Published:Updated:

சிறுகதை: அவள் வருவாளா?

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

சிவக்குமார் KB

சிறுகதை: அவள் வருவாளா?

சிவக்குமார் KB

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை
“ரவி, எப்படி இருக்கடா கண்ணா? வேலை வேலைன்னு சொல்லி நேரத்துக்குச் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்காதே. வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கணும். அப்போதான் உடம்புச் சூடு குறையும். ஏதோ புதுசு புதுசா தொழில்நுட்பம் கண்டுபிடிக்கிறோம்னு சொல்லி லேப்டாப்ல மூழ்கி இருக்காதே.

கொஞ்சம் வெளியுலகம் பாரு. உன் நண்பர்களோடு பேசு. உன் மனசுக்கு யாராவது பிடிச்சா அவங்களோடு நிறைய பேசு, வெளில போ. நாங்க ஒண்ணும் தப்பா நினைக்கமாட்டோம். என்னடா நான்பாட்டு பேசிக்கிட்டே இருக்கேன் எந்த பதிலும் இல்லை? நான் பேசறது கேட்குதா?” என்று காவேரியம்மா ஒரே மூச்சாய் அறிவுரைகள் சொன்ன பிறகு அவனிடம் இந்தக் கேள்வி கேட்டாள்.

“அம்மா, நான் என்ன சின்னப் பையனா? ஏதோ இப்போ புதுசா வெளியூருக்கு வேலைக்கு அனுப்பின பையனோடு பேசற மாதிரி பேசறீங்க. புதிய தொழில்நுட்பம் மனித வளர்ச்சியின் அடையாளம். அதனால எனக்கு அதுல ஈடுபாடு. அப்புறம் தெரியும்ல, இந்தத் தை பிறந்தா எனக்கு நாற்பது வயசு” என்று அவன் பெருமூச்சு விடாத குறையோடு சொன்ன பதில், மறுமுனையில் ஒரு மௌனத்தின் பொத்தானை அழுத்தியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காவேரியம்மா அந்தக் கைப்பேசியில் உள்ள மௌனத்தின் பொத்தானை அழுத்திய காரணம், அவள் அழுகைச் சத்தம் ரவிக்குக் கேட்கக் கூடாது என்பதற்காக. வாரா வாரம், அவர்களுக்கு இடையே விடாமல் நடக்கும் இந்த சம்பாஷணைக்கு, இந்நேரம் அந்தக் கைப்பேசிகூட அழுதாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ரவிக்கு அந்த மௌனத்தின் அர்த்தம் நன்றாகவே தெரியும். அதனால், அம்மா மீண்டும் பேச ஆரம்பிக்கும் வரை அவனும் பொறுமை சாதித்தான்.

கொஞ்சம் தெளிவான குரலோடு மீண்டும் காவேரியம்மா பேச ஆரம்பித்தாள் “என்னவோ போ, தை பிறந்தா எல்லாருக்கும் வழி பிறக்கும்னு சொல்வாங்க. ஆனா, வருஷா வருஷம் தை பிறந்து இன்னும் எதுவும் கைகூடலையே. போன வாரம்கூட அப்பாவோட நண்பர் நாராயணன் சார் வீட்டுக்கு வந்திருந்தார். உனக்குத்தான் அவரைப் பற்றி நல்லாத் தெரியுமே. நான்கூட உன்னோட...” என்று அவள் ஆரம்பிக்க, அதுவரை மௌனம் சாதித்த ரவி பொறுமை இழந்தான். “அம்மா, சும்மா சும்மா இதே பேச்ச பேசாதீங்க. இந்தப் பேச்சை இத்தோடு விடுவோம். அப்பா எப்படி இருக்காரு?” என்று அவன் பேச்சை திருப்ப, “டேய், இருடா! சும்மா குதிக்காத. நாராயணன் சார் என்ன சொன்னார் தெரியுமா? முழுசாக் கேளு!” என்று காவேரியம்மா, ஒரு தாய்க்குத் தன் மகனோடு இருக்கும் அதிகாரத்தை அப்போது வெளிப்படுத்தினாள்.

சிறுகதை: அவள் வருவாளா?
சிறுகதை: அவள் வருவாளா?

