Published:Updated:

சிறுகதை: ஆழ்வார் தாத்தா

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

குரு.ஸ்ரீ.வேங்கடப்பிரகாஷ்

சிறுகதை: ஆழ்வார் தாத்தா

குரு.ஸ்ரீ.வேங்கடப்பிரகாஷ்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

காணவில்லை! எல்லா இடங்களிலும் தேடியாகிவிட்டது. ஒருநாளும் அவர் இப்படி இருந்ததே இல்லை. இராமானுஜம் பாட்டிக்குக் காது சற்று மந்தம். அவரைத் தவிர மற்ற எல்லோரும் அல்லோலகல்லோலப்பட்டுப் போனார்கள். அதற்காகப் பாட்டிக்குச் சேதி தெரியாது என்பதல்ல! தனக்கெல்லாம் அப்பாற்பட்டவர் கணவர் என்ற தெளிவு அவருக்குண்டு.

எம்பெருமான் கண்ணன்தான் ஆழ்வார் தாத்தாவுக்கு எல்லாமும். திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார்தான் மீண்டும் ஆழ்வார் தாத்தாவாகப் பிறந்திருக்கிறார் என்பதே ஊரில் எல்லோரது முடிவும்! நான்கு மகள்கள். கூரை வீடு. அதிலும் ஒரு சுவர் நன்றாகவே சாய்ந்திருக்கும். சிறுவயதில் பருமனாக இருந்த என்னை அதில் சாயவிடாமல் கெஞ்சுவார்கள். சற்று வளர்ந்தபின் அதேவீட்டில் மூங்கில் உத்தரத்தில் தொங்கி விளையாட விடாமல் காப்பாற்றினார்கள் உத்தரத்தை!

சிறுகதை: ஆழ்வார் தாத்தா

சின்னஞ்சிறு வயதில் தாத்தாவும் அவரது பெற்றோரும் வாழ்ந்ததெல்லாம் பர்மாவில். அங்கிருந்து அறுபதுகளில் பெரும்பாலும் கால்நடையாகவே தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள். வழியில் நோய்நொடியிலும் களைப்பிலும் மாண்டவர்களையெல்லாம் அங்கங்கு புதைத்துவிட்டு, புதைத்த இடங்களில் சொட்டுவதற்குக்கூடக் கண்ணீரின்றி விறைத்து மட்டும் பார்த்துவிட்டு வந்தவர்கள்.

வந்த இடத்தில் சிறிது நிலத்தை வாங்கி மேனி கறுக்கக் கறுக்க உழைத்தார்கள். பக்கத்து ஊரிலேயே இராமானுஜம் பாட்டி கிடைத்தார்கள். மணமுடித்தார். காளைமாடுகள்கூடக் களைத்துவிடும். தாத்தாவும் பாட்டியும் களைக்கவே மாட்டார்கள். காட்டி லிருந்து வீட்டிற்கு வந்தபின்னும் ஆடுமாடுகோழிகளைக் கவனிப்பது என வேலையை மாற்றிக் கொள்வார்களே தவிர நிறுத்தமாட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படித் தேனீயெனச் சுற்றிச்சுழன்ற தாத்தா எங்கே போனார்?!

