Published:Updated:

சிறுகதை: பிரதாப் போத்தனின் கண்கள்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

கணேசகுமாரன்

சிறுகதை: பிரதாப் போத்தனின் கண்கள்

கணேசகுமாரன்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

னநலம் பிறழ்ந்தபோது தங்கப்பொன்னுக்கு வயது 18. வயிற்றில் 40 நாள் கருவோடு வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, சிறு புள்ளியில் தன்னைத் தொலைத்திருந்தாள். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவள் வீட்டில் கறி எடுத்துச் சமைத்திருந்தார்கள். உண்டகளைப்பில் தங்கப்பொன்னுவின் அம்மாவும் அப்பாவும் தூங்கிக்கொண்டிருக்க, மதிய வெயில் வீட்டுப் பின்வாசல் வழியே உள்ளே நுழைந்து ஹாலில் படுத்திருந்தது. தங்கப்பொன்னு அந்த வெயிலை மிதித்துக்கொண்டுதான் வீட்டை விட்டு வெளியேறினாள். ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கென்று ஏனோ அப்படி ஒரு சோம்பல் வந்துவிடுகிறது. சிறிதும் அசையாமல் தன் ஆறுதலைத் தெரியப்படுத்திக்கொண்டிருந்தது. வடசேரி பஸ் நிலையத்துக்கு தங்கப்பொன்னு வந்தபோது சூரியன் காணாமல்போயிருந்தது. அவள் வீட்டுக்கும் பஸ் நிலையத்துக்கும் கூப்பிடு தூரம்தான். ஆனாலும் அவள் அதைக் கடக்க தன் பாதி ஜென்மத்தைச் செலவழித்ததுபோல் தளர்ந்திருந்தாள். அவள் நினைவில் இந்தப் பூமியின் வரைபடம் கோடுகளின்றி வட்டங்களால் நிரம்பியிருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தங்கப்பொன்னுக்குப் பூஞ்சை உடம்பு. வெளுத்துப்போன பச்சை நிறத்தில் ஏகப்பட்ட இலைகளை மட்டுமே பூத்திருந்த ஒரு தாவணி மரத்தை அணிந்திருந்தாள். முந்தானையில் ஒரு வேர் கிழிந்து முதுகில் தொங்கிக்கொண்டிருந்தது. வந்து நின்று புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த பஸ்களில் தன் அம்மாபோல் யாரையாவது பார்த்தால் தன் கால்களின் வேகத்துக்குப் பூட்டு போட்டாள். ஆனாலும் எல்லோருமே அவள் கண்ணுக்கு அம்மாவாகத்தான் தெரிந்தார்கள். கையில் ஏதோ பச்சை திரவத்தைக் கிண்ணத்தில் வைத்துக்கொண்டு ஏந்தியபடி ‘`கண்ண மூடிக்கிட்டு இந்த மருந்தக் குடிச்சுடு. வயித்துக் கசப்பு இந்தக் கசப்போட வெளிய வந்துடட்டும்’’ என்று மிரட்டிக்கொண்டிருந்தார்கள். தங்கப்பொன்னு உலகம் பார்க்கக் கண் கூசினாள். அவள் காதுக்குள் திரும்பத் திரும்ப ஒரு குரல் ஒலித்துக்கொண்டேயிருந்தது. அது யாருடையதென்றோ என்னவென்றோ அறிய தங்கப்பொன்னுக்கு நேரமில்லாமல்போயிற்று. யாரோ ஒரு கண்டக்டர் ஏதோ ஒரு ஊர்ப்பெயர் சொல்லி பஸ்ஸில் ஏறும் படியருகே நின்று கத்திக்கொண்டிருந்தார். பார்க்க பெரியசாமி போலவே இருந்தது தங்கப்பொன்னுக்கு. புருவத்துக்கும் இமைக்கும் இடையே ஒரு கண் இடைவெளி விழுந்து வீங்கிய முகம். சோடாபுட்டிக் கண்ணாடி வழியே தெறித்து வெளியேறிவிடும் பிரதாப் போத்தனின் கண்கள் அவனுடையதுதான். மதிய வெயிலில் தூங்கி வீங்கிய பெரியசாமியின் முகம் தங்கப்பொன்னுக்குப் பிடித்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறுகதை: பிரதாப் போத்தனின் 
கண்கள்