அவர் நிஜமாகவே என்ன சொன்னார் என்பதைவிட, இப்போது அம்மா அவர் என்ன சொன்னார் என்று சொல்லும் கதைதான் முக்கியம். ஏனென்றால், அம்மாவின் வர்ணனையில், நாராயணன் சார் சொல்லும் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட, தனக்கு சாதகமாகக் காது மூக்கு வைத்துப் பேசுவது இயல்பு. அதனால், ரவி இப்போது குறுக்கிட்டான். “அம்மா, அவர் என்ன சொன்னாரோ, அதை அப்படியே ஒரு வரி மாறாம அதே வார்த்தைகளில் சொல்லு” என்றான் ரவி.

“சரிடா, சொல்றேன் கேளு” என்று காவேரியம்மா தொடர்ந்தாள். “இந்த வருஷ குருப்பெயர்ச்சி பலன்படி, ரவிக்கு கூடிய சீக்கிரம் அவனைப் புரிந்த, அவன் சொல் தட்டாத ஒரு நல்ல துணை அமையும்” என்று அவர் சொன்னதை அப்படியே சொன்னாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறுமுனையில் ரவி சிரித்தான். “டேய் சிரிக்காதே. அவர் என்ன சொன்னாரோ, அதை நான் அப்படியே சொன்னேன். இதுல நான் எந்தக் காது மூக்கும் வெச்சுப் பேசலைப்பா!” என்று காவேரியம்மா அப்படியே தன்னை சொல்லுமாறு ரவி கேட்டதற்கான உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பதில் அளித்தாள்.

“அம்மா உங்களுக்குத் தான் தெரியும்ல. எனக்கு இந்த ஜாதகம், ஜோசியம், குருப்பெயர்ச்சி பலன்கள் இப்படி எதுலையும் நம்பிக்கை இல்லை. ஆனாலும், உங்க ஆசையைக் கெடுப்பானேன்னு சொல்லிதான் அவர் சொன்னதை அப்படியே சொல்லச் சொன்னேன். நடப்பதெல்லாம் நல்லதுக்கே என்று நம்புறவன் நான். அதனால, அவர் சொன்னபடி நல்லது நடந்தா நடக்கட்டும்” என்று நாற்பதில் சன்யாசம் வாங்காத ஒரு முதிர்ச்சியோடு ரவி பேசினது காவேரியம்மாவுக்குக் கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது.

“சரி. நேரம் ஆயிடுச்சு. அப்பாவிடம் கேட்டதா சொல்லு. இப்போ வாரக் கடைசி. நீங்க சொன்னபடி நல்லாத் தூங்கி, நாளைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறேன். என்னை நினைச்சுக் கவலைப்படாதே” என்ற ரவி, கைப்பேசியின் தொடர்பைத் துண்டித்தபோது, அவன் நலம்கருதி வாரம் அவனோடு பேசும் அந்தக் குரலும் துண்டிக்கப்பட்டது.

ரவி வெளிநாட்டுக்கு வந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டன. முதலில் வெளிநாட்டுவாசம் உயர்படிப்பில் தொடங்கி, இப்போது நல்ல வேலை, சொந்த வீடு, சொகுசுக் கார் என்று சகல வசதிகளோடும் முன்னேறியிருந்தது. முன்னேறி என்ன பயன்? அதை அவனோடு அனுபவிக்க அவனுக்கென்று குடும்பம் இல்லை. இந்தக் குறைதான் அவன் அம்மா காவேரியின் மனதை வாட்டியது. ‘வருடா வருடம், ஏதாவது தடை வந்து தட்டித் தட்டி, கடைசியில் வயது நாற்பதை எட்டியாச்சு. இனிமேல் யார் இவனுக்குப் பெண் கொடுப்பாங்க?’ இந்த வாரமும் கைப்பேசியில் பேசிய பிறகு அவள் நினைத்தது இதுதான்.

அந்த வாரக் கடைசியும், மற்ற எல்லா வாரக் கடைசி போல மிகவும் மெல்ல நகர்ந்தது. ரவியின் நண்பர்கள் எல்லோரும் இப்போது குடும்பம் குழந்தைகள் என்று இருக்க, ரவி அவர்களை வீட்டுக்கு அழைத்தாலும் அவர்களோடு வெளியே செல்ல முனைந்தாலும் அவன் அழைப்புக்கு யாரும் இப்போது பிடிகொடுத்துப் பேசுவதில்லை.