தாத்தாவின் நான்கு பெண் மக்களும் குடும்ப நிலை அறிந்தவர்கள். சரஸ்வதி அக்கா நன்றாகப் படித்தார். இரண்டாவது அக்கா நான்காவது அக்கா ரெங்கலட்சுமியை வளர்ப்பதற்காகப் படிப்பை விட்டார். மூன்றாவது அக்கா சீனியம்மாளும் நன்கு படித்தார். வறுமையிலும் செம்மையாக நகர்ந்தன நாள்கள். நான்காவது அக்காவைவிட நான்கு வயது குறைவு எனக்கு. எனக்கு ஒரு வயதாகும்போது தாத்தா வீட்டை அடுத்த கூரை வீட்டிற்கு வாடகைக்குக் குடிவந்தோம். திருத்தங்கல் பள்ளிக்கு அப்பாவுக்கு மாற்றலாகியிருந்ததால் தஞ்சை மாவட்டம் திருப்புறம்பயத்திலிருந்து இங்கு வந்தோம். அம்மாவைப் பெற்ற தாத்தாவை நான் பார்த்ததில்லை என்பதால் ஆழ்வார்தாத்தாவே எனக்கு அம்மா தாத்தாவானார். நாளும் காலையில் பள்ளிக்குச் செல்லுமுன் ஓடிச்சென்று அவரிடம் நிற்பேன். கேட்கக்கூட மாட்டேன். வேட்டியை விலக்கிப் பச்சைக் காற்சட்டையைத் துழாவிப் பத்துப்பைசாவைத் தன் கடமையென எடுத்துத்தருவார். எண்பதுகளில் ஒன்றாம் வகுப்புக்காரனுக்கு அந்தப் பற்சக்கரப் பத்துப்பைசாவே போதுமானது. பள்ளி சென்று வந்ததும் மாட்டுவண்டியை என்னிடமிருந்து காப்பாற்ற அவர்கள் மீண்டும் போராடவேண்டும். நிறுத்திவைத்திருக்கும் வண்டியின் நுகத்தடியின் ஒரு புறம் அமர்ந்துகொள்வேன். இருபுறமும் ஆள்கள் இருந்தாலாவது சேதாரம் குறையும். தனியாக அமர்ந்தே ஆடப்பழகிக்கொண்டேன் என்பதே அவர்களது கவலைக்குரியதாக இருந்தது.

சிறுகதை: ஆழ்வார் தாத்தா
சிறுகதை: ஆழ்வார் தாத்தா

சாப்பிடும்போது என்னைக் கேட்காமலேயே தட்டு வைத்துவிடுவார்கள். கம்மங்கஞ்சியைக் கட்டியாக எடுத்து வைத்து மோர் ஊற்றுவார்கள். பிசைந்து அக்காக்களோடு சாப்பிட வேண்டியதுதான். ஊறுகாய் உடனிருக்க உலகமே சிற்றுருண்டைதான்!

இப்படிக் கூடியிருந்து குளிரவைத்த தாத்தா இப்போது எங்கே?!

ஆழ்வார் தாத்தாவின் இரண்டாவது மகளின் பெயர் தெரியுமோ? கோதையாண்டாள்! வீட்டிற்கு வந்த மாப்பிள்ளையின் பெயர் கண்ணன்! இதுபோதாதா! எங்கள் ஊரான கோதைநாச்சியார்புரமே திருவில்லிபுத்தூராகவும் ஆயர்பாடியாகவும் ஒருசேரத் திகழ்ந்தது. ஊரின் ஒரே பொதுக்கூடலும் புண்ணியத்தேடலும் கண்ணபிரான் பஜனை மடம்தான். ஒவ்வொரு சனிக்கிழமையும் பஜனை நடக்கும். தாத்தா உட்கார்ந்து பாடமாட்டார் செய்யமாட்டார். மடப்பள்ளியிலிருந்து கருவறைக்குப் போகும்போதும் வரும்போதும் முணுமுணுத்துக் கொண்டே செல்வார் அவ்வளவு தான். புஷ்பாலங்காரம் முதல் தீபாராதனை வரை கருவறைக் கைங்கர்யம் எல்லாமும் ஆழ்வார்தாத்தாதான். மோன நிலையிலேயே நடந்துகொண்டிருப்பார். தளிகையை மட்டும் பெரும்பாலும் தாத்தாவின் உறவினரான தங்கையா மாமா எடுத்துக்கொள்வார். அதிலும் மார்கழி மாதமென்றால் முப்பதும் தப்பாமல் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் பெரிய தடாவில் பொங்கல் செய்து கண்ணனுக்கு அமுது செய்விப்பதென்பது அந்தக் கண்ணனே பாதிச் சுமையை ஏற்றுக்கொண்டால்தான் சரிப்படும்.