அவள் அந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள். ஒருநாளில் தன் பொலிவை இழப்பவள் அல்ல தங்கப்பொன்னு. அன்று காலையில்தான் குளித்திருந்தாள். பழையது போன்ற தோற்றத்தைத் தந்திருந்தாலும் தங்கப்பொன்னுக்கு வெளுத்த இலை தாவணி புதியதாய் ஒரு அழகைத் தந்திருந்தது. சிவப்பான ஒல்லியான சிரித்தால் சின்னதாய்க் குழி விழுந்து மறையும் கன்னத்தில் தங்கப்பொன்னு நிறைய பேருக்கு நம்பிக்கை தந்திருந்தாள். கண்டக்டர் வந்து டிக்கெட் எடுக்கச் சொன்னபோது அவளின் கண்கள் பேருந்தின் ஜன்னல் தாண்டி விரைந்து கொண்டிருந்த மலையின் மீது கவிழ்ந்திருந்தன. பஸ்ஸில் இருந்த யாவரும் அவளை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றனர். அருகிலிருந்த காவல் நிலையத்தில் அவளை இறக்கி விட்டுவிடலாம் என்றனர். அப்போதே மணி ஆறு முப்பதைச் சமீபித்திருந்தது. ஸ்டேஷன் உள்ளிருந்த கான்ஸ்டபிளிடம் விவரம் சொல்லி தங்கப்பொன்னுவை கண்டக்டர் ஒப்படைத்துவிட்டு விலக தலையைச் சொறிந்த கான்ஸ்டபிள், தங்கப்பொன்னு தானாக அந்த ஸ்டேஷன் விட்டு வெளியேறி கண்ணுக்குத் தெரிந்த இருட்டில் கால் வைத்தபோது இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தார். வெளியுலகம் தங்கப்பொன்னுவைப் பைத்தியம் என நம்பத் தொடங்கியது அப்போதுதான்.

தங்கப்பொன்னு நடந்து கொண்டேயிருந்தாள். இருள் முடிந்து பகல் வந்து விலகியது. கண்களில் படிந்த வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சத்துக்குப் பழகிப் பின் பகலின் ஹாரன்களுக்கு பயந்து விலகி சாலை ஓரமாய் நடந்தாள். உடல் ஓய்ந்த நேரத்தில் கிடைத்த இடத்தில் படுத்துக்கிடந்தாள். இரண்டு கண்களும் நெருப்பாய் எரிந்தன எப்போதும். தூங்கும்போதும் அதன் தீ சுட்டது. தூங்காமலே விழித்தாள். மூளையில் ஓய்வு என்பதே இல்லாமல்போனது. அதிகமாய்ப் பசித்தது. ஆனாலும் பசி என்று கையேந்திய இடத்தில் அவளுக்கு உணவிட்டனர். தேநீர் வாங்கித் தந்தனர். பிஸ்கட் கிடைத்தது. பஜ்ஜி சாப்புடுறியா, இந்தா என்று அவள் கையில் தராமல் தரையில் வைத்தனர். நாளடைவில் தன் தொடக்கத்தின் முகங்களும் பெயர்களும் தங்கப்பொன்னுக்கு மறந்து போயின. காதுக்குள் குரல்கள் மெள்ளத் தேய்ந்து பின் ஓங்கி எழுந்து பெரும் அலறலுக்குப் பின் நிரந்தர அமைதியானது. சிரிப்பைத் தொலைத்த தங்கப்பொன்னுக்குப் பசியும் அழுக்கும் துர்வாசனையும் பழகிப்போனது. வயிறு பெரிதாகிக்கொண்டே இருந்தது. இடுப்பில் கட்டியிருந்த பாவாடை தொப்புளுக்கு மேல் ஏறியதில் கணுக்காலில் வெளிச்சம் படத் திரிந்தாள். மதுரையில் ஏதோ ஒரு வீதியில் இருந்த கோயிலில் அலுப்பாய் தலை சாய்த்தபோது அங்கிருந்த யாரோ ஒரு பெண்மணிதான் தங்கப்பொன்னுக்குப் புதியதாய் ஒரு புடவையும் பாவாடையும் அணிவித்தார். கடக்கும் பாதைகளின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த மூடுபனி சினிமா போஸ்டர்களில் பெரியசாமி கண்ணாடி அணிந்து கோடரி தூக்கி ஆத்திரமாயிருந்தான்.