மதிய உணவுக்குப் பிறகு தொலைக்காட்சியில் வரும் எல்லா சேனல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக மாற்றிக்கொண்டே, திரையில் வரும் காட்சிகளை வெறிச்சோடிப் பார்த்தான். எதிலும் சுவாரஸ்யம் இல்லை. எப்படி இருக்கும்? வாழ்க்கை சுவாரஸ்யமாக இருந்தால்தான் திரையும் சுஸ்வாரஸ்யமாக இருக்கும். சரி, தன் அடுக்குமாடிக் கட்டடத்தின் தபால்பெட்டி வரை சென்று ஏதேனும் தபால் வந்திருக்கிறதா என்று பார்க்கச் சென்றான். அந்த மாதத்தின் வங்கிக் கணக்கு வந்திருந்தது. வீட்டுக்கு வந்து மெல்லப் பிரித்துப் படித்தான். முகம் மாறியது.

அட, வங்கியில் ஒரு மூவாயிரம் வெள்ளி குறைந்திருந்தது. தன் சேமிப்புக் கணக்கைப் பார்த்தபோது ஏதோ `இதர கட்டணம்’ என்று மூவாயிரம் வெள்ளி எடுக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தான். உடனடியாக வங்கியின் சேவை எண்ணை அழைத்தான்.

“வணக்கம் மிஸ்டர் ரவி. என் பெயர் மது. உங்களுக்கு இன்று நான் என்ன சேவை செய்யணும்?” என்று அந்தக் குரலையும் பெயரையும் கேட்டபோது, ரவி சில விநாடிகளுக்கு மௌனமாகிவிட்டான். “வணக்கம் மிஸ்டர் ரவி. தொடர்பில் இன்னும் இருக்கீங்களா?” என்று அந்தக் குரல் கேட்டபோது, “இப்போ தொடர்பில் இல்லை” என்று ஏதோ நினைவில் சொல்லிவிட்டான்.

“இப்போ தொடர்பில்தானே இருக்கீங்க?” என்றது மீண்டும் அந்தக் குரல். ரவி உடனே சுதாரித்துக்கொண்டு தன் வங்கிக் கணக்கில் மூவாயிரம் வெள்ளி குறைந்ததைச் சொன்னான். “கவலைப்படாதீங்க மிஸ்டர் ரவி. உங்க புகாரை ஏத்துக்கிட்டோம். இன்னும் இரண்டு நாள் கொடுங்க. நாங்க திருப்பி அழைக்கிறோம். ‘உங்கள் சேவை எங்கள் கடமை’ ” என்று மது எல்லோரிடமும் சொல்லும் வாக்கியத்தை ரவியிடம் சொன்னபோது, “மது” என்று ரவி அழைத்தான். “சொல்லுங்க மிஸ்டர் ரவி. வேற எதாவது சேவை வேணுமா?” என்றது மதுவின் குரல். “நீங்க என்னைத் திரும்பக் கூப்பிடுவீங்களா?” என்று ரவி கேட்டதற்கு, “கண்டிப்பா மிஸ்டர் ரவி. நானே உங்கள திருப்பிக் கூப்பிடுவேன்” என்று அவள் குரல் கேட்ட பிறகு, அவன் தொடர்பைத் துண்டித்தான்.

தொடர்பு தொலைபேசியில்தான் துண்டித்தது. அவன் நினைவில் இல்லை.

வாழ்க்கையில் சில நேரங்களில், ஒரு சில பெயர்களைக் கேட்ட உடன் ஏதோ ஒரு பழைய நினைவை நம் மூளை எடுத்துக்கொண்டு வரும். அந்தப் பெயர் நினைவில் மறைந்த இடம் தெரியாமல் இருந்தாலும், சட்டென்று மூளை அதைத் திருப்பி கண்முன்னே கொண்டுவரும் அபார சக்தி படைத்தது. அடுத்த சில மணி நேரத்துக்கு மீண்டும் மீண்டும் அவன் மனம் அந்தப் பெயரைச் சொல்லி அவன் நினைவை வாட்டியது.

சிறுகதை: அவள் வருவாளா?
சிறுகதை: அவள் வருவாளா?

ஒரு இருபது வருடங்கள் ஆகியிருக்குமா? ரவி அவனிடம் கேட்டுக்கொண்டான். இப்போது அவன் மூளை அந்தப் பெயருக்கேற்ற சம்பவங்களை அவன் கண்முன் அப்படியே நிறுத்தியது. அவன் கல்லூரி நாள்கள், மதுவோடு காபி ஷாப் பேச்சுகள், எண்ணற்ற சினிமாக்கள் பார்க்கும்போது நடந்த சில்மிஷங்கள், இப்படிப் பல விஷயங்கள். மதுவோடு அவன் கழித்த காலம் அன்று நாள் முழுக்க அவன் நினைவுகளை வாட்டியதில், அவன் தன் இரவு உணவைக்கூட மறந்துவிட்டான். மனம் நிறைந்தால் பசிகூட எடுப்பதில்லை.