ஆழ்வார் தாத்தாவும் தங்கையா மாமாவும் இரட்டையர்போல ஒரு நாளும் தம் கடமைகளிலிருந்து தவறியதே இல்லை. எவ்வளவு சிரமமிருந்தாலும் எப்படியாவது நிறைவேற்றிவிடுவார்கள். குழந்தைகளுக்கு ஆழ்வார் தாத்தா அன்பின் உருவம் என்றால் தங்கையா மாமா தணலின் உருவம். அது எப்படித்தான் கையில் நிறைய பொங்கலை எடுத்துக் கொஞ்சமாகத் தருகிறாரோ என்று வியப்பாக இருக்கும்! பிள்ளைகள் தங்கையா மாமா இருந்தால் இராமன்களாக வளைய வருவார்கள். ஆழ்வார் தாத்தா மட்டும் இருந்தால் கண்ணன்களாக வலம் வருவார்கள். மண்டகப்படி கொடுத்தவர்களுக்குப் பொங்கலைத் தூக்குவாளியில் கொண்டுபோய்க் கொடுப்பார் ஆழ்வார் தாத்தா! கூடவே நானும் ஒட்டிக்கொள்வேன். அவர்கள் பிரசாதத்தைப் பணிந்து பெற்றுக்கொள்ளும்போது எனக்குக் கூச்சமேயில்லாமல் ஆச்சார்ய பாவனை வந்துவிடும்! கொஞ்சம் விட்டால் ஆசிக்காகக் கை உயர்த்தியிருப்பேன்! தாத்தாவே அவர்களைவிடப் பணிவாகப் பிரசாத வாளியைத் தருவதன்மூலமாக என் முதுகில் பாஷ்யக்காரர் கிடாம்பி ஆச்சானை அடித்ததுபோல் ‘உட்டோ’ என ஓங்கி அடிப்பார்!

எல்லாம் சரி! இப்போது எங்கே போய்விட்டார்?!

தான் போகாத கோவிலுக்கு ஆழ்வார் தாத்தா மட்டும் எப்படிப் போகலாம்?

நேரம் செல்லச்செல்ல எல்லோர் கண்களிலும் கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது. பாட்டி ஆட்டுக்குட்டிகளைக் கொஞ்சிக்கொண்டிருந்தார். ஆடுகளுக்குப் பாட்டி பேசுவது புரியும். குதூகலமாகக் குதித்துக்கொண்டிருந்தன. அதைக்கண்டு ஊரார் மேலும் உருக்கமானார்கள். அக்காக்கள் நால்வரும் அலை பாய்ந்தார்கள். அவர்களுக்குப் பாட்டி மட்டுமல்ல, தாத்தாவும் தாய்தான்!

நாங்கள் பழைய கூரை வீட்டுக்குப் பக்கத்திலேயே புது வீடெடுத்துக் குடிவந்தோம். சனிக்கிழமைகளில் கோயிலில் எப்போதாவது தளிகை செய்ய இயலாதபோது தேங்காய்களையும் சர்க்கரையையும் கொண்டு வந்து தருவார். அம்மா அவ்வளவையும் துருவிச் சர்க்கரையைக் கலந்து கொடுக்க, அதைக் கொண்டு போய்க் கொடுப்பேன். பொங்கலைவிட அது ருசியாக இருக்கும். இப்படியாக ஆண்டுகள் கடந்து கொண்டே சென்றன. ஒவ்வோர் அக்காவாக அடுத்தடுத்து நால்வருக்கும் திருமணங்களும் முடிந்தன. கடமைகளை முடித்த திருப்தி ஆழ்வார் தாத்தாவிடம் குடிகொண்டது. அதிலும் இரண்டாவது மருமகன் ஆசிரியர் கோபால்சாமி நாம சங்கீர்த்தனத்தில் மன்னன்! தாத்தாவுக்கு அதில் மட்டற்ற மகிழ்ச்சி!