வயிற்றுத் தையல் பிரித்த மறுநாள், குளிரில் நடுங்கிய குழந்தையைத் தன் மார்பின் வெப்பத்தில் வைத்துப் புதைத்தபடி அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறிய தங்கப்பொன்னுவை எந்தச் சலனமுமின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார் இரவு நேரக் கண்காணிப்பாளர். புத்தி பேதலித்துப் போயிருந்த தங்கப்பொன்னுக்குப் பால் சுரந்தது. மருத்துவமனையில் செவிலியர்கள் பழக்கிய விதத்தில் பசியில் குழந்தை உதடு குவிக்கும்போ தெல்லாம் தன்னிச்சையாக மார்புக் காம்பினைக் குழந்தையின் பசிக்குக் கொடுத்தாள். எலும்பும் தோலுமாய் ஒடுங்கிய உடம்புடன் கிழிந்த அழுக்கான சாப நிழலின் துர்நாற்றம் படிந்த தங்கப்பொன்னுக்கு மேலும் மேலும் சாப்பாடு கிடைத்தது. சத்திரமோ கோயிலோ மனிதம் சுமந்த கண்களுக்குத் தங்கப்பொன்னு தெரிந்துகொண்டே இருந்தாள். எதுவுமே பேசாமல் மெளனமாய் உலகை அளந்து கொண்டிருந்த தங்கப்பொன்னுவின் கிழிந்த முந்தானை பிடித்து நடந்து வளர்ந்தான் மகன். இருவரின் உலகிலும் பாதையும் பாஷையும் இல்லாமல்போயிற்று. பசி மட்டும் பொதுவாய் இருந்தது. எல்லா மழையும் அவர்களுக்கெனவே பெய்தது.

சிறுகதை: பிரதாப் போத்தனின் 
கண்கள்

எல்லோருக்குமான நிலா அவர்களின் மீதும் வெளிச்சம் வீசி நகர்ந்தது. கிறுக்கச்சி, கிறுக்கச்சி மகன் என்று புதிய பெயர்கள் சூட்டிய நாளன்று எதற்கென்று தெரியாமல் தன் தாயின் உதட்டில் தோன்றிய அலட்சியக் கீற்றினைக் கவனித்தான் மகன். அது இந்த உலகத்தின் மீதான கேலிப் புன்னகை. இருவரையும் இந்த பூமி ஒருபோதும் விழுங்கிவிடவில்லை. கிறுக்கச்சிக்குக் கிழிந்த புடவை வந்தபோது கிறுக்கச்சியின் மகனுக்கும் பழைய சட்டையும் டிராயரும் கிடைத்தன. தகப்பனையே உரித்துக்கொண்டு வந்து நின்றான் தங்கப்பொன்னுவின் மகன். உதடு குவிந்த சிரிப்பைச் சிரிப்பென்று தெரியாமலே தன் தாயிடம் வெளிப்படுத்தியபோதுதான் தங்கப்பொன்னுவின் மூளை நரம்பு சுண்டி இழுத்து அடங்கியது. அவளுக்கு மகன் உருவான கதையும் மனிதர்களும் சில ராத்திரிகளில் அவ்வப்போது தென்பட்டார்கள். பெரும்பாலான அமாவாசை, பெளர்ணமி நாள்களில் தங்கப்பொன்னு தீரா வலிப்புக்கு ஆளானாள். வெட்டி வெட்டி இழுத்து ஓயும் உடம்பை, வாயிலிருந்து எச்சில் வழியப் பார்த்துக் கொண்டிருப்பான் கிறுக்கச்சி மகன்.