அடுத்த நாள் காலை. மணி ஆறுகூட அடிக்கவில்லை. ரவி விழித்துவிட்டான். கண் மூடினால்தானே விழிப்பதற்கு. “டேய் ரமேஷ்” என்று தன்னோடு கல்லூரியில் படித்த நண்பனுக்குத் தொடர்புகொண்டான். “எனக்கு ஒரு விஷயம் சொல்லு. பத்து வருஷம் முன்னாடி நம்ம கல்லூரி முடிச்ச பத்தாவது ஆண்டு கொண்டாடினோம். அந்த நிகழ்ச்சி பற்றிக் கேட்கணும்.” காலையிலேயே அவன் ஆர்வத்தை ஊகித்த ரமேஷ், “டேய். நீதான் ஏதோ புதுசா தொழில்நுட்பத்துல கண்டுபிடிக்கப்போறோம், வேலை இருக்குனு சொல்லி வரலையேடா! இப்போ என்ன அதைப் பற்றிப் பேசணும்?’’ என்று சொன்னவன், “ஆஹா, இப்போ புரியுது! நேற்று இரவு தொலைக்காட்சியில் 96 படம் பார்த்ததும் ‘மது’ ஞாபகம் வந்திடுச்சா?” என்று சற்றும் எதிர்பார்க்காத கேள்வியை ரவியிடம் வைத்ததும், ரவி சொல்வதறியாமல் திகைத்தான்.

“சரி சரி, எனக்கும் பல ஞாபகம் வந்தது. எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன். மது ஏதோ ஒரு வங்கில வாடிக்கையாளர்கள் சேவைப் பிரிவுல வேலை பண்ணறதா சொன்ன ஞாபகம். அவளுக்குக் கல்யாணமான மாதிரிகூட சொல்லலை. ஏன், என்ன ஆச்சு இப்போ? அவளை எங்கியாச்சும் பார்த்தியா?” என்று ரமேஷ் கேட்க, “இல்லை இல்லை. சும்மாதான் கேட்டேன். நான் அப்புறம் பண்ணறேன்” என்று சொல்லி, அந்தப் பேச்சிலிருந்து நகர்ந்தான்.

இரண்டு நாள்கள் கழிந்தன. அந்த வங்கியிலிருந்து எந்தத் தகவலும் இல்லை. ரவிக்கு இருப்புக்கொள்ளாமல் மீண்டும் அன்று இரவு அந்த வங்கியின் சேவை எண்ணைக் கூப்பிட்டான்.

மூவாயிரம் வெள்ளி பற்றித் தெரிய அல்ல, மதுவோடு பேச.

அவன் அதிர்ஷ்டம், உடனடியாகத் தொடர்பு கிடைத்தது. அவன் தன் பெயரையும் வங்கி எண்ணையும் குறிப்பிட்ட அடுத்த விநாடி,

“ஹலோ ரவி. இன்னிக்கி எப்படி இருக்கீங்க? நான் மது பேசறேன்” என்றது அவளின் குரல்.

“மது, நான்தான் பேசறேன். எப்படி அதுக்குள்ள கண்டுபிடிச்ச?” என்றான் ஆச்சர்யத்தோடு.

“உங்க குரலை என் நினைவுல பதிவு பண்ணிட்டேன்” என்றாள் மது.

அடுத்த சில நிமிடங்களுக்கு மது அவன் வங்கியில் இருந்த கணக்கைப் பற்றிச் சொன்ன விவரமும், அது சரி செய்யப்படும் என்று சொன்ன தகவலும் ரவியின் மனதில் பதியவேயில்லை. அவன் மதுவின் நினைவிலேயே மௌனமாக இருந்தான்.

“ஹலோ ரவி. வேறு ஏதாவது தகவல் வேணுமா?” என்றாள் மது.

“இப்போ ஏதும் இல்லை” என்று அவள் மறுபேச்சுக்குக்கூடக் காத்திருக்காமல் மீண்டும் தொடர்பைத் துண்டித்தான் ரவி.