சிறுகதை: ஆழ்வார் தாத்தா

பின் என்ன குறைதான் தாத்தாவுக்கு? எங்கே போனார் இப்போது?!

நான் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் ஏதோ ஒரு மனத்தாபத்தில் தங்கையா மாமாவை ஊரில் சிலர் கொஞ்சம் மாறுபாடாகப் பேசிவிட்டார்கள். பேசியவர்கள் என்றைக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்? ``நாங்கள் அப்படிப் பேசுவோமா?’’ என்று சத்தியம் செய்யவும் தயாராக இருந்தார்கள். ஆனால் பேசியது உண்மையெனக் கேள்விப்பட்ட தங்கையா மாமா ``பொதுவில் அவர்கள் மன்னிப்பு கேட்காமல் கோயிலுக்கு இனி வரமாட்டேன்’’ என்று ஓங்கிச்சொல்லி விட்டார். திகைத்துப்போய்விட்டோம். தளிகைக்கு ஆள் கிடைப்பார்கள். ஆனால் தங்கையா மாமா கிடைப்பாரா? பஜனை மடத்திற்கும் தங்கையா மாமாவிற்கும் உள்ள உறவு வெறும் மடப்பள்ளிச் சேவகருக்கும் ஊருக்குமான உறவா? கண்ணனோடு உறவில் இருப்பவர்களல்லவா ஆழ்வார் தாத்தாவும் தங்கையா மாமாவும்!

பஜனை மடத்திலிருந்து நான்கு வீடுகள் தள்ளித்தான் தங்கையா மாமா வீடு. எதிர்க்கோடியில் ஆழ்வார் தாத்தாவின் வீடு. பஜனை பாடும் பலரும் ஆழ்வார் தாத்தாவோடு சேர்ந்து தங்கையா மாமாவின் வீட்டிற்குச் சென்று அவரை மீண்டும் மடத்திற்கு வரவேண்டுமென வேண்டினோம். முகங்கொடுத்தே பேசவில்லை. தோற்றுப்போனோம். அவர் வருவதாக இல்லை. மாறாக ஒருபடி மேலே போனார். ``கண்ணன் உத்தரவாகட்டும். அப்ப வர்றேன்’’ என்று சொல்லிவிட்டார்.

`தான் போகாத கோயிலுக்கு ஆழ்வார் தாத்தா மட்டும் எப்படிப் போகலாம்? தனக்காக அவரும் நிற்கவேண்டாமா?’ என்று நினைத்துவிட்டாரென்பதையும், ஆழ்வார் தாத்தாவைத்தான் அவர் கண்ணன் என்று மறைமுகமாகச் சொன்னாரென்பதையும் பின்னர் அத்தையின் வாயைப் பிடுங்கித் தெரிந்துகொண்டோம். ஆழ்வார் தாத்தாவுக்கோ தங்கையா மாமாவும் வேண்டும் கண்ணனும் வேண்டும். பேசும் தங்கையா மாமா பேசாம லிருப்பதைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடிந்த தாத்தாவுக்கு பேசாத கண்ணனைப் பார்க்கா ம லிருப்பதைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது. எப்படியும் தங்கையா மாமாவிடம் தொடர்ந்து முறையிட்டு பஜனை மடத்திற்கு அவரை அழைத்து வந்துவிடலாம் என்று நினைத்திருந்தார். தங்கையா மாமாவுக்குத் தன்னைப் பேசியவர்கள் மீதெல்லாம்கூடக் கோபம் குறைந்துவிட்டது. ஆழ்வார் தாத்தாவின் மீதுதான் மனத்தாங்கல் நாளுக்குநாள் அதிகமாகிவிட்டது. ``நீ... நீ… என்னுடன் நிற்கவேண்டாமா?’’ என்று குலதெய்வத்திடம் உரிமையோடு கோபித்துக்கொள்வதுபோலத்தான்!

ஆழ்வார் தாத்தாவும் வெளியில் சொல்லவில்லையே தவிர மனதிற்குள் குமைந்துகொண்டுதான் இருந்திருப்பார் என்று இப்போது தோன்றுகிறது. திடீரென ஒருநாள் விக்கல் வந்து ஒரு மணிநேரமாக விக்கிக்கொண்டிருந்தார். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் நிற்கவில்லை. ஒரு மணி இரண்டு மணியாயிற்று. அரைநாள் ஒரு நாள் ஆயிற்று. ஒரு நாள் இரண்டு நாள்களாயிற்று. அருகிலமர்ந்தாலே அடுத்து இதோ விக்கப்போகிறார் என்று நொடிதோறும் எதிர்பார்த்து எதிர்பார்த்து நிதானமிழந்து நம் தலைவெடித்துவிடும்போல் இருந்தது. அவருக்கு எப்படியிருக்கும்? பாவம். கண்ணனிடம் விட்டுவிட்டார். இரவும் பகலும் நேரங்காலமில்லாமல் விக்கிக்கொண்டே இருந்தார். ஒன்றும் பிடிபடவில்லை. மகள் தலைமைச் செவிலியாயிருந்தாலும் மருத்துவமனைப் பக்கமே தலைவைத்துப் படுக்காதவர் தாத்தா. ஏனோ என்னுடன் வரச்சம்மதித்தார். என் வண்டியில் பின்னால் அமரவைத்து அழைத்துச் சென்றேன். ஏதோ சத்துக்குறை பாடென்றார்கள். சரியாகச் சாப்பிட்டா ல்தானே! மாத்திரைகளைக் கொடுத்தார்கள். என்ன நினைத்துக் கொண்டாரோ மாத்திரைகளை உற்றுப்பார்த்தார். கண்ணிமைகள் படபடவென அடித்ததைக் கண்டேன். அழுகையை மறைக்கிறார். எனக்குக் கண்ணீர் வந்தது. எனக்காகச் சாப்பிட்டாரோ என்னவோ மூன்றாம் நாளில் சரியாயிற்று. எனக்காகத் தாத்தா மாத்திரை சாப்பிட்டார் என்ற பெருமிதம் எனக்கு.

இப்போதும் நான் கூப்பிட்டால் வந்துவிடுவார். எங்கு இருக்கிறார் என்பது மட்டும் தெரியவேண்டும். வெள்ளிக்கிழமை அதுவுமாய் எங்கு போய்விட்டார்?!

நேரம் இப்போது இரவு பதினொரு மணி. நானும் இன்னும் சிலரும் கடைத்தெருப்பக்கம் இன்னொருமுறை தேடலாம் என்று சென்றோம்.

அவர் இல்லையென்றால் சனிக்கிழமை கோயிலில் கண்ணனே ``என் பைந்நாகப்பாய் சுருட்டிக் கொண்டேன்’’ என்று கணிகண்ணனுக்காக மணிவண்ணன் கிளம்பியதைப்போல வெளிக்கிளம்பி விடுவாரே! தாத்தாவின் கூரைவீட்டின் முன் கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட்டம் கூடிவிட்டது. ஆளுக்கொரு பக்கமாய்த் தேடச்சென்ற வர்கள் வந்து வந்து, இல்லையென்ற தகவலை மட்டும் சொல்லி வேறு திக்கில் தேடச்சென்றார்கள். ‘`எல்லாக் கெணத்துலயும் தேடணுமப்பா’’ என்று குருசாமி மாமா சொன்னதும் கூட்டத்தில் அழுகை வெடித்தது. காரணம் மணவாளம் தாத்தா! தாத்தாவின் உடன்பிறந்த அண்ணன். சில ஆண்டுகளுக்கு முன்னால் கிணற்று அறையில் மின்னதிர்ச்சியால் கிணற்றுக்குள் தூக்கியெறியப்பட்டு இறந்துபோனார். மணிமாமாதான் துணிந்து உள்ளே குதித்துத் தூக்கிக் கொண்டுவந்து வீட்டில் கிடத்தினார்.

சிறுகதை: ஆழ்வார் தாத்தா

நேரம் இப்போது இரவு பதினொரு மணி. நானும் இன்னும் சிலரும் கடைத்தெருப்பக்கம் இன்னொருமுறை தேடலாம் என்று சென்றோம். ஆள் நடமாட்டமேயில்லை. இருந்த ஒரு சிலரும் கடைவாயில்களில் போர்த்தித் தூங்கிக்கொண்டிருந்தனர். எல்லா முகங்களையும் விலக்கிப் பார்த்தாயிற்று! இல்லை. திடீரென என் பார்வையில் பில்கலெக்டர் மாமா கடையின் படிக்கட்டு பட்டது. அதன் முதல்படியில் நாயொன்று படுத்திருந்தது. சின்னவயதில் அம்மாவை நாய் கடித்ததிலிருந்தே சற்று அச்சமுண்டு. நின்றுகொண்டே இருந்தேன். என்ன நினைத்ததோ ‘`நீ என்றால், போய்ப் பார்’’ என்று சொல்வதைப்போல் அதுவாக எழுந்து நகர்ந்தது! வேகமாக ஏறிச்சென்றேன். மேலே நிலவொளி தண்ணென்று வீசியது. தன் பச்சைத்துண்டை நன்றாக விரித்துப் படுத்துறங்கிக்கொண்டிருந்தார் ஆழ்வார் தாத்தா. தலைசுற்றியது எனக்கு! வேறொன்றும் பேசவில்லை. மெல்லத்தொட்டேன். ‘`தாத்தா நேரமா யிருச்சி… வாங்க போகலாம்’’ என்று மட்டும்தான் சொன்னேன். எழுந்து பார்த்தவர் துண்டை உதறிவிட்டு, பேசாமல் என்னுடன் வந்தார். கீழே இருந்தவர்களும் அமைதியாகப் பின்தொடர்ந்தனர். வீட்டிற்குவந்தோம். ஒரு சிலர்தான் தாத்தாவைக் கவனித்தனர். ஓவென்று அரற்றத்தொடங்கினர். பாட்டியைக் கைகாட்டிவிட்டுத் தாத்தா பாட்டுக்கு உள்ளே சென்று உட்கார்ந்தார். தண்ணீர் கொடுத்தேன். வாங்கிக்குடித்தார். சிரித்தார். அழுதேன். என் வலது புறங்கையைப் பிடித்து உள்ளங்கையில் முத்தமிட்டார். பின் சுவரைப் பார்த்தவாறு திரும்பிப் படுத்து விட்டார். அவ்வளவுதான். வெளியில் வந்தேன். பாட்டி ஆட்டுக்குட்டியிடம் ‘`வெங்கடேசு கூட்டீட்டு வந்துட்டான்’’ என்று சொல்லிச் சிரித்தார். குட்டி குதித்துக் குதூகலித்தது!

இயற்கையாக அவர் மறையும் நாளென்று ஒரு கணக்கிருக்கிறது. அன்றைக்கு அவருக்கு மாலை போடுவேன்.

அதன்பிறகு நான் சென்னைக்கு வந்துவிட்டேன். அவ்வப்போது கேட்டுக்கொள்வேன் `ஆழ்வார் தாத்தாவும் தங்கையா மாமாவும் பேசிக்கொண்டார்களா’ என்று. இல்லையென்றே பதில் வந்தது. இடையில் ஊருக்குச் செல்கையில் ஓரிருமுறை பார்த்துவந்தேன். உடல் சற்றே ஊதிப்போயிருந்தார். அவர் உடல்வாகு அப்படியானதல்ல. முன்பிருந்த கூர்மையும் பேச்சிலில்லை. அப்போதே எனக்கு மனம் விட்டுப்போயிற்று! ‘நீ சந்திரபாபு நாயுடு’ மாதிரி இருக்கே என்று சிரித்தார். அந்தச் சிரிப்பில் சற்று ஆறுதலடைந்தேன். சென்னைக்குத் திரும்பிவிட்டேன்.

பின்னர் அவ்வப்போது விசாரித்து வந்ததில் உடல்நலத்தோடு இருக்கிறார். ஆனால் மகள்களுக்குத் தொந்தரவு தந்துவிடக் கூடாதென்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தார் என்று சொன்னார்கள். அக்காக்கள் அப்படி நினைப்பவர்கள் அல்லர். எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். தாத்தாவைத் தாங்கு தாங்கென்று தாங்குவார்கள். அனைவரும் தனித்தனியாக வீடுகளையும் எடுத்தி ருக்கின்றனர். மகாராஜா மாதிரி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தாத்தா அப்படி இருக்கவில்லை. அந்தக் கூரைவீட்டில் கண்ணனும் தானுமென்று தனித்தேயிருந்தார்.

ஒருநாள் மனம் காரணமில்லாமல் அலைபாய்ந்த வேளையில் தொலைபேசியில் தகவல் வந்தது. ஆழ்வார் தாத்தா இறந்துவிட்டார் என்று. இல்லை வாய்ப்பில்லை என்றேன். வாய்ப்பில்லைதான்! நீ சொன்னது சரிதான் என்றார்கள். எனக்குப் புரிந்து போயிற்று! இப்படி முடிந்தால்தான் நீர் ஆழ்வார் தாத்தா! உம் குணம் இறுதிவரை உம்மைவிட்டுப் போகவில்லையே என்று நெஞ்சடைத்துப் போனேன். இயற்கையாக அவர் மறையும் நாளென்று ஒரு கணக்கிருக்கிறது. அன்றைக்கு அவருக்கு மாலை போடுவேன். அதற்கு இன்னும் இருபத்தைந்தாண்டுகள் இருக்கின்றன என்று சொல்லி நான் ஊருக்கு வர மறுத்துவிட்டேன். தாத்தாமீது கோபம் வந்துவிட்டது! தங்கையா மாமாவின் கோபம் அன்றுதான் எனக்கு முழுவதும் புரிந்தது.

எந்த உத்தரம் சிறுவயதில் என்னைத் தாங்காதென்றார்களோ அதே உத்தரம் முப்பதாண்டுகள் கழிந்தும், தூக்கில் தொங்கி உயிர்பிரியும் வரை தாத்தாவைத் தாங்கிக்கொண்டிருந்ததாம். தங்கையா மாமா தவித்துப்போய் ஓடிவந்தாராம். கதறிக்கொண்டே பேசு பேசு என்று பேசக் கூப்பிட்டாராம். கோயிலுக்குத் தானே வரணும். இப்பவே வர்றேன் வா போவோம், வா போவோம் என்றாராம். கண்ணன் என்றைக்குப் பேசியி ருக்கிறான்?!

பாட்டி எதையும் சொல்லாமல் இரண்டு கைகளாலும் ஆட்டுக்குட்டியின் முகவாயைப் பிடித்துக்கொண்டு பார்த்தவண்ணம் இருந்தாராம். ஆட்டின் கண்களில் கண்ணீர் கசிந்து கொண்டிருந்ததாம்!

தங்கையா மாமா இப்போதெல்லாம் வாரந்தவறாமல் கண்ணன் கோயிலுக்கு வந்துவிடுகிறாராம்! அவருக்காகத் தாத்தா கோயிலுக்குச் செல்வதை நிறுத்தி விட்டதால் தாத்தாவுக்காக அவர் செல்லத்தானே வேண்டும்! தாத்தாவைப் போலவே கைநிறையப் பொங்கலை அள்ளித்தருகிறாராம்! மாமாவுக்குக் கிடைத்துவிட்டார்… எனக்குத்தான் எப்போதைக்குமாகக் கிடைக்காமலேயே போய்விட்டார்! நினைவு வரும்போ தெல்லாம் வலது உள்ளங்கையில் முத்த மிட்டுக்கொள்கிறேன்!