ஒரு பெளர்ணமி முடிந்த இரண்டாம் நாள் இரவில் பெயர் தேவையற்ற ஒரு ஊரைக் கடந்தார்கள் இருவரும். நான்கு சாலைகள் ஒரு புள்ளியில் பிரியும் அல்லது இணையும் இடத்தில் நின்றிருந்தவனைப் பார்த்ததும் தங்கப் பொன்னுவின் கால்கள் தயங்கி நின்றன. சமீபநாள்களில்தான் அவளுக்கு தான் பருவம் அடையும்வரை வாழ்ந்த ஊரும் பள்ளியும், தன் அம்மாவையும் அப்பாவையும் கனவுபோல் கண்டு மீள்கிறாள். நண்பர்களுடன் கூடி நின்று சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தவன் தலைக்கு மேலே மஞ்சள் நிற ஒளியை வீசியபடி தெருவிளக்கு நின்றிருக்க, சிகரெட் பற்றவைத்த தீ ஒளியில் அவன் முகத்தைப் பார்த்தாள் தங்கப்பொன்னு. நெஞ்சுக்குள் அவன் பெயர் முட்டி மோதி அவளை மூச்சடைக்க வைத்தது. மகனின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி, சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தவனை நோக்கிக் கை நீட்டினாள். அப்படியே மடங்கித் தரையில் அமர்ந்தாள். தங்கப்பொன்னுவின் மகன் அம்மா கை நீட்டியவனை நோக்கிச் சென்றான். தன் முன்னே வந்து நின்றவனை சிகரெட் புகையை அண்ணாந்து ஊதிவிட்டுப் பார்த்தவனின் கண்கள் மொத்த இரவையும் உள்வாங்கி விரிந்தன. விரல் இடுக்கிலிருந்து சிகரெட் நழுவிக் கீழே விழ, தங்கப்பொன்னுவின் மகனைப் பார்த்து ஏதோ உளறியபடி மயங்கி விழுந்தான். அருகில் இருந்த நண்பர்களின் ‘`ராஜன்... எலே ராஜன்... என்னடா ஆச்சு?’’ என்று நெருங்கிய குரல் தங்கப்பொன்னுவின் காதில் விழுந்தது. ``ராஜன்’’ என்று உதடு பிரித்து முனகினாள். உடல் வெட்டி இழுத்து வலிப்பு தொடங்கியது.

``நீங்க ரொம்ப எமோஷனலாகாதீங்க. பிபி அதிகமாகி மயக்கம் வந்து ஊசி போட்ருக்கு உங்களுக்கு. டிஸ்சார்ஜ் ஆனாலும் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லியிருக்கார்.

ராஜனின் மனம் விழித்ததும் ஆஸ்பத்திரி நெடியினை உணர்ந்தது. இமை திறக்காமல் நேற்று இரவு நடந்ததை அசைபோட்டான். பிபி என்னும் பிரதாப் போத்தன் என்னும் பெரியசாமி தன் கண்முன் வந்து நின்றதை உணர்ந்ததும் கண் விழித்தான். முதலில் தன் அம்மாவைத்தான் பார்த்தான். ``அம்மா...’’ என்றபோது தலையில் லேசாக வலியை உணர்ந்தான். ராஜனின் குரல் கேட்டதும் அறை வெளியே நின்றிருந்தவர்கள் உள்ளே வந்தனர். நண்பர்களைக் கண்டதும், ``அவன் எங்கடா?’’ என்றான் ராஜன். ``யார்டா அது? எதுக்கு அந்தப் பைத்தியத்தப் பார்த்து பயந்தே..?’’ என்றான் ராஜனின் நண்பன் கிரி.

சிறுகதை: பிரதாப் போத்தனின் 
கண்கள்

``அவன் பைத்தியம் இல்லடா. அவன்தான் பெரியசாமி. பிபின்னு கூப்பிடுவோம். நடிகர் பிரதாப் போத்தன் மாதிரி மூஞ்சி இருக்கிறதால அப்படி கிண்டலா கூப்பிடுவோம். காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறப்பவே அவன் சூசைட் பண்ணி செத்துட்டான். அவனைத்தான் நேத்து ராத்திரி பார்த்தேன். அதே முகம் அதே கண்ணு.’’