அடுத்த சில வாரங்களுக்கு அவனுக்கு இருப்புகொள்ளவில்லை. பழைய ஞாபகங்கள் அவனை வாட்டின. அம்மா பேசும்போதுகூட ஏனோ தானோ என்று பதில் அளித்தான். சரி, மகனுக்கு வேலை பளு என்று அம்மாவும் எதுவும் கேட்கவில்லை. ஒரே ஒரு கேள்வி மட்டும் அம்மாவிடம் மீண்டும் கேட்டான், “நாராயணன் சார் சொன்னதை திருப்பி ஒருமுறை சொல்லு.”

காவேரியம்மாவுக்கு அந்தக் கேள்வியை அவன் கேட்டதும் ஆச்சர்யம். அவளும் எந்தக் கேள்வியும் கேட்காமல், அவர் சொன்னதை அப்படியே திருப்பி சொன்னாள், “இந்த வருஷ குருப்பெயர்ச்சி பலன்படி, ரவிக்கு கூடிய சீக்கிரம் அவனைப் புரிந்த, அவன் சொல் தட்டாத ஒரு நல்ல துணை அமையும்” என்று அவர் சொன்னதை அப்படியே சொன்னாள்.

அம்மாவோடு பேசிய பிறகு, ரவி மீண்டும் அந்த வங்கியின் எண்ணை அழைத்தான். தொடர்பு கிடைத்தது. அவன் தன் பெயரைச் சொல்லி முடித்த அடுத்த நிமிடம்,

“ஹலோ ரவி. எப்படி இருக்கீங்க, இவ்வளவு நாள் கழித்து மீண்டும் தொடர்பில் வர்றீங்க” என்றாள் மது.

“கல்லூரி பற்றி விவரம் இருக்கா?” என்றான் ரவி.

“கண்டிப்பா. உங்க கல்லூரி, வேலை, இப்போ எந்த இடத்துல இருக்கீங்க, இப்படி எல்லாத் தகவலும் என்கிட்ட இருக்கு.”

“அப்போ நீ ஏன் மது என்னோட தொடர்பில் இல்லை?” என்று அவன் மனதை வாட்டிய கேள்வியை வெளிப்படுத்தினான் ரவி.

“உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாதபோது, நான் ஏன் உங்களை அழைக்கணும்?” என்றது மதுவின் குரல்.

“நீ சொல்வதும் சரிதான். எனக்கு உன்ன பார்க்கணுமே. பார்த்து நிறைய பேசணும். நான் உன்னை எங்கே சந்திக்கிறது?” என்று அவன் கேட்ட பல கேள்விகளுக்கு, அந்த வங்கியின் முகவரியைச் சொன்னாள் மது.

முடியும்போது, “நீங்க எப்போ வேணும்னாலும் மீண்டும் என்னோடு தொடர்புகொள்ளலாம், உங்கள்...” என்று அவள் ஆரம்பிக்கும்போது தொடர்பைத் துண்டித்தான் ரவி.

சில நாள் யோசனைக்குப்பின், இனிமேல் தள்ளிப்போடுவதில் அர்த்தம் இல்லை என்று ரவி தீர்மானித்தான். நாள் கிழமைகளில் நம்பிக்கை இல்லாதவனுக்கு, அந்த வாரத்தின் கடைசி தினசரித் தாளைக் கிழித்தபோது, ‘இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு, கனவுகள் கைகூடும்’ என்று எழுதியிருந்தது.

காலையிலேயே பூச்செண்டும் கையுமாக வங்கிக்குச் சென்றான் ரவி. வங்கியில் பூச்செண்டோடு நுழைந்த ரவியைப் பார்த்து எல்லா வாடிக்கையாளர்களுக்கும் ஆச்சர்யம். அந்த ஆச்சர்யம் வங்கியின் மேலாளரிடமும் காணப்பட்டது.

நேரே அவரைச் சந்தித்து, “சார், நான் உங்க வங்கியின் நீண்ட நாள் வாடிக்கையாளர். சமீப காலமாக, எனக்கு வங்கிக் கணக்கில் ஒரு பிரச்னை இருந்தது. அதைத் தீர்த்து வைத்த உங்கள் சேவைப் பிரிவில் வேலை செய்கிற மிஸ் மதுவைப் பார்க்கணும். ஏற்பாடு செய்வீர்களா?” என்று அவன் கேட்டதும், ‘`கண்டிப்பா மிஸ்டர் ரவி” என்று மேலாளரும் அவன் பெயரைச் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.

சிறுகதை: அவள் வருவாளா?

“நாங்களும் உங்களை நேரில் சந்திக்கணும் நினைச்சுக்கிட்டிருந்தோம்’’ என்று அவர் சொன்னதும், அவனுக்கு மது தன்மீது ஏதாவது புகார் கொடுத்துவிட்டாளோ என்று சந்தேகம் வந்தது. ஆனால், அவன் மதுவை, அவனால் கனவில்கூட சந்தேகிக்க முடியாது. அதற்குள் மேலாளர் அவனை அழைக்க, அவர் பின்னால் ரவி அமைதியாக பூச்செண்டோடு சென்றான்.

“வாங்க மிஸ்டர் ரவி. அதோ உங்க மது” என்று மேலாளர் ஒரு இடத்தைக் காட்ட, ரவி பல எதிர்பார்ப்புகளோடு பார்க்க, அங்கே ஒரு சின்னக் கணினிதான் அவன் கண்ணுக்குத் தெரிந்தது.

மேலாளர் அவனைப் பார்த்து மெல்லச் சிரித்துக்கொண்டே, ‘மிஸ்டர் ரவி. நீங்கதானே ஒரு பெரிய தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர். உங்கள் கண்டுபிடிப்புகள் பற்றி நான் நிறைய படிச்சிருக்கேன். இதுவும் நீங்க ஆராய்ச்சி செய்கிற ஒரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்புல வந்ததுதான்” என்று அவர் சொன்னபோது, ரவிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் மேலும், “எங்க வாடிக்கையாளர்கள் சேவைக்காக நாங்க அதிநவீனத் தொழில்நுட்ப முறையான ‘செயற்கை நுண்ணறிவு’ கொண்டு ஒரு வாடிக்கையாளர் சேவை இயந்திரம் தொடங்கினோம். அது எங்கள் வாடிக்கையாளர்கள் குரல், அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொள்ளும்போது எதற்காகத் தொடர்புகொள்கிறார்கள் என்று பயிற்சி செய்து, அதுவே தானாகப் பேசும் நுண்ணறிவை மென்பொருள் திட்டம் தீட்டினோம். அதற்குத் தேன்போல குரல் வடிவமைத்ததால் ‘மது’ என்றும் பெயர் சூட்டினோம். நீங்க மதுவோடு அடிக்கடி தொடர்புகொண்டு பேசும் முறையில மதுவால் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அதுக்கு நன்றியா, நாங்கதான் இந்தப் பூச்செண்டை உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கணும். அடிக்கடி மதுவோடு பேசுங்க. அவள் தானாக நிறைய பேச, இன்னும் நல்ல பழக்கம் கொடுங்க. உங்களுக்குத் தெரியாதது இல்லை!” என்று சிரித்துக்கொண்டே தன் பெயர் அட்டையை நீட்டி, விடைபெற்றுக்கொண்டார்.

சற்று நேரம் அங்கே அந்த வெறிச்சோடிய இடத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரவியின் கைப்பேசி அழைத்தது. மறுமுனையில் அம்மா.

“ரவி, இன்னிக்கி ஒரு ஆச்சர்யம்டா. சொன்னா நம்பமாட்ட” என்று அவள் ஆரம்பித்தபோது, “இப்போ என்னமா நம்பணும்?” என்று ரவி கேட்டான்.

“நம்பணும்” என்று சொல்லிவிட்டு, மூச்சுவிடாமல் பேசத் தயாரானாள் காவேரியம்மா.

“உன்கூட காலேஜ்ல படிச்சாளே ஒரு பொண்ணு, அவளை நான் இன்னிக்கி கோயில்ல பார்த்தேன். அப்படியே அழகு குறையாம காலேஜ்ல பார்த்த மாதிரியே இருக்கா. அவளுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலையாம். இப்போ நான் அவங்க வீட்ல பேசிப் பார்க்கட்டுமா? நாராயணன் சார் சொன்னா மாதிரி இது நடக்கும்னு நினைக்கிறேன். என்ன சொல்லற?” என்று காவேரியம்மா கேட்டுக்கொண்டிருக்கும்போது, ரவி மெல்ல அந்த வங்கி மேலாளர் கொடுத்த பெயர் அட்டையைத் திருப்பினான்.

“அப்புறம் ரவி, முக்கியமா சொல்ல மறந்துட்டேனே. அந்தப் பொண்ணு பெயர் மதுவாம்” என்று அம்மா சொன்னபோது, அந்த அட்டையில் வங்கி மேலாளர் பெயரை ரவி படித்தான். அதில், வங்கி மேலாளர்: நாராயணன் என்று எழுதியிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism