் கேட்டுத்தான் வளர்ந்தேன், யார்கிட்டயும் கத்துக்கல” என்றான்.

“ஆச்சர்யமா இருக்குப்பா, ரொம்ப அருமையா பாடற, பெரிய எதிர்காலம் இருக்கு, நல்லா வருவ” என்று தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அப்போது அவர் கை நடுங்கியது.

“நாம ஆரம்பிச்சிடலாமா சார்” என்று ஸ்டூடியோ மேனேஜர் பவ்யமாகக் கேட்க, ‘`இன்னிக்கு வேண்டாம் நாளைக்கு வெச்சுக்கலாம்’’ என்று காரை நோக்கி நடந்தார் ராஜசேகரன்.

சார் கோச்சிக்கிட்டுப் போறார்போல என்று ஸ்டூடியோ முழுக்க ரகசியப் பேச்சுகள் ஓட ஆரம்பித்தன. தயாரிப்பாளர் ராமசாமி அமைதியாக உட்கார்ந்துவிட்டார். ஓகே நாளைக்குப் பார்த்துக்கலாம் என்று இயக்குநர் அருள்தாஸ் வெளியேற, இசையமைப்பாளர் ஞானசுந்தரம் விசுக்கென்று உள்ளே போனார். எதுவும் புரியாமல் அந்த இளைஞன் ஓரமாக நின்றிருந்தான்.

காரில் அமர்ந்திருந்தபோதும் யூசுப் அலியின் குரலே காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது ராஜசேகரனுக்கு. எதற்காகப் பாடாமல் திரும்பி வந்தோம் என்பதும் அவருக்குப் புரியவில்லை.

வீட்டுக்குள் நுழைந்த ராஜசேகரன் தன்னுடைய அறைக்குச்சென்று விட்டார். ஸ்டூடியோவில் நடந்ததைக் கேட்ட ராஜசேகரனின் ஒரே மகள் ராகமஞ்சரி அப்பாவைப் பார்க்க அறைக்குள் வந்தாள்.

சிறுகதை: அகாலத்தின் பாடல்

திருமணமாகி மிகத் தாமதமாகப் பிறந்த மகள் என்பதால் ராகமஞ்சரிமீது ராஜசேகரனுக்கு ஏகத்துக்கும் பாசம். அதனால், அவரிடம் வேறு யாரும் பேச முடியாத விஷயங்களைக்கூட எளிதில் பேசும் சுதந்திரம் அவளுக்கு உண்டு.

“என்ன ஆச்சுப்பா, ஏன் பாடாம வந்துட்டீங்க?” என்று கேட்டாள்

“ஒண்ணுமில்லம்மா, அந்தப் பையன் பாடுனது என்னைப் புரட்டிப் போட்டுடுச்சு” என்றார். கொஞ்சநேரம் அமைதியாக இருந்துவிட்டு எதையோ பார்த்தபடி பேச ஆரம்பித்தார்.

“எட்டு வயசுலேருந்து 20 வயசு வரைக்கும் குண்டூர் வேங்கட ராவ் சார்கிட்ட வாய்ப்பாட்டு. அப்புறம் மோகனம் விஸ்வேஷ்வரய்யர்கிட்ட அசுர சாதகம். என்னோட இளமைக்காலம் என்பதே வெறும் பாட்டு கத்துக்குறதுலேயே போயிடுச்சு” என்று பெருமூச்சு விட்டார்.

இடையில் குறுக்கிடாமல் அமைதியாக இருந்தாள் ராகமஞ்சரி.

“விளையாட்டோ, இளமைக்கான ஆசைகளோ எதுவும் இல்லாம ஒரு மிலிட்டரிபோல அந்தப் பயிற்சியை நான் எடுத்துக்கிட்டேன். அப்புறம் மேடைக் கச்சேரி. அன்னிக்கு இருந்த பெரிய பெரிய ஜாம்பவான்கள் முன்னாடி பாடறதே அவ்ளோ பெரிய விஷயம். வருஷத்துக்கு ஒரு மேடை கிடைச்சா பெரிசு. அப்படி வெயிட் பண்ணி பாடிக் காட்டினேன். பாடகனா அங்கீகாரம் கிடைச்சாத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு வீம்பா இருந்தேன். 35 வயசுல பிரேக் கிடைச்சுது. 38 வயசுல நீ பொறந்த. இதோ 20 வருஷமா இந்த பீல்டுல நிக்குறதுக்காக இன்னிக்கும் சாப்பாடு தண்ணியில்கூட விரதம் இருக்கேன்.

ஆனா, அந்தப் பையன், ரொம்பச் சின்னப் பையன், தாடிக்கூட முழுசா வளரல, ஆனா அவன் பாடிய பாட்டு இருக்கே, என்னோட 30 வருஷத்தை ஒண்ணுமில்லாமப் பண்ணிடுச்சு...

அப்போ, என்னோட வாழ்க்கையையே ஒரு தவமா, வேள்வியா மாத்திக்கிட்டு வாழ்ந்தது வேஸ்ட்தானே, அந்தப் பையனால அப்படி முடியுதுன்னா, நான் பண்ணுனது தப்புதானே” என்று குரல் படபடக்கப் பேசினார் ராஜசேகரன்.

“இதுக்காப்பா இவ்ளோ யோசனை, ரொம்ப சிம்பிள். நீங்க பாட வரும்போது பாகவதரெல்லாம் டாப்ல இருந்தார். அவரோட பாட்டைக் கேட்டுக் கேட்டு அச்சு அசலா பாடிக் காமிச்சுதான் வாய்ப்பு வாங்குனதா சொன்னீங்க, அவ்ளோ வருஷம் ப்ராக்டிஸ் பண்ணுன பாகவதர் பாட்ட பத்து முறை கேட்டுட்டு அப்பிடியே பாட்றதால நீங்க பாகவதரவிடப் பெரிய ஆளா? இல்ல பாகவதர் உங்களவிடக் கொறச்சலா? அப்படி இல்லையே அப்பா!” என்றாள் ராகமஞ்சரி.

சமாதானம் ஆகாதவர்போல் தலையை ஆட்டினார் ராஜசேகரன்.

தொடர்ந்து பேசிய ராகமஞ்சரி, “இன்னும் ஈஸியா சொல்றதா இருந்தா, ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறை விட்ட இடத்தில இருந்து ஆரம்பிக்கிறதால அவங்க தோள்ல ஏறி உலகத்த பாக்குறாங்க. அதனால நீங்க பாடுபட்டு வந்த இடத்துல இருந்து அவங்க பயணத்த ஆரம்பிக்கிறாங்க” என்றாள்.

ஏதோ புரிவதுபோல் தலையை ஆட்டினார் ராஜசேகரன்.

ராஜசேகரனுக்குத் தரும் சம்பளத்தில் யூசுப் அலியிடம் பத்துப் பாடல்களை வாங்கிவிடலாம் எனத் தயாரிப்பாளர்கள் கணக்கு போட்டனர். அதனால் சட்டென்று யூசுப் அலி பக்கம் அவர்கள் நகர்ந்தனர்.

ஒருகணம் அறையில் அமைதி நிலவியது.

“பயப்படறீங்களா, பொறாமைப்படறீங்களா?” என்று பட்டென்று கேட்டுவிட்டாள் ராகமஞ்சரி.

“தெரியலமா, ரெண்டுத்துல ஏதோ ஒண்ணா இருக்கலாம், ரெண்டும் இல்லாமயும் இருக்கலாம்” என்று கூறிவிட்டுக் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்துகொண்டார்.

அந்த வருடம் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது யூசுப் அலிக்குக் கிடைத்தது. தொடர்ந்து ஹிட் பாடல்களாகவே அமைந்துபோனது யூசுப் அலிக்கு.

ராஜசேகரனுக்குத் தரும் சம்பளத்தில் யூசுப் அலியிடம் பத்துப் பாடல்களை வாங்கிவிடலாம் எனத் தயாரிப்பாளர்கள் கணக்கு போட்டனர். அதனால் சட்டென்று யூசுப் அலி பக்கம் அவர்கள் நகர்ந்தனர்.

ராஜசேகரன் திரையுலகில் கிட்டத்தட்ட அஞ்ஞாத வாசம் என்று சொல்லக்கூடிய அளவுக்குத் தெரியாமல்போக ஆரம்பித்தார்.

பார்த்துக்கொண்டிருக்கும்போதே கலைந்து விளையாடும் மேகங்கள் போல, உச்ச நட்சத்திரங்களும் சினிமாவில் மாறிப்போயினர். புது நடிகர்கள் வர ஆரம்பிக்க, அவர்களுக்கு யூசுப் அலியின் குரல் பொருந்திப்போனது. விருதுகளும் வெற்றிகளும் சுற்றி வர ஒரே வருடத்தில் யூசுப் அலி உச்சம் தொட்டான்.

மனிதர்களை உருட்டி விளையாடும் காலத்தின் பகடையாட்டத்தில், கொடைக்கானல் சென்ற யூசுப் அலி கார் விபத்தில் திடீரென்று இறந்துபோனான். ஒட்டுமொத்தத் திரையுலகமும் உறைந்துபோய்விட்டது. இவ்வளவு இளம் வயதில், இப்படிப்பட்ட குரல் வளத்தோடு இருந்த யூசுப் அலியை கடவுள் இவ்வளவு சீக்கிரம் கூப்பிட்டுக்கிட்டாரே என்று பேசிப்பேசி மாய்ந்துபோனார்கள் சினிமாக்காரர்கள்.

அன்றைய தினம் தனது அறையில் வழக்கம்போல யூசுப் அலியின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார் ராஜசேகரன். கதவைப் படாரென்று திறந்த ராகமஞ்சரி, யூசுப் அலி இறந்துபோன தகவலைக் கூறினாள்.

“என்னது செத்துட்டானா?” நாற்காலியிலிருந்து பதறியபடி எழுந்தார் ராஜசேகரன். ஆனால், அவரின் குரலில் ஒருதுளி மகிழ்ச்சி இருப்பதைப்போல் உணர்ந்தாள் ராகமஞ்சரி.

ராஜசேகரனும் சட்டென்று உடல்தோய்ந்து நாற்காலியில் மடங்கி சரிந்தார்.

“அப்பா, இப்போ சந்தோஷத்துல குதிச்சீங்களா, இல்ல அதிர்ச்சில விழுந்தீங்களா” என்று அழுதபடி கேட்டாள் ராகமஞ்சரி.

வாயைத் திறந்து பதில் சொல்ல முயன்றார் ராஜசேகரன். அவரால் பேச முடியவில்லை. கதவை அறைந்து சாத்தியபடி வெளியேறினாள் மகள்.

விநாடியில் லட்சத்திற்கும் குறைவான விகிதத்தில் தான் சந்தோஷப்பட்டுவிட்டோமோ என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டார். அறிவுக்கும் மனத்திற்கும் இடையே கேள்விகள் எழத் தொடங்கின. குற்ற உணர்ச்சிக்கு ஆளானார் ராஜசேகரன்.

யூசுப் அலியின் இறுதிச்சடங்கு ஒட்டுமொத்தத் திரையுலகம் சூழ நடைபெற்றது. விட்ட இடத்திலிருந்து ராஜசேகரனை நோக்கித் தயாரிப்பாளர்கள் வர ஆரம்பித்தனர். ‘ஆயிரம் இருந்தாலும் உங்களப்போல வருமா சார்?’ என்று ரெடிமேட் சிரிப்போடு வாசலில் நின்றனர்.

சிறுகதை: அகாலத்தின் பாடல்

அதே ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு மீண்டும் சென்றார் ராஜகேரன். காதுக்குள் யூசுப் அலியின் குரலே ஒலித்துக் கொண்டிருந்தது. பாடி முடித்தார். ‘`பிரமாதம் பிரமாதம் சார்’’ என்று தயாரிப்பாளர் சொல்ல, வழக்கம்போல் ‘`வழிவிடுங்க வழிவிடுங்க’’ என்று உதவியாளரின் குரல் கேட்க ஆரம்பித்தது.

ஆனாலும் தான் பாடியது திருப்தியில்லை என்பதுபோல் உணர்ந்தார் ராஜசேகரன். மீண்டும் ஸ்டூடியோ சென்ற அவர், அதே பாடலை மீண்டும் ரெக்கார்ட் செய்யும்படி கேட்டுக்கொண்டார். இசையமைப்பாளருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் ராஜசேகரனின் சொல்லைத் தட்ட முடியாமல் மீண்டும் ரெக்கார்டிங் ஆரம்பித்தனர். கண்களை மூடியபடி பாடலை முடிந்தவரை அத்தனை துல்லியமாகப் பாடினார் ராஜசேகரன். ஆனாலும் தலையைப் பலமுறை உலுக்கியபடி தொடர்ந்து பலமுறை அதே பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்.

ஒருகட்டத்தில் இசையமைப்பாளருக்கு எரிச்சல் மேலிட்டது. “என்னா சார் இது, காலையிலிருந்து எத்தனை முறைதான் ரெக்கார்ட் பண்றது, ஆர்க்கெஸ்ட்ரா ஆட்கள் சாப்பிடக்கூடப் போகல சார், பாடியதையே பாடிக்கிட்டிருந்தா, அடுத்த வேலைய யார் பார்க்கிறது” என்று கொந்தளித்தார்.

“போதும் சார்” என்று இயக்குநர் மைக்கில் கூற, கண்விழித்துப் பார்த்த ராஜசேகரன், “சரியா வரல, இன்னொரு முறை ட்ரை பண்ணலாமா?” என்று கேட்டார்.

“நாளைக்குப் பண்ணலாம் சார்” என்று இயக்குநர் சொல்ல, “அதுவும் சரிதான். ப்ராக்டிஸ் பண்ணிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார். ஸ்டூடியோவில் இருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அன்று தனது அறையில் பலமுறை அதே பாடலை வெவ்வேறு ராகங்களில் பாடிக்கொண்டிருந்தார் ராஜசேகரன்.

கொஞ்சநாள்களாக அப்பாவிடம் பேசாமல் இருந்த ராகமஞ்சரி அவரது வித்தியாசமான நடவடிக்கைகளைப் பார்த்து பயந்துபோய், ‘`என்னப்பா ஆச்சு’’ என்றாள்.

“ஒண்ணுமில்லம்மா, பாட்டு ஒண்ணு சரியா அமையல அதான் ப்ராக்டிஸ் பண்றேன்” என்று கண்களை மூடிக்கொண்டு முணுமுணுக்கத் தொடங்கினார்.

ராஜசேகரனின் ஸ்டூடியோ கூத்து இன்டஸ்ட்ரி முழுவதும் ஒரேநாளில் பரவிவிட்டது. அடுத்த நாளே காணாமற்போயினர் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும்.

இது எதுவுமே கண்டுகொள்ளாத ராஜசேகரன், தனக்குள் முணுமுணுத்தபடி பாடிக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் எல்லோரிடமும் பேச்சுவார்த்தை நின்றுபோனது. காற்றில் கைகளால் தாளம் போட்டபடி, கண் சொக்கிப்போய் சத்தம் வராமல் உதடுகள் மட்டும் அசைத்துக்கொண்டிருந்தார் ராஜசேகரன்.

அவரது நிலைமையைக் கண்டு பதறிப்போன ராகமஞ்சரி, வீட்டிற்கே மருத்துவரை வரவழைத்தாள். வந்து பார்த்தவர்களும் ஒன்றும் புரியாமல் உதடு பிதுக்கினர். ‘என்னமோ மனசுல டிஸ்டர்ப் ஆகி இருக்கார்னு தெரியுது’ என்று மருந்துகளை எழுதிக் கொடுத்தனர். அவர்கள் வந்துபோனதுகூடத் தெரியாமல் விடாமல் பாடிக்கொண்டிருந்தார் ராஜசேகரன்.

‘`அப்பா, அப்பா... என்னப்பா இப்பிடி பண்றீங்க, ரொம்ப பயமா இருக்குப்பா’’ என்று அழுதாள் ராகமஞ்சரி. வீடுநிறைய சொந்தபந்தங்கள் வந்து ஆளுக்கொரு வைத்தியம் சொன்னார்கள். மந்திரம், மாந்தரீகம் எல்லாம்கூடச் செய்து பார்த்தார் உதவியாளர்.

எதற்கும் மசியவில்லை ராஜசேகரன். அவருக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருந்தாள் ராகமஞ்சரி. ஒருநாள் பாடிக்கொண்டிருந்தவர் நிறுத்தவே, சட்டென்று எழுந்த ராகமஞ்சரி, ‘`அப்பா அப்பா, எப்படி இருக்கீங்க’’ என்று பதறிப்போய்க் கேட்டாள்.

கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது ராஜசேகரனுக்கு. மூக்கை உறிஞ்சியபடி, ‘`நான் அப்பிடி நெனச்சிருக்கக்கூடாது இல்ல, துளி சந்தோஷப்பட்டுட்டேன் இல்ல, எவ்ளோ பெரிய பாவம்’’ என்று நாற்காலியில் தலையைப் பின்னால் சாய்த்து அழ ஆரம்பித்தார்.

அவரது முகத்தில் ஒரு பெருமிதம் பரவ ஆரம்பித்தது. இதோ நெருங்கிவிட்டேன் என்பது போல மீண்டும் வேகவேகமாக முணுமுணுக்க ஆரம்பித்தார். யூசுப் அலி உச்சத்தில் நின்று கொண்டு ஆலாபனை செய்து கொண்டிருந்தான்.

‘`இல்லப்பா, இல்லப்பா, நீங்க அப்படி நெனக்கவும் இல்ல, நான் அப்பிடி சொல்லவும் இல்ல’’ என்று அவரது தோளைப் பற்றிக் குலுக்கினாள் ராகமஞ்சரி. ‘`நீ அப்படிச் சொல்லாம வேணா இருக்கலாம், ஆனா நான் நெனச்சது என் மனசுக்கு உறைச்சுதுல்ல, எனக்குத் தெரியும்’’ என்று மூச்சை இழுத்து விட்டார்.

“எனக்குப் பூரணம் கூட மாட்டேங்குது மஞ்சரி” என்று மகளின் தலையைத் தடவிக் கொடுத்தார். `‘நான் பாடிப் பாடிப் பாக்குறேன், என்னமோ பிசிரு தட்டுது’’ என்று குரல் கம்மினார்.

“நீங்க கொஞ்சம் படுங்க, எதையும் யோசிக்காம தூங்குங்க, எல்லாம் சரியாகும்” என்று அவரைக் கட்டிலில் சாய்த்தாள் ராகமஞ்சரி.

சிறுகதை: அகாலத்தின் பாடல்

இரண்டு தலையணைகளைத் தலைக்குக் கொடுத்தபடி சாய்ந்த ராஜசேகரன், வாய்க்குள் முணுமுணுக்க ஆரம்பித்தார்.

காதுக்குள் மெள்ள மெள்ள யூசுப் அலியின் குரல் கேட்க ஆரம்பித்தது. வாய்க்குள் இவரது பாடல். அந்தக் குரலைக் கேட்டபடியே மெள்ள மெள்ள அதற்கு இணையாக கிட்டத்தட்ட கோரஸ் போலப் பாட ஆரம்பித்தார்.

அவரது முகத்தில் ஒரு பெருமிதம் பரவ ஆரம்பித்தது. இதோ நெருங்கிவிட்டேன் என்பது போல மீண்டும் வேகவேகமாக முணுமுணுக்க ஆரம்பித்தார். யூசுப் அலி உச்சத்தில் நின்று கொண்டு ஆலாபனை செய்துகொண்டிருந்தான். ராஜசேகரன் சளைக்கவில்லை. ஈடுகொடுத்துக் குரலை உயர்த்தினார்.

“அப்பா, அப்பா என்ன ஆச்சு, ஏன் உங்க உடம்பு தூக்கித் தூக்கிப் போடுது, அப்பா ப்ளீஸ் கண்ணைத் தொறங்க” என்று ராகமஞ்சரி கத்தினாள். ‘`யாராச்சும் வாங்களேன்’’ என்று பதறினாள். ஓடிவந்த உதவியாளர் உடனடியாக மருத்துவருக்கு போன் செய்தார்.

எதுவும் தெரியாத ராஜசேகரன், குரலை நெருப்பில் விட்ட நெய் போல உருக்கினார். யூசுப் அலியின் குரல், ராஜசேகரனின் குரல் இரண்டும் இணைகோடுகளாய் நெருங்கி வந்தன. ஒருகட்டத்தில் இரண்டும் ஒன்றாகி எது யூசுப் அலியின் குரல், எது ராஜசேகரனின் குரல் என்று பிரித்தறிய முடியாமற்போனது. ராஜசேகரனுக்கு இப்போது நிம்மதி வந்தது. பெருமூச்சு விட்டார்.

“ஐயோ, அப்பா...” என்று, சலனமற்ற ராஜசேகரனின் உடல்மீது சாய்ந்து கதறிய ராகமஞ்சரியின் குரல், அந்த அறையெங்கும் எதிரொலித்தது.