‘`ஏண்டா பைத்தியம் மாதிரி பெனாத்துற... சம்பந்தமில்லாம ஒளர்றே... கண்ண மூடித் தூங்கு. நாங்க பாத்துக்குறோம்’’ என்றான் கிரி.

ராஜன் கண்களை இறுக மூடினான். நாகர்கோவிலில் அவர்கள் குடியிருந்தபோது விரிந்த காட்சிகளில் அவன் இருந்தான். பெரியசாமி. அவள் இருந்தாள். என்ன யோசித்தும் அவள் பெயர் ராஜனின் ஞாபகச் சித்திரத்தில் தென்படவில்லை. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதே ஊரில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஒல்லியான பெண்ணை பெரியசாமி காதலித்தான். காதல் விஷயத்தை பெரியசாமியின் அப்பாவிடம் சொன்னது ராஜன்தான். அதன்பின் பெரியசாமி வீட்டுக்கும் அந்த ஒல்லிப்பெண் வீட்டுக்கும் இடையே பெரிய தகராறு நடந்து அந்தப் பெண் பைத்தியமாகிக் காணாமல்போய்... நோட்டீஸெல்லாம் அடித்து ஒட்டினார்களே... பிறகு நீண்ட நாள்களுக்கு அவளின் காணாமல் போன நிலைக்குத் தான்தான் காரணம் எனப் புலம்பிக்கொண்டிருந்தான் பெரியசாமி. கல்லூரி மூன்றாம் வருட இறுதியில் ஹாஸ்டல் அறையினிலே தூக்கு மாட்டி செத்துப்போனான். இத்தனை உண்மையான காதலாவென ராஜனுக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. சிறிது குற்ற உணர்வும் இருந்தது. அவனின் மரணத்துக்குத் தானும் ஒரு காரணம்தானே என்றெல்லாம் துயரத்தில் திரிந்தான். அதே பெரியசாமிதான் இத்தனை வருடங்களுக்குப் பிறகு நேற்று தன்னைச் சந்தித்தானா... அவனில்லையென்றால் அவனைப்போலவே இருக்கும் இவன் யார்? ராஜன் கண் திறந்தான்.

``நீங்க ரொம்ப எமோஷனலாகாதீங்க. பிபி அதிகமாகி மயக்கம் வந்து ஊசி போட்ருக்கு உங்களுக்கு. டிஸ்சார்ஜ் ஆனாலும் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லியிருக்கார். ஏதோ பைத்தியம் உங்களை பயமுறுத்தியிருக்கான். அவனை உங்க ஃபிரெண்ட்ஸ்லாம் சும்மாவா விட்டாங்க..?’’ ``ஏதும் புரியாமப் பேசாத உஷா. அவன் பைத்தியம் இல்ல. டேய் கிரி...’’ என்றபடி கிரியின் கையைப் பற்றினான்.

``நீ ஒர்ரி பண்ணிக்காத மச்சான். நாங்க விசாரிச்சிட்டோம். அந்தப் பைத்தியத்துக் கூட ஒரு பொம்பளப் பைத்தியமும் இருந்திருக்கு. நாலு ரோட்டு மொனையில லூர்து மேரி மேரேஜ் ஹால்ல இருக்கிற வாட்ச்மேன் பாத்திருக்காரு. வலிப்பு வந்து மண்டபத்து வாசல்ல விழுந்துடுச்சாம் அந்தப் பொம்பளப் பைத்தியம். வாட்ச்மேன்தான் பாப்பாகோவில் சத்திரத்துக்கு போன் பண்ணி வர வெச்சிருக்காரு. அவங்க ரெண்டு பைத்தியத்தையும் வேன்ல அழைச்சிட்டுப் போயிட்டாங்களாம்... வேற எந்த விவரமும் யாருக்கும் தெரியல...’’

சிறுகதை: பிரதாப் போத்தனின் 
கண்கள்

பெண் பைத்தியம் என்றதுமே ராஜனுக்கு எங்கோ பல் சக்கரம் பொருந்திச் சுழன்றது. ஏதேதோ எண்ணங்கள் மூளைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் விரைய, கட்டிலை விட்டு இறங்கினான். ``பைக்கை எடுடா. பாப்பாகோவில் போய் அவங்கள பாத்துட்டு வந்துடுவோம்’’ என்றான் கிரியிடம். ``என்னடா சொல்ற... நீ ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார். போக வர மூணு மணி நேரம் ஆகிடும். நீ இரு... நான் மட்டும் போய்ப் பார்த்துட்டு வந்துடுறேன்.’’

‘`இல்ல கிரி. நானும் வரேன். நேர்ல அவங்கள பாக்கணும்.’’

உஷா தன் கணவன் ராஜனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, ராஜனின் முகம் இறுகியிருந்தது. விரைந்த சாலையையும் தன்னைக் கலைத்த காற்றின் வேகத்தையும் மீறி ராஜனின் மனம் பல வருடங்களுக்கு முந்தைய கணக்கை மீண்டும் அழித்து அழித்து எழுதிக்கொண்டிருந்தது. பெரியசாமியின் நிஜமான காதலை உணர்ந்தபோது இருந்த அதிர்ச்சியெல்லாம் பல்வேறு கைகளாய் விரிந்து பெருகி ராஜனின் எண்ணங்களை அழுத்திக்கொண்டிருந்தது. அப்போது பெரியசாமியின் தற்கொலை அவனது காதல் தோல்வியினாலோ, காதலியின் பிரிவினாலோ இல்லையா என்ற சந்தேகம் மனதின் ஓரத்தில் அரித்துக்கொண்டே இருந்தது. பாப்பாகோவில் மனநலக் காப்பக சத்திரத்துக்கு ராஜனும் கிரியும் வந்து சேர்ந்தபோது 12 மணி வெயில் அவர்களுக்கு முன்பு வந்து சேர்ந்திருந்தது. காப்பகத்தில் விவரம் சொல்ல, காப்பகப் பணியாளர் ராஜனை நிமிர்ந்து பார்த்துவிட்டு... ``நேத்தே வந்திருந்தா அந்த அம்மா அநாதைப் பிணமா ஆஸ்பத்திரியில அடைக்கலமாகியிருக்க மாட்டாங்க சார்’’ என்றார்.

ராஜன் நடு முதுகில் பெரும் வலியை உணர்ந்தான். ``நேத்து வந்தப்போ அந்த அம்மாவுக்கு சிவியர் வலிப்பு வந்து தஞ்சாவூர் ஹாஸ்பிட்டலுக்கு ஆம்புலன்ஸுல அனுப்பிட்டோம். போற வழியில இறந்துட்டாங்க. எந்த விவரமும் அவங்களப் பத்தித் தெரியாததால அநாதைப் பிணம்னு அனவுன்ஸ் பண்ணி அதுக்கான ஏற்பாடு பண்ணியாச்சு. ஆனா இன்னிக்கி நீங்க போனாகூட சில சம்பிரதாயங்கள முடிச்சிட்டு பாடிய வாங்கிக்கலாம். நான் ஆஸ்பத்திரிக்கு போன் பண்ணிச் சொல்லிடுறேன். ஆனா அந்த அம்மாவோட பழைய விவரங்கள் கேட்பாங்க. உங்களப் பத்தியும் நீங்க சொல்லணும். ஓகேன்னா சொல்லுங்க.’’ வேண்டாமென்று மறுத்தான் ராஜன். ``அவங்ககூட இருந்த அந்தப் பையன்?’’ ``ஏர்வாடி மனநலக் காப்பகத்துக்கு அனுப்பியாச்சு. அங்கதான் அவன் இருக்கணும். போய் வேணும்னா பாருங்க ஒரு விசிட்டரா...’’ என்றார்.

ஊருக்கு பைக்கில் திரும்பி வரும்போது, நேற்று இரவு பார்த்த அந்தக் கண்கள், தான் சாகும் காலம் வரையிலும் கூடவே வரும் என்பதை உணர்ந்திருந்தான் ராஜன